தமிழ்ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 டிசம்பர், 2010

கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு - அணிந்துரை

செ. பவானியின்
கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

கவிஞர் தமிழ்ஒளி தமிழிலக்கிய வரலாற்றில் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்பாளி. அவரின் கவிதைகள் காலவெள்ளத்தால் கரைந்து போகாத கவித்துவமும் கருத்துச் செறிவும் உடையவை. பாவேந்தர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலத்துக் கவிஞர். இந்த இருவரது படைப்பாளுமைகளையும் உள்வாங்கித் தமக்கென ஒரு புதுப்பாதை சமைத்துக் கொண்டவர். பாரதி, பாவேந்தர் வரிசையில் புதுச்சேரி தமிழுலகிற்குத் தந்த மிகப்பெரிய கொடை கவிஞர் தமிழ்ஒளி. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதநேயப் படைப்பாளி. எங்கும் எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே உரத்துக் குரல் கொடுத்தவர். அவருடைய படைப்புகள் பல பரிமாணங்களைக் கொண்டவை.

மனிதாபிமானம், தேசியம், சமத்துவம் ஆகிய மாபெரும் கொள்கைகளில் பற்றுகொண்டு, தமிழின் பண்டைய மற்றும் நவீன இலக்கிய மரபுகளில் தோய்ந்து சிந்தனை வளத்தோடும் சந்த நயத்தோடும் செஞ்சொற் கவிதைகளை யாத்தவர் கவிஞர் தமிழ்ஒளி.

கவிஞர் தமிழ்ஒளி தமிழ்ச் சமுதாயத்தில் சாதி வேற்றுமையில்லாத, ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை நிறுவக் கனவு கண்டார். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லதை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார். இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணிவேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் படைப்புகளில் பாராட்டினார், துணைநின்றார்.

கவிஞர் தமிழ்ஒளி தம் கவிதைகளிலும் குறுங்காவியங்களிலும் சிறுகதைகளிலும் எதார்த்த வாழ்விலுள்ள இன்னல்கள் பலவற்றைப் பரவலாக எடுத்துரைக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் சோகமயமான வாழ்க்கைச் சித்திரம் படிப்பவர்கள் நெஞ்சை நெகிழ்விக்கச் செய்யும் வகையில் கவிஞரின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவரின் காவியங்களும் சிறுகதைகளும் மிகுதியும் துன்பியல் முடிவுகளைக் கொண்டதாகவே படைக்கப்பட்டிருக்கும். அவரின் வாழ்க்கைச் சூழல் அப்படி. சொகுசு மாளிகைகளில் இருந்துகொண்டு கற்பனைகளில் மிதந்து அவர் தம் இலக்கியங்களைப் படைக்கவில்லை. வறுமை, பசி, பட்டினி இவைகளோடு வாழ்க்கையே போராட்டமாய்க் காலந்தள்ளும் மக்களோடு மக்களாய் இருந்து தம் படைப்புகளைப் படைத்தவர் தமிழ்ஒளி.

கவிஞர் தமிழ்ஒளி கவிதைத் துறை மட்டுமல்லாது தமிழிலக்கியத்தின் பல்வேறு படைப்பிலக்கிய வடிவங்களிலும் தம் கவனத்தைச் செலுத்தியவர். நாடகம், வரலாறு, காவியங்கள், குறு நாவல்கள், சிறுகதைகள் என அவர் படைத்த நூல்களின் பட்டியல் நீளும். படைப்பிலக்கியத்துறை மட்டுமல்லாது ஆய்வு நூல்கள் படைப்பதிலும் தமிழொளி முத்திரை பதித்துள்ளார்.

II
கவிஞர் தமிழ்ஒளியின் ‘உயிரோவியங்கள்’ சிறுகதைத் தொகுதி பதினைந்து சிறுகதைகளைக் கொண்டது. இச் சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகளை ஆய்வு செய்து கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் -ஓர் ஆய்வு என்ற தலைப்பில் நூலாகத் தந்துள்ளார் செ.பவானி. இவர் என்னுடைய வழிகாட்டுதலில் தம் இளமுனைவர் பட்ட ஆய்வினை இதே தலைப்பில் நிகழ்த்தியவர். அந்த ஆய்வேடே நூலாக்கம் பெற்று இப்பொழுது வெளிவருகின்றது.

இன்றைய கல்வியாளர்களின் ஆய்வுகள் குறித்துக் கல்விப் புலத்துக்கு வெளியே ஓர் அவநம்பிக்கையே நிலவிவரும் சூழலில் இத்தகைய ஆய்வுகள் வெளிவருவது ஒரு நம்பிக்கை ஊட்டக்கூடிய செயலாகும். பட்டங்களுக்காக நிகழ்த்தப்படும் பல்கலைக் கழக ஆய்வுகள் கடந்த முப்பதாண்டுகளில் பல்கிப் பெருகிவிட்டன. அதிலும் பல பல்கலைக் கழகங்கள் வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தம் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் இளமுனைவர் பட்டப் படிப்புகளைத் தொடங்கியபோது கல்வியாளர்கள் மற்றும் நல்ல ஆய்வாளர்கள் மத்தியில் ஓர் அச்சம் தொற்றிக்கொண்டது. அந்த அச்சம் நியாயமானதுதான் என்பதனைக் கடந்தகால நடைமுறைகள் நமக்கு நிரூபித்தன. ஆனால் அதிலும் ஒரு மெல்லிய ஆறுதலை இப்படிப்பட்ட சில நல்ல ஆய்வுகள் நமக்கு வழங்கின. அந்தவகையில் ஆய்வாளர் பவானி அவர்களின் இவ் ஆய்வு முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.

கவிஞராக மட்டுமே தமிழுலகிற்குத் தெரிந்த கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆய்வாளர் இப்பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டமையே அவரின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. எடுத்துக்கொண்ட பொருளை நுணுகிக் கற்று வகைதொகை செய்து நல்லதொரு ஆய்வாகப் பின்வரும் நான்கு இயல்களாக அமைத்துள்ளார் செ.பவானி.

1. கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்வும் படைப்பும்
2. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் கருவும் உருவும்
3. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் பாத்திரப்படைப்பு
4. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வெளிப்படும் சமுதாயப் பார்வை.


நான்கு இயல்களிலும் இழையோடியிருப்பது கவிஞர் தமிழ்ஒளியின் மனிதநேயம் குறித்த பதிவுகள்தாம் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

உயிரோவியங்கள் நூலின் முன்னுரையில் கவிஞர் இன்குலாப் தமிழ்ஒளியின் மனிதநேயம் எப்படிப்பட்டது என்பதை மிகத் தெளிவாக வரையறுக்கின்றார். அப்பகுதி வருமாறு,
“மனிதநேயம் என்பது ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுவனையும் ஒரே நிலையில் வைத்து, அன்பு காட்டுவதன்று. .. .. மனசாட்சியுள்ளவன் இருவருக்கும் பொதுவாக நிற்கமாட்டான். தமிழ்ஒளியின் மனிதநேயம் ஒடுக்குமுறைக்கு எதிரானது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒருகுரல் வேண்டியிருக்கிறது. தம் காலத்தில் கவிஞர் தமிழ்ஒளி அத்தகைய குரலாக இருந்திருக்கின்றார். ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் தமக்குச் சொந்தமான ஒரு குரலைக் கேட்காமல் போனதுதான் பரிதாபத்துக்குரியது. இதற்குக் கவிஞர் தமிழ்ஒளியோ, ஒடுக்கப்பட்டவர்களோ பொறுப்பாக மாட்டார்கள். இந்த நியாயத்தின் குரல்களைத் தமது பகட்டு ஆரவாரத்தால் மூழ்கடிக்கும் முதலாளியம் மட்டுந்தான் இதற்குப் பொறுப்பாகும்.”

கவிஞர் இன்குலாப்பின் மேற்கோளைத் தமது நூலில் எடுத்துக்காட்டும் நூலாசிரியர் செ.பவானி தமது நூலின் மையப்புள்ளியாக தமிழ்ஒளியின் மனிதநேயம் குறித்த பதிவுகளை அமைத்துக் கொண்டுள்ளார். ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான குரலாகவும் சிறுகதையாசிரியர் தமிழ்ஒளியின் குரல் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே அவரின் ஆய்வுநூல் அமைந்துள்ளது.

தமிழ்ஒளியின் சிறுகதைகள் எப்பொழுதும் பசி, பட்டினி, வறுமை, சாவு என்று ஒரே சோக மயமாயிருக்கிறது என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரின் சிறுகதையிலேயே அவர் பதில் சொல்கிறார். பட்டினிச் சாவு கதையில் கதையாசிரியரும் (தமிழ்ஒளி) அவரது நண்பர் ராமுவும் பேசிக் கொள்வதாக வரும் உரையாடல் பின்வருமாறு,

‘சமுதாயம் முன்னேறுகிறது’ என்று ராமு சொன்னான், ‘இல்லை செத்துக் கொண்டிருக்கிறது’ என்று நான் பதில் சொன்னேன். ‘உனக்கு எப்பொழுதும், சாவு, பயங்கரம், ட்ராஜெடி இதுதான் நினைவு, எல்லாம் கற்பனை’ என்று தன்னுடைய எதிர் வாதத்தைத் தொடங்கினான்.
‘எட்ட இருந்துகொண்டு சமுதாயத்தைப் பார்த்தால் எல்லாம் கற்பனையாகத்தான் இருக்கும்’ என்று நான் சூடு கொடுத்தேன்.
‘நான் எழுத்தாளனல்ல, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க. எனக்கு வேறே வேலையிருக்கிறது’ என்றான்.

சமுதாயத்தை எட்ட இருந்துகொண்டு வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் தமழ்ஒளியின் சிறுகதைகள் சோகக் கற்பனைகளாகத் தோன்றலாம். ஆனால் அவை புனைவுகளற்ற முழு உண்மைகள். அச்சோகங்களைப் பதிவுசெய்வதும் தீர்வுகளை முன்மொழிவதும் படைப்பாளனின் தலையாய பணி என்பதையே தமிழ்ஒளி தம் சிறுகதைகளில் பிரகடனம் செய்கிறார்

காலவெள்ளத்தில் கரைந்துபோன தமிழ்ஒளியின் சிறுகதைகளை ஆய்வுப் பொருளாக்கி மறைக்கப்பட்டஃ மறுக்கப்பட்ட அவரின் படைப்பாளுமையை வெளிக் கொணர்கிறார் நூலாசிரியர். சிறுகதைகளின் வடிவ நேர்த்தியில் வெளிப்படும் படைப்பாளுமையை விட உணர்வு பூர்வமான உள்ளடகத்தால் வெளிப்படும் படைப்பாளுமையே சிறந்தது. அந்தவகையில் தமிழ்ஒளியின் சிறுகதைகள் மிகச் சிறந்த படைப்பாக விளங்குகின்றன என்பதே அவரது ஆய்வு நமக்குத் தரும் செய்தியாகும்.

நல்லதோர் ஆய்வுப்படைப்பை வழங்கியிருக்கும் நூலாசிரியர் செ.பவானியின் ஆய்வுப்பணியும் எழுத்துப்பணியும் தொடர வாழ்த்துக்கள்.


6-12-2010

தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு -அணிந்துரை

வி.அமலோற்பவமேரியின்
தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு
-அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

கவிஞர் தமிழ்ஒளி இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவி. அவர் திராவிட இயக்கச் சிந்தனைகளில் கால்கொண்டு பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகளில் தம் சிறகுகளை விரித்தவர். சுரண்டுகிறவனும் சுரண்டப்படுகிறவனுமாகப் பிரிந்துகிடக்கும் இச்சமூக அமைப்பில் ஒரு படைப்பாளி யார் பக்கம் நிற்கவேண்டும் என்பதில் தெளிவான பார்வை அவருக்கிருந்தது.

