செவ்வாய், 17 நவம்பர், 2009

பாலியல் அறமும் பரத்தையரும் பகுதி-1, சங்க இலக்கியக் காட்சிகள்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

சங்க இலக்கியக் காட்சிகள்

சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு காட்சி வருணனைகளோடு இக்கட்டுரையைத் தொடங்குகின்றேன்.

காட்சி ஒன்று : மதுரைக் காஞ்சி

மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சி பாடலில் மதுரை நகரை வருணிக்கும்போது நகர வீதிகளில் வலம்வரும் விலைமாதர்களை வருணிக்கும் பகுதி.

நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து
சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி
நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மாணப் புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல
(மதுரைக் காஞ்சி 569 -576)

மதுரை நகர வீதிகளில் கைவீசி நடந்துவரும் விலைமாதர்கள், பிற நாட்டினின்றும் தங்கள் ஊரிலிருந்தும் வந்த இளைய செல்வர்களை வஞ்சனை நிறைந்த பொய்ம்மொழிகளினாலே கூட்டிக்கொண்டு சென்று அணைகின்றனர். அவர்களுடைய செல்வத்தையெல்லாம் வாங்கிக்கொள்ளும் வரையில் அன்புடையார் போல் நடிக்கின்றனர். தேனை உண்டு பின் வண்டு மலர்களைத் துறப்பது போல இவர்களும் தங்களை விரும்பி வந்தவர்களது செல்வத்தை வாங்கியபின் அவர்களைக் கைவிட்டு விடுகிறார்கள். பழமுள்ள மலர்களைத் தேடிச்செல்லும் பறவைபோல வாழ்கிறார்கள்.

காட்சி இரண்டு : பரிபாடல்

நல்லந்துவனார் பாடிய பரிபாடல் 20 ஆம் பாடலில் இடம்பெற்றுள்ள பரத்தைக்கும் தலைவியின் ஆயத்தாருக்குமான உரையாடலின் ஒரு பகுதி.
தலைவன் தலைவியரோடு வையை ஆற்றில் புனலாட வந்த தோழியர், தலைவியிடமிருந்து காணாமல் போனதாகக் கருதப்பட்ட வளையும் ஆரமும் கூட்டத்திலிருந்த பரத்தையொருத்தி அணிந்திருத்தலைக் கண்டனர். அதனால் இப்பரத்தை நம்தலைவியின் மாற்றாள் என எண்ணினர். தலைவன் நாணினான். இதனை அறிந்த பரத்தை மகளிர் கூட்டத்தில் புகுந்து மறைந்தாள். தோழியர் அவளைப் பின்தொடர்ந்தனர். அதுகண்ட பரத்தை என்னை ஏன் பின்தொடர்கின்றீர்? என்று சினந்தாள். அப்போது தோழியர் பரத்தைக்குக் கூறும் மறுமொழி,
.......... ......... அமர் காமம்
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை
பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தைத்
துற்றுவ துற்றும் துணைஇதழ் வாய்த்தொட்டி

முற்றா நறுநறா மொய்புனல் அட்டிக்
காரிகை நீர்ஏர் வயல் காமக்களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முதுசாடி

மடமதர் உண்கண் கயிறாக வைத்துத்
தடமென் தோள் தொட்டுத் தகைத்து மடவிரலால்
இட்டார்க்கு யாழ்ஆர்த்தும் பாணியில் எம்இழையைத்
தொட்டு ஆர்த்தும் இன்பத்துறைப் பொதுவி
-(20, 48-58)

இந்த வசைமொழிகளின் பொருள்,
''காமத்தைப் பொய்யோடு கலந்து விற்கும் கணிகையே! பொதுமகளே! காமுகப் பன்றிகள் நுகரும் தொட்டியே! வனப்பாகிய வயலில் கள்ளாகிய நீரைவிட்டுக் காமமாகிய கலப்பையாலே எம்முடைய எருது உழுகின்ற பழைய சாலே! பொருள் வழங்குவோரைக் கண்ணாகிய கயிற்றாலே தோளாகிய தறியில் கட்டி காமவின்பம் மிகும்பொருட்டு இசையினையும் எம்பால் களவுகொண்ட அணிகளை அணிந்துகொண்ட அவ்வழகையும் ஊட்டுகின்ற பொதுமகளே!"" என்பதாகும்.

மேலே காட்டப்பட்ட இரண்டு காட்சிகளும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளவை. முதல் காட்சி புறப்பாடல் காட்சி, இரண்டாம் காட்சி அகப்பாடல் காட்சி. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இரண்டுமே இலக்கண வகையாலும் இலக்கிய வகையாலும் பரத்தையர் குறித்த பல்வேறு தகவல்களைப் பதிவு செய்துள்ளன. தொல்காப்பியர் காமக்கிழத்தி, பரத்தை இரண்டு சொற்களைக் கையாண்டுள்ளார்.

சங்க இலக்கியங்களில் பரத்தை என்ற சொல் பயின்று வந்தாலும் காமக்கிழத்தி, காதல் பரத்தை, சேரிப் பரத்தை, நயப்புப் பரத்தை, இல் பரத்தை முதலான பெயர்கள் சங்க இலக்கியப் பாடல்களுக்கு தொகுப்பாளர் அல்லது உரையாசிரியர்களால் இடப்பெற்றுள்ள துறைக் குறிப்புகளிலேயே இடம்பெற்றுள்ளன. மூல நூலில் இத்தகு ஆட்சிகள் இல்லை. திணை, துறை வகுத்தோர் காலத்து வழக்காறுகளே இப்பெயர்களால் சுட்டப்படுகின்றன.

பாலியல் அறமும் பரத்தையரும் பகுதி-2, பரத்தையரும் விலைமகளிரும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பரத்தையரும் விலைமகளிரும்:

தமிழிலக்கிய நெடும்பரப்பில் பரத்தை, காமக்கிழத்தி, கொண்டி மகளிர், பொதுமகள், பொருட்பெண்டிர், வரைவின் மகளிர், விலைமகள், கணிகை, சலதி, வேசி, தாசி, தேவரடியாள் (தேவிடியாள்) முதலான பெயர்களால் சுட்டப்படும் பெண்கள் ஒரு சமூக நிறுவனத் தன்மையோடு இயங்கிவந்தமை பதிவாகியுள்ளன. சுட்டப்படும் பெயர்கள் பலவாயினும், பொதுப்பார்வையில் இவர்கள் அனைவரும் விலைமகளிர் என்றே கருதப்படுகின்றனர். ஆனால் நுணுகிப் பார்த்தால் இவர்களை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கலாம் என்று தோன்றுகிறது.

1. பரத்தை, காமக்கிழத்தி முதலான பெயர்களால் அகப்பொருள் இலக்கியங்களில் இடம்பெறும் புலனெறிப் பாத்திரங்கள்.

2. வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், கணிகை, கொண்டி மகளிர், தாசி, வேசி முதலான பெயர்களால் சுட்டப்படும் நடைமுறை வாழ்க்கைப் பாத்திரங்களாக இடம்பெறும் பெண்கள்.
முதல் வகையில் இடம்பெறும் பரத்தை என்ற புலனெறிப் பாத்திரப் படைப்புப் பெண்களையும் இரண்டாம் வகையில் இடம்பெறும், விலைமகளிர் எனப் பொது நிலையில் சுட்டப்படும் நடைமுறை வாழ்க்கைப் பெண்களையும் வேறுபடுத்தி அடையாளம் காண இயலாமல் தமிழகப் பரத்தையர் குறித்த ஆய்வில் இடர்ப்படுவோர் பலருண்டு.

முதல் பிரிவில் இடம்பெறும் அகப்பொருள் பரத்தையர் விலைமகளோ, பொருட்பெண்டிரோ அல்லர். அவர்கள் அகப்பொருள் தலைவனின் மனைவியர் பலருள் ஒருவர். இவ்வகைப் பரத்தையர் குறித்து விரிவாக ஆய்ந்து சிலம்பு நா.செல்வராசு அவர்கள் தரும் முடிபுகள் வருமாறு,

“அ. பரத்தையர், பரத்தை என்ற சொற்கள் தலைமகளின் வேறானவர், அல்லது அயலவர் என்ற பொருளிலேயே குறிக்கப் பெற்றுள்ளன. பரத்தை என்பதற்குப் பொதுப்பெண்டிர், விலைமகளிர் என்று பொருள் கொள்வதற்குத் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் சான்றுகளில்லை.

ஆ. சேரிப்பரத்தை முதலான வகைப்பாடுகள் உரையாசிரியர் காலத்தவை.

இ. இளம்பூரணர் கூறிய ‘ஒருவர் மாட்டும் தங்காதவர்’ என்ற கொள்கையை விளக்கச் சங்க இலக்கியங்களில் சான்றுகள் இல்லை. அவ்வாறே ஆடவர் பலரோடு பரத்தையர் தொடர்பு கொண்டமைக்கும் சான்றுகளில்லை.” (வள்ளுவப் பெண்ணியம், பக் 102-103)

சங்க இலக்கிய மருதப்பாடல்கள் பலவற்றில் பரத்தையைத் தலைவிக்குச் சகோதரியாகவும் தலைவி பெற்றெடுத்த புதல்வனுக்குத் தாயாகவும் சித்தரித்துள்ளனர். தலைவியைப் போலவே பரத்தையையும் வதுவை அயர்ந்து (திருமணத்தின் வழி) பெற்றான் என்று சில பாடல்கள் பதிவுசெய்துள்ளன. (அகநானூறு, 36, 46, 206) தலைவியருக்கும் பரத்தையருக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை பற்றியது. பரத்தைக்குக் குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை கிடையாது என்பதுதான். (நற்றிணை, 330)

இவ்வகைப் பரத்தையர், புலவர் மரபில் புலனெறி வழக்காகப் படைத்துக் கொள்ளப்பட்டவர்களே அன்றி நடைமுறைப் பாத்திரங்களாகார். சங்க அக இலக்கியங்கள் தொடங்கி, கீழ்க்கணக்கு அகநூல்கள், திருக்குறள் காமத்துப்பால், கோவை இலக்கியங்கள் வரை புலனெறியாகப் படைக்கப்படும் அத்துணை அக இலக்கியங்களிலும் இவ்வகைப் பரத்தையர் அச்சுப்புள்ளி மாறாமல் ஒரே வார்ப்பாகப் படைக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாம் பிரிவில் இடம்பெறும் நடைமுறை வாழ்க்கைப் பாத்திரங்களான வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், கணிகை, கொண்டி மகளிர், தாசி, வேசி முதலான பெயர்களால் சுட்டப்படும் பெண்கள் குறித்து விரிவாகப் பேசுவதற்கு இடமிருக்கின்றது. பொதுவில் இவர்களைப் பதியிலார் என்று குறித்தல் பொருந்தும். மதுரைக் காஞ்சி கொண்டி மகளிர் என்ற அடையாளத்தோடு வருணிக்கும் மதுரை நகர விலைமாதர்கள் இவ்வகைப் பதியிலார்களே.

நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து
சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி
நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மாணப் புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல
(மதுரைக் காஞ்சி 569 -576)

தமிழ் இலக்கியப் பரப்பில் சங்க காலம் தொடங்கி நேற்றைய இலக்கியங்கள் வரை இவ்வகைப் பெண்கள் குறித்த பதிவுகள் முற்ற முழுதாக ஆணின் பார்வையிலேயே பதிவாகியுள்ளன. மாயப் பொய்பல கூட்டிக் கவவுக் கரந்து, நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும் மென்சிறை வண்டினம் மாண, பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல முதலான வசைகளின் வழி மாங்குடி மருதனார் முன்வைக்கும் (பொருட்)பெண்டிர் குறித்த மதிப்பீடுகளை ஆழ்ந்து நோக்குதல் வேண்டும். இவ்வகை மதிப்பீடுகளே பதினெண் கீழ்க்கணக்கின் அறநூல்களிலும் நீட்சி பெற்றுள்ளன. திருக்குறளும் இதற்கு விதிவிலக்கில்லை.

பாலியல் அறமும் பரத்தையரும் பகுதி-3, திருக்குறளில் பரத்தையரும் விலைமகளிரும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

திருக்குறளில் பரத்தையரும் விலைமகளிரும்:

திருக்குறள் காமத்துப்பாலில் இடம்பெறும் ஊடல் தொடர்பான அதிகாரங்களில் தலைவிக்கு ஊடல் தோன்ற பரத்தையே காரணமாகிறாள் என்பதைத் திருவள்ளுவர் மிக நுட்பமாகப் பதிவு செய்கிறார்.

நண்ணேன் பரத்த நின் மார்பு (குறள்: 1311)

ஒருத்தியைக் காட்டிய சூடினீர் (குறள்: 1313)

யாரினும் யாரினும் என்று (குறள்: 1314)

யார் உள்ளித் தும்மினீர் என்று (குறள்: 1317)

நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ (குறள்: 1318)

பிறர்க்கு நீர் இந்நீரர் ஆகுதிர் (குறள்: 1319)

யார் உள்ளி நோக்கினீர் (குறள்: 1320)


புலவி நுணுக்கம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள மேலே சான்று காட்டப்பட்டுள்ள அனைத்து குறட்பாக்களிலும் தலைவியின் ஊடலுக்குக் காரணமாகத் தலைவனின் பரத்தமை ஒழுக்கம் பேசப்படுகிறது. இக்குறட்பாக்களில் இடம்பெறும் பரத்தையர் அகப்பாடல்களில் இடம்பெறும் புலனெறி வழக்குப் பரத்தையர்.

திருவள்ளுவர் தம் பொருட்பால் வரைவின் மகளிர் அதிகாரத்தில் கடிந்து சாடும் பரத்தையர்கள் அகப்பொருள் பரத்தையர்கள் அல்லர். அவர்கள் நடைமுறை வாழ்க்கைப் பாத்திரங்களான விலைமகளிர்.

பொருள் விழையும் ஆய்தொடியார் (குறள்: 911)

பண்புஇல் மகளிர் (குறள்: 912)

பொருட்பெண்டிர் (குறள்: 913)

பொதுநலத்தார் (குறள்: 915)

மாய மகளிர் (குறள்: 918)

வரைவுஇலா மாண் இழையார் (குறள்: 919)

இருமனப் பெண்டிர் (குறள்: 920)


பொருட்பெண்டிர், மாய மகளிர், வரைவுஇலா மாண்இழையார், இருமனப் பெண்டிர் முதலான அடை மொழிகளோடும் பிணம், அளறு முதலான வசவுகளோடும் திருவள்ளுவர் குறிப்பிடும் பெண்கள் விலைமகளிரே என்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.

திருக்குறள் காமத்துப்பாலில் ஊடலுக்குக் காரணமாகச் சுட்டும் பரத்தையர், பொருட்பாலில் கடிந்துரைக்கும் பொருட்பெண்டிர் ஆகிய இரண்டு வகையினரையும் பிரித்துணராமல் குழப்பங்களுக்கு ஆட்படுவோர் இரண்டு பிரிவினர்.

1. வரைவின் மகளிர் அதிகாரத்தில் பொருட்பெண்டிரைச் சாடும் குறள் கருத்தை ஒப்புக் கொண்டு, காமத்துப்பாலில் திருவள்ளுவர் பரத்தையர்களைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்று வாதிடுவோர் ஒரு பிரிவினர்.

2. காத்துப்பாலில் இடம்பெறும் பரத்தையர்கள் பற்றிய செய்திகளை ஒப்புக்கொண்டு, பொருட்பால் வரைவின் மகளிர் அதிகாரத்தில் இடம்பெறும் பொருட்பெண்டிர் விலைமகளிர் அல்லர், அவர்கள் ஆண்களால் பொருள் கொடுத்து பெறப்பட்ட பரத்தையர்களே. அவர்கள் பொதுமகளிர் அல்லர். பொருள் கொடுத்த ஆடவனுக்கு மட்டுமே இன்பம் நல்கும் வரைவு - இல் - மகளிர். அதாவது திருமணம் செய்துகொள்ளாத மனைவியர் என்று வாதிடுவோர் சிலர் (சிலம்பு நா.செல்வராசு, வள்ளுவப் பெண்ணியம், பக். 68)

திருக்குறள் காமத்துப்பாலில் ஊடலுக்குக் காரணமாகச் சுட்டும் பரத்தையர், பொருட்பாலில் கடிந்துரைக்கும் பொருட்பெண்டிர் ஆகிய இரண்டு வகையினரையும் பிரித்துணர்ந்து, காமத்துப்பால் பரத்தையர் புலனெறி வழக்கு என்றும் பொருட்பால் பொருட்பெண்டிர் உலகியல் நடைமுறைச் சித்தரிப்பு என்றும் பொருள்கொள்ளுதல் சிக்கலைத் தீர்க்க உதவும்.

பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள அறநூல்கள் பலவும் திருக்குறளை அடியொட்டியே பொதுமகளிர் குறித்த வசவு மற்றும் சாடல்களைத் தொடர்கின்றன.

ஆமாபோல் நக்கி அவர் கைப்பொருள் கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதுஎன்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை
(நாலடியார்: 38, பொதுமகளிர்: 7)

காட்டுப் பசுபோல் நக்கிச் சுகமளித்துக் கைப்பொருளைக் கவர்ந்து கொள்ளும் கணிகை, எல்லாம் கவர்ந்தபின் காட்டு எருது போலப் பாய்ந்து விலகி பிறரிடம் சென்றுவிடுவாள். அவளது இந்த அற்ப அன்பினை உண்மை என நம்பி ஏமாறுகிறவர்களது வாழ்க்கை பிறரால் நகைக்கக் கூடியதாய் இழிவுறும்

நாலடியாரில் இடம்பெறும் பொதுமகளிர் என்ற அதிகாரம் முழுவதும் விலைமகளிர் குறித்த சாடல்களே. பழமொழி நானூறு, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை போன்ற அறநூல்களிலும் இதேநிலைதான்.

பாலியல் அறமும் பரத்தையரும் - பகுதி 4 -கற்பு ஒரு கற்பிதம்

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
புதுச்சேரி-8

கற்பு ஒரு கற்பிதம் :

சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற அல்லது அக இலக்கிய மரபுகள் குறிப்பிடுகின்ற காதல், கற்பு, ஒருதாரமணம் இவைகள் எல்லாமே பழைய தாய்வழிச் சமூகம் மாறித் தந்தைவழிச் சமூகம் உருவானபோது உடைமைச் சமூகத்தால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளே. தந்தைவழிச் சமூகத்தின் போது உருவான தனியுடைமைச் சமூகத்தில்தான் சொத்துரிமையைப் பாதுகாக்க ஒருதாரமணம் தேவைப்பட்டது.

தந்தைவழிச் சமூகத்தில் தன்னுடைய உடைமையை நேரடியாகத் தன் வாரிசே பெற பெண் ஒருதாரமணத்தைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று. (இங்கே ஒருதாரமணம் என்று குறிப்பிடப்படுவது உண்மையில் ஒருகணவமணமே) ஏனெனில் ஒருபெண் ஒருவனோடு மட்டுமே உறவு உடையவளாக இருந்தால் மட்டுமே தந்தைவழிச் சமூகம் நிலைக்கமுடியும். இத்தகைய சூழ்நிலையில்தான் ஒருதாரமணக் கோட்பாட்டைக் கட்டிக்காப்பதற்காகக் (பெண்களுக்கு மட்டும்) காதலும் கற்பும் கோட்பாடுகளாக ஆக்கம் பெற்றன.

எல்லாக் காலங்களிலும் காதலும் கற்பும் பெண்களுக்கு வலியுறுத்தப் பட்டனவே அல்லாமல் ஆண்களுக்கு அவை வலியுறுத்தப்படவில்லை. பெண்களுக்குக் காதலும் கற்பும் ஒருதாரமணமும் வலியுறுத்தப்பட்ட அதே சமூகத்தில்தான் ஆண்களுக்குப் பரத்தையர் ஒழுக்கம் கற்பிக்கப்பட்டது.

தனியுடைமை, ஆணாதிக்கம் இவைகளைக் கட்டிக்காக்கவே காதல், கற்புக் கோட்பாடுகள் காலந்தோறும் மக்களாலும் இலக்கியவாதிகளாலும் மிக உயரியதாகவும் புனிதமானதாகவும் கருதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தன. கற்பு ஒரு கற்பிதம். அதன் நோக்கமும் தேவையும் பெண்ணடிமையே. காதல் புனிதமானது என்று பெண்ணை நம்பச்செய்த ஆண்கள் காதலை ஒருபோதும் புனிதமாகக் கருதவில்லை.

