Tuesday, November 17, 2009

பாலியல் அறமும் பரத்தையரும் பகுதி-2, பரத்தையரும் விலைமகளிரும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பரத்தையரும் விலைமகளிரும்:

தமிழிலக்கிய நெடும்பரப்பில் பரத்தை, காமக்கிழத்தி, கொண்டி மகளிர், பொதுமகள், பொருட்பெண்டிர், வரைவின் மகளிர், விலைமகள், கணிகை, சலதி, வேசி, தாசி, தேவரடியாள் (தேவிடியாள்) முதலான பெயர்களால் சுட்டப்படும் பெண்கள் ஒரு சமூக நிறுவனத் தன்மையோடு இயங்கிவந்தமை பதிவாகியுள்ளன. சுட்டப்படும் பெயர்கள் பலவாயினும், பொதுப்பார்வையில் இவர்கள் அனைவரும் விலைமகளிர் என்றே கருதப்படுகின்றனர். ஆனால் நுணுகிப் பார்த்தால் இவர்களை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கலாம் என்று தோன்றுகிறது.

1. பரத்தை, காமக்கிழத்தி முதலான பெயர்களால் அகப்பொருள் இலக்கியங்களில் இடம்பெறும் புலனெறிப் பாத்திரங்கள்.

2. வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், கணிகை, கொண்டி மகளிர், தாசி, வேசி முதலான பெயர்களால் சுட்டப்படும் நடைமுறை வாழ்க்கைப் பாத்திரங்களாக இடம்பெறும் பெண்கள்.
முதல் வகையில் இடம்பெறும் பரத்தை என்ற புலனெறிப் பாத்திரப் படைப்புப் பெண்களையும் இரண்டாம் வகையில் இடம்பெறும், விலைமகளிர் எனப் பொது நிலையில் சுட்டப்படும் நடைமுறை வாழ்க்கைப் பெண்களையும் வேறுபடுத்தி அடையாளம் காண இயலாமல் தமிழகப் பரத்தையர் குறித்த ஆய்வில் இடர்ப்படுவோர் பலருண்டு.

முதல் பிரிவில் இடம்பெறும் அகப்பொருள் பரத்தையர் விலைமகளோ, பொருட்பெண்டிரோ அல்லர். அவர்கள் அகப்பொருள் தலைவனின் மனைவியர் பலருள் ஒருவர். இவ்வகைப் பரத்தையர் குறித்து விரிவாக ஆய்ந்து சிலம்பு நா.செல்வராசு அவர்கள் தரும் முடிபுகள் வருமாறு,

“அ. பரத்தையர், பரத்தை என்ற சொற்கள் தலைமகளின் வேறானவர், அல்லது அயலவர் என்ற பொருளிலேயே குறிக்கப் பெற்றுள்ளன. பரத்தை என்பதற்குப் பொதுப்பெண்டிர், விலைமகளிர் என்று பொருள் கொள்வதற்குத் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் சான்றுகளில்லை.

ஆ. சேரிப்பரத்தை முதலான வகைப்பாடுகள் உரையாசிரியர் காலத்தவை.

இ. இளம்பூரணர் கூறிய ‘ஒருவர் மாட்டும் தங்காதவர்’ என்ற கொள்கையை விளக்கச் சங்க இலக்கியங்களில் சான்றுகள் இல்லை. அவ்வாறே ஆடவர் பலரோடு பரத்தையர் தொடர்பு கொண்டமைக்கும் சான்றுகளில்லை.” (வள்ளுவப் பெண்ணியம், பக் 102-103)

சங்க இலக்கிய மருதப்பாடல்கள் பலவற்றில் பரத்தையைத் தலைவிக்குச் சகோதரியாகவும் தலைவி பெற்றெடுத்த புதல்வனுக்குத் தாயாகவும் சித்தரித்துள்ளனர். தலைவியைப் போலவே பரத்தையையும் வதுவை அயர்ந்து (திருமணத்தின் வழி) பெற்றான் என்று சில பாடல்கள் பதிவுசெய்துள்ளன. (அகநானூறு, 36, 46, 206) தலைவியருக்கும் பரத்தையருக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை பற்றியது. பரத்தைக்குக் குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை கிடையாது என்பதுதான். (நற்றிணை, 330)

இவ்வகைப் பரத்தையர், புலவர் மரபில் புலனெறி வழக்காகப் படைத்துக் கொள்ளப்பட்டவர்களே அன்றி நடைமுறைப் பாத்திரங்களாகார். சங்க அக இலக்கியங்கள் தொடங்கி, கீழ்க்கணக்கு அகநூல்கள், திருக்குறள் காமத்துப்பால், கோவை இலக்கியங்கள் வரை புலனெறியாகப் படைக்கப்படும் அத்துணை அக இலக்கியங்களிலும் இவ்வகைப் பரத்தையர் அச்சுப்புள்ளி மாறாமல் ஒரே வார்ப்பாகப் படைக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாம் பிரிவில் இடம்பெறும் நடைமுறை வாழ்க்கைப் பாத்திரங்களான வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், கணிகை, கொண்டி மகளிர், தாசி, வேசி முதலான பெயர்களால் சுட்டப்படும் பெண்கள் குறித்து விரிவாகப் பேசுவதற்கு இடமிருக்கின்றது. பொதுவில் இவர்களைப் பதியிலார் என்று குறித்தல் பொருந்தும். மதுரைக் காஞ்சி கொண்டி மகளிர் என்ற அடையாளத்தோடு வருணிக்கும் மதுரை நகர விலைமாதர்கள் இவ்வகைப் பதியிலார்களே.

நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து
சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி
நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மாணப் புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல
(மதுரைக் காஞ்சி 569 -576)

தமிழ் இலக்கியப் பரப்பில் சங்க காலம் தொடங்கி நேற்றைய இலக்கியங்கள் வரை இவ்வகைப் பெண்கள் குறித்த பதிவுகள் முற்ற முழுதாக ஆணின் பார்வையிலேயே பதிவாகியுள்ளன. மாயப் பொய்பல கூட்டிக் கவவுக் கரந்து, நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும் மென்சிறை வண்டினம் மாண, பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல முதலான வசைகளின் வழி மாங்குடி மருதனார் முன்வைக்கும் (பொருட்)பெண்டிர் குறித்த மதிப்பீடுகளை ஆழ்ந்து நோக்குதல் வேண்டும். இவ்வகை மதிப்பீடுகளே பதினெண் கீழ்க்கணக்கின் அறநூல்களிலும் நீட்சி பெற்றுள்ளன. திருக்குறளும் இதற்கு விதிவிலக்கில்லை.

No comments: