புதன், 31 டிசம்பர், 2008

துளிப்பாக்களில் (ஹைக்கூ) அழகியலும் சமுதாயமும் - அணிந்துரை

துளிப்பாக்களில் (ஹைக்கூ) அழகியலும் சமுதாயமும் -
கு. தேன்மொழி

அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கவிதை வாசகனிடம் வெளிப்படையாகப் பேசுகிற விஷயங்களை விடப் பேசாமல் விடுகிற விஷயங்கள் ஏராளம். கவிதை பேசாமல் விட்டனவற்றைக் கவிதைக்குள்ளே தேடி வாசிப்பதில்தான் வாசகனின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் அடங்கியுள்ளது. மரபுக் கவிதை, புதுக்கவிதைகளை விட ஹைக்கூக் களுக்கே இவ்விதி முற்று முழுதாகப் பொருந்தும். கடந்த பத்தாண்டுகளில் தமிழில் ஹைக்கூ தொகுதிகள் மிகுதியாக வெளிவரத் தொடங்கிவிட்டன.
‘அந்தாதி பார்த்து அந்தாதி கலம்பகம் பார்த்துக் கலம்பகம்’ என்பதைப்போல் ஹைக்கூ பார்த்து ஹைக்கூக்கள் பெருகிவிட்டன. இன்றைக்கு வேறு எந்தக் கவிதையும் எழுதத் தெரியாத பலர் ஹைக்கூ எழுதத் தொடங்கிவிட்டார்கள். மொத்தமாக நாலு பக்கம் எழுதினாலே போதும் ஒரு கவிதைப் புத்தகம் போட்டுவிடலாம், இந்த வசதி ஹைக்கூ எழுதுவதில்தான் இருக்கிறது. இதற்காகவே ஹைக்கூ எழுதுபவர்களும் இருக்கிறார்கள். நான் மேலே சொன்னதெல்லாம் விதிவிலக்குகள். உண்மையிலேயே ஹைக்கூ வடிவத்தையும் வெளிப்பாட்டு உத்திகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டு இந்த உள்ளடக்கத்தை இந்த உருவத்தில் கொடுத்தால்தான் சிறப்பாக இருக்கும் எனத் தேர்ந்து ஹைக்கூ எழுதுகிற கவிஞர்கள் தமிழில் நிறையபேர் இருக்கிறார்கள். மரபுக் கவிதைகளுக்குப் பெயர்பெற்ற புதுச்சேரி ஹைக்கூ கவிதைகளிலும் தனிமுத்திரை பதித்து வருகிறது.

தமிழ் ஹைக்கூக்களின் வரலாற்றுத் தொடக்கம் 16-10-1916 நாளிட்ட சுதேசமித்திரன் இதழில் தொடங்குகிறது. இவ்விதழில்தான் மகாகவி பாரதியார் ஜப்பானியக் கவிதை என்னும் தலைப்பில் சில ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு ஹைக்கூ கவிதைகள் புதுச்சேரியிலிருந்து எழுதப்பட்டவை. அன்று தொடங்கி புதுச்சேரிக்கும் ஹைக்கூவுக்குமான உறவகள் தொடர்கதை.

“துளிப்பாக்களில் (ஹைக்கூ) அழகியலும் சமுதாயமும்” என்ற தலைப்பில் கவிஞர் கு.தேன்மொழி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல் புதுச்சேரி ஹைக்கூக்களைப் பற்றிய முதல் ஆய்வு நூலாகும். இந்நூலாசிரியர் ஹைக்கூ என்பதனைத் துளிப்பா என்றே கையாளுகின்றார். ஜப்பானிய ஹைக்கூ, தமிழில் துளிப்பா ஆகிறது. “இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்கள்” என்ற துளிப்பா நூல்களின் தொகுப்பே இந்த ஆய்வுக்கு அடிப்படை.

புதுச்சேரி ஹைக்கூ கவிஞர்கள் எ.மு.ராசன், புதுவை- தமிழ்நெஞ்சன், புதுவை- சீனு. தமிழ்மணி, செந்தமிழினியன், அரிமதி தென்னகன், இளவேனில், அரிமதி இளம்பரிதி, ஆலா ஆகிய எண்மரின் கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் விளக்கமுறையில் ஆய்வினை நடத்திச் செல்லும் கு.தேன்தொழி நூற்பொருளைப் பின்வரும் நான்கு இயல்களாகப் பகுத்து விளக்கியுள்ளார்.

1. தமிழ்த் துளிப்பாக்கள் தோற்றமும் வளர்ச்சியும்
2. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி துளிப்பாக்களில் வெளிப்படும் அழகியல்
3. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி துளிப்பாக்களில் பதிவுசெய்யப் பெற்றுள்ள அரசியல்
4. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி துளிப்பாக்களில் வெளிப்படும் சமுதாய சிந்தனைகள்

தமிழ்த் துளிப்பாக்கள் தோற்றமும் வளர்ச்சியும் என்ற முதல் இயல் ஜப்பானிய ஹைக்கூ கவிதை வரலாற்றை விளக்கிச் செல்வதோடு தமிழக, புதுவை ஹைக்கூ கவிதைகளுக்கான இலக்கிய வரலாற்றையும் பதிவு செய்கிறது. இரண்டு, மூன்று, நான்காம் இயல்கள் புதுச்சேரித் துளிப்பாக்களில் இடம்பெற்றுள்ள அழகியல், அரசியல், சமுதாயச் சிந்தனைகளைத் திரட்டி ஆய்வுசெய்கின்றன.

தமிழின் முதல் துளிப்பா தொகுப்பு அமுதபாரதியின் புள்ளிப்பூக்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்தது. இம்முதல் துளிப்பா தொகுதி வெளிவந்து இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் கூட ஆகாதநிலையில் துளிப்பா குறித்த ஆய்வுகள் கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவரத் தொடங்கிவிட்டன. இவற்றில் பெரும்பாலான ஆய்வுகள் பல்கலைக் கழக இளமுனைவர் மற்றும் முனைவர்பட்ட ஆய்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு வெளியே துளிப்பா குறித்து வெளிவந்துள்ள நூல்கள் பெரிதும் துளிப்பாவை அறிமுகம் செய்யும் வகையிலேயே அமைந்தன. சான்றாக, 1990 ஆம் முனைவர் தி.லீலாவதி எழுதிய ‘இதுதான் ஹைக்கூ’ என்ற நூலைக் குறிப்பிடலாம்.

கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு இளமுனைவர் பட்ட வகுப்புகளை அஞ்சல் வழியில் தொடங்கி காசு பார்க்கத் தொடங்கியதன் விளைவாகத் தமிழ் ஆய்வுலகத்திற்குச் சில தீமைகளும் சில நன்மைகளும் ஏற்பட்டன. தீமைகளில் முக்கியமானது, ஆய்வு என்ற பெயரில் நீர்த்துப் போன பல ஆய்வேடுகள் மலைபோல் குப்பைகளாகக் குவிந்தன. நன்மைகளில் முக்கியமானது பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் அங்கீகாரம் பெறாமல் தனித்து, தவிக்க விடப்பட்ட பல புதிய வகை இலக்கியங்கள் ஆய்வுப் பொருள்களாயின. ஹைக்கூ இலக்கிய வகை ஆய்வுகள் இவ்வகையில் ஆய்வுலகின் அங்கீகாரம் பெற்று வெற்றிநடை போடுகின்றன. கவிஞர் கு.தேன்மொழியின் இந்த ஆய்வுநூல் ஓர் இளமுனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்தது.

தமிழ் ஹைக்கூ இலக்கியங்களுக்கு தனித்த இலக்கிய வரலாறு இல்லாத குறையை இந்நூலின் முதல் இயல் தீர்த்து வைக்கின்றது. இவ்வியலில் நூலாசிரியர் ஜப்பானிய வாகா, சோகா, செடோகா, கட்டவ்டா, தான்கா, ரெங்கா, ஹொக்கு முதலான இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்வதோடு அதன் தொடர்ச்சியாகத் தமிழில் எவ்வாறு ஹைக்கூ வடிவங்கள் கையாளப்பட்டன என்பதைச் சுருக்கமாக விளக்கிச் செல்கிறார். தமிழில் எழுதப்படும் ஹைக்கூ, சென்ரியு, ஹைபுன், லிமரிக்கூ வடிவங்களுக்கிடையேயான வேறுபாடுகளையும் குறிப்பிடுகின்றார். மேலும் தமிழ்த் துளிப்பாக்களின் வரலாறு, தமிழ்த் துளிப்பாக்களின் ஆராய்ச்சி வரலாறு இரண்டினையும் பட்டியலிட்டு வரும் ஆய்வாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் முதல் இயலை முழுமை செய்கின்றார். இந்நூலில் மிகுந்த பயனளிக்கும் பகுதியாக இம்முதல் இயலை அமைத்த நு}லாசிரியர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.

இரண்டு, மூன்று, நான்காம் இயல்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டும். துளிப்பாக்கள் குறித்து நான் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

“காதலியின் பேச்சு போல் ஹைக்கூ. நம்மிடம் பேசும். காதலி பேசுகிற ஒன்றிரண்டு வார்த்தைகளே ஒருவனுக்குக் காவியமாய் விரிவடையும். சொல்லிய வார்த்தைகளிலிருந்து சொல்லாதவற்றை எல்லாம் கற்பனை செய்துகொள்ளும் பித்துற்ற காதலனைப் போல் நம்மை கணப்பொழுதில் மாற்றிவிடும் ஆற்றல் நல்ல ஹைக்கூ.வுக்கு உண்டு.”

இந்நூலாசிரியர் கு.தேன்மொழி புதுச்சேரி கவிஞர்கள் துளிப்பாக்களில் சொல்லிய, சொல்ல நினைத்த, சொல்லாமல் விட்ட பல உள்ளடக்கங்களை ஆய்வு என்ற நிலையில் விளக்கிக் காட்ட முற்படுகின்றார். துளிப்பா கவிதை வாசிப்பு அனுபவத்திற்கும் ஆய்வுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை இப்பகுதிகளில் நான் உணர்கிறேன். இது குறித்து அதிகம் எழுதுவது ஆய்வுரையாக விரிந்துசென்று நூலை வாசிக்கத் தடையாய் இருந்துவிடக் கூடும். எனவே வாசகர்களுக்கு இடம் விட்டுவிடுவதுதான் அணிந்துரையாளனின் பணி.

நூலின் மொழிநடையைச் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும். பொதுவாக ஆய்வு நூல்கள் என்றாலே செயற்கையான கடுநடையில் அமைந்திருப்பதைத்தான் அதிகம் பார்த்திருக்கின்றோம். விதிவிலக்காக இந்நூல் எளிய இனிய மொழிநடையில் அமைந்திருக்கின்றது. ஆய்வாளர்கள் மட்டுமின்றி கவிதை ஆர்வலர்களும் மாணவர்களும் கூட மயக்கமின்றி இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.

இந்நூலின் பின்னிணைப்புகள் குறித்துத் தனியாகக் குறிப்பிடவேண்டும். முதல் இணைப்பு துளிப்பா கவிஞரும், தமிழின் முதல் துளிப்பா இதழ் கரந்தடியின் ஆசிரியருமான புதுவை சீனு. தமிழ்மணி அவர்களின் மிகப்பயனுள்ள நேர்காணல். இரண்டாம் இணைப்பு, ஆய்வுக்குப் பயன்பட்ட துளிப்பா கவிஞர்கள் எண்மரின் தேர்ந்தெடுத்த சுமார் 300 துளிப்பாக்கள். ஆய்வுநூலை வாசிப்பவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாகக் கவிதைகளை விரும்பி வாசிக்கும் ஆர்வலர்களுக்கும் பயன்படும் விதத்தில் தேர்ந்தெடுத்த 300 துளிப்பாக்கள் இடம்பெற்றுள்ளமை இந்நு}லுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

தமிழ் துளிப்பா நூல்கள் பெருகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் துளிப்பா குறித்த சரியான புரிதல்களோடும் வரலாற்றுணர்வோடும் ஆய்வு நோக்கிலும் எழுதப் பட்டிருக்கும் இந்நூல் உரிய காலத்தில் வெளிவருகின்றது. தமிழுலகம் இதனை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியர் கு.தேன்மொழி தொடர்ந்து பல நல்ல ஆய்வு நூல்களை எழுதி தமிழாய்வை மேம்படுத்த முயலவேண்டும்

முனைவர் நா. இளங்கோ
புதுவை
17-12-2008

அறஇலக்கியச் சமுதாயம் - அணிந்துரை

அறஇலக்கியச் சமுதாயம் - சு.உஷா
அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

சங்க காலத்திற்குப் பின்னரச்; சங்கம் மருவிய காலம் என்று பரவலாக அறியப்படும் காலம் சமணசமயச் செல்வாக்கு மிக்கிருந்த காலமாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரிதும் இந்தக் காலப் பகுதியில் பாடப்பட்டனவே. தொல்காப்பியர் இவ்வகை அறநூல்களை எண்வகை வனப்புகளில் ஒன்றான அம்மை என்பதாக வரையறை செய்கின்றார்.

சின்மென் மொழியால் தாய பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர்பின்றே (தொல்.செய்யுளியல். 235)
இந்நு}ற்பாவிற்கு உரை எழுதும்பொழுது பேராசிரியர் தாய பனுவல் என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என உணர்க என்று விளக்கமளிப்பார். நச்சினார்க்கினியரின் உரை விளக்கமும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அம்மை என்னும் வனப்பமைந்த இலக்கியங்களே என்பதை உறுதி செய்கின்றது. தொல்காப்பியம் மற்றும் உரையாசிரியர்களின் விளக்கங்கள் இவைகளை ஏற்றுப் பிற்கால இலக்கண நூலார்,
அடிநிமிர் பில்லாச் செய்யுட் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வகைத்
திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும் (பன்னிரு பாட்டியல் 542)
என்று இலக்கணம் வகுத்தனர்.

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவைகளைப் பதினெண் மேல்கணக்கு என்றும் நாலடி நான்மணி நானாற்பது.. .. முதலான பதினெட்டு நூல்களைப் பதினெண் கீழ்க்கணக்கு என்றும் குறிப்பிடும் மரபு இலக்கிய வரலாற்றில் உண்டு.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். சங்க கால வாழ்க்கையில் போற்றப்பட்ட விழுமியங்கள் பல கீழ்க்கணக்கு நூல்களில் கண்டிக்கப்படுகின்றன. கால வரிசையில் சங்க இலக்கியங்களுக்கு அடுத்ததாக, சங்கம் மருவிய கால இலக்கியங்கள் என்று அடையாளப் படுத்தப்படும் கீழ்க்கணக்கு நூல்கள் இடம்பெற்றிருந்தாலும் பாடுபொருள், வடிவம், உணர்த்துமுறை, உத்தி என்று பலநிலைகளிலும் அவை மாறுபடுகின்றன. இவ்வகை மாற்றங்கள் இயல்பான மாற்றங்களாகத் தெரியவில்லை. பெரிய அளவிலான சமூக மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இத்தகு சமூக மாற்றம் ஒரு பெரிய அரசியல் மற்றும் அதிகார மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டிருக்க வேண்டும். அரசியல் / இலக்கிய வரலாறுகள் போகிற போக்கில் இருண்ட காலம் என்று வருணித்துவிட்டு நிறைவடைந்துவிடுகின்றன. அவை போதா! முழுமையான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இந்த முழுமையான ஆய்வுகளை நோக்கிய பயணத்தில் ஒரு முன்னோடியாக இந்நு}ல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

II

சிங்கப்பூர் தமிழாசிரியை சு.உஷா எங்கள் புதுவை, தாகூர் கலைக்கல்லூரி மற்றும் புதுவைப் பல்கலைக் கழகங்களில் முதுகலை மற்றும் இளமுனைவர் பாடம் பயின்றவர். கற்றல், ஆய்வு இரண்டிலும் மிகச்சிறந்த ஈடுபாடு கொண்டவர். சிங்கப்பூர் மாணவர்களிடம் மிகச்சிறந்த ஆசிரியை என்ற நற்பெயர் பெற்றுள்ள இந்நூலாசிரியர், படிக்கும் காலங்களில் ஆசிரியப் பெருமக்களால் மிகச் சிறந்த மாணவர் என்ற பாராட்டுதலைப் பெற்றவர். நூலாசிரியர் சு.உஷா அரிதின் முயன்று ஆய்ந்து வெளியிட்டிருக்கும் அறஇலக்கியச் சமுதாயம் என்ற இந்நூல் தமிழாய்வு உலகிற்குத் தக்கதோர் புதிய வரவு. விளக்கவியல் முறையில் நான்மணிக்கடிகை என்ற கீழ்க்கணக்கின் ஓர் அறநூலை விரிவாக அறிமுகம் செய்யும் நோக்கில் அவர் இந்நூலைப் படைத்துள்ளார்.
“நான்மணிக் கடிகை காலச் சமுதாயம் இத்தகையது என்பதையும், சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்த சூழலையும் வெளிக்கொணர வேண்டும் என்ற விருப்பம் இவ்வாய்வினை மேற்கொள்ளக் காரணமாக அமைந்தது.”
என்று இந்நூலை எழுதியதற்கான நோக்கத்தினைத் தெளிவாகப் பதிவுசெய்கின்றார் நு}லாசிரியர் சு.உஷா

அறஇலக்கியச் சமுதாயம் என்ற இந்நூல் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. முதல்பகுதி முன்னுரை, இரண்டாம் பகுதி அற இலக்கியம் காட்டும் சமுதாயம், மூன்றாம் பகுதி தமிழ்- சீனம் அற இலக்கிய ஒப்பீடு என்பன அவை.

முதல்பகுதி, முன்னுரையில் நான்மணிக்கடிகை குறித்த விரிவான ஆய்வு அறிமுகம் இடம்பெறுகின்றது. இதில் நூலாசிரியர் விளம்பிநாகனார் அறிமுகம், அவரின் காலம், சமயம் குறித்த செய்திகளும் நான்மணிக்கடிகை நூலின் சிறப்புகளும் நு}லின் பதிப்பு வரலாறும் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் பகுதி, அற இலக்கியம் காட்டும் சமுதாயம் என்ற இயலில் நான்மணிக் கடிகையில் இடம்பெற்றுள்ள சமுதாயம் குறித்த செய்திகள் விரிவாகப் பேசப்படுகின்றன. குறிப்பாக குடும்பம், சாதிப் பிரிவுகள், தொழில்கள், உணவுமுறை, வழிபாடு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், பொருளாதார நிலை, நட்பு, அறக்கருத்துக்கள், கல்வி, அரசியல் முதலான தலைப்புகளில் நு}லின் நு}ற்று ஆறு பாடல் தரும் செய்திகளும் முறையாக வகைப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இவ்வியலை ஒருமுறை வாசிப்போரும் நான்மணிக் கடிகை நூல் செய்யுட்களை முழுதாக வாசித்த நிறைவை அடைவர்.

மூன்றாம் பகுதி, தமிழ்- சீனம் அற இலக்கிய ஒப்பீடு என்ற இயல் நான்மணிக் கடிகை என்ற தமிழ் அற இலக்கியத்தினைச் சீன அற இலக்கியமான கன்பூசியசின் சிந்தனைகள் என்ற நு}லுடன் ஒப்பிட்டு ஆராயும் போக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வியலில் அறக்கருத்துக்கள், ஓழுக்கம், கீழ்மக்கள், ஆட்சிமுறை, நட்பு முதலான தலைப்புகளில் தமிழ்- சீன அறக்கருத்துக்கள் ஒப்பிடப்படுகின்றன.

தமிழ் ஆய்வாளர்களுக்குச் சங்க இலக்கியங்களின் மீதுள்ள ஈடுபாடும் ஈர்ப்பும் சங்கம் மருவியகால இலக்கியங்கள் மீது இருப்பதில்லை. இப்பொதுப் போக்கிலிருந்து மாறுபட்டு ஆய்வாளர் சு.உஷா அவர்கள் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நானமணிக்கடிகை குறித்த ஆய்வினை நிகழ்த்தியிருப்பதே சிறப்பிற்குரியதாகும். நூலின் மொழிநடை தனித்துக் குறிப்பிடத் தக்கதொன்றாகும். எளிய இனிய மொழிநடையில் இவ்ஆய்வுநூல் அமைந்திருக்கின்றது. ஆய்வாளர்கள் மட்டுமின்றிப் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கூட மயக்கமின்றி இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது. நடையின் இந்த எளிமையும் இனிமையும் இந்நூல் பாடநூலாகப் பரிந்துரைக்கத் தகுதியானது என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றது.

நூலின் பின்னிணைப்பாக நான்மணிக் கடிகை பொருளடைவு, சொற்பொருள் விளக்கம் இரண்டினையும் நூலாசிரியர் இணைத்துள்ளார். நூலில் மிகுபயன் விளைவிக்கும் பகுதியாக இப்பின்னிணைப்பினைக் குறிப்பிடலாம். நான்மணிக் கடிகையின் நு}ற்று ஆறு பாடல்களிலும் இடம்பெற்றுள்ள நூற்பொருளை அதாவது நூலின் உள்ளடக்கங்களை முறைப்படத் திரட்டி அகரவரிசைப் படுத்தித் தந்துள்ள நூலாசிரியரின் உழைப்பை எத்துணைப் பாராட்டினாலும் தகும். இப்பொருளடைவு நான்மணிக் கடிகையைக் கற்க விரும்புவார்க்கும் ஆய்வாளர்களுக்கும் மிகுந்த பயனளிக்கக்கூடியது. அடுத்து இடம்பெற்றுள்ள சொற்பொருள் விளக்கம் நூலாசிரியரின் அகராதியியல் புலமையை அடையாளம் காட்டக்கூடியதாய் அமைந்து சிறக்கின்றது.

சுவடிநூல் பதிப்புக் காலங்களில் உ.வே.சா போன்ற தகுதி வாய்ந்த பதிப்பாசிரியர்களால் பின்பின்பற்றப்பட்ட இவ்வகை அடைவுகள் தயாரித்து நூலின் பின்னிணைப்பாக இணைக்கும் போக்கு அண்மைக் காலங்களில் பெரிதும் வழக்கொழிந்து விட்டது. ஆய்வாளர் சு.உஷா அவர்கள் இத்தகு பழைய மரபினை மீண்டும் நடைமுறைப்படுத்தி நூலினை ஆக்கியுள்ள முறை பெரிதும் பயனிளிக்கக் கூடியது. நூலாசிரியர் சு.உஷா அவர்கள் முதல்முயற்சி இந்நூல். அவர் மேலும் நல்ல ஆக்கங்களைத் தமிழுலகிற்குத் தந்து தமிழுக்குத் தக்க பணியாற்ற வேண்டும் என்பதே என் விழைவு.

முனைவர் நா.இளங்கோ
புதுவை

செவ்வாய், 11 நவம்பர், 2008

பாவேந்தர் பிள்ளைத் தமிழ் - அணிந்துரை முனைவர் நா.இளங்கோ

பாவேந்தர் பிள்ளைத் தமிழ் - மணிமேகலை குப்புசாமி

அணிந்துரை



ஐரோப்பியர் வருகை, ஆங்கிலக் கல்வி, அச்சியந்திர வருகை முதலான காரணங்களால் தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை முதலான உரைநடை இலக்கியங்கள் தமிழில் பல்கிப் பெருகத் தொடங்கின. 19, 20 ஆம் நூற்றாண்டுகளின் புத்திலக்கிய வகைகளின் எழுச்சியும் பெருக்கமும் பழைய மரபிலக்கிய வகைகளை வீழ்த்திவிட்டனவோ? என்று தோன்றும். கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுக்காலம் செல்வாக்கோடு திகழ்ந்த தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் காலம் முடிந்தது என்று ஒரு மாயத்தோற்றத்தை உரைநடை இலக்கியங்களின் பெருக்கம் ஏற்படுத்தினாலும் உண்மை இதற்கு நேர்மாறானது. ஏனைய நூற்றாண்டுகளை விடவும் இருபதாம் நூற்றாண்டில்தான் சிற்றிலக்கியங்கள் அதிக அளவில் பாடப்பட்டன என்பது ஒரு வியக்கத்தக்க உண்மை.

பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் வரை சிற்றிலக்கியப் பாட்டுடைத் தலைவர்கள் பெரிதும் கடவுளர்களாகவோ அரசர்களாகவோ வள்ளல்களாகவோ அமைந்தனர். இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களினால் பாட்டுடைத் தலைவர்கள் பலகிப் பெருகினர். தமிழகத்தில் புதிதாக நுழைந்த ஐரோப்பியக் கிருத்துவப் பாதிரிமார்களும் மதம் மாறிய தமிழ்க் கிருத்துவப் புலவர்களும் தம் மதத்தைப் பரப்பும் நோக்கில் அச்சியந்திரங்களின் துணைகொண்டு பல புதிய கிருத்துவச் சிற்றிலக்கியங்களைப் பாடினார்கள். இதன் உடன் விளைவாக இந்து மதக் கடவுளர்களைப்(?) போற்றும் சிற்றிலக்கியங்கள் பாடப்பட்டன. இஸ்லாமியர்களும் பல மரபான, புதிய சிற்றிலக்கியங்களை உருவாக்கினார்கள். ஆக இருபதாம் நூற்றாண்டில் இந்து, இசுலாம், கிருத்துவச் சிற்றிலக்கியங்கள் பல்கிப் பெருகின.

இவ்வகை சமயஞ்சார்ந்த சிற்றிலக்கியங்களுக்கு இணையாக அல்லது மிகையாக சமயம்சாராச் சிற்றிலக்கியங்களும் இருபதாம் நூற்றாண்டில் மிகுதியும் பாடப்பட்டன. இந்நூற்றாண்டில் தோன்றிய அரசியல் எழுச்சி மற்றும் தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனைகளை ஒட்டி நிறைய பாட்டுடைத் தலைவர்கள் தமிழ்ப் புலவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தார்கள். 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அரசியல் சார்ந்த சிற்றிலக்கியங்களுக்குத் தேசிய இயக்கம் மற்றும் திராவிட இயக்கங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. இவ்வகையில் நு}ற்றுக்கணக்கான சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. சான்றாக, காந்தி பிள்ளைத் தமிழ், காமராசர் உலா, நவபாரதக் குறவஞ்சி.. (தேசிய இயக்கம் சார்ந்தவை), கலைஞர் காவடிச் சிந்து, எம்.ஜி.ஆர். உலா, புரட்சித் தலைவி அம்மானை.. (திராவிட இயக்கம் சார்ந்தவை) முதலானவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழ் மறுமலர்ச்சி சார்ந்த சிற்றிலக்கியங்கள் பெரிதும் தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு மிகுந்த எண்ணிக்கையில் பாடப்பட்டுள்ளன. சான்றாக, பாரதி பிள்ளைத் தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ், கம்பன் திருப்புகழ் முதலானவைகளைக் குறிப்பிடலாம். பாவேந்தர் பிள்ளைத்தமிழ் என்ற பெயரிலேயே புலவர் புலமைப்பித்தன் ஒரு சிற்றிலக்கியம் படைத்துள்ளார்.

பகுதி-2

“பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” கவிஞர் மணிமேகலை குப்புசாமியின் ஐந்தாவது நூலாக வெளிவருகின்றது. கவிஞரின் சிட்டுக்குருவியின் சின்னக்கவலை என்ற முதல் நூலும் அழகியல் என்ற இரண்டாம் நூலும் உரைவீச்சால் அமைந்த கவிதைத் தொகுப்பு நூல்கள், தோப்பு என்ற மூன்றாம் நூலும் அன்னவயல் என்ற நான்காம் நு}லும் மரபுக் கவிதைகளால் ஆன தொகுப்பு நூல்கள். முந்தைய நான்கு நூல்களும் கவிதைத் தொகுப்பு நூல்களாயிருக்க இந்நூல் ஒரு சிற்றிலக்கிய நூலாக வெளிவருவது இதன் தனிச்சிறப்பு. அதிலும் பாவேந்தரின் பெயர்த்தி பாட்டன் பாவேந்தனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடுவது அழகான முரண். பாவேந்தரின் மடியில் தவழ்ந்து விளையாடிய பெயர்த்தி தன் 52ஆம் அகவையில் பாவேந்தரைக் குழந்தையாக்கி தன் மடியிலிட்டுத் தாலாட்டும் கவிதைச் சித்து விளையாட்டை நிகழ்த்தியிருக்கிறார்.

சிற்றிலக்கியங்களிலேயே பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுக்கு என்று ஒரு தனித்த மரபு உண்டு. கடவுளரையோ, மன்னர்களையோ, புலவர்களையோ, வள்ளல்களையோ நாம் வணங்கிப் பாராட்டத்தக்க ஒருவரைக் கற்பனையில் குழந்தையாகப் பாவித்து காப்பு முதலிய பத்து பருவங்கள் அமைத்துப்பாடி மகிழ்வது பிள்ளைத் தமிழ் இலக்கியமாகும். பாடல் யாப்பு ஆசிரிய விருத்தத்தில் அமைதல் மரபு.

சாற்றரிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை – போற்றரிய
அம்புலியே ஆய்ந்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து.
(வெண்பாப் பாட்டியல்-8)

இவ்வாறு பாடும் மரபு தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே உண்டென்பதைத் தொல்காப்பியர்,
குழுவி மருங்கினும் கிழவதாகும் (தொல். புறத். 24)

என்று பதிவு செய்திருப்பதிலிருந்து ஓர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனும் தம் அன்பை முற்ற முழுதாகக் கொட்டிக் காண்பிக்க வாய்ந்த இடம் குழந்தைகளைக் கொஞ்சும் இடமல்லவா? அதனால்தானே திருவள்ளுவரும், “மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (குறள்: 65) என்றும், “அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்” (குறள்: 64) என்றும் குழந்தைமை இன்பத்தைச் சிறப்பித்துப் பாடினார். பாண்டியன் அறிவுடை நம்பியும்,

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே
(புறம்-188)

என்று மயக்குறு குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்து அன்பு மயமாகி நிற்றலின் பெருமையை மிகுத்துப் பேசுகின்றார். ஆக, அன்புணர்ச்சி, அழகுணர்ச்சிகளோடு கவித்துவமும் களிநடம் புரியும் சிற்றிலக்கியம் பிள்ளைத் தமிழே என்றால் அது மிகையன்று. எனவேதான் கவிஞர்கள் பாட்டுடைத் தலைவர்களை நாயக நாயகி பாவத்தில் வைத்துப் பாடும் அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கியங்களைப் பாடுவதைக் காட்டிலும் பாட்டுடைத் தலைவர்களைக் குழந்தைகளாக்கி மகிழ்ந்து பாடும் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களை பெரிதும் விரும்புகின்றனர். இருபதாம் நு}ற்றாண்டுச் சிற்றிலக்கியங்களில் மிகுந்த எண்ணிக்கையில் பாடப்பட்ட இலக்கிய வகைகளில் பிள்ளைத் தமிழும் ஒன்று.

பகுதி-3

மணிமேகலை குப்புசாமியின் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் மரபு வழிவந்த ஒரு சிற்றிலக்கிய வகை என்றாலும் கவிஞர் மரபைப் போற்ற வேண்டிய இடங்களில் போற்றியும் புதுமையைப் புகுத்த வேண்டிய இடங்களில் புகுத்தியும் தனித்தன்மையோடு இந்நு}லைப் படைத்துள்ளார். பருவத்திற்குப் பத்துப்பாடல்கள் என்று மரபான ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் இடம்பெற வேண்டிய காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் முதலான பத்துப்பருவங்களை அமைத்து நூறு பாடல்களில் தம் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் நூலைப் படைத்துள்ளார் கவிஞர். இது அவர் மரபைப் பேணுதலுக்குச் சான்று. காப்புப் பருவத்தில் திருமால் முதலான தெய்வங்கள் பாட்டுடைத் தலைவனைக் காத்தல் வேண்டும் என்ற மரபை ஒதுக்கிவிட்டு காவிரி, மரங்கள், கதிரவன், மழை, காற்று, தமிழ்மொழி, முன்னோர், தாய்மை, தாய்ப்பால், தமிழரினம் முதலானவை பாட்டுடைத் தலைவனாம் பாவேந்தனைக் காக்க வேண்டும் என்று கவிஞர் மணிமேகலை குப்புசாமி தம் பிள்ளைத்தமிழ் நூலை அமைத்தமை அவரின் புதுமை நாட்டத்திற்கு ஒரு சான்று.
மண்ணில் விதைத்துப் பயிர்செய்யும்
மாந்தர்க் குயிராய் இருப்பவளே
மாந்த நேயம் தழைத்திருக்கும்
மங்காப் புகழைக் கொண்டவளே
எண்ணில் வளமும் ஈந்தவளே
இனிய நீரைக் கொண்டவளே
இடராய் ஞெகிழிப் புகைபரவி
எங்கும் நோய்கள் பெருகிடுதே
விண்ணில் முகிலும் அமிலம்பார்
விடமாய் மாற்றுஞ் செயற்கையிலும்
விளங்கும் நிலத்தின் மூலிகையின்
வேர்கள் தழுவி வருபவளே
கண்ணில் மணியெம் பாவேந்தைக்
கல்வி வீரம் பிறநலனும்
கருத்தில் கொடுத்துப் பிணிவிலக்கிக்
காப்பாய் அருமைக் காவிரியே
(பாடல்: 1)

இப்பாடல் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் காப்புப் பருவத்தின் முதல்பாடல். காவிரியே! எம் பாவேந்தைக் காப்பாயாக! என்ற பொருளில் அமைந்த பாடல். கவிஞர் மணிமேகலை இயல்பாகவே ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். அவரின் முதல் தொகுதி சிட்டுக் குருவியின் சின்னக் கவலை என்ற நூல் ஒரு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நூல் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் காப்புப் பருவத்தில் காவிரி, மரங்கள், கதிரவன், மழை, காற்று முதலான இயற்கைப் பொருள்கள் பாவேந்தரைக் காக்க வேண்டும் என்று பாடுகின்றார். அதே நேரத்தில் இயற்கையின் மாண்பையும் செயற்கைகளால் இயற்கைச் சீரழியும் அவல நிலைகளையும் கவிஞர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருள்களை எரிப்பதனால் எங்கும் நோய்கள் பெருகுவதையும் வளிமண்டலம் அமிலமயமாகி இருப்பதையும் செயற்கைகள் விடமாகிப் போகும் நிலைமையையும் சுட்டிக்காட்டி இத்தகு இக்கட்டான சூழ்நிலையிலும் காவிரி நதி இயற்கையைக் காப்பாற்றும் அருஞ்செயல் புரிவதனை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றார் கவிஞர் மணிமேகலை. மரங்கள், கதிரவன், மழை, காற்று முதலான தலைப்புகளிலும் இவ்வாறே இயற்கையின் மேன்மைகளைச் சுட்டிக்காட்டும் கவிஞரின் பணி புவி சூடேற்றம் பற்றிக் கவலையடைந்து வரும் இந்தத் தருணத்தில் தக்ககொரு மருந்தாய்ப் பயன்படுகின்றது. தாய்மை, தாய்ப்பால் இரண்டும் பாட்டுடைத் தலைவனைக் காக்க வேண்டும் என்று பாடுமிடத்தில் தான் ஒரு பெண்கவிஞர் என்ற முத்திரையைப் பதிக்கின்றார். தாய்ப்பாலின் பெருமை பேசும் பாடல் அனைவரும் கற்பதற்கு உகந்தது.

பாவேந்தர் பிள்ளைத்தமிழின் மற்றுமொரு தனிச்சிறப்பு நூலில் ஆங்காங்கே தக்க இடங்களில் கவிஞர் பெய்துள்ள பாவேந்தர் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள். நு}லில் இடம்பெற்றுள்ள பாவேந்தர் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப் பாடல் வரிசைகளோடு பின்இணைப்பில் இணைத்துள்ள நூலாசிரியரின் பணி பாராட்டுதற்குரியது. வரலாற்றுணர்ச்சியோடு; படைத்த கவிஞரின் இப்படைப்பாக்க உத்தி, பிற பிள்ளைத்தமிழ் நூல்களின் அடிப்படைப் பண்பாய்த் திகழும் வருணனை, கற்பனை முதலான அணிநலன்கள் இந்நூலில் மிகுதியும் இடம்பெறாத குறையைக்கூட மறக்கச் செய்துவிடுகிறது.
மக்கள் நன்மை முன்னிருத்தி
மக்கள் தலைவர் சுப்பையா
மங்கா மக்கள் முன்னணியால்
மாநிலத் தேர்தல் எதிர்கொண்டார்
சிக்கல் இன்றி மக்களுமே
சீரார் காசுக் கடைதொகுதி
சிதறா வாக்கால் உன்றனையே
தேர்ந்த தலைவன் என்றிட்டார்
விக்கும் நிலையில் ஒருமனிதன்
வேறு கட்சி தாவியதால்
வென்ற நீங்கள் எதிர்க்கட்சி!
விரும்பும் தலைவர் சுப்பையா
பக்கம் அமர்ந்த துணைத்தலைவா!
பதவிச் சிறுதேர் உருட்டுகவே!
பழகு தோழன் பாவேந்தே
பண்பின் சிறுதேர் உருட்டுகவே!
(பாடல்: 94)

புதுச்சேரியில் 1955 இல் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் மக்கள் முன்னணி என்ற அணியை உருவாக்கி அத்தேர்தலைச் சந்தித்தார் மக்கள் தலைவர் வ.சுப்பையா. மக்கள் முன்னணி சார்பில் காசுக்கடைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் பாவேந்தர். மக்கள் முன்னணி இருபது இடங்களில் வெற்றிபெற்றது. எதிர்அணியினர் பத்தொன்பது இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சியமைக்கும் நேரத்தில் மக்கள் முன்னணியின் கறுப்பாடு ஒன்று எதிரணிக்குத் தாவியது. எனவே சுப்பையாவின் மக்கள் முன்னணி எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டியதாயிற்று. சுப்பையா எதிர்க்கட்சித் தலைவராகவும் பாவேந்தர் எதிர்க்கடசித் துணைத்தலைவராகவும் அந்த சட்டசபையில் பொறுப்பேற்றனர். பாவேந்தரின் இலக்கிய ஆளுமைகளை அறிந்தவர்கள் கூட அதிகம் அறிந்திராத பாவேந்தரின் நேரடித் தேர்தல் அரசியல் வரலாற்றையும் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களோடு பாவேந்தருக்கு இருந்த நெருக்கத்தையும் கவிஞர் மணிமேகலை இப்பாடலில் பதிவுசெய்துள்ளார். பாவேந்தர் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த அதே அவையில்தான் மக்கள் தலைவர் வழிகாட்டுதலில் பாரதி பெயரால் புதுவைக்கு ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பாவேந்தர் பேசினார். அவை இத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது என்ற வரலாற்றையும் மற்றொரு பிள்ளைத்தமிழ் பாடலில் (பாடல் எண்;. 88) குறிப்பிடுகின்றார் நூலாசிரியர்.

பாவேந்தர் பிள்ளைத்தமிழ் கவிஞர் மணிமேகலை குப்புசாமியின் முதல் சிற்றிலக்கிய முயற்சி. சிற்றிலக்கிய வகைகளில் எத்தனையோ எளிமையான இலக்கியங்கள் இருக்க பிள்ளைத்தமிழ் வடிவத்தைத் தேர்ந்தெடுத்தது அவரின் துணிவைக் காட்டுகிறது. கவிஞர் அரிதின் முயன்று தம்பணியை நிறைவாகவே செய்துள்ளார். பாவேந்தர் வழிவந்த கவிமரபு அவருக்குத் துணைசெய்திருக்கின்றது.

பிள்ளைத்தமிழுக்கு அம்புலி-புலி என்பார்கள். அம்புலிப்பருவம் பாடுவது அத்துணை கடினமானது என்பது அதன்பொருள். இரவில் வானில் தோன்றும் அம்புலியைப் பாட்டுடைத் தலைவனாகிய குழந்தையுடன் விளையாட வருமாறு கவிஞராகிய தாய் அழைப்பாள். அவ்வாறு அழைக்கும்போது இன்சொல், வேறுபாடு, கொடை, ஒறுப்பு (சாம, பேத, தான, தண்டம்) முதலான நிலைகளில் பாட்டுடைத் தலைவனோடு நிலவை ஒப்பிட்டுப் பாடவேண்டும். சிக்கலான இந்தப் பிள்ளைத்தமிழ் மரபை இந்நூலில் மிகச் சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார் கவிஞர் மணிமேகலை.
அலைகடல் உடலுறு புயலினை
அகழ்ந்திடும் தனிவலி உடையோனே!
அணிமயில் உடலுறு தனிஎழில்
அமர்ந்திடும் தனிநடை திருவாழ்வே!
கலைதவழ் ஒளிதரு முகஎழில்
களிறுறு தனிக்குலம் உடையோனே!
கனியுறு உயிரொளி தமிழெனுங்
களிதவழ் உணர்வுறு தருவேநீ!
(பாடல்: 31)

மேலே சான்று காட்டப்பட்டுள்ள பாடலைப் போன்று பிள்ளைத்தமிழின் பல பாடல்கள் நல்ல சந்த நயத்தோடு வடித்தெடுக்கப்பட்டுள்ளன. யாப்பு நூல் தேர்ச்சியும் தக்க சொற்களஞ்சியமும் கொண்டு கவிதைகளை யாத்துள்ள கவிஞர் மணிமேகலையின் புலமை பாராட்டுதற்குரியது. பாவேந்தர் வரலாறு, பாவேந்தர் நூல் பெயர்கள், நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள், நூலின் மிகச்சிறந்த கவிதை வரிகள் எனப் பிள்ளைத்தமிழின் ஒவ்வொரு பாடலிலும் ஒல்லும் வகையிலெல்லாம் பாவேந்தரைப் பதிவு செய்யும் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் தமிழுக்குப் புதிய வரவு, புதுமையான வரவு. தமிழுலகம் இந்நூலை ஏற்றுப் போற்றிப் பாராட்ட வேண்டும். கவிஞர் மணிமேகலை குப்புசாமி தொடர்ந்து நல்ல பல இலக்கியங்களைத் தமிழுலகிற்குத் தந்து தமிழ்ப்பணி ஆற்றவேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.


பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

மலையருவி

நண்பர்கள் உறவினர்
அறிமுக நபர்கள்
கூட்டமாய் கும்பலாய்
குழுமிக் கிடந்தனர்

சென்ட் நெடி
வாடத்தொடுங்கிய
பூக்களின் வாசம்
வியர்வை நாற்றம்
எல்லாம் கலந்த ஏதோ
மூக்கை முட்டி
முண்டியடித்தது

நட்புமின்றி பகையுமின்றி
நளினம் கலந்த
முகவிசாரிப்புகள்

பரிசுப் பொட்டலம்
பணக்கவர் ஏந்திய
ஒப்பனை கலந்த
பகட்டு முகங்கள்

பந்தியில் அமர்ந்து
வீசிய உணவை
சீய்த்துக் களைத்து
பசித்த வயிறோடு
விருந்தும் உபசரிப்பும்

மெல்லிசை என்னும் பேரால்
வல்லிசை நரசிம்மத்தால்
கிழிக்கப்பட்ட காதுகளோடு!
திருமண வரவேற்பு

வாழ்க மணமக்கள்!

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

கல்! நில்! வெல்!- புத்தக மதிப்புரை

கல்! நில்! வெல்!

உவப்புரை

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

பாவலர் கு.அ.தமிழ்மொழி புதுவையின் இளைய பாவலர். கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வருபவர். அதாவது அவரின் பத்து வயதில் எழுதத் தொடங்கியவர். பதினைந்தாம் அகவையைத் தொடும் பாவலர் தமிழ்மொழியின் படைப்புகள் வெளிவந்துள்ள இதழ்கள் இருபத்தைந்துக்கும் மேல். இவரின் கவிதைகள் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்புகள் இருபதுக்கும் மேல். பெற்றுள்ள விருதுகள் பத்துக்கும் மேல். இத்துணைச் சிறப்புகளுக்கும் உரிய பாவலர் கு.அ. தமிழ்மொழியின் முதல் கவிதைத் தொகுதி ‘சிறகின் கீழ் வானத்தை’ அடுத்து அவர் வெளியிடவிருக்கும் இரண்டாவது கவிதைத் தொகுதிதான் இந்த, “கல்! நில்! வெல்!”.
ஒரு பாவலர் தம் சிறார் பருவத்திலேயே இத்தகு ஆளுமைகளைப் பெற்றிருப்பது உண்மையிலேயே வியந்து பாராட்டுதற்குரியது. சக சிறார்களோடு ஒப்பிடுகையில் பாவலர் தமிழ்மொழி தனித்தன்மை வாய்ந்தவர். சுயமரியாதைக்காரர், தமிழ்த் தேசியப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர் முதலான பன்முகப் பரிமாணங்களும் பாவலர் தமிழ்மொழிக்கு உண்டு. தமிழ்மொழி நல்ல ஓவியரும் கூட. புதுவைக்குப் பெருமை சேர்க்கும் இவர் 2006 ஆம் ஆண்டிற்கான நடுவண் அரசின் தேசியக் குழந்தைகள் விருதினைப் பெற்றிருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

பாவலர் தமிழ்மொழியின் முதல் தொகுதி சிறகின் கீழ் வானம் (2005) வெளிவந்தபோதே தமிழ் அறிஞர்கள் பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதோடு கவிஞாயிறு தாராபாரதி ஐக்கூ விருது (2005), திருமதி சுந்தராம்பாள் இலக்கிய விருது (2004-05) ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றுச் சாதனை புரிந்தது. 2008 இல் பாவலர் தமிழ்மொழி வெளியிட்டிருக்கும் கல்! நில்! வெல்! என்ற இந்த நூலும் பல்வேறு பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவது திண்ணம்.
II
கல்! நில்! வெல்! என்ற இந்த நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் சிந்தடி நான்காய் அமைந்த வஞ்சித் விருத்தம் (சிந்தடி நான்காய் வருவன வஞ்சி / யெஞ்சா விருத்தம் என்மனார் புலவர் -யாப்பருங்கலம்) யாப்பை ஒத்து அமைந்துள்ளமையும் அடிதோறும் இயைபுத் தொடை அமைய பாடப்பட்டிருப்பதும் ஒரு புதுமை எனலாம். இதோ ஒரு சான்று,

கசடற எதையும் கல்
கற்ற வழியில் நில்
அறிவுப் பாதையில் செல்
எதையும் அறிவால் வெல்.


சிறார் பாடல்கள் என்ற இலக்கிய வகையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறார்களுக்காகப் பாடப்படும் பாடல்கள் அவை. பாவலர் தமிழ்மொழியின் சிறார் பாடல்கள் ஒரு புத்திலக்கியம். ஏனென்றால் பாடல்களை எழுதியவரும் சிறாரே. பாடலுக்கான வாசகர்களும் சிறார்களே.
நாட்டுப்புறப் பாடல் வகைகளில் சிறார் பாடல்கள் என்று ஒருவகை உண்டு. நாட்டுப்புறச் சிறுவர்கள் தம் ஆயத்தோடு விளையாடும் காலங்களில் இவ்வகைப் பாடல்களைப் பாடுவர். நாட்டுப்புறச் சிறுவர் பாடல்களில் விளையாட்டுப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், கேலிப் பாடல்கள், சொற்பயிற்சிப் பாடல்கள், எழுத்துப் பயிற்சிப் பாடல்கள் முதலான பல்வகைப் பாடல்களும் இடம்பெறும்.

உனக்கும் எனக்கும் போட்டி
கதை சொல்லடி பாட்டி
தமுக்கு அடிப்பவன் தோட்டி
கையிலே பிடிப்பது ஈட்டி
(நாட்டுப்புறச் சிறுவர் பாடல்)

அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு போறா சோக்கா
எழுந்து போடா மூக்கா
(நாட்டுப்புறச் சிறுவர் பாடல்)

மேலே சான்று காட்டப்பட்டுள்ள நாட்டுப்புறச் சிறுவர் பாடல் மரபை அடியொற்றி இயைபுத் தொடையமைந்த முச்சீரடிகள் நான்கு கொண்ட பாடல் வடிவத்தைப் பாவலர் தமிழ்மொழி கையாண்டிருப்பது தமிழ்க்கவிதை உலகில் ஒரு புதுமையான பாராட்டத்தக்க முயற்சியே.

பாவலர் தமிழ்மொழி தமிழ்வழிக் கல்வி கற்று வருபவர். அதனால் தாய்மொழியிலேயே சிந்திக்கவும் எழுதவுமான வாய்ப்பு அவருக்கு முழுமையாகக் கிடைத்துள்ளது. தாய்மொழி வழியாக அல்லாமல் ஆதிக்க மொழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இத்தகு வாய்ப்புகள் அமைவதில்லை. உயர்நிலைக் கல்வியைக்கூட இன்னும் முடிக்காத அவருக்கு இருக்கும் தமிழ்மொழியின் சொல்வளம் வியக்கத்தக்கதாய் உள்ளது. தமிழில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட இத்தகு சொல்வளம் பெற்றிருப்பார்களா? என்பது அய்யமே. தமிழ்மொழியில் இடம்பெறும் சொற்களில் சற்றேறக்குறைய ஒன்றுபோல் ஒலிக்கக்கூடிய ண – ன, ல – ள, ர – ற வேறுபாடுடைய சொற்களைத் தேர்ந்தெடுத்து அதன் பொருள் விளக்கமுறுமாறு இயைபுத் தொடையமைய எளிய இனிய நடையில் கவிதை யாத்துள்ள பாவலர் தமிழ்மொழியின் முயற்சி பலபடப் பாராட்டத்தக்கது. நூலின் இறுதியில் கவிதைகளில் பயின்றுவந்துள்ள சொற்களின் ‘சொற்பொருள் அகரவரிசை’யை இணைத்துள்ளமை மிகுந்த பயனளிக்கக்கூடியது.

ஒருவகைப் புல்லே தினை
ஒழுக்கம் இடம்பொருள் திணை

கரும்பின் கட்டி வெல்லம்
நீரின் பெருக்கு வெள்ளம்

கடலின் பெயரோ பரவை
பறக்கும் உயிர்கள் பறவை


தமிழில் பிழையின்றி எழுத விரும்பும் மாணவர்கள் கட்டாயம் இந்தக் கவிதை நு}லை வாசித்துப் பயிற்சி செய்துகொள்வது நல்லது.

கடலில் தோன்றும் அலை
சிலந்தி பின்னும் வலை
ஓவியம் என்பது கலை
சிற்பி வடிப்பது சிலை


கவிதை விளையாட்டு போல் இயைபுத் தொடை அமைய நல்ல ஓசை நயத்தோடு படைக்கப்பட்டிருக்கும் பாவலர் தமிழ்மொழி இவ்வகைக் கவிதைகள் மொழித்திறன் வளர்க்கும் கருவியாக அமைந்திருப்பது “கல்! நில்! வெல்!” என்ற இத்தொகுதிக்குக் கூடுதல் பயனையும் மதிப்பையும் அளிக்கின்றன.

எதையும் செய்வாய் ஆய்வு
உடலுக்குத் தேவை ஓய்வு
பைசா கோபுரம் சாய்வு
வேலையில் வேண்டும் தோய்வு


“எதையும் செய்வாய் ஆய்வு” என்றும் “வேலையில் வேண்டும் தோய்வு” என்றும் சிறார்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் நல்ல பல செய்திகளையும் தம் கவிதைத் தொகுதி வழி வழங்கியிருக்கும் பாவலர் கு.அ.தமிழ்மொழி மேலும் பல நல்ல படைப்பாக்கங்களைத் தமிழுக்குத் தந்து சிறப்புற வேண்டும். அதற்கான அடையாளங்கள் அவர் படைப்பில் மிளிர்கின்றன.
வாழ்க! வளர்க!!
15-8-2008 நா.இளங்கோ

பொறியின்மை யார்க்கும் பழியன்று -திருக்குறள் பேச்சுப் போட்டி

திருக்குறள் பேச்சுப் போட்டி


தலைப்பு: பொறியின்மை யார்க்கும் பழியன்று

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.


அவையோர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்! இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு “பொறியின்மை யார்க்கும் பழியன்று” என்பதாகும். இச்சொற்றொடர் திருக்குறள் பொருட்பாலில் ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்தில் இடம்பெறும் அரிய குறளின் ஓர் பகுதியாகும். திருக்குறளின் பெருமையினை நான் சொல்லித்தான் இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.

எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்

என்று மதுரைத் தமிழ்நாகனாராலும்,

உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு

என்று மாங்குடி மருதனாராலும் போற்றிப் புகழப்படும் மாண்புடைய நூல் திருக்குறளாகும். எக்காலத்தும் உலகப் பொதுமறை என்று உலக மக்களால் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நூல் திருக்குறளாகும்.
இச்சொற்றொடர் அமைந்த அந்த அரிய திருக்குறளை முழுதுமாக உங்களுக்கு நான் சொல்லிக்காட்ட விரும்புகின்றேன்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


இத்திருக்குறளின் சுருங்கிய பொருளாவது, ‘புத்திகூர்மை இல்லாதிருப்பது யார்க்கும் குற்றமன்று. ஆனால் புத்திகூர்மை இருந்தும் அறிய வேண்டியதை அறிந்தும் முயற்சி இல்லாதிருப்பது குற்றமாகும்’ என்பதே. அதாவது ஆள்வினையுடைமை என்ற அதிகாரமே முயற்சியின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதுதான். “முயற்சி திருவினையாக்கும்”, “தெய்வத்தான் ஆகாதுஎனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்றெல்லாம் முயற்சியை வலியுறுத்தும் திருவள்ளுவர் இந்தக்குறளில் முயற்சி இன்மை என்பது பழிக்குரிய செயல் என்பதோடு நிறுத்தாமல், வேறு ஒரு புதிய செய்தி ஒன்றையும் பதிவு செய்கின்றார். அதுதான் பொறியின்மை யார்க்கும் பழியன்று என்பதாகும். நான் மேலே சொன்ன விளக்கம் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் சொன்ன விளக்கமாகும்.

அதாவது பொறியின்மை என்றால் அறிவின்மை, பொறி என்பதற்கு அறிவு என்று அவர் பொருள் கொள்ளுகிறார்.
“நூலில் பரித்தஉரை யெல்லாம் பரிமேலழகன் தெரித்த உரையாமோ தெளி” என்ற என்ற புகழ்மொழியால் திருக்குறள் உரைகளிலேயே தலைசிறந்த உரை என்று போற்றப்படும் பரிமேலழகர் உரையில் பொறியின்மை என்பதற்குச் சொல்லப்படும் விளக்கத்தையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொறியின்மை என்றால் பயனைத் தருவதாய விதியில்லாமை. அதாவது பரிமேலழகரைப் பொறுத்தமட்டில் இக்குறளில் வரும் பொறி என்ற சொல்லுக்கு பயனைத் தருவதாய விதி, ஆகூழ் என்பதே பொருளாகும். ஆக இந்தக் குறளின் உண்மைப் பொருளை நாம் விளங்கிக் கொள்ள நமக்குத் தடையாக இருக்கும் சொல் பொறி என்பதாகும்.

பொறி என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் என்னவென்று பார்ப்போம். தமிழின் மிகப்புகழ்பெற்ற நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி தரும் விளக்கம் பொறி: அடையாளம், அறிவு, இயந்திரம், செல்வம், தீப்பொறி, புலப்பொறி, புள்ளி முதலானவைகளாகும்.

பொறி என்ற சொல்லுக்கு நிறைய பொருள் விளக்கங்கள் இருப்பதால் திருக்குறள் உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர்கள் கருத்துக்கு ஏற்ப விளக்கம் கூறுகின்றார்கள். இதில் தவறொன்றும் இல்லை. ஆனால் எக்காலத்துக்கும் எவ்விடத்தவர்க்கும் எச்சூழலுக்கும் பொருந்தும் விளக்கம் தந்து திருக்குறளை விளங்கிக் கொள்வதுதான் சரியான தாயிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரைகாரர்கள் பத்து பேரில் பரிதியார் என்று ஒரு உரையாசிரியர் இருந்தார். அவர் இந்தத் திருக்குறளில் இடம்பெறும் பொறியின்மை என்பதற்கு தரும் விளக்கம் மிகப்பொருத்தமாய் இருப்பது வியப்பிற்குரியது. பொறி என்ற சொல்லுக்குப் பரிதியார் புலன் என்று பொருள் கொள்ளுகிறார். திருவள்ளுவரே வேறு இடங்களில் பொறி என்ற சொல்லைப் புலன்கள் என்ற பொருளில் கையாளுகின்றார். பொறிவாயில் ஐந்தவித்தான் (குறள்:6) கோளில் பொறியில் குணமிலவே (குறள்:9) இந்த இரண்டு திருக்குறள்களிலும் பொறி என்ற சொல் ஐம்பொறிகள் என்ற பொருளிலேயே திருவள்ளுவரால் வழங்கப்படுகின்றன. ஆக பொறியின்மை யார்க்கும் பழியன்று என்றால் ஐம்புலன்களில் அதாவது கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய புலன்களில் ஏற்படும் குறை ஒருவருக்கு குற்றமாகாது என்பதாகும்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


மேலே சொல்லப்பட்ட அந்த முழுக்குறளுக்குமான பொருத்தமான பொருள் எது? என்றால் “உறுப்புக் குறைபாடு ஒருவருக்கு குற்றமாகாது முயற்சி இல்லாமையே குற்றமாகும்” என்பதாகும்.

இன்றைய சூழலில் இத்திருக்குறள் எவ்வளவு பொருத்தமானதாய் இருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஊனமுற்றோர் நலம் குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்துக்கு ஏற்ற சிந்தனையைத் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றுள்ள திறத்தைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்கமுடியாது. பிறப்பிலேயோ அல்லது விபத்து முதலான செயற்கையிலேயோ ஒருவருக்கு ஊனம் அமைந்து விடுவதென்பது ஒரு பெரிய பழியன்று. முயற்சி இல்லாமல் இருப்பதுதான் பழி என்று சொல்லும் இக்குறள் ஊனமுற்றவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஊட்டக்கூடியதாயிருப்பது வெளிப்படை. பொருத்தம் நோக்கி ஒரு திரைப்படப் பாடலை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகின்றேன்.

ஊனம் ஊனம் ஊனமிங்கே ஊனம் யாருங்கோ
உடம்பிலுள்ள குறைகளெல்லாம் ஊனமில்லிங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்ல
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே


முன்னே நாம் குறிப்பிட்ட திருக்குறளுக்கு முழுதுமாக ஒத்துப் போகக்கூடிய இத்திரைப்படப் பாடலுக்கு ஆதாரமே ‘பொறியின்மை யார்க்கும் பழியன்று’ என்ற திருக்குறள்தான்.

ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு மாற்றாக அண்மைக் காலமாக ஒரு புதிய சொல் வழங்கி வருகின்றது. அது என்ன சொல் தெரியுமா? “மாற்றுத் திறனுடையோர்” என்பதுதான் அந்தச் சொல். மாற்றுத் திறனுடையோர் என்ற இப்புதிய சொல்லின் பொருளைக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். ஒரு புலன் செயலற்ற நிலையிலும் மற்றவர்கள் போல் வாழ, வாழ்ந்து காட்ட, வாழ்ந்து சாதித்துக் காட்ட அவர்களுக்குச் செயலற்ற புலன்களுக்கு மாற்றாகப் பிற புலன்கள் மிகுந்த திறனுடையதாயிருக்கும். இன்னும் இதனை எளிமையாக ஒரு சான்று வழியாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். பார்வைப் புலன் இழந்த ஒருவருக்கு கேட்கும் புலனும் நுகரும் புலனும், தொடு புலனும் மிகவும் கூர்மையானதாயிருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். அவர்கள் மாற்றுத் திறன் உடையோர்கள் தானே!

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


என்ற திருக்குறளும் இதே செய்தியைத்தான் குறிப்பிடுகின்றது.
பொறியின்மை யார்க்கும் பழியன்று: ஒரு புலனில் ஏற்பட்டுள்ள குறையினால் ஒன்றும் குற்றமில்லை.

அறிவறிந்து: ஒரு புலனில் ஏற்பட்ட குறையை சமன் செய்ய இயற்கை பிற புலன்களுக்குக் கூடுதல் திறனைத் தந்துள்ளது, எனவே அத்தகைய கூடுதல் அறிவால் அறிய வேண்டியதை அறிந்தும்

ஆள்வினை இன்மை பழி: முயற்சி செய்யாமல் இருப்பது குற்றம்.

நடைமுறை வாழ்க்கையில் நாம் எத்தனையோ மாற்றுத் திறனுடைய (ஊனமுற்ற) மனிதர்களைச் சந்திக்கின்றோம். அவர்களில் பலர் பொறியின்மையை ஒரு குறையாகக் கருதாமல் அறிவறிந்து முயற்சியால் நாளும் சாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். சான்றுகள் பல உண்டு என்றாலும் காலத்தின் அருமை கருதி ஒருவரைக் குறிப்பிடுகின்றேன். சுதாசந்திரன், ஒரு விபத்தில் காலை இழந்தவர். சாதிக்க வேண்டும் என்ற மனத்திட்பத்தோடு தொடர்ந்த முயற்சியின் விளைவாக செயற்கைக் கால்களோடு நடனம் ஆடினார். மயூரி என்ற திரைப்படத்தில் ஒரு நாட்டியப் பேரொளியாகத் தோன்றி தன் மிகச்சிறந்த நடனத் திறமையால் அன்று முழு இந்தியாவின் ஏன்? உலகத்தின் கவனத்தையே ஈர்த்தவர். இன்றும் தமிழ், இந்தி முதலான பல மொழி தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து சாதனை செய்து கொண்டிருக்கின்றார்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று என்ற தலைப்பில் பேச எனக்கு வாய்ப்பளித்ததன் காரணமாக நானும் என்னைப் போன்றவர்களும் ஊனமுற்றோர் குறித்த விழிப்புணர்வு பெறுவதற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்கி விடைபெறுகிறேன். வணக்கம்.

சனி, 5 ஜூலை, 2008

திரைப்பட மொழியும் காலம் பற்றிய குறியீடுகளும்

திரைப்பட மொழியும் காலம் பற்றிய குறியீடுகளும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8


திரைப்படம் ஒரு கலையா? அறிவியலா? என்ற வினாவும் விடையும் ஒரு புதிர்க்கதை போல் விவரித்துச் சொல்லப்படக்கூடியது. திரைப்படம் ஒரு கலையில்லை, பல கலைகளின் கூட்டுப்படைப்பு. திரைப்படத்தில் இயல், இசை, நாடகம், ஓவியம், சிற்பம் முதலான பல கலைகளும் பின்னிப் பிணைந்துள்ளன. வேறு வகையில் பார்த்தால் திரைப்படங்கள் ஓர் அறிவியல் படைப்பு, இயற்பியல், வேதியியல், கணிதவியல் முதலான பல்வேறு அறிவியல் பிரிவுகளின் சங்கமத்தில் உருவாவன. திரைப்படங்கள் அறிவியலின் கூட்டுப்படைப்பு. எனவே திரைப்படம் கலையா? அறிவியலா? என்றால் ஷதிரைப்படம் ஓர் அறிவியற்கலை| என்றுதான் சொல்லமுடியும்.

திரைப்படச் சூழலில் நாம் வாழ்கிறோம்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சக்தி வாய்ந்த ஊடகம் திரைப்படம்தான் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. ஏனைய ஊடகங்களைவிட இப்பொழுதுதான் நு}று வயதைக் கடந்திருக்கும் இந்த அறிவியற்கலை சார்ந்த ஊடகத்தின் உடனடித் தாக்கம் வியப்பளிக்கக்கூடியது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திரைப்படங்களால் சூழப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம் என்பது உண்மை. தினசரிச் செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள் தொடங்கி, அன்றாடம் நம் கண்களில் படும் சுவரொட்டிகள், பேனர்கள் போன்றவற்றில் நாம் படிப்பது / பார்ப்பது, நம்மைச் சுற்றி வீட்டில், பள்ளி - கல்லு}ரிகளில், அலுவலகங்களில், பொது இடங்களில் பேசப்படுவது என அனைத்திலும் திரைப்படங்கள் விரவிக் கிடக்கின்றன. இது போதாதென்று நாம் எப்பொழுதும் மூழ்கிக் கிடக்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் திரைப்படங்கள், திரைப்படத் துணுக்குகள், திரைப்படப் பாடல்கள், நடிகர் நடிகையர் பேட்டிகள் என்று திரைப்படம் தொடர்பான தகவல்களே கொட்டிக் கிடக்கின்றன. ஆக நம்மைச் சுற்றியுள்ள காற்று, நீர், வெளி போன்று திரைப்படங்களும் நம்மைச் சூழ்ந்துள்ளன.

திரைப்படங்கள் ஒரே சமயத்தில் நமக்குக் கலை அனுபவமாகவும், சூழலாகவும், வியாபாரப் பண்டமாகவும், தகவல்களைச் சொல்லும் தகவல் தொடர்புச் சாதனங்களாகவும் உள்ளன. எனவே ஒரு பொழுதுபோக்குச் சாதனம் என்ற ஒற்றை நேர்க்கோட்டுப் பார்வையோடு திரைப்படங்களை அணுகுவதைவிட, மேலே சொல்லப்பட்ட பன்முகப் பரிமாணங்களைப் புரிந்து கொண்டு அவற்றை அணுகுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

திரைப்படங்களைப் புரிந்து கொள்ள, பின்வரும் கருத்தாக்கங்களை மனதில் நிறுத்திக்கொள்வது நல்லது.
1. திரைப்படங்கள் என்பது பிம்பங்கள் ஆட்சி செய்யும் சாம்ராஜ்யம். திரைப்படங்களை அணுகும்போது இந்த பிம்பங்களை அதிகக் கவனத்தோடு பார்க்க வேண்டும்.
2. திரைப்படம் என்பது முழுக்க முழுக்க உருவாக்கப்பட்ட ஒன்று. நடிகர் நடிகையரின் அங்க அசைவு உட்படக் கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள் அனைத்துமே குறிப்பிட்ட திரைப்படத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுக் காட்டப்படுகின்றன. திரைப்படத்தில் தோன்றுவது எதுவுமே தற்செயலானதும் இயல்பானதும் இயற்கையானதுமல்ல.
3. திரைப்படத்தை ஒலி, ஒளி, காமிரா கோணம் எனும் பல்வேறு விஷயங்களோடு சேர்த்தே பார்க்க வேண்டும். வெறுமனே கதை அல்லது வசனங்கள் என்கிற ரீதியில் திரைப்படம் பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். (சுரேஷ்பால், மீடியா உலகம், ப.185)
திரைப்படங்கள் என்பது பிம்பங்களின் தொகுப்பு; காட்டப்படுபவை அனைத்துமே உருவாக்கப்பட்டவை. காமிரா, ஒலி, ஒளி இவைகளால் கட்டமைக்கப்படுவதே திரைப்படத்தின் மொழி என்கின்ற புரிதல்களோடு திரைப்படங்களைப் புரிந்துகொள்ள முயலலாம்.

திரைப்படத்தில் முதல்பொருள்கள்: நிலமும் பொழுதும்.

ஒரு காவியம் எவ்வாறு பல்வேறு காதை, இயல் போன்ற உட்பகுப்புகளால் கட்டப்படுகிறதோ அதேபோல் திரைப்படங்கள் காட்சிகள் என்ற பகுதிகளால் உருவாக்கப்படுகின்றன. காட்சிகள் பல்வேறு ஷாட் களால் (படத்துணுக்கு) உருவாக்கப் படுகின்றன. ஷாட் திரைப்படக் காட்சியின் அடிப்படை அலகு. அதன் நீளம் வரையறுக்கப் படவில்லை. ஒவ்வொரு ஷாட்டும் ஒவ்வொரு தனித்த துண்டுப் படம்; எந்த வெட்டும் இல்லாமல் தொடர்ந்து படமாக்கப்பட்ட ஒரு படத் துணுக்கு. காட்சி என்பது திரைப்பட முழுக்கதையின் ஒரு பகுதி. அதில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்த்தப்படுகிறது. எனவே ஒவ்வொரு நிகழ்வுக்கும் இடம், காலம் என்பன தவிர்க்க முடியாத அங்கங்கள் ஆகின்றன. இடம், காலம் என்ற பின்புலம் இல்லாமல் எந்தவொரு நிகழ்வும் யதார்த்தத்தில் நடப்பதில்லை. திரைப்படங்களிலும் அப்படித்தான்.

தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாட்டின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்டவற்றைப் பின்வருமாறு விவரிக்கலாம். திரைப்பட முழுமையின் ஒரு பகுதியாக அமையும் காட்சிகளில் நிகழ்த்தப்பெறும் நிகழ்வு உரிப்பொருள்| ஆகும். காட்சியின் பின்புலமான இடமும் காலமும் முதல்பொருள்.

முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (தொல். பொருள். அகத். நு}. 4)

காட்சியில் பங்கேற்கும் நடிகர்கள், அரங்கப்பொருள்கள், பின்னணி இசை முதலானவை கருப்பொருள்கள்|. தொல்காப்பியரின் முதல், கரு, உரிப்பொருள் கோட்பாடுகளைக் கொண்டு திரைப்படங்களை ஆய்வுக்கு உட்படுத்தமுடியும் என்பது தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாடுகளின் பரந்த வீச்சினைப் புலப்படுத்துவதாகும். உரிப்பொருளைச் சிறப்பிக்க முதல், கருப்பொருள்கள் எவ்வாறு அகப்பாடல்களில் பயன்பட்டனவோ அதேபோல் திரைப்படக் காட்சிகளைச் சிறப்பிக்கஃ முழுமைப்படுத்த இடம், காலம் என்கின்ற முதல்பொருளும் மேலே குறிப்பிடப்பெற்ற கருப்பொருள்களும் பயன்படுகின்றன.

இந்தக் கட்டுரை திரைப்பட மொழியால் உருவாக்கப்படும் காட்சிகளை முழுமைப்படுத்த, காட்சிப் பின்புலத்தின் மிக இன்றியமையாத கூறாகிய காலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதைத் திரைப்படவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்கிறது.

திரைப்படங்களில் காலக் குறியீடு

திரைப்படத்தில் ஒரு திரைக்கதை எடுத்துக் கொள்கிற கதையின் முழுமையான கால அளவு என்பது வரையறுக்க முடியாதது. அது ஒரு மணிநேரத்தில் நடந்த கதையாக இருக்கலாம் அல்லது ஓராயிரம் ஆண்டுகள் நடந்த கதையாக இருக்கலாம். ஆனால் திரைப்படம் ஓடக்கூடிய நேரம் சுமார் இரண்டரை (2½) மணி நேரம்தான். திரைப்படத்தில் காட்சி நடக்கும் நேரம் என்பது உண்மையான நேரத்திற்குச் சமமானதாக இருக்கும். இது திரைப்படத்தின் பொதுவிதி. இந்த இரண்டரை மணி நேரத் திரைப்படத்தில்தான் பல நு}று ஆண்டுக் காலத்தைப் பார்க்கிறோம். அதாவது கதை நிகழ்கின்ற ஆயிரக்கணக்கான மணி நேரத்தை நாம் வெறும் இரண்டரை மணி நேரத்தில் மட்டுமே பார்க்கிறோம். மீதி உள்ள நேரங்கள் காட்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் இருக்கின்றன. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான மாற்றத்தின்போது உள்ள கால இடைவெளி ஒரு நொடியின் மிகச்சிறிய பகுதி, இந்தக் கால இடைவெளியில்தான் திரைக்கதை சில நாட்களையோ, மாதங்களையோ, சில ஆண்டுகளையோ கடந்து விடுகின்றது. இந்த இடைவெளிகளின் கால ஓட்டத்தைப் பார்வையாளனுக்குச் சரியான அளவில் புரிய வைப்பதில்தான் திரைப்பட மொழி முழுமை பெறுகின்றது.

திரைப்படத்தில் காலத்தைப் பொறுத்தவரை இரண்டு கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். 1. காட்சி நடக்கும் நேரம். 2. காட்சிகளுக்கு இடையிலான நேரம். முதல் கூறாகிய காட்சி நடக்கும் நேரங்களைக் கணக்கிட்டால் திரைப்படம் ஓடக்கூடிய மொத்த நேரத்தைப் பெறலாம். இரண்டாம் கூறாகிய காட்சிகளுக்கு இடையிலான நேரத்தைஃ காலத்தை மொத்தமாகக் கணக்கிட்டு முதல் கூறாகிய காட்சி நடக்கும் நேரத்தோடு கூட்டினால் திரைக்கதை நிகழக்கூடிய முழுமையான காலஅளவைக் கண்டுபிடிக்கலாம்.

காட்சிகள் நிகழும் மொத்த நேரம்
+
காட்சிகளுக்கு இடையிலான மொத்த நேரம்
=
திரைக்கதையின் முழுமையான கால அளவு

திரைப்படத்தில் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வருகின்றன. காட்சிகளுக்கான காலமும் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. முதல் காட்சியைத் தொடர்ந்து இரண்டாம் காட்சி, முதல்காட்சி நடைபெற்ற காலத்தைத் தாண்டி இரண்டாம் காட்சி நடைபெறும் காலம். முதல், இரண்டாம் காட்சிகளில் காலம் இடையீடு இன்றித் தொடர்வதில்லை. அப்படித் தொடர்ந்தால் வேறு வேறு காட்சிகளாக அவைகள் சித்தரிக்கப்படுவது பொருத்தமில்லை. காட்சிகள் வேறுபடுவதால் காட்சிகளுக்கிடையே கடந்துசென்ற காலத்தின் அளவைத்; தெளிவுபடுத்துவதே காலக் குறியீடுகளின் வேலை.

இதற்கான விடையை இரண்டு வழிகளில் திரையில் காட்சிப்படுத்தலாம் என்பார் செ.பொன்னுசாமி.
''முதற்காட்சி நேரத்தையும் இரண்டாம் காட்சி நேரத்தையும் தனித்தனியாக வெளிப்படுத்துவதன் மூலம் இரண்டு காட்சிகளுக்கும் இடையே உள்ள கால அளவைக் கூறமுடியும்.
முதல் காட்சி நேரத்தையும் இரண்டாம் காட்சி தொடங்குவதற்கு முன்பு உள்ள நேரத்தையும் வெளிப்படுத்துவதன் மூலம் இரண்டாம் காட்சி தொடங்கும் நேரத்தை அறிந்துகொள்ள முடியும்.|| (செ.பொன்னுசாமி, திரைக்கதை பயில்வோம், பப.51-52)

திரைக்கதையில் கால நகர்வு

திரைப்படத்தில் இரண்டு காட்சிகளுக்கிடையே காலம் கடந்திருப்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த வேண்டுமெனில் அந்த இரண்டு காட்சிகளுக்கிடையே வேறொரு இடத்தில் நிகழ்கின்ற புதிய காட்சி ஒன்றைப் புகுத்த வேண்டும். இந்தப் புதிய காட்சிக் குறுக்கீடு திட்டமிட்டுத் திரைக்கதை ஆசிரியரால் புகுத்தப்படுவது. தமிழ்த் திரைப்படங்களில் இந்தவகை இடையீட்டுக் காட்சிக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் உத்தி நகைச்சுவைக் காட்சிகளை இணைத்தலே. திரைப்படத்தின் பிரதான திரைக்கதைக்கு இணையாகத் தனித்ததொரு துணைக்கதை என்ற போக்கில் இத்தகு காட்சிகள் இணைக்கப்படும்.

அண்மைக்காலத் தமிழ்த் திரைப்படங்களில் கதைநாயகன், வில்லன் இவர்களுக்கிடையேயான முரண் திரைக்கதையின் மைய ஓட்டமாயிருக்க திரைக்கதையின் கால நகர்த்தலுக்குத் தேவைப்படும் இடையீட்டுக் காட்சிகளுக்காகக் கதைநாயகன், கதைநாயகி இவர்களுக்கிடையிலான மோதலும் காதலும் தனியானதொரு துணைக்கதையாக வளர்த்துச் சொல்லப்படும். இயக்குநர் சங்கரின் சமீபத்திய திரைப்படமான சிவாஜியில் கதைநாயகன் சிவாஜி, வில்லன் ஆதி இவர்களுக்கிடையான முரண் திரைக்கதையின் மைய ஓட்டமாயிருக்க, கதைநாயகன் சிவாஜி நாயகி தமிழ்ச்செல்வி இவர்களுக்கிடையிலான மோதலும் காதலும் தனித்ததொரு இடையீட்டுக் காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளமையை இதற்குச் சான்றாகக் கூறலாம். இந்த இடையீட்டுக் காட்சிக்குப் பிறகு மீண்டும் பழைய இடத்திற்குக் காட்சி திரும்பும்போது காலம் கடந்து போயிருக்கும். எவ்வளவு காலம் கடந்திருக்கிறது என்பதைக் காட்சிப் படிமங்களாலோ, பாத்திர உரையாடலாலோ குறிப்பிடவில்லையெனில் பார்வையாளன் அதை உணர்ந்துகொள்ள முடியாது.

தமிழ்த் திரைப்படங்களில் கால நகர்வுக் குறியீடுகள்

காலம் என்பது இயக்கத்தில் இருப்பது. கண்ணால் காண முடியாதது. திரைப்படங்களில் இடத்தைச் சித்தரிப்பதைப் போல் அவ்வளவு எளிதாகக் காலத்தைச் சித்தரித்துவிட முடியாது. காட்சியின் தொடக்கத்திலேயே இட மாற்றத்தை பார்வையாளனுக்கு உணர்த்திவிட முடியும். கால மாற்றத்தை / கால நகர்வை வெளிப்படுத்தாமலேயே பார்வையாளன் உணர்வான். ஏனெனில் ஒவ்வொரு செயலுக்கும் நேரம் தேவை. ஒவ்வொரு செயலின் முடிவும் காலம் பயன் படுத்தப்பட்டிருப்பதை அறிவுறுத்துகிறது. திரைப்படத்தில் காட்சிகள் தொடர்ந்து ஆற்றொழுக்கு போல் காண்பிக்கப்பட்டாலும், திரைக்கதை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்புதான் என்பதை நாம் உணர்தல் வேண்டும். சொல்லப்பட்ட காட்சிகளுக்கிடையே சொல்லப்படாத காட்சிகள் புதைநிலையில் உள்ளன. எனவே காட்சிகளுக்கு இடையே கடந்துபோன காலம், நிமிடங்களா? மணிநேரமா? பொழுதா? நாட்களா? மாதங்களா? ஆண்டுகளா? என்பதைத் திரைப்படம் சொல்லித்தான் ஆகவேண்டும்.

காட்சிகளுக்கு உள்ளேயே ஷாட்களுக்கு இடையே காலம் நகர்கிறபோது, அநேகமாக நிமிடம், மணிநேரம் என்ற அளவில் காலம் கடந்ததைக் கடிகாரத்தின் துணையோடு, அதாவது கடிகார முள் சுழற்சியை டிசால்வ், சூப்பர் இம்போஸ் செய்து காண்பித்துவிடுவார்கள். சான்றாக, நாயகன் கடிதம் எழுதும் நேரம், நாயகி உடை மாற்றிக்கொண்டு வரும் நேரம், நோயாளி மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரம் போன்ற கால நகர்வுகள் இவ்வகைக் குறியீடுகளின் வழி பார்வையாளருக்கு உணர்த்தப்படும். அழகன் திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் தொலைபேசியில் மாலை தொடங்கி இரவு கடந்து மறுநாள் காலை வரை உரையாடும் காட்சியில் கால நகர்வுகள் இயக்குநர் பாலசந்தர் அவர்களால் பல்வேறு குறியீடுகளின் வழியாக காண்பிக்கப்படுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

இரண்டு காட்சிகளுக்கிடையே இடையீட்டுக் காட்சியின்றி காலம் நகர்கிற பொழுது அதாவது நாள் அல்லது காலை, மாலை போன்ற பொழுது நகர்கிறபோது இத்தகு காலநகர்வைக் வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்த் திரைப்படங்களில், விளக்கேற்றப்படுதல் அல்லது விளக்கணைத்தல், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம், கோயில் மணியோசை, பாங்கோசை, தேவாலய மணியோசை, பூபாள இசை, சுப்ரபாதம், பறவைகளின் சப்தம், நாள்காட்டியில் நாள்தாள் கிழித்தல் முதலான காலநகர்வுக் குறியீடுகள் இடம்பெறுவதுண்டு.

காட்சிகளுக்கிடையே சில நாட்கள் கடந்துள்ளமையைப் புலப்படுத்த நாள்காட்டியின் நாள்தாள்கள் படபடவெனப் பறந்து ஒரு குறிப்பிட்ட நாளில் நிலைகொள்வதாகக் காண்பிப்பதுண்டு. இயக்குநர் பாலச்சந்தர் தம் சிந்து பைரவி திரைப்படத்தில் கதைநாயகன், கதைநாயகி இருவரும் கோபித்துக் கொண்டு சிலநாட்கள் பேசாமல், சந்திக்காமல் காலம் கடத்துவதை ஒவ்வொரு நாளும் செய்தித்தாள் மற்றும் ஒரு கிழமை இதழ் என இணைத்துப் போடும் ஷாட்களைத் தொடர்ந்து காண்பித்து நாட்களின் நகர்வை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். காட்சிகளுக்கிடையே பல மாதங்கள் கடந்திருப்பதை வெளிப்படுத்த இலையுதிர்ந்த மரத்தைக் காண்பித்து அதே பிரேமில் சூப்பர் இம்போஸில் அந்த மரமே பூத்துக் குலுங்குவதைப்போல் காண்பிப்பதுண்டு. சற்றேறக்குறைய இதே உத்தியில் செடி வளர்வது, கொடி வளர்ந்து பூப்பது போன்ற காலக்குறியீடுகள் தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெறுவதுண்டு.

இரண்டு காட்சிகளுக்கிடையே பல ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இத்தகு கால நகர்வைப் பார்வையாளர்களுக்கு விளக்கிக் காட்டச் சுழலும் சக்கரத்தைக் காண்பிப்பதுண்டு. காலச் சக்கரத்தின் சுழற்சியைக் குறிப்பிடும் சக்கரங்களாகக் திரைக்காட்சியில் வண்டிச் சக்கரம், தையல் இயந்திரச் சக்கரம், தொழிற்சாலையின் ஏதேனும் ஒரு இயந்திரச் சக்கரம் முதலான சக்கரங்களில் ஒன்று இடம்பெறுவதுண்டு. ஒரு சில திரைப்படங்களில் கால நகர்வைச் சில நாட்களுக்குப் பின்.., சில ஆண்டுகளுக்குப் பின்.., 20 வருடங்களுக்குப் பிறகு.. என எழுத்தில் எழுதிக் காண்பித்து விடுவதும் உண்டு.

திரைப்படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் குறித்துப் பலவகை விமர்சனங்கள் உண்டு. பல தமிழ்த் திரைப்படங்களில் பாடல்காட்சிகள் கால நகர்வுக்கான உத்தியாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். சில பல நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் திரைக்கதையில் கடக்கும் கால நகர்வைப் பாடல்காட்சி ஒன்றைப் புகுத்துவதன் மூலம் மிக எளிமையாக இயக்குநர் பார்வையாளர்களுக்குப் புலப்படுத்தி விடுவார்.

தமிழ்த்திரைப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் ஒருத்தி கலெக்டர் ஆகிவிடுவதையும், ஓர் ஏழை பணக்காரன் ஆகிவிடுவதையும் நாம் பலமுறை பார்த்ததுண்டு. விபத்துக்குள்ளான/ நோய்வாய்ப்பட்ட கதைப் பாத்திரங்கள் பலர் முழுக்குணம் பெறுவதற்கான கால நகர்த்தலைப் பாடல் காட்சிகள்தாம் செய்கின்றன. இத்தகு பாடல் காட்சிகள் அந்தச் செயல்ககளுக்குரிய முழுமையான கால இடைவெளியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அன்பே சிவம் திரைப்படத்தில் இடம்பெறும் 'யார் யார் சிவம்? அன்பே சிவம்! என்ற பாடல் காட்சியில் கடுமையான விபத்துக்குள்ளான கதைநாயகன் முழுமையாக குணம்பெறும் நெடியகாலம் கடத்தப்பட்டிருப்பதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

இயக்குநர் கௌதமன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு| திரைப்படம் காட்சிகளுக்கிடையிலான கால நகர்வை (இட நகர்வையும் சேர்த்து) படம் முழுவதும் எழுத்தில் எழுதிக் காண்பித்தது. சான்றாக, கதாநாயகன் விமானத்தில் மதுரை வந்திறங்கி, கொலையைத் துப்புத் துலக்கும் ஒருநாள் நிகழ்ச்சியை விளக்கும் தொடர்ச்சியான காட்சிகளில் காலை 8-30 மணி, காலை 10-30 மணி, மாலை 5-00 மணி எனக் கால நகர்வை எழுத்தில் காண்பித்தது. இந்த உத்தி சற்றேறக்குறைய ஊமைப்படக் கால உத்தி என்றாலும் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தைப் பொறுத்தமட்டில் கதையின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் புதிய உத்தியாகவே பயன்பட்டது. ஏனெனில் கதாநாயகன் துப்பறியும் கதையின் வேகப் போக்குக்கு, வழக்கமான இடையீட்டுக் காட்சிகளால் கால நகர்வை வெளிப்படுத்தும் பழைய முறை பொருத்தமற்றதாக இருக்கலாம் என்று இயக்குநர் கருதியிருப்பார்.

திரைப்படங்களில் காலமும் இடமும்;

திரைப்படங்களில் காலம், இடம் இவைகளுக்கிடையேயான தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டு காட்சிகளுக்கிடையே வேறொரு இடத்தில் நிகழும் புதிய காட்சியொன்றை நுழைப்பதன் மூலம் காலம் கடந்திருப்பதை உணர்த்தலாம் என்ற பொது உத்தியிலும்கூட இடஅண்மை- சேய்மைகளைப் பயன்படுத்திக் காலஅண்மை- சேய்மைகளைப் புலப்படுத்த முடியும். சான்றாக, இரண்டு காட்சிகளுக்கு இடையே குறுக்கீடு செய்யப்படும் புதிய காட்சி முதல் காட்சி நிகழிடத்திற்கு அண்மையில் நிகழுமானால் (பக்கத்து அறை, பக்கத்து வீடு போல..) மீண்டும் பழைய நிகழ்வுக்குத் திரும்பும் அடுத்த காட்சியில் கால நகர்வு, சில நொடிகள், சில நிமிடங்கள், சில மணிப் பொழுது என மிகக் குறைவாகவே இருக்கும். மாறாக இரண்டு காட்சிகளுக்கு இடையே குறுக்கீடு செய்யப்படும் புதிய காட்சி முதல் காட்சி நிகழிடத்திற்கு மிகத் தொலைவில் அதாவது சேய்மையில் நிகழுமானால் (வேறு ஊரில், வேறு நகரத்தில், வேறு நாட்டில் இதுபோல..) பழைய நிகழ்வுக்குத் திரும்பும் அடுத்த காட்சியில் கால நகர்வு, பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் என மிக அதிகமாக உணரப்படும்.

முடிப்பாக:

இந்தியர்கள் அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் திரைப்படங்களுக்குத் தருகிற முக்கியத்துவம் உலகப் பிரசித்தமானது. திரைப்படங்கள் தமிழில் பேசத்தொடங்கி எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இன்னும் தமிழ்த் திரைப்படச் சுவைஞர்கள் நாடகத்தின் நீட்சியாகவே திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கதை கேட்கும் ஆர்வத்திலிருந்து விடுபடாத தமிழ்ச் சுவைஞர்கள் பார்த்துப் பார்த்துப் பழகிய பழக்கத்தால் திரைமொழியைப் புரிந்துகொள்கிறார்களே அல்லாமல் நினைவுப் ப10ர்வமாக அவர்களுக்குத் திரைமொழியோ, காட்சி ஊடகம் குறித்த புரிதல்களோ இன்னும் அத்துப்படியாகவில்லை.

திரைக்கதையில் இடம், காலம் என்பதற்கு நமது சுவைஞர்கள் தரும் முக்கியத்துவம் கதை புரியவேண்டும் என்பதில்தான் அடங்கியுள்ளது. நாடக மேடையில் ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையே திரையை மூடுவதன் மூலம் நாடக ஆசிரியர் தான் விரும்புகிற அளவுக்குக் காலம் கடந்துபோனதாகக் காண்பிக்கலாம். திரைப்படங்களிலும் இப்படிக் காட்சி மாற்றங்களின் போது காலம் கடந்ததாகச் சுவைஞன் புரிந்துகொள்கிறான். பார்வையாளனுக்கு இவ்வளவு போதும் என்று பெரும்பாலான திரைக்கதை ஆசிரியர்களும் இயக்குநர்களும் முடிவுசெய்து கொள்கிறார்கள். திரைக்கதையில் கால, இட வெளிப்பாடுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இவர்களில் பலர் உணர்வதில்லை. அதிகக் கவனமின்றிச் செய்யப்படுகிற திரைக்கதைகளாலும் படத்தொகுப்புகளாலும் தமிழ்த்திரைப்படங்கள் பலவற்றில் காலக் குழப்பங்கள் வருகின்றன. இயக்குநர்களும் சரி, சுவைஞர்களும் சரி கதை புரிந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அது போதாது. காலம் பற்றிய முழுமையான புரிதலோடு திரைப்படங்களைச் சுவைக்கும்போதுதான் காட்சி ஊடகத்தின் வலிமை தெரியும். திரைப்படம் முழுமைபெறும். ஷதிரைப்பட மொழியும் காலம் பற்றிய குறியீடுகளும்| என்ற இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.

சமகாலத் தமிழிலக்கியப் படைப்புகளில்

சமகாலத் தமிழிலக்கியப் படைப்புகளில்
புதுச்சேரியின் பங்களிப்பு

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

இருபதாம் நு}ற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளில் புதுச்சேரியின் பங்களிப்பு

சங்க இலக்கியங்களைத் தவிர்த்து, கடந்த 19ஆம் நூற்றாண்டுவரை தமிழ்க் கவிதைகளின் நோக்கம் பெரிதும் தனிமனிதத் தேவைகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது. இவ்வுலகில் வாழும் வகைநாடி அரசர்களையோ வள்ளல்களையோ புரவலர்களைகளையோ பாடிப் புகழ்ந்து பொருள் நாடினர் புலவர் பலர். சிலரோ மேலுலகப் பேறு வேண்டிக் கடவுள்களைப் பராவுவதில் காலம் கழித்தனர். இன்னும் சிலரோ தாசியின் மஞ்சத்தில் தமிழ்க்கவிதைகளை அமரவைத்து வேடிக்கை பார்த்தனர். 'கூளப்ப நாயக்கன் காதல்" போன்ற காதல் இலக்கியங்கள் இதற்குச் சான்று. பொதுவில் கவிதை சமூக மேம்பாட்டிற்கானதாய் இல்லாமல் தனிமனித மேம்பாட்டிற்கானதாகவே இருந்தது. சிற்றிலக்கியங்கள் இதன் உச்சகட்டம்.

ஐரோப்பியர்/ ஆங்கிலக் கல்வி வருகைக்கு முன்னர்வரை தமிழில் உரைநடைகளுக்குரிய பணிகளையும் கவிதை என்ற பெயரால் அழைக்கப்படும் செய்யுள்களே செய்துவந்தன. கடிதங்கள், சோதிட நு}ல்கள், மருத்துவ நு}ல்கள், கணிதக் குறிப்புகள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே அமைந்தன. ஆங்கிலக் கல்விதான் உரைநடை, கவிதை இவைகளுக்கு இடையேயான பணிகளைப் பிரித்தது. இருபதாம் நு}ற்றாண்டில்தான் தமிழில், கவிதைகள் கவிதைகளுக்கான வேலையையும் உரைநடை உரைநடைகளுக்கான வேலையையும் செய்யத் தொடங்கின.

20ஆம் நூற்றாண்டுக் கவிதையுகம் பாரதியிலிருந்து தொடங்குகிறது. மரபின் அனைத்து வளங்களையும் தனதாக்கிக்கொண்டு அதுவரை தமிழ்க் கவிதை தொடாத சிகரங்களை நோக்கிப் பாரதியின் கவிதை பயணித்தது. பாரதி கவிதைகளுக்கான ஊற்றுக் கண்களாக 19 ஆம் நூற்றாண்டின் வள்ளலார், மாயூரம் வேதநாயகர், கோபாலகிருஷ்ண பாரதியார், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை முதலானவர்களின் கவிதைகள் திகழ்ந்தன. 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையை ஒட்டி இந்தியாவெங்கும் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வோடு பாரதியின் கவிதையுகம் தொடங்குகின்றது. 1908 இல் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாகப் புதுவைக்குப் புலம் பெயர்ந்த பாரதி, 1908 முதல் 1918 வரை புதுவையில் வாழ்ந்த காலத்தில்தான் மகாகவியாய் ஏற்றம் பெற்றான். பாரதியின் புதுவை வாழ்க்கை தத்துவ ரீதியாகப் பல புதிய கதவுகளை அவனுள் திறந்து வைத்தது. தன்னுடைய அறிவினுக்குப் புலப்படல் இன்றித் தேய மீது எவரோ சொல்லும் சொல்லினைச் செம்மையென்று மனத்திடைக் கொள்ளும் தீய பக்தி இல்லாத பாரதி, தம் படைப்புக்களின் மையப்பொருளாக மானுடத்தை வைத்தான். மானுட மேன்மைக்குத் தன் கவிதைகளைப் பயன்படுத்தினான். குறிப்பிட்ட ஜாதி, மதம், மொழி, இனம் என்றில்லாமல் மனிதகுலம் முழுமைக்குமாகத் தேடினான். இந்தத் தேடல்தான் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளின் மூலவேர்.

ஆக 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை புதுவையில் இருந்துதான் தொடங்கியது. பாரதிக்குப் பிறகுதான் தமிழகக் கவிஞர்கள் பாரதி காட்டிய புதுநெறியில் தளர்நடை போடத் தொடங்கினார்கள். பாரதி காட்டிய புதுநெறியில், தேசீயம், தமிழுணர்வு, சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகள், சமத்துவம் முதலான புதிய பாடுபொருள்கள் தமிழ்க் கவிதைகளுக்குக் கிடைத்தன.
தமிழ்க் கவிதைகளைப் பொருத்தமட்டில் இருபதாம் நு}ற்றாண்டு என்ற காலப்பரப்பைத் தோராயமாக நான்கு கால் கால் நு}ற்றாண்டுகளாகப் பகுத்துக்கொள்ளலாம்.

முதல் கால் நூற்றாண்டு 1925 வரை பாரதி காலம்,
இரண்டாம் கால் நூற்றாண்டு 1950 வரை பாரதிதாசன் காலம்,
மூன்றாம் கால் நூற்றாண்டு 1975 வரை பாரதிதாசன் பரம்பரையினர் காலம்,
நான்காம் கால் நூற்றாண்டு 2000 நவீன கவிதைகளுக்கான காலம்.
பாரதி தமிழ்க் கவிதையுலகிற்குத் தந்த தேசீயம், தமிழுணர்வு, சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகள், சமத்துவம் ஆகிய புதிய பாடுபொருள்களே இருபதாம் நூற்றாண்டு முழுமைக்கும் தமிழ்க்கவிதைகளுக்கான பாடுபொருள்களாக இருந்தன.

பாடலில் பழமுறை பழநடை என்பதோர்
காடு முழுவதும் கண்டபின்
கடைசியாய்
சுப்பிரமணிய பாரதி தோன்றியென்
பாட்டுக்குப் புதுமுறை புதுநடை
காட்டினார்

என்று பாரதிதாசனே குறிப்பிட்டவாறு, பாரதியிடமிருந்து தம் கவிதைப் பயணத்தைத் தொடங்கிய பாரதிதாசன் தொடக்கத்தில் பாரதி கவிதைகளின் நகல்களாகவே தம் கவிதைகளை அமைத்துக் கொண்டார். 1928 ஆம் ஆண்டு முதல் தந்தைப் பெரியாரிடமும் அவரின் சுயமரியாதை இயக்கத்துடனும் தம்மைத் தீவிரமாகப் பிணைத்துக்கொண்டு தன்னை, முழு நாத்திகன் என்று அறிவித்துக்கொண்டது முதல் பாரதிதாசனின் கவிதைகள் புதிய தளத்தில் வீறுநடை போடத் தொடங்கின. பாரதியின் தேசியத்துக்கு மாற்றாக தீவிரத் தமிழ்த் தேசியம், பாரதியின் ஆன்மீகத்துக்கு மாற்றாக கடவுள் மறுப்பு, சமய எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு எனப் புதிய புதிய பாடுபொருள்களுடன் தமிழ்க்கவிதை உலகம் தம்மிலிருந்து தொடங்கும்படியாகத் தம் கவிதை ஆளுமையால் புதுப்பாதை சமைத்தார். இந்தப் புதிய பாதையும் புதுவையிலிருந்துதான் போடப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையில் பாரதியும் பாரதிதாசனும் சாதித்தவற்றுக்கு இணையாகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் ஒருவரும் இல்லை. இந்நு}ற்றாண்டின் தமிழ்க் கவிஞர்களைப் பாரதி பரம்பரை (வெ.இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ச.து.சு. யோகியார், திருலோக சீத்தாராம், அ.சீனுவாச ராகவன், கா.மு.ஷெரீப், கொத்தமங்கலம் சுப்பு, பெ.தூரன், எஸ்.டி. சுந்தரம்), பாரதிதாசன் பரம்பரை (வாணிதாசன், புதுவைச் சிவம், முடியரசன், கண்ணதாசன், புலவர் குழந்தை, பெருஞ்சித்திரனார், பொன்னடியான், சுரதா, முருகு சுந்தரம், தமிழன்பன், நா.காமராசன்) என்ற இருபிரிவுகளுக்குள்ளேயே அடக்கிவிட முடியும். கவிஞர் தமிழ்ஒளி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ப.ஜீவானந்தம், திருமூர்த்தி, கம்பதாசன் முதலான கவிஞர்கள் பாரதிதாசன் பரம்பரையில் தனிப்பாதை சமைத்துக் கொண்ட பொதுவுடைமைக் கவிஞர்களாவர்.
பாரதியின் தேசியக் கவிதைப் பரம்பரை, பாரதிதாசனின் தமிழ்த் தேசியக் கவிதைப் பரம்பரை, தமிழ்ஒளியின் பொதுவுடைமைக் கவிதைப் பரம்பரை என்ற தமிழ்க் கவிதையின் மூன்று முக்கிய கவிதைப் பரம்பரைகளும் புதுவையில் இருந்துதான் தொடங்கின, வளர்ந்தன, செழித்தன.

1975க்குப் பிறகு தமிழகத்தில் மரபுக் கவிதைகளுக்கு மரியாதை இல்லை. வீச்சும் குறைந்துவிட்டது. திராவிட இயக்கம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தபிறகு அதுவரை மரபுக் கவிதைகளின் உள்ளடக்கமாயிருந்த தமிழ்த் தேசீயம் குறித்த பாடுபொருள்கள் நமத்துப் போய்விட்டன. புதிய முற்போக்குச் சிந்தனைகளுக்கு மரபுக் கவிதைகளின் வடிவம் பொருந்திவராது என்று கவிஞர்கள் நினைக்கத் தொடங்கியதன் விளைவு சிறந்த மரபிலக்கியக் கவிஞர்கள் புதுக்கவிதைகளைக் கையில் எடுக்கத் தொடங்கினார்கள். வானம்பாடி இயக்கம் இப்படி உருவானதுதான். இவர்களில் பலரும் பாரதி, பாரதிதாசன் கவிதை மரபுகளை உள்ளடக்கத்தில் உள்வாங்கிக் கொண்டு கூடுதலாக மார்க்சீய வெளிச்சத்தில் புதுக்கவிதை படைக்க வந்தவர்கள். புவியரசு, சிற்பி, நா.காமராசன், மீரா, தமிழன்பன், அப்துல் ரகுமான், மு.மேத்தா முதலான கவிஞர்களை இந்த வரிசையில் நாம் அடையாளம் காணமுடியும்.

புதுச்சேரியைப் பொருத்தமட்டில் பாரதிதாசன் பரம்பரைதான் இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் தொடர்ந்தது. ஏன் இன்றும் கூடத் தொடர்கிறது. பாரதிதாசனின் தமிழ்த் தேசியம், பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சீர்திருத்தம், சமத்துவ நாட்டம் முதலான உள்ளடக்கங்களோடு தமிழ்ஒளியின் ஒடுக்கப்பட்டவர்கள் குரலாகக் கவிதையைப் படைக்கும் மார்க்சீயக் கவிதைப்பாணியும் கலந்து தமிழ்க் கவிதைகளைப் படைக்கும் போக்கு புதுச்சேரிக் கவிதைகளின் ஃகவிஞர்களின் தனித்தன்மை என்று கூறலாம். இவ்வகைக் கவிதைகள் சிறந்த மரபுக் கவிதைகளாகத் தொடர்வது புதுச்சேரியின் தனிச்சிறப்பு.

இவ்வகையில் குறிப்பிடத்தக்க புதுவையின் மரபுக் கவிஞர்கள் என்று அரிமதி தென்னகன், ஆதிகேசவன், இலக்கியன், உசேன், கல்லாடன், சங்கரய்யா, செவ்வேள், ம.இலெ. தங்கப்பா, திருமுருகன், வெ.நாரா முதலானவர்களைக் குறிப்பிடலாம். (பட்டியல் முழுமையானதன்று).
புதுக்கவிதைகளைப் பொருத்தமட்டில் தொடக்கத்தில் புதுச்சேரியில் அதிக வரவேற்பில்லை. பாவேந்தர் வழி வந்த மரபுக் கவிதை வடிவங்களின் செல்வாக்கே இதற்குக் காரணம். ஆனாலும் இருபதாம் நு}ற்றாண்டின் எண்பதுகளில் புதுக்கவிதை வடிவங்கள் மெல்ல மெல்லப் புதுவையில் செல்வாக்கு பெறத் தொடங்கின. புதுவையின் புதுக்கவிதை முன்னோடிகளாகப் பிரபஞ்ச கவி, வில்லியனு}ர் பழனி, பஞ்சு, தேவமைந்தன், மலையருவி, புதுவை அமலன், எ.மு. ராஜன் முதலானவர்களைக் குறிப்பிடலாம். ஹைக்கூக்களின் வருகைக்குப் பின்னர் புதுவைப் புதுக்கவிஞர்கள் பெருகினர். இருபதாம் நூற்றாண்டுப் புதுவைப் புதுக்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்று புதுவை இளவேனில், சீனு. தமிழ்மணி, தமிழ்நெஞ்சன், அரிமதி தென்னகன், செந்தமிழினியன், பாரதிவாணர் சிவா முதலானவர்களைக் குறிப்பிடலாம் (பட்டியல் முழுமையானதன்று). புதுச்சேரியின் நவீனக் கவிதை இயக்கம் பிரேம் - ரமேஷ் கவிதைகளில் தொடங்குகிறது. இவர்களின் கவிதைப்பாணி தமிழில் புதுமையானது. தருமு. சிவராமின் பாணியில் தொடங்கும் இவர்களின் தமிழ்க்கவிதை புதிய தடத்தில் பயணித்து முன்னோடிக் கவிதைகளாகத் திகழ்கின்றன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுவைக் கவிதைகளின்/ கவிஞர்களின் வளர்ச்சி அபரிமிதமாயிருக்கிறது, வீக்கமோ என்று சந்தேகப்படும் அளவிற்கு!. நண்பர்கள் தோட்டம், கவிதை வானில், புதுவை எழுத்தாளர் கழகம் போன்ற இலக்கிய அமைப்புகள் நடத்திய, நடத்தும் திங்கள் பாட்டரங்கங்களே புதுவையில் கவிஞர்கள் பெருக்கத்திற்குக் காரணம். கவிதை ஜனநாயகப் படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதே. கடந்த நூற்றாண்டில் தமிழ்க் கவிதைகளுக்கான புதிய பாதைகள் சமைத்த பெருமைக்குரிய புதுச்சேரி மண் இந்த நூற்றாண்டிலும் சாதிக்க வேண்டும். அதுவே நம் விருப்பம்.
கவிதைகள் மானுட மேன்மைக்கே!

சனி, 12 ஏப்ரல், 2008

பிரபஞ்ச வெளி ---மலையருவி

பிரபஞ்ச வெளி

நீல வானம்
நேற்று இன்று நாளை என்னும்
காலங்களற்ற இருப்பு
கீழ் மேல் இட வல
திசைகளற்றப் பெருவெளி

கோள்களை
விண்மீன்களை
வெளிகளை
பிரபஞ்சத்தை இட்டு நிரப்பிய
பாழ்வெளி

நொடி மணி
நாள் மாதம்
பருவம் ஆண்டுகள் அறியா
ஊழிகள் கடந்த
வெட்ட வெளி

இயக்கம்
உள்ளும் வெளியும்
ஓயா இயக்கம்
இணைந்தும் பிணைந்தும்
விட்டும் விலகியும்
சூத்திரத்தை மீறாத
இயக்கம்

அணுக்களாய்
தூசாய் துகளாய்
நுண்ணுயிர்களாய்
நானாய்
நீயாய்
எங்கும் நிறைந்த
வெளி
பிரபஞ்ச வெளி

வெள்ளி, 29 பிப்ரவரி, 2008

வாழ்தல் பொருட்டு- கவிதை

வாழ்தல் பொருட்டு-

மலையருவி

பூமிப் பந்தின்
கடைசி வரவு
மனிதர்கள்

பல்லூழிகளாய்ப் பரிணாமம்
புல்லாய்ப் பூண்டாய்
செடியாய் மரமாய்
பறவையாய் விலங்காய்
மனிதர்களாய்

பூமிப் பந்தின்
கடைசி வரவு
மனிதர்கள்

மனிதர்கள் வாழ
மற்றவை மடிவதா?

இயற்கையின் கூண்டில்
மனிதன் குற்றவாளியாய்

மனிதன் வாழ பூமி வேண்டும்
பூமி வாழ மனிதன் தேவையில்லை

வாழ்தல் பொருட்டு…?

மக்கள் மொழியும் அதிகார உடைப்பும் - கருத்துரை

மக்கள் மொழியும் அதிகார உடைப்பும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

சங்க இலக்கியங்களுக்குப் பிறகு தமிழிலக்கியங்களும் இலக்கணங்களும் அறம், அதிகாரம், மதம் சார்ந்தே கட்டமைக்கப்பட்டன. அரசு, அதிகாரம், ஆலயம் என்ற மையத்துக்கு அப்பால் விளிம்புகளில் வாழும் மக்களின் மொழி வேறாக இருந்தது. திணை சார்ந்த நிலப்பரப்புகளில் வாழும் மக்களின் மொழியும் பண்பாடும் தொன்மங்களும் வழக்காறுகளும் தமிழிலக்கிய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டன. அவை நாட்டுப்புற வாழ்க்கையோடும் வழக்காறுகளோடும் பின்னிப் பிணைந்து கிடந்தன.

ஆங்கிலேயர் வருகை அச்சியந்திர நுழைவு முதலான காரணங்களால் 19 மற்றும் 20 நூற்றாண்டுகள் உரைநடை வழியாக இலக்கியங்களுக்கு விடுதலை வழங்கின. ஆனாலும் இந்திய தமிழகச் சூழலில் உரைநடை என்ற ஜனநாயக வடிவமும் உயர்சாதி அதிகார வலைக்குள் அகப்பட்டுத் துடித்தது. பேச்சு மொழிக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்தாலும் அது உயர்சாதியினரின் பேச்சு மொழியாகத்தான் அமைந்தது.

வட்டார மொழிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பேச்சு மொழி இவைகள் இலக்கியத்துக்கு ஆகாத இழிசினர் வழக்காகவே கருதப்பட்டன. விளிம்பு நிலை மக்களுக்கு அன்னியமான பெருந்தெய்வங்கள், புராண இதிகாசத் தொன்மங்கள், பண்டிகைகள், மொழி இவைகள் இலக்கியத்துள் திணிக்கப்பட்டு பெருவழக்கு போல் சித்தரிக்கப்பட்டன. பெருவாரியான விளிம்பு நிலை மக்களின் கடவுளர்கள் (சிறு தெய்வங்கள்), தொன்மங்கள், கொண்டாட்டங்கள், மக்கள் மொழி இவைகள் தீணடப் படாதவைகளாயின. இத்தகு நெருக்கடியில் கி.ரா.வின் இலக்கிய வருகை இதுநாள் வரை இருந்த தமிழிலக்கியச் சூழலைப் புரட்டிப்போட்டது. கி.ரா. இதைத் திட்டமிட்டு நிகழ்த்தவில்லை என்றாலும் கி.ரா. விலிருந்து இந்தப் புரட்சி தொடக்கம் கொண்டது என்பதில் ஐயமில்லை. அவரின் துணிச்சல் போட்ட புதிய பாதையிது.

தமிழிலக்கியம் முழுமைக்குமான ஒரே மொழி ஒரே பண்பாடு என்ற மையத்தை உடைத்துத் தமிழகச் சூழலில் பன்முகத் தன்மை கொண்ட மக்களின் வாழ்க்கைக்கேற்ப இலக்கியங்களும் இலக்கிய மொழிகளும் பன்முகத்தன்மை கொள்ளத் தொடங்கின. திணை சார்ந்த குறுநிலம் சார்ந்த இ.லக்கியத்தில் நிலம் - மண் முதன்மை பெறுகிறது. மழை, வெயில், உணவு, பஞ்சம், விவசாயம், தொழில்கள், மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், பழமொழிகள், விடுகதைகள், கதைகள், பாடல்கள் இவை போன்ற இன்னபிற படைப்பைத் தீர்மாணிக்கின்றன.

தமிழர் ஈகைக் கோட்பாடு (சங்க இலக்கியம்)

தமிழர் ஈகைக் கோட்பாடு
(சங்க இலக்கியம்)

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

பசியும் பாலுணர்வும் உயிரினங்களுக்கு இயற்கை அளித்த கொடை. உயிரினங்களின் சந்ததிச் சங்கிலி அறுபடாமல் தொடர, தமது இனத்தைத் தொடர்ந்து பெருக்கிக்கொண்டே செல்ல, இனப்பெருக்கத்திற்கான இயல்பூக்கமாக பாலுணர்வு அமைந்தது. உயிரினங்கள் வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் இதன்பொருட்டே. வாழ்தலுக்கு உணவு தேவை. உணவுண்ணத் தேவைப்படுவது பசி என்னும் இயல்பூக்கம். பசி இயற்கையானது. பசியாறத் தேவைப்படும் உணவு இயல்பாய்த் தேவைப்படும் போதெல்லாம் கிடைத்துக் கொண்டிருக்கும்வரை உயிரினங்களுக்குப் போராட்டம் இல்லை. மனித சமூகத்திற்கும் இதே விதிதான்.

மனிதனின் போராட்ட வாழ்க்கை பசியில் தொடங்கிப் பசியில் தொடர்கின்றது. மனிதன் கூட்டமாக வேட்டையாடி, கிடைத்த உணவைத் தங்களுக்குள் பகிர்ந்து உண்டதெல்லாம் பழையகதை. தன் பசி தெரிந்த மனிதன் சக மனிதனின் பசியையும் உணர்ந்து கிடைத்ததைக் கொடுத்து உண்டது இனக்குழுச் சமூகத்தில். உடைமைச் சமூகத்தில்தான் தன் பசியும் சக மனிதர்களின் பசியும் பிரச்சனைக்குள்ளாயின.

இனக்குழுச் சமூகத்தில் உணவு வயிற்றுத் தேவைக்காகச் சேகரிக்கப்பட்டது. பசிக்கு உணவு என்பது அந்தச் சமூகத்து நிலை. உடைமைச் சமூகத்தில் உணவு உபரியாகச் சேகரிக்கப்பட்டு அல்லது படைக்கப்பட்டு ஒரு பிரிவினரின் உடைமையாக, செல்வமாக ஆக்கப்பட்டது. இவ்வகைச் சமூகத்தில் உபரியான உணவு அதை வைத்திருந்தவனுக்கு ஒரு தகுதியை, பெருமையைக் கூட்டியது. திருக்குறள் அரசனுக்குரிய ஆறு அங்கங்களில் ஒன்றாகக் கூழ் (உணவு) என்பதனைக் கூட்டிச் சொன்னது இதன்பொருட்டே.

உணவு உள்ளவன் உணவு இல்லாதவனுக்குப் பகிர்ந்தளித்த வேட்டைச் சமூகப் பழங்குடி வழக்கம் சங்க காலத்து குறுநிலத் தலைவர்கள் ஃ மன்னர்கள் என்று வருணிக்கப்பட்ட வள்ளல்களிடம் இயல்பாக இருந்தது. இந்தவகை உணவுப் பங்கீட்டில் கொடுப்பவன், பெறுபவன் என்ற ஏற்றத்தாழ்வு இருப்பதில்லை. இந்நிலை காலப்போக்கில் மாற்றமடைந்து உடைமைச் சமூகத்தில், உணவு உள்ளவன் உணவு இல்லாதவனுக்கு இரக்கத்தோடு உணவளித்தல், வழங்குதல், ஈதல் என்ற அறமாக மாற்றம் பெற்றது. இங்கே உணவைக் கொடுப்பவன், பெறுபவன் இடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டது. கொடுத்தல் ஈகை, பெறுதல் இரத்தல் என்றும் கொடுப்பவன் உயர்ந்தவன், பெறுபவன் தாழ்ந்தவன் என்றும் சமூக மதிப்பீடுகள் மாற்றம் பெற்றன. சக மனிதனுக்கு உணவு வழங்குவது ஈகை என்றானதும் இந்த ஈகை அறம் என்றானதும் இந்த உடைமைச் சமூகத்தில்தான்.

சங்க இலக்கியங்களில் ஈகை அறம்:
சங்ககாலச் சமூகம் இனக்குழுச் சமுதாய அமைப்பிலிருந்து உடைமைச் சமூகமாக மாறிக்கொண்டிருந்த ஒரு காலகட்டமாகும். சங்க இலக்கியங்களில் வேட்டையோடு தொடர்புடைய குறுநிலத் தலைவர்கள் தம்மை நாடிவந்த பாணர் மரபைச் சேர்ந்த பாணர், பொருநர், விறலியர், கூத்தர் முதலான கலைஞர் குழுக்களுக்கு இறைச்சியோடு கலந்த உணவும், கள்ளும், ஆடையும் வழங்கி மகிழ்ந்தமை சிறப்பாகப் பாராட்டப்படுகின்றது. சிற்றரசர்களின் இவ்வகை உபசரிப்பு அறத்தகுதி பெறவில்லை.

குறுநிலத் தலைவர்களின் இவ்வகை உபசரிப்பு குறித்த பாடல்கள் பல புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலைச் சான்றாகக் காண்போம். அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறித்து ஒளவையார் பாடிய பாடலின் பகுதி இது,
''புன்தலைப் பொருநன் அளியன் தான்எனத்
தன்உழைக் குறுகல் வேண்டி, என்அரை
முதுநீர் பாசி அன்னஉடை களைந்து
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி
முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்னடை
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற
அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கி
கொண்டி பெறுக என்றானே "

(புறநானூறு பா. 390)

'அதியமான் தன் நெடுமனை முற்றத்தில் நின்று முன்னிரவு நேரத்தில் தடாரிப் பறையை இசைக்கும் பொருநனைக் கண்டவுடன், இப்பொருநன் இரங்கத் தக்கவன் என்று கருதி அவன் இடையிலிருந்த நீர்ப்பாசியன்ன பழைய ஆடையை நீக்கி மலர் போன்ற புத்தாடையை அணியுமாறு செய்து மதுவோடு ஊன் துவையையும் சோற்றையும் வெள்ளிக் கலத்தில் இட்டு அதனை உண்பித்ததோடு அவன்சுற்றத்தாரது வறுமைத் துயரத்தையும் போக்க நெற்குவியலையும் கொடுத்தான் என்று ஒளவையார் பாடுகின்றார்.

மற்றுமொரு பாடல், 'பாணன் ஒருவன் ஓய்ந்த நடையினை உடையவனாய் வருத்தத்துடன் பலா மரத்தினடியில் தன் சுற்றத்துடன் தங்கியிருந்த போது அங்கு வந்த வில்லையுடைய வேட்டுவன் ஒருவன் விலங்கின் ஊனைத் தீயினில் சுட்டு அவர்களை உண்ணச் செய்ததோடு, தான் காட்டு வழியில் இருப்பதால் அவர்களுக்குக் கொடுப்பதற்கு வேறு பரிசுப் பொருள்கள் இல்லை என்றுகூறித் தனது மார்பில் அணிந்திருந்த முத்து வடங்களையுடைய ஆரத்தையும் முன்கைக்கணிந்த கடகத்தையும் கொடுத்தான் என்றும் அவனது பெயரையும் நாட்டையும் கேட்டபோது கூறாமல் போய்விட்டான் என்றும் வழியில் பிறரைக் கேட்டபோது அவன் கண்டீரக்கோ பெருநள்ளி என்பதைப் பாணன் அறிந்தான் என்றும் வண்பரணர், பெருநள்ளி என்ற குறுநிலத் தலைவனின் புகழ்விரும்பா வள்ளண்மையைப் புகழ்கின்றார்.

.. .. .. .. .. .. வீறுசால் நன்கலம்
பிறிதுஒன்று இல்லை, காட்டு நாட்டேம்என
மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்
மடைசெறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்
எந்நாடோ என நாடும் சொல்லான்
யாரீரோ எனப் பேரும் சொல்லான்

(புறநானூறு பா. 150)

தம்பெயர் மற்றும் ஊரின் பெயரைக் கேட்டும் சொல்லாமல், உணவும் பரிசிலும் வழங்கிச் சென்ற கண்டீரக்கோ பெருநள்ளியின் செயல், உடைமைச் சமூக அறம், ஈகை குறித்த சொல்லாடல்களிலிருந்து வேறுபட்டது.

ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் ஆய் அண்டிரனின் வள்ளண்மையைப் புகழும்போது

இம்மை செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறிஎன
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே

(புறநானூறு பா. 134)

ஆய் அண்டிரனின் கைவண்மை மறுமை நோக்கிச் செய்யப்பட்ட அறமன்று என்றும் அப்படி மறுமை நோக்கிச் செய்யப்படும் ஈகை அறம் அறத்தை விலைகூறி விற்கும் வணிகத்தை ஒத்தது என்றும் முடமோசியார் பாடுகிறார். அவர் பாடுவதிலிருந்து ஆய் மன்னன் காலத்திலேயே பாணர் மரபினரைப் பேணி உபசரிக்கும் அறமதிப்பு பெறாத பகுத்துண்ணும் மரபும் புலவர் மரபினரைப் போற்றிப் புரந்து பரிசில் வழங்கும் அறமதிப்புடைய ஈகை அறமும் வழக்கில் இருந்ததனைக் கவனத்தில் கொள்ளலாம்.
பாணர் மரபினரைப் புரக்கும் குறுநில மன்னர் /தலைவர்களின் செயல்களில் வரிசை அறிதல் இல்லை. ஆனால் புலவர் மரபினருக்கு வழங்கப்படும் ஈகையில் வரிசை அறிதல் உண்டு. வரிசை அறியாது மன்னன் தரும் பரிசில் புலவர்களால் கடியப்பட்டது. மலையமான் திருமுடிக்காரி புலவர்களிடத்துப் பொதுநோக்கு உடையவனாய் இருந்தமையைக் கபிலர் கடிந்து கூறிப் பாடிய பாடல் வருமாறு,

ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசை
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்
அதுநன்கு அறிந்தனை யாயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே

(புறநானூறு பா. 121)

ஈகை எளியசெயல், பரிசுபெற வந்தவர்களின் தகுதியை அறிந்து வழங்குவதுதான் அரியசெயல். எனவே புலவர்களைப் பொறுத்தமட்டில் பொது நோக்கைக் கைவிடுவாயாக என்கிறார் புலவர். அதியமான் நெடுமானஞ்சியிடம் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் பரிசில் பெறச் சென்றபோது, மன்னன் அவரை நேரில் காணாமலே அவருக்குப் பரிசுப் பொருள்களைக் கொடுத்தனுப்புகின்றான்.

காணா தீத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
திணையனைத் தாயினும் இனிதவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே

(புறநானூறு பா. 208)

ஷஷபல குன்றுகளும் மலைகளும் கடந்து வந்த என்னை நயந்து நேரில் காணாமலேயே, ''இப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு செல்க" என்று சொல்ல வேந்தன் எவ்வாறு என்தகுதியை அறிந்துகொண்டான். என்னைக் காணாமல் தந்த இப்பரிசுப் பொருள்களைப் பெற்றுச்செல்ல நான் வாணிகப் பரிசிலன் அல்லன். புலவர்களது கல்வி, புலமை முதலான தகுதிகளை அறிந்து விரும்பித் தினையளவு பரிசு கொடுத்தாலும் அதுவே நன்று என்கிறார் பெருஞ்சித்திரனார்.பாணர் மரபினருக்கு வரிசை அறிதல், அதாவது பெறுபவன் தகுதியைப் பற்றிய எந்த ஓர்மையும் இல்லாமல் அவன் பசி மற்றும் தேவைகளை மட்டுமே கருதி பகிர்ந்தளிக்கப்பட்ட /வழங்கப்பட்ட ஈகை, மாற்றம் பெற்றுப் புலவர் மரபினர்க்கு வழங்கப்படும் போது பசி மற்றும் தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வழங்குபவன் தகுதி, பெறுபவன் தகுதி முதலான அளவுகோல் களுக்கிடையே அறத்தகுதியும் பெறுவதாயிற்று. இவ்வகை ஈதலறம் கொடுப்பவன் பெறுபவனுக்கிடையிலான வணிகமாகவும் பரிணாமம் பெற்றது. வணிகத்தில் கொடுப்பது பெறுவது இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெறும். இவ்வகையில் கொடுப்பவன் பொருள்களைக் கொடுக்கிறான் கொடுத்ததற்கு மாற்றாக இவ்வணிகத்தில் எதைப்பெறுகிறான் என்றால் ஈத்துவக்கும் இன்பத்தையும் புகழாகிய இசையையும் பெறுகின்றான். பெறுபவன் நிலையிலிருந்து பார்த்தாலும் இந்தவகைப் பரிமாற்றம் நடைபெறுகின்றது. அறவிலை வணிகன் ஆஅய் அல்லன், வாணிகப் பரிசிலன் அல்லேன் முதலான சங்க இலக்கியச் சொல்லாடல்கள் அறம் வணிகமாகிப் போன நிலைமையை எதிர்மறையில் பதிவுசெய்கின்றன. சங்க காலத்திலேயே இம்மையில் ஒருவன் செய்த நன்மை மறுமையில் அவனுக்குப் பெரிய இன்பமாக வந்து விளையும் என்னும் கருத்து நிலைபெறத் தொடங்கிவிட்டது.

எத்துணை யாயினும் ஈத்தல் நன்றுஎன
மறுமை நோக்கிற்றோ அன்றே, பிறர்
வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே

(புறநானூறு பா. 141)

என்று வையாவிக் கோப்பெரும் பேகனின் கைவண்மையைப் புகழ்ந்துரைக்கின்றார் பரணர். இப்பாடலும் நமக்கு இருவகை ஈகையைச் சுட்டிக்காட்டுகின்றது. ஒன்று பிறர் வறுமை நோக்கிய ஈகை. மற்றொன்று தம் மறுமை நோக்கிய ஈகை. இரண்டாவது வகை ஈகையே அறத்தகுதி பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.

இல்லற அறம் ஈகையும் விருந்தோம்பலும்.
குழுத் தலைவர்களின், அரசர்களின், வேந்தர்களின் வழங்கல் மரபு பங்கிட்டுண்ணல், கொடுத்தல், ஈகை என்றெல்லாம் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து அறம் என்ற புதிய வடிவமெடுத்த பின்னர், இயல்பாகச் சக மனிதனின் பசியாற்றல் என்ற உயிர்ப் பண்பிலிருந்து மேலெழுந்த ஈகை, இல்லறக் கடமையாகவும், இல்லறத்தானின் கடமையாகவும் புதிய பரிமாணம் பெற்றது. இந்நிலை உடைமைச் சமூகத்தில், இல்- அறம் என்றானது. மன்னர்களைப் பாடிப் பரிசில்களாகக் கொண்டுவந்த பலவகைப் பொருட்களையும் தானே வைத்து அனுபவிக்க வேண்டும் என்று நினைக்காமல் எல்லோருக்கும் கொடு என்கிறார் ஒரு புலவர்.

நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னார்க்கு என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!

(புறநானூறு பா. 163)

''குமணவள்ளல் தந்த இந்த வளங்களை எல்லாம், கொடு, கொடு, எல்லோர்க்கும் கொடு, உற்றார் உறவினர்களுக்கும் நம்முடைய வறுமைக்காலத்தில் நமக்குத் தந்து உதவியவர்களுக்கும் கொடு. யாருக்குக் கொடுப்பது என்று யோசிக்க வேண்டாம். என்னைக் கேட்காமலேயே கொடு, இந்த வளங்களையெல்லாம் நாமே வைத்துக்கொண்டு வளமாக வாழலாம் என்றெல்லாம் நினைக்காமல் எல்லோர்க்கும் கொடு'' என்று மனமகிழ்ச்சியோடு மனைவிக்கு அனுமதி வழங்குகின்றார் பெருஞ்சித்திரனார்.

சங்க காலத்தில் உடைமைச் சமூக அமைப்பு மெல்லத் துவங்கி இறுக்கம் பெற்ற நிலையில் இருப்பவன் -இல்லாதவன் இடையிலான வேறுபாடு பெரிதாகத் தெரியத் தொடங்குகிறது. உடைமைச் சமூகத்தின் உடனடி விளைவான பசியும் பட்டினியும் சமூகச் சிக்கல்களாகின்றன. உடைமையாளர்களுக்குப் பிறர் பங்கைத் திருடிய குற்றஉணர்வு சிறிதுமில்லை. உடைமைச் சமூகத்தை நியாயப்படுத்தவும் இருக்கிற சமூக அமைப்பைக் கட்டிக் காக்கவும் உருவாக்கப்பட்ட அறங்கள், ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் உள்நோக்கத்தோடு கொடையை, ஈகையை, விருந்தோம்பலை முன்மொழிகின்றன. ஷசெல்வத்துப் பயனே ஈதல் என்கிறபோது ஈகைக்குப் பயன்படுகிற செல்வம், ஈகைக்காகவே செல்வம் என, செல்வம் நியாயப்படுத்தப்படுகிறது. உபரி உணவும் சொத்தும் பொருளும் அறத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால் குற்றமற்றதாகி விடுகின்றன.
''ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்''
(குறுந்தொகை- 63)
என்றும் பொருளைத் தேடுவதே பிறருக்குக் கொடுக்கத்தான் என்னும் பொருளில்
''பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமொடு
காமர் பொருட்பிணி போகிய நங்காதலர்''

(நற்றிணை- 186)
என்றும் சங்க இலக்கியங்கள் அறத்தின் பேரால் நியாயம் பேசின.

சஙக இலக்கியங்களில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில், உணவிடல் என்ற பலநிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, திருக்குறள் முதலான நீதி நூல்களில் சமண, பௌத்த மதச்சொல்லாடல்களுக்கு ஒப்பப் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது. அற்றார் அழி பசி தீர்த்தல் (குறள்- 226) ஈகை, வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (குறள்- 221) என்றெல்லாம் ஈகை அறம், பசி தீர்த்தல் அதுவும் வறியவனின் பசியைத் தீர்த்தல் என்ற பொருளில் வலியுறுத்தப்பட்டது. புகழ் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் ஈதலால் இசைபெறலாம் என்று ஈகையைப் புகழோடு இணைக்கின்றார். விருந்தோம்பல் என்ற சங்க இலக்கியத்து ஈகையைத் திருவள்ளுவர் இல்லறத்தான் கடமைகளில் ஒன்றாகத் தனித்து வலியுறுத்துகின்றார்.

வியாழன், 31 ஜனவரி, 2008

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு -பகுதி-ஒன்று

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு பகுதி-ஒன்று

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் திருக்குறள் தான் தோன்றிய காலந்தொடங்கி இன்றுவரை தமிழுலகில் நிலைத்து வாழ்ந்தும் தமிழர்களை வாழ்வித்தும் வருவது கண்கூடு.

ஓதற் கெளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் -தீதற்றோர்
உள்ளுந்தொ றுள்ளுந்தொ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

மாங்குடி மருதனாரின் இப்பாடல் திருக்குறளின் தனிப்பெருஞ் சிறப்பினைத் தெளிவு படுத்துகின்றது. படிப்பதற்கு எளிய சொற்களை உடையதாகவும் அறியப்படுவதற்கு அருமைப்பாடுடைய நுட்பமான பொருளை உடையதாகியும் வடமொழியில் சிறப்பித்துச் சொல்லப்படும் வேதங்களின் பொருளை உள்ளடக்கியும் அந்த வேதங்களை விடவும் சிறப்புபெற்றும் குற்றமற்றவர்கள் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அவர்களுடைய மனதை உருக்கக் கூடியதாகவும் வள்ளுவர் வகுத்துத்தந்த திருக்குறள் விளங்குகிறது என்பது மாங்குடி மருதனாரின் பாடல் கருத்து. திருக்குறள் கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளில் எத்தனையோ சமய, இன, மொழித் தாக்குதல்களை எல்லாம் வென்று காலம் கடந்து இன்றும் நிலைத்து நிற்பதற்குப் பல காரணங்கள் உண்டு, அவற்றுள் தலையாய காரணம் அதன் பொதுமைப்பண்பு. மொழி, இனம், நாடு கடந்த உலகப் பொதுமைநலம் வாய்ந்த அறங்களைப் பேசுவதால் திருக்குறள் உலகப் பொதுமறை என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே திருவள்ளுவ மாலை,

வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு (திரு.மா.47)

என்று திருக்குறளைப் புகழ்ந்து பேசுகின்றது. தொல்காப்பியத்துள்ளும் (இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை -தொல், களவியல்.1) சங்க இலக்கியத்தும் (அறனும் பொருளும் இன்பமும் ஆற்றும் பெரும நின் செல்வம் -புறம்,28) சிறப்பித்துச் சொல்லப்பட்ட அறம் பொருள் இன்பம் என்ற தமிழர் தம் தனிப்பெரும் உறுதிப்பொருள் கோட்பாட்டினைச் சிறப்பித்து முப்பாலாய் நூல் செய்த திருவள்ளுவரின் பெருமை அளவிடற்கரியது. எனவேதான் திருக்குறள் முப்பால் என்ற பெயராலேயே சிறப்பித்து வழங்கப்படுகிறது.

திருக்குறளும் உரைகளும்:

சற்றேறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த பிறகும் கூட திருக்குறளின் மொழிநடை இன்றும் எளிதில் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இருக்கின்றது. திருக்குறளின் காலத்தை ஒட்டிய சங்க இலக்கியங்களுக்கோ, சங்கம் மருவிய கால இரட்டைக் காப்பியங்களுக்கோ இத்தகு மொழிநடை அமையவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவேதான் மாங்குடி மருதனார் ஓதற்கு எளிதாய் என்றார். இத்தகு எளிய நடையைக் கொண்டிருந்தும் திருக்குறளுக்கு எண்ணிலடங்கா உரைகள் காந்தோறும் தோன்றிவருவது ஏன்? என்ற வினா எழுதல் இயல்பே, உணர்தற்கு அரிதாகி என்று அதற்கும் விடை சொல்கின்றார் மாங்குடி மருதனார்.

காலந்தோறும் திருக்குறளுக்கு உரைகள் தோன்றிவருவது திருக்குறளின் சிறப்புக்களில் ஒன்று. பரிமேலழகருக்கு முன் திருக்குறளுக்கு ஒன்பது உரைகள் தோன்றின. பத்தாவது உரையாகக் குறளுக்குப் பரிமேலழகரின் சீர்மிகு உரை தோன்றியது. பரிமேலழகரின் நுட்பமான உரைக்குப் பின்னும் கூட இன்று வரைக் கணக்கற்ற உரைகள் குறளுக்குத் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. திருக்குறளுக்கு நேரே உரை எழுதியவர்களே அல்லாமல் இளங்கோ அடிகள், சீத்தலைச் சாத்தனார், சேக்கிழார், கம்பர் போன்ற புலவர் பெருமக்கள் தம் நூல்களில் ஆங்காங்கே திருக்குறள் பகுதிகளை எடுத்தாண்டு, விளக்கமும் கூறியுள்ளனர். அப்பகுதிகளை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்த்தால் அச்சான்றோர்கள் திருக்குறளுக்குச் செய்யுள் வடிவில் உரைவிளக்கம் கூறி இருப்பது வெளிப்படும். பிற்காலத்தில் நீதி நூல்களை இயற்றிய சான்றோர்களும், திருக்குறளுக்குச் செய்யுள் வடிவில் உரை இயற்றியுள்ளனர். (மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள், ப.337)

திருக்குறளுக்கு உரை எழுதாமல் வேறு நூல்களுக்கு உரை வரைந்த உரையாசிரியர்கள் சிலர் தத்தம் உரைகளில் தேவையான இடங்களில் குறட்பாக்கள் சிலவற்றிற்கு உரை எழுதியுள்ளனர். சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் ஆகியோர் தம் உரைகளில் வாய்ப்பு நேர்ந்தபோது திருக்குறள் சிலவற்றிற்கு உரை கண்டுள்ளனர். அவ்வுரைகள் புதிய கருத்துக்களுடன் திருக்குறளுக்கு அணி செய்கின்றன.திருக்குறளின் பழைய உரையாசிரியர் பெயர்களைக் குறிப்பிடும் பழம்பாடல்,

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் -திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்

என்று பத்து உரையாசிரியர்கள் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. இப்பத்து உரைகளில் இன்று பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய ஐவர் இயற்றிய உரைகள் கிடைத்துள்ளன. ஏனையோர் உரைகள் கிடைக்கவில்லை. இந்தப் பத்து உரைகளே அன்றி இயற்றியவர் பெயர் தெரியாத மேலும் இரண்டு பழைய உரைகளும் திருக்குறளுக்கு உண்டு. பிற தமிழ் இலக்கிய இலக்கண நூல்களுக்கு இல்லாத அளவில் திருக்குறளுக்கு மட்டும் இத்துணை உரைகள் தோன்றியும் தோன்றிக் கொண்டேயும் இருக்கக் காரணங்கள் என்ன? திருக்குறளுக்கு ஒவ்வொருவரும் வேறு வேறு பதிய பொருள்களைக் காண முயன்றதும் கண்டதும்தான். குறளுக்கு வரையப்பட்ட இந்த உரை வேறுபாடுகள்தாம் புதிய புதிய உரைகள் தோன்றுவதற்குக் காரணமாயின. குறளின் உரை வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன?,திருக்குறள் உரை வேற்றுமைகளை நன்கு ஆராய்ந்து வெளியிட்ட இரா.சாரங்கபாணி உரை வேற்றுமைகளுக்கான காரணத்தைப் பின்வருமாறு உரைக்கின்றார்,

ஏடெழுதுவோர் பிழையால் புகுந்த பாட வேறுபாடுகளும், குறளைப் பிரிக்கும் முறைகளும் சொற்களைக் கொண்டு கூட்டும் நெறிகளும், காலத்தால் சொற்கள் எய்திய பொருள் வேறுபாடுகளும், சமுதாயத்தின் பழக்க வழக்க மாறுபாடுகளும் இயல்பாகவே உரை வேற்றுமைகட்கு இடங்கொடுத்து விட்டன. புற நாகரீகச் சார்பும் சமயச் சார்பும் அரசியற் சார்பும் முன்னிற்க, வலிந்து வேறுபட்ட உரைகளை எழுதினோரும் உளர். (மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள், ப.340)

மேற்கூறிய காரணங்கள் மட்டுமில்லாமல் திருக்குறளின் அமைப்பே அதற்குப் பல உரைகள் பெருகுவதற்குக் காரணமாய் அமைந்துள்ளது. குறளின் மிகச்சிறிய ஏழு சீர்களே கொண்ட யாப்பு வடிவமே உரைகள் பெருகுவதற்கு முதல்காரணம். விரித்துச் சொல்ல வாய்ப்பில்லாமல் பொதுவாகக் குறிப்பிட்டு அறங்களைக் கூறும் போக்கினால் உரையாசிரியர் விரித்துக் கூற முற்படும்போது பொருள் வேறுபாடுகள் தோன்றுவது இயற்கையே. கால வேறுபாடு அல்லது காலத்தின் தேவை சில குறட்பாக்களைப் புதிய நோக்கில் வாசிக்க இடந்தருகிறது. எனவே காலமாற்றங்களும் புத்துரைகளுக்குக் காரணங்களாகின்றன.

உரையாசிரியர் கலைஞர்:

அரசியல் அரங்கில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் தமிழவேள் டாக்டர் கலைஞர் என்று சிறப்பிக்கப்படும் மு.கருணாநிதி அவர்கள் இலக்கிய உலகிலும் தன்னேரில்லாத படைப்புகள் பலவற்றைப் படைத்துத் தமிழிலக்கிய உலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே.கலைஞர் தம் பன்னிரண்டாம் வயதில் எழுதத் தொடங்கி இன்றுவரை எழுதிக்குவித்த இலக்கியங்கள் எத்தனையோ. நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் இருபதிற்கும் மேற்பட்ட நாடக நூல்களையும் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைக்கதை உரையாடல்களையும் உருவாக்கியுள்ள கலைஞர் ஒரு பன்முகப் படைப்பாளி. கலைஞரின் இலக்கியப் படைப்புக்களை எட்டு வகையாகப் பாகுபடுத்தலாம்.

1. கவிதைகள்
அ. கவியரங்கக் கவிதைகள், ஆ. திரைப்படப் பாடல்கள், இ. தனிப்பாடல்கள்

2. கதைகள்
அ. சிறுகதைகள், ஆ. குறும் புதினங்கள், இ. புதினங்கள்

3. நாடகங்கள்
அ. ஓரங்க நாடகங்கள், ஆ. முழு நாடகங்கள்

4. காப்பியங்கள்

5. மடல்கள்

6. சொற்பொழிவுகள்

7. இலக்கிய விளக்கங்கள்

8. இலக்கிய இலக்கண உரைகள்

என்பன கலைஞரின் இலக்கியப் படைப்பின் வகைப்பாடுகளாகும். இலக்கண இலக்கிய உரைகள் என்ற எட்டாம் வகைப்பாட்டில் அடங்கும் நூலே கலைஞரின் திருக்குறள் உரை ஆகும். தமிழன் நாளேட்டில்தான் கலைஞரின் திருக்குறள் உரை முதன் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் முரசொலி நாளேட்டில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெளிவந்து முழுமைபெற்றது. திருக்குறள் கலைஞர் உரை என்ற பெயரில் நூலாக வெளிவந்த ஆண்டு 1996.

திருக்குறள் கலைஞர் உரை:

கலைஞர் குறளோவியம் என்ற பெயரில் முந்நூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களுக்கு விரிந்த அளவில் சொல்லோவியமாய்த் தீட்டிய குறள் உரை இலக்கியம் தமிழுக்குக் கிடைத்த ஓர் புத்திலக்கியம் எனும் பாராட்டையும் பெற்றது. குறளோவியத்தின் வெற்றி திருக்குறள் முழுமைக்கும் உரையெழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பை எனக்குள் ஏற்படுத்தியது என்று உரையாசிரியர் கலைஞரே உரையெழுதியதற்கான காரணத்தைத் தம் நூல் முன்னுரையில் குறிப்பிடுவார்.தம்முடைய உரையின் நோக்கத்தையும் அமைப்பையும் உரையெழுதுகையில் கையாண்ட நெறிமுறைகளையும் முன்னுரையில் உரையாசிரியரே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள பொருளன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மைநிலையைக் கடைபிடித்து, நான் எண்ணுவது போல் அவர் எண்ணினாரா என்று நோக்காமல் அவர் எண்ணி எழுதியது என்ன என்பதை அறிவதில் மட்டுமே அக்கறை கொண்டு என் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டிய வரையில் இந்தப் பொன்னாடையை நெய்துள்ளேன் (உரை எழுதியுள்ளேன்).

இந்த முன்னுரைப் பகுதியில் உரையாசிரிர் கலைஞர் உரை எழுதுவதற்கான நெறிமுறைகள் சிலவற்றை வகுத்துத் தருகின்றார்.

1. உரையெழுதப் போகும் நூலின், நூலாசிரியனின் காலத்து நம்பிக்கைள், பண்பாடுகள், அவைகள் குறித்த நூலாசிரியன் பார்வை என்ன என்பதையெல்லாம் உரையாசிரியர் அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.

2. நூலாசிரியன் கருத்துக்கு மாறாக வலிந்து உரையாசிரியர் தம் கருத்துக்களை உரையில் திணித்தல் கூடாது.

3. உரையாசிரியர் எண்ணுவதை விட நூலாசிரியன் எண்ணியதற்கே முதன்மை அளித்தல் வேண்டும்.

4. உரையாசிரியர் தம் அறிவையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தி உரை வரைதல் வேண்டும்.

மேற்கூறிய நெறிமுறைகள் கலைஞரால் வகுத்துக் கொள்ளப்பட்ட நெறிமுறைகள். இந்த நெறிமுறைகளைப் பின்பற்றியே இவர் தமது உரையை எழுதிச் செல்கின்றார் என்பதும், எந்த இடத்திலும் தாம் வகுத்துக்கொண்ட நெறிமுறைகளுக்கு மாறாக அவர் உரை எழுதவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கடவுள் வாழ்த்தா? வழிபாடா?

திருக்குறளின் அதிகார வரிசைமுறை, குறள் வரிசைமுறை, அதிகாரப் பெயர்கள் முதலான நூலின் அமைப்புமுறை ஒவ்வொரு உரையாசிரியருக்கும் வேறுபடுகின்றது. எனவே இன்று நாம் காணும் திருக்குறள் அமைப்பு முறை திருவள்ளுவர் வடிவமைத்ததல்ல என்ற கருத்து அறிஞர் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உரையாசிரியர்கள் பலரும் பல இயல் பகுப்புகளில் மாற்றம் செய்தும் அதிகாரங்களை இயல் மாற்றி வகைப்படுத்தியும் அதிகாரத்திற்குள் வரும் குறட்பாக்களை இடம் மாற்றியும் அமைத்து உரை வகுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறளின் முதல் அதிகாரப் பெயராக இருந்துவந்த கடவுள் வாழ்த்து என்ற பெயரைக் கலைஞர் வழிபாடு என்று பெயர்மாற்றம் செய்கின்றார். கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத் தலைப்பை வழிபாடு எனக் குறித்துள்ளேன். வள்ளுவரைக் கடவுள் மறுப்பாளர் அல்லது கடவுள் நம்பிக்கையாளர் எனும் வாதத்திற்குள் சிக்கவைக்க நான் விரும்பவில்லை. வழிபாடு எனும் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களுக்கு நான் எழுதியுள்ள உரைகளைக் கொண்டு இதனை உணரலாம்.என்று உரையாசிரியர் முன்னுரையில் குறிப்பிடும் பகுதி இது. கடவுள் கோட்பாட்டை மறுக்கவோ மறைக்கவோ நான் அதிகாரத் தலைப்பை மாற்றவில்லை என்று எழுதும் கலைஞர், வழிபாடு எனப் பெயர் மாற்றம் செய்ததற்கான காரணத்தைத் தம் முதலதிகார உரையில் வெளிப்படுத்துகின்றார். பத்து குறட்பாக்களில் எங்கும் கடவுள் சொல்லோ வாழ்த்தோ இடம் பெறவில்லை. மாறாக வணக்கத்திற்குரிய பெருந்தகையாளரை வழிபடுதல் பற்றிய செய்திகளே காணக் கிடைக்கின்றன. அடி சேர்தல், தாள் சேர்தல் என்ற சொற்களுக்கெல்லாம் அடியொற்றி நடத்தல் என்றே உரை கூறுகின்றார் கலைஞர். தன் உரையின் வழி வழிபாடு என்ற பெயரே முதலதிகாரத்திற்குப் பொருந்தும் என நிறுவுகிறார் அவர்.

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள்:

கலைஞரின் திருக்குறள் உரை நூலுக்குப் பதிப்புரை எழுதிய பேராசிரியர் மா.நன்னன் அப்பதிப்புரையை ஓர் ஆய்வுரையாகவும் வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்னன் கலைஞர் உரையின் சிறப்பியல்புகளைக் குறிப்பிடும் போது,இவர் மரபுப் பொருள், சொற்பொருள், தெளிவுப் பொருள், சுருக்கப் பொருள் என்பன போன்ற முறையில் பொருள் கூறிச் செல்லாமல் இக்காலத் தமிழன் ஒரு குறளைப் படித்தால் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை இற்றெனக் கிளந்து, தெற்றெனக் காட்டுவதையே தம் உத்தியாகக் கொண்டுள்ளார் எனத் தெரிகிறது.என்று கலைஞர் உரையின் தனித்தன்மையை, அதன் புரிதலை, அதன் எளிமையை உத்தியாக எடுத்துக் காட்டுகின்றார். புலவரேறு அரிமதி தென்னகன் திருக்குறள் கலைஞர் உரை ஒரு பார்வை என்ற நூலில் கலைஞர் உரையின் தனித்தன்மையைப் பின்வருமாறு விளக்கியுரைக்கின்றார்.

அது பதவுரையா? இல்லை! தோலுரித்த பழம் போன்ற பொழிப்புரையா? இல்லை! பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கிய சுளைகளைப் போன்ற சுருக்கமான கருத்துரையா? இல்லை! கனியைப் பிழிந்திட்ட சாறு என்பார்களே அத்தகைய கனியுரையே கலைஞர் உரை! ஆம் குறளின் பிழிவே கலைஞர் உரை என்பதே உண்மை. .. அதுதான் எளிமை! அதுவே இனிமை! அதுதான் தெளிவு! அதுதான் தேவை!.. (அரிமதி தென்னகன், திருக்குறள் கலைஞர் உரை ஒரு பார்வை, ப.129)

கனியைப் பிழிந்திட்ட சாறு போல் எளிமையின் வடிவாகவே கலைஞர் உரை அமைந்துள்ளது எனக்குறிப்பிடும் புலவரேறு, கலைஞர் உரையின் சிறப்பியல்புகளாக மேலும் சில செய்திகளைக் குறிக்கின்றார். அவை,

1.குறளிலிருந்து பெறும் பொருளைவிடக் குறளால் உணரப்படும் செய்தியே எளிமையானதாக அமையும் என்பதில் கலைஞர் உறுதியாக நின்றுள்ளார்.

2.அறிவால் பெறப்படும் செய்தியைவிட நெஞ்சால் உணரப்படும் செய்தியை உரையாகத் தருவதே, சேர வேண்டிய இடத்திற்கு எளிதாகக் கொண்டு செல்லும் என்னும் நோக்கமே கலைஞர் உரையாகப் பொலிவு பெற்றுள்ளது.

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு- பகுதி இரண்டு

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு- பகுதி இரண்டு

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

கருத்துரை கூறுவதில் புதிய உத்திகள்:

பதவுரை என்றால் எல்லாச் சொற்களுக்கும் உரை கூற வேண்டும். பொழிப்புரை என்றால் எல்லாச் சொற்களுக்குமான உரையைத் தொடர்ச்சியாகத் தருதல் வேண்டும். கருத்துரை என்றால் எல்லாச் சொற்களுக்கும் உரைகூற வேண்டுமென்ற தேவையில்லை, பொழிப்புரையைச் சுருக்கித் தந்தால் போதுமானது. கலைஞரின் உரை பதவுரையும் இல்லை. பொழிப்புரையும் இல்லை. ஒருவகையில் கருத்துரை என்று சொல்லத்தக்க அளவில் தம் உரையை வரைந்துள்ளார். கருத்துரையிலேயும் எளிதில் புரிதல் என்னும் புதிய நடைமுறை ஒன்றை உத்தியாக வகுத்துக்கொண்டு உரை வரைகின்றார் கலைஞர்.

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
குறள்: 49

கலைஞர் உரை: பழிப்புக்கு இடமில்லாத இல்லாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.மேலே குறிப்பிட்ட குறளில், சுருக்கத்திற்கே பெயர் பெற்ற திருக்குறளுக்கு உரை விளக்கம் அதைவிடச் சுருக்கமான வடிவில் கலைஞரால் வடிக்கப்பட்டுள்ளது. ஏழு சீரால் அமைந்த குறளுக்கு ஆறு சீரால் உரை. குறளின் எந்தச் சொல்லையும் உரையாசிரியர் புறக்கணிக்கவில்லை. குறம் கூறும் செய்தியின் ஆழமும் அழுத்தமும் உரையிலேயும் பொதித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறளுக்கும் உரைக்கும் என்ன வேறுபாடு என்றால், எளிமை, இனிமை, சுருக்கம், புரிதல் நான்கும் உரையில் மேலோங்கியுள்ளது. மேலே குறிப்பிட்ட குறளுரையின் சீர்மையையும் பெருமையையும் முற்ற முழுதாக உணரவேண்டுமென்றால் இக்குறளின் பிற உரைகளோடு கலைஞர் உரையை ஒப்பிட்டுப் பார்த்து உணரலாம். கலைஞர் உரையின் பெரும்பகுதி இவ்வகையில் அமைந்த சுருக்க உரையாகவே அமைந்திருப்பது இவ்வுரை நூலின் சிறப்பு. கருத்துரையில் இடைப் பிற வரல் எனும் புதிய உத்தியைக் கையாண்டு உரையின் எளிமைக்கு பலம் சேர்க்க்கின்றார் கலைஞர்.

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
குறள்: 128

கலைஞர் உரை: ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல் பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.அடக்கமுடைமை எனும் அதிகாரத்தில் வரும் மேற்கூறிய குறளுக்குப் பரிமேலழகரின் உரைக்கு மாறுபட்டு எளிய, புதிய உரை கூறவந்த உரையாசிரியர் கலைஞர் உரைப் பொருள் எளிமையாக விளங்குதல் பொருட்டு ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல் என்ற நடைமுறையில் உள்ள பொருத்தமான உவமை ஒன்றை எடுத்துக்காட்டி உரை வகுக்கின்றார். பரிமேலழகர் நன்றாகாதாகி விடும் என்ற குறள் பகுதிக்கு, பிற அறங்களால் உண்டான நன்மை தீதாய்விடும் என்று சொன்ன உரையை விட, பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும் என்று கலைஞர் உரைக்கும் உரையே அனுபவ உரையாக பொருத்தமான உரையாக அமைந்து சிறக்கின்றமை உரையில் இடைப்பிறவரலாக அவர் அமைத்த பழமொழியின் உதவியால் எளிதில் விளங்குகிறது. பழமொழியை இடைப்பிறவரலாக இணைத்துத் தம் கருத்துரையில் புதுமை சேர்த்தது போலவே மேலும் பல குறள் உரைகளில் சில புதிய சொற்களை வருவித்து உரைத்து உரைவழங்கும் உத்தியைச் சிறப்பாகக் கையாளுகின்றார். சான்றாக,

உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
குறள்: 339

கலைஞர் உரை: நிலையற்ற வாழ்க்கையில் உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு, திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு இக்குறள் உரையில் குறளில் இல்லாத புதிய சொல்லாக நிலையற்ற வாழ்க்கையில் என்று சேர்த்து நிலையாமை என்ற அதிகாரப் பொருளை நினைவு கூர்கின்றார். மேலும் திருவள்ளுவர் உறங்குவது போலும் சாக்காடு என்று சொன்ன குறட்பகுதிக்கு விளக்கம் சொல்லும் போது மீளா உறக்கம் கொள்வதே இறப்பு என, மீளா என்ற புதிய சொல்லை இணைத்து உரை காண்கின்றார். உறக்கமே இறப்பு என்பதற்கும் மீளா உறக்கமே இறப்பு என்பதற்கும் ஆழமான பொருள் வேறுபாடு உண்டு. மீளா உறக்கம் என்பதில் பிறப்பு இறப்புச் சுழற்சி இல்லை. மறுபிறப்பு இல்லை. பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் இவை முதலான ஆன்மா தொடர்பான கருத்தியல்கள் ஏதும் இல்லை. பிறப்பு இறப்பு என்ற இரண்டுக்கு மட்டுமே இடம் உண்டு. கலைஞர் உரையின் நுட்பமும் ஆழமும் இதுபோன்ற உரை உத்திகளில்தாம் சிறப்புற வெளிப்படுகின்றன. கருத்துரைகளில்தான் எத்துணை புதுமை செய்கின்றார் உரையாசிரியர் கலைஞர். சொல்லுக்குச் சொல் என்று சுருக்கி உரை சொல்ல வந்த கலைஞர் சில குறட்பா உரைகளில் சொல்லுக்குச் சொல் அடைகொடுத்துச் சிறப்பிக்கும் உத்தியைக் கையாண்டு பல குறட்பாக்களின் நுட்ப விளக்கங்களை யெல்லாம் ஒரே குறட்பாவில் விளங்கிக் கொள்ள வைக்கின்றார்.

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
குறள்: 381

கலைஞர் உரை: ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண்சிங்கம் போன்ற அரசாகும்.இக்குறளுக்குப் பரிமேலழகர் படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன் அரசருள் ஏறு போல்வான் என்று இயல்பாக அடுக்கி உரை சொல்ல, கலைஞரோ அடைமொழிகளை யெல்லாம் இணைத்து அரிய உரையொன்றை இக்குறளுக்கு வழங்குகின்றார். ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் என்ற பகுதியில் மோனைகளால் சிறந்து விளங்கும் கவிதை நடையைக் கண்டு இன்புற முடியும். இயல்பாகவே பேச்சிலும் கவிதைநடை மிளிரும் ஆற்றல் மிக்க கலைஞர் குறள் உரையிலும் கவிதை நடையைக் கையாண்டு அழகு சேர்த்துள்ளமையை ஒரு புதிய உத்தி என்றே கொள்ள வேண்டும். இந்த அடைமொழிகள் அழகுக்காகக் கோர்க்கப்பட்ட அணிகலன்களாக இல்லாமல் அரசனின் ஆறு அங்கங்களையும் விளக்கிக் கூறும் ஆற்றல் வாய்ந்த விளக்கங்களாக அமைந்துள்ளமை கண்கூடு. வரும் குறட்பாக்களில் பொருட்பாலில் விவரித்துச் சொல்லப்போகும் ஆறு அங்கங்களின் விளக்கங்களையும் ஒரே குறள் உரையில் பெய்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார்.

கருத்துரையில் ஒரு புதுமை: (சொல்லியதும் சொல்லாததும்)
கலைஞர் உரையில் எளிமை மட்டுமல்ல ஏராளமான புதுமைகளும் உண்டு. திருக்குறள் பல சமயங்களில் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லாமல் வேறொன்றைச் சொல்லி, சொல்ல வந்ததைக் குறிப்பால் உணர்த்திவிடும். பீலி பெய் சாகாடும்.., நுனிக்கொம்பர் ஏறினார்.., கடலோடா கால்வல் நெடுந்தேர்.., போன்ற குறட்பாக்களை இவ்வுத்திக்குச் சான்றாகக் காட்டலாம். அணி நூலார் இதனை ஒட்டணி என்றுரைப்பர். கலைஞரோ தம் திருக்குறள் உரையில், திருவள்ளுவர் நேரடியாகச் சொன்ன ஒரு குறள் செய்தியை விளக்கும் போது அதனோடு தொடர்புடைய பிறிதொரு அறத்தையும் நினைவு படுத்தி ஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போல திருக்குறள் சொல்லியதையும் சொல்கிறார் சொல்லாததையும் சொல்கிறார்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
குறள்: 17

கலைஞர் உரை: ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும். மேற்காட்டிய குறள் உரையில் திருவள்ளுவர் சொன்னது, ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் என்ற செய்தி. திருவள்ளுவர் சொல்லாதது, மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும் என்ற செய்தி. கடலிலிருந்து நீரை முகக்கிற மேகம் மீண்டும் அந்தக் கடலுக்கு மழையாகப் பொழிந்து நீரை வழங்க வேண்டியது அதன் கடமை. மேகம் அப்படிச் செய்யவில்லை யென்றால் அளப்பரிய அந்தக் கடல்கூட வற்றிவிடும். அதே போல் மனித சமுதாயத்தில் பலப்பல நன்மைகளைப் பெற்று உயர்ந்து புகழ் பெற்றவர்களும் மீண்டும் அந்தச் சமூகத்திற்குத் தொண்டு செய்து பயன்பட வேண்டும் அது அவர்களின் கடமை. அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால் சமூகமும் அழிவை எதிர்கொள்ள வேண்டிவரும் என்ற எச்சரிக்கையை இடமறிந்து பொருள் பொருத்தமறிந்து சொன்ன உரையாசிரியர் கலைஞரை வியக்காமலிருக்க முடியாது. உடன் ஒன்று சேர்த்துச் சொல்லல் என்ற இந்த உத்தி கலைஞர் கையாளும் தனித்துவம் வாய்ந்த உத்தி என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

உரை மரபை மீறும் உத்தி:
மூல நூலாசிரியன் சொல்லுகிற கருத்தை வலியுறுத்திக் கூறுவதும் விளக்கமளிப்பதும் மட்டுமே உரையாசிரியன் பணி என்பது மரபார்ந்த உரைநூல்களின் இலக்கணம். ஆனால் கலைஞர் உரை இந்த உரை மரபிலிருந்து மாறுபடுகின்றது. உரை மரபுகளை மீறுதல் என்பதையே ஒரு உத்தியாகக் கையாண்டு பல குறட்பாக்களுக்கு விளக்கமளித்துள்ளார் உரையாசிரியர் கலைஞர்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
குறள்: 319

கலைஞர் உரை: பிறர்க்குத் தீங்கு விளைவித்து விட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே, அதே போன்ற தீங்கு அவரையே தாக்கும்.இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் வரும் இக்குறட்பாவிற்குக் கலைஞர் கூறும் உரையை நுணுகிப் பார்த்தால் இரண்டு புதிய செய்திகளை அவர் பதிந்துள்ளது தெரியவரும். ஒன்று, இன்னா செய்யின் என்று மட்டுமே மூல நூலாசிரியன் சொல்லியிருக்க உரையாளரோ தீங்கு விளைவித்து விட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே என, தீங்கு செய்தவரின் மகிழ்ச்சியைப் பதிவு செய்கிறார். ஒருவர் மனமறிந்து அல்லது வேண்டுமென்றே தீங்கு செய்தால் அதாவது பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடிய நெஞ்சினராக இருந்தால் அவர் செய்த தீமை அவருக்கே வந்து மூளும் என்று புதிய விளக்கம் தருகிறார். அறியாமல் பிறர்க்கு தீங்கு விளைவித்து விட்டவர்களுக்கு இவ்விதி பொருந்தாது என்பது உரையாசிரியரின் மற்றுமொரு உட்கருத்து.இரண்டாவது, பிறருக்கு நாம் முற்பகலில் தீங்கு செய்தால் பிற்பகலிலேயே நமக்குத் தீங்கு வந்து சேரும் என்று திருவள்ளுவர் தம் குறளில் சொல்லியிருக்க உரையாசிரியரோ, ஒருவர் பிறர்க்குத் தீங்கு செய்ததை நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே அதேபோன்ற தீங்கு அவரைத் தாக்கும் என்று உரை செய்துள்ளார். முற்பகல் பிற்பகல் என்று கால வேறுபாட்டை மூல நூலாசிரியன் சொல்லியிருக்க, கலைஞரோ கால இடையீடின்றி உடனே தீங்கு செய்தவனைத் தாக்கும் என்கிறார். இந்த உரை வேறுபாட்டினைக் கூர்ந்து கவனித்தால் அறத்தை வலியுறுத்துவதில் மூல நூலாசிரியனை விட உரையாசிரியர் வேகம் காட்டுகிறார் என்பது புலனாகும். இப்போக்கு உரை மரபுக்கு மாறானது என்றாலும் கூட இதனையே ஓர் உத்தியாகக் கையாண்டு வெற்றிபெற்றுள்ளார் உரையாசிரியர் கலைஞர் என்பதை உணரமுடியும்.

புதிய விளக்கங்களை இணைக்கும் உத்தி:
உரையாசிரியர்கள் மூல நூலுக்கு உரை எழுதும் போது, தாம் எழுதும் இவ்வுரைக்கு முன் தோன்றிய உரைகள் அனைத்தையும் படித்து உள்வாங்கி எழுதுவது வழக்கம். அப்படி உரை வகுக்கும்போது பிறர் உரைகளை ஏற்று எழுதுவதும், மறுத்து அல்லது மாறுபட்டு எழுதுவதும் வழக்கமான நடைமுறைகளாகும். உரையாசிரியர்கள் சிலர் பழைய உரைகளோடு ஒத்துப் போகும் இடங்களில் கூடச் சில சொற்களுக்குப் புதிய விளக்கங்களை இணைத்துத் தமது உரைக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்றிவிடுவதுண்டு. உரையாசிரியர் கலைஞர் குறளுரையின் பல இடங்களில் இத்தகு உத்தியைக் கையாண்டுதம் உரைக்குப் புதுமை சேர்க்கின்றார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை.
குறள்: 43

கலைஞர் உரை: வாழ்ந்து மறைந்தாரை நினைவு கூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல், ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்கு உரியனவாம்.இல்வாழ்க்கை அதிகாரத்தில் வரும் மேற்குறிப்பிட்ட குறளுக்குப் பரிமேலழகர் பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம் என்று உரை எழுதுகின்றார். ஆனால் கலைஞரோ இக்குறள் உரையில் மூன்று புதிய விளக்கங்களை இணைத்துப் புத்துரை படைக்கின்றார்.

1. தெய்வம் என்று குறள் குறிப்பிடும் சொல்லுக்கு தேவர் என்று பொருள் கூறுகின்றார் பரிமேலழகர். கலைஞரோ தெய்வம் எனடபதற்கு வாழ்வாங்கு வாழ்வோர் என்று பொருள் காணுகின்றார்.

2. ஐவருக்கும் செய்யும் அறங்கள் என்று பொதுப்பட பரிமேலழகர் உரை சொல்லியிருக்க, கலைஞரோ ஒவ்வொரு அறத்தையும் நினைவு கூர்தல், போற்றுதல், ஓம்புதல், பேணுதல், நிலைப்படுத்திக் கொள்ளல் என்று விளக்கி விரிவுரை செய்கின்றார்.

3. இல்வாழ்வான் அறநெறியை வழுவாமல் செய்ய வேண்டிய இடங்கள் ஐந்தினைக் குறிப்பிடும்போது, தான் என்று இல்வாழ்வானையும் இணைத்துக் கொள்கின்றார். இல்வாழ்வான் தனக்கே அறநெறி வழுவாமல் எப்படி? என்ன? செய்துகொள்ள முடியும் என்ற மயக்கம் இவ்வுரையில் தோன்றுகிறது. உரையாசிரியர் கலைஞரோ இத்தகு குழப்பத்திற்கு இடமில்லாமல் உரை எழுதுகின்றார். எப்படியெனில், வாழ்ந்து மறைந்தாரை நினைவு கூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல், ஆகிய நான்கு கடமைகளையும் நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் என்று ஐந்தாவதாக இடம்பெறும் தான் என்பதற்கு விளக்கம் கூறிக் குறளுரையை முழுமை செய்கின்றார்.

புதிய விளக்கங்களை இணைக்கும் இவ்வுத்தி கலைஞரின் உரை உத்திகளில் தனிச்சிறப்பானதாகும்.காமத்துப்பாலில் இடம்பெறும்,

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
குறள்: 1311

மேற்கூறிய புலவி நுணுக்கம் அதிகாரப் பாடலில் பரத்த நின் மார்பு என்பதற்குப் பரத்தமை ஒழுக்கம் உடையவனே என்று எல்லா உரையாசிரியர்களும் உரை கூற, கலைஞரோ பரத்த என்பதை வலித்தல் விகாரமாகக் கொண்டு பரந்த நின் மார்பு என்று புதிய விளக்கம் தருகின்றார். இப்புதிய விளக்கம் பரத்தமை செய்திகளை முற்றிலுமாக விலக்கி நூல் சமைத்த திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் உரையாக அமைந்து சிறக்கின்றது.

முடிப்புரை: கலைஞரின் திருக்குறள் உரை வழக்கமான திருக்குறள் உரைகளிலிருந்து மாறுபட்டுப் பல இடங்களில் புத்தம் புத்துரையை வழங்குகின்ற உரையாகத் திகழ்கின்றது. கலைஞரின் புத்துரைகள் தனித்தலைப்பில் ஆராயப்பட வேண்டிய தனித்தன்மை வாய்ந்தவை. கலைஞரின் உரையிலியே அளவில் பெரிய உரை அறத்தாறு இதுவென வேண்டா.. என்ற குறளுக்குக் கலைஞர் வரைந்துள்ள உரையே. நுட்பம் வாய்ந்த இக்குறள் தனியே விரித்துரைக்கத் தக்கது. இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரையெழுதுவதும் ஒன்றுதான் என்று உரையாசிரியர் கலைஞர் தம் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது குறள் உரையில் அவர் காட்டும் சிரத்தைக்கு ஓர் அடையாளம். அவையடக்கமாக இச்செய்தியைக் கலைஞர் குறிப்பிட்டாலும் இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் பெரிய முயற்சியில் அவர் வெற்றிபெற்றுள்ளார் என்றே தோன்றுகிறது. திருக்குறளை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் எளிதில் குறட்கருத்துக்கள் புரிதல் வேண்டும் என்ற கொள்கையோடு உரை வரையத் தலைப்பட்ட கலைஞர் தம் எளிமையான நடையாலும் தாம் கையாண்டு வெற்றி பெற்றுள்ள பல்வகைப் புதிய உத்திகளாலும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். கலைஞர் உரையை வாசிக்கும்தோறும் நம் நினைவுக்கு வருகிற திருக்குறள்,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
குறள்: 517.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...