செவ்வாய், 11 நவம்பர், 2008

பாவேந்தர் பிள்ளைத் தமிழ் - அணிந்துரை முனைவர் நா.இளங்கோ

பாவேந்தர் பிள்ளைத் தமிழ் - மணிமேகலை குப்புசாமி

அணிந்துரை



ஐரோப்பியர் வருகை, ஆங்கிலக் கல்வி, அச்சியந்திர வருகை முதலான காரணங்களால் தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை முதலான உரைநடை இலக்கியங்கள் தமிழில் பல்கிப் பெருகத் தொடங்கின. 19, 20 ஆம் நூற்றாண்டுகளின் புத்திலக்கிய வகைகளின் எழுச்சியும் பெருக்கமும் பழைய மரபிலக்கிய வகைகளை வீழ்த்திவிட்டனவோ? என்று தோன்றும். கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுக்காலம் செல்வாக்கோடு திகழ்ந்த தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் காலம் முடிந்தது என்று ஒரு மாயத்தோற்றத்தை உரைநடை இலக்கியங்களின் பெருக்கம் ஏற்படுத்தினாலும் உண்மை இதற்கு நேர்மாறானது. ஏனைய நூற்றாண்டுகளை விடவும் இருபதாம் நூற்றாண்டில்தான் சிற்றிலக்கியங்கள் அதிக அளவில் பாடப்பட்டன என்பது ஒரு வியக்கத்தக்க உண்மை.

பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் வரை சிற்றிலக்கியப் பாட்டுடைத் தலைவர்கள் பெரிதும் கடவுளர்களாகவோ அரசர்களாகவோ வள்ளல்களாகவோ அமைந்தனர். இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களினால் பாட்டுடைத் தலைவர்கள் பலகிப் பெருகினர். தமிழகத்தில் புதிதாக நுழைந்த ஐரோப்பியக் கிருத்துவப் பாதிரிமார்களும் மதம் மாறிய தமிழ்க் கிருத்துவப் புலவர்களும் தம் மதத்தைப் பரப்பும் நோக்கில் அச்சியந்திரங்களின் துணைகொண்டு பல புதிய கிருத்துவச் சிற்றிலக்கியங்களைப் பாடினார்கள். இதன் உடன் விளைவாக இந்து மதக் கடவுளர்களைப்(?) போற்றும் சிற்றிலக்கியங்கள் பாடப்பட்டன. இஸ்லாமியர்களும் பல மரபான, புதிய சிற்றிலக்கியங்களை உருவாக்கினார்கள். ஆக இருபதாம் நூற்றாண்டில் இந்து, இசுலாம், கிருத்துவச் சிற்றிலக்கியங்கள் பல்கிப் பெருகின.

இவ்வகை சமயஞ்சார்ந்த சிற்றிலக்கியங்களுக்கு இணையாக அல்லது மிகையாக சமயம்சாராச் சிற்றிலக்கியங்களும் இருபதாம் நூற்றாண்டில் மிகுதியும் பாடப்பட்டன. இந்நூற்றாண்டில் தோன்றிய அரசியல் எழுச்சி மற்றும் தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனைகளை ஒட்டி நிறைய பாட்டுடைத் தலைவர்கள் தமிழ்ப் புலவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தார்கள். 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அரசியல் சார்ந்த சிற்றிலக்கியங்களுக்குத் தேசிய இயக்கம் மற்றும் திராவிட இயக்கங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. இவ்வகையில் நு}ற்றுக்கணக்கான சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. சான்றாக, காந்தி பிள்ளைத் தமிழ், காமராசர் உலா, நவபாரதக் குறவஞ்சி.. (தேசிய இயக்கம் சார்ந்தவை), கலைஞர் காவடிச் சிந்து, எம்.ஜி.ஆர். உலா, புரட்சித் தலைவி அம்மானை.. (திராவிட இயக்கம் சார்ந்தவை) முதலானவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழ் மறுமலர்ச்சி சார்ந்த சிற்றிலக்கியங்கள் பெரிதும் தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு மிகுந்த எண்ணிக்கையில் பாடப்பட்டுள்ளன. சான்றாக, பாரதி பிள்ளைத் தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ், கம்பன் திருப்புகழ் முதலானவைகளைக் குறிப்பிடலாம். பாவேந்தர் பிள்ளைத்தமிழ் என்ற பெயரிலேயே புலவர் புலமைப்பித்தன் ஒரு சிற்றிலக்கியம் படைத்துள்ளார்.

பகுதி-2

“பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” கவிஞர் மணிமேகலை குப்புசாமியின் ஐந்தாவது நூலாக வெளிவருகின்றது. கவிஞரின் சிட்டுக்குருவியின் சின்னக்கவலை என்ற முதல் நூலும் அழகியல் என்ற இரண்டாம் நூலும் உரைவீச்சால் அமைந்த கவிதைத் தொகுப்பு நூல்கள், தோப்பு என்ற மூன்றாம் நூலும் அன்னவயல் என்ற நான்காம் நு}லும் மரபுக் கவிதைகளால் ஆன தொகுப்பு நூல்கள். முந்தைய நான்கு நூல்களும் கவிதைத் தொகுப்பு நூல்களாயிருக்க இந்நூல் ஒரு சிற்றிலக்கிய நூலாக வெளிவருவது இதன் தனிச்சிறப்பு. அதிலும் பாவேந்தரின் பெயர்த்தி பாட்டன் பாவேந்தனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடுவது அழகான முரண். பாவேந்தரின் மடியில் தவழ்ந்து விளையாடிய பெயர்த்தி தன் 52ஆம் அகவையில் பாவேந்தரைக் குழந்தையாக்கி தன் மடியிலிட்டுத் தாலாட்டும் கவிதைச் சித்து விளையாட்டை நிகழ்த்தியிருக்கிறார்.

சிற்றிலக்கியங்களிலேயே பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுக்கு என்று ஒரு தனித்த மரபு உண்டு. கடவுளரையோ, மன்னர்களையோ, புலவர்களையோ, வள்ளல்களையோ நாம் வணங்கிப் பாராட்டத்தக்க ஒருவரைக் கற்பனையில் குழந்தையாகப் பாவித்து காப்பு முதலிய பத்து பருவங்கள் அமைத்துப்பாடி மகிழ்வது பிள்ளைத் தமிழ் இலக்கியமாகும். பாடல் யாப்பு ஆசிரிய விருத்தத்தில் அமைதல் மரபு.

சாற்றரிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை – போற்றரிய
அம்புலியே ஆய்ந்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து.
(வெண்பாப் பாட்டியல்-8)

இவ்வாறு பாடும் மரபு தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே உண்டென்பதைத் தொல்காப்பியர்,
குழுவி மருங்கினும் கிழவதாகும் (தொல். புறத். 24)

என்று பதிவு செய்திருப்பதிலிருந்து ஓர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனும் தம் அன்பை முற்ற முழுதாகக் கொட்டிக் காண்பிக்க வாய்ந்த இடம் குழந்தைகளைக் கொஞ்சும் இடமல்லவா? அதனால்தானே திருவள்ளுவரும், “மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (குறள்: 65) என்றும், “அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்” (குறள்: 64) என்றும் குழந்தைமை இன்பத்தைச் சிறப்பித்துப் பாடினார். பாண்டியன் அறிவுடை நம்பியும்,

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே
(புறம்-188)

என்று மயக்குறு குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்து அன்பு மயமாகி நிற்றலின் பெருமையை மிகுத்துப் பேசுகின்றார். ஆக, அன்புணர்ச்சி, அழகுணர்ச்சிகளோடு கவித்துவமும் களிநடம் புரியும் சிற்றிலக்கியம் பிள்ளைத் தமிழே என்றால் அது மிகையன்று. எனவேதான் கவிஞர்கள் பாட்டுடைத் தலைவர்களை நாயக நாயகி பாவத்தில் வைத்துப் பாடும் அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கியங்களைப் பாடுவதைக் காட்டிலும் பாட்டுடைத் தலைவர்களைக் குழந்தைகளாக்கி மகிழ்ந்து பாடும் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களை பெரிதும் விரும்புகின்றனர். இருபதாம் நு}ற்றாண்டுச் சிற்றிலக்கியங்களில் மிகுந்த எண்ணிக்கையில் பாடப்பட்ட இலக்கிய வகைகளில் பிள்ளைத் தமிழும் ஒன்று.

பகுதி-3

மணிமேகலை குப்புசாமியின் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் மரபு வழிவந்த ஒரு சிற்றிலக்கிய வகை என்றாலும் கவிஞர் மரபைப் போற்ற வேண்டிய இடங்களில் போற்றியும் புதுமையைப் புகுத்த வேண்டிய இடங்களில் புகுத்தியும் தனித்தன்மையோடு இந்நு}லைப் படைத்துள்ளார். பருவத்திற்குப் பத்துப்பாடல்கள் என்று மரபான ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் இடம்பெற வேண்டிய காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் முதலான பத்துப்பருவங்களை அமைத்து நூறு பாடல்களில் தம் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் நூலைப் படைத்துள்ளார் கவிஞர். இது அவர் மரபைப் பேணுதலுக்குச் சான்று. காப்புப் பருவத்தில் திருமால் முதலான தெய்வங்கள் பாட்டுடைத் தலைவனைக் காத்தல் வேண்டும் என்ற மரபை ஒதுக்கிவிட்டு காவிரி, மரங்கள், கதிரவன், மழை, காற்று, தமிழ்மொழி, முன்னோர், தாய்மை, தாய்ப்பால், தமிழரினம் முதலானவை பாட்டுடைத் தலைவனாம் பாவேந்தனைக் காக்க வேண்டும் என்று கவிஞர் மணிமேகலை குப்புசாமி தம் பிள்ளைத்தமிழ் நூலை அமைத்தமை அவரின் புதுமை நாட்டத்திற்கு ஒரு சான்று.
மண்ணில் விதைத்துப் பயிர்செய்யும்
மாந்தர்க் குயிராய் இருப்பவளே
மாந்த நேயம் தழைத்திருக்கும்
மங்காப் புகழைக் கொண்டவளே
எண்ணில் வளமும் ஈந்தவளே
இனிய நீரைக் கொண்டவளே
இடராய் ஞெகிழிப் புகைபரவி
எங்கும் நோய்கள் பெருகிடுதே
விண்ணில் முகிலும் அமிலம்பார்
விடமாய் மாற்றுஞ் செயற்கையிலும்
விளங்கும் நிலத்தின் மூலிகையின்
வேர்கள் தழுவி வருபவளே
கண்ணில் மணியெம் பாவேந்தைக்
கல்வி வீரம் பிறநலனும்
கருத்தில் கொடுத்துப் பிணிவிலக்கிக்
காப்பாய் அருமைக் காவிரியே
(பாடல்: 1)

இப்பாடல் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் காப்புப் பருவத்தின் முதல்பாடல். காவிரியே! எம் பாவேந்தைக் காப்பாயாக! என்ற பொருளில் அமைந்த பாடல். கவிஞர் மணிமேகலை இயல்பாகவே ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். அவரின் முதல் தொகுதி சிட்டுக் குருவியின் சின்னக் கவலை என்ற நூல் ஒரு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நூல் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் காப்புப் பருவத்தில் காவிரி, மரங்கள், கதிரவன், மழை, காற்று முதலான இயற்கைப் பொருள்கள் பாவேந்தரைக் காக்க வேண்டும் என்று பாடுகின்றார். அதே நேரத்தில் இயற்கையின் மாண்பையும் செயற்கைகளால் இயற்கைச் சீரழியும் அவல நிலைகளையும் கவிஞர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருள்களை எரிப்பதனால் எங்கும் நோய்கள் பெருகுவதையும் வளிமண்டலம் அமிலமயமாகி இருப்பதையும் செயற்கைகள் விடமாகிப் போகும் நிலைமையையும் சுட்டிக்காட்டி இத்தகு இக்கட்டான சூழ்நிலையிலும் காவிரி நதி இயற்கையைக் காப்பாற்றும் அருஞ்செயல் புரிவதனை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றார் கவிஞர் மணிமேகலை. மரங்கள், கதிரவன், மழை, காற்று முதலான தலைப்புகளிலும் இவ்வாறே இயற்கையின் மேன்மைகளைச் சுட்டிக்காட்டும் கவிஞரின் பணி புவி சூடேற்றம் பற்றிக் கவலையடைந்து வரும் இந்தத் தருணத்தில் தக்ககொரு மருந்தாய்ப் பயன்படுகின்றது. தாய்மை, தாய்ப்பால் இரண்டும் பாட்டுடைத் தலைவனைக் காக்க வேண்டும் என்று பாடுமிடத்தில் தான் ஒரு பெண்கவிஞர் என்ற முத்திரையைப் பதிக்கின்றார். தாய்ப்பாலின் பெருமை பேசும் பாடல் அனைவரும் கற்பதற்கு உகந்தது.

பாவேந்தர் பிள்ளைத்தமிழின் மற்றுமொரு தனிச்சிறப்பு நூலில் ஆங்காங்கே தக்க இடங்களில் கவிஞர் பெய்துள்ள பாவேந்தர் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள். நு}லில் இடம்பெற்றுள்ள பாவேந்தர் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப் பாடல் வரிசைகளோடு பின்இணைப்பில் இணைத்துள்ள நூலாசிரியரின் பணி பாராட்டுதற்குரியது. வரலாற்றுணர்ச்சியோடு; படைத்த கவிஞரின் இப்படைப்பாக்க உத்தி, பிற பிள்ளைத்தமிழ் நூல்களின் அடிப்படைப் பண்பாய்த் திகழும் வருணனை, கற்பனை முதலான அணிநலன்கள் இந்நூலில் மிகுதியும் இடம்பெறாத குறையைக்கூட மறக்கச் செய்துவிடுகிறது.
மக்கள் நன்மை முன்னிருத்தி
மக்கள் தலைவர் சுப்பையா
மங்கா மக்கள் முன்னணியால்
மாநிலத் தேர்தல் எதிர்கொண்டார்
சிக்கல் இன்றி மக்களுமே
சீரார் காசுக் கடைதொகுதி
சிதறா வாக்கால் உன்றனையே
தேர்ந்த தலைவன் என்றிட்டார்
விக்கும் நிலையில் ஒருமனிதன்
வேறு கட்சி தாவியதால்
வென்ற நீங்கள் எதிர்க்கட்சி!
விரும்பும் தலைவர் சுப்பையா
பக்கம் அமர்ந்த துணைத்தலைவா!
பதவிச் சிறுதேர் உருட்டுகவே!
பழகு தோழன் பாவேந்தே
பண்பின் சிறுதேர் உருட்டுகவே!
(பாடல்: 94)

புதுச்சேரியில் 1955 இல் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் மக்கள் முன்னணி என்ற அணியை உருவாக்கி அத்தேர்தலைச் சந்தித்தார் மக்கள் தலைவர் வ.சுப்பையா. மக்கள் முன்னணி சார்பில் காசுக்கடைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் பாவேந்தர். மக்கள் முன்னணி இருபது இடங்களில் வெற்றிபெற்றது. எதிர்அணியினர் பத்தொன்பது இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சியமைக்கும் நேரத்தில் மக்கள் முன்னணியின் கறுப்பாடு ஒன்று எதிரணிக்குத் தாவியது. எனவே சுப்பையாவின் மக்கள் முன்னணி எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டியதாயிற்று. சுப்பையா எதிர்க்கட்சித் தலைவராகவும் பாவேந்தர் எதிர்க்கடசித் துணைத்தலைவராகவும் அந்த சட்டசபையில் பொறுப்பேற்றனர். பாவேந்தரின் இலக்கிய ஆளுமைகளை அறிந்தவர்கள் கூட அதிகம் அறிந்திராத பாவேந்தரின் நேரடித் தேர்தல் அரசியல் வரலாற்றையும் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களோடு பாவேந்தருக்கு இருந்த நெருக்கத்தையும் கவிஞர் மணிமேகலை இப்பாடலில் பதிவுசெய்துள்ளார். பாவேந்தர் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த அதே அவையில்தான் மக்கள் தலைவர் வழிகாட்டுதலில் பாரதி பெயரால் புதுவைக்கு ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பாவேந்தர் பேசினார். அவை இத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது என்ற வரலாற்றையும் மற்றொரு பிள்ளைத்தமிழ் பாடலில் (பாடல் எண்;. 88) குறிப்பிடுகின்றார் நூலாசிரியர்.

பாவேந்தர் பிள்ளைத்தமிழ் கவிஞர் மணிமேகலை குப்புசாமியின் முதல் சிற்றிலக்கிய முயற்சி. சிற்றிலக்கிய வகைகளில் எத்தனையோ எளிமையான இலக்கியங்கள் இருக்க பிள்ளைத்தமிழ் வடிவத்தைத் தேர்ந்தெடுத்தது அவரின் துணிவைக் காட்டுகிறது. கவிஞர் அரிதின் முயன்று தம்பணியை நிறைவாகவே செய்துள்ளார். பாவேந்தர் வழிவந்த கவிமரபு அவருக்குத் துணைசெய்திருக்கின்றது.

பிள்ளைத்தமிழுக்கு அம்புலி-புலி என்பார்கள். அம்புலிப்பருவம் பாடுவது அத்துணை கடினமானது என்பது அதன்பொருள். இரவில் வானில் தோன்றும் அம்புலியைப் பாட்டுடைத் தலைவனாகிய குழந்தையுடன் விளையாட வருமாறு கவிஞராகிய தாய் அழைப்பாள். அவ்வாறு அழைக்கும்போது இன்சொல், வேறுபாடு, கொடை, ஒறுப்பு (சாம, பேத, தான, தண்டம்) முதலான நிலைகளில் பாட்டுடைத் தலைவனோடு நிலவை ஒப்பிட்டுப் பாடவேண்டும். சிக்கலான இந்தப் பிள்ளைத்தமிழ் மரபை இந்நூலில் மிகச் சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார் கவிஞர் மணிமேகலை.
அலைகடல் உடலுறு புயலினை
அகழ்ந்திடும் தனிவலி உடையோனே!
அணிமயில் உடலுறு தனிஎழில்
அமர்ந்திடும் தனிநடை திருவாழ்வே!
கலைதவழ் ஒளிதரு முகஎழில்
களிறுறு தனிக்குலம் உடையோனே!
கனியுறு உயிரொளி தமிழெனுங்
களிதவழ் உணர்வுறு தருவேநீ!
(பாடல்: 31)

மேலே சான்று காட்டப்பட்டுள்ள பாடலைப் போன்று பிள்ளைத்தமிழின் பல பாடல்கள் நல்ல சந்த நயத்தோடு வடித்தெடுக்கப்பட்டுள்ளன. யாப்பு நூல் தேர்ச்சியும் தக்க சொற்களஞ்சியமும் கொண்டு கவிதைகளை யாத்துள்ள கவிஞர் மணிமேகலையின் புலமை பாராட்டுதற்குரியது. பாவேந்தர் வரலாறு, பாவேந்தர் நூல் பெயர்கள், நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள், நூலின் மிகச்சிறந்த கவிதை வரிகள் எனப் பிள்ளைத்தமிழின் ஒவ்வொரு பாடலிலும் ஒல்லும் வகையிலெல்லாம் பாவேந்தரைப் பதிவு செய்யும் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் தமிழுக்குப் புதிய வரவு, புதுமையான வரவு. தமிழுலகம் இந்நூலை ஏற்றுப் போற்றிப் பாராட்ட வேண்டும். கவிஞர் மணிமேகலை குப்புசாமி தொடர்ந்து நல்ல பல இலக்கியங்களைத் தமிழுலகிற்குத் தந்து தமிழ்ப்பணி ஆற்றவேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.


பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...