வியாழன், 31 ஜனவரி, 2008

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு -பகுதி-ஒன்று

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு பகுதி-ஒன்று

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் திருக்குறள் தான் தோன்றிய காலந்தொடங்கி இன்றுவரை தமிழுலகில் நிலைத்து வாழ்ந்தும் தமிழர்களை வாழ்வித்தும் வருவது கண்கூடு.

ஓதற் கெளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் -தீதற்றோர்
உள்ளுந்தொ றுள்ளுந்தொ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

மாங்குடி மருதனாரின் இப்பாடல் திருக்குறளின் தனிப்பெருஞ் சிறப்பினைத் தெளிவு படுத்துகின்றது. படிப்பதற்கு எளிய சொற்களை உடையதாகவும் அறியப்படுவதற்கு அருமைப்பாடுடைய நுட்பமான பொருளை உடையதாகியும் வடமொழியில் சிறப்பித்துச் சொல்லப்படும் வேதங்களின் பொருளை உள்ளடக்கியும் அந்த வேதங்களை விடவும் சிறப்புபெற்றும் குற்றமற்றவர்கள் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அவர்களுடைய மனதை உருக்கக் கூடியதாகவும் வள்ளுவர் வகுத்துத்தந்த திருக்குறள் விளங்குகிறது என்பது மாங்குடி மருதனாரின் பாடல் கருத்து. திருக்குறள் கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளில் எத்தனையோ சமய, இன, மொழித் தாக்குதல்களை எல்லாம் வென்று காலம் கடந்து இன்றும் நிலைத்து நிற்பதற்குப் பல காரணங்கள் உண்டு, அவற்றுள் தலையாய காரணம் அதன் பொதுமைப்பண்பு. மொழி, இனம், நாடு கடந்த உலகப் பொதுமைநலம் வாய்ந்த அறங்களைப் பேசுவதால் திருக்குறள் உலகப் பொதுமறை என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே திருவள்ளுவ மாலை,

வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு (திரு.மா.47)

என்று திருக்குறளைப் புகழ்ந்து பேசுகின்றது. தொல்காப்பியத்துள்ளும் (இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை -தொல், களவியல்.1) சங்க இலக்கியத்தும் (அறனும் பொருளும் இன்பமும் ஆற்றும் பெரும நின் செல்வம் -புறம்,28) சிறப்பித்துச் சொல்லப்பட்ட அறம் பொருள் இன்பம் என்ற தமிழர் தம் தனிப்பெரும் உறுதிப்பொருள் கோட்பாட்டினைச் சிறப்பித்து முப்பாலாய் நூல் செய்த திருவள்ளுவரின் பெருமை அளவிடற்கரியது. எனவேதான் திருக்குறள் முப்பால் என்ற பெயராலேயே சிறப்பித்து வழங்கப்படுகிறது.

திருக்குறளும் உரைகளும்:

சற்றேறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த பிறகும் கூட திருக்குறளின் மொழிநடை இன்றும் எளிதில் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இருக்கின்றது. திருக்குறளின் காலத்தை ஒட்டிய சங்க இலக்கியங்களுக்கோ, சங்கம் மருவிய கால இரட்டைக் காப்பியங்களுக்கோ இத்தகு மொழிநடை அமையவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவேதான் மாங்குடி மருதனார் ஓதற்கு எளிதாய் என்றார். இத்தகு எளிய நடையைக் கொண்டிருந்தும் திருக்குறளுக்கு எண்ணிலடங்கா உரைகள் காந்தோறும் தோன்றிவருவது ஏன்? என்ற வினா எழுதல் இயல்பே, உணர்தற்கு அரிதாகி என்று அதற்கும் விடை சொல்கின்றார் மாங்குடி மருதனார்.

காலந்தோறும் திருக்குறளுக்கு உரைகள் தோன்றிவருவது திருக்குறளின் சிறப்புக்களில் ஒன்று. பரிமேலழகருக்கு முன் திருக்குறளுக்கு ஒன்பது உரைகள் தோன்றின. பத்தாவது உரையாகக் குறளுக்குப் பரிமேலழகரின் சீர்மிகு உரை தோன்றியது. பரிமேலழகரின் நுட்பமான உரைக்குப் பின்னும் கூட இன்று வரைக் கணக்கற்ற உரைகள் குறளுக்குத் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. திருக்குறளுக்கு நேரே உரை எழுதியவர்களே அல்லாமல் இளங்கோ அடிகள், சீத்தலைச் சாத்தனார், சேக்கிழார், கம்பர் போன்ற புலவர் பெருமக்கள் தம் நூல்களில் ஆங்காங்கே திருக்குறள் பகுதிகளை எடுத்தாண்டு, விளக்கமும் கூறியுள்ளனர். அப்பகுதிகளை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்த்தால் அச்சான்றோர்கள் திருக்குறளுக்குச் செய்யுள் வடிவில் உரைவிளக்கம் கூறி இருப்பது வெளிப்படும். பிற்காலத்தில் நீதி நூல்களை இயற்றிய சான்றோர்களும், திருக்குறளுக்குச் செய்யுள் வடிவில் உரை இயற்றியுள்ளனர். (மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள், ப.337)

திருக்குறளுக்கு உரை எழுதாமல் வேறு நூல்களுக்கு உரை வரைந்த உரையாசிரியர்கள் சிலர் தத்தம் உரைகளில் தேவையான இடங்களில் குறட்பாக்கள் சிலவற்றிற்கு உரை எழுதியுள்ளனர். சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் ஆகியோர் தம் உரைகளில் வாய்ப்பு நேர்ந்தபோது திருக்குறள் சிலவற்றிற்கு உரை கண்டுள்ளனர். அவ்வுரைகள் புதிய கருத்துக்களுடன் திருக்குறளுக்கு அணி செய்கின்றன.திருக்குறளின் பழைய உரையாசிரியர் பெயர்களைக் குறிப்பிடும் பழம்பாடல்,

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் -திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்

என்று பத்து உரையாசிரியர்கள் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. இப்பத்து உரைகளில் இன்று பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய ஐவர் இயற்றிய உரைகள் கிடைத்துள்ளன. ஏனையோர் உரைகள் கிடைக்கவில்லை. இந்தப் பத்து உரைகளே அன்றி இயற்றியவர் பெயர் தெரியாத மேலும் இரண்டு பழைய உரைகளும் திருக்குறளுக்கு உண்டு. பிற தமிழ் இலக்கிய இலக்கண நூல்களுக்கு இல்லாத அளவில் திருக்குறளுக்கு மட்டும் இத்துணை உரைகள் தோன்றியும் தோன்றிக் கொண்டேயும் இருக்கக் காரணங்கள் என்ன? திருக்குறளுக்கு ஒவ்வொருவரும் வேறு வேறு பதிய பொருள்களைக் காண முயன்றதும் கண்டதும்தான். குறளுக்கு வரையப்பட்ட இந்த உரை வேறுபாடுகள்தாம் புதிய புதிய உரைகள் தோன்றுவதற்குக் காரணமாயின. குறளின் உரை வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன?,திருக்குறள் உரை வேற்றுமைகளை நன்கு ஆராய்ந்து வெளியிட்ட இரா.சாரங்கபாணி உரை வேற்றுமைகளுக்கான காரணத்தைப் பின்வருமாறு உரைக்கின்றார்,

ஏடெழுதுவோர் பிழையால் புகுந்த பாட வேறுபாடுகளும், குறளைப் பிரிக்கும் முறைகளும் சொற்களைக் கொண்டு கூட்டும் நெறிகளும், காலத்தால் சொற்கள் எய்திய பொருள் வேறுபாடுகளும், சமுதாயத்தின் பழக்க வழக்க மாறுபாடுகளும் இயல்பாகவே உரை வேற்றுமைகட்கு இடங்கொடுத்து விட்டன. புற நாகரீகச் சார்பும் சமயச் சார்பும் அரசியற் சார்பும் முன்னிற்க, வலிந்து வேறுபட்ட உரைகளை எழுதினோரும் உளர். (மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள், ப.340)

மேற்கூறிய காரணங்கள் மட்டுமில்லாமல் திருக்குறளின் அமைப்பே அதற்குப் பல உரைகள் பெருகுவதற்குக் காரணமாய் அமைந்துள்ளது. குறளின் மிகச்சிறிய ஏழு சீர்களே கொண்ட யாப்பு வடிவமே உரைகள் பெருகுவதற்கு முதல்காரணம். விரித்துச் சொல்ல வாய்ப்பில்லாமல் பொதுவாகக் குறிப்பிட்டு அறங்களைக் கூறும் போக்கினால் உரையாசிரியர் விரித்துக் கூற முற்படும்போது பொருள் வேறுபாடுகள் தோன்றுவது இயற்கையே. கால வேறுபாடு அல்லது காலத்தின் தேவை சில குறட்பாக்களைப் புதிய நோக்கில் வாசிக்க இடந்தருகிறது. எனவே காலமாற்றங்களும் புத்துரைகளுக்குக் காரணங்களாகின்றன.

உரையாசிரியர் கலைஞர்:

அரசியல் அரங்கில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் தமிழவேள் டாக்டர் கலைஞர் என்று சிறப்பிக்கப்படும் மு.கருணாநிதி அவர்கள் இலக்கிய உலகிலும் தன்னேரில்லாத படைப்புகள் பலவற்றைப் படைத்துத் தமிழிலக்கிய உலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே.கலைஞர் தம் பன்னிரண்டாம் வயதில் எழுதத் தொடங்கி இன்றுவரை எழுதிக்குவித்த இலக்கியங்கள் எத்தனையோ. நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் இருபதிற்கும் மேற்பட்ட நாடக நூல்களையும் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைக்கதை உரையாடல்களையும் உருவாக்கியுள்ள கலைஞர் ஒரு பன்முகப் படைப்பாளி. கலைஞரின் இலக்கியப் படைப்புக்களை எட்டு வகையாகப் பாகுபடுத்தலாம்.

1. கவிதைகள்
அ. கவியரங்கக் கவிதைகள், ஆ. திரைப்படப் பாடல்கள், இ. தனிப்பாடல்கள்

2. கதைகள்
அ. சிறுகதைகள், ஆ. குறும் புதினங்கள், இ. புதினங்கள்

3. நாடகங்கள்
அ. ஓரங்க நாடகங்கள், ஆ. முழு நாடகங்கள்

4. காப்பியங்கள்

5. மடல்கள்

6. சொற்பொழிவுகள்

7. இலக்கிய விளக்கங்கள்

8. இலக்கிய இலக்கண உரைகள்

என்பன கலைஞரின் இலக்கியப் படைப்பின் வகைப்பாடுகளாகும். இலக்கண இலக்கிய உரைகள் என்ற எட்டாம் வகைப்பாட்டில் அடங்கும் நூலே கலைஞரின் திருக்குறள் உரை ஆகும். தமிழன் நாளேட்டில்தான் கலைஞரின் திருக்குறள் உரை முதன் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் முரசொலி நாளேட்டில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெளிவந்து முழுமைபெற்றது. திருக்குறள் கலைஞர் உரை என்ற பெயரில் நூலாக வெளிவந்த ஆண்டு 1996.

திருக்குறள் கலைஞர் உரை:

கலைஞர் குறளோவியம் என்ற பெயரில் முந்நூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களுக்கு விரிந்த அளவில் சொல்லோவியமாய்த் தீட்டிய குறள் உரை இலக்கியம் தமிழுக்குக் கிடைத்த ஓர் புத்திலக்கியம் எனும் பாராட்டையும் பெற்றது. குறளோவியத்தின் வெற்றி திருக்குறள் முழுமைக்கும் உரையெழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பை எனக்குள் ஏற்படுத்தியது என்று உரையாசிரியர் கலைஞரே உரையெழுதியதற்கான காரணத்தைத் தம் நூல் முன்னுரையில் குறிப்பிடுவார்.தம்முடைய உரையின் நோக்கத்தையும் அமைப்பையும் உரையெழுதுகையில் கையாண்ட நெறிமுறைகளையும் முன்னுரையில் உரையாசிரியரே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள பொருளன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மைநிலையைக் கடைபிடித்து, நான் எண்ணுவது போல் அவர் எண்ணினாரா என்று நோக்காமல் அவர் எண்ணி எழுதியது என்ன என்பதை அறிவதில் மட்டுமே அக்கறை கொண்டு என் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டிய வரையில் இந்தப் பொன்னாடையை நெய்துள்ளேன் (உரை எழுதியுள்ளேன்).

இந்த முன்னுரைப் பகுதியில் உரையாசிரிர் கலைஞர் உரை எழுதுவதற்கான நெறிமுறைகள் சிலவற்றை வகுத்துத் தருகின்றார்.

1. உரையெழுதப் போகும் நூலின், நூலாசிரியனின் காலத்து நம்பிக்கைள், பண்பாடுகள், அவைகள் குறித்த நூலாசிரியன் பார்வை என்ன என்பதையெல்லாம் உரையாசிரியர் அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.

2. நூலாசிரியன் கருத்துக்கு மாறாக வலிந்து உரையாசிரியர் தம் கருத்துக்களை உரையில் திணித்தல் கூடாது.

3. உரையாசிரியர் எண்ணுவதை விட நூலாசிரியன் எண்ணியதற்கே முதன்மை அளித்தல் வேண்டும்.

4. உரையாசிரியர் தம் அறிவையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தி உரை வரைதல் வேண்டும்.

மேற்கூறிய நெறிமுறைகள் கலைஞரால் வகுத்துக் கொள்ளப்பட்ட நெறிமுறைகள். இந்த நெறிமுறைகளைப் பின்பற்றியே இவர் தமது உரையை எழுதிச் செல்கின்றார் என்பதும், எந்த இடத்திலும் தாம் வகுத்துக்கொண்ட நெறிமுறைகளுக்கு மாறாக அவர் உரை எழுதவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கடவுள் வாழ்த்தா? வழிபாடா?

திருக்குறளின் அதிகார வரிசைமுறை, குறள் வரிசைமுறை, அதிகாரப் பெயர்கள் முதலான நூலின் அமைப்புமுறை ஒவ்வொரு உரையாசிரியருக்கும் வேறுபடுகின்றது. எனவே இன்று நாம் காணும் திருக்குறள் அமைப்பு முறை திருவள்ளுவர் வடிவமைத்ததல்ல என்ற கருத்து அறிஞர் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உரையாசிரியர்கள் பலரும் பல இயல் பகுப்புகளில் மாற்றம் செய்தும் அதிகாரங்களை இயல் மாற்றி வகைப்படுத்தியும் அதிகாரத்திற்குள் வரும் குறட்பாக்களை இடம் மாற்றியும் அமைத்து உரை வகுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறளின் முதல் அதிகாரப் பெயராக இருந்துவந்த கடவுள் வாழ்த்து என்ற பெயரைக் கலைஞர் வழிபாடு என்று பெயர்மாற்றம் செய்கின்றார். கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத் தலைப்பை வழிபாடு எனக் குறித்துள்ளேன். வள்ளுவரைக் கடவுள் மறுப்பாளர் அல்லது கடவுள் நம்பிக்கையாளர் எனும் வாதத்திற்குள் சிக்கவைக்க நான் விரும்பவில்லை. வழிபாடு எனும் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களுக்கு நான் எழுதியுள்ள உரைகளைக் கொண்டு இதனை உணரலாம்.என்று உரையாசிரியர் முன்னுரையில் குறிப்பிடும் பகுதி இது. கடவுள் கோட்பாட்டை மறுக்கவோ மறைக்கவோ நான் அதிகாரத் தலைப்பை மாற்றவில்லை என்று எழுதும் கலைஞர், வழிபாடு எனப் பெயர் மாற்றம் செய்ததற்கான காரணத்தைத் தம் முதலதிகார உரையில் வெளிப்படுத்துகின்றார். பத்து குறட்பாக்களில் எங்கும் கடவுள் சொல்லோ வாழ்த்தோ இடம் பெறவில்லை. மாறாக வணக்கத்திற்குரிய பெருந்தகையாளரை வழிபடுதல் பற்றிய செய்திகளே காணக் கிடைக்கின்றன. அடி சேர்தல், தாள் சேர்தல் என்ற சொற்களுக்கெல்லாம் அடியொற்றி நடத்தல் என்றே உரை கூறுகின்றார் கலைஞர். தன் உரையின் வழி வழிபாடு என்ற பெயரே முதலதிகாரத்திற்குப் பொருந்தும் என நிறுவுகிறார் அவர்.