குலமகள் - பரத்தை:

ஆடவரே உயிர் என்று போற்றி ஒழுகும் பெண்கள் கற்பிற் சிறந்தவர்களாகப் போற்றப்பட்டனர். அவர்களின் ‘செயிர்தீர் கற்பு கடவுள் கற்பு’ என்பது ஆடவனுக்கு உடலாலும் உள்ளத்தாலும் உண்மையாய் இருத்தல் என்று கற்பிக்கப்பட்டது.

கற்புடைய பெண்களின் மேன்மைக்காக எதிர்நிலையில் பரத்தையர்கள் பற்றிய புலனெறி வழக்கு (இற்பரத்தை, காமக்கிழத்தி, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பலநிலைகளில்) உருவாக்கப்பட்டது. கற்பைப் போற்றிக் காக்கும் தலைவியின் பெருமையை மிகுவிக்கவே அல்லது வலிமைப்படுத்தவே பரத்தையர்கள், பரத்தையர் ஒழுக்கம், ஊடல், ஊடல் தணிக்கும் வாயில்கள் படைத்துக் கொள்ளப்பட்டன. மருதத்திணையின் முழுநேர வேலையே பரத்தையர் காரணமான ஊடலும் ஊடல் நிமித்தங்களுமாயின.

பரத்தையர்களே சங்க காலத்தில் இல்லையா? இவை முழுக்க முழுக்கக் கற்பிதங்களா? என்றால், பரத்தையர்களே கற்பனை என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. பரத்தமை ஒழுக்கம் பற்றிய புலனெறி வழக்குகள், மருத உரிப்பொருள் தொடர்பான செய்திகள் இவைகளே கற்பிதங்கள்.

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்”


என்பார் தொல்காப்பியர். அகப்பொருளின் புலனெறி வழக்குகள் புனைவியல் தன்மையோடு எதார்த்தத்திலிருந்து புனைந்து கொள்ளப்பட்டவையே. இவை உள்ளதும், இல்லதும் ஆகிய இரண்டின் கூட்டால் உண்டான புனைவு. பரத்தையர்கள் குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் அனைத்தும் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் கலந்த புலனெறி வழக்கே என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பாலியல் அறமும் விலைமகளும்:

நமது பொதுச்சிந்தனையில், சமூக ஒழுங்கைக் கட்டிக்காக்க, சமுதாயம் கெட்டுப் போய்விடாமல் பாதுகாக்க அறங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்ற கருத்து பதிந்துள்ளது. உண்மையில் அறங்கள் அதிகாரத்தைக் கட்டுபவை. ஆதிக்க சக்திகளின் நலன்களைப் பாதுகாப்பவை.

“அறங்கள் வெற்று விதிகள் அல்ல. இவை, மேலாதிக்க சமூக ஒழுங்கை அல்லது நடப்பில் நிலவுகின்ற ஆதிக்க -ஆட்பட்ட உறவுகளைச் சாசுவதமாக்குகின்றன. ஒரு சாராரின் நலனே ஒட்டுமொத்தச் சமூக நலன் என்று அறங்கள் நியாயப் படுத்தவல்லவை. இவ்வாறு இவை நியாயப் படுத்துவதன் மூலமாக, நடப்பிலுள்ள சமூக ஒழுங்கும், உறவுகளும் இயல்பானவை, மாறாதவை, மாற்றக் கூடாதவை என்று ஆக்குகின்றன. அறங்கள் இயற்கைச் சட்டம் என்கிற அரணைப் பெறுகின்றன. நடப்பவற்றைக் கேள்விக்கு அப்பாற் பட்டவையாக, இதிலே கேட்பதற்கு என்ன இருக்கிறது என்பதாக அறங்கள் ஆக்குகின்றன.”
என்பார் ராஜ் கௌதமன். (தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், பக். 8-9)

அறங்கள் ஆதிக்க சக்திகளின் நலன் காப்பவை எனும்போது உடைமைச் சமூகத்தில் ஆதிக்கச் சக்தியாய் விளங்கும் ஆண்களின் நலன் பேணுவதும், ஒடுக்கப்படும் பெண்களுக்கு எதிரான கருத்தியல் வன்முறையாகவும் அவை விளங்குகின்றன. விலைமகளிர் குறித்த அறச்சொல்லாடல்களும் பெண்களுக்கு எதிரான கருத்தியல் வன்முறையே என்பதை அறநூல்கள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றன.

பெண்களின் பாலியல் வேட்கையைக் கற்பு என்ற சங்கிலியால் பிணைத்துவிட்டு ஆண்கள் பாலியல் சுதந்திரத்தோடு கட்டுப்பாடற்று இயங்கும் சமூகத்தில் பொதுமகள் தவிர்க்க முடியாத பாத்திரமாகிறாள். இப்பொதுமகள் குறித்த வசவுகளாக மதுரைக்காஞ்சியில் கேட்ட அதேகுரல்தான் திருக்குறளிலும் நாலடியாரிலும் பழமொழி நானூற்றிலும் திரிகடுகத்திலும் ஆசாரக் கோவையிலும் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது.

சனி, 7 நவம்பர், 2009

கட்டுரைகள் இலக்கியம் ஆகுமா?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுவை-8

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல படைப்புகள் எழுதப்பெறாத மனப் பிரதிகளாக உள்ளுறைகின்றன. சிலர் அவற்றுக்கு எழுத்து வடிவம் தந்து வெளியே உலவ விடுகின்றனர். பலர் அந்த முயற்சியில் இறங்குவதே இல்லை. ஒவ்வொரு மனிதனின் மறைவின் போதும் எழுதப்படாத பல பிரதிகள் அவனோடேயே மறைந்து விடுகின்றன.

கவிதைகளும் உரைநடைப் புனைகதைகளும் மட்டுமே படைப்புகள் இல்லை. அவைகளுக்கும் அப்பால் கட்டுரைகள் என்ற படைப்பு இலக்கியங்கள் உண்டு. ஏனோ தெரியவில்லை தமிழில் கட்டுரைகள் பெரிதும் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதில்லை. தமிழர்களின் நீண்ட நெடிய கவிதை மரபுகளே அதற்குக் காரணமாயிருக்கலாம்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரை கிடைக்கின்ற பழந்தமிழ் முதல் நூலாம் தொல்காப்பியத்திலேயே உரை என்ற இலக்கியவகை பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. இறையனார் களவியல் உரை தொடங்கித் தமிழிலக்கிய நெடும்பரப்பு தோறும் எழுதப்பட்ட இலக்கிய, இலக்கண, சமய உரைகள் தமிழின் தற்கால உரைநடைக்குக் கொஞ்சமும் குறைவின்றி ஈடுகொடுக்கின்றன.

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் தமிழகத்திற்குக் கிடைத்திட்ட தாள், மை, அச்சு இயந்திரம், ஆங்கிலக் கல்வி போன்ற வசதி வாய்ப்புகள் தமிழின் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதையே தமிழின் முதல் உரைநடை இலக்கியம் என்பாருண்டு. தமிழின் உரைநடைக்கு அணிசேர்த்த தலைமைப் படைப்பை வழங்கிய பெருமை புதுச்சேரிக்கு உண்டு. ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761) அவர்களால் எழுதியளிக்கப்பெற்ற நாட்குறிப்பு இலக்கியம், தொடக்காலத் தமிழ் உரைநடைக்குக் கிடைத்த தனிமகுடம்.

கட்டுரை இலக்கியம், உரைநடை இலக்கிய வடிவங்களில் தனித்தன்மை மிக்கது. ஒரு பொருள் பற்றிச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை என்பர். ‘விவாதித்து விவரிப்பதே’ கட்டுரையின் பண்பு என்பார் கா.சிவத்தம்பி. இந்த விளக்கங்கள் எல்லாம் செய்திக் கட்டுரைகளுக்குப் பொருந்தும்.

கட்டுரைகளில் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதும் தனித்தன்மை மிக்க இலக்கியமாக மதிக்கத் தக்கதுமான கட்டுரைகள் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளே. ஆங்கிலத்தில் இவ்வகைக் கட்டுரைகள் மிகுதி. ESSAYS என்று குறிப்பிடத்தக்கன இவைகளே. தமிழில் இவ்வகைக் கட்டுரைகள் அதிகமில்லை. அண்மைக் காலமாகத் தமிழிலும் இவ்வகைக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

புதன், 4 நவம்பர், 2009

இசைக்கும் கவிதைக்கும் என்ன உறவு?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

உலகக் கலைகளுக்கெல்லாம் தாய் இசைக்கலையே. புவிக்கோளத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலமே உலக உயிரினங்களுக்கெல்லாம் ஆதாரம் ஆனதுபோல், இந்த இயற்கையின் கொடையாகிய வளிமண்டலமே இசைக்கும் ஆதாரம். இயற்கையின் இசை அலாதியானது பாரதி இதனைப் பதிவு செய்கின்றான்.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசையினிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடல் எந்நேரமும் தானிசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்


நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாரதி பாடுவதில் இயற்கைக்கும் இசைக்கும் உள்ள நுட்பமான உறவு சொல்லப்படுகிறது.

இசையும் மொழியும் இணைந்தபோதுதான் கவிதை பிறந்தது. ஓசையை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தி அதில் சொற்களை இட்டுநிரப்பி மனிதன் கவிதையைக் கற்றுக்கொண்டான்.

ஆதியில் கவிதை என்பது பாட்டுதான். எழுத்துக்களைப் படைத்துக்கொள்வதற்கு முன்பே மனிதன் பாட்டைப் படைத்துவிட்டான். பாட்டில் இசையே முதன்மை பெற்றது, சொல்லும் பொருளும் அடுத்த இடத்தில்தான். இப்படித் தொடங்கிய பாட்டு, வாய்மொழிக் கவிதையாய் வளர்ந்து ஏட்டில் குடியேறி கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தனக்கும் இசைக்குமான தொடர்பை விட்டுவிடாமல் பற்றித் தொடர்ந்தது. பின்னர், கவிதை அச்சு ஊடகத்திற்கு இடம் பெயர்ந்தது.

இருபதாம் நூற்றாண்டு, கவிதையை இசையிலிருந்து பிரித்தது. பறக்கக் கற்றுக்கொண்ட குஞ்சுப் பறவைக்கு இனி தாய்ப்பறவையின் துணை தேவையில்லை. இனியும் தாய்ப்பறவை ஊட்டிக் கொண்டிருந்தால் குஞ்சுப்பறவை செயலற்றுப் போகும். கவிதைகளுக்கும் இதே விதிதான். கவிதைகள் வாய்க்கும் செவிக்குமாக ஊடாடும்வரைதான் இசை அல்லது ஓசை ஒழுங்கு தேவைப்பட்டது.

கவிதைகள் அச்சு வாகனமேறி கண்ணுக்கும் கருத்துக்குமாக ஊடாடத் தொடங்கிய பின்னர், கவிதை தன் எல்லாக் கட்டுகளையும் உடைத்துக் கொண்டு, விட்டு விடுதலையாகி நிற்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகள் அதைத்தான் செய்தன/செய்கின்றன. நவீன கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ என்ற இத்தகு புதிய வடிவங்களின் வரவுகளுக்குக் காரணங்கள் இவைதாம்.

பாட்டரங்கங்கள் கவிதையைச் செவிக்குப் படைப்பன. அங்கே கவிதை பாட்டாயிருக்க வேண்டும். அதைவிடுத்துத் தமிழின் நவீன கவிதைகளைப் பாட்டரங்கங்களில் வாசிப்பது பாட்டி மஞ்சள் தேய்த்துக் குளித்த கதைதான்.

கவிதைகள் வாய்மொழியில், ஏட்டில், அச்சில் குடியிருந்த தலைமுறைகளைக் கடந்து நான்காவது தலைமுறையாக கணிப்பொறி வழி இணையத்தில் குடியேறத் தொடங்கிவிட்டன. இவை ஊடக மாற்றங்கள். ஒவ்வொரு ஊடக மாற்றத்திற்கும் ஏற்ப, கவிதைகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கின்றன.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...