ஏ செந்தமிழா! என்னுடைய சோதரா!
நீ யார்பக்கம்? நிகழ்த்திட வேண்டும்
கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா?
துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா?


என்று தம் கவிதைகளில் கேள்வியெழுப்பும் கவிஞர் தமிழ்ஒளி, தம் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் எப்பொழுதுமே துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கம்தான் இருந்தார். 1944 இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி, தமிழ், தமிழினம், தமிழர் எழுச்சி, சீர்திருத்தம் என்ற போக்கில் அதாவது தேசிய இனங்களின் உரிமை, தமிழ் ஆட்சிமொழி, சுயமரியாதை, சமத்துவம் என்ற செயல்பாட்டில் தம் படைப்;புப் பணியைத் தொடங்கினார். 1945இல் கவிஞர் மார்க்சீயத் தத்துவத்தை ஆழ்ந்து பயிலத் தொடங்கினார். அதன் விளைவாகவே நிலைபெற்ற சிலை, வீராயி ஆகிய காவியங்களைப் படைத்தார்.

1947இல் இலக்கியப் பேராசான் ஜீவா முன்னிலையில் தமிழ்ஒளி பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தார். 1947 தொடங்கி ஒன்பது ஆண்டுகள் பொதுவுடைமை இயக்கத்தில் உறுப்பினராகவும் கலை இலக்கியத் தளத்தில் புரட்சிப் படைப்பாளராகவும் விளங்கினார். 1953இல் பொதுவுடைமை இயக்கத்திலிருந்து வெளியேறினார். 1953க்குப் பிறகு புதியபுதிய உள்ளடக்கங்களிலும் உத்திகளிலும் கவிதைகள், காவியங்கள் படைப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். தம் இன்னல் மிகுந்த வாழ்வின் கடைசிவரை உழைக்கும் மக்களுக்கான படைப்பாளியாகவும் களப் போராளியாகவும் வாழ்ந்தவர். ஆக, தமிழிலக்கிய நெடும்பரப்பின் மிகச்சிறந்த பொதுவுடைமைக் கவிஞராக வாழ்ந்து மறைந்த தமிழ்ஒளிக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைத்த பாடில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்துவிட்டதைத் தவிர, அவர் வேறு ஒருபிழையும் செய்யவில்லை. தமிழகத்தின் சாதீயச் சமூகம் தமிழ்ஒளியை மறைத்துவிட்டது, மறந்துவிட்டது.

ஆனால், கடந்த முப்பதாண்டுகளில் கல்விப்புலத்தில் பெருகிவரும் இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான களம் காலத்தால் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பல படைப்பாளிகளின் படைப்புகளை ஆய்வு செய்து தமிழுலகிற்கு மீட்டெடுத்து வருகின்றது. அவ்வகையில் வி. அமலோற்பவமேரி என்னுடைய வழிகாட்டுதலில் உருவாக்கிய இளமுனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவமே தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு என்கிற இந்நூல்.

நாற்பதாண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி கவிதை, காவியங்கள், சிறுகதை, குறுநாவல்கள், நாடகம், ஆய்வுக் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல துறைகளிலும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தளித்துள்ளார். இவை அனைத்தும் 1944 முதல் 1965 வரையிலான இருபத்தோரு ஆண்டுகளில் படைக்கப்பட்டவை. சிறுகதை, நாடகம், குறுநாவல்கள், ஆய்வு என அவரின் படைப்புகள் பன்முகப்பட்டாலும் தமிழ்ஒளிக்கு மிகுந்த பெயரும் புகழும் பெற்றுத்தந்த படைப்புகள் அவரின் குறுங்காவியங்களே. தமிழ்ஒளி மொத்தம் ஒன்பது குறுங்காவியங்களைப் படைத்துள்ளார்.

குறுங்காவியங்கள்: எழுதிய ஆண்டு வெளிவந்த ஆண்டு
1. கவிஞனின் காதல் 1944 1947
2. நிலைபெற்ற சிலை 1945 1947
3. வீராயி 1947 1947
4. மேதின ரோஜா 1952 1952
5. விதியோ? வீணையோ? 1954 1961
6. மாதவி காவியம் 1958 1995
7. கண்ணப்பன் கிளிகள் 1958 1966
8. புத்தர் பிறந்தார் 1958 1966
9. கோசலக்குமரி 1962 1966


மேற்கண்ட தமிழ்ஒளியின் ஒன்பது குறுங்காவியங்களில் முதல் மூன்று குறுங்காவியங்களான கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி குறித்த ஆய்வே இந்நூலாகும்.

II
இந்நூலாசிரியர் வி.அமலோற்பவமேரி என்னுடைய ஆய்வு மாணவர். சிறந்த கவிஞர், நல்ல மேடைப் பேச்சாளர், நுணுக்க ஆய்வாளர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். வானொலி, தொலைக்காட்சி முதலான ஊடகங்களின் வழியாகத் தமிழுலகம் அறிந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரர். மாடலிங் துறையிலும் ஆர்வத்தோடு முனைந்து செயல்படுபவர். முற்போக்கு இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர். அதுமட்டுமன்றி உழைப்பே உயர்வு என்ற கொள்கையாளராய் நாளும் சுறுசுறுப்போடு தொடர்ந்து இயங்கிவருபவர். தம் இளமுனைவர் பட்டத்திற்கு வழக்கமான தலைப்புகளிலிருந்து மாறுபட்டு முற்போக்குச் சிந்தனையாளரும் பாட்டாளிகளின் தோழனும் மிகச்சிறந்த மனிதநேயப் படைப்பாளியுமான தமிழ்ஒளியின் படைப்புகளை ஆய்வுப்பொருளாகத் தேர்ந்தெடுத்தமையே இந்நூலாசிரியரின் சமூக அரசியல் ஈடுபாட்டினை வெளிப்படுத்தும். எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருளை வகைதொகை செய்பவராக மட்டும் அமையாமல் சமூகம் பயன்கொள்ளத்தக்க வகையில் தமிழ்ஒளியின் குறுங்காவியங்களைத் தமிழுலகிற்கு மிகச்சரியாக இனம் காட்டும் பெரும்பணியினையும் இவர் செய்துள்ளார். அந்தவகையில் நூலாசிரியர் அமலோற்பவமேரியின் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது.

தமிழ்ஒளியின் குறுங்காவியங்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்யும் இந்நூல் பின்வரும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
1. கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்வும் பணியும்.
2. கவிஞர் தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் ஓர் அறிமுகம்.
3. சமூக நோக்கில் தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள்.

முதல் இயல், தமிழனே! நான் உலகின் சொந்தக் காரன், தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து எனப் பிரகடனம் செய்துகொண்ட மக்கள்; கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் அவரின் படைப்புகள் குறித்த அறிமுகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இயல், காவிய இலக்கியவகை குறித்த அறிமுகங்களோடு ஆய்வுக்குரிய மூன்று குறுங்காவியங்களின் கதைச் சுருக்கம் மற்றும் பாத்திரப்படைப்புகளை அறிமுகம் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் இயல், ஆய்வுக்குரிய கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி காவியங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்கிறது. அந்த வகையில் இக்குறுங்காவியங்களில் பேசப்படும் சாதியச் சிக்கல்கள், தொழிலாளர் பிரச்சனை, வறுமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பொதுவுடைமைச் சமூகத்திற்கான போராட்டம், தமிழ்மொழி உயர்வு முதலான உள்ளடக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இவ்வியல்.

நூலின் நிறைவுப் பகுதியில் நூலாசிரியர் தரும் முடிப்புரை பயன்தரத்தக்க வகையில் தொகுத்தளிக்கப் பட்டுள்ளது.

நூலின் மொழிநடை தனித்துக் குறிப்பிடத் தக்கவொன்றாகும். எளிய இனிய மொழிநடையில் இவ்ஆய்வுநூல் அமைந்திருக்கின்றது. ஆய்வு நூல்களுக்கே உரிய கடுநடை தவிர்க்கப்பட்டு எளிய இனிய தமிழில் இடையிடையே தமிழ்ஒளியின் கவிதைப் பகுதிகள் மிளிர ஆய்வாளர்கள் மட்டுமின்றிப் பொதுமக்களும் மாணவர்களும்கூட இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
கவிஞர் தமிழ்ஒளி, 1947இல் வெளியிட்ட வீராயி காவியத்தின் முன்னுரையில் பின்வருமாறு எழுதினார்.

“நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தவன் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள்"


கவிஞர் தமிழ்ஒளி எழுத்தாள நண்பர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்குத் தாமே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து தம் படைப்புகளைப் படைத்துக் காட்டினார். கவிஞர் தமிழ்ஒளியின் படைப்பாளுமை அளப்பரிது. அவர் படைப்பின் உள்ளடக்கங்களோ வீரியமிக்க புரட்சி வித்துக்களைக் கொண்டது. காலத்தின் தேவை கருதி இவ்வாய்வு நூலைத் தமிழுலகிற்கு உவந்தளிக்கும் வி. அமலோற்பவமேரி பாராட்டுக்குரியவர். அவரின் சமூகப் பணியும் எழுத்துப் பணியும் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

மனிதநேயக் கவிஞர் தமிழ்ஒளி - முனைவர் நா.இளங்கோ

மனிதநேயக் கவிஞர் தமிழ்ஒளி

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

1947 நவம்பர் 15 அன்று கவிஞர் தமிழ்ஒளி வீராயி என்ற காவியத்திற்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு எழுதுகின்றார்.
“நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தவன் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள்"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி காவியங்கள் தொகுதி ஒன்று, பக். 129-130)

கவிஞர் தமிழ்ஒளி எழுத்தாள நண்பர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்குத் தாமே ஒரு முன்னுதாரணமாகத் தம் படைப்புகளைப் படைத்துக் காட்டினார். தமிழ்க் கவிதையுலகில் தமிழ்ஒளி போல் மனித நேய மிக்க படைப்பாளிகள் தோன்றுவது அபூர்வம். கவிஞரின் மனித நேயம் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான நேயமாக உருவம் கொண்டது. சமூகத்தில் பொதுவான மனித நேயம் பேசும் படைப்பாளிகள் பலருண்டு. ஆனால் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டு அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லல்படும் ஏழை எளிய மக்களின் வாழ்வைக் கூர்ந்து நோக்கித் தம் எழுத்துக்களால் அவர்கள் படும் துயரங்களைப் படம் பிடித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களின் துயர் நீக்கும் வழிகளையும் தெளிவுபடுத்திப் படைப்புலகில் தமக்கென ஒரு தனியிடம் பெற்றவர் கவிஞர் தமிழ்ஒளியே.

தமிழ்ஒளி இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணி வேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை உணர்ந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் கவிதைகளில் பாராட்டினார். துணைநின்றார். தொழிலாளர் சங்கங்களையும், துறைமுகத் தொழிலாளி, டிராம்வேத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, நகர சுத்தித் தொழிலாளி எனச் சங்கம் வைத்துப் போராடத்தொடங்கிய அனைத்து உழைக்கம் மக்களையும் பாராட்டிக் கவிதை புனைந்தார். சென்னைத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார்.
உலகத் தொழலாளர்களின் உரிமைத் தினமான மே தினத்தைப் பற்றி முதன் முதல் தமிழில் பாடிய கவிஞன் தமிழ்ஒளியே ஆவார்.

தமிழ்ஒளியின் மனித நேயம் எப்படிப்பட்டது?

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது ஒருவகை மனித நேயம். சமூகத்தின் விளிம்பு நிலையில், வாழ்க்கையே போராட்டமாய்ச் சமூக ரீதியாகச் சாதிஎ ன்ற பேரிலும் வர்க்க ரீதியாக தொழிலாளி என்ற நிலையிலும் சுரண்டப்படும் உழைக்கும் மக்கள் மீதான மனித நேயம் மற்றொரு வகை. எல்லா மனிதர்களிடத்தும் பேசும் அன்பும் மனித நேயமும் சமூகத்தின் கடைசிச் குடிமகன் வரைத் தன் கரங்களை நீட்டுவதில்லை. உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரோடு அந்த வகை மனித நேயம் நின்று விடுகிறது.

தமிழ்ஒளிக்குமுன் கவிதை படைத்த எத்தனையோ கவிஞர்கள் அன்பையும் அருளையும் பேசியிருக்கிறார்கள். சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியின் அவலம், கழைக்கூத்தாடியின் துயரம் மற்றும் இன்னபிற கடைக்கோடி மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் அவர்களைப் பாதித்திருக்கின்றனவா? இல்லையே, அதனால்தான் கவிஞர் தே.ப.பெருமாள் தமிழ்ஒளியைப் புகழ்ந்து கவிதை பாடும்பொழுது,

“ஏழை நெடுந்துயரை ஏய்ப்பவரின் சூழ்ச்சியினை
ஊழல் சமுதாய ஊனத்தைப் பாழாக்கும்
கீழ்மேல் பிரிவினையைக் கேடளிக்கும் பேதத்தை
வீழ்த்தக் கவிசெய்தான் வேந்து”

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.154)

என்று அவரின் உண்மையான மனித நேயப் பண்பினை விதந்து பேசுகின்றார்.
எல்லாக் கவிஞர்களும் பூத்துக் காய்த்துக் குலுங்கும் மரத்தை, அதன் அழகை வியந்து பாடுவார்கள். தமிழ்ஒளி,

“குந்த நிழல்தரக் கந்த மலர்தரக் கூரை விரித்தஇலை!
வெந்து கருகிட இந்த நிறம்வர வெம்பிக் குமைந்தனையோ?
கட்டை எனும்பெயர் உற்றுக் கொடுந்துயர் பட்டுக் கருகினையே!
பட்டை எனும்உடை இற்றுக் கிழிந்தெழில் முற்றும் இழந்தனையே!”

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.57)

என்று வெந்து கருகிப் பட்டைகள் உரிந்து பட்டுப்போய் நிற்கும் மரத்தைப் பரிவோடு பாடும் தமிழ்ஒளியின் கவிதையில் தெரியும் மனித நேயம் வியப்புக் குரியதல்லவா?

இயற்கையைப் பாடும் கவிஞர்கள்

இயற்கையைப் பாடாத கவிஞர்களே இல்லை. இயற்கையைப் பாடும்போது உழைக்கும் மக்களை நினைக்கும் கவிஞர்கள் மிகச் சிலரே. இந்த மிகச் சிலரிலும் கவிஞர் தமிழ்ஒளி எப்படி வேறுபட்டுத் தம் மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றார் என்பதைக் காணலாம்.

“கருணையில்லார்-மிதிக்கின்றார் ஏழைகளை
இரவெனும் தாய்
மீட்சி தந்தாள் ஏழை மக்களுக்கே!
தூக்கம் என்னும் -புத்தமுதப் பால் சுரந்து பருக வைத்தாள்"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.15)

இரவையும் இருட்டையும் பாடும் போதெல்லாம் கவிஞர்களுக்கு வேறு ஏதேதோ நினைவுக்கு வரும். ஆனால் கவிஞர் தமிழ்ஒளிக்கு, உழைப்பவர்களின் உழைத்த உடல்வலி நீங்க இரவு என்னும் தாய் தூக்கம் என்னும் புத்தமுதப்பால் கொடுத்து உறங்க வைப்பதாகத் தோன்றுகிறது.