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள்:

கலைஞரின் திருக்குறள் உரை நூலுக்குப் பதிப்புரை எழுதிய பேராசிரியர் மா.நன்னன் அப்பதிப்புரையை ஓர் ஆய்வுரையாகவும் வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்னன் கலைஞர் உரையின் சிறப்பியல்புகளைக் குறிப்பிடும் போது,இவர் மரபுப் பொருள், சொற்பொருள், தெளிவுப் பொருள், சுருக்கப் பொருள் என்பன போன்ற முறையில் பொருள் கூறிச் செல்லாமல் இக்காலத் தமிழன் ஒரு குறளைப் படித்தால் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை இற்றெனக் கிளந்து, தெற்றெனக் காட்டுவதையே தம் உத்தியாகக் கொண்டுள்ளார் எனத் தெரிகிறது.என்று கலைஞர் உரையின் தனித்தன்மையை, அதன் புரிதலை, அதன் எளிமையை உத்தியாக எடுத்துக் காட்டுகின்றார். புலவரேறு அரிமதி தென்னகன் திருக்குறள் கலைஞர் உரை ஒரு பார்வை என்ற நூலில் கலைஞர் உரையின் தனித்தன்மையைப் பின்வருமாறு விளக்கியுரைக்கின்றார்.

அது பதவுரையா? இல்லை! தோலுரித்த பழம் போன்ற பொழிப்புரையா? இல்லை! பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கிய சுளைகளைப் போன்ற சுருக்கமான கருத்துரையா? இல்லை! கனியைப் பிழிந்திட்ட சாறு என்பார்களே அத்தகைய கனியுரையே கலைஞர் உரை! ஆம் குறளின் பிழிவே கலைஞர் உரை என்பதே உண்மை. .. அதுதான் எளிமை! அதுவே இனிமை! அதுதான் தெளிவு! அதுதான் தேவை!.. (அரிமதி தென்னகன், திருக்குறள் கலைஞர் உரை ஒரு பார்வை, ப.129)

கனியைப் பிழிந்திட்ட சாறு போல் எளிமையின் வடிவாகவே கலைஞர் உரை அமைந்துள்ளது எனக்குறிப்பிடும் புலவரேறு, கலைஞர் உரையின் சிறப்பியல்புகளாக மேலும் சில செய்திகளைக் குறிக்கின்றார். அவை,

1.குறளிலிருந்து பெறும் பொருளைவிடக் குறளால் உணரப்படும் செய்தியே எளிமையானதாக அமையும் என்பதில் கலைஞர் உறுதியாக நின்றுள்ளார்.

2.அறிவால் பெறப்படும் செய்தியைவிட நெஞ்சால் உணரப்படும் செய்தியை உரையாகத் தருவதே, சேர வேண்டிய இடத்திற்கு எளிதாகக் கொண்டு செல்லும் என்னும் நோக்கமே கலைஞர் உரையாகப் பொலிவு பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...