Monday, August 30, 2010

பிரஞ்சிந்திய விடுதலை வீரர் மக்கள் தலைவர் வ.சுப்பையா -பகுதி-1

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

மக்கள் தலைவர்:

1987 இல் இந்தியாவின் 40 ஆவது சுதந்திர ஆண்டு விழாவின் போது இந்திய அரசு தேர்ந்தெடுத்து அறிவித்த தலைசிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 97 பேரில் மக்கள் தலைவர் தோழர் வ.சுப்பையாவும் ஒருவர். மகாகவி என்றால் அது பாரதியாரையும் புரட்சிக்கவிஞர் என்றால் அது பாரதிதாசனையும் பெரியார் என்றால் அது ஈ.வெ.ராமசாமி அவர்களையும் குறிப்பது போல் மக்கள் தலைவர் என்றால் அது தோழர் வ.சுப்பையா அவர்களையே குறிக்கும்.

பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த புதுச்சேரியை விடுவித்துச் சுதந்திர பூமியாக மாற்ற மக்களைத் திரட்டிப் போராடி இந்தியத் தாயகத்துடன் இணைத்த சிற்பி தோழர் வ.சுப்பையாதான் என்பதை அவருக்கு நேர்எதிரான கொள்கை நிலையில் நிற்பவர்களும் ஒப்புக் கொள்வார்கள். எத்தனைமுறை சிறையில் இட்டாலும் நாடு கடத்தினாலும் கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்று கடைசிவரை போராடி வெற்றிகண்ட பெருமை அவருக்கு உண்டு.

தொழிற்சங்கம் கண்ட தலைவர்:

புதுவை பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமைகூட மறுக்கப்பட்டிருந்தது. மக்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் நேரடியான அரசியல் போராட்டங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தகைய நெருக்கடியான காலங்களில் தோழர் வ.சுப்பையா அவர்கள் எழுச்சியும் பொதுநலத்தில் நாட்டமும் மிக்க இளைஞர்களை, மாணவர்களை ஒருங்கிணைத்து இளைஞர் சங்கத்தினை அமைத்துச் சமுதாயத்திற்குப் பாடுபட்டார்.

தம் இளமைக்காலம் முதலே தேச நலனில் அக்கறை கொண்டு இந்திய அளவில் நடைபெறும் சுதந்திரப் போராட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

காந்தியடிகளும் மக்கள் தலைவரும்:

தோழர் வ.சுப்பையா அவர்கள் 1933 இல் மகாத்மா காந்தியடிகள் அமைத்த அரிசன சேவா சங்கத்தின் கிளை அமைப்பு ஒன்றைப் புதுவையில் தொடங்கி அதன் செயலராக இருந்து தீண்டாமையை ஒழிக்கவும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காகவும் பாடுபட்டார். 1934 பிப்ரவரி 17 இல் மிகுந்த முயற்சி மேற்கொண்டு மகாத்மாவைப் புதுவைக்கு அழைத்து வந்தார். முதன்முதலில் காந்தியடிகளைப் புதுவைக்கு அழைத்துவந்த பெருமை தோழர் வ.சுப்பையா அவர்களையே சாரும்.

தோழர் வ.சுப்பையா அவர்கள் அரிசன சேவா சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுப் பணியாற்றியதால் சமூகத்தின் அடித்தள மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. அடித்தள மக்களில் பலர் பஞ்சாலைத் தொழிலாளர்களாக இருந்தமையால், அன்றைய சூழலில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பிரஞ்சு ஆலை முதலாளிகளால் உரிமைகள் ஏதுமற்ற அடிமைகள்போல் நடத்தப்படுவது கண்டு மனம் வெதும்பினார். ஆலைத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் பற்றியும் தொழிலாளர் உரிமை பற்றியும் போதித்துக் கிராமங்கள்தோறும் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டினார். ஆலையில் இரகசியமாகத் தொழிற்சங்கம் ஏற்படுத்தினார்.

சுதந்திரம் இதழைத் தொடங்கினார்:

இதே காலக்கட்டத்தில் 1934 ஜூன் முதல் ‘சுதந்திரம்’ என்ற மாதப் பத்திரிக்கையைத் தொடங்கி இதழ்பணியின் வழியாகத் தொழிலாளர் நலன்களைப் பேணினார்.

பஞ்சாலைப் போராட்டங்கள்:

1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றினார். தொழிலாளர் போராட்டங்களின் விளைவாக வேலைநேரம் குறைக்கப்பட்டது. கூலி உயர்வும் வேலை உத்திரவாதமும் வழங்கப்பட்டன. ஆனால் தொழிற்சங்க உரிமை மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.

1936 இல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரஞ்சு ஏகாதிபத்யம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளின் கவனத்தைப் புதுச்சேரியின் பக்கம் திருப்பியது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை தோழர் வ.சுப்பையா அவர்களையே சாரும்.

எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை:

தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை, துப்பாக்கிச் சூடு போன்ற பிரச்சனைகளைப் பிரஞ்சு அரசோடு பேசித்தீர்க்க பண்டித நேருவின் ஆலோசனையின் பேரில் அவரின் அறிமுகக் கடிதத்தோடு தோழர் வ.சுப்பையா 1937 மார்ச் 6 இல் பிரான்சுக்குச் சென்றார். பிரஞ்சு அரசோடு இப்பிரச்சனை குறித்து விவாதித்தார். அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6 இல் பிரஞ்சு- இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டன. ஆசிய நாடுகளிலேயே 8 மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன்முதலாக அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் சமூகப்பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன. இத்தணைச் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.

No comments: