தொல்லியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொல்லியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 அக்டோபர், 2021

தொல்லியல் பயணம் - நெகனூர்பட்டி

 

தொல்லியல் பயணம் - செஞ்சி (18-09-2021) பகுதி -1

நெகனூர்பட்டி - தமிழி கல்வெட்டு



நெகனூர்பட்டி - விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சியைச் சேர்ந்த சிறுகிராமம்.

நெகனூர்பட்டி - இவ்வூரில் உள்ள அடுக்கங்கல் எனும் சிறுகுன்றுப் பகுதி ஒரு தொல்லியல் இடமாகும். கடந்த 2021 ஆகஸ்ட் திங்களில் தான் தமிழக அரசு இப்பகுதியையும் இங்குள்ள தமிழி கல்வெட்டையும் பாதுகாக்கப்படும் சின்னங்களாக அறிவித்துள்ளது.

இந்த நெகனூர்பட்டி செஞ்சிக்கு வடகிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ளது.

நெகனூர்ப்பட்டிக்கு மேற்கே உள்ள ‘அடுக்கங்கல்’ என்ற குன்றின் கீழ்ப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள சிறு குகையை ஒட்டிய கூரை விளிம்பில் ஒரு தமிழி கல்வெட்டு இடம்பெற்றுள்ளது.

சுமார் கி.பி. 3 – 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கல்வெட்டு கணிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் கீழுள்ள குகையில் சமணப் படுக்கைகள் இருந்துள்ளன. ஆனால் தற்போது சிதைந்துள்ளன. குகையின் மேற்கூரையில் பழங்கால வெண்சாந்து ஓவியங்கள் உள்ளன.

தமிழிக் கல்வெட்டு நான்கு வரிகளில் மிகவும் மெலிதாகக் கீறப்பட்டுள்ளது. கல்வெட்டினைச் சுற்றிச் சதுரவடிவில் கோடுகள் இடம் பெற்றுள்ளன.

கல்வெட்டு வாசகங்கள்

=======================

= பெரும்பொகய்

= செக்கந்தி தாயியரு

= செக்கந்தண்ணி செ

= யிவித்த பள்ளி

======================

பெரும்பொகை என்ற ஊரைச் சேர்ந்த செக்கந்தியின் தாயார் செக்கந்தண்ணி என்பவள் செய்து கொடுத்த பள்ளி (படுக்கை) என்பது இதன்பொருள்.

இக்கல்வெட்டு தமிழி எழுத்து வளர்ச்சி நிலையை அடையாளப் படுத்தும் ஒரு சிறந்த கல்வெட்டாகும்

கல்வெட்டின் சிறப்புகள்-

1. ஒரு பெண்ணின் கொடையைக் குறிப்பிடுவதாக உள்ளது. 2. கல்வெட்டினைச் சுற்றி சதுரவடிவில் கட்டம் கட்டப்பட்டுள்ளது. 3. மெய் எழுத்துகள் புள்ளி பெற்றுள்ளன. 4. எழுத்துகளுக்கு தலைக்கோடு இடம் பெற்றுள்ளது. 5. இகர உயிர்க்குறி வளைத்து இடப்பக்கமாகச் செல்கிறது. 6. ப எழுத்தின் இரண்டு மேல் விளிம்புகளும் சமமாக உள்ளன.

கந்தி என்ற சொல் பெண் துறவியைக் குறிப்பிடுகிறது. பெரும்பொகை என்ற ஊர் இன்றும் அதே பெயரில் நெகனூர்ப் பட்டியிலிருந்து 3 கி.மீ. தெற்காக அமைந்துள்ளது பெரும்பொகை -பெரிய குகை உள்ள ஊர் என்று பொருள்படும். இவ்வூரில் சமணப் படுக்கைகள் உள்ள குகையை இன்றும் காணலாம்.

இக்கல்வெட்டினை முதன்முதலில் கண்டெடுத்து வாசித்து வெளிப்படுத்தியவர் சு.இராசவேலு (ஆவணம் இதழ்)

 

நெகனூர்பட்டி - பாறை ஓவியம்





நெகனூர்பட்டிக்கு மேற்கே உள்ள ‘அடுக்கங்கல்’ என்ற குன்றின் கீழ்ப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள சிறு குகையின் மேற்கூரையில் பழங்கால வெண்சாந்து ஓவியங்கள் உள்ளன.

அடுக்கங்கல் வெண்சாந்து ஓவியங்களின் காலம் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன் என்று கணிக்கப்பட்டுள்ளன. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் இவை.

இந்த ஓவியத் தொகுதியில் சில குறியீடுகள், கோலங்கள், மனிதர்கள், விலங்கு போன்றவை இடம் பெற்றுள்ள. குறியீடுகள் கோலங்கள் போன்றவை கால வெள்ளத்தில் சிதைவுற்றுள்ளன. சில மனித உருவங்களும் அழிந்துள்ளன. இப்பொழுது தெளிவாகத் தெரியக்கூடிய ஓவியங்கள் ஐந்து ஆகும்.

1. ஒரு மனிதன் ஒரு கையில் வாளும் மறு கையில் கேடயம் போன்ற தடுப்பும் ஏந்திய ஓவியம்.

2, 3, 4, ஓவியங்கள் மனிதர்கள் வெற்றிக் களிப்பில் ஆர்ப்பரிப்பது போன்று வரையப்பட்டுள்ளன.

5. இது ஒரு விலங்கின் ஓவியம் போன்று உள்ளது.

இந்த ஓவியங்கள் சிதைந்துள்ள கற்படுக்கை உள்ள குகையின் கூரையில் வரையப் பட்டுள்ளன.

நெகனூர்பட்டி - அடுக்கங்கல்



நெகனூர்பட்டி - செஞ்சிக்கு வடகிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூர். இச்சிற்றூருக்கு மேற்கே உள்ள ‘அடுக்கங்கல்’ என்ற குன்று இயற்கையின் வியத்தகு படைப்பு. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கும் இப்பாறைத் தொகுதி காட்சிக்கு மட்டும் விருந்தளிக்காமல் கருத்துக்கும் விருந்தளிக்கிறது.

அடுக்கங்கல் எனும் இச்சிறு குன்றுப் பகுதி ஒரு தொல்லியல் இடமாகும். இக்குன்றின் கீழ்ப்பகுதியில் சமணப் படுக்கையும் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி கல்வெட்டும் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்சாந்து பாறை ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த 2021 ஆகஸ்ட் திங்களில் தான் தமிழக அரசு இப்பகுதியையும் இங்குள்ள தமிழி கல்வெட்டையும் பாதுகாக்கப்படும் சின்னங்களாக அறிவித்துள்ளது.

அடுக்கங்கல் குன்றின் அருகிலுள்ள பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு சிதைந்துள்ளன. அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டு பொட்டலாகக் காட்சியளிக்கின்றன. கற்படுக்கைகளைச் சிதைத்து நம்மவர்கள் தங்கள் பெயர்களைக் கல்வெட்டுகளாகப் பதித்து அலங்கோலம் செய்துள்ளனர். தற்போது தமிழக அரசு பாதுகாக்கப்படும் சின்னமாக அடுக்கங்கல்லை அறிவித்துள்ளமை பாராட்டத் தக்கது. இனியேனும் தொல்லியல் சின்னங்களை நாமும் அரசும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

மாமன்னன் இராசேந்திர சோழன் அரண்மனை - அகழ்வாராய்ச்சி

 

மாமன்னன் இராசேந்திர சோழன் அரண்மனை மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி

முனைவர் நா.இளங்கோ



கங்கை கொண்ட சோழபுரம் தமிழ் மாமன்னன் இராசேந்திர சோழனின் ஆட்சியில் தலைநகராக உருவாக்கப்பட்டு, தொடர்ச்சியாக 265 ஆண்டுகள் தலைநகராக விளங்கிய பெருமையுடையது.

இராசேந்திர சோழனின் அரண்மனை இருந்த மாளிகைமேட்டில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் தற்போழுது அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இராசேந்திர சோழன் அரண்மனை கங்கை கொண்ட சோழீச்சுவரம் கோயிலை உள்ளடக்கிய 1000 ஏக்கர் நிலப்பரப்பு உடையது என்கிறார் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் தோழர் பொறிஞர் இரா.கோமகன்.

2021 ஜனவரி திங்கள் முதல் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியில் அரண்மனைக் கட்டிட அமைப்புகள் பெரிய அளவில் கண்டறியப்பட்டுள்ளன.

அரண்மனை செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. மேற்கூரை தற்போதுள்ளது போல் தளங்கள் (Concrete) அமைக்கப்பட்டு, ஓடுகள் (Tiles) பதிக்கப்பட்டுள்ளன. இவை பல அடுக்குகள் கொண்ட தளங்களாக உள்ளன. இத்தளங்களைக் கருங்கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன. செங்கற் சுவர்கள் 4.5 அடி அகலம் கொண்டவை.

அகழ்வாராய்ச்சியில் விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட எலும்பிலான பொருட்கள், யானைத் தந்தத்தில் செதுக்கப்பட்ட பொருட்கள், சங்கு வளையல் துண்டுகள், கற்களாலான பொருட்கள் எனப் பலவகை அரிய பொருட்கள் கிடைத்துள்ளன.

மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட பச்சை நிறமேற்றப்பட்ட பீங்கான் பொருட்கள், பீங்கான் ஒட்டுச்சில் போன்றவையும் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் 11, 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்குக் கிடைத்துள்ள பொருட்கள் மூலம் சீனாவிற்கும் சோழ ஆட்சிக்குமிடையே வணிக உறவு இருந்தமை உறுதியாகியுள்ளது.

அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரி எஸ்.நந்தகுமார் மேற்பார்வையில் 30 - 40 பேர் கொண்ட குழுவினர் செய்து வருகின்றனர்.

நேற்று (07.08.2021) முழுவதும் எங்களோடு இருந்து அரிய பல வரலாற்றுத் தொல்லியல் செய்திகளை எடுத்துக் கூறி எங்களது பயணத்தை முழுமையடையச் செய்த தோழர் பொறிஞர் இரா.கோமகன் அவர்களுக்கு நன்றி.





திங்கள், 9 டிசம்பர், 2019

பெருமுக்கல் தொல்லியல் வரலாற்றியல் பயணம். 01-09-2018

புதுச்சேரி, கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்
ஒருங்கிணைத்த  பெருமுக்கல் தொல்லியல் வரலாற்றியல் பயணம்.
(01-09-2018)


பெருமுக்கல் வரலாறு குறித்த விளக்கவுரை முனைவர் நா.இளங்கோ

பெருமுக்கல் மலை: திண்டிவனத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் மரக்காணம் செல்லும் சாலையில் உள்ளது.

பெருமுக்கல் மலை


பெருமுக்கல் பாறைக் கற்குறியீட்டு ஓவியங்கள் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய ஹீரோக்ளிபிக் HIEROGLYPHIC வகையைச் சார்ந்தவை என்றும் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய கீறல் ஓவியங்கள் PETRO GLYPHS வகையைச் சார்ந்தவை என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இக்குறியீடுகள் பெருமுக்கல் மலையிலுள்ள சீதைக் குகை என்று ஊர்மக்களால் அழைக்கப்படும் குகையில் இடம்பெற்றுள்ளன.

4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீறல் ஓவியக் களஆய்வில் முனைவர் நா.இளங்கோ


பெருமுக்கல் கீறல் ஓவியங்கள்
பெருமுக்கல் மலையிலுள்ள கோயில் முக்தியாலீசுவர் திருக்கோயில். இத்திருக்கோயிலின் சுற்றுச்சுவர்களில் இடம்பெற்றுள்ள 60 கல்வெட்டுகள் பதிவுசெய்து வெளியிடப்பட்டுள்ளன. இக் கல்வெட்டுகள் மூலம் பிற்காலச் சோழா், பாண்டியா், காடவராயா், சம்புவரையா் மற்றும் விஜயநகர மன்னா்களின் திருக்கோயில் கொடைகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள முடிகின்றது. முற்காலச் சோழா் காலம் முதல் தமிழக வரலாற்றினை அறிந்துகொள்ள உதவும் அரிய ஆவணங்களாக இவை உள்ளன.
இக்கோயிலின் பழமையான கல்வெட்டு உத்தமசோழன் காலத்துக் கல்வெட்டாகும்.
அடுத்து முதலாம் குலோத்துங்க சோழன் விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. விக்கிரம சோழ மன்னனின் காலத்தில் தான் (கி.பி 1118−35) மலை மீது உள்ள திருக்கோயில் புனரமைக்கப்பட்டுக் கற்றளியாக திருப்பணி செய்யப் பட்டுள்ளது.
இக்கோயிலுக்கு மிகுதியான திருப்பணிகள் செய்தகாக்கு நாயகனின்திருவுருவச் சிலையும் கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபெரியான் திருவனான சிறுத்தொண்டன்திருவுருவச் சிலையும் திருக்கோயிலின் அா்ச்சகரானதிருச்சிற்றம் பலமுடையான் அன்பா்க்கரசு பட்டனதுதிருவுருவச் சிலையும் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளன.




கோயில் கல்வெட்டுகளில் பெருமுக்கல், “ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாடான விசைய இராசேந்திர வளநாட்டு பெருமுக்கிலான கங்கை கொண்ட நல்லூா்என்று குறிப்பிடப்படுகிறது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் பெருமுக்கல், கங்கை கொண்ட நல்லூர் என்று அழைக்கப் பட்டிருக்கலாம்

பெருமுக்கல் கோட்டை.
ஆற்காடு நவாபின் ஆளுகைக்கு உட்பட்டு 18ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலிகான் பெருமுக்கல் பகுதியை ஆட்சி புரிந்துள்ளார். அவர்காலத்தில் சந்தா சாஹிப் மகனது திருமணம் 1747 வருடம் டிசம்பா் மாதம் புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது. இத்திருமண விழாவில் புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநா் கலந்துகொள்ள வேண்டுமென பெருமுக்கலை ஆண்ட ஹைதர் அலிகான் நேரில் சென்று தங்க நகைகளைப் பரிசளித்து அழைப்பு விடுத்ததாக புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக்குறிப்பு தெரிவிக்கின்றது.
ஹைதர் அலிகான் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்ததால் ஆங்கிலேயரின் பகையை எதிர்கொள்ள நேரிட்டது. புதுச்சேரியைக் கைப்பற்ற பிரிட்டிஷ் தளபதி கர்னா் அயா்கூட் தலைமையில் பெரும்படை 1760 ல் பெருமுக்கல் கோட்டையைத் தாக்கி அங்கிருந்த செல்வங்களைக் கொள்ளை யடித்துக் கோட்டையையும் கைப்பற்றியது.
பின்னா் 1780 ல் மைசூரை ஆண்ட ஹைதா் அலியின் படைகள் பெருமுக்கல் கோட்டையைக் கைப்பற்றின. மீண்டும் 1783 ல் பெருமுக்கல் கோட்டை ஆங்கிலேயா் கட்டுப்பாட்டிற்குச் சென்றது.
1790ல் ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான் மீண்டும் ஆங்கிலேயரிடமிருந்து இக்கோட்டையைக் கைப்பற்றினார். அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் பெருமுக்கல் கோட்டை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடர்ந்து பல முறை போரின் கோரத் தாக்குதலுக்கு உள்ளான பெருமுக்கல் கோட்டை சிதைந்து சின்னாபின்னமாக இப்பொழுதும் காட்சியளிக்கிறது.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...