ஆய்வுக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வுக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மே, 2019

கம்பனின் கவிதையியல்


முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்

தமிழில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கவிதை தொடங்கி நேற்றைய… இன்றைய… கவிதைகள் வரை பல்லாயிரம் தமிழ்க் கவிதைகளைப் பார்த்து.. படித்து.. பழகி விட்டோம். இன்னும் பிடிபடாத ஒரு விஷயம். கவிதை செய்யும் கலை. நல்ல கவிதை எழுதுவது என்பது ஒருவகை நுட்பச் செய்நேர்த்தி. “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்று ஒளவையார் சொன்னதைப் போல், கவிதை பழகுவதால் வருவது. பழகுவது என்றால் எழுதிப் பழகுவது மாத்திரமில்லை. மனத்தால் பழகுவது.. பழக்குவது. அதனால்தான், “உள்ளத்து உள்ளது கவிதை” என்று கவிமணி சொன்னார். கவிதை எழுதப் படிப்பறிவு கட்டாயத் தேவையில்லை. இதற்கு நாட்டுப்புறக் கவிதைகளே சாட்சி.
உரைநடைக்கும் கவிதைக்கும் எழுதுவதில் வித்தியாசம் இருக்கிறதோ இல்லையோ? வாசிப்பதில், அனுபவிப்பதில் கண்டிப்பாகப் பெரிய அளவில் வித்தியாச மிருக்கிறது. உரைநடையை வாசிப்பவன் அப்படைப்பை ஒற்றைப் பரிமாணத்திலேயே வாசித்து முடித்துவிடுகிறான். வாசிப்பதை முடித்தவுடன் பெரிதும் உரைநடைப் படைப்பின் வேலையும் முடிந்துவிடுகிறது. ஆனால் கவிதை வாசிப்பு அப்படியில்லை. கவிதையைப் பல பரிமாணங்களில் வாசிக்க வேண்டியிருக்கிறது. வாசிப்பு முடிந்த பிறகுதான் கவிதைப் படைப்பு தன் முழுப் பரிமாணத்தையும் காட்டிப் பேருரு எடுக்கிறது.
வாமனனுக்கு மூன்றடி நிலம் தானம் கொடுத்த மாபலிச் சக்கரவர்த்தியின் நிலைதான் கவிதை வாசிப்பவன் நிலையும். சின்ன உருவம்தானே மூன்றடி எடுத்துக் கொள்ளட்டும் என்று வரம் கொடுக்கப்போய் சிற்றுரு பேருருவாகி எல்லாற்றையும் ஈரடியால் அளந்துமுடித்து மூன்றாவது அடிக்கு மாபலி தன் தலையையே கொடுக்க நேர்ந்தது போல்தான் இதுவும். கவிதை சிறியதோ பெரியதோ வாசிப்புக்கு அடங்கிவிடும் அதன் உருவத்திற்கும் அது தரும் அனுபவம் என்ற விஸ்வரூபத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகப்பெரிது. வாசிப்பு நம் அறிவு அனுபவங்களைத் தொட்டு உரசி நமக்குள்ளாக இறங்கி, ஐக்கியமாகி நம்மையே இழக்கும் நிலைக்குத் தள்ளும் போதுதான் மூன்றாவது அடிக்குத் தன் தலையையே தந்த மாபலியாகிறோம் நாம். வாசிப்பாளனுக்குக் கிட்டும் இந்த அனுபவம் படைப்பாளிகளுக்குக் கிட்டுமா? என்பது ஐயமே.
கவிதை சொற்களில் முழுமை பெறுவதில்லை. சொற்கள் வெறும் கூடுதான். இயக்கமற்ற உடம்புபோல. கவிதை இயங்க வேண்டும் என்றால் கவிதையில் உயிர் இருக்க வேண்டும். சொற்களால் கட்டப்படும் கவிதையில் உயிர் எங்கிருந்து வரும்? உயிருள்ள கவிதையை யார் எழுதமுடியும்? எப்படி எழுத முடியும்? நன்னூல் ஆசிரியன் பவணந்தி விடை சொல்கிறான்,
பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.
கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது! அது வெற்று உடம்பு.. கருத்து மட்டுமே கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. நன்னூல் ஆசான் பவணந்தி சொல்லும் இலக்கணம் எல்லாக் கவிதைகளுக்கும் பொதுவானது. கவிதைக்கு இலக்கணம் எதுவோ, அதுவே கவிஞர்களுக்கும் இலக்கணம். கவிஞர்கள் நல்ல மொழியறிவும் உலகியல் பார்வையும் நுட்பமான உணர்வு வெளிப்பாட்டுத்திறனும் அழகுணர்ச்சியும் கொண்டவர்களாய் இருத்தல் வேண்டும். இங்கே, உலகியல் அறிவு என்பது தமக்கான அரசியல் அல்லது கொள்கை. அதுதான் கவிஞனின் இயக்கம், கவிதையின் உயிர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இத்துணை தெளிவான கவிதைக் கோட்பாடுடைய தமிழர்களின் கவிதைப் பயணம் எத்துணை நெடியதாயிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.
கவிதைப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டம் கவிதையியல் என்ற கோட்பாட்டு ஒருவாக்கம் தமிழ்க் கவிதைகளின் பயணம் எத்தனை நெடியதோ அத்தனை நெடியது தமிழ்க் கவிதையியலின் பயணமும். தமிழ்க் கவிதையியலின் உச்சத்தைத் தொல்காப்பியச் செய்யுளியலில் காணமுடியும். மேற்கு உலகின் கவிதைக் கோட்பாடுகளுக்கு முந்தையது தமிழின் கவிதைக் கோட்பாடு. தொல்காப்பியப் பொருளதிகாரமே தமிழ்க் கவிதையியல் குறித்த பதிவுதான். தமிழ்க் கவிதைகளின் உருவம், உள்ளடக்கம், உத்தி என்ற அத்தனை அம்சங்களையும் தொல்காப்பியப் பொருளதிகாரம் இலக்கண மயப்படுத்தல் என்று நாம் கருதும் அமைப்பில் கோட்பாட்டு உருவாக்கம் செய்துள்ளது. தொல்காப்பியம் தொடங்கி வைத்த கவிதையியல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைவதுதான் கம்பரின் கவிதைக் கோட்பாடு.
கம்பர் இலக்கணம் படைக்கவில்லை என்றாலும் காப்பியப் போக்கில் தமிழ்க் கவிதையியல் குறித்த தமது கோட்பாட்டுப் பார்வையைச் சிறப்பாகப் பதிவு செய்கின்றார். குறிப்பாக கோதாவரி நதி குறித்த கம்பனின் பாடல் இரட்டுற மொழிதல் என்ற அணி இலக்கிய உத்தியோடு படைக்கப்பட்டுள்ளது. அப்பாடல் பின்வருமாறு,
புவியினுக்கு அணிஆய், ஆன்ற
பொருள் தந்து, புலத்திற்று ஆகி
அவி அகத் துறைகள் தாங்கி
ஐந்திணை நெறி அளாவி,
சவி உறத் தெளிந்து, தண்ணென்று
ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி எனக் கிடந்த கோதா
வரியினை வீரர் கண்டார்.
பூமிக்கு ஓர் அணிகலன் போன்று அழகூட்டுவதாய் அமைந்துசிறந்த பொருள்களைக் கொடுத்து வயல்களுக்குப் பயன்படுவதாக ஆகிதன்னுள் அமைந்த பல நீர்த் துறைகளைக் கொண்டுகுறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் எனும் ஐந்து நிலப்பகுதி வழிகளில் பரவிச்சென்று; செவ்வையாய் தெளிவுடையதாகி; குளிர்ந்த நீரோட்டமும் உடையதாய்; கல்வியில் நிறைந்த பெரியோரின் செய்யுள் போல் விளங்கிய கோதாவரி எனும் ஆற்றை இராமன் இலக்குவன் ஆகிய வீரர்கள் கண்டனர்.  
என்பது கோதாவரி நதி குறித்து கம்பர் தரும் வருணனையும் பொருள் விளக்கமும் ஆகும். மேலும் இதே பாடலில் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி என்று கம்பர் சிறப்பிப்பதால் மேலே கோதாவரிக்குச் சொன்ன அத்துனை விளக்கங்களும் சான்றோர் கவிதைகளுக்கும் பொருந்தும் எனத் தம்பாடலை அமைக்கின்றார்.
பாடல், சான்றோர் கவியைக் குறிக்குமிடத்து,
உலக மக்களுக்குப் பலஅலங்கார மாகிசிறந்த அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப் பொருள்களை உணர்த்தி; அறிவில் தங்கிசெவ்விதாய் அமைந்த அகப் பொருள் துறைகளை ஏற்றுகுறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் எனும் ஐந்து அக ஒழுக்கங்கள் விரவப் பெற்று விளங்குமாறு பொருள் தெளிவுற அமைந்துநல்லொழுக் கத்தையும் உணர்த்தி நிற்கின்றது புலமையால் நிறைந்தவர் செய்யுள் எனப் பொருள் கொள்ள முடியும்.
கோதாவரி நதி வருணனையாக அமைந்த மேற்சொன்ன பாடலில் கம்பர் தமிழின் கவிதையியல் சார்ந்த பல கவிதைக் கோட்பாடுகளை உள்ளீடாக வைத்து விளக்கியுள்ள திறம் வியக்கத்தக்கது.
கம்பரின் கவிதைக் கோட்பாடு:
புவியினுக்கு அணியாய்:
கவிதை மனிதர்களை, உறவினை, குடும்பத்தை, வாழ்க்கையை அமகுசெய்யக் கூடியது. இதனையே கம்பர் புவியினுக்கு அணி, அதாவது உலகிற்கும் உலக மக்களுக்கும் முருகியல் இன்பத்தை வழங்குவது கவிதை என்கிறார்.
ஆன்ற பொருள்தந்து:
உயர்ந்த பொருள் பொதிந்த உள்ளடக்கத்தால் கவிதை சிறக்க வேண்டும் என்ற பொருளில் ஆன்ற பொருள்தந்து என்கிறார் கம்பர். அப்படிச் சொல்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது எதைச் சொல்கிறோம் என்பது. கவிதைக்கு உயிரே ஆழ்ந்த பொருள்தான்.
புலத்திற்றாகி:
புலம் என்பது இங்கே அறிவினைக் குறித்தது. அறிவுடைமையோடு பொருந்தியதாக கவிதை இலங்குதல் வேண்டும். காரண காரிய அறிவினுக்குப் பொருந்தாத எவையும் கவிதை பேசுதல் கூடாது.
அகத்துறைகள் தாங்கி- ஐந்திணை நெறி அளாவி:
தொல்காப்பியக் கவிதையியலை ஒட்டி திணை, துறை, கூற்று முதலான கவிதைக் கோட்பாடுகளோடு பொருந்தியதாகக் கவிதைகள் இயற்றப்படல் வேண்டும் என்கிறார். அகத்துறைகள், ஐந்திணை என்று ஆசிரியர் குறிப்பிடுவது புறத்துறைகளும் புறத்திணைகளும் பொருந்தும். முன்னோர் கவிதைக் கோட்பாடுகளின்படி தமிழ்க் கவிதைகளின் செல்நெறி இயங்குதல் வேண்டும் என்பதே கம்பரின் கவிதைக் கோட்பாடு.
சவியுறத் தெளிந்து:
சவி என்பதற்கு ஒளி, ஒளிபொருந்திய என்று பொருளுரைப்பர். கவிதை தமது உள்ளடக்கத்தைத் தெளிவாக வாசகனுக்கு உணர்த்துதல் வேண்டும். வெற்றெனத் தொடுப்பதோ, மயங்க வைப்பதோ இல்லாமல் கவிதை வாசகனுக்குப் புரிதல் வேண்டும். அதுவே கவிதை பாய்ச்சுகிற ஒளி. அவ்வொளியால் கவிதை தெளிந்த நீரோடைபோல் அகத்துள்ளதைப் பிறர்க்குக் காட்டும் என்பது கம்பரின் கவிதைக் கோட்பாடு
தண்ணென்று,     
குளிர்ச்சியுடையதாகக் கவிதை விளங்குதல் வேண்டும் என்கிறார் கம்பர். இங்கே குளிர்ச்சி என்பது கவிதை இன்பத்தைக் குறித்தது. கவிதை, வாசகனின் உள்ளத்தில் குளிர்ச்சியை, அதாவது கவிமணி அவர்கள், உள்ளத்து உள்ளது கவிதை, இன்ப உருவெடுப்பது கவிதை என்று சொன்னாரே அந்த இன்ப உருவெடுப்பதே குளிர்ச்சி, அதுவே கவிதை இன்பம்
ஒழுக்கமும் தழுவி
ஒழுக்கமும் தழுவி என்றது மானுட விழுமியங்களை, இலக்கியத்தின் முடிந்த முடிபு என்பது மானுட விழுமியங்களைப் பேணுவதாக அமைதல் வேண்டும். காலத்தைக் கடந்து நிற்கும் பண்பாட்டு விழுங்களை வாசகர் மனதில் விதைத்து நல்ல மாந்தர்களை உருவாக்குவதே இலக்கியத்தின் நோக்கமும் பயனும் எனவேதான் கம்பர் தம கவிதைக் கோட்பாட்டின் நிறைவாக விழுமியங்களை வைத்தார்.
இத்தகு கவிதைக் கோட்பாடுகளை ஒரே பாடலில் அடுக்கி கோதாவரி நதியோடு ஒப்பிடுவதுபோல் விரித்துரைத்த கம்பர். மேற்சொன்ன கவிதைக் கோட்பாடுகளைத் தம்மகத்தே அடக்கியுள்ள கவிதைகளே சான்றோர் கவி என்கிறார். இத்தகு இலக்கணங்களுக்குப் பொருந்திவராத கவிதைகளை அவர் வேறோர் இடத்தில் புன்கவி என்கிறார். அயோத்திநகரின் அகழிகளைப் பற்றிக் குறிப்பிடும் இடத்தில், (பொன்விலை மகளிர் மனம்எனக் கீழ்போய், புன்கவி எனத் தெளிவின்றி… பா-108) அகழி தெளிவின்றிக் குழம்பிக் கிடக்கிறது எப்படி என்றால் புன்கவிகளைப் போலே என்கிறார்.

      தொல்காப்பியர் தொடங்கிவைத்த தமிழ்க் கவிதையியலுக்கு ஏற்பவே கம்பரும் தமது கவிதைக் கோட்பாட்டினைப் பதிவுசெய்து தமிழ்க் கவிதை யியலுக்குத் தமக்கான பங்களிப்பினை நிறைவாக வழங்கியுள்ளார்.
முனைவர் நா.இளங்கோ
தமிழ்த்துறைத் தலைவர்
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி
புதுச்சேரி-8

செவ்வாய், 12 நவம்பர், 2013

சிலப்பதிகாரத்தில் அகப்பொருள் மரபும் மாற்றமும்

முனைவர் நா.இளங்கோ, 
 தமிழ் இணைப்பேராசிரியர், 
கா.மா. பட்ட மேற்படிப்பு மையம், 
புதுச்சேரி-605 008



தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.

-காமம் மிக்க கழிபடர் கிளவி. (கானல்வரி- பா.32)

தமிழின் முதல்காப்பியம் என்ற பெருமைபெற்ற சிலப்பதிகாரம், தன் காப்பியக் கட்டமைப்பாலும் எடுத்துரைப்பாலும் உலகின் வேறெந்த மொழியிலும் காணக் கிடைக்காததோர் முன்மாதிரிக் காப்பியம் என்ற பெருமையினைப் பெறுகின்றது. வாய்மொழிக் காப்பியம், எழுத்து மொழிக் காப்பியம் என்ற வரையறைகளைக் கடந்து இரண்டின் பிணைப்பாலும் இயன்றதோர் புத்தாக்கப் படைப்பாகச் சிலப்பதிகாரம் திகழ்வது கற்போர்க்குப் பெருவியப்பினை அளிக்கின்றது. இக்காப்பியத்தின் தனித்தன்மையானதோர் அகக் கட்டமைப்பை உணர்ந்தே நம் முன்னோர்கள் இதனை இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்றும் முத்தமிழ்க் காப்பியம் என்றும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் பலவாறாகப் பல அடைகளோடு அடையாளப்படுத்த முனைந்தனர். சிலப்பதிகாரத்தின் தனித்தன்மையான காப்பியக் கட்டமைப்பை இனங்காண்பதற்கு தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியத்தின் துணையை நாடுகின்றார் சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார். பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாகவும் தொல்காப்பியம் கூறும் பாவியலுக்கு இலக்கியமாகவும் சிலப்பதிகாரத்தை அடையாளம் காட்ட அவர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியினை அவரது உரைப் பாயிரத்தால் நாம் உணரலாம்.

இயலிசைநாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுளை அடிகள் செய்கின்ற காலத்து இயற்றமிழ் நூல் தொல்காப்பியம் ஆதலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பா இலக்கணத்தன ஆதலானும் அந்நூலின் முடிபே இதற்கு முடிபு என்று உணர்க. .. ..

அம்மை முதலிய எட்டு வனப்பும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணம் என்று கூறியவர், இழுமென் மொழியான் விழுமியது நுவலினும், பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும் (தொல். செய்யுளியல் 239) என்பதனால், குவிந்து மெல்லென்ற சொல்லானும், பரந்து வல்லென்ற சொல்லானும், அறம் பொருள் இன்பம் பயப்ப, வீடென்னும் விழுமிய பொருள் பயப்ப ஒரு கதைமேல் கொச்சகத்தானும் ஆசிரியத்தானும் வெண்பா வெண்கலிப்பாவானும் மற்றும் இன்னோரன்ன செய்யுட்களானும் கூறுக என்றமையான், இத் தொடர்நிலைச் செய்யுள் அங்ஙனம் கூறிய தொடர்நிலை என உணர்க.

.. .. சொற்றொடர்நிலை பொருட்டொடர்நிலை என்னும் தொடர்நிலைச் செய்யுட்கும் காப்பியம் என்று பெயர் கூறுதலும் ஆசிரியர் கருத்தென்று உணர்க. (அடியார்க்கு நல்லார் உரைப்பாயிரம்)

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரக் காப்பியத்தை இயலிசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அடையாளப்படுத்துவதோடு இப்பனுவல் தொல்காப்பிய மரபின் வழிப்பட்டது என நிறுவுவதிலும் அதிக முனைப்பு காட்டுகின்றார்.

தொல்காப்பிய மரபு என்பது முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று பின்னப்பட்ட ஐந்திணை மரபிற்குள் காப்பிய நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டுவதும் காப்பிய மாந்தர்களை உலாவ விடுவதுமாகும். நிலம் பொழுதென்ற முதற்பொருள்களோடு திணைநிலம் சார்ந்த கருப்பொருள்களையும் மாந்தர்தம் அகம் சார்ந்த உரிப்பொருள்களையும் பிணைத்து அகவெளி மற்றும் புறவெளிகளின் கலப்பில் காப்பியத்தைக் கட்டமைப்பது என்பதே தொல்காப்பிய மரபு. அடியார்க்குநல்லார் தொல்காப்பியரின் இப்பாவியல் மரபினை சிலப்பதிகாரத்தில் அடையாளப் படுத்துவதற்கு சிலப்பதிகாரப் பிரதியில் காணப்படும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் சார்ந்த ஐந்திணை மரபினை ஆழ்ந்து கற்று விரிவாகப் பட்டியலிடுகின்றார். இப்பட்டியல் சிலப்பதிகாரத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தலென்ற ஐந்திணை அகப்பொருள் மரபினை நன்கு வெளிப்படுத்துகின்றது.

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரப் பிரதியிலிருந்து அகழ்ந்தெடுத்துப் பட்டியலிடும் ஐந்திணைப் பதிவுகளில்,
முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின், இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (தொல்.அகத்:4) என்பதனால் முதற்பொருள் இருவகைப் படும். முல்லைத்திணை நிலமுதற்பொருள், காருமாலையு முல்லை (தொல்.அகத்.6) என்பதனால் அத்திணைக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் கொள்ளப்படும். பெரும்பொழுது, காரோ வந்தது (26:118) என்பதனாற் காரும், சிறுபொழுது, மாலை நீயாயின் என்பதனால் மாலையும் கூறினார். கருப்பொருள், தெய்வ முணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகைப் பிறவும் கருவென மொழிப (தொல்.அகத்: 18) என்பதனாலுணர்க. இந்நிலத்திற்குக் கருப்பொருள், கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன் என்பதனால் தெய்வமும், அளைவிலை யுணவின் (16:3) என்பதனால் உணாவும், நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும் (11:78) என்பதனால் மாவும், கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தான் என்பதனால் மரமும், கான வாரணம் கதிர்வர வியம்ப என்பதனால் புள்ளும் ஏறங் கோட்பறை என்பதனால் பறையும், கோகுல மேய்த்து என்பதனால் செய்தியும், குடமுதல் .. .. வேண்டிய பெயரே என்பதனால் முல்லை யாழும், பண்: முல்லைத்தீம் பாணி யென்றாள் என்பதனால் சாதாரியும் கூறினார்.

உரிப்பொருள், புணர்தல் பிரித லிருத்த லிரங்கல் ஊடலிவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரி பொருளே (தொல்.அகத்:14) என்பதனாலுணர்க. இருந்தேங்கி வாழ்வா ருயிர்ப் புறத்தாய், பேரருளி னீழல் என்பவற்றால் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் கூறினார். பிறவும் என்றதனால் நிலமக்களும் நீர்நிலையும் வார்கொடியும் பூவும் கொள்ளப்படும். இவற்றுள், இளைசூழ் கோவலர் (16:4) என்பதனால் நிலமக்களும், புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று (11:169) என்பதனால் நீர்நிலையும் ஆய்கொடிக் கவலையும் (11:82) என்றதனால் வார்கொடியும், காயாமலர் மேனி, முல்லை நிகர் மலர் என்றதனால் பூவும் கூறினார்.
(சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை, பதிகம்)

என்று சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள முல்லைத்திணை சார்ந்த முதல், கரு, உரிப்பொருள் பதிவுகளைப் பட்டியிட்டுக் காட்டுவார் அடியார்க்கு நல்லார். இவ்வாறே குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலைத் திணைகள் சார்ந்த முதல், கரு. உரிப்பொருள்  பதிவுகளை வரிசையாகப் பட்டியலிடுவார். சங்க அகஇலக்கிய மரபின் தொடர்ச்சியை இனங்காட்டும் நோக்கிலும் இவரின் இப்பட்டியல்கள் அமைந்துள்ளமை கண்கூடு.

அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ள ஐந்திணை முதல், கரு, உரிப்பொருள் ஆட்சிகள் மட்டுமல்லாது காப்பியத்தின் போக்கிலேயே ஐந்திணை சார்ந்த நிலம், பொழுது, கருப்பொருள்கள் குறித்த விவரணைகளையும் பதிவுசெய்கின்றார். குறிப்பாக, கானல்வரியில் நெய்தல்நிலக் காட்சிகளையும் நாடுகாண் காதையில் மருதநிலக் காட்சிகளையும் வேட்டுவ வரியில் பாலைநிலக் காட்சிகளையும் ஆய்ச்சியர் குரவையில் முல்லைநிலக் காட்சிகளையும் குன்றக் குரவையில் குறிஞ்சிநிலக் காட்சிகளையும் தம் காப்பியக் கட்டமைக்குள் கொண்டுவருகின்றார் இளங்கோவடிகள். அகன் ஐந்திணை சார்ந்த இவ்விவரணைகள் சங்க இலக்கியத்தின் நீட்சியாகத் தமிழ் அகப்பொருள் மரபுகளை தம் படைப்புக்குள் கொண்டுவர விரும்பும் படைப்பாளனின் முயற்சியாகவே தோன்றுகின்றன.

இவ்வாறு ஐந்திணை விவரணைகளைப் படைப்புக்குள் கொண்டுவரும் முயற்சியோடு அமையாது சங்க அகஇலக்கிய மரபின் வழிப்பட்ட அகப்பாடல்கள் சிலவற்றையும் காப்பியத்துள் தக்க இடங்களில் பொருத்தி அகஇலக்கிய மரபின் தொடர்ச்சியினை அடையாளம் காட்டுகின்றார் இளங்கோவடிகள்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள தூய அகத்துறைப் பாடல்கள் குறித்து வ.குருநாதன் தரும் விளக்கம் பின்வருமாறு,
சிலப்பதிகாரத்தில் புகார் நகரத்து விழாவின் இறுதியில் கடற்கரைச் சோலையில் அமர்ந்து கோவலனும் மாதவியும் பாடிய ஆற்றுவரி நீங்கலான கானல்வரிப் பாடல்களும், சேரநாட்டு மலையில் பதினான்கு நாட்கள் வேங்கைமர நீழலிலிருந்து கண்ணகி வானவூர்தி ஏறியது கண்ட மலைநிலத்து மங்கையர் ஆடிப்பாடிய குன்றக் குரவைப் பாடல்களும் தனிநிலைப்பட்ட தூய அகத்துறைப் பாடல்களாம். அவை கதைமாந்தரின் தொடர்ந்த காதல் ஒழுக்கங்களைப் பாடாமல், பெயர் சுட்டப்பெறாத அகமாந்தர்களின் காதல் ஒழுக்கங்களைப் பாடுகின்றன. கானல்வரியில் நெய்தல் திணையும் குன்றக்குரவையில் குறிஞ்சித் திணையும் மேலோங்கிச் சிறக்கக் காணலாம். இரண்டிலும் முதல் கருக்களோடு உரிப்பொருள்கள் சிறப்புற ஆட்சி பெற்றுள்ளன. (கம்ப இராமாயணத்தில் காதல், ப.17)

சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பெயர் சுட்டப்பெறாத அகமாந்தர்களின் கூற்றுகளாக இடம்பெறும் பாடல்களின் துறைக்குறிப்புகள் வருமாறு,
கானல்வரியில் இடம்பெறும் மரபு அகத்திணைப் பாடல்கள்
1.    கானல்வரி -கோவலன் பாடியன
2.    தோழி தலைமகன் முன்நின்று வரைவு கடாதல் பா. 5-7
3.    குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகளது காதல் மிகுதியைக் குறிப்பால் அறிந்து கூறுதல் பா.8
4.    கழற்று எதிர்மறை பா.9-10
5.    தமியளாக இடத்து எதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன்கூறுதல் பா.11-13
6.    பாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது உரைத்தல் பா.14-16
7.    புணர்ச்சி நீட இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல் பா.17-19
8.    குறியிடத்துத் தலைமகனைக் கண்ட பாங்கன் கூற்று அல்லது தலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைமகன்அவளை விடுத்தல் அருமையால், ஆற்றானாய்த் தன்நெஞ்சிற்குச் சொல்லியது பா.20-22
9.    காமஞ்சாலா இளமையோள் வயின் ஏமஞ்சாலா இடும்பை எய்தியோன் சொல்லுதல் பா.23
2.    கானல்வரி -மாதவி பாடியன
1.    கையுறை மறுத்தல் பா.28
2.    தோழியிற்கூட்டம் கூடிப்பின் வாராவரைவல் என்ற தலைவனுக்குத் தோழி கூறுதல் பா.29-30
3.    அறியேன் என்று வறிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் பா.31
4.    காமம் மிக்க கழிபடர் கிளவி பா. 32-36
5.    அல் அறிவுறுத்தி வரைவுகடாதல் பா.37-39
6.    பொழுது கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு உரைத்தல் பா.40-42
7.    மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் அல்லது ஆற்றுவித்தல் பொருட்டுத் தோழி இயற்பழிக்கத்  தலைமகள் இயற்பட மொழிதல் பா.43-45
8.    காமம் மிக்க கழிபடர் கிளவி பா.46
9.    தலைவி மாலைப் பொழுது கண்டு கூறுதல் பா. 48-50
10.    வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறுதல் பா.51
3.    குன்றக் குரவை –குரவைப் பாடல்கள்
1.    தலைவன் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது
2.    வரைவு முடிதல் வேண்டி தெய்வம் பராயது
3.    தலைவி அறத்தொடு நிற்றல்
4.    தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறியது
5.    தோழி தலைமகனுக்கு அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல்
6.    தலைமகளுக்குத் தோழி வரைவு கூறுதல்

கானல்வரியிலும் குன்றக் குரவையிலும் இடம்பெற்றுள்ள மேற்சொல்லப்பட்ட அகத்துறைப் பாடல்கள் பழைய சங்க அகஇலக்கிய மரபுகளை ஒத்தும் உறழ்ந்தும் பாடப்பட்டிருப்பினும் மரபார்ந்த அகப்பாடல்களைப் படைத்துக் காட்டுவதில் அடிகளாருக்கு இருந்த நாட்டத்தினை இப்பாடல்கள் பதிவுசெய்கின்றன என்பது உண்மை.
சிலப்பதிகாரக் காப்பியக் கதைமாந்தர்களின் வாழ்க்கையை ஒட்டிய அகப்பொருள் நிகழ்வும் பலவும் காப்பியத்தின் ஓட்டத்தில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. இவை சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர் என்ற தொல்காப்பிய விதிக்கு மாறானவை என்றாலும் காப்பிய மாந்தர்களின் அகவாழ்க்கையும் அகப்பொருளின் பாற்பட்டனவே.

சிலப்பதிகாரத்தின் முதல்பகுதி மங்கல வாழ்த்துப்பாடல். இப்பகுதி காப்பியத் தலைமக்களின் திருமணத்தோடு தொடங்குகின்றது. களவுவழி வாராக் கற்புமணமாகக் கோவலன், கண்ணகி வரைவு இடம்பெறுகின்றது. தொடர்ந்து மனையறம் படுத்த காதையில் இவ்விருவரின் நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சியும், நலம் பாராட்டலும் இடம்பெறுகின்றன. களவுக் காலத்தில் இடம்பெற வேண்டிய நலம் புனைந்துரைத்தல் கற்புக் காலத்தில் நிகழ்கிறது. அரங்கேற்றுக் காதையில் பரத்தையர் பிரிவு. பின்னர் அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் இணைந்திருக்கும் காதலர்களின் கூடலும், பிரிந்திருக்கும் காதலர்களின் வாடலும் இடம் பெறுகின்றன. மேலும் நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக் கலவியும் புலவியும் காதலர்க்கு அளித்தாங்கு (அந்திமாலை: 31-32) என மாதவி கோவலன் கூடலும் ஊடலும் பேசப்படுகின்றது. இப்படித் தொடர்ச்சியாக காப்பியத் தலைமக்களாம் கோவலன், கண்ணகி, மாதவி போன்றோரின் அகவாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் சங்க அக இலக்கிய மரபுகளோடு ஒத்தும் உறழ்ந்தும் சித்தரிக்கப்படுகின்றன.

மேலே குறிப்பிட்டதுபோல் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் நிலைநிறுத்திய மரபார்ந்த தனிப்பாடல் வகைப்பட்ட அகன் ஐந்திணைப் பாடல்களைப் படைத்தது மட்டுமன்றித் தொடர்நிலைச் செய்யுட்களால் அமைந்த காப்பியப் படைப்பு என்ற தமது புத்திலக்கியத்திற்கு ஏற்ப அகப்பாடல் மரபுகளிலும் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றார் இளங்கோவடிகள்.
ஊர்காண்காதையில் மதுரை நகரைச் சுற்றிப்பார்த்துவரச் செல்கிறான் கோவலன். அப்போது கடைகழி மகளிராகிய பொதுமகளிர் இன்பம் துய்ப்பது குறித்ததோர் நீண்ட வருணனையினை அமைக்கின்றார் இளங்கோவடிகள். மரபார்ந்த தமிழ் அகப்பொருளில் மருதத்திணைக்குரிய காட்சி அது.

முதுவேனில் காலத்தில் இறுதியில் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில் ஆகிய ஐந்து பருவங்களையும் அவ்வக் காலங்களில் பெறும் இன்ப அனுபவங்களையும் எண்ணிப் பார்த்து இன்புறகின்றனர் கடைகழி மகளிர். முதலில் கார்கால இன்பத்தை எண்ணிப் பார்க்கின்றனர். (வச்சிர வேந்தர்க்குக் கல்கெழு கூடல் செவ்வணி காட்டக் காரரசாளன் வாடையொடு வரூஉம் 14: 94-96) செந்நிறமான பூவும் உடையும் அணிந்து இந்திரனுக்குச் செவ்வணி காட்டக் கார் எனும் அரசன் வாடைக்காற்றுடன் வருவான் என நினைக்கின்றனர்.

அடுத்து கூதிர்காலமாகிய குளிர்காலம், (முகில்தோய் மாடத்து அகில்தரு விறகின் நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு 14: 98-99) உயர்ந்த மாடத்தில் சாளரங்கள் அடைத்து அகில் விறகால் நெருப்பு மூட்டி அம்வெம்மையின் அருகிருந்து நம்பியரோடு இன்புறுதலை நினைக்கின்றனர்.

அடுத்து முன்பனிக்காலம், (வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர 14: 102-03) செல்வவளம் மிக்க மனையில் மகளிரும் மைந்தரும் இளநிலா காயும் முற்றத்திலிருந்து இளவெயிலை விரும்பி நுகர்ந்து மகிழ்தலை எண்ணுகின்றனர்,

அடுத்து பின்பனிக்காலம், (கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழா காணும் பங்குனி முயக்கத்துப் பனியரசி 14: 110-12) அகில் பட்டு சந்தனம் கருப்பூரம் என்னும் இவற்றின் மணத்தினைச் சுமந்த கீழைக்;காற்றின் தழுவலோடு கூடல் நகரின் காமனது விழாவினைக் கண்டு இன்புறுதற்குரிய பின்பனிக் காலத்தை நினைத்துப் பார்க்கின்றனர்.

அடுத்து இளவேனில் காலம், (தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம் இன்னிள வேனில் 14: 115-17) பல மலர்கள் அழகுசெய்யப் பொதிகைமலைத் தென்றலோடு வந்து காதலர்கள் தம்துணையோடு தழுவிக் கொள்ளத் துணைசெய்யும் இளவேனில் இன்பத்தை நினைக்கின்றனர்.

இவ்வாறு முதுவேனில் காலத்தில் இருந்தபடியே ஆறுபருவ இன்பங்களையும் நினைத்துப் பார்த்து மகிழும் இவ்வுத்தி சங்க அக இலக்கிய மரபு காணாத புதுஉத்தியாகும். ஆறுபருவங்களிலேயும் கூடலின்பமே பேசப்படுகின்றது என்பதனையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

இளங்கோவடிகளின் இப்புதிய அகப்பாடல் உத்தி குறித்து ப.அருணாசலம் அவர்களின் கருத்து இங்கே நினைவுகூரத் தக்கது.
காமக் களியாட்டத்திற்குரிய பருவமாக ஒவ்வொரு பருவத்தையும் அதனதன் தனி இயல்புகளோடு விளக்கிப் பாடிய பாடல் அல்லது அத்தகையதொரு முயற்சி சங்க நாளில் இல்லை. சிலப்பதிகாரத்திலேயே உள்ளது. இவ்விலக்கிய நெறியும் தமிழ் நிலத்தில் தோன்றிய ஒன்று என்பதைவிட இந்திய நிலத்தில் தோன்றியது என்றலே பொருந்துவது. ருதுசம்ஹாரத்தில் (காளிதாசர்) இத்தகைய முயற்சி உண்டு. (சிலப்பதிகாரச் சிந்தனை, ப.245)

ப.அருணாசலம் காளிதாசரின் ருதுசம்ஹாரத்தில் இத்தகைய முயற்சி உண்டு என்று மேற்சொன்ன பகுதியில் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்றதொரு அகப்பொருள் சித்தரிப்பு இரகுவம்சத்திலும் இடம்பெற்றுள்ளது. காளிதாசரின் இரகுவம்சத்தின் பத்தொன்பதாவது சருக்கம் இன்ப நுகர்ச்சியை வருணிக்கின்ற காமத்துப்பால் என்ற பகுதியாகும். இக்காமத்துப்பால் பகுதியில் பருவங்களுக் கேற்ப காதற்சுவை நுகரும் பகுதி இடம்பெற்றுள்ளது. (க.ரா.ஜமதக்னி, காளிதாசரின் இரகுவம்சம், ப.445-448) சிலப்பதிகாரத்தில் உள்ளதுபோல் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற வரிசையில் காமநுகர்ச்சி இரகுவம்சத்தில் வருணிக்கப்படுகின்றது. இளங்கோவடிகள் முதுவேனில் காலத்தில் இருந்தபடியே கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில் கால இன்பங்களை நினைப்பதாக அமைத்துள்ளார். காளிதாசரோ கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வரிசைப் படுத்துகின்றார்.

சங்க அகஇலக்கிய மரபின்படி காதலர்கள் கூடி இன்புறும் உரிப்பொருளாம் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சித் திணைக்குரியது. குறிஞ்சிக்கான நிலம் மலை. தொல்காப்பியர் குறிஞ்சிக்கான சிறு பொழுது, பெரும்பொழுதுகளை
குறிஞ்சி, கூதிர், யாமம் என்மனார் புலவர் (தொல்.அகத்.7)      
பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப (தொல்.அகத்.8)

என்று வரையறை செய்கிறார்.    அதாவது குறிஞ்சிக்கான பெரும்பொழுது கூதிர்காலமும், முன்பனிக்காலமும், சிறுபொழுது யாமம் ஆகிய நள்ளிரவு.
தொல்காப்பிய, சங்க இலக்கிய மரபுக்கு மாறாக, சிலப்பதிகாரம் காதலர்கள் கூடி இன்புறுதற்கு ஏற்ற காலமாக இளவேனிலையே முன்னிறுத்துகிறது.
மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய
இன் இளவேனில் வந்தது இவண் என,
(வேனிற்காதை 6-7)
மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்
(வேனிற்காதை 56-57)

காதலர்களின் காம இன்பத்திற்குத் துணைசெயும் காலமாகச் சில அகநானூற்றுப் பாடல்கள் இளவேனிலை முன்மொழிந்திருப்பினும் தமிழ் அகப்பொருள் மரபும், தமிழக பருவகாலச் சூழலும் இதற்கு மாறாக உள்ளன.
இளங்கோவடிகள் முன்னிறுத்தும் இளவேனில் மரபு குறித்து ப.அருணாச்சலம் அவர்கள் எழுப்பும் விவாதங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கன.

இளவேனில் என்ற சிந்தனையே, பின்பனியால் புறச்சூழல் அழகுகுன்றி காதலர்கள் வெளிச்செல்லவும் ஏலாத ஒன்றாக அமைய, இளவேனில் தோன்றி, புறத்தே அழகுசெய்து காதலர்கள் இன்புற்று விளையாடுதற்கு ஏற்ற வாய்ப்பான காலமாக அமைவதால் ஏற்படுவதே. இவ்வெண்ணம் தொல்காப்பியருக்கு இருந்தது என்று கூறமுடியாது. சித்திரையும் வைகாசியும் தமிழகத்திற்கு அத்தகைய காலமல்ல. வேனில் என்பது பிரிவுக்குரிய காலம் என்றே அவர் கருதினார். தமிழகத்தில் இன்புற்று விளையாடுதற்கு ஏற்ற இளவேனில் என்ற பருவம் நினைக்க முடியாதவொன்று. வேனிற்காலத்து வெய்யிலின் வெம்மை, பிரிந்துசென்ற தலைவன்பால் அன்புணர்வைப் பெருக்கி ஆற்றாமையை மிகுவிக்கிறது. சங்க இலக்கியங்களிலும் பெரும்பான்மையான சிந்தனை இதுவே. (சிலப்பதிகாரச் சிந்தனை, ப.234)

ப.அருணாச்சலம் குறிப்பிடுவது போல் இளவேனில் காலம், சங்க அக இலக்கியங்களில் பெரிதும் செல்வாக்கு பெறவில்லை என்றாலும் சங்கத் தொகை நூல்களில் காலத்தால் பிற்பட்டனவாகக் கருதப்படும் கலித்தொகை, பரிபாடல்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளமை கண்கூடு.

சங்க இலக்கிய அகநானூறு, இன்னிள வேனில், அரும்பத வேனில், காமர் வேனில், யாணர் வேனில் எனக் காதலர்க்கு இன்பத்தை மிகுவிக்க வரும் வேனில் என்கிற அளவிலேயே இளவேனிலைக் கையாண்ட நிலையின் வளர்ச்சியாய்க் கலித்தொகை, இளவேனில் காலத்திற் குரியவனாகக் காமனையும் அவனோடு தொடர்புடைய துணைக்கருவிகளாகத் தென்றல், குயில் முதலானவற்றையும் படைத்துக்காட்டி ஒரு புதிய மரபிற்குக் கால்கோள் இடுகின்றது. கலித்தொகையின் அப்பகுதி,

அரும்பு அவிழ்பூஞ் சினைதோறும் இருங்குயில்
ஆனாது அகவும் பொழுதினான், மேவர,
நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
தேன்இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார்,
ஆனா விருப்போடு அணிஅயர்ப, காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு
(கலி. 92: 63-68)

பரிபாடல் மற்றும் கலித்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள காமன் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு,
பரிபாடல்
1.    திருப்பரங்குன்றத்தில் உள்ள செவ்வேள் திருக்கோயில் காமவேளின் அம்புக் கூடமாகத் திகழ்கிறது. (18: 27-29) 
2.    காமனின் படைக்கலமாக அழகிய பெண்ணொருத்தி குறிக்கப் பெறுகிறாள். (11: 123) 
3.    ஓவிய மாடத்தில் காமன், இரதி ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. (19: 148)
கலித்தொகை
1.    கலித்தொகை காமனுக்கு இளவேனில் விழாக்கொண்டாடப் பட்டதைக் குறிப்பிடுகின்றது.  (27: 24, 92: 67) 
2.    காமனின் கொடி இலச்சினையாகிய மீன் மோதிரத்தில் பொறிக்கப்பட்டது. (84: 24) 
3.    காமன் அம்பு தொடுக்கும் இயல்பினன் (108: 4) 
4.    காமனுடைய ஆணைக்குக் கட்டுப்படும் படையாக அழகிய இளம்பெண் உள்ளாள்.  (139:22-23).