“நெடுந்தறியோடு ஆலையிலே உழன்றோர் தாமும்
நெருப்புருவாய் உலையருகே- இருந்தோர் தாமும்
கொடுந்துன்பச் சேற்றினிலே உழன்றோர் தாமும்
கொளுத்தும் வெயிலில் வாடிக் கிடந்தோர் தாமும்
படுந்துயரம் போதும் எனக் கதறும் போதில்
பறந்தோடி வந்தாய் நீ இரவே"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.15)

என்று இரவை மனித நேயத்தோடு இணைத்துப் பாடுகிறார்.

தொழிலாளியின் மாளிகை

துறைமுகத் தொழிலாளர்களின் அவலம் மிக்க வாழ்க்கையைப் படம் பிடிக்கும் கவிஞர் தமிழ்ஒளி, அவர்களின் குடும்பம் வாழ்ந்து வரும் இருப்பிடத்தை வருணிக்கும் பாடலில்,

“இநத்ப் பெரும்குடும்பம் என்றும் வசித்துவர
கந்தல் படுதாவில் கட்டியதோர் மாளிகையாம்
கோணி அதன்மேலே கூரை பழந்தகரம்
தூணோ சிறுகொம்பு தொட்டில் பழங்கந்தை"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.27)

‘கந்தல் படுதாவில் கட்டிய மாளிகை’ என அவர்களின் வீட்டைக் குறிப்பிடும் பகுதி சோக உணர்வின் படப்பிடிப்பாக இருப்பதை உணரமுடியும். இப்படித் தெருவோர, சாக்கடையோரப் பகுதிகளில் குடியிருக்கும் இலட்சக் கணக்கான இந்தியக் குடிமக்களைப் பற்றி நினைத்துப் பார்த்து அவர்களின் வேதனைகளைப் பதிவும் செய்யும் படைப்பாளிகள் தமிழ்ஒளியைப் போன்ற ஒரு சிலரே என்பதை உணர்தல்வேண்டும்.

பேதைச் சமூகம்

கழைக் கூத்தாடிகளின் சோகம் மிகுந்த வாழ்க்கையைப் பாடும் கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் குழந்தைகள் செய்யும் ஆபத்து மிக்க வித்தைகளைக் கணகலங்கிப் பாடுகின்றார்.

“உச்சியில ஒரு சின்னக்கம்பி-அதில்
ஒட்டிய வட்டத் தகரத்திலே
குச்சி உடலொன்று சுற்றுதையா-விசை
கொஞ்சம் தவறிடில் மிஞ்சிடுமோ?"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.23)

பேதைச் சுமூகம், அறிவற்ற சமூகம், இரக்கமற்ற சமூகம் என்றெல்லாம் இந்தச் சமூகத்தைச் சாடுவதன் வழியாகத் தம் மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றார் கவிஞர்.

அறிவியலின் மேன்மை

கவிஞர் தமிழ்ஒளி விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை அவலங்களை மனித நேய உணர்வோடு பாடித் தம் மனித நேயத்தைக் கட்டமைக்கின்றார். அவலங்களைப் பாடுவதும் கண்ணீர் விடுவதும் மட்டுமே மனித நேயமாகுமா? ஆகாது. அவர்கள் துயர் நீக்க என்ன வழி என்று இனங்காட்டுவதே உண்மையான மனித நேயமாகும். எனவேதான் கவிஞர் தமிழ்ஒளி அணுவின் ஆற்றலை வியந்து பாடும் சூழலில் அறிவியல் வளர்ச்சியால், அறிவியலின் ஆற்றலால், உலகில் ‘யந்திரம் கொக்கரிக்க ஆலைகள் தாம் சிரிக்க எந்திரத்தாலே உலாம் நடக்கும் எங்கெங்கும்’ என்று மகிழ