சனி, 25 டிசம்பர், 2010

கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு - அணிந்துரை

செ. பவானியின்
கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

கவிஞர் தமிழ்ஒளி தமிழிலக்கிய வரலாற்றில் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்பாளி. அவரின் கவிதைகள் காலவெள்ளத்தால் கரைந்து போகாத கவித்துவமும் கருத்துச் செறிவும் உடையவை. பாவேந்தர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலத்துக் கவிஞர். இந்த இருவரது படைப்பாளுமைகளையும் உள்வாங்கித் தமக்கென ஒரு புதுப்பாதை சமைத்துக் கொண்டவர். பாரதி, பாவேந்தர் வரிசையில் புதுச்சேரி தமிழுலகிற்குத் தந்த மிகப்பெரிய கொடை கவிஞர் தமிழ்ஒளி. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதநேயப் படைப்பாளி. எங்கும் எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே உரத்துக் குரல் கொடுத்தவர். அவருடைய படைப்புகள் பல பரிமாணங்களைக் கொண்டவை.

மனிதாபிமானம், தேசியம், சமத்துவம் ஆகிய மாபெரும் கொள்கைகளில் பற்றுகொண்டு, தமிழின் பண்டைய மற்றும் நவீன இலக்கிய மரபுகளில் தோய்ந்து சிந்தனை வளத்தோடும் சந்த நயத்தோடும் செஞ்சொற் கவிதைகளை யாத்தவர் கவிஞர் தமிழ்ஒளி.

கவிஞர் தமிழ்ஒளி தமிழ்ச் சமுதாயத்தில் சாதி வேற்றுமையில்லாத, ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை நிறுவக் கனவு கண்டார். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லதை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார். இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணிவேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் படைப்புகளில் பாராட்டினார், துணைநின்றார்.

கவிஞர் தமிழ்ஒளி தம் கவிதைகளிலும் குறுங்காவியங்களிலும் சிறுகதைகளிலும் எதார்த்த வாழ்விலுள்ள இன்னல்கள் பலவற்றைப் பரவலாக எடுத்துரைக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் சோகமயமான வாழ்க்கைச் சித்திரம் படிப்பவர்கள் நெஞ்சை நெகிழ்விக்கச் செய்யும் வகையில் கவிஞரின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவரின் காவியங்களும் சிறுகதைகளும் மிகுதியும் துன்பியல் முடிவுகளைக் கொண்டதாகவே படைக்கப்பட்டிருக்கும். அவரின் வாழ்க்கைச் சூழல் அப்படி. சொகுசு மாளிகைகளில் இருந்துகொண்டு கற்பனைகளில் மிதந்து அவர் தம் இலக்கியங்களைப் படைக்கவில்லை. வறுமை, பசி, பட்டினி இவைகளோடு வாழ்க்கையே போராட்டமாய்க் காலந்தள்ளும் மக்களோடு மக்களாய் இருந்து தம் படைப்புகளைப் படைத்தவர் தமிழ்ஒளி.

கவிஞர் தமிழ்ஒளி கவிதைத் துறை மட்டுமல்லாது தமிழிலக்கியத்தின் பல்வேறு படைப்பிலக்கிய வடிவங்களிலும் தம் கவனத்தைச் செலுத்தியவர். நாடகம், வரலாறு, காவியங்கள், குறு நாவல்கள், சிறுகதைகள் என அவர் படைத்த நூல்களின் பட்டியல் நீளும். படைப்பிலக்கியத்துறை மட்டுமல்லாது ஆய்வு நூல்கள் படைப்பதிலும் தமிழொளி முத்திரை பதித்துள்ளார்.

II
கவிஞர் தமிழ்ஒளியின் ‘உயிரோவியங்கள்’ சிறுகதைத் தொகுதி பதினைந்து சிறுகதைகளைக் கொண்டது. இச் சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகளை ஆய்வு செய்து கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் -ஓர் ஆய்வு என்ற தலைப்பில் நூலாகத் தந்துள்ளார் செ.பவானி. இவர் என்னுடைய வழிகாட்டுதலில் தம் இளமுனைவர் பட்ட ஆய்வினை இதே தலைப்பில் நிகழ்த்தியவர். அந்த ஆய்வேடே நூலாக்கம் பெற்று இப்பொழுது வெளிவருகின்றது.

இன்றைய கல்வியாளர்களின் ஆய்வுகள் குறித்துக் கல்விப் புலத்துக்கு வெளியே ஓர் அவநம்பிக்கையே நிலவிவரும் சூழலில் இத்தகைய ஆய்வுகள் வெளிவருவது ஒரு நம்பிக்கை ஊட்டக்கூடிய செயலாகும். பட்டங்களுக்காக நிகழ்த்தப்படும் பல்கலைக் கழக ஆய்வுகள் கடந்த முப்பதாண்டுகளில் பல்கிப் பெருகிவிட்டன. அதிலும் பல பல்கலைக் கழகங்கள் வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தம் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் இளமுனைவர் பட்டப் படிப்புகளைத் தொடங்கியபோது கல்வியாளர்கள் மற்றும் நல்ல ஆய்வாளர்கள் மத்தியில் ஓர் அச்சம் தொற்றிக்கொண்டது. அந்த அச்சம் நியாயமானதுதான் என்பதனைக் கடந்தகால நடைமுறைகள் நமக்கு நிரூபித்தன. ஆனால் அதிலும் ஒரு மெல்லிய ஆறுதலை இப்படிப்பட்ட சில நல்ல ஆய்வுகள் நமக்கு வழங்கின. அந்தவகையில் ஆய்வாளர் பவானி அவர்களின் இவ் ஆய்வு முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.

கவிஞராக மட்டுமே தமிழுலகிற்குத் தெரிந்த கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆய்வாளர் இப்பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டமையே அவரின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. எடுத்துக்கொண்ட பொருளை நுணுகிக் கற்று வகைதொகை செய்து நல்லதொரு ஆய்வாகப் பின்வரும் நான்கு இயல்களாக அமைத்துள்ளார் செ.பவானி.

1. கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்வும் படைப்பும்
2. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் கருவும் உருவும்
3. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் பாத்திரப்படைப்பு
4. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வெளிப்படும் சமுதாயப் பார்வை.


நான்கு இயல்களிலும் இழையோடியிருப்பது கவிஞர் தமிழ்ஒளியின் மனிதநேயம் குறித்த பதிவுகள்தாம் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

உயிரோவியங்கள் நூலின் முன்னுரையில் கவிஞர் இன்குலாப் தமிழ்ஒளியின் மனிதநேயம் எப்படிப்பட்டது என்பதை மிகத் தெளிவாக வரையறுக்கின்றார். அப்பகுதி வருமாறு,
“மனிதநேயம் என்பது ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுவனையும் ஒரே நிலையில் வைத்து, அன்பு காட்டுவதன்று. .. .. மனசாட்சியுள்ளவன் இருவருக்கும் பொதுவாக நிற்கமாட்டான். தமிழ்ஒளியின் மனிதநேயம் ஒடுக்குமுறைக்கு எதிரானது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒருகுரல் வேண்டியிருக்கிறது. தம் காலத்தில் கவிஞர் தமிழ்ஒளி அத்தகைய குரலாக இருந்திருக்கின்றார். ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் தமக்குச் சொந்தமான ஒரு குரலைக் கேட்காமல் போனதுதான் பரிதாபத்துக்குரியது. இதற்குக் கவிஞர் தமிழ்ஒளியோ, ஒடுக்கப்பட்டவர்களோ பொறுப்பாக மாட்டார்கள். இந்த நியாயத்தின் குரல்களைத் தமது பகட்டு ஆரவாரத்தால் மூழ்கடிக்கும் முதலாளியம் மட்டுந்தான் இதற்குப் பொறுப்பாகும்.”

கவிஞர் இன்குலாப்பின் மேற்கோளைத் தமது நூலில் எடுத்துக்காட்டும் நூலாசிரியர் செ.பவானி தமது நூலின் மையப்புள்ளியாக தமிழ்ஒளியின் மனிதநேயம் குறித்த பதிவுகளை அமைத்துக் கொண்டுள்ளார். ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான குரலாகவும் சிறுகதையாசிரியர் தமிழ்ஒளியின் குரல் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே அவரின் ஆய்வுநூல் அமைந்துள்ளது.

தமிழ்ஒளியின் சிறுகதைகள் எப்பொழுதும் பசி, பட்டினி, வறுமை, சாவு என்று ஒரே சோக மயமாயிருக்கிறது என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரின் சிறுகதையிலேயே அவர் பதில் சொல்கிறார். பட்டினிச் சாவு கதையில் கதையாசிரியரும் (தமிழ்ஒளி) அவரது நண்பர் ராமுவும் பேசிக் கொள்வதாக வரும் உரையாடல் பின்வருமாறு,

‘சமுதாயம் முன்னேறுகிறது’ என்று ராமு சொன்னான், ‘இல்லை செத்துக் கொண்டிருக்கிறது’ என்று நான் பதில் சொன்னேன். ‘உனக்கு எப்பொழுதும், சாவு, பயங்கரம், ட்ராஜெடி இதுதான் நினைவு, எல்லாம் கற்பனை’ என்று தன்னுடைய எதிர் வாதத்தைத் தொடங்கினான்.
‘எட்ட இருந்துகொண்டு சமுதாயத்தைப் பார்த்தால் எல்லாம் கற்பனையாகத்தான் இருக்கும்’ என்று நான் சூடு கொடுத்தேன்.
‘நான் எழுத்தாளனல்ல, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க. எனக்கு வேறே வேலையிருக்கிறது’ என்றான்.

சமுதாயத்தை எட்ட இருந்துகொண்டு வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் தமழ்ஒளியின் சிறுகதைகள் சோகக் கற்பனைகளாகத் தோன்றலாம். ஆனால் அவை புனைவுகளற்ற முழு உண்மைகள். அச்சோகங்களைப் பதிவுசெய்வதும் தீர்வுகளை முன்மொழிவதும் படைப்பாளனின் தலையாய பணி என்பதையே தமிழ்ஒளி தம் சிறுகதைகளில் பிரகடனம் செய்கிறார்

காலவெள்ளத்தில் கரைந்துபோன தமிழ்ஒளியின் சிறுகதைகளை ஆய்வுப் பொருளாக்கி மறைக்கப்பட்டஃ மறுக்கப்பட்ட அவரின் படைப்பாளுமையை வெளிக் கொணர்கிறார் நூலாசிரியர். சிறுகதைகளின் வடிவ நேர்த்தியில் வெளிப்படும் படைப்பாளுமையை விட உணர்வு பூர்வமான உள்ளடகத்தால் வெளிப்படும் படைப்பாளுமையே சிறந்தது. அந்தவகையில் தமிழ்ஒளியின் சிறுகதைகள் மிகச் சிறந்த படைப்பாக விளங்குகின்றன என்பதே அவரது ஆய்வு நமக்குத் தரும் செய்தியாகும்.

நல்லதோர் ஆய்வுப்படைப்பை வழங்கியிருக்கும் நூலாசிரியர் செ.பவானியின் ஆய்வுப்பணியும் எழுத்துப்பணியும் தொடர வாழ்த்துக்கள்.


6-12-2010

தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு -அணிந்துரை

வி.அமலோற்பவமேரியின்
தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு
-அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

கவிஞர் தமிழ்ஒளி இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவி. அவர் திராவிட இயக்கச் சிந்தனைகளில் கால்கொண்டு பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகளில் தம் சிறகுகளை விரித்தவர். சுரண்டுகிறவனும் சுரண்டப்படுகிறவனுமாகப் பிரிந்துகிடக்கும் இச்சமூக அமைப்பில் ஒரு படைப்பாளி யார் பக்கம் நிற்கவேண்டும் என்பதில் தெளிவான பார்வை அவருக்கிருந்தது.

ஏ செந்தமிழா! என்னுடைய சோதரா!
நீ யார்பக்கம்? நிகழ்த்திட வேண்டும்
கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா?
துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா?


என்று தம் கவிதைகளில் கேள்வியெழுப்பும் கவிஞர் தமிழ்ஒளி, தம் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் எப்பொழுதுமே துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கம்தான் இருந்தார். 1944 இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி, தமிழ், தமிழினம், தமிழர் எழுச்சி, சீர்திருத்தம் என்ற போக்கில் அதாவது தேசிய இனங்களின் உரிமை, தமிழ் ஆட்சிமொழி, சுயமரியாதை, சமத்துவம் என்ற செயல்பாட்டில் தம் படைப்;புப் பணியைத் தொடங்கினார். 1945இல் கவிஞர் மார்க்சீயத் தத்துவத்தை ஆழ்ந்து பயிலத் தொடங்கினார். அதன் விளைவாகவே நிலைபெற்ற சிலை, வீராயி ஆகிய காவியங்களைப் படைத்தார்.

1947இல் இலக்கியப் பேராசான் ஜீவா முன்னிலையில் தமிழ்ஒளி பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தார். 1947 தொடங்கி ஒன்பது ஆண்டுகள் பொதுவுடைமை இயக்கத்தில் உறுப்பினராகவும் கலை இலக்கியத் தளத்தில் புரட்சிப் படைப்பாளராகவும் விளங்கினார். 1953இல் பொதுவுடைமை இயக்கத்திலிருந்து வெளியேறினார். 1953க்குப் பிறகு புதியபுதிய உள்ளடக்கங்களிலும் உத்திகளிலும் கவிதைகள், காவியங்கள் படைப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். தம் இன்னல் மிகுந்த வாழ்வின் கடைசிவரை உழைக்கும் மக்களுக்கான படைப்பாளியாகவும் களப் போராளியாகவும் வாழ்ந்தவர். ஆக, தமிழிலக்கிய நெடும்பரப்பின் மிகச்சிறந்த பொதுவுடைமைக் கவிஞராக வாழ்ந்து மறைந்த தமிழ்ஒளிக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைத்த பாடில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்துவிட்டதைத் தவிர, அவர் வேறு ஒருபிழையும் செய்யவில்லை. தமிழகத்தின் சாதீயச் சமூகம் தமிழ்ஒளியை மறைத்துவிட்டது, மறந்துவிட்டது.

ஆனால், கடந்த முப்பதாண்டுகளில் கல்விப்புலத்தில் பெருகிவரும் இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான களம் காலத்தால் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பல படைப்பாளிகளின் படைப்புகளை ஆய்வு செய்து தமிழுலகிற்கு மீட்டெடுத்து வருகின்றது. அவ்வகையில் வி. அமலோற்பவமேரி என்னுடைய வழிகாட்டுதலில் உருவாக்கிய இளமுனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவமே தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு என்கிற இந்நூல்.

நாற்பதாண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி கவிதை, காவியங்கள், சிறுகதை, குறுநாவல்கள், நாடகம், ஆய்வுக் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல துறைகளிலும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தளித்துள்ளார். இவை அனைத்தும் 1944 முதல் 1965 வரையிலான இருபத்தோரு ஆண்டுகளில் படைக்கப்பட்டவை. சிறுகதை, நாடகம், குறுநாவல்கள், ஆய்வு என அவரின் படைப்புகள் பன்முகப்பட்டாலும் தமிழ்ஒளிக்கு மிகுந்த பெயரும் புகழும் பெற்றுத்தந்த படைப்புகள் அவரின் குறுங்காவியங்களே. தமிழ்ஒளி மொத்தம் ஒன்பது குறுங்காவியங்களைப் படைத்துள்ளார்.

குறுங்காவியங்கள்: எழுதிய ஆண்டு வெளிவந்த ஆண்டு
1. கவிஞனின் காதல் 1944 1947
2. நிலைபெற்ற சிலை 1945 1947
3. வீராயி 1947 1947
4. மேதின ரோஜா 1952 1952
5. விதியோ? வீணையோ? 1954 1961
6. மாதவி காவியம் 1958 1995
7. கண்ணப்பன் கிளிகள் 1958 1966
8. புத்தர் பிறந்தார் 1958 1966
9. கோசலக்குமரி 1962 1966


மேற்கண்ட தமிழ்ஒளியின் ஒன்பது குறுங்காவியங்களில் முதல் மூன்று குறுங்காவியங்களான கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி குறித்த ஆய்வே இந்நூலாகும்.

II
இந்நூலாசிரியர் வி.அமலோற்பவமேரி என்னுடைய ஆய்வு மாணவர். சிறந்த கவிஞர், நல்ல மேடைப் பேச்சாளர், நுணுக்க ஆய்வாளர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். வானொலி, தொலைக்காட்சி முதலான ஊடகங்களின் வழியாகத் தமிழுலகம் அறிந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரர். மாடலிங் துறையிலும் ஆர்வத்தோடு முனைந்து செயல்படுபவர். முற்போக்கு இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர். அதுமட்டுமன்றி உழைப்பே உயர்வு என்ற கொள்கையாளராய் நாளும் சுறுசுறுப்போடு தொடர்ந்து இயங்கிவருபவர். தம் இளமுனைவர் பட்டத்திற்கு வழக்கமான தலைப்புகளிலிருந்து மாறுபட்டு முற்போக்குச் சிந்தனையாளரும் பாட்டாளிகளின் தோழனும் மிகச்சிறந்த மனிதநேயப் படைப்பாளியுமான தமிழ்ஒளியின் படைப்புகளை ஆய்வுப்பொருளாகத் தேர்ந்தெடுத்தமையே இந்நூலாசிரியரின் சமூக அரசியல் ஈடுபாட்டினை வெளிப்படுத்தும். எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருளை வகைதொகை செய்பவராக மட்டும் அமையாமல் சமூகம் பயன்கொள்ளத்தக்க வகையில் தமிழ்ஒளியின் குறுங்காவியங்களைத் தமிழுலகிற்கு மிகச்சரியாக இனம் காட்டும் பெரும்பணியினையும் இவர் செய்துள்ளார். அந்தவகையில் நூலாசிரியர் அமலோற்பவமேரியின் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது.

தமிழ்ஒளியின் குறுங்காவியங்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்யும் இந்நூல் பின்வரும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
1. கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்வும் பணியும்.
2. கவிஞர் தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் ஓர் அறிமுகம்.
3. சமூக நோக்கில் தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள்.

முதல் இயல், தமிழனே! நான் உலகின் சொந்தக் காரன், தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து எனப் பிரகடனம் செய்துகொண்ட மக்கள்; கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் அவரின் படைப்புகள் குறித்த அறிமுகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இயல், காவிய இலக்கியவகை குறித்த அறிமுகங்களோடு ஆய்வுக்குரிய மூன்று குறுங்காவியங்களின் கதைச் சுருக்கம் மற்றும் பாத்திரப்படைப்புகளை அறிமுகம் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் இயல், ஆய்வுக்குரிய கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி காவியங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்கிறது. அந்த வகையில் இக்குறுங்காவியங்களில் பேசப்படும் சாதியச் சிக்கல்கள், தொழிலாளர் பிரச்சனை, வறுமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பொதுவுடைமைச் சமூகத்திற்கான போராட்டம், தமிழ்மொழி உயர்வு முதலான உள்ளடக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இவ்வியல்.

நூலின் நிறைவுப் பகுதியில் நூலாசிரியர் தரும் முடிப்புரை பயன்தரத்தக்க வகையில் தொகுத்தளிக்கப் பட்டுள்ளது.

நூலின் மொழிநடை தனித்துக் குறிப்பிடத் தக்கவொன்றாகும். எளிய இனிய மொழிநடையில் இவ்ஆய்வுநூல் அமைந்திருக்கின்றது. ஆய்வு நூல்களுக்கே உரிய கடுநடை தவிர்க்கப்பட்டு எளிய இனிய தமிழில் இடையிடையே தமிழ்ஒளியின் கவிதைப் பகுதிகள் மிளிர ஆய்வாளர்கள் மட்டுமின்றிப் பொதுமக்களும் மாணவர்களும்கூட இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
கவிஞர் தமிழ்ஒளி, 1947இல் வெளியிட்ட வீராயி காவியத்தின் முன்னுரையில் பின்வருமாறு எழுதினார்.

“நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தவன் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள்"


கவிஞர் தமிழ்ஒளி எழுத்தாள நண்பர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்குத் தாமே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து தம் படைப்புகளைப் படைத்துக் காட்டினார். கவிஞர் தமிழ்ஒளியின் படைப்பாளுமை அளப்பரிது. அவர் படைப்பின் உள்ளடக்கங்களோ வீரியமிக்க புரட்சி வித்துக்களைக் கொண்டது. காலத்தின் தேவை கருதி இவ்வாய்வு நூலைத் தமிழுலகிற்கு உவந்தளிக்கும் வி. அமலோற்பவமேரி பாராட்டுக்குரியவர். அவரின் சமூகப் பணியும் எழுத்துப் பணியும் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

கோவைக் கொண்டாட்டம் - அணிந்துரை

தோழர் புதுச்சேரி லெனின் பாரதியின்
கோவைக் கொண்டாட்டம்

அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
புதுச்சேரி-8


இன்றைய சமூக அரசியல் சூழலில் ஒரு தகவலைப் பதிவு செய்வதிலும் பதிவு செய்யாமல் விடுவதிலும் கூட அரசியல் உண்டு. ஏனென்றால் பதிவுகளே வரலாற்றிற்கான மூலங்கள். எப்பொழுதும் வரலாறுகள் பதிவுகளைக் கொண்டே புனையப்படுகின்றன.
* * *

கோவைக் கொண்டாட்டம் என்ற இந்நூல் தோழர் புதுச்சேரி லெனின் பாரதியின் அரிய உழைப்பால் உருவான ஒரு தொகுப்பு நூலாகும். கடந்த 2010 ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை தமிழகத்தின் கோயம்பத்தூரில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டிய ஒரு சிறிய பதிவே இந்நூல்.

தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசும் அதன் பிதாமகன் கலைஞர் அவர்களும் இம்மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினர் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. பொதுவாக இத்தகு அரசியல் பின்னணி கொண்ட மாநாடுகள் மிகப் பெரிய அளவில் கொண்டாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் மட்டுமே கவனம் செலுத்தி வேடிக்கை காட்டுவதுதான் வாடிக்கை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சற்றே விதிவிலக்கானது. கோவை மாநாட்டிலும் கொண்டாட்டங்கள் உண்டு என்றாலும் அதில் நேரடியான அரசியல் வண்ணங்கள் தலைகாட்டவில்லை என்பது ஓர் ஆறுதல். மாநாட்டின் இன்றியமையாத பகுதியான கல்வியாளர்கள் பங்கேற்ற ஆய்வரங்கப் பகுதிகள் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுச் செம்மையாக நடைபெற்றன என்பது மாநாட்டின் தனிச்சிறப்பு.

தோழர் லெனின் பாரதி மிகச்சிறந்த சமூக சேவகர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாகச் சமூக அரசியல் மாற்றத்தை விரும்பும் ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர். உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தோழர் லெனின் பாரதியின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பதற்கான ஓர் அடையாளமே அவரின் கோவைக் கொண்டாட்டம் என்ற இத்தொகுப்பு நூல்.

இந்நூலைத் தாம் தொகுத்து வெளியிட முயன்றதற்கான நோக்கத்தை அவரே நூலின் முன்னுரையில் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்,

மாநாட்டு நிகழ்வுகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் தமிழக அரசு தொகுப்பாக வெளிக்கொணர வேண்டுமென அறிஞர் பெருமக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு சிறிய படைப்பாவது பதிவாக வேண்டுமே என்ற ஆதங்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்தச் சிறிய நூல். முடிந்தவரை பேச்சுகளும் தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. (முன்னுரை)

பதிவுகளுக்கான ஆதாரங்களாக அவர் எடுத்துக்கொண்டன ஹிந்து, தினமலர், தினகரன், தினத்தந்தி, தீக்கதிர் முதலான செய்தித்தாள்களில் இடம்பெற்ற தகவல்களைத்தாம். நமது தினசரிகளிலிருந்து இத்தகு நல்ல தகவல்களைத் திரட்ட முடிந்திருந்திருக்கிறது என்பதே ஒரு வரலாற்று அதிசயம்தான்.

மாநாடு தொடர்பான அவரது பதிவுகளை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை,
1. மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகள்.
2. மாநாட்டுப் பங்கேற்பாளர்களின் கருத்துப் பதிவுகள்.
(குறிப்பாக வெளிநாட்டுப் பேராளர்கள் மற்றும் அறிஞர்களின் கருத்துக்கள்)
3. மாநாட்டோடு ஒட்டிய தகவல் குறிப்புகள்.

மாநாட்டு உரைகளில் தமிழக முதல்வரின் தொடக்கவிழாப் பேருரையும் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் வாழ்த்துரையும் சிறப்பாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. குறிப்பாக, யெச்சூரி அவர்களின் உரையில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டுக்குப் பிந்தைய பணிகள் பற்றிய கருத்துரை கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

அவை வருமாறு,
தமிழுக்குப் பழமையான மரபு உண்டு. இன்றைக்கும் மிகவும் பொருந்தக் கூடிய பெருமைமிகு இலக்கியங்களைத் தமிழ் தன்னகத்தே கொண்டுள்ளது. இது தவிர ஏட்டில் எழுதப்படாத வாய்மொழி வரலாற்றுச் செல்வங்களையும் அபரிமிதமாகக் கொண்டுள்ள மொழி தமிழ். இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களை உடனடியாக ஆவணப்படுத்தி என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதாக மாற்றிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

நாட்டுப்புற இசை, நாடகம், கூத்து, நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் மதிப்புமிக்க பொக்கி~ங்களாகக் கிராமப்புற மக்கள் மத்தியில் விளங்குகின்றன. இவற்றைப் பாதுக்காக்க வேண்டிய நடவடிக்கைகளை மாநாடு எடுக்குமென்று நான் நம்புகிறேன்.

தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களால் தமிழ்ச் சமூகம் செழுமையடைந்த ஒன்றாகும். இந்த இயக்கங்களின் இலக்கியப் பங்களிப்பு மூலம் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்து இம்மாநாடு சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். (சீத்தாராம் யெச்சூரி)

இடதுசாரிகள் ஆதரவு பெற்ற அரசால் தமிழ் செம்மொழித் தகுதி பெற்றது என்ற வரலாற்றை யெச்சூரி அவர்கள் தம்பேச்சின் இடையே குறிப்பிட, அதனையே தலைப்பாக்கி அவரது பேச்சைத் தொகுப்பில் இடம்பெறச் செய்திருப்பது லெனின் பாரதியின் படைப்பாற்றலுக்குத் தக்க சான்றாகும்.

தொகுப்பின் இடையிடையே பொருத்தமான படங்களை இடம்பெறச் செய்திருப்பது நூலுக்கு அழகு சேர்ப்பதோடு வரலாற்று ஆதாரங்களாகவும் அமைந்து சிறக்கின்றன. சான்றாக, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி இந்திய அஞ்சல் துறையின் சார்பில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது என்ற தகவலோடு மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட அந்த அஞ்சல் அட்டையின் படத்தையும் நூலில் இணைத்திருப்பதனைக் குறிப்பிடலாம்.

செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் அவர்கள் முன்மொழிந்த மாநாட்டுத் தீர்மானங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ள பதிவுகளில் மிக மிக இன்றியமையாதனவாகும். வருங்காலத் தலைமுறைக்கும் தமிழின் வருங் காலத்துக்கும் தேவைப்படுவன அவை. மாநாட்டுத் தீர்மானங்களைத் தொடர்ந்து தீர்மானங்களின் செயல்வடிவம் குறித்த சில தகவல்களும் இடம்பெற்றிருப்பது நம்பிக்கையூட்டக் கூடியதாயுள்ளது.

நூலில் இடம்பெற்றுள்ள சில முக்கிய பதிவுகள்:
1. தொடக்கவிழாவில் அணிவகுத்த இனியவை நாற்பது என்று பெயரிடப்பட்ட அலங்கார ஊர்திகள் பற்றிய விபரங்கள்.
2. செம்மொழி மாநாட்டுக் கண்காட்சி அரங்கு குறித்த தகவல்கள்.
3. சமயம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள கருத்தரங்கச் செய்தித் திரட்டுகள்.
4. ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்ட பல இன்றியமையாத தகவல்களின் தொகுப்பு.
5. வெளிநாட்டுத் தமிழறிஞர்களின் பேட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில சுவையான தகவல்கள்

தொகுப்பாசிரியர் தோழர் லெனின் பாரதி தம்முடைய குரலை எங்குமே பதிவு செய்யாமல் விட்டிருப்பதும் மாநாட்டுக்கு முன்னும் பின்னுமான அரசியல் குறித்தும் அதற்கான எதிர்வினைகள் குறித்தும் ஏதும் பேசாமல் மௌனம் சாதித்திருப்பதும் இத்தொகுப்பின் பலமா? பலவீனமா? என்கிற விவாதம் இந்நூலில் தொக்கி நிற்கின்றது. பதிவாக வேண்டும் என்ற நூலூசிரியரின் ஆதங்கமே இந்நூலை உருவாக்கக் காரணம் என்பதனால் தொகுப்பு முயற்சி என்ற வகையில் நூலாசிரியர் மிகக் கடுமையாக உழைத்து நூலை உருவாக்கியுள்ளார். தோழர் லெனின் பாரதியின் தமிழார்வமே இத்தகு கடின உழைப்புக்கு உந்துசக்தியாக இருந்துள்ளது. செம்மொழிக்கு அணிசேர்க்கும் வகையில் கோவைக் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ள நூலாசிரியரின் பணி பாராட்டுதலுக்குரியது.

செவ்வாய், 23 நவம்பர், 2010

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம் -(பகுதி-1)

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

தமிழிலக்கிய வரலாற்றில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பாவலர்கள் பலருண்டு. ஆனால் தாமே ஓர் இயக்கமாக வாழ்ந்த பாவலர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மட்டுமே. மூச்சிருக்கும் வரை தமிழுக்காக உயிர்த்தவர். பேச்சிருக்கும்வரை தமிழர் உரிமைக்காக முழங்கியவர். நினைவிருக்கும் வரை தமிழர் விடுதலை பற்றியே நினைத்தவர். தமிழக வரலாறு காணாத தமிழ்ப்போராளி பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

ஓய்ந்திடல் இல்லை, என் உள்ளமும் உணர்வும் உயிர்ச்செறிவும்
தேய்ந்திடல் இல்லை, என் விரல்களும் தாளும்! திரிந்தலைந்து
சாய்ந்திடல் இல்லை, என்உடலும், எனவே சலிப்பிலனாய்
மாய்ந்திடல் வரையும் உழைப்பேன், உரைப்பேன், மக்களுக்கே!

என்று முழக்கம் செய்த பாவலரேறு எழுதியவாறே வாழ்ந்தார். அவர் வாழ்வின் இறுதிநாள் வரை தமது எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்க்கையே போராட்டமாய், போராட்டமே வாழ்க்கையாய் வாழ்ந்து மறைந்தார். பாவலரேறு தனித்தமிழ்நாடு, பெரியாரின் தன்மானக்கொள்கை, மார்க்சியப் பொருளியல்கொள்கை என்ற முப்பெருங் கொள்கைகளைத் தம் உயிர்மூச்சாகக் கொண்டு இறுதிவரை போராடினார். தமிழ்த் தேசியமே அவரின் உயிர்க்கொள்கையாய் இருந்தது. தென்மொழி: பெருஞ்சித்திரனாரின் தமிழ் இயக்கப் பணியில் பெரும்பங்காற்றியது அவரின் தென்மொழி இதழே. தமிழன்பர்களின் போர்வாளாகத் தென்மொழி விளங்கியது. தென்மொழியின் முதல் இதழ் 1-8-1959இல் வெளியானது. இதழின் குறிக்கோள்முழக்கமாகப் பின்வரும் பாடல் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறுவது வழக்கம்.

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை! புவியில் எவரும் எதிர் நின்றே!


தென்மொழி இதழ் தன் குறிக்கோளில் ஒருபோதும் பின்வாங்கியதும் இல்லை, சமரசம் செய்து கொண்டதுமில்லை. தென்மொழி ஓர் இதழன்று, ஓர் இயக்கம் என்று பாவலரேறு குறிப்பிட்டதற் கேற்ப இதழின் கட்டுரைகளில் பாடல்களில் தமிழுணர்வு கொழுந்துவிட்டெரியும்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வெண்ணூற்பா:

பாவலரேறு, பாடல்கள் மற்றும் கட்டுரைத் தொகுதிகளாக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். அச்சு வடிவம் பெறாத படைப்புகளும் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாவலரேறுவின் பாடற்படைப்புகளில் தனிப்பெருஞ் சிறப்புடன் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் உலகியல் நூறு. உலகின் இயற்கைத் தன்மைகளை விளக்கும் நூறு பாடல்களைக் கொண்ட நூல் என்ற பொருளில் உலகியல் நூறு என்று பெயரிட்டுள்ளார். இந்நூல் 1973 - 74ஆம் ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பெற்றது என்று நூலாசிரியரே தம் முன்னுரையில் குறிப்பிடுவார். தனிநூலாக இதனைப் படைத்த பின்னர், 1976 முதல் 78 முடிய தென்மொழி இதழில் பகுதி பகுதியாக இந்நூலின் பாடல்கள் வெளியிடப்பட்டன. பின்னர் 1982இல் உலகியல் நூறு முழு நூலாக வெளியிடப் பெற்றது.

இந்நூலுள் உள்ள பாடல்கள் நூறும் வெண்பா யாப்பில் அமைந்தனவாகும். இந்நூலின் பாடல்கள் கருத்துச் செறிவால் நூற்பா எனும் உணர்வினை ஊன்றிப் படிப்பார்க்கு ஊட்டுவதால் இந்நூலின் பாவமைப்பை வெண்ணூற்பா(வெண்-நூல்-பா) எனும் புதிய சொல்லால் வழங்கலாம் என்பார் ஆராய்ச்சி முன்னுரை எழுதிய அருளி. பாடல்களோடு அதன் சுருக்கமான பொழிப்புரையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. பாடல்கள் திண்ணிய மெய்ப்பொருள் கருத்துக்களை வெளிப்படுத்துவன வாகையால், பாடல் அமைப்பும் இறுகலாகவே உள்ளது. அதனைப் பொழிப்பு ஓரளவே குழைவாக எடுத்துக் கூறுகிறது. இதில் உள்ள கருத்துக்களை இதைவிட மிக எளிமையாக எடுத்துக் கூறுவதானால், அஃது இந்நூலைப்போல் பலமடங்கு பெரிதாக அமைந்துவிடும். பிற்காலத்து மெய்ப்பொருளுணர்வும் தமிழ்த் தகுதியும் அறிவு ஒளியும் வாய்க்கப் பெற்றோர் எவரேனும் அதைச் செய்யட்டும்என்று இந்நூலின் பொழிப்புரை குறித்து நூலாசிரியர் கருத்துரைப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நூல் நுவலும் பொருள்:

நூலுள் பேசப்படும் உள்ளடக்கம் பற்றிப் பாவலரேறு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.உலகியல் நூறு என்னும் இந்நூல் உயர்ந்த மறைவான உலகியல் செய்திகளை, ஓரளவு முற்றும் அடக்கிக் கூறுவதாகும். அகண்டாகாரமாகப் புடைவிரிந்து, எண்ணத்திற் கெட்டாமல் பரந்து கிடக்கும் இப்புடவியுள்(பிரபஞ்சத்துள்) மாந்தப் பிறப்பிடத்தின் துகள் இருப்பும், அவனின் துணுக்கிருப்பும், அத்துணுக்கின் ஆட்டமும் அடக்கமும், ஓக்கமும் ஒடுக்கமும் எத்தகையன என்பதைத் துல்லியமாக, மெய்ப்பொருள் நூல்கள் போல் விளக்கிக் காட்டுவது இந்நூல். இந்நூலுள் வரும் உண்மைகள் எல்லாம், எல்லார்க்கும், எவ்வகையானும் எளிதே விளங்குவன அல்ல. ஆழ்ந்து தோய்ந்த சிந்தனையால் வெளிப்படுத்தப் பெற்ற மெய்க்கூறுகள் இவை.

உலகியல் நூறு அடிப்படையில் ஓர் அறவியல் நூல். தமிழின் பிற அறவியல் நூல்களைப்போல் இந்நூல் அமைக்கப்படவில்லை. அறிவியல், மெய்ப்பொருளியல், அறவியல், உலகியல் கருத்துக்களைப் பிசைந்து வார்த்த தனிப்படைப்பாக இந்நூல் அமைந்துள்ளது. அறிவியல், குறிப்பாக இயற்பியல் உண்மைகளையும் மெய்ப்பொருளியல் கருத்துக்களையும் இணைத்து உலகியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களை முன்னிறுத்தி படைக்கப்பட்டுள்ள இந்நூல்போல் ஓர் அறவிலக்கிய நூல் தமிழில் முன்னும் இல்லை பின்னும் இல்லை. தமிழில் இது ஒரு புதிய இலக்கியவகை. உலகின் வேறெந்த மொழியிலாவது இதுபோல் ஓர் அறநூல் எழுதப்பட்டிருக்குமா? என்றால் ஐயமே.

தமிழ் வளர்ச்சிக்கும் தமிழின மீட்புக்கும் தமிழ்நில மீட்புக்கும் தொடர்ந்து தொண்டாற்றிய பாவலரேறு உலகியலை விளக்கப் புகுந்த இந்நூலின் நூறு பாடல்களிலும் எவ்விடத்தும் தமிழ், தமிழினம், தமிழ்நாடு இவைகளைக் குறிப்பிடாமல் பொதுமை தோன்றப் படைத்துள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பாகும். நாடு, இனம், மொழி கடந்த நிலையில் உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவானதாகவே இவ்வறவிலக்கியத்தைப் படைத்துள்ளார் பாவலரேறு.

நூல் அமைப்பு:

உலகியல் நூறின் அனைத்துச் செய்யுள்களிலும் உலகின் நுண்பொருள் பருப்பொருள் இயக்கங்கள் அனைத்தும் விளக்கியுரைக்கப் பட்டுள்ளன. இதன் பெரும் பகுப்பு இயல்களாகவும் குறும் பிரிவு நிலைகளாகவும் பாகுபாடு செய்யப்பெற்றுள்ளன. நிலை என்பது இருப்பு நிலை, இயல் என்பது இயங்கு நிலை எனவே உலக இருப்பும் இயக்கமும் இதில் காட்டப்பட்டுள்ளன என்பார் நூலாசிரியர் பாவலரேறு.
உலகியலின் பெரும் பரப்பினை

1.உலகியல்,
2.நாட்டியல்,
3.மாந்தவியல்,
4.பொதுமையியல்,
5.வாழ்வியல்,
6.குடும்பவியல்,
7.ஆண்மையியல்,
8.பெண்மையியல்,
9.உறவியல்,
10.அயலியல்,
11.வினையியல்,
12.செல்வயியல்,
13.ஒப்புரவியல்,
14.அறிவியல்,
15.புகழியல்,
16.இறப்பியல்,
17.பிறப்பியல்,
18.உயிரியல்,
19.ஓர்பியல்,
20.இறைமையியல்

என்ற இருபது இயல்களாகப் பாகுபடுத்தி, ஒவ்வோர் இயலையும் ஐயைந்து நிலைகளாகக் கூறுபடுத்தி மொத்தம் நூறு தலைப்புகளில் நூறு வெண்பாக்களில் நூலை அமைத்துள்ளார்.

நூலின் தொடக்கம்:

தமிழ் நூல் மரபில் உலகம் என்று நூலைத் தொடங்குதல் மரபென்றும் மங்கலமென்றும் கருதப்படும். உலகியல் நூறு நூலின் தொடக்கத்தில் உலகம் என்று முதல் இயலின் தலைப்பிட்டு நூலைத் தொடங்கும் ஆசிரியர்,

புடவிபல ஒன்றுகடல் புன்மணலிஞ் ஞாலம்
அடவியென் மீன்செறிவாம் அண்டம்பல் கோடி
இடவரைகள் எண்டிசைகள் இவ்வுலக வாக்கம்
கடவிடைகள் நேர்ச்சிக் கணிப்பு (பா.1)


என்று முதல்பாடலை அமைத்துள்ளார். இப்பாடல் புடவி என்று தொடக்கம் கொண்டுள்ளது. புடவி என்பது பிரபஞ்சம், புடவிகளை நோக்க இவ்வுலகம் கடற்கரை மணற்பரப்பில் ஒரு மணல் துகளுக்கு ஒப்பாம். உலகு என்று தொடங்குவதிலும் பேரண்டப் பெரும் பரப்பாம் புடவி எனத் தொடங்குவதின் சிறப்பினை ஓர்ந்து உணர்தல் வேண்டும். புடவிகள் பலவாகும். அவற்றுள் ஒன்றினது, கடற்கரையின் புல்லிய மணலைப் போன்றது இவ்வுலகம். அடர்ந்த காடு போலும் செறிந்த விண்மீன்களைக் கொண்ட அண்டங்கள் பல கோடியாகும். இவற்றுள் இடமும் அளவுகளும் எட்டுத்திசைகளும் இவ்வுலகத்திற்கென உருவாக்கிக் கொண்ட ஆக்கங்களாம். வினாக்களும் விடைகளும் இங்குள்ள நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுந்த கணிப்புக் கூறுகளாம்.

நூலின் முழுச்சிறப்பும் முதற்பாடலிலேயே தெற்றெனப் புலப்படுகின்றது. காலம் என்று தனிப்பட்டு ஒன்றும் கிடையாது. தூரத்தையும் இடைவெளிகளையும் காலத்திலிருந்து தனியாகப் பிரிக்க முடியாது. ஒளியின் வேகத்தில் நம்மால் செல்லமுடியும் எனில் காலம் அங்கே மறைந்துவிடுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளிப்படுத்திய ரிலேடிவிட்டி - சார்பியல் கோட்பாடு இப்பாடலில் பொதிந்துள்ளது. காலம் முதலான அளவுகள், மேல் கீழ், இடம் வலம், முன் பின் என்பன போன்ற இடம் திசைகள் குறித்த விளக்கங்களும் நாம் வகுத்துக் கொண்டவையே அன்றி வேறில்லை. நிகழ்ச்சிகளும் அது குறித்த கணிப்புக் கூறுகளுமே வினா விடைகளுக்கு அடிப்படை. இப்படி, தொடக்கச் செய்யுளிலேயே நம்மை மலைக்கச் செய்துள்ளார் நூலாசிரியர். பிரபஞ்சத் தோற்றம் பெருக்கம் ஒப்பு இவைகளை முதல்பகுதியில் குறிப்பிடும் ஆசிரியர் இப்புவியின் இறுதி பற்றியும் சுட்டிக்காட்டுகின்றார்.

தாயொளியும் ஒல்கத் தணந்து நிலைமாறிப்
போயழியும் கங்குற் பொடிந்து. (பா.5)

இதன் பொழிப்பு, இத்தொன்மையான உலகம் என்றோ ஒரு காலத்தில் தனக்கு ஒளி நல்கும் தாயாகிய கதிரவனின் ஒளி குறைந்து குளிரடைதலால் தன் நிலையில் திரிபுற்று, அதனின்று விலகியோடி இருட்பகுதிக்குள் புகுந்து பொடிந்து அழிவதாகும். சூரியன் வெப்ப ஆற்றல் முழுவதையும் இழந்த நிலையில் கரும்பொந்தாய் மாறும் அதனுள் பூமி தன்னையழித்துக் கொள்ளும் என்ற அறிவியல் உண்மை இப்பாடலில் பொதிந்துள்ளது. தமிழரின் தனிப்பெருஞ் சொத்தாகவும் உலகப் பொதுமறை என்ற சிறப்பிற்குரியதாகவும் விளங்கும் திருக்குறளின் பிழிவாக இவ்வுலகியல் நூறு நூலைப் பெருஞ்சித்திரனார் வடித்துள்ளார்.
பல குறட்பாக்களில் சொல்லப்பட்ட அறங்கள் இந்நூலின் ஒரே வெண்பாவில் அமைந்து சிறக்கின்றமை ஆழ்ந்து பயிலுதற்குரியது. குடும்பவியல், உறவியல், வினையியல், செல்வயியல், அறவியல் முதலான இயல்கள் திருக்குறளோடு ஒப்பிட்டு ஆய்தற்கு இடம்தருவனவாய் அமைந்துள்ளன.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம் -(பகுதி-2)

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

பொதுவுடைமை அறம் கூறும் நூல்:
பாவலரேறுவின் உயிர்க்கொள்கைகள் மூன்றனுள் ஒன்றாகிய மார்க்சிய பொதுவடைமைக் கொள்கையை உலகியல் நூறின் பொதுமையியல், ஒப்புரவியல் பகுதிகளில் சிறப்பாக வலியுறுத்திப் பாடுகின்றார்.

ஊனுடம்பு வாய்த்த உயிர்க்கெல்லாம் வாழ்க்கை பொது (பா.62)

மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் உலகும் உலகவாழ்க்கையும் பொது, எனவே உலக வளங்களை அனைத்துயிர்களும் வேறுபாடின்றித் துய்த்தலே கடமை என்கிறார். வேறு பாடல்களிலும்,

உலகுடைமை யார்க்கும் உடைமை (பா.65) என்றும்
தொகையுலகில் இன்புறுதல் எல்லவர்க்கும் (பா.64)


என்றும் வரையறை செய்கின்றார். எல்லோரும் இன்புற்றிருக்க, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு ஈதல் வேண்டும் என்ற பழைய ஈகைக் கொள்கையைப் பாவலரேறு முன்மொழியவில்லை. மாறாக, ஈகையின் வடிவமான வள்ளண்மை என்பது உயர்வில்லை என்றும் இல்லாமையைப் பேணிப் பாதுகாக்கும் பழைய முயற்சியே அது என்றும் கூறுகின்றார்.

வள்ளண்மை
என்றும் உயர்வன்றே இல்லாமை பேணுமொரு
தொன்று முயல்வே அது! (பா.63)

என்பது அப்பாடல்.

உழைப்பொருபால் ஓங்கும் உவப்பொருபால் ஒன்னார்
இழைப்பொருபால் எய்தல் இகழாம் - தழைப்பெய்தல்
வேண்டின் உடலுழைப்பு வேளாண்மை துய்ப்பு
யாண்டும் பொதுவமைத்தல் யாப்பு (பா.16)

உடலுழைப்பு ஒருபக்கமும் உவப்பு ஒருபக்கமும் என்றிருத்தல் இழுக்கு. நாடும் மக்களும் செழிப்படைய வேண்டுமானால் உடல் உழைப்பைப் பொதுவாக்கல் வேண்டும், உழவையும் உழவுக்கான நிலத்தையும் பொதுவாக்கல் வேண்டும், உலக இன்பங்களை நுகரும் துய்ப்பையும் பொதுவாக்கல் வேண்டும் என்று ஒரே பாடலில் பொதுவுடைமைக் கொள்கையின் பிழிவைக் கூறி உலகியல் நூறு அறவிலக்கியத்தை உலக அறவிலக்கியமாக இலங்கச் செய்துள்ளார் பாவலரேறு. உடைமை பொதுவாகவில்லை யென்றால் நாட்டில் சமத்துவம் இருக்காது. ஒருபக்கம் வளமை, மறுபக்கம் வறுமை என உலகமே அலங்கோலமாயிருக்கும். இந்த வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயத்தைக் கட்டமைத்தல் நமது கடமை. இந்தக் கடமையில் நாம் தவறினால்,

திருக்குவைசூழ் மாடத் தெருக்கடையின் ஓரத்து
உருக்குலையும் வாழ்க்கை ஒழிக -பெருக்கமுறும்
வான்தோய் வளமனைக்குள் வன்குடில்வாழ் ஏழையர்தம்
கான்தோயும் காலம் வரும். (பா.18)


வன்குடில் வாழ் ஏழையர் வளமனைக்கும் நுழையும் காலம் வரும் என்பதற்கு, ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சி, போராட்டம், புரட்சி வெடிக்கும் என்பதாகப் பொருள் கொள்ளுதல் வேண்டும். பொதுமையியல், ஒப்புரவியல் என்ற இரண்டு இயல்களிலும் நூலாசிரியர் அமைக்கும் பத்து பாடல்களும் சுரண்டல் சமூகத்தின் இழிவையும் பொதுவுடைமைச் சமூகத்தின் மேன்மைகளையும் எடுத்துச்சொல்லி உலகின் இன்றைய தேவையை வலியுறுத்துகின்றன.

மாந்தவியல் எனும் பகுதியில் ஒழுக்கம் என்பதை விளக்கப் புகுந்த நூலாசிரியர் ஒழுக்கம் பசியின்மை ஊன்றுதொழில் கல்வி (பா.14) என்கிறார். நாட்டு மக்களுக்கு உணவு, தொழில், கல்வி என்ற இம்மூன்றையும் முறையாக வழங்கினால் ஒழுக்கம் தானாக நிலைபெறும் என்கிறார். சமமற்ற பகிர்வே நாட்டில் நிலவும் குற்றங்களுக்கு அடிப்படை. சமத்துவம் ஒழுக்கத்தை நிலைநிறுத்தும் என்பது ஆசிரியர் கருத்து.அறங்களும் சட்டங்களும் அனைவர்க்கும் பொதுவா? நாட்டியல் என்னும் பகுதியில் அதிகாரத்திற்கும் சட்டத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த தம் பார்வையைப் பதிவு செய்கிறார் பாவலரேறு.

அமைத்த அதிகாரத் தாள்வோர்க்குச் சார்பாய்
சமைத்துக் கொளும்நெறியே சட்டம் -இமைத்துரைப்பின்
ஆனைக் குழுசெய் அறநெறியாங் கோர்ஏழைப்
பூனைக் குதவுமெனல் பொய். (பா.7)

சட்டங்கள் என்றைக்குமே அதிகாரத்தைக் கட்டமைக்கவும் விளிம்பு நிலை மக்களை ஒடுக்கவுமே உருவாக்கப்படுகின்றன என்ற உண்மையை விளக்குவதோடு ஆனைக் குழு அதாவது அதிகாரம் படைத்தவர்கள் உருவாக்கும் சட்டம் பூனைக் குழுவிற்கு அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்றைக்குமே உதவாது என்கிறார் ஆசிரியர். மேலும் இப்பாடலில் சட்டங்;கள் குறித்து அவர்முன் வைத்த விமர்சனங்கள் அறநெறிகளுக்கும் பொருந்தும் என்கிறார். அறநெறிகளை விளக்கப் புகுந்த ஓர் அறவியல் இலக்கியத்தில் அறம் - அதிகாரம் இவைகளுக்கு இடையிலான தொடர்பினைச் சரியான பார்வையில் எடுத்துக் காட்டுவதன் மூலம் நூலை வாசிப்பவர்களுக்கு உரிய வழிகாட்டியாகவும் திகழ்கிறார் பாவலரேறு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வெற்று முழக்கத்தைக் கேட்டுப் பழகிய நமக்குப் பாவரேறுவின் குரல் ஒரு புரட்சிக் குரலாகவே ஒலிக்கிறது.

தொண்டின் மேன்மை:

புகழியல் எனும் பகுதியில் தொண்டுநிலை பற்றி விளக்குமிடத்து, தோய்ந்தார் பொருட்டு உழைத்தல் தொண்டென்ப என்று தொண்டிற்கு இலக்கணம் வகுப்பதோடு தொண்டு செய்வதில் உள்ள இடர்ப்பாடுகளையும் பட்டியலிடுகிறார். பாடல் பின்வருமாறு,

தோய்ந்தார் பொருட்டுழைத்தல் தொண்டென்ப உள்ளச்சீர்
வாய்ந்தார் துணிவின் வயப்படுக -ஆய்ந்துரைக்கின்
துன்பம் இழவிழிவு தோளின்மை தூங்காமை
இன்பென்பார் ஆற்றல் இனிது. (பா.75)

இப்பாடலில் துன்பம், இழப்பு, இழிவு, துணையில்லாமை, சோர்தலில்லாமை இவைகளை யார் இனிது என்று கருதி உழைக்க அணியமாய் இருக்கின்றார்களோ அவர்களே தொண்டு செய்தல் முடியும் என்கிறார். பாவலரேறு அவர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடிப்பதாக உள்ளது இப்பாடல். தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்க்கையையே அதற்காக ஈடு கொடுத்த ஆசிரியர் மேற்கூறிய இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தார் என்பது மிகையன்று.
அதே புகழியல் பகுதியில் மான நிலை என்ற பொருளில் பாடும் போது,

மனவுயர்ச்சி தாழவரல் மானம் அதுதான்
இனவுயர்ச்சி காட்டும் எழுச்சி -இனவுயர்ச்சி
உள்ளுவார்க் கில்லை உயர்மானம் ஆங்கதனைக்
கொள்ளுவார்க் கில்லை குனிவு (பா.74)


என்று பாடுகிறார். மனவுயர்ச்சிக்குத் தாழ்வு வருமானால் அச்சூழலில் தோன்றும் நல்லுணர்வே மானம் என்றும் இந்த நல்லுணர்வுதான் ஓர் இனத்தின் உயர்வைக் காட்டும் அடையாளம் என்றும் குறிப்பிடும் ஆசிரியர், இனவுயர்ச்சியைக் கருதி உழைக்கின்றவனுக்குத் தன்பொருட்டு இந்த மானவுணர்ச்சி தேவையில்லை என்றும் அதனால் தாழ்ச்சியொன்றும் இல்லை என்றும் கூறுகின்றார். இனத்தின் உயர்வுக்குப் பாடுபடும் தொண்டன், போராளி தனிப்பட்ட மானவுணர்ச்சி பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. தமிழ் இனவுயர்ச்சிக்காகப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரும் தம் தனிப்பட்ட மானவுணர்ச்சி பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் எத்தனையோ அவமானங்களையும் தாழ்வுகளையும் ஏற்றுப் போராடினார் என்பது இங்கே நினைத்துப் பார்க்கத்தக்கது.

பிறப்பியலும் உடற்கூற்று வண்ணமும்:

பிறப்பியல் என்னும் இயலில் உடல் நுகர்ச்சி நிலை, கருநிலை, உருநிலை முதலான பாடல்களில் மனித உயிர் பிறப்பின் நுணுக்கங்களை வியப்புற விவரித்துச் சொல்கின்றார்.

விழிமின்பாய்ந் துள்வெதுப்ப வேண்மதநீர் ஓடிக்
கழிபெருநற் காமம் கனப்பப் -பொழியன்பால்
சொல்லிதழ்க்கை மொய்த்தூர்ந்துள் ஒத்துச் சுரப்பாடி
வல்லுறுத்துத் துய்த்தல் வரைத்து (பா.81)

ஆண் பெண் உடல்நுகர்ச்சியை வருணிக்கும் இப்பாடல் படித்து இன்புறுதற்குரியது. அடுத்த பாடலில்

வித்துசினை ஒன்றித்தாய் வேதுநீர் உள்வாங்கிப்
பத்துமதி தாங்கிப் படர்ந்து (பா.82)

என்று கருநிலையை விவரிக்கும் பகுதி, ஒருமட மாது.. .. எனத்தொடங்கும் பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணத்தை ஒத்த நயமான பகுதியாகும்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம் -(பகுதி-3)

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

உலகியல் நூறும் இயற்பியலும்:
பாவலரேறு தாம் படைத்த உலகியல் நூறு எனும் அறிவற இலக்கியத்தில் பிற அறநூல்கள் பேசாத பல புதிய உண்மைகளை பேசுகின்றார். நூலின் தொடக்கத்திலும் இடையிலும் நிறைவிலும் அவர்விளக்கும் அறிவியல் மற்றும் மெய்ப்பொருளியல் உண்மைகள் நூலாசிரியரே குறிப்பிடுவது போல் எல்லோர்க்கும் எளிதில் விளங்கக் கூடியதாக இல்லை. ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காணும் அறிவினோர்க்கே விளக்கமுறுதல் கூடும். குறிப்பாக இறப்பியல், உயிரியல், ஓர்பியல், இறைமையியல் முதலான இயல்களில் ஆசிரியர் விளக்கும் அறங்கள் அத்தகையனவே. ஓர்பியலில் இடம்பெறும் இயக்கநிலை பற்றிய பாடலில் ஆசிரியர் பொருள், ஆற்றல் இரண்டின் இயல்புகளையும் விளக்கி, பொருளின் உள்நின்று இயக்குகின்ற உயிர்க்கூறே இறை என்று விளக்குகின்றார்.

பொருளனைத்தும் ஒன்றாகும் ஆற்றலெலாம் ஒன்றாம்
உருளிரண்டும் ஒன்றினோ டொன்றாம் - மருள்நிலைகள்
ஆன்ற வியக்கென்ப ஆதல் பொருளாம்உள்
ஊன்றல் இறையென் றுணர் (பா.93)

உலகில் பொருள்கள் வேறு வேறாகப் பிரிந்து நின்றாலும் அடிப்படையில் பொருட்கூறுகள் அனைத்தும் ஒன்றே. பொருளை மிகச்சிறிய கூறாகப் பகுத்தால் கிடைப்பது அணு. எல்லா அணுவினுள்ளும் மூலக்கூறுகளாய் இருப்பவை எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எனும் இவையே. எனவே பொருளனைத்தும் ஒன்றாகும் என்று ஆசிரியர் உரைப்பது சாலப் பொருத்தமே. பொருள்கள் ஒன்றானால் ஆற்றலும் ஒன்றே, ஏனெனில் பொருளைச் சிதைக்கின் ஆற்றலாகும், ஆற்றல் திரண்டால் பொருளாகும். பொருள், ஆற்றல் இவைகளை விளங்கிக் கொண்டால் இறையை உணர்தல் எளிது என்பதனால் இரண்டையும் விளக்கிவிட்டு ஆற்றலாகவும் பொருளாகவும் இருக்கும் அதனை உள்நின்று இயக்கும் உயிர்க்கூறே இறை என எளிமையாய் விளக்கம் தருகின்றார்.

நவீன இயற்பியலில் அணுக்களை அதைவிட நுட்பமான ஆல்பா துகள்களால் துளைத்துப் பார்த்தபோது அணுவின் உள்ளே பெரும்பாலும் வெட்டவெளியாக இருப்பதையும் மையத்தில் கருபோல் சில புரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றிச் சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதைப் பார்த்தார்கள். ஓர் அணுவுக்கும் மற்றோர் அணுவுக்கும் உள்ள வேறுபாடு அதன் கருவில் இருக்கும் துகள்களின் எண்ணிக்கையில்தான். உள்ளே இருக்கும் துகள்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இந்த இயக்கத்தின் வடிவம்தான் நாம் காணும் பொருள்கள். ஊன்றிப் பார்த்தால் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே இயக்கம்தான். இதுதான் அறிவியலின் முடிபு. இந்த இயக்கம்தான் இறை என்பது பாவலரேறுவின் விளக்கம்.

.. .. .. .. .. .. .. .. .. வற்றாத
ஊற்றாய் உலகமாய் ஒண்கதிராய் நீள்விசும்பாய்
ஆற்றல் நிகழ்த்தும் அலைவு (பா.78)

ஆற்றலின் அலைவுத் தோற்றங்களே உலகமாகவும் விண்மீன்களாகவும் நீண்ட ஆகாயமாகவும் தோற்றம் கொள்கின்றன என்ற இப்பாடல் கருத்து இயற்பியலின் அடிப்படையில் அமைந்துள்ளமை ஆழ்ந்து விளங்கிக் கொள்ளுதற்குரியது. இன்றைக்குப் பல்கிப் பெருகியிருக்கும் சமயங்களும் அவற்றின் இறைத் தத்துவங்களும் குறித்துப் பாவலரேறு தம் விமர்சனத்தைத் தெளிவாக உரைக்கின்றார். எந்த மதங்களும் உண்மையை முழுதாகக் காணவில்லை. எல்லா மதக்கோட்பாடுகளும் கற்பிதங்களே என்பதைப் பின்வரும் பகுதியால் விளக்குகின்றார்.

ஓவத் துணுக்கால் உருவறியார் ஒவ்வொன்றா
மேவத் துடிக்கும் மிகை உருவம் (பா.100)


பெரியதோர் ஓவியத்தைப் பலகூறுகளாக்கிய நிலையில், அவற்றின் ஒவ்வொரு கூறையும் முழுஉருவமாகக் கற்பனை செய்துகொள்ளும் கற்பிதங்களே மதங்களும் கடவுளர்களும் என்று மதங்களின் போலிமையைக் கடிந்துரைக்கின்றார். அதே பாடலில் நீர்க்குண்டோ உண்மை நிறம் என்று முடிப்பதன் வாயிலாக இறைமை தன்னை வெளிப்படுத்தி நிற்கும் உயிர்க் கூற்றானும் பொருட்கூற்றானும் வடிவமெய்துமே அன்றி தனக்கென்று ஓர் வடிவமில்லை என்னும் மெய்ப்பொருளியல் உண்மையை முற்ற முடிபாக முடித்து வைக்கின்றார்.

முடிப்புரை:

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு எனும் இவ்வறநூல் தமிழிலக்கிய உலகிற்கு ஒரு புதிய புதுமையான வரவு. தமிழின் நீண்ட இலக்கியப் பரப்பில் மிகப்பலவான அறநூல்கள் எழுதப் பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து உலகியல் நூறு பெரிதும் மாறுபடுகின்றது. பெரிதும் திருக்குறள் கருத்துக்களை உள்வாங்கி நூல் உருவாகியிருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சி, உலக மெய்ப்பொருளியல் அறிமுகம் முதலான புதிய பரிமாணங்களால் நூல் புதிய தளத்தில் அறம் பேசுகிறது. பாவலரேறுவின் பிரபஞ்ச ஞானம், உலகு தழுவிய பார்வை, பொதுமை வேட்கை, இறையியல் பற்றிய அறிவியல் பார்வை முதலான புதிய பாடுபொருட்கள் இந்நூலின் தனிச்சிறப்பு.

எப்படி யேனும் இத்தமி ழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும் -என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்
தமிழ்ப்படி யேறின் தமிழினம் ஏறும்
தாழ்நிலை இழிவுகள் மாறும்!- நம்
தலைவிலை எனில்தரல் வேண்டும்


என்று தமிழ்மொழிக்காக, தமிழினத்துக்காக, தமிழ் நிலத்துக்காகத் தம் மூச்சையும் தலையையும் தரத் தயாராயிருந்த பாவலரேறுவின் பணி அளப்பரியது, ஒப்புயர்வற்றது, வணக்கத்திற்குரியது. பாவலரேறுவின் படைப்புகளைத் தமிழ் என்ற ஒற்றை நேர்க்கோட்டுப் பார்வையில் மட்டுமே பார்ப்பது படிப்பது பரப்புவது என்பதாக நம் பணி நின்றுவிடுதல் கூடாது. அவரின் பன்முகப் பார்வையும் பல்நோக்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பாவலரேறுவின் படைப்புகளின் சமுதாயப் பார்வை, அரசியல் பார்வை, தத்துவப் பார்வை, நடப்பியல் பார்வை, அறிவியல் மற்றும் உளவியல் பார்வை போன்ற தலைப்புகளில் அவரின் படைப்புகள் அலசப்பட வேண்டும். இம்முயற்சிகளே பாவலரேறுவின் பன்முகப் பரிமாணங்களை உலகுக்குக் காட்டும்.

புதன், 17 நவம்பர், 2010

சிங்கப்பூர் கவிஞர் கி. கோவிந்தராசுவின் வேர்களின் வியர்வை -அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8
9943646563

உரைநடைக்கும் கவிதைக்கும் எழுதுவதில் வித்தியாசம் இருக்கிறதோ இல்லையோ? வாசிப்பதில், அனுபவிப்பதில் கண்டிப்பாகப் பெரிய அளவில் வித்தியாசமிருக்கிறது. உரைநடையை வாசிப்பவன் அப்படைப்பை ஒற்றைப் பரிமாணத்திலேயே வாசித்து முடித்துவிடுகிறான். வாசிப்பதை முடித்தவுடன் பெரிதும் உரைநடைப் படைப்பின் வேலையும் முடிந்துவிடுகிறது. ஆனால் கவிதை வாசிப்பு அப்படியில்லை. கவிதையைப் பல பரிமாணங்களில் வாசிக்க வேண்டியிருக்கிறது. வாசிப்பு முடிந்த பிறகுதான் கவிதைப் படைப்பு தன் முழுப் பரிமாணத்தையும் காட்டிப் பேருரு எடுக்கிறது.

வாமனனுக்கு மூன்றடி நிலம் தானம் கொடுத்த மாபலிச் சக்கரவர்த்தியின் நிலைதான் கவிதை வாசிப்பவன் நிலையும். சின்ன உருவம்தானே மூன்றடி எடுத்துக் கொள்ளட்டும் என்று வரம் கொடுக்கப்போய் சிற்றுரு பேருருவாகி எல்லாற்றையும் ஈரடியால் அளந்துமுடித்து மூன்றாவது அடிக்கு மாபலி தன் தலையையே கொடுக்க நேர்ந்தது போல்தான் இதுவும்.

கவிதை சிறியதோ பெரியதோ வாசிப்புக்கு அடங்கிவிடும் அதன் உருவத்திற்கும் அது தரும் அனுபவம் என்ற விஸ்வரூபத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகப்பெரிது. வாசிப்பு நம் அறிவு அனுபவங்களைத் தொட்டு உரசி நமக்குள்ளாக இறங்கி, ஐக்கியமாகி நம்மையே இழக்கும் நிலைக்குத் தள்ளும் போதுதான் மூன்றாவது அடிக்குத் தன் தலையையே தந்த மாபலியாகிறோம் நாம். வாசிப்பாளனுக்குக் கிட்டும் இந்த அனுபவம் படைப்பாளிகளுக்குக் கிட்டுமா? என்பது ஐயமே.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அதுபோல்தான் கவிதை தரும் வாழ்க்கை குறித்த பதிவுகளும். சில சமயங்களில் உங்களுக்கும் எனக்கும் வாய்த்த அனுபவமே கூட, படைப்பாளனுக்கும் வாய்க்கலாம். நமக்கு வெறும் சம்பவங்களாய்ப் பதிவான அந்தத் தருணங்கள் படைப்பாளிகளுக்கு மட்டும் படைப்புக்கான வித்தாக மாறிவிடுகின்றனவே, அது எப்படி?. பூக்களிலிருந்து நீங்களும் நானும் அதன் இனிப்புச் சாற்றை எடுக்கலாம். ஆனால் அது தேன் ஆவதில்லை. தேனீக்கள் உறிஞ்சும் இனிப்புச் சாறு மட்டும் தேன் ஆகிறதே அப்படித்தான். தேனீக்கள் வயிற்றில் நடக்கும் ரசாயன மாற்றம் போல் படைப்பாளியின் உள்ளிருந்து படைப்பு வெளியாகிறது. நண்பர் கோவிந்தராசுவுக்கும் அப்படித்தான்.

வேர்களின் வியர்வை எனும் இக்கவிதைத் தொகுப்பு இனிய நண்பர் கவிஞர் கி. கோவிந்தராசுவின் முதல் படைப்பு. மதுரையில் பிறந்து வளர்ந்து பிழைப்புக்காகச் சிங்கப்பூர் சென்று தம் உழைப்பால் சிங்கையின் உயர்வுக்குப் பாடுபடும் பல்லாயிரம் தோழர்களில் ஒருவராக வாழ்ந்து வருபவர். சிங்கப்பூரின் இலக்கிய உலகில் தமக்கென ஒரு தனியிடத்தைத் தம் பன்முக ஆற்றலால் ஏற்படுத்திக் கொண்டவர். சிங்கப்பூரில் கவிஞர் கோவிந்தராசு பங்கேற்காத கவியரங்கத்தைப் பார்ப்பது அரிது. கவிஞர், பலகுரல் கலைஞர், நாடக நடிகர், பேச்சாளர் என்ற பரிமாணங்களைக் கொண்டவர். இவர் ஓர் உழைப்புத் தேனீ.

வேர்களின் வியர்வை ஒரு சராசரி கவிதைத் தொகுப்பு இல்லை. கவிஞர் கோவிந்தராசுவும் ஒரு சராசரித் தமிழ்க் கவிஞர் இல்லை. சராசரிக் கவிஞர்கள் எதையும் கவிதையாக்கி விடுவார்கள். ஏனெனில் கவிதை அவர்களுக்கு ஓர் உற்பத்திப் பொருள். குயவன் உற்பத்தி செய்கிறானே பானை, அதைப்போல, நூற்றுக்கணக்கில் உற்பத்திசெய்து தள்ளிவிடுவார்கள். கோவிந்தராசு போன்ற கவிஞர்கள் சிற்பிகள். இவர் பானைகளும் பல வனைந்து தள்ளியிருக்கிறார், ஆனால் அவற்றினூடே அழியாத கலைப் பொக்கி~ங்களாக அபூர்வச் சிற்பங்களும் உண்டு. கவிஞன், கவிதை எழுத முடியாமல் கண்ணீர் வடிக்கிற போதுதான் உயர்ந்த கவியாகிறான். நான் என்னும் கவிதையில் கவிஞர் சொல்வதைக் கேளுங்கள்.

புவியதிர்ச்சி நிலநடுக்கம்
புதையும் மானுடம் -கண்டு
கவிவடிக்க மனம்வராது
கண்ணீர் வடிக்கிறேன்
காவிவேட்டி மனிதர்களைக்
கடவுள் என்றெண்ணும் -இந்தப்
பாவிமக்கள் நிலையை எண்ணிப்
பரித விக்கிறேன்.

குறையில்லாத நிலவினோடு
கொஞ்சி மகிழ்கிறேன் -அதில்
பிறைவரும் போதேனோ
நெஞ்சம் புழுங்குகிறேன்!
எவ்வுயிரும் நலம்வாழ
என்றும் துதிக்கிறேன் -இது
பொய்யாகிப் போகுமெனில்
நெஞ்சு கொதிக்கிறேன்.


மானுடப் பேரழிவுகளின் போது, கவிதைகள் எழுதிக் கடமை முடிந்துவிட்டது என்று பிழைப்பு நடத்தும் கவிஞர்களுக்கிடையே “கவிவடிக்க மனம்வராது கண்ணீர் வடிக்கும்” கோவிந்தராசு மானுடப் பேரழிவுக்கு மட்டும் இல்லை நிலவில் பிறைவந்தால் கூட அதன் உடல்குறை கண்டு நெஞ்சம் புழுங்குகின்றாரே இவரல்லவா உயர்ந்த கவி. எல்லாவுயிர்களும் இன்புற்றிருக்க வேண்டிப் புதுவை மணக்குள விநாயகரைப் பாடிய மகாகவி பாரதிக்குப் பேரன் இவர்.

விளம்பரத்திற்காக உலக உயிர்களுக்கு இரங்கிவிட்டுச் சொந்தத் தாய் தந்தையரை மறந்துவிடும் உலகம் இது.

அன்னையையும் தந்தையையும் மதித்தல் வேண்டும்
அவர்வயது முதிர்ந்த பின்னே காத்தல் வேண்டும்
சின்னதொரு உயிருக்கும் கெடுதல் செய்யாச்
சிந்தையினை எமக்கிறைவன் வழங்க வேண்டும்.


அன்னையையும் தந்தையையும் அவர்கள் தளர்ந்திருக்கும் முதுமைப் பருவத்தில் காத்திட வேண்டும் என்ற விருப்பும் சின்னதொரு உயிருக்கும் கெடுதல் செய்யாச் சிந்தை வேண்டும் என்ற விருப்பும் கவிஞரின் வேண்டும் வேண்டும் என்ற ஒரே கவிதையில் புனைவுகள் இல்லாமல் பதிவு செய்யப்படுவது வியப்பூட்டுகின்றது.

வேர்களின் வியர்வை தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர் கி.கோவிந்தராசுவின் கவிதைகளைப் பின்வரும் வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம்.

1. இயற்கையைப் பாடும் கவிதைகள்
2. தலைவர்கள், கவிஞர்களைப் பாடும் கவிதைகள்
3. வாழ்க்கை குறித்த விசாரணைகளாக வெளிப்படும் கவிதைகள்
4. சிங்கப்பூர் குறித்த கவிதைகள்


இந்த நான்கு பிரிவுகளில் முதலிரண்டு பிரிவுகளில் அடங்கும் கவிதைகளைக் காட்டிலும் மூன்று மற்றும் நான்காம் பிரிவுகளில் அடங்கும் கவிதைகள் வீரியமிக்கவை. குறிப்பாக, சிங்கப்ப+ர் குறித்த கவிஞரின் கவிதைகளில் பதிவாகும் தனிமனித உணர்வுகளும் சமூக உணர்வுகளும் பிற கவிஞர்களிடமிருந்து கவிஞர் கோவிந்தராசுவை வேறுபடுத்துகின்றன.

உனக்காக… என்னும் கவிதையில் மனைவியைஃ காதலியைப் பிரிந்து பிழைக்க வந்த இடத்தில் தனிமையில் வாடும் ஒருவனின் மனமும் உடலும் சிதைவுகளுக்குள்ளாகும் புறச்சூழல்கள் சுட்டப்பட்டு, அச்சூழல்களுக்கு இடையேயும் கற்போடு இருக்க விரும்பும் ஒருவன் குறித்த பதிவு நுட்பமானது.

வண்டு பிடிக்கும் மலர்கள்
மலர் தேடும் வண்டுகள்
இத்தனையும் தாண்டி
எனக்கான –உன்
காத்திருப்புக்காய்
நான் இன்னும்
கற்போடு இருக்கிறேன்.


மற்றுமொரு சிறந்த படைப்பு ஆறுதல் தரும் அருமருந்து என்ற தலைப்பிலான கவிதை. இந்தக் கவிதையைப் புரிந்துகொள்ள சிங்கப்ப+ர்த் தமிழர்கள் குறித்த புரிதலும் அனுபவமும் வேண்டும். அப்பொழுதுதான் கவிதையின் முழுப் பரிமாணத்தையும் உணரமுடியும். சிங்கப்பூரில் வாழும் தமிழர்களில் மூன்று வகையினர் உண்டு. முதல்வகையினர், சில தலைமுறைகளுக்கு முன் சிங்கை சென்று குடியேறி வாழ்ந்துவரும் தமிழர்கள். இரண்டாம் வகையினர், ஹை-டெக் பணியிலிருக்கும் கொஞ்சம் வசதியான தமிழர்கள். மூன்றாம் வகையினர், உடல் உழைப்பாளிகளாக சிங்கப்பூரில் பணியாற்றும் நடுத்தட்டுக் கூலித் தொழிலாளத் தமிழர்கள்.

ஆறுதல் தரும் அருமருந்து என்ற கவிதை மூன்றாம் வகைத் தமிழர்களைப் பற்றியது. சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் கூடும் இந்தத் தமிழர்களின் உடல் மனஉணர்வுகள் வார்த்தைகளுக்குள் சிக்காதவை. அந்தச் சூழலைக் கண்டு அனுபவித்தவர்களுக்கே அதன் கனம் புரியம். கவிஞர் அதனை வார்த்தைகளில் கொண்டுவர முயன்று வெற்றியும் கண்டுள்ளார். “இதில் பார்வையாளர்கள் எவருமில்லை, அனைவரும் பேச்சாளர்களே” அற்புதமான பதிவு. கவிதையின் ஒரு பகுதி இதோ,

ஒவ்வொரு ஞாயிறும்
வாரம் தவறாத
மாநாட்டுக் கூட்டம்
இதில்
பார்வையாளர் எவருமில்லை
அனைவரும் பேச்சாளர்களே!

தொற்றிக் கொண்ட துக்கம்
தொலைந்து போன தூக்கம்
பற்றிக் கொண்ட ஏக்கம்
பணியில் கண்ட கலக்கம்
ஆறுநாட்கள் சேமிப்பிற்குப் பின்
அணையுடைத்த நீராய்
ஆறுதல் தேடி ஆர்ப்பரிக்கும்.


சிங்கப்பூர் குறித்த கவிதைகளில் மற்றொரு வகை அதன் பெருமை பேசும் கவிதைகள். அந்தவகையில் குறிப்பிடத்தக்க கவிதை லீ வாழ்க! எனும் கவிதை. சிங்கையின் பெருமைகளையும் அதன் பிதாமகன் லீக் வான் யூ அவர்களின் புகழையும் பேசும் நல்ல கவிதை அது.

கவிஞர் கி. கோவிந்தராசுவின் கவிதைகளில் காலத்தைக் கடந்து நிற்கும் கவிதைகள் என்ற பெருமையைப் பெறுவன, வாழ்க்கை குறித்த விசாரணைகளாக வெளிப்படும் கவிதைகளே. அந்தவகையில் குறிப்பிடத்தக்க கவிதைகளாகப் பின்வருவற்றைப் பட்டியலிடலாம்.

1. வேரில் பழுத்த பலா
2. உயிர் வலி
3. ஒப்பனை உறவுகள்
4. தியாகம்
5. தொலைந்த நாட்கள்
6. குப்பைத் தொட்டி
7. அம்மாவுக்கு ஒரு கடிதம்


கவிஞரின் கவிதைகளில் வெற்று அலங்காரங்களைக் காண்பது அரிது. அணிகளாலும் உத்திகளாலும் தம் கவிதைகளை அவர் நையப் புடைப்பது இல்லை. உருவமும் உள்ளடக்கமும் இணைந்த ஒரு முழுமையே கோவிந்தராசு கவிதைகளின் தனித்த அடையாளம். ஒப்பனைகள் இல்லாத அவரின் கவிதைகள் குறித்து அவரே தரும்
வாக்குமூலம் இதோ.

கற்பனையில் வாழ்கிறேன்
கவிதைகள் வடிக்கிறேன்
ஒப்பனைகள் இல்லாமல்
ஒளிர்ந்திடத் துடிக்கிறேன்.


கவிஞர் கி. கோவிந்தராசுவின் முதல் படைப்பு இந்த வேர்களின் வியர்வை. இனிவரும் படைப்புகளில் இன்னும் முதிர்ச்சி வெளிப்படும் என்பது திண்ணம். ஏனெனில் இந்தத் தொகுதியே அதற்கான அடையாள வித்துகள் பலவற்றைப் பெற்றுள்ளது. வேர்களின் வியர்வை தமிழ்கூறு நல்லுலகத்தில் நல்ல வரவேற்பினைப் பெறும், பெறவேண்டும் அதுவே நம் பெருவிருப்பு.

வியாழன், 16 செப்டம்பர், 2010

சிங்கப்பூர் கவிஞர் ந.வீ. விசயபாரதியின் புலமைக்கு மரியாதை நூல் அணிந்துரை

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி

ந.வீ. விசயபாரதியின் முப்பரிமாண இலக்கியம்

என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவிதைகள் குறித்த ரசனையும் தோன்றிவிட்டது எனலாம். படைப்பவன் ரசனையும் படிப்பவன் ரசனையும் ஒன்றுபடுவதுதான் கவிதை ரசனை என்பதில்லை, வேறுபடவும் செய்யும். கவிதைகளை ரசிப்பதில் பல சமயங்களில் படைப்பாளியை விஞ்சி விடுகிறான் படிப்பவன், அதாவது சுவைஞன். படைப்பவனை விட, சுவைஞனுக்கு இருக்கும் சுதந்திரம் மிகப்பெரிது. சுவைஞனுக்குள்ளே படிக்கும் குறிப்பிட்ட அந்த ஒரு கவிதை மட்டுமல்ல, அதன் முன்னர் பல நூறு ஆண்டுகளாய்த் தோன்றிய கவிதைகளும் அதன் ரசனைகளும் பொதிந்து கிடக்கின்றன. தமிழ் போன்ற மூவாயிரம் ஆண்டு மூத்த இலக்கிய இலக்கண வளங்கள் மிகுந்த செம்மொழியில் எழுதப்படும் கவிதைகளை வாசிக்கும் ஒரு சுவைஞனுக்கு அம்மொழியின் நீண்ட கவிதைப் பாரம்பரியமே ஒரு பெரும் பலமாகவும் சில சமயங்களில் பலவீனமாகவும் மாறிவிடுவது இயற்கை.

சிங்கைக் கவிஞர் அன்புத் தோழர் ந.வீ. விசயபாரதியின் புலமைக்கு மரியாதை என்ற இந்நூலும் அப்படியொரு சுவைஞனின் ரசனை சார்ந்ததொரு படைப்புதான். இந்நூலில் அமைந்துள்ள எட்டுக் கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரே தொனியில் படைப்பாளியின் படைப்பாற்றலைச் சிலாகித்து உச்சிமோர்ந்து கொள்கின்றன. சங்க இலக்கியங்கள் தொடங்கிக் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் எனக் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் வரை நூலின் கட்டுரைகள் தமிழிலக்கிய நெடும்பரப்பின் அடி முதல் நுனிவரை தொட்டுத் தடவிச் செல்வது நூலின் சிறப்பு.

நூலின் எட்டுக் கட்டுரைகளும் பெருவழுதி (நற்றிணை), பிசிராந்தையார் (புறநானூறு), இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம்), கம்பர் (இராமகாதை), முக்கூடற் பள்ளு ஆசிரியர், பாரதியார், பாரதிதாசன், வைரமுத்து என்னும் எட்டுக் கவிஞர்களின் புலமைக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதை நோக்கி நூலுக்குப் பெயராக, புலமைக்கு மரியாதை என்று ஆசிரியர் பெயரிட்டிருப்பது சாலப் பொருத்தமாகிறது.

ஓர் இலக்கியப்பாடல், அதன் பின்னணி, பாடலின் கருத்து, பாடல் சொற்பொருள் நுட்பம், பின்னர் அந்தக் கவிதையின் நயம் என்று ஒவ்வொரு கட்டுரையும் இலக்கியக் கட்டுரைகளாக விரிந்து செல்லும் இந்நூலின் ஊடாக ஆசிரியர், ஒரு கதைசொல்லி போல் இலக்கியக் காட்சிகளைக் கதைகளாகவும் விவரித்துச் சொல்லும் பாங்கு இந்நூலின் தனியழகு என்றே குறிப்பிட வேண்டும். சான்றாக நற்றிணை குறித்த முதல் கட்டுரையில் இடம்பெறும் பின்வரும் பகுதியைக் குறிப்பிடலாம்.

மறுநாள் விடிகிறது,
முதல் நாள் தலைவனைச் சந்தித்த ஆனந்த நினைவுகளில் மூழ்கியபடி தலைவி வீட்டில் இருக்கும்போது அவளது அன்னை யதார்த்தமாக அவளைப் பார்க்கிறாள்;.
ஏதோ அவளிடம் மாற்றம் தெரிவதாக உணர்கிறாள்;, உற்றுற்றுப் பார்த்தபின் அவளது கூந்தலில் வண்டுகள் மொய்ப்பதைப் பார்த்து விடுகிறாள். மிக நெருங்கிப்போய்க் கவனித்தபோது அவளிடமிருந்து மலரின் நறுமணம் வீசுவதையும் உணர்கிறாள்.
'இப்படிப்பட்ட மணம் இதற்குமுன் உன்னிடம் இருந்ததில்லையே” என்று தலைவியிடம் சந்தேகத்துடன் தாய் கேட்க, தலைவி சில கணம் தடுமாறிப் போகிறாள்;, குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்புடன் தாயின் முகம் பார்க்கத் தைரியம் இல்லாமல் ‘தோள்கொடுப்பாள் தோழி’ என்ற நம்பிக்கையுடன் தோழியைப் பார்க்கிறாள். (நற்றிணையில் மொழிநயம்)
இப்படி ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கதையைச் சுவைபட விரித்துச் சொல்கிறது.

கட்டுரைகளின் நடுவே கதைகள் எனப் புதியநடைபோடும் விசயபாரதியின் படைப்புக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது அவரின் கவிதை மயப்பட்ட மொழிநடை. ஆசிரியர் இயல்பாகவே ஒரு கவிஞர் என்பதாலும் சொல்லப்படும் உள்ளடக்கத்தின் சார்பாலும் அவரின் உரைநடை அப்படியே கவிதையாக நெகிழ்ந்து குழைந்து வெளிப்படுகின்றது.

மணம் வீசும் பூக்களின் சாறுபிழிந்து
பக்குவப்படுத்தப்பட்ட வாசனை திரவியங்கள்,
சந்தனச் சிற்பத்துக்கு சதை பொதித்து
உயிரூட்டி உலவ விட்டதைப்போல
பேரழகுப் பெண்கள்
வல்லமை மிக்க சொல்லாற்றல் கொண்ட அறிஞர்கள்,
இசையும் இலக்கியமும்
இசைந்து இசைக்கக்கூடிய பாடகர்கள்,
மலரினும் மென்மையான மார்புடைய அழகிகள்

மேலே சான்று காட்டப்பட்ட பகுதி அமளியில் அனிச்சமலர் என்ற இரண்டாம் கட்டுரையில் இடம்பெற்றுள்ள உரைநடைப் பகுதி. உரைநடையை உடைத்துப் போட்டது நான். படித்துப்பாருங்கள் உரைநடையே கவிதையாய், கவிதையே உரைநடையாய் நம்மை மயக்கும். விசயபாரதியின் சொல்லாற்றல் அப்படிப்பட்டது.

இலக்கியத்தின் மூன்று பரிமாணங்களாகிய கவிதை, கதை, கட்டுரை என்ற மூன்றையும் தன்னகத்து அடக்கிய புலமைக்கு மரியாதை எனும் இத்தொகுப்பு ஒரு முப்பரிமாண இலக்கியம் என்பதில் வியப்புக்கு இடமேது.

நூலாசிரியரின் மொழியாளுமை வியப்பளிக்க வைக்கிறது. மகாகவி பாரதி சொன்னது போல் ‘சொல் புதிது சுவை புதிது’ என அனைத்திலும் புதுமைநலம் விளைந்ததொரு மொழியாளுமை கொண்டு தம் படைப்பால் படைப்பின் உத்தியால் பண்டைய இலக்கியங்களுக்குப் புதுமெருகு ஏற்றியுள்ளார் கவிஞர் விசயபாரதி.

சான்றுக்கு ஒன்றிரண்டு.

ஒன்று:
உச்சக் காட்சியில் கண்ணகியின் கோபத்தைக் காடுகொள்ளாத சாதுவின் மிரட்சியாய்க் காட்டியது இன்னொரு புரட்சி (அமளியில் அனிச்சமலர்)
கண்ணகி ஒரு சாது! அமைதியே வடிவானவள், சிலம்பின் வழக்குரை காதையில் அவள் கொள்ளும் சத்திய ஆவேசம், அதனால் மதுரையம்பதிக்கும் மன்னனுக்கும் மக்களுக்கும் நேர்ந்த கதி என்ற காப்பியக் கதையோட்டங்கள் அனைத்தையும் உள்வாங்கும் போக்கில், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற பழமொழியை ஆசிரியர் தம் மொழிநடையின் இடையில் பிசைந்து தந்துள்ள செய்நேர்த்தியைக் கவனிக்க வேண்டும்.

இரண்டு:
தமிழ் மொழியின் சிறப்பே அம்மொழி காலத்திற்கு ஏற்பத் தன் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டும், காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டும் இயைந்து கொடுத்து வளர்ந்த எளிமைதான். (இலக்கியம் இனிக்கிறது)

‘காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டும்’ என்ற சொல்லாட்சியில் வெளிப்படும் படிமத் தன்மை நூலாசிரியரின் கவித்துவ வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. செத்தொழிந்த சில செம்மொழிகளைப் போலில்லாமல் தமிழ் இன்றும் சீரிளமைத் திறத்தோடு இருப்பதற்குக் காரணம் என்ன? என்ற உலக வியப்புக்கு ஓர் உண்மைக் காரணத்தை உரத்துச் சொல்கிறார். தமிழ், காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டது என்று. உரைநடையிலும் படிமங்களை உலவவிட்ட ஆசிரியரின் நுட்பம் பாராட்டத்தக்கது.

தமிழ் இலக்கியங்களின் மீது அதிலும் குறிப்பாக நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்களின் மீது நூலாசிரியருக்கு இருக்கும் நாட்டம் அளப்பரிது. ‘தமிழ் வாழ்க!’ என்று மேடைகளில் முழங்கிவிட்டுச் செயலற்ற வாய்ப்பேச்சு வீரர்களாகத் தமிழர்கள் முடங்கிப் போய்விடக் கூடாது.

“தமிழிலக்கியத்தின் மீதான நம் தேடல் தீவிரமாகும் போதுதான் தமிழின் தேக்கநிலை மாறி ஊக்கநிலை உருவாகும் அந்த நிலை உருவாக நம் அறிவுப்பசி விரிவாகத் தமிழிலக்கிய வாசிப்பு ஒன்றே சரியான தீர்வாகும்” (கண்ணின் கடைப்பார்வை)
என்று தமிழ்வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான அறிவுரைகளை வழங்குவதோடு தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைக்கின்றார் நூலாசிரியர்.

‘தமிழ் வாழ்க’ என்ற மேடை முழக்க வரிகள் இன்றைய தேவையில்லை. உண்மையில் தமிழை வாழ வைக்க எண்ணுபவர்கள் செய்ய வேண்டிய அவசரத்தேவை ஒன்று இப்போது இருக்கிறது. புத்தகக் கடைகளின் அலமாரிகளில் அழுக்குப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற பழந்தமிழ் அறிஞர்களின் நூல்களைக் காசுகொடுத்து வாங்காவிட்டால்கூடப் பரவாயில்லை; அதே நிலையில் அரசாங்க நூலகங்களின் அலமாரிகளில் ஆய்வு மாணவர்களால் மட்டுமே அதுவும் தேர்வுக்கான தேவையின்போது மட்டுமே எடுத்துப் படிக்கப்படுகிற நிலைமை மாற்றப்பட வேண்டும்; அதற்குத் தமிழர்கள் பழந்தமிழ் நூல்களை நூலகங்களிலிருந்து இரவல் வாங்கியாவது படிக்கவேண்டும் என்பது நம் பணிவான வேண்டுகோள். (கண்ணின் கடைப்பார்வை)
சிங்கைக் கவிஞர் விசயபாரதியின் இவ்வேண்டுகோள். தாய்த்தமிழகத்தின் சூழலுக்கும் பொருந்திய வேண்டுகோளே என்பதை நாம் மறுக்க முடியாது.

மொத்தத்தில் புலமைக்கு மரியாதை எனும் இக்கட்டுரைத் தொகுப்பு தமிழுக்குப் புது வரவு என்பதோடு புதுமையான வரவு. நூலாசிரியர் விசயபாரதியின் நோக்கம் தெளிவாய் உள்ளது. இது படைப்பிலக்கியமில்லை. இலக்கிய ஆராய்ச்சியுமில்லை. ரசனை, இலக்கிய ரசனை, ஒரு சுவைஞன் சுவைத்த தமிழ் அமுதின் சில துளிகள் இவை. உங்கள் முன் படைக்கப்பட்டதன் நோக்கம்,
“தமிழிலக்கியத்தின் மீதான நம் தேடல் தீவிரமாகும்போதுதான் தமிழின் தேக்கநிலை மாறி ஊக்கநிலை உருவாகும் அந்த நிலை உருவாக நம் அறிவுப்பசி விரிவாக தமிழிலக்கிய வாசிப்பு ஒன்றே சரியான தீர்வாகும்.”
என்று ஆசிரியர் சொன்னதுபோல் தமிழின் தேக்க நிலை மாற வேண்டும் ஊக்க நிலை உருவாக வேண்டும் என்பதுதான். இந்நூல் நிச்சயம் அதற்குத் துணைபுரியும். நூலாசிரியர் ந.வீ.விசயபாரதிக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பிரஞ்சிந்திய விடுதலை வீரர் மக்கள் தலைவர் வ.சுப்பையா -பகுதி-1

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

மக்கள் தலைவர்:

1987 இல் இந்தியாவின் 40 ஆவது சுதந்திர ஆண்டு விழாவின் போது இந்திய அரசு தேர்ந்தெடுத்து அறிவித்த தலைசிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 97 பேரில் மக்கள் தலைவர் தோழர் வ.சுப்பையாவும் ஒருவர். மகாகவி என்றால் அது பாரதியாரையும் புரட்சிக்கவிஞர் என்றால் அது பாரதிதாசனையும் பெரியார் என்றால் அது ஈ.வெ.ராமசாமி அவர்களையும் குறிப்பது போல் மக்கள் தலைவர் என்றால் அது தோழர் வ.சுப்பையா அவர்களையே குறிக்கும்.

பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த புதுச்சேரியை விடுவித்துச் சுதந்திர பூமியாக மாற்ற மக்களைத் திரட்டிப் போராடி இந்தியத் தாயகத்துடன் இணைத்த சிற்பி தோழர் வ.சுப்பையாதான் என்பதை அவருக்கு நேர்எதிரான கொள்கை நிலையில் நிற்பவர்களும் ஒப்புக் கொள்வார்கள். எத்தனைமுறை சிறையில் இட்டாலும் நாடு கடத்தினாலும் கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்று கடைசிவரை போராடி வெற்றிகண்ட பெருமை அவருக்கு உண்டு.

தொழிற்சங்கம் கண்ட தலைவர்:

புதுவை பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமைகூட மறுக்கப்பட்டிருந்தது. மக்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் நேரடியான அரசியல் போராட்டங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தகைய நெருக்கடியான காலங்களில் தோழர் வ.சுப்பையா அவர்கள் எழுச்சியும் பொதுநலத்தில் நாட்டமும் மிக்க இளைஞர்களை, மாணவர்களை ஒருங்கிணைத்து இளைஞர் சங்கத்தினை அமைத்துச் சமுதாயத்திற்குப் பாடுபட்டார்.

தம் இளமைக்காலம் முதலே தேச நலனில் அக்கறை கொண்டு இந்திய அளவில் நடைபெறும் சுதந்திரப் போராட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

காந்தியடிகளும் மக்கள் தலைவரும்:

தோழர் வ.சுப்பையா அவர்கள் 1933 இல் மகாத்மா காந்தியடிகள் அமைத்த அரிசன சேவா சங்கத்தின் கிளை அமைப்பு ஒன்றைப் புதுவையில் தொடங்கி அதன் செயலராக இருந்து தீண்டாமையை ஒழிக்கவும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காகவும் பாடுபட்டார். 1934 பிப்ரவரி 17 இல் மிகுந்த முயற்சி மேற்கொண்டு மகாத்மாவைப் புதுவைக்கு அழைத்து வந்தார். முதன்முதலில் காந்தியடிகளைப் புதுவைக்கு அழைத்துவந்த பெருமை தோழர் வ.சுப்பையா அவர்களையே சாரும்.

தோழர் வ.சுப்பையா அவர்கள் அரிசன சேவா சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுப் பணியாற்றியதால் சமூகத்தின் அடித்தள மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. அடித்தள மக்களில் பலர் பஞ்சாலைத் தொழிலாளர்களாக இருந்தமையால், அன்றைய சூழலில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பிரஞ்சு ஆலை முதலாளிகளால் உரிமைகள் ஏதுமற்ற அடிமைகள்போல் நடத்தப்படுவது கண்டு மனம் வெதும்பினார். ஆலைத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் பற்றியும் தொழிலாளர் உரிமை பற்றியும் போதித்துக் கிராமங்கள்தோறும் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டினார். ஆலையில் இரகசியமாகத் தொழிற்சங்கம் ஏற்படுத்தினார்.

சுதந்திரம் இதழைத் தொடங்கினார்:

இதே காலக்கட்டத்தில் 1934 ஜூன் முதல் ‘சுதந்திரம்’ என்ற மாதப் பத்திரிக்கையைத் தொடங்கி இதழ்பணியின் வழியாகத் தொழிலாளர் நலன்களைப் பேணினார்.

பஞ்சாலைப் போராட்டங்கள்:

1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றினார். தொழிலாளர் போராட்டங்களின் விளைவாக வேலைநேரம் குறைக்கப்பட்டது. கூலி உயர்வும் வேலை உத்திரவாதமும் வழங்கப்பட்டன. ஆனால் தொழிற்சங்க உரிமை மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.

1936 இல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரஞ்சு ஏகாதிபத்யம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளின் கவனத்தைப் புதுச்சேரியின் பக்கம் திருப்பியது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை தோழர் வ.சுப்பையா அவர்களையே சாரும்.

எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை:

தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை, துப்பாக்கிச் சூடு போன்ற பிரச்சனைகளைப் பிரஞ்சு அரசோடு பேசித்தீர்க்க பண்டித நேருவின் ஆலோசனையின் பேரில் அவரின் அறிமுகக் கடிதத்தோடு தோழர் வ.சுப்பையா 1937 மார்ச் 6 இல் பிரான்சுக்குச் சென்றார். பிரஞ்சு அரசோடு இப்பிரச்சனை குறித்து விவாதித்தார். அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6 இல் பிரஞ்சு- இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டன. ஆசிய நாடுகளிலேயே 8 மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன்முதலாக அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் சமூகப்பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன. இத்தணைச் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.

பிரஞ்சிந்திய விடுதலை வீரர் - மக்கள் தலைவர் -வ.சுப்பையா -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி- 605 008

சிறைவாழ்க்கையும் தலைமறைவு வாழ்க்கையும்:

1938 ஆம் ஆண்டு மத்தியில் பிரஞ்சு அரசானது புதுவையில் எழுந்த தேசிய விடுதலை இயக்கப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் சுப்பையாவைப் பிரஞ்சு எல்லையில் கைது செய்யும் ஆணையைப் பிறப்பித்தது. சென்னையில் பிரிட்டிஷ் எல்லையில் கைது செய்யும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆதலால் 1938 ஜூன் முதல் தோழர் வ.சுப்பையா அவர்கள் தலைமறைவானார். ஆயினும் சென்னையில் கைது செய்யப்பட்டு 1938 டிசம்பரில் மூன்று வாரகாலம் சிறை வைக்கப்பட்டார். பின்னர் பிரிட்டிஷ் அரசானது சுப்பையாவைப் பிரஞ்சு அரசிடம் ஒப்படைத்தது. 1939 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 11 வரை புதுவைச் சிறையில் வைக்கப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யென நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

1939 செப்டம்பர் 1 இல் இரண்டாம் உலகப்போர் மூண்டபின்னர் பிரிட்டி~; அரசானது தோழர் வ.சுப்பையா பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்னும் தடையை விதித்தது. ஆயினும் அவர் தடையை மீறிப் பேசினார். அதனால் 1941 ஜனவரியில் தஞ்சாவூரில் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு 1942 செப்டம்பர் முதல் வேலூர் மத்தியச் சிறைச்சாலையில் அரசியல் கைதியாகக் காவலில் வைக்கப்பட்டார்.
1944 ஏப்ரல் 18 இல் பிறப்பிக்கப்பட்ட ஆணைப்படி தோழர் வ.சுப்பையா பிரஞ்சு எல்லையிலிருந்து நாடு கடத்தப்பட்டார். பின்னர் பிரான்சு விடுதலை பெற்று பாரிசில் புதிய ஆட்சி நிறுவப்பட்டவுடன் 1945 செப்டம்பர் 6 இல் சுப்பையா மீதிருந்த இத்தடை நீக்கப்பட்டது.

விடுதலைக்கான தேசிய ஜனநாயக முன்னணி:

புதுவையில் முழு அரசியல் தன்னாட்சி மாற்றம் தேவை என்பதை உணர்ந்த தோழர் வ.சுப்பையா அவர்கள் அந்நிய ஏகாதிபத்யத்திற்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற ஒரு பேரியக்கத்தைத் தொடங்கினார்.

1946 இன் இறுதியில் தோழர் சுப்பையா அவர்கள் பிரஞ்சுப் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1947 இல் பிரான்சு சென்றார். 1947 ஜூலை இறுதிவாக்கில் பண்டித நேரு அவர்களின் ஆலோசனையின் பேரில் புதுவை விடுதலை இயக்கச் செயல் திட்டம் குறித்து விவாதிக்க இந்தியா திரும்பினார்.

1947 ஆகஸ்ட் 15 இல் புதுச்சேரியின் விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது. 1948 இறுதியில் பிரஞ்சு அரசானது தோழர் சுப்பையா மீது பலதரப்பட்ட கொடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைக் கைது செய்ய முயன்றது. இதையறிந்த சுப்பையா தலைமறைவாக இருந்துகொண்டே விடுதலை இயக்கத்தை வழிகாட்டி நடத்தி வந்தார். 1950 ஜனவரி 15 அன்று பிரஞ்சு அரசின் கைக்கூலிகளாலும் போலீசாலும் தோழர் சுப்பையா அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ஆயினும் தலைமறைவாக இருந்துகொண்டே புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திக் கொண்டிருந்தார் சுப்பையா.

புதுச்சேரி விடுதலை 1954 நவம்பர்1:

1954 ஏப்ரல் 4 இல் தோழர் சுப்பையா அவர்கள் புதுடில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அக்கூட்டத்தில் புதுச்சேரி மக்களுக்கு இறுதிக்கட்டப் போராட்ட அறைகூவல் விடுத்தார். 1954 ஏப்ரல் 7 முதல் இறுதிக்கட்டப் போராட்டம் பெரும் வலிமை பெற்றது. அதற்குமேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரஞ்சு ஏகாதிபத்யம் இந்தியாவை விட்டு வெளியேறியது.

1954 நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாளின் போது தோழர் சுப்பையா அவர்கள் கோட்டக்குப்பத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாகப் புதுச்சேரி எல்லைக்குள் நுழைந்தார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு தோழர் வ.சுப்பையா அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளித்தார்கள். புதுச்சேரியின் வரலாற்றில் இந்தநாள் ஒரு மறக்க முடியாத பொன்னாள் ஆக அமைந்தது. உண்மையான மக்கள் தலைவர் இவர்தான் என வரலாறு தன் ஏட்டில் குறித்துக் கொண்டது.

புதுச்சேரி விடுதலைக்குப் பின்:

1955 இல் புதிதாக அமைக்கப்பட்ட புதுவைச் சட்டமன்றத்திற்குத் தோழர் வ.சுப்பையா அவர்கள் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார். 1969 முதல் 1977 வரை புதுவைச் சட்டமன்றத்தில் இருமுறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்க்கையில் மகாத்மா காந்தி, பண்டித நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வி.வி.கிரி, நேதாஜி சுபா~; சந்திர போஸ், சத்தியமூர்த்தி, டாக்டர் இராதாக்கிரு~;ணன், வினோபாஜி, பெருந்தலைவர் காமராசர், திரு.வி.க., பெரியார் மற்றும் பல தேசிய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு நாட்டுப்பணியும் சமுதாயப் பணியும் ஆற்றியுள்ளார்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் தனிப்பெரும் சிறப்புகள்:

தோழர் வ.சுப்பையா அவர்கள் புதுவை மண்ணிலிருந்து புறப்பட்ட போராட்ட வீரர், பாட்டாளிகளின் தோழன், மிகச் சிறந்த தேசபக்தர், சாமான்யர்களுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்த சமூகநீதிக் காவலர், இந்திய தேசத்தலைவர்களுக்கெல்லாம் உற்ற நண்பர், மொத்தத்தில் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்.

பாரதத்தின் விடுதலை வரலாற்றிலும் புதுவையின் விடுதலை வரலாற்றிலும் இரண்டறக் கலந்து நிற்கும் இணையற்ற வீரர். ஆங்கில ஏகாதிபத்யம், பிரஞ்சு ஏகாதிபத்யம் என்ற இரண்டு ஏகாதிபத்யங்களை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட ஒரே விடுதலை வீரர் என்ற பெருமைக்குரியவர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.

மக்கள் தலைவரின் பன்முகப்பட்ட பணிகள்:

தோழர் வ.சுப்பையா அவர்களின் பன்முகப்பட்ட பணிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், குறிப்பாகப் புதுவையின் விடுதலைப் போருக்கு வித்திட்டு வளர்த்து விடுதலையை முழுமைப்படுத்திப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த தேசபக்த விடுதலை மறவர். 1934 ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் என்ற பத்திரிக்கையை உருவாக்கித் தொடர்ந்து நடத்தி முற்போக்கு இதழ்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்ந்த சிறந்த பத்திரிக்கையாளர். அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் என்ற தேசிய அமைப்பில் திறமை மிக்க தலைவர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சமூக, பொருளாதார, அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் எழுத்தாற்றலும் நாவன்மையும் ஒருங்கே கொண்ட சிந்தனையாளர். அரசியலில் பல பெரும் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நிர்வாகம் செய்த ஆற்றல் மிக்க நிர்வாகி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களால் மதித்துப் போற்றப்படும் மக்கள் தலைவர்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

முதல் ஆற்றுப்படையின் நாயகன் சோழன் கரிகாலன்

முனைவர் நா.இளங்கோ

இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

சோழன் கரிகால் பெருவளத்தான்

ஆற்றுப்படை இலக்கியங்களில் காலத்தால் முந்தியது என்று கருதப்படும் பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகால் பெருவளத்தான் ஆவான். இவனே பத்துப்பாட்டினுள் ஒன்பதாவதாகத் திகழும் பட்டினப் பாலைக்கும் தலைவனாவான். அந்நூலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

திருமாவளவன், கரிகால் பெருவளத்தான் என்னும் பெயர்களை உடைய கரிகாலன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இளஞ்சேட்சென்னி என்பானின் மகன். இவன்தாய் அழுந்தூர் வேண்மாள் ஆவாள். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம்வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாகக் கால்கள் கருகிட இவனுக்கு இப்பெயர் வழங்கலாயிற்று என்றும் பகைவரால் தீயிட்டுக் கொல்லக் கருதிய போது கால் கரிந்த தீக்காயத்துடன் தப்பி உயிர்பிழைத்துக் கரிகாலன் ஆனான் என்றும் சிலர் கரிகாலன் என்ற சொல்லுக்கு விளக்கம் காண்பர்.

கரி -யானை காலன் -யமன், அழிப்பவன் என்று பொருள் கொண்டு யானைகளுக்கு எமன் என்றும் யானைகளைக் கொல்பவன் அதாவது யானைப் போரில் வல்லவன் என்றும் சிலர் விளக்கம் கூறுவர். கரிகாலன் என்றால் யானைப் போரில் சிறந்தவன் என்ற பொருளே பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது.

ஆயினும் பொருநராற்றுப்படை ஏட்டுச் சுவடிகளில் இடம்பெற்றுள்ள மிகைப் பாடல் வெண்பா ஒன்று,
அரிகால்மேல் தேன்தொடுக்கும் ஆய்புனல் நீர்நாடன்
கரிகாலன் கால்நெருப்பு உற்று.


என்று கரிகாலன் கால் நெருப்புற்ற செய்தியைக் குறிப்பிடுகின்றது. எனவே நெடுங்காலத்திற்கு முன்பே கரிகாலன் என்பதற்குக் கரிந்த காலன் என்ற புனைவு வழக்கிற்கு வந்துவிட்டமை தெளிவாகிறது.

பொருநராற்றுப்படையில் பாட்டுடைத் தலைவன் கரிகாலன் குறித்த வரலாற்றுச் செய்திகள் சிலவற்றை முடத்தாமக் கண்ணியார் பதிவு செய்துள்ளார்.

வெல்வேல்
உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்
தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி
(பொருநர்: 129-132)

இரும்பனம் போந்தைத் தோடும் கரும்சினை
அரவாய் வேம்பின் அம்குழைத் தெரியலும்
ஓங்குஇரும் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரும் வேந்தரும் ஒருகளத்து அவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்
கண்ஆர் கண்ணி கரிகால் வளவன்
(பொருநர்: 143-148)

இம்மன்னன் இளஞ்சேட் சென்னி என்னும் அரசனுடைய மகன் என்பதனை ‘உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்’ எனவரும் அடி உறுதிசெய்கின்றது. இவன் தன்தாய் வயிற்றில் கருவாயிருந்த போதே இவன் தந்தை இறந்தான் என்பதனையும் தாய் வயிற்றிலிருந்த போதே அரசுரிமை பெற்றுப் பின்னர் பிறந்தான் என்பதனையும் பொருநராற்றுப்படை ‘தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி’ என்னும் அடியினால் பதிவுசெய்கின்றது.

தாய் வயிற்றிலிருந்தபோதே அரசுரிமை பெற்றதனால் கரிகாலன் இளைஞனாயிருந்த போதே இவனுடைய அரசுரிமையைக் கைப்பற்றுதற்கு இவனுடைய உறவினரும் பிறரும் முயன்றனர் என்று அறிகிறோம். ஆனால் இளமையிலேயே முடிசூடிக் கொண்டதோடு மட்டுமில்லாமல் தம் நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி செய்து அதன் பெருமையைப் பாரறியச் செய்தான் என்பதனை முடத்தாமக் கண்ணியார் கவிவழக்காகப் பின்வருமாறு புனைந்து கூறுகின்றார்.

பவ்வம் மீமிசைப் பகல்கதிர் பரப்பி
வௌ;வெம் செல்வன் விசும்பு படர்ந்துஆங்கு
பிறந்துதவழ் கற்றதன் தொட்டுச் சிறந்தநல்
நாடுசெகில் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப
(பொருநர்: 135-138)

“கடலில் தோன்றும்போதே தன் சுடர்களைப் பரப்பி எழுந்து எல்லோராலும் விரும்பப்படும் வெம்மையுடைய ஞாயிறு பின்னர் ஆகாயத்தில் மெல்லச் சென்றது போன்று பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி ஏனையோர் நாட்டில் சிறந்த நல்ல நாடுகளைத் தன் வெற்றியாலே தன் தோள்களில் சுமந்தவன். அப்படித் தோளிலே சுமக்கும் நாடுகளை நாள்தோறும் வளர்த்தெடுக்கும் ஆற்றலும் அவனுக்குண்டு.” என்பது கவிஞர் கூற்று.

அடுத்து, கரிகால் பெருவளத்தானின் வெண்ணிப் போர் குறித்த வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்கின்றார் முடத்தாமக் கண்ணியார்.

“சிங்கத்தின் குட்டியானது தன் வலிமை குறித்து மிகுந்த செருக்கு கொண்டு, தன்தாயிடம் முலைப்பால் குடித்தலைக் கைவிடாத இளம் பருவத்திலேயே முதன்முதலில் இரையைக் கொல்லும் தன் கன்னி வேட்டையிலேயே விரைந்து செயல்பட்டு ஆண்யானையைக் கொன்று வெற்றிகரமாக முடித்ததைப் போன்று கரிய பனந்தோட்டு மாலையும், வேப்பமாலையும் முறையே சூடிய இருபெரு வேந்தர்களாம் சேரனையும் பாண்டியனையும் ஒருசேர வெண்ணி என்னும் ஊரிலே போரிட்டுக் கொன்ற அச்சந்தரும் வலிய வீரத்தையும் முயற்சியையும் உடையவன் சோழன் கரிகாலன். அவன் கண்ணுக்கு இனிய ஆத்தி மாலையைத் தலைக் கண்ணியாக அணிந்தவன்.” (பொருநர்: 139-148 அடிகளின் உரை)

சிங்கத்தின் கன்னிவேட்டையை, கரிகாலனின் வெண்ணிப் போருக்கு உவமையாக ஆசிரியர் கையாண்டுள்ளமையால் வெண்ணிப் போரும் கரிகாலனின் இளம்வயதில் நடைபெற்றிருக்க வேண்டும் என்று துணிய இடமுண்டு. ‘இருபெரும் வேந்தரும் ஒருகளத்து அவிய’ என்றதனால் கரிகாலனுடனான வெண்ணிப் போரில் சேரனும் பாண்டியனும் களத்திலேயே கொல்லப்பட்டனர் அல்லது இறந்தனர் எனத் தெரிகிறது.

கரிகால் பெருவளத்தானைப் பாடும் பட்டினப்பாலை, அவனது இளம் பருவத்திலேயே அவன் பகைவர்களால் சிறையிடப்பட்டான் என்றும் தன் சொந்த வலிமையினால் சிறையிலிருந்து மீண்டான் என்றும் குறிப்பிடுகின்றது.

கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்த்தாங்குப்
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரைக் கவியக் குத்தி குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
(பட்டின. 221-224)

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் இடையறாது சிந்தித்துத் திட்டமிட்டு சிறையிலிருந்து தப்பி அரசுரிமையை மீண்டும் பெற்றுப் பகைவர்களை அடக்கினான் என்று அறிகிறோம்.

“சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கரிகாலனை இருவராகக் கொள்வார் மா.இராசமாணிக்கனார். முதல் கரிகாலன் கி.மு. 120 முதல் கி.மு. 90 வரை அழுந்தூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டின் ஒருபகுதியை ஆண்டான் எனவும் இவன் சென்னி மரபைச் சேர்ந்தவன் எனவும் கூறுவர். இரண்டாவது கரிகாலன் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்றும் அவர் கூறுகின்றார்.

மா.இராசமாணிக்கனார் போலவே சிவராசப் பிள்ளையும் கரிகாலனை இருவராகக் கொண்டு விளக்கினார். கரிகாலன் வெற்றிபெற்ற வெண்ணிப் பறந்தலைப் போர் இருமுறை நடைபெற்றதாக இவர்கள் கருதுவர். வெண்ணிப் போரில் கரிகாலனிடம் தோற்றுப் புறப்புண் நாணி வடக்கிருந்த பெருஞ்சேரலாதன் தோல்வி அடைந்தது முதல் வெண்ணிப்போர் ஆகும். இப்போர் முதல் கரிகாலன் காலத்தில் நிகழ்ந்துள்ளது. இப்போரில் வேந்தர் இருவரையும் வேளிர் பதினொருவரையும் கரிகாலன் வென்றுள்ளான். இப்போரினைக் கழாத்தலையாரும் வெண்ணிக் குயத்தியாரும் பாடி உள்ளனர். இதேபோல் வேறொரு வெண்ணிப்போர் பொருநர் ஆற்றுப் படையுள் கூறப்பட்டுள்ளது என்றும் மா.இராசமாணிக்கனார் கருதுகிறார்.” (சிலம்பு நா.செல்வராசு, எழுத்துரை, ப.2-3)

சோழ மன்னன் கரிகாலன் குறித்த செய்திகளில் தொன்மங்களும் வரலாற்று உண்மைகளுமாக விரவிக் கிடக்கின்றன. கரிகாலன் என்ற பெயரிலேயே ஒவ்வொரு காலத்திலும் சோழ மன்னர்கள் பலர் இருந்துள்ளனர். கரிகாலன் என்ற பெயரில் மன்னர் நால்வர் இருந்ததாக அபிதான சிந்தாமணி கூறுகிறது. பலர் தங்கள் மன்னர் பரம்பரையைக் கரிகாலன் பரம்பரை என்று பெருமையோடு புனைந்து பேசுகின்றனர்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இன்றும் உலகோர் வியந்து பாராட்டும்படியான கல்லணையைக் கட்டியவன் சோழன் கரிகாலனே. பொருநராற்றுப்படை இந்தச் செய்தியைப் பதிவு செய்யவில்லை. எனவே கல்லணையைக் கட்டிய கரிகாலன் வேறு, பொருநராற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் கரிகாலன் வேறு என்று அறிய முடிகிறது.

இளமையில் நரை முடித்து அறங்கூறு அவையத்தில் நல்ல தீர்ப்பு வழங்கி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றவன் பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் கரிகாலனாயிருக்க வாய்ப்புண்டு. ஆயினும் அதுபற்றி ஆற்றுப்படையில் எந்த அகச்சான்றுமில்லை. சங்க இலக்கியங்களில் இடம்பெறும் ஆதிமந்தி சோழன் கரிகாலனின் மகளே என்றும் ஒரு குறிப்பு உண்டு.

எவ்வாறாயினும் பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் கரிகால் பெருவளத்தான் தன்னைநாடி வரும் கலைஞர்களைப் பேணிப் புரந்து விருந்து உபசரித்து பரிசில்கள் வழங்கி உரிய மரியாதைகளோடு வழியனுப்பி வைப்பதில் மிகச் சிறந்த பண்பாளன் என்பதை முடத்தாமக் கண்ணியார் மிகச்சிறப்பாகத் தம் ஆற்றுப்படையில் பதிவு செய்துள்ளார்.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

மக்கள் தலைவர் சுப்பையாவும் சுதந்திரமும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தோழர் சுப்பையா:

ரஷ்யாவுக்கு ஒரு லெனின், சீனாவுக்கு ஒரு மாவோ, இந்தியாவுக்கு ஒரு மகாத்மா அதுபோல் புதுவைக்கு ஒரு வ.சுப்பையா என்று சிறப்பிக்கக் கூடிய பெருமைக்குரிய தலைவர்தான் தோழர் வ.சுப்பையா அவர்கள்.

பிரஞ்சு ஏகாதிபத்தியம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என இரண்டு ஏகாதிபத்தியத்திய அரசுகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற புதுவைச் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.சுப்பையா. ஆசியாவிலேயே முதன் முதலாகத் தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை உரிமையைப் பெற்றுத்தந்த மக்கள் தலைவர். இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தளபதிகளில் முன்னணித் தலைவர். இவர் தமது 23 ஆம் வயதில் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்ட மேற்கொண்ட வெற்றிகரமான முயற்சியே சுதந்திரம் இதழ்.

இதழ் அறிமுகம்:

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு

என்ற பாரதியின் பாடல் அடிகளைக் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு 1934 ஜூன் மாதம் மாலை: 1, மலர்: 1 என்ற எண்ணிக்கைக் கணக்கோடு மாத இதழாகச் சுதந்திரம் வெளிவரலாயிற்று.

முதல் இதழிலிருந்தே ஆசிரியராக இருந்தவர் வ.சுப்பையா என்றாலும் மூன்றாவது இதழிலிருந்துதான் ஆசிரியர்:- வ.சுப்பையா என்று இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதழின் மேலட்டை பலவண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது. 1க்கு 8 டம்மி அளவில் மேலட்டை நீங்கலாக 52 பக்கங்களில் முதல் இதழும், பிற இதழ்கள் 60 பக்கங்களிலும் வெளிவந்துள்ளன.

முதல் மூன்று இதழ்களின் மேலட்டைகளில் குதிரை மீதமர்ந்த சுதந்திர அன்னையின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த மேலட்டை குறித்து ஆசிரியர் தமது ஆசிரியர் குறிப்பு பகுதியில் குறிப்பிடும் செய்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் ஒரு பகுதி பின்வருமாறு,

நமது சுதந்திர அன்னை சமூகமென்னும் பரியின் மீது அமர்ந்து ஒரு கரத்தில் சுதந்திரக் கொடியையும் மற்றொன்றில் வீரச்சின்னத்தையும் ஏந்தி, சுதந்திர முழக்கம் செய்துகொண்டு, அடிமையென்னும் கோட்டையினின்று வெளியேறி முன்னேற்றமென்னும் கனவேகத்துடன் சென்று தமிழக முழுவதும் தனது வெற்றிக்கனலைப் பரப்ப, சுதந்திர லட்சியத்தை உலகத்திற்கே முதலில் போதித்த பிரான்சின் குடியாட்சியிலிருக்கும் புதுவையிலிருந்து இன்று வெளிவருகிறாள். இவள் பணி தமிழகத்திலுள்ள புதல்வர்களுக்குச் சுதந்திர அமுதையூட்டி வீரர்களாக வாழச்செய்ய வேண்டுமென்பதாகும்.(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.2)

இதழின் நோக்கம்:

இந்த இதழைத் தொடங்கும் போது வ.சுப்பையா அவர்கள் தமது நோக்கமாக, ‘தமிழகத்திலுள்ள புதல்வர்களுக்குச் சுதந்திர அமுதை ஊட்டவே இந்தச் சுதந்திர அன்னை வருகிறாள்’ என்று குறிப்பிடும் பகுதி கவனத்தில் கொள்ளத் தக்கது. மேலும் இந்த முதல் இதழில் ஆசிரியர் குறிப்பிடும் பல செய்திகள் அவரின் சமூகம் குறித்த சரியான புரிதல்களை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது. சான்றாக,

நமது சமூகத்திலே மதத்தின் பேராலும், சாத்திரத்தின் பேராலும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சுமார் ஏழு கோடி மக்களான நமது இந்தியச் சகோதரர்களை முதலில் விடுதலையடையச் செய்யவேண்டும்.
சமுதாயத்தில் ஒரு நேத்திரம் போல் விளங்கும் சுமார் 18 கோடிக்கு அதிகமான பெற்ற தாய்மாரையும் உடன்பிறந்த சகோதரிகளையும் நசுக்கி, அடிமைப்படுத்தி இழிவுறுத்தும் நாடு நம்நாடன்றோ?

(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப-ள்.3,4)

என்று எழுதும் இடங்களில் தலித் விடுதலை குறித்த சிந்தனையையும், பெண் விடுதலை குறித்த சிந்தனையையும் சரியான புரிதலோடு குறிப்பிடுகின்றார். இன்றைக்குப் பெருவளர்ச்சி பெற்றுள்ள தலித்திய, பெண்ணியச் சிந்தனைகளை முதல் இதழிலேயே ஆசிரிய உரையில் குறிப்பிடும் வ.சுப்பையா அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.

அகத்திலுள்ள உயர்வு தாழ்வு என்கிற அசடுகளை நீக்குவோம். எல்லோரும் ஓர் குலமெனப் பாடுவோம், பின் வீர சுதந்திரத்தை நிரந்தரமாக நாட்டுவோம். இதுவே உண்மைச் சுதந்திரம். இதுவே இன்பச் சுதந்திரம்
(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.4)
என்பது சுதந்திரம் ஆசிரியர் வ.சுப்பையா அவர்களின் தெளிவான முடிவு.

சுதந்திரமும் பொதுவுடைமையும்:

மகாத்மா காந்தியடிகள் 1933 இல் அரிசன சேவா சங்கத்தை ஏற்படுத்தினார். அரிசன சேவா சங்கத்தில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றிய வ.சுப்பையா அவர்கள் 1934 பிப்ரவரி 17 இல் மிகுந்த இன்னல்களுக்கிடையே மகாத்மாவைப் புதுவைக்கு அழைத்து வந்தார். பிறகு அரசியல் ரீதியாக எவ்வாறு செயல்பட்டார் என்பதைப் பின்வரும் பகுதியில் சுப்பையாவே குறிப்பிடுகின்றார்.

அரிசன மக்களோடு எனக்கிருந்த நெருக்கத்தின் காரணமாகப் பஞ்சாலைத் தொழிலாளர்களின் இயக்கத்தோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதன்பின் அரசியலிலும் நேரடியாக ஈடுபட நேர்ந்தது. அரசியல் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட நான், 1934 ஜூனில் சுதந்திரம் எனும் பத்திரிக்கையைத் தொடங்கினேன். அது இன்றுவரை தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக ஏந்தப்பட்ட போர்க்கொடியாகச் செயல்பட்டு வருகிறது.

தோழர் அமீர் அய்தர்கான் என்பவர்தான் தமிழகத்தில் பொதுவடைமை இயக்கத்தைத் தோற்றுவிக்கத் தூண்டுகோலாய் இருந்தவர். 1934 ஜூலையில் அவரோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தின் காரணமாகப் பொதுவுடைமைக் கட்சியோடு நெருக்கமும் ஏற்பட்டது. அந்தக் கட்சியின் தொடர்பு காரணமாகத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்தது. (சுதந்திரம் பொன்விழா மலர்-3, ப.40)

தோழர் வ.சுப்பையா அவர்கள் பொதுவுடைமை இயக்கத்தோடு தமக்குத் தொடர்பு ஏற்படுவதற்கு முன்பே சுதந்திரம் இதழைத் தொடங்கியுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

முதல் ஆற்றுப்படையைப் பாடிய முடத்தாமக் கண்ணியார்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

முடத்தாமக் கண்ணியார்

பத்துப்பாட்டு நூல்களுள் இரண்டாவதாக இடம்பெற்றிருக்கும் பொருநராற்றுப்படை என்னும் இந்நூலைப் பாடியவர். முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவராவார். இவரைப் பெண்பால் புலவர் என்று கருதவும் வாய்ப்புண்டு. வளைந்த ஒளியுள்ள தலைமாலை என்னும் பொருள்படும் ‘முடத்தாமக் கண்ணி’ என்னும் சொற்றொடரை இப்புலவர் தம் கவிதை ஒன்றில் கையாண்டிருக்கலாம் எனவும் அல்லது அசையும் வலிமையில்லாத ஒளியுள்ள கண்களைப் பாடியிருக்கலாம் எனவும் அல்லது ஒளியுள்ள கண்களையுடைய முடப்பெண் ஒருத்தியை இச்சொற்றொடர் குறித்திருக்கலாம் எனவும் மொ.அ. துரையரங்கசாமி கருதுவார்.

செம்புலப் பெயல்நீரார் போன்று தாம் பாடிய பாடலடியால் அவர் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும் என்பது அவர்தம் கருத்து. சங்க இலக்கியங்களில் பொருநராற்றுப்படை ஒன்று மட்டுமே இவர் பாடியதாகத் தெரிகின்றது. வேறு தொகை நூல்கள் ஒன்றிலும் இவர் பாடல் இடம்பெறவில்லை. காவிரியையும் சோழநாட்டினையும் மிகச் சிறப்பித்துப் புகழ்ந்து பாடும் இவர் சோழநாட்டினர் என்று கொள்வதில் தவறில்லை.

இப்புலவரின் பெயர் தொல்காப்பிய உரையாசிரியர் சேனாவரையரால் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது.

இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்கு உரிய எழுத்தின் வினையொடு முடிமே

(தொல். சொல். இடை. நூ. 21)

என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார இடையியல் நூற்பா உரையில் ஆர் விகுதி பன்மையோடு முடிதற்கு, ‘முடத்தாமக் கண்ணியார் வந்தார்’ என்று எடுத்துக் காட்டப்பட்பட்டிருப்பதால் இவரின் இயற்பெயர் முடத்தாமக் கண்ணி என்று கருதுவார் உ.வே.சா. இவர் பெயரின் முன்னர் முடம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதனால் இவர் உறுப்பு முடம்பட்டவர் என்று கருதுவாருமுண்டு.

இவர் பெயரிலுள்ள கண்ணி என்ற சொல் தலையில் சூடும் மாலையைக் குறிப்பதாயின் இவர் பெண்பால் புலவர் என்று கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் கண்ணி என்பது ஆண்கள் தலையில் அணியும் மாலையைக் குறிப்பதாகும்.

நூலின் அகச்சான்று கொண்டு இவர் பெண்பால் புலவராக இருக்கலாம் என்று துணிதற்கு இடமுள்ளது. பொருநராற்றுப்படை நூலின் தொடக்கத்தில் இடம்பெறும் பாலையாழ் வருணனையின் ஒரு பகுதியாக யாழ் பத்தரின் மேல் இரண்டு பக்கத் தோலினையும் இணைத்து மூட்டித் தைத்துள்ளமையை புலவர் வருணிக்கும் பகுதி பின்வருமாறு,

எய்யா இளம்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதிஉறு போர்வை
(பொருநர்: 6-8)

பத்தரின் நடுவிடம் உயர்ந்துள்ளமையும் (இளஞ்சூல் வயிறு போல) பத்தரைப் போர்த்தியுள்ள தோலின் நிறம் விளக்குச் சுடரின் நிறம்போல் சிவந்திருப்பதும் (சூலுற்றவளின் சிவந்த நிறம் போல) பத்தரின் இருபுறத் தோலினையும் இழுத்துத் தைத்துள்ள தையல் இளஞ்சூல் வாய்த்த பெண்ணின் வயிற்று மென்மையான மயிரொழுங்கு போல் உள்ளதென்றும் முடத்தாமக் கண்ணியார் உவமித்து வருணித்துள்ள பாங்கு ஒரு பெண்பால் புலவருக்கே வாய்க்கும் என்பதனால் இவரைப் பெண்பால் புலவர் என்று கொள்வதில் பிழையில்லை.

இவர் இசைத்துறையில் வல்லவராய் இருந்திருக்க வேண்டும் என்பதனை இப் பொருநராற்றுப்படையில் வரும் யாழ் குறித்த விரிவான வருணனைகளின் வழி அறிந்துகொள்ள முடிகிறது. பாலையாழின் ஒவ்வொரு பகுதியையும் தக்க உவமைகளின் வழி நம் கண்முன் நிறுத்துகின்ற கண்ணியாரின் கவியுள்ளம் யாழிசையின் மீது கொண்டுள்ள அளப்பறிய ஈடுபாடும் பக்தியும் பின்வரும் அடிகளில் உணரக் கிடக்கின்றன.

ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை
(பொருநர்: 21-22)

கொடிய ஆறலைக் கள்வர்கள் கூட யாழிசையில் ஈடுபட்டார்களானால் தம் ஆயுதங்களைப் போட்டுவிட்டு கொலைத் தொழிலையும் கைவிட்டு அருள் நெஞ்சினராக மாறிவிடுவர் என்று நம்பும் ஆசிரியர் பண்பட்ட உள்ளம் அவரின் மென்மையான இயல்பினை உறுதிப்படுத்துகிறது.

கண்ணியாரின் கவித்திறனுக்கு நூலில் இடம்பெறும் யாழ் வருணனை மற்றும் பாடினியின் கேசாதிபாத வருணனைகளே சான்று. உவமைகளை அடுக்கிச் செல்லும் அவரின் புலமைநலம் கற்பவர் நெஞ்சைப் பெரிதும் ஈர்க்கக்கூடியது. சோழநாட்டின் வருணனையும் திணைமயக்கக் காட்சிகளும் ஆசிரியர் கற்பனைத் திறனுக்குத் தக்க எடுத்துக்காட்டுகள்.

ஆற்றுப்படை இலக்கிய வகையில் பொருநராற்றுப்படையே முதல் நூல் என்று கருதப்படுகிறது. புதிய இலக்கிய மரபினை உருவாக்கும் துணிவும் இலக்கியப் பயிற்சியும் முடத்தாமக் கண்ணியாரிடம் மிக்கிருந்தமைக்கு நூலே சான்று. அகவல் அடியால் பாடப்பட்ட பொருநராற்றுப்படையின் இடைஇடையே பயில்வார்க்குச் சலிப்பு தோன்றா விதத்திலும் ஓசைநலத்தை மிகுவிக்கும் நோக்கிலும் வருணனைப் பகுதிகளில் வஞ்சி அடிகளை விரவிப் பாடியுள்ள புலவரின் புலமைநலம் பாராட்டுதற்குரியது.

திங்கள், 28 ஜூன், 2010

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி-6

தொன்மங்களும் பெண்-கற்பு மதிப்பீடுகளும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பெண் - கற்பு:
புதுமைப்பித்தன் மற்றும் இன்னபிற இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் பலரையும் அகலிகைத் தொன்மம் கவர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் ஆங்கிலக் கல்வியால் நம்மவர்கள் பெற்ற பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வே. 19 ஆம் நூற்றாண்டில் கால்கொண்ட பெண்ணுரிமை விழிப்புணர்வு இருபதாம் நூற்றாண்டுப் படைப்பாளிகளால் அவரவர் சார்புகளுக்கேற்பே வளர்த்தெடுக்கப்பட்டது.

இதிகாச, புராணத் தொன்மங்களால் கட்டமைக்கப்பட்ட பெண்-கற்பு பற்றிய மதிப்பீடுகள் அந்தத் தொன்மங்களின் துணையோடே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. பெண்கற்பை- பெண்ணடிமையை வலியுறுத்துவதில் தொன்மங்கள் மிகுந்த பங்காற்றுகின்றன. புராண இதிகாசத் தொன்மங்கள் பெண்- பெண்உடல்- பாலியல் மீறல்கள்- தண்டனைகள் என்ற ஒவ்வொன்றின் வழியாகவும் பெண்களை இறுக்கிக் கொண்டே வந்தன.

தொன்மங்களில் இடம் பெற்ற ரிஷி, ரிஷிபத்தினி பற்றிய கதைகளில் இந்த வளர்நிலைகளைக் காணலாம்.

1. தாருகாவனத்து ரிஷிகள் அவர்கள் பத்தினிகள் பற்றிய கந்தபுராணக் கதைக் குறிப்புகளில், சிவபெருமான் பிச்சாடண கோலத்தில் பிறந்த மேனியாய் தாருகாவனத்தில் பிச்சையெடுக்க வந்தபோது ரிஷிபத்தினிகள் அவர் அழகில் மயங்கிப் பின்னாலேயே போய்விடுகிறார்கள். கோபம் கொண்ட ரிஷிகள் அபிசார ஓமம் செய்து சிவனை அழிக்க முயன்றார்களே அல்லாமல் தங்கள் மனைவியர்களைத் தண்டிக்கவில்லை. கற்புக் கோட்பாடு இறுக்கம் பெறாத காலத்துத் தொன்மம் இது. வலிமையால் பெண்ணைத் தேர்ந்தெடுத்த காலம்.

2. அகலிகைக் கதையில், வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தே அவனோடு கூடிய அகலிகையையும் இந்திரனையும் கொளமன் சபித்தான். கற்பு பெண்களுக்கு வலியுறுத்தப்பட்ட காலத்துத் தொன்மம் இது.

3. ரேணுகாதேவி- ஜமதக்கினி ரிஷி கதையில் உடலால் தவறிழைக்கவில்லை யென்றாலும் மனதால் தவறிழைத்தாள் என்று கூறி மகனைக் கொண்டு தலையைத் துண்டித்தார்கள். கற்புக் கோட்பாடு இறுக்கம் பெற்ற காலத்துத் தொன்மம் இது.

4. கார்த்திகைப் பெண்டிர் - சப்த ரிஷி மாதர்கள் பற்றிய தொன்மங்கள் வடவர் தொன்மங்களிலேயும் தமிழ்த் தொன்மங்களிலேயும் கற்பு பற்றிய மதிப்பீடுகளின் பல்வேறு நிலைகளைச் சுட்டுகின்றன. இந்திரன், சிவனின் கருவை ஏழு துண்டங்களாகச் சிதைத்து கார்த்திகைப் பெண்டிர்களின் கணவன்மார்களாகிய ரிஷிகளிடம் தர, அவர்கள் அத்துண்டங்களைத் தீயிலிட்டுத் தூய்மை செய்து தம் மனைவியர்களுக்குத் தருகின்றார்கள். அருந்ததி தவிர்த்த ஆறு ரிஷி பத்தினிகளும் சிவனின் அக்கருவை உண்டு ஆறு குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றார்கள். பரிபாடல் ஐந்தாம் பாடலில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. தத்தம் கணவன்மார்களே சிவனின் கருவைத் தீயிலிட்டு தூய்மைப் படுத்தித் தருவதால் ரிஷி பத்தினிகளாகிய கார்த்திகைப் பெண்டிர்களின் கற்புக்கு ஏதும் பங்கம் வரவில்லை என்று இத்தொன்மம் அமைதி காண்கிறது.

இப்படித் தொன்மங்களின் வழியாக இறுக்கம் பெற்ற பெண்- கற்பு பற்றிய கருத்தாக்கங்களுக்கு எதிரான பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம் குறித்த புதிய கருத்தாக்கங்களைச் சமுதாயத்தில் பதிக்க இந்தத் தொன்மங்களையே கையாளுவதென்பது படைப்புத் தளத்தில் ஒரு வெற்றிகரமான உத்தி. தொன்மங்களின் நெகிழ்வுத் தன்மை இதற்குப் பெரிதும் துணைநிற்கின்றது. நெகிழ்வுத் தன்மை என்பது இங்கே மாற்றங்களை ஏற்றுக்கொள்வது என்று பொருள்படும். மாற்றங்களும் மாற்றங்களால் விளைந்த மாற்று வடிவங்களுமே தொன்மங்களை நிலைப்படுத்துகின்றன. புதிய சூழலில் அல்லது கால மாற்றத்தில் ஒரு தொன்மம் நெகிழ்வடையும் போழுது மாற்றங்கள் அத்தொன்மத்தை அழிவிலிருந்து காக்கின்றன அல்லது வாழ்விக்கின்றன என்று கருதுதல் வேண்டும்.

அகலிகைக் கதையின் மாற்றுவடிவங்கள் அத்தொன்மத்தின் நெகிழ்வுத் தன்மைக்குத் தக்க சான்றுகளாகும். வான்மீகி சொன்ன அகலிகைக் கதை, வியாச பாரதத்தில் பின்வருமாறு இடம்பெறுகிறது, கௌதமன் அகலிகையின் தலையைத் துண்டிக்க உத்திரவிடுகிறான் பின்னர் மனம் மாறி அகலிகையை ஏற்றுக் கொள்கிறான். பரிபாடலில் அகலிகையைக் கல்லாகுமாறு சபித்தான் என்று வேறு ஒரு வடிவம் இடம்பெறுகிறது. ஏறக்குறைய சம காலங்களிலேயே இத்துணை நெகிழ்ச்சியுற்றிருந்த அகலிகைத் தொன்மம், இருபதாம் நூற்றாண்டில் பத்துக்கும் மேற்பட்ட மாற்று வடிவங்களை ஏற்பது அதன் உயிர் வாழும் ஆற்றலையே காட்டுகிறது. புதுமைப் பித்தனும் தொன்மங்களின் மரபை நன்றாக ஓர்ந்தே தம்முடைய அகலிகை, சாப விமோசனம் ஆகிய கதைகளை உருவாக்கியுள்ளார்.

துணை நின்ற நூல்கள்:
1. தி. முருகரத்தினம், புதுமைப்பித்தன் சிறுகதைக்கலை, 1976
2. க.கைலாசபதி, அடியும் முடியும், 1996
3. சரசுவதி வேணுகோபால், தொன்மக் கதைகள் கோட்பாட்டு ஆய்வுகள், 1997
4. ராஜ் கௌதமன், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராட்சஸ், 2000
5. இரா. வேங்கடாசலபதி (பதி.ஆ.), புதுமைப்பித்தன் கதைகள், 2001
6. பேரா. க. பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, 2005

ஞாயிறு, 27 ஜூன், 2010

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி -5

சீதை, அகலிகைத் தொன்மங்களின் செயல்பாடுகள்:

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8




சீதை, அகலிகைத் தொன்மங்களின் செயல்பாடுகள்


மேலே உள்ள வரைபடங்கள், இரண்டு தொன்மங்களும் செயல்பாடுகளின் வழி ஒரே வாய்பாட்டில் இயங்குவதை உணர்த்துகின்றன. இரண்டு தொன்மங்களிலும் இராமனும் கோதமனும் பரிசுத்தமானவர்களாக இருக்கின்றனர். ஆண்கள் பரிசுத்தமாயிருக்கும் போது பெண்களும் அப்படியிருக்க வேண்டும் என்று நினைப்பதில்- நிர்ப்பந்திப்பதில் என்ன தவறு? என்பது போன்ற தர்க்கம் இரண்டு தொன்மங்களிலும் கட்டமைக்கப்படுகிறது.

ஆனால் இராவணன், இந்திரன் ஆகிய இரண்டு ஆண்களின் பாலியல் மீறல்கள் ஓரங்கட்டப்படுகின்றன. ஆண்களின் பாலியல் மீறல்கள் உள்ள சமூகத்தில் பெண்கள் உடலாலும் மனத்தாலும் களங்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எப்படிச் சாத்தியமாகும். ‘ஆப்பிளின் ஒரு பாதியைத் தின்றுவிட்ட பிறகு முழு ஆப்பிளைக் கையில் வைத்திருக்க முடியாது என்பதைப்போல்’ என்று இதனை விளக்குவார் எங்கல்ஸ் (எங்கல்ஸ், குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், ப.110)

சீதையின் தீக்குளிப்பு அகலிகையின் மனதில் கோபக்கனலை எழுப்பிவிடுகிறது. அவர் கேட்டாரா? என்று இயல்பாகத் தொடங்கிய அகலிகையின் பேச்சில் இராமன்தான் கேட்டான் என்று தெரிந்ததும் அவன் கேட்டானா? என்று அனல் வீசத் தொடங்குகிறது. இதனைக் கண்ணகி வெறி என்கிறார் புதுமைப்பித்தன்.

தீக்குளிப்பு பற்றிய சீதையின் எதிர்வினை என்னவாக இருந்தது? அகலிகைபோல் வெளிப்படையாக எதிர்க்குரல் எழுப்பவில்லை சீதை. மாறாக, ‘உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.’ என்ற புதுமைப்பித்தன் வரிகளில் வரும், மெதுவாகச் சிரித்தாள் என்பதில் சீதையின் கேலியும், கிண்டலும், கோபமும், ஆத்திரமும், இயலாமையும், அழுகையும் அடுக்கடுக்காக வெளிப்படுவதை உணரமுடியும். உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று வேண்டுமென்றே அகலிகையின் கோபத்தைக் கிளறிவிடும் வார்த்தையைக் கையாளுகிறாள் சீதை. தான் பேசாததை யெல்லாம், பேச வேண்டியதை யெல்லாம் அகலிகை பேசுகிறாள் என்பதால்.

பேசட்டும்.. பேசட்டும்.. வரலாற்றின் வழிநெடுகிலும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரல், குரல்வளை நெறிக்கப்பட்ட பெண்களின் கோபக்குரல், உள்ளுக்குள் மகிழ்கிறாள் சீதை. சீதையின் மௌனம், சீதை பேசாத பேச்சு அது. புதுமைப்பித்தன் கையாண்ட எத்தனையோ தொன்ம மரபுகளில் அகலிகைத் தொன்மம் மிகுந்த தனித்துவம் உடையது. அகலிகை மீண்டும் கல்லானது உளவியல் சார்ந்தது என்றாலும், அறங்கள் குறித்த அகலிகையின் விசாரணை சமூகம் பற்றியது, சமூகக் கட்டுமானங்கள் பற்றியது. சாப விமோசனத்தில் அகலிகை இரண்டு விவாதங்களைத் தொடங்கி வைக்கிறாள்.

1. மனிதனா? தர்மமா? எது முக்கியம் என்ற வினா.
2. இரண்டாவது, உள்ளமா? உலகமா?

இரண்டில் எதற்கு நாம் உண்மையாய் இருக்க வேண்டும் என்ற வினா. கைகேயியிடம் உரையாடும் தருணத்தில் அகலிகை தர்மங்கள் குறித்த சர்ச்சையைக் கிளப்புகிறாள், ‘மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்கு சத்துரு’ இது அகலிகையின் வாதம்.

இவ்வாதத்தில் தர்மத்துக்கு முதன்மையில்லை, மனிதத்திற்கே முதன்மை. ‘உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகத்துக்கு நிரூபிக்க முடியுமா?’ என்ற வாதத்தில் அகலிகை உள்ளமா? உலகமா? என்ற வினாவிற்கு அவளே விடையும் கூறுகிறாள். உலகம் எது? என்ற அகலிகையின் கேள்வியே இதற்கு பதிலாகிறது. காலம், இடம், நபர் சார்ந்து உண்மைகள் மாறுபடும் போது உலகம் என்பது எது? என்ற கேள்வி எழுகிறது.

செவ்வாய், 1 ஜூன், 2010

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் - பகுதி 4

புதுமைப் பித்தனும் அகலிகைத் தொன்மமும்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுமைப் பித்தன் சிறுகதைகளில் அகலிகைத் தொன்மம்:

புதுமைப்பித்தன் இவற்றில் அகலிகைத் தமிழ்த் தொன்ம மரபையே தம் படைப்புகளில் பயன்படுத்துகின்றார். முதல்கதை அகல்யை 1934-இல் எழுதப்பட்டது. இரண்டாம் கதை சாபவிமோசனம் 1943-இல் எழுதப்பட்டது. இரண்டு கதைகளும் படைப்புத் தளத்தில் வேறு வேறு கோணங்களில் படைக்கப்பட்டுள்ளன.

முதல்கதை அகல்யாவில் வரும் பாத்திரங்களான அகலிகை, கௌதமர், இந்திரன் என்ற பெயர்கள்தாம் தொன்மப்பெயர்கள், சம்பவங்கள் எல்லாம் இயற்கையானவை. இயற்கை இகந்த புனைவுகளே கதையில் இல்லை. இந்திரன் கோழிபோல் கூவுகிறான், கோழியாக வடிவெடுத்து வரவில்லை. இந்திரன் பூனைபோல் மெதுவாக வருகிறான், பூனையாகவில்லை. இந்திரன் இந்திரனாகவே அகலிகையைக் கூடுகிறான், கௌதமன் வேடத்தில் வரவில்லை. அகலிகை கல்லாகவில்லை, இந்திரன் சாபம் பெறவில்லை, இந்திரனை கௌதமர் மன்னித்துவிடுகிறார். கதை முழுமையும் நடப்பியலோடு இணைந்துசெல்கிறது. கௌதமர்தான் இலட்சியக் கதாபாத்திரமாகிறார். ‘மனத் தூய்மையில்தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்.’ (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 135) கௌதமரின் இந்தக் கேள்வி கற்பொழுக்கம் பற்றிய புதிய விளக்கத்தை வாசகனுக்குத் தருகிறது.

கௌதமரின் இந்த வாசகத்தை இருபதாம் நூற்றாண்டின் கற்புக் கோட்பாடு எனலாம். மனத் தூய்மைதான் கற்பு, உடல் களங்கம் கற்புக்கேடு ஆகாது என்ற இக்கூற்றைக் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கலாம். உடல் களங்கம் என்பதில் வரும் களங்கம் என்றசொல் கற்பு பற்றிய பழைய தொன்மங்களை அப்படியே போற்றிப் பாதுகாக்கின்றமையை உணரமுடியும். தூய்மை, களங்கம் என்ற இரண்டு சொற்களும் பெண்உடல் குறித்த ஆண்மைய வாதங்களையே இங்கு முன்வைக்கின்றது.

இரண்டாவது கதை சாப விமோசனம். அகலிகை, இராமனால் சாப விமோசனம் பெற்றபின் வாழ்ந்ததாகப் புதுமைப்பித்தனால் கற்பனை செய்யப்பட்ட வாழ்க்கையைப் பேசுகிறது இக்கதை. இதிகாசக் கதையாகவே, இதிகாசக் கதையின் நீட்சியாகவே இதனைப் படைக்கிறார் புதுமைப் பித்தன். சாப விமோசனம் புதுமைப்பித்தன் படைப்புகளில் தனிச்சிறப்புடையது, தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பேசப்படுவது. கதையைத் தொடங்குமுன்னே ‘ராமாயண பரிச்சய முள்ளவர்களுக்கு இந்தக்கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.’ ஆசிரியரின் இத்தனிக்கூற்று முன்னுரையாக இடம்பெற்றுள்ளது. அகலிகை இராமனால் சாப விமோசனம் பெறுவதில் கதை தொடங்குகிறது. இராமன் கால்துகள் பட்டுச் சிலை பெண்ணாகிறது. ‘நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக் கொள்வதுதான் பொருந்தும்’ (மேற். நூ. ப.529) என்கிறார் விசுவாமித்திரர் கோதமனிடம். கோதமன் அகலிகை வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது. அகலிகை மனதால் களங்கமற்றவள் என்பதை கோதமர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ஊர் உலகம் அவளைத் தூற்றுகிறது. ‘சாப விமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கிடையாதா? ‘ (மேற். நூ. ப.535) இராமாயணக் கதை நெடுகிலும் அகலிகைக் கதை தொடர்கிறது. சீதை சிறை மீட்புக்குப் பின் சீதையும் இராமனும் ஒருநாள் அகலியைக் காண வருகின்றனர்.

அகலிகை சீதை இவர்களின் தனித்த உரையாடலில் இலங்கையில் நடந்த சம்பவங்களைச் சீதை சொல்லிக்கொண்டிருந்தாள். சாப விமோசனம் கதையின் உச்சம் இப்பகுதி,அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்துவிட்டாள்.அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய் என்று கேட்டாள்.அவர் கேட்டார், நான் செய்தேன் என்றாள் சீதை அமைதியாக.அவன் கேட்டானா? என்று கத்தினாள் அகலிகை, அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர்.உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா? என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது. நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா, உள்ளத்தைத் தொடவில்லை யானால்? நிற்கட்டும், உலகம் எது? என்றாள் அகலிகை. (மேற். நூ. ப.539) மனதால் களங்கமற்று இருந்தாலே போதும் என்று அகலிகைக்கு பேசப்பட்ட அறம், சீதை விசயத்தில் உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்றாகிறதே, ஏன்? அகலிகைக்கு ஒரு நீதி அவனுக்கு ஒரு நீதியா? ஊருக்கு உபதேசம் செய்துவிட்டுத் தன் மனைவி என்கிற போது நியாயம் ஏன் மாறுகிறது? எது மாற்றுகிறது? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? என்று கொதிக்கும் அகலிகை மீண்டும் கல்லாகிறாள்.

புதுமைப்பித்தனின் இந்தச் சாப விமோசனம் கதை ஆழ்ந்து படிப்போர்க்கு இரண்டு சிக்கல்களை எழுப்பியிருப்பதாக க. கைலாசபதி கருதுகிறார்.

1. நெருக்கடி ஏற்படும் பொழுது கணவன் மனைவி உறவுப் பிரச்சனை எப்படித் தோன்றுகிறது, அதாவது மனித உறவுகள் பற்றிய சிக்கல்.

2. ஒழுக்கம், அறம் என்பவைக்கும் வாழ்க்கைக்கும் எவ்வாறு முரண்பாடு தோன்றுகிறது, அதாவது அறவியல் - பெற்றுள்ள வலிமை பற்றிய சிக்கல் (க.கைலாசபதி, அடியும் முடியும், ப.156)

மனித உறவுகள் பற்றிய சிக்கலையும், அறவியலின் வலிமை பற்றிய சிக்கலையும் பேசும் சாப விமோசனம் இச்சிக்கல்களுக்கு வெளிப்படையாக விடைகூறவில்லை என்பார் கைலாசபதி. அகலிகைத் தொன்மத்தை மறுபடைப்பாக்கம் செய்த பலரும் உளவியல் நோக்கிலேயே இத்தொன்மத்தை அணுகியுள்ளார்கள். புதுமைப்பித்தனும் சாப விமோசனம் பெற்ற பின்னர் அகலிகை, கோதமன் இருவரின் மனதிலும் இழையோடும் குற்ற உணர்ச்சி பற்றிப் பலபடப் பேசுகிறார். அகலிகைக்கு அச்ச உணர்ச்சியே மேலோங்கி நின்றது. இயல்பான பேச்சு இல்லை, மற்றவர் பேச்சையும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அகலிகைக்கு பயம் நெஞ்சில் உறையேறிவிட்டது. ஆயிரம் தடவை மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாடம் பண்ணிக்கொண்டு, அந்த வார்த்தை சரிதானா என்பதை நாலு கொணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் எதையும் சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளுக்குக் கூட உள்ளர்த்தம் உண்டோ என்று பதைப்பாள். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 531)கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் களங்கமின்றிப் பேச நாவெழவில்லை. அவளை அன்று விலைமகள் என்று சுட்டது, தன்நாக்கையே பொசுக்க வைத்துவிட்டது போல இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது? … இருவரும் இருவிதமான மனக்கோட்டைக்குள் இருந்து தவித்தார்கள். கோதமனுக்குத் தான் ஏற்றவளா? என்பதே அகலிகையின் கவலைஅகலிகைக்கு தான் ஏற்றவனா என்பதே கோதமனின் கவலை (மேற். நூ. ப.530)சேர்ந்து வாழ்ந்தாலும் இருவரும் இரண்டு விதமான மனக்கோட்டைகளுக்குள் வாழ நேர்ந்ததால் ஏற்படும் உளவியல் சிக்கல்களே சாப விமோசனம் கதையின் முதல்பாதி.

சாப விமோசனம் கதையின் இரண்டாம் பாதி, இராமன் கதை என்ற ஒற்றைத் தொன்மத்திற்குள் இயங்கும் சீதை, அகலிகை என்ற இரட்டைத் தொன்மங்களைக் குறித்தது. அதாவது சீதைத் தீக்குளிப்பு ஒரு தொன்மம், இத்தொன்மம் கற்பு- நெருப்பு- உலகம் என்பதோடு தொடர்புடையது. அகலிகை கல்லுயிர் பெறல் மற்றுமொரு தொன்மம், இத்தொன்மம் கற்பு- உடல்-மனம் என்பவற்றோடு தொடர்புடையது. இந்த இரண்டு தொன்மங்களையும் இணைக்கும் தொன்மம் இராமன் குறித்த தொன்மம். சீதை, அகலிகை என்ற இரண்டு தொன்மங்களுக்குள் இயங்கும் செயல்பாடுகள் ஒரே வாய்பாட்டில் இயங்குகின்றன. ஒத்த வாய்பாட்டில் இயங்கும் இக்கதைகளில் மாறுபடும் மதிப்பீடுகள் குறித்த விசாரணையே புதுமைப்பித்தனின் சாப விமோசனம் முன்வைக்கும் சிக்கல். இச்சிக்கல் அகலிகை வழியாக எழுப்பப்படுகிறது. தொன்மத்தில் இது அகலிகையின் குரலாக ஒலித்தாலும், வரலாறு நெடுகிலும் பெண்களின் ஒற்றைக் குரலாகவே எதிரொலிக்கின்றது.

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி 3

அகலிகைத் தொன்மம்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அகலிகைத் தொன்மம்:

வடமொழியில் முதல்காவியம் செய்த வான்மீகியே முதன்முதலில் அகலிகைக் கதைக்கு இலக்கிய உருவம் கொடுத்தார். வான்மீகி சொன்ன கதை இது,மகாமுனி கௌதமரும் அகலிகையும் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர். அகலிகையின் அழகில் மயங்கிய இந்திரன் அவளை அடையும் நோக்கத்துடன் ஒருநாள் கௌதமன் ஆசிரமத்தில் இல்லாத நேரம் பார்த்து கௌதமனாகி உருமாறி வந்து நாம் இப்போதே கூடுவோம் என்றான். வந்திருப்பது கணவன் இல்லை, தேவேந்திரனே என்பதைத் தெரிந்துகொண்ட அகலிகை, இந்திரனே நம்மைத் தேடிவந்துள்ளானே என்று தன் அழகைப்பற்றி கர்வப்பட்டு அவனுக்கு உடன்பட்டாள்.பிறகு தேவேந்திரனே விரைந்து புறப்படு, அபாயத்திலிருந்து உன்னைக் காத்துக்கொள் என்று எச்சரித்து அனுப்ப, உனக்கு நன்றி என்றுகூறி தேவேந்திரன் புறப்படும் வேளையில் அங்குவந்த கௌதமன் இந்திரன் வேடத்தைக் கண்டு நடந்தவற்றை உணர்ந்துகொண்டார்.மூடனே! என் வேஷத்தைத் தரித்துக்கொண்டு ஆசிரமத்தில்புகுந்து தகாததைச் செய்த நீ ஆண்மை இழக்கக்கடவாய் என்று இந்திரனுக்கு சாபமிட்டார். அகலிகையே! நீ இங்கே நீண்டகாலம் காற்றே உணவாக எந்தவொரு ஆகாரமுமின்றிச் சாம்பல்மேல் படுத்து யார் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்து வசிப்பாயாக. பலகாலம் கழித்து இங்கு வரப்போகும் இராமன் பாதம் ஆசிரமத்தில் படும்போது உன் பாவம் நீங்கும் என்று அகலிகைக்குச் சாபமிட்டார்.

தமிழில் அகலிகைத் தொன்மம்

தமிழில் முதன்முதலில் அகலிகைத் தொன்மம் இடம்பெற்ற நூல் பரிபாடல். மிகச்சுருக்கமாக அகலிகைக் கதை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியச் சாலையில் இடம்பெற்றுள்ள பல ஓவியங்களைக் கண்டு வருவோர், இந்த ஓவியத்தைச் சுட்டிக்காட்டி, இந்திரன் ப+சை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுருஒன்றிய படியிதென்று உரை செய்வோரும் (நப்பண்ணனார், பரிபாடல், பா. 19)‘இவ்வுருவம் பூனைவடிவமெய்திய இந்திரனது, இவள் அகலிகை, இவன் கௌதமன், இவன் கோபித்தலால் இவள் கல்லுருவானவாறு இது’ என்று மக்கள் பேசிச்சென்ற காட்சியை வருணிக்கும் பகுதியில் அகலிகைக் கதை இடம்பெற்றுள்ளது. இந்திரன் பெற்ற சாபம் பற்றிய குறிப்பு இப்பகுதியில் இடம்பெறவில்லை, ஆனால் பரிபாடலின் ஒன்பதாம் பாடலில் குன்றம்பூதனார் செவ்வேளின் மனைவி தேவசேனையைக் குறிக்குமிடத்தில் ‘ ஐயிரு நூற்று மெய்ந் நயனத்தவன் மகள்’ என்று குறிப்பிடும் இடத்தில் இந்திரன் ஆயிரம் கண்ணுடையவன் என்று சுட்டப்படுவதால் இந்திரன் சாபம் நினைவுக்கு வருகின்றது.

பரிபாடல் கூறும் வடிவத்திலேயே கம்பர் தம் இராமகாதையில் இக்கதையை விவரித்துள்ளார். கௌதமருடைய சாபத்தைப் பொருத்தவரையில் வான்மீகத்திலிருந்து வேறுபடும் கம்பர் அகலிகையின் பாத்திரப்படைப்பிலும் மிக முக்கியமானதொரு மாற்றத்தைச் செய்கின்றார். தவறிழைத்த அகலிகையைக் கம்பன், ‘நெஞ்சினால் பிழைப்பிலாதாள்’ என்றே விசுவாமித்திரர் வாயிலாகக் குறிப்பிடுகின்றான். அதுமட்டுமின்றி, சாபவிமோசனத்திற்குப் பின் இராமன் கௌதமரை வணங்கி, ‘மாசறு கற்பின் மிக்க அணங்கினை அவன்கை ஈந்து’ தன் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றான் கம்பன். கம்பன் செய்த இந்த மாற்றங்களுக்குப் பிறகு அகலிகைத் தொன்மம் வடமொழித் தொன்மத்திலிருந்து தமிழ்த் தொன்மமாக மாற்றம் பெறுகின்றது.

கம்பருக்குப் பின்னர் அகலிகைத் தொன்மத்தை விரிவான வகையில் தனிநூலாக இருநூற்றுத் தொண்ணூற்றைந்து வெண்பாக்களால் உருவாக்கித் தந்தவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார். அவர் செய்த நூல் அகலிகை வெண்பா. இருபதாம் நூற்றாண்டில் அகலிகைத் தொன்மம் மீண்டும் மீண்டும் பலராலும் மறுபடைப்பாக்கம் செய்யப் பெற்றுள்ளது. அப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் குறிப்பிடத் தக்க படைப்பாக விளங்குகின்றன.

அகலிகைத் தொன்மத்தைக் கையாண்டு அகல்யை, சாப விமோசனம் என்ற இரண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளார் புதுமைப்பித்தன். அகலிகைத் தொன்மத்தைப் பொறுத்தமட்டில் இருவேறு மரபுகள் காணப்படுகின்றன. ஒன்று வடமொழி அகலிகைத் தொன்ம மரபு, மற்றொன்று தமிழ் அகலிகைத் தொன்ம மரபு. இப்படி இருவேறு மரபுகளாகக் கணக்கில் கொள்ளும் வகையில் இரண்டு மரபுகளும் மாறுபடுகின்றன. வடமொழி அகலிகைத் தொன்மத்தில் வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தே அவனுடன் கூடுகிறாள் அகலிகை, கல்லாகும் சாபம் அவளுக்கு இல்லை. தமிழ் அகலிகைத் தொன்மத்தில் வந்திருப்பது இந்திரன் என்று அறியாமல் கணவன் என்று நினைத்தே அகலிகை அவனுடன் கூடுகிறாள். மனதால் களங்கமற்றவள் என்று சித்தரிக்கப்படுகிறாள். கௌதமனால் கல்லாகுமாறு சபிக்கப்படுகிறாள். இந்த இருவகை அகலிகைத் தொன்மங்களும் இருபதாம் நூற்றாண்டின் நவீன படைப்பாளிகளுக்கு பயன்படுகின்றன.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...