கலித்தொகை தொடங்கிவைத்த இளவேனில், காமன், தென்றல், குயில் என்பதாக அமைந்த புதிய அகப்பொருள் மரபினைச் சிலப்பதிகாரம் பெரிய அளவில் விரிவாகச் சித்தரித்து மரபு மாற்றத்தைத் தனக்கானதோர் தனித்த அடையாளமாக நிலைநிறுத்துகின்றது.

சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள காமன் பற்றிய குறிப்புகள்
1.    காமன் உருவம் இல்லாதவன். (2:44, 30:25)
2.    மகரக் கொடியை உடையவன் (4:83, 8:10, 28:19)
3.    கரும்பு வில்லை உடையவன் (2:45)
4.    ஐங்கணைகளை உடையவன் (28:142)
5.    மலர் அம்புகளை உடையவன் (15:101; 29-26)
6.    காமனின் எக்காளம் குயில் (10: 12-13)
7.    அவன் சேனை பரத்தையர் (5:224)
8.    வித்தியாதர நாட்டில் காமவேளுக்கு விழா நிகழ்ந்தது (6:1-4)
9.    பங்குனியில் காமனின் வில்விழா நிகழ்ந்தது. (14:10-112) 
10.    புகாரில் காமனை வழிபடக் காமக்கோட்டம் இருந்தது. (9:60)
11.    கோவலனும், கண்ணகியும் காமனும் இரதியும் போல் இருந்தனர் (10:221)
12.    காமன் ஆடிய பேடுகூத்து இந்திரவிழாவில் இடம் பெற்றது. (6-58-57) 
13.    அருக தேவன் காமனை வென்றான். (10:196)

இளவேனில் காலத்தைக் காமநுகர்ச்சிக்குரிய காலமாகச் சித்திரிப்பதில் சிலப்பதிகாரம், கலித்தொகை கையாண்ட புதிய மரபினை முழுஅளவில் விரிவாகப் காட்சிப்படுத்துகின்றது.

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என
வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை
புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற,
(வேனிற்காதை 1-13)

வடக்கே வேங்கட மலையையும், தெற்கே குமரிக் கடலையும் எல்லையாக உடைய தமிழ்நாட்டில், மதுரை, உறையூர், வஞ்சி, பூம்புகார் ஆகிய நான்கு நகரங்களிலும் அரசாட்சி செலுத்தும் பெரும் புகழுடைய காமவேளுக்கு இனிய துணைவனாகிய இளவேனில் இங்கே புகார் நகருக்கு வந்துவிட்டான் என்ற செய்தியை அகத்திய முனிவன் பெற்ற தென்றலாகிய தூதன் குயிலோனுக்குக் கூறினான். ஆதலால், வெற்றிபொருந்திய மீன் கொடியையுடைய காமன் சேனையில் உள்ள பெண்கள் எல்லோரும் குற்றமற்ற புதுக்கோலம் கொள்ளுங்கள் என்று அறிவிப்பது போல, கொடிகள் நெருங்கிய சோலையென்னும் பாசறையிலிருக்கும் அக்குயிலோன் எங்கும் கூவி அறிவித்தான்.

வேனில் காதையில் இளங்கோவடிகள் இளவேனிலைக் காமன் என்ற பேரரசனின் இளவரசனாகவே சித்தரிக்கின்றார். மன்னுயி ரெல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன்னிள வேனில் இளவர சாளன் (வேனிற்காதை 56-57) காதல் இன்பத்திற்குத் துணைசெய்வதான இளவேனில் பருவம் என்று தொடங்கிய அகப்பொருள் மரபின் மாற்றம், இங்கே காமவேள் என்ற தொன்மத்தில் கரைந்து காமவேளின் ஆட்சி, அவனது துணைவனாகிய இளவரசன் இளவேனில், தென்றலாகிய தூதன், மீன்கொடி, மகளிர்சேனை, சோலை எனும் பாசறை, குயில் என்ற அறிவிப்பாளன் எனப் பேருரு எடுத்து நிற்கின்றது. அகப்பொருளாட்சியில் சிலப்பதிகாரம் செய்துள்ள மிகப்பெரிய மாற்றம் இது. சிலப்பதிகாரக் காலத்துக் காதல் உலகைக் காமனே தனியரசாட்சி செய்கிறான். மூவேந்தர் புகழ்பாடும் சிலம்பில் மூவேந்தர்களால் ஆளப்படும் நெடியோன் குன்றம் தொடியோள் பௌவம் இடைப்பட்ட ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஒன்றாக ஆட்சிசெயும் காமவேள் என்ற விவரிப்பு சங்க இலக்கிய அகப்பொருள் மரபுகளிலிருந்து சிலப்பதிகாரம் எத்துணையளவு மாற்றம் பெற்றுள்ளது என்பதனை விளக்குகின்றது.

சங்க அக இலக்கிய மரபில் வாடைக்காற்றுக் கென்று தனித்ததோர் இடமுண்டு. வாடைக்காற்றைப் பாடுபொருளாகக் கொண்டு நெடுநல்வாடை என்றோர் தனியிலக்கியமே படைக்கப்பட்டதுண்டு. சங்க அகப்பாடல்களில் பல இடங்களில் காதலர்க்குக் காம இன்பத்தை தூண்டவும் மிகுவிக்கவும் வருத்தவும் வாடைக்காற்று பயன்படுகின்றது. சிலப்பதிகாரம் இளவேனிலுக்கு வாழ்வளித்தது போலவே தென்றலுக்கும் மிகப்பெரிய ஆதரவையும் அங்கீகாரத்தையும் வழங்குகின்றது. பரிபாடலில் வீசும் தென்றலுக்கு அடுத்தபடியாக (நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப, தென்றல் அசைவரூஉம் செம்மற்றே -பரிபாடல் 8: 26-27) சிலம்பதிகாரக் காப்பியத்தில்தான் பல இடங்களிலும் காதலர்க்குக் காமச்சுவையை மிகுவிக்கும் படியாக தென்றல் வீசுகின்றது.

கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழிக்
கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை
வயல்பூ வாசம் அளைஇ அயல்பூ
மேதகு தாழை விரியல் வெண்தோட்டுக்
கோதை மாதவி சண்பகம் பொதும்பர்த்
தாது தேர்ந்துஉண்டு மாதர்வாள் முகத்துப்
புரிகுழல் அளகத்துப் புகல் ஏக்கற்றுத் 20
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுகண் நுழைந்து
வண்டொடு புக்க மணம்வாய்த் தென்றல்
(மனையறம்: 11-24)

கோவலனும் கண்ணகியும் எழுநிலை மாடத்தின் இடைநிலத்தில் உள்ள கட்டிலில் அமர்ந்திருக்கும் போது வீசிய தென்றல் குறித்த வருணனையே இப்பகுதி. தொடர்ந்து காப்பியத்தில் பல இடங்களிலும் தென்றலின் ஆட்சி இளவேனிலை ஒட்டி இடம்பெறுகின்றது.

குறிப்பாக, மனையறம் படுத்த காதையில் இளவேனிலும் தென்றலும் பேசப்படுகின்றன. இந்திரவிழா இளவேனிலில் நடைபெறுகின்றது. கோவலன் கண்ணகியோடு புகாரைவிட்டு நீங்கிய காலம் இளவேனிலும் தென்றலும் கூடிய காலமே. இவர்கள் மதுரைக்குச் சென்று சேர்ந்த காலமும்; இளவேனிலே. மதுரையில் இவர்களை எதிர்கொண்டழைத்து தென்றல் காற்றே. அப்பகுதி வருமாறு,
புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின்
பொதியில் தென்றல் போலாது, ஈங்கு,
மதுரைத் தென்றல் வந்தது காணீர்!
நனிசேய்த்து அன்று அவன் திருமலி மூதூர்
(புறஞ்சேரி: 130-133)

ஊர்காண் காதையில் கோவலன் நகர்வலம் வருகையில் கடைகழி மகளிர் இளவேனிகால இனபத்தை நினைவுகூரும் வேளையிலும், தென்னவன் பொதியில் தென்றலோடு புகுந்து, மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் இன் இளவேனில் (ஊர்காண்: 115-117) எனத் தென்றலோடு சார்த்தி இளவேனில் பேசப்படுகிறது. இவ்வாறு இளவேனில் தென்றல் இணைவோடு காதலர்தம் காமநுகர்ச்சியைப் பாடும் மரபு சங்க அகப்பாடல்களில் இல்லை. அதேபோல் காமநுகர்ச்சியைப் பாடும் இடங்களிலெல்லாம் அதனைக் காமனின் ஆட்சியாக உருவகித்துப்பாடும் மரபும் சங்க அகப்பாடல்களில் இல்லை. இத்தகைய மரபு மாற்றங்கள் எல்லாம் கலித்தொகை, பரிபாடல்களில் கிளைத்துச் சிலப்பதிகாரத்தில் தழைத்தனவே.

தொல்காப்பிய, சங்க இலக்கிய அகமரபுகளைக் கையாண்டு கானல்வரி, குன்றக் குரவைகளில் மரபார்ந்த அகப்பாடல்களைப் படைத்துக்காட்டும் இளங்கோவடிகளே, காப்பிய மாந்தர்களின் அக வாழ்க்கை மற்றும் காமநுகர்ச்சி முதலானவற்றைப் பாடுகின்ற சமயங்களில் பழைய அக இலக்கிய மரபுகளிலிருந்து மாறுபட்டுப் புதிய இலக்கிய உத்திகளோடு காப்பிய அகப்பாடல்களைப் படைக்கின்றார். சங்க இலக்கியங்களில் காமநுகர்ச்சிக்குரியவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காமம் சிலப்பதிகாரத்தில் காமவேளின் அதிகார எல்லைக்குள் சிக்கிக் கொள்கிறது. இயல்பாகச் சங்க இலக்கியத் தலைமக்கள் தம் கருத்தைத் தெரிவிக்கத் தூது அனுப்பிய மரபு மாற்றம் பெற்றுத் தூதுச் செய்தி எழுத்து வடிவிலான காதல் கடிதமாக (மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்கள்) மாற்றம் பெறுகின்றது.

மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும்
இன் இளவேனில் இளவரசாளன்;
அந்திப் போதகத்து அரும் பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்;
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும்,
தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும்,
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல்
இறும்பூது அன்று; அஃது அறிந்தீமின்
(வேனிற்காதை: 56-63)

கடித வாசகத்தில் கூட, மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும் இன் இளவேனில் இளவரசாளன்; என காமவேளின் இளவரசன் இளவேனிலே காமநுகர்ச்சிக்குக் காதலர்களைக் கூட்டுவிப்பவன் என்ற செய்தி பேசப்படுகிறது.

மேலும் காமவேளைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் அவனை அரசனாகவும் இளவேனில், தென்றல், குயில், பெண்கள் முதலானவற்றை அவன் அரசின் அங்கங்களாகவும் சித்திரிக்கும் போக்கைத் தம்காப்பியம் முழுவதிலும் தொடர்ந்து திட்டமிட்டே செய்து வருகிறார் இளங்கோவடிகள்.

வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை
புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற,
(வேனிற்காதை: 1-13)

மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்
(வேனிற்காதை: 56-57)

இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும்
அரைஇருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகர வெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனிசிறந் ததுஎன்.
(அந்திமாலை:  80-84)

காமவேள், இவ்வாறு இளவேனில், தென்றல், குயில் பெண்கள் துணையோடு ஆட்சி செய்வதாக உருவகிப்பதை ஒரு கவிதைப் படைப்பாக்க உத்தியாக மட்டுமே நாம் கருத முடியுமா? காதலை ஆட்சி அதிகாரம் என்ற அரசு சார்ந்த மொழியில் விவரிப்பது, அதாவது அகம் சார்ந்த உள்ளடகத்தைப் புறம் சார்ந்த மொழியில் பேசுவது என்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

1.    ப.அருணாசலம்
சிலப்பதிகாரச் சிந்தனை
பாரி புத்தகப் பண்ணை,
சென்னை-5, இரண்டாம் பதிப்பு .1985
2.    வ.குருநாதன்
கம்பராமாயணத்தில் காதல்
வடிவேல் பதிப்பம்
தஞ்சாவூர்-4, 2002
3.    உ.வே.சா (பதி.ஆ.)
சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும்
(அடியார்க்கு நல்லார் உரையுடன்)
டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம்
சென்னை- 90, பதினொன்றாம் பதிப்பு 2008
4.    க.பஞ்சாங்கம்
சிலப்பதிகாரத் திறனாய்வுகளின் வரலாறு
அன்னம்
தஞ்சாவூர்-7, 2010
5.    க.ரா.ஜமதக்னி (தமிழாக்கம்)
இரகுவம்சம்
மெர்க்குரி புத்தகக் கம்பெனி
கோயமுத்தூர்-1, 1969

வியாழன், 28 ஜூன், 2012

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் வகுப்பறை.

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சீன ஞானக்கவி தாவோ அவர்களின் கவிதை வரிகளோடு இவ்வுரையைத் தொடங்குகின்றேன்.
களிமண்ணால் பானை செய்கிறோம்
உபயோகிப்பதோ வெற்றிடத்தை.
கதவுகளும் ஜன்னல்களும் வைத்து
வீடு கட்டுகிறோம்
உபயோகிப்பதோ
உள்ளே உள்ள வெற்றிடத்தை
எனவே
எது இல்லையோ அதை உபயோகி
எது இருக்கிறதோ
அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்.
தமிழாசிரியர்களின் பணி மொழி கற்பித்தல். மொழி கற்பித்தல் என்ற தொடர் மொழியில் கற்பித்தல், மொழியைக் கற்பித்தல், என்ற இரண்டு பொருள்களில் கையாளப் படுகின்றது. மொழியில் கற்பித்தல் எனும்போது மொழி ஓர் ஊடகமாகவும் மொழியைக் கற்பித்தல் எனும்போது மொழி ஒரு பாடப் பொருளாகவும் அமைகின்றது. தமிழாசிரியர்களின் முதன்மையான பணி மொழியைக் கற்பிப்பதே. மொழியைக் கற்பிப்பது என்பது வெறுமனே மொழியின் இலக்கண விதிகளை, மொழி அமைப்பினைக் கற்பிப்பது மட்டுமன்று, மொழியை அதன் பயன்பாட்டு நோக்கில் தொடர்பாடல் கருவியாகப் பயன்படுத்தும் நுணுக்கங்களைக் கற்பிப்பதும் ஆகும். மொழியை நன்கு கையாளக் கற்றுக்கொள்வது மட்டுமன்றி மொழி கற்பித்தலுக்கு மற்றுமோர் இன்றியமையாத நோக்கமும் உண்டு, அது மொழிபேசும் இனத்தை, இனத்தின் வரலாற்றை, இனத்தின் பண்பாட்டைக் கற்பது என்பதுமாகும்.
தாவோவின் கவிதையை இங்கே நான் பொருத்திக் காட்ட விரும்புகின்றேன். களி மண்ணால் பானை செய்கிறோம். ஆனால் நாம் பயன்படுத்திக் கொள்வது அதற்குள்ளே உள்ள வெற்றிடத்தை. சுவரெழுப்பி, கதவு ஜன்னல்களைப் பொருத்தி வீடு கட்டுகிறோம், ஆனால் பயன்படுத்திக் கொள்வது அந்தச் சுவர்களுக்கு இடையிலான வெற்றிடத்தைத்தான். இது தாவோவின் தத்துவ மொழி. மொழிக் கல்வியும் அப்படித்தான், இலக்கண விதிகளால் கட்டப்பட்ட மொழியின் அமைப்பை நாம் கற்றுக்கொள்கிறோம். ஆனால் நாம் பயன்கொள்வது மொழிக்கு உள்ளிருந்து இயங்கும் அம்மொழி பேசும் இனத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டு அடையாளங் களைத்தாம். எது இல்லையோ அதை உபயோகி, எது இருக்கிறதோ அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள் என்பது பருப்பொருளான மொழியின் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு நுண்பொருளாயிருக்கும் மொழி பேசும் இனத்தின் பண்பாட்டைப் பயன்கொள்வதாகும். 
இன்றைய உலகமயச் சூழலில், இப்புவியின் அனைத்துக் கண்டங்களிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்கள் காப்பாற்றப்பட, மொழி வாழ வேண்டும். இனம் வாழ்வதால்; மொழி வாழ்ந்துவிடாது. மொழி வாழ்ந்தால்தான் இனம் வாழும். மொழிவாழ மொழிவழி இனத்தின் அடையாளங்கள் பேணப்பட வேண்டும். ரியூனியன், மொரீஷியஸ், பிஜி முதலான நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழினம் தன் இன அடையாளங்களை இழந்து, மொழி இழந்து வாழும் அவலம் உலகத் தமிழர்களுக்கு ஒரு பாடம். ஓர் இனத்தின் வரலாற்று, பண்பாட்டு அடையாளங்கள் அந்த இனம் பேசும் மொழியின் அகத்தும் புறத்தும் செறித்து வைக்கப்பட்டுள்ளன. இருபத்தோராம் நூற்றாண்டில் உலகத் தமிழனுக்குரிய முதல் கடமை, தமிழ்மொழி எழுத்தில் வாழ்ந்தால் மட்டும் போதாது. தமிழ் பேசப்படவேண்டும் என்ற விழிப்புணர்வினைக் கொள்வதும் கொடுப்பதும்தான். தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறையாமல் காக்கப்பட வேண்டும். இன்றைய தகவல்மய உலகில் தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் பேருரு எடுத்துள்ள சூழலில் தமிழர்களின் பேச்சுவழித் தொடர்பாடல் மொழியாகவும் எழுத்துவழித் தகவல் தொடர்பு ஊடகமாகவும் தமிழே இருத்தல் வேண்டும். தமிழர்களின் படைப்பாக்கங்கள் முழுவதும் தமிழிலேயே உருவாக்கப் படல் வேண்டும். இத்தகு இலக்குகளை அடையத் தமிழாசிரியர்கள் மொழிக்கல்வியில் புதிய அணுகுமுறை களோடு புத்துணர்ச்சி ஊட்டும் வகுப்பறைச் சூழல்களை உருவாக்குதல் வேண்டும்.
**
தொல்காப்பியர் காலம் தொட்டு இருபத்தைந்து நூற்றாண்டுகளைக் கடந்து தமிழ்க்கல்வி இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் புதிய சவால்களை எதிர்கொண்டு நிற்கின்றது. இலக்கிய இலக்கணக் கல்வியே தமிழ்க்கல்வி, மனப்பாடம் செய்வதே வெற்றிகரமான கற்கும் முறை என்றிருந்த தமிழ்க்கல்வி வரலாற்றில் இந்நூற்றாண்டின் இணையமும் பல்லூடகமும் பல புதிய கதவுகளைத் திறந்து வைத்துள்ளன. சுவர்களுக்குள் கட்டுப்பட்டிருந்த வகுப்பறைகள் மறைந்து உலகத்தையே வகுப்பறையாக மாற்றிய பெருமை இணையத்திற்குண்டு.
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவி வாயாக நெஞ்சு களனாகக்
கேட்டவை கேட்டவை விடாது உளத்தமைத்து (நன்னூல் -பாயிரம்)
பாடம் கேட்ட மாணவன் உயிர்பெற்று இயக்கத்திலிருந்து ஐம்புலன்களாலும் கற்கும் காலம் கனிந்துவிட்டது. தமிழாசிரியர்கள் இலக்கிய இலக்கணக் கொள்கலன்களாக இருந்து பருத்திக் குண்டிகை போல் (நன்னூல் -பாயிரம்) கொஞ்சமாக கொஞ்சமாகக் கொடுத்த காலங்கள் பழங்கதையாகி, நவீன அறிவியல் தொழில் நுட்பத் தேர்ச்சியும் உலகு தழுவிய விசாலப் பார்வையும் கொண்டவர்களாகப் புதிய அவதாரம் எடுத்துள்ளனர்.
மொழியாசிரியர்களின் முதன்மைப் பணி மொழி கற்பித்தலே. மொழி கற்பித்தல் என்பது அடிப்படையில் பேசுதல், கேட்டல், எழுதுதல், படித்தல் என்ற தொடர்பாடல் திறன்களைப் பயிற்றுவிப்பதே ஆகும். ஒரு மொழியின் இலக்கண இலக்கியங்களைக் கற்பதென்பது அம்மொழியின் வளங்களைக் கற்பது என்பதாக மட்டுமே அமையும். தாய்மொழி வழக்காற்றுச் சூழலில் மொழி பயல்வோர்க்கு ஒருகால் இக்கல்வி போதுமானதாக அமையலாம். ஆனால் மொழியைத் தாம் வாழும் சூழலில் தாய்மொழியாக, இயல்பான நடைமுறை வழக்காற்றோடு இணைத்துக் கற்பதைவிடப் புலம்பெயர் நாட்டில்; மொழி வழக்காறு அற்ற சூழலில் கற்பதென்பது மிகுந்த சிக்கலானது. இத்தகு சூழலில் தாய்மொழியின் அமைப்பையும் இலக்கண விதிகளையும் கற்பதென்பது தாய்மொழி அல்லாத பிறமொழி கற்பதற்கு இணையான இடர்ப்பாடுகளைக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது.
ஆசிரியர்கள் இத்தருணங்களில் மொழியைக் கற்பிப்பது என்பதனை இலக்கண விதிகளைக் கற்பிப்பதாகத் அமைத்துக்கொள்வது பொருத்தமான அணுகுமுறைதானா? என்பதனை எண்ணிப் பார்த்தல் வேண்டும். இத்தகு அணுகுமுறையால் புலம்பெயர் சூழலில் மொழி கற்கும் மாணவர்களின் ஆர்வம் சிதைந்துபோக வாய்ப்புள்ளது. இச்சிக்கலுக்கான ஒரே தீர்வு, மொழியை ஒரு கருத்துப் பரிமாற்றச் சாதனமாகப் பயன்பாட்டுச் சூழலில் கற்பிப்பதே. பயன்பாட்டுச் சூழலைக் கற்பிப்பதென்பது அந்த மொழியைப் பேசும் இனத்தின் பண்பாட்டோடு தொடர்புடையது. மொழியின் மரபுகள், மொழிபேசும் மக்களின் மரபுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கைமுறை முதலான பின்புலங்களைக் கற்பிப்பதே சூழலைக் கற்பிப்பதாகும்.
மாணவர்கள் இலக்கண விதிகளைக் கற்பதைவிட, மொழியைத் தங்களின் கருத்தாடல் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கற்பதே இன்றைய முக்கியத் தேவை. இதனைக் கவனத்தில் கொண்டே மொழியாசிரியரின் கற்பித்தல் செயல்பட வேண்டும். ஏனெனில் வகுப்பறையில் இலக்கண விதிகளை ஒட்டி நாம் கற்றுக் கொடுக்கும் மொழியமைப்புக்கும் அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் நடைமுறை மொழியமைப்புக்கும் இடையே உள்ள இடைவெளி நம் கற்பித்தலை அந்நியப் படுத்திவிடக் கூடும். 
நாட்டின் எதிர்கால மனிதவளம் என்பது மாணவர்களே. இந்த மாணவர்களைச் சரியான முறையில் உருவாக்கும் கடமை ஆசிரியர்களுக்குண்டு. ஆசிரியப் பணி மகத்தானது. எழுத்தறியத் தீரும் இழிதகமை என்பது பழைய வாக்கு. இங்கே எழுத்து என்பது கல்வி. கல்வியே ஒருவனை மேம்படுத்துகிறது. இத்தகைய கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களின் பெருமை சொல்லில் அடங்காதது. என்றாலும் பின்வரும் திருக்குறள் கூறும் உண்மையையும் ஆசிரியர்கள் மனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு             (திருக்குறள்: 396)
தோண்டத் தோண்ட மணற்கேணி சுரக்கும் அதுபோலக் கற்கக் கற்க அறிவு சுரக்கும் என்பது குறளின் சுருங்கிய பொருள். இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு ஒன்று உண்டு. தோண்டத் தோண்ட நீர் சுரக்கும் என்றால் நீர் மணற்கேணியின் உள்ளேயிருந்து வெளிப்படுகிறதே தவிர, தோண்டியவன் அந்த நீரை ஊற்றவில்லை. நீர் வெளிவருவதற்கான முயற்சிதான் தோண்டுதல். இதனை அப்படியே கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் பொருத்திப் பார்ப்போம். கற்பதனாலோ கற்பிப்பதாலோ அறிவு வெளிப்படும் என்பதற்கு உரிய விளக்கம், கற்பித்தவன் அந்த அறிவைக் கொடுக்கவில்லை அது கற்கும் மாணவனிடமிருந்தே வெளிப்படுகிறது என்பதாகும். அந்த அறிவினை வெளிப்படுத்தும் முயற்சிதான் கற்றலும் கற்பித்தலும். கல்வியின் நோக்கமும் அதுவே. ஒவ்வோர் ஆசிரியரும் இதனை மனத்தில் கொண்டே தம் பயிற்றலைத் தொடங்க வேண்டும். ஆசிரியர் கடமை மாணவனுக்கு உள்ளே திறமைகளை வெளிக் கொணர்வதுதான். இதனை நன்குணரும் ஆசிரியர்களே வகுப்பறையை இருவழிப் பாதையாக மாற்றுவர். ஆசிரியர் மாணவர் இடையிலான கருத்தாடல் இருவழியிலும் நிகழ்கிற போதுதான் உண்மையான மொழித்திறன் மாணவர்களுக்குக் கிட்டும்.
                வகுப்பறை என்னும் தளத்தில் பருப்பொருள்களாக ஆசிரியர் மாணவர்கள் மட்டுமே இருந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெறத் தொடங்கியது. தொடக்கக்கால வகுப்புகளில் புத்தகங்களோ(சுவடிகளோ), எழுதுபொருள்களோ கூட இடம் பெற்றிருக்கவில்லை. கற்பித்தல் ஆசிரியன் வாய்வழியாகப் புறப்பட்டு மாணவர்களின் செவி வழியாக நெஞ்சில் ஏற்றப்பட்டது. பின்னர் காலப்போக்கில்  சிலேட்டு, பல்பம், அட்டை, புத்தகம், நோட்டுப் புத்தகம் முதலான கற்றல் கருவிகளும் கரும்பலகை, சாக்பீஸ் முதலான கற்பித்தல் கருவிகளும் வகுப்பறைகளில் இடம்பிடித்தன. இன்று பயிற்றுக் கருவிகள் பல்கிப் பெருகி வகுப்பறைகளை ஆக்கிரமித்துள்ளன. இன்றைய வகுப்பறைப் பயிற்றுக் கருவிகளை அச்சுக் கருவிகள், ஒளி ஊடுருவும் கருவிகள், ஒளி ஊடுருவாக் கருவிகள், செவிப்புலக் கருவி, ஒளி ஒலிக் கருவிகள், கணினி மென்பொருள், வன்பொருட்கள் என வகைப்படுத்தலாம்.
இருபதாம் நூற்றாண்டின் கடைசி வரவான கணினியும் கணினி சார்ந்த பல்லூடகமும் இணையமும் கற்றல், கற்பித்தலில் பயிற்றுக் கருவிகளாக இடம்பெறத் தொடங்கிய பிறகு வகுப்பறை என்பதற்கான பருப்பொருள் தன்மையே மாற்றம் பெறலாயிற்று. இன்றைக்குப் பல்லூடகமும் இணையமும் பயிற்றுக் கருவியாக மட்டுமல்லாமல் பயிற்றுநராகவும் செயல்படத் தொடங்கியுள்ளன. சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு, கற்றல் கற்பித்தலில் 30 சதவீதம் கணினிப் பயன்பாடு இருத்தல் அவசியம் என 2008 இல் அறிவித்த பிறகு தமிழ்மொழிக் கல்வியில் பல்லூடக, இணையப் பயன்பாடுகள் பெருமளவு பரவலாக்கப்பட்டுள்ளன.
இணையம் வழிக் கற்பித்தலில் மின்னஞ்சல், இணைய உரையாடல், காட்சிவழிக் கலந்துரையாடல், செய்திக் குழுக்கள், கோப்புப் பரிமாற்று நெறிமுறை, சமூக வலைத்தளங்கள் முதலான இணைய வாய்ப்புகள் மிகவும் உறுதுணையாக உள்ளன. மேலும் பல்லாயிரக் கணக்கிலான தமிழ் வலைத்தளங்களும் வலைப் பதிவுகளும் கற்பித்தலுக்கு உதவக்கூடிய கட்டுரைகள், கதைகள், கவிதைகள், முதலான தரவுகளை வழங்குவது மட்டுமன்றி மின் இதழ்கள், மின் நூலகங்கள், இணையத் தமிழ் அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் எனப் பல்வேறு வகையான கற்றல், கற்பித்தல் மூலங்களையும் இணையம் வழங்குகின்றது.
கணினி, கணினிவழிப் பல்லூடகம், இணையம், இணைய வழி ஏந்துகள் எனக் கற்றலும் கற்பித்தலும் காலத்திற்கேற்பப் பல புதிய கோலங்களைப் புனைந்து நம்மை வியப்பிலாழ்த்தினாலும் அவைகள் ஒருபோதும் கற்பித்தலில் ஓர் ஆசிரியரின் இடத்தை நிரப்பவல்லன அல்ல. வகுப்பறை என்பது தொழிற்கூடமன்று.
புலன்களால் கற்பது மட்டுமல்ல கல்வி. அது மனத்தால் கற்பது.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்    
என்பார் ஒளவையார். மனப் பழக்கத்தால் பயிலுவதே கல்வி. கற்றலுக்குப் பயன்படும் கருவிகள் மாணவர்களின் புலன்களைப் பழக்கவல்லன. ஆனால் ஆசிரியரே மாணவர்களின் மனத்தைப் பழக்க வல்லவர். வகுப்பறைச் சூழல், மாணவர்கள் மனநிலை இவற்றைக் கருத்தில் கொண்டு அன்றன்றைக்குத் தேவைப்படும் உத்திகளோடு வகுப்பறையை உயிரோட்டம் உள்ளதாக மாற்றும் சக்தி ஆசிரியர்களுக்கே உண்டு. இப்படிச் சொல்வதன் நோக்கம் புதிய தொழில் நுட்பங்களை புறக்கணிப்பதாகாது. எத்தகைய அறிவியல், தொழில் நுட்ப வசதிகள் கிடைத்தாலும் அவற்றையும் பயன்கொண்டு நம்மை உயர்த்திக் கொள்வதுதான் சரியான பகுத்தறிவு என்றாலும் துணைக் கருவிகள் துணைக்குத்தான் என்ற தெளிவு நமக்கு வேண்டும்.
***
சிங்கப்பூர்க் கல்வி அமைச்சகம் இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைச் சூழலிலேயே இத்தகு திறன்களை வளர்த்துக் கொள்ளுதலுக்குத் தங்கள் கற்பித்தல் அணுகுமுறைகளில் புதியன புகுத்திட வேண்டும் என்பதிலும் விழைவு கொண்டிருப்பது காலத்தின் தேவையை உணர்ந்த தக்கதோர் முன் முனைப்பாகும்.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர்கள் பெறுவதற்குப் பிற கல்விப்புலங்களை விட மொழிப்புலமே மிகச் சரியான தளமாகும். மொழித் திறன்களாகிய பேசுதல், கேட்டல், எழுதுதல், படித்தல் ஆகிய தொடர்பாடல் திறன்களின் வழியாகத்தான் மேற்சொன்ன திறன்களை மாணவர்கள் பெறுதல் எளிதாகும். மொழிக் கல்வியின் பாடத்திட்டங்களும் இத்திறன்களைப் பெறுவதற்கு உண்மையிலேயே சரியான களமாக அமைகின்றன.
இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்கள்
1. குடியியல்சார் அறிவு, உலகளாவிய விழிப்புணர்வு, மற்றும் பிற
கலாசாரங்களைப் புரிந்துகொண்டு கையாளக்கூடிய திறன்கள்
துடிப்பான சமூக அக்கறைகொண்ட வாழ்வை மேற்கொள்ளுதல்,
தேசிய மற்றும் கலாசார அடையாளங்களைத் தெரிந்துகொண்டு நாட்டுருவாக்கத்துக்குத் தேவையான பண்புநலன்களைப் பெறுதல்
உலகை மிரட்டும் பிரச்சினைகளை அறிந்துகொள்வதில் அக்கறை காட்டுதல்
சமூகக் கலாசாரக் கூருணர்வும் விழிப்புணர்வும் பெறுதல்
2. நுண்ணாய்வுத் திறனும் புத்தாக்கப்புனைவுத் திறனும்
மாணவர்கள் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, காரண காரியத்தோடு பேசுதல், பிரச்சினைகளுக்குத் தெளிவான முடிவு எடுத்தல் முதலிய திறன்களைப் பெறுதல்
புதியனவற்றை அறிந்துகொள்ளும் முனைப்பு, அவற்றைப்பற்றி மீள்நோக்கிக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் திறன் மற்றும் படைப்பாக்கத்திறன் முதலியன மேம்படுதல்
3. தகவல் மற்றும் கருத்துப் பரிமாற்றத் திறன்கள்
புதிய, பலதரப்பட்ட தகவல்களைத் திறந்த மனத்துடன் பெற்றுப் புரிந்துகொண்டு செயற்படுதல்
தகவல்களைப் பெறும்போது இணையப் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளுதல்
இணையத்தில் பெற்ற தகவல்களைப் பொறுப்புடன் பயன்படுத்துதல்
பெற்ற தகவல்களை பகிர்ந்துகொள்ளும்போது, பிறருக்குப் புரியும் வகையில் எடுத்துக்கூறும் திறனைப் பெறுதல்

இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களின் குவி மையம் உலகைப் புரிந்து கொள்ளுதலும் கருத்துப் பரிமாற்றத் திறன் பெறுதலும்தான். இன்றைய உலகமயச் சூழலில் கல்வியின் இலக்கும் இத்திறன்களைப் பெறுவதில்தான் முழுமைபெறும் என்பதில் ஐயமில்லை. மொழிக்கல்வியின் முதன்மை நோக்கமே கருத்துப் பரிமாற்றத் திறன்களை வளர்ப்பதுதான். கூடுதலாக நாம் கவனம் செலுத்தவேண்டிய திறன் உலகு தழுவிய விசாலப் பார்வையைக் கற்பிப்பது. இந்த இரண்டு நோக்கங்களை மையப்படுத்தி மொழியாசிரியர்கள் தங்கள் கற்பித்தலை மேம்படுத்துதல் வேண்டும்.
உலகம் எதிர்கொண்டுள்ள ஏதேனும் ஒரு சிக்கலை முன்னிறுத்தி 21 ஆம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர்களுக்குக் கற்பிக்கலாம்.
சான்றாக, புவி வெப்பமடைதல்.
புவி வெப்பமடைதல் குறித்த சிக்கல்கள் -தீர்வுகள் -நமது கடமைகள் குறித்து ஆசிரியர் அறிமுக நிலையில் முன்னுரைத்து இப்பிரச்சனை தொடர்பான கூடுதல் தகவல்களை இணைய வழியாகத் திரட்டக் கற்றுக்கொடுத்தல் -தேடுபொறிகளைக் கையாண்டுத் தரவுகளைத் திரட்டப் பயிற்றுவித்தல் -விவாதக் குழுக்களில் இணைந்து இப்பொருள் குறித்து விவாதிக்க வழிகாட்டுதல் -மின்நூலகம், மின்னிதழ்கள் இணையக் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடக் கற்பித்தல்.
புவி வெப்பமடைதல் குறித்த தகவல்களைத் திரட்டியபின் இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் தொடர்பாக மாணவர்களின் கருத்துப் பரிமாற்றத் திறன்களை வளர்த்தல் -நல்ல குடிமகனாகத் தன்னளவில் செய்ய வேண்டுவன யாவை என உணர்த்தலும் உணரச் செய்தலும்.
வகுப்பறைக் குழு விவாதங்களின் வழி, சிக்கலின் தீவிரத்தை அறியச் செய்தல். புவி வெப்பம் குறித்த கட்டுரை, கவிதை, நாடகம் முதலான படைப்பாக்கங்களை உருவாக்க வழிகாட்டுதல், நாடகங்களை நடிக்கச் செய்தல், மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்து சொற்போர் நிகழ்த்தப் பயிற்றுவித்தல் முதலான பல பயிற்சிகளின் வழி இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர் பெற்றுச் சிறக்க ஆசிரியர் தம் கற்பித்தலில் முனைப்பு காட்டலாம் வேண்டும்.  
****
கற்பித்தல் என்பது ஒரு கலை. அதிலும் மொழி கற்பித்தல் என்பதனைத்  தனிப்பட்ட ஒவ்வோர் ஆசிரியரின் செய்நேர்த்தியோடு கூடிய கலையாகவே நாம் கருதுதல் வேண்டும். மொழியாசிரியர் தம் பணியின் தொடக்கக் காலங்களில் தாம் கற்றுக்கொண்ட ஏதோ ஓர் அணுகுமுறையில் மொழிக்கல்வியைத் தொடங்கினாலும் தம் பணியில் அனுபவ முதிர்வு ஏற்பட ஏற்படத் தமக்கான ஒரு கற்பித்தல் அணுகு முறையினைத் தாமே உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். இத்தகு புதிய அணுகுமுறை அவரவர்க்கு வாய்த்த வகுப்பறைச் சூழல்களின் அடிப்படையில் உருவாக வேண்டும். மொழி கற்பித்தலின் வெற்றிகரமான பழைய அணுகுமுறைகள் பலவும் தனிப்பட்ட ஆசிரியர்கள் சிலரால் உருவாக்கப்பட்டவைகளே என்பதனை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
ஓவியக் கலைஞனோ, சிற்பக் கலைஞனோ, இசைக் கலைஞனோ எந்த ஒரு கலைஞனும் தன் கலைத்திறமைக்குத் தேவைப்படும் சில அறிவியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு தன் கலையை வளர்த்துக்கொண்டாலும் அக்கலைஞனின் வெற்றி அவனது தனிப்பட்ட செய்நேர்த்தியிலும் படைப்பாற்றலிலும்தான் முழுமை பெறுகிறது. அதேபோல் ஆசிரியனும் ஒரு கலைஞனே. அவனது வகுப்பறை ஒரு கலைக் கூடமே. அவனது கற்பித்தல் ஒரு கலை வெளிப்பாடே. ஆசிரியனின் வெற்றியும் அவனது தனிப்பட்ட கற்பித்தல் நேர்த்தியிலும் தகுதியான மாணவர்களை உருவாக்கும் படைப்பாற்றலிலும்தான் முழுமை பெறுகிறது. கற்பித்தல் செய்நேர்த்தி என்பது ஆசிரியரின் ஈடுபாட்டோடு தொடர்புடையது. எத்தனை மேடைகளில் பாடியிருந்தாலும், நடனமாடியிருந்தாலும் அன்றைக்குத்தான் முதல்முறையாக மேடையேறும் கலைஞர்களைப்போல பாடகர்களும், நடனக் கலைஞர்களும் சாதகம் செய்தோ ஒத்தகை பார்த்தோ தங்களைத் தயார் செய்துகொள்வதைப் போல் ஆசிரியர்களும் ஒவ்வொரு நாளும் கற்பிக்க வகுப்பறைக்குச் செல்வதற்குமுன் முன்தயாரிப்பில் ஈடுபடவேண்டும். ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய ஈடுபாடே ஆசிரியர்களின் வெற்றிக்கு முதல்படி.
புதுமை புரிவீர்! புத்துணர்ச்சி பெறச்செய்வீர்! இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் வகுப்பறை என்ற இக்கருத்தரங்கின் நோக்கம் முழுமைபெற வேண்டுமென்றால் ஒவ்வொரு மொழியாசிரியரும் தமது கற்பித்தலை ஒரு கலை வெளிப்பாடாக, ஒரு படைப்பாக்க வெளிப்பாடாக மாற்ற முயலவேண்டும். அதன் முழுமையில்தான் புத்துணர்ச்சி அடங்கியுள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டின் தமிழ் வகுப்பறைகள் இயந்திர மயமாக இல்லாமல் உயிரோட்டம் உள்ளனவாக அமைதல் வேண்டும். 
கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகளோடு இந்த உரையை நிறைவு செய்கிறேன்.
உங்கள் குழந்தைகளைத்
தயவுசெய்து
படித்த ஆசிரியரிடம் ஒப்படைக்காதீர்கள்;
படிக்கின்ற ஆசிரியரிடம் ஒப்படையுங்கள்.

துணைநின்ற நூல்கள் கட்டுரைகள்:
1.             இணையம் வழித் தமிழ் கற்பித்தல் (இணையக் கட்டுரை) சுப.நற்குணன்
2.             கணினியும் தமிழ் கற்பித்தலும் (நூல்) டாக்டர் சுப.திண்ணப்பன்,
3.             சிங்கப்பூரில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் கணினியின் பயன்பாடு -(இணையக் கட்டுரை) முனைவர் ஆ.இரா.சிவக்குமரன்.
4.             சீன ஞானம் -வாழ்க்கை வெளிச்சம் (நூல்) டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி
5.             தமிழின் புதிய தேவைகளின் பார்வையில் தமிழ் கற்பித்தல்
(இணையக் கட்டுரை) பேராசிரியர் இ.அண்ணாமலை
6.             தமிழ் கற்பித்தலில் பயிற்சிகள் (நூல்) த.பரசுராமன்


Dr.N.Ilango



புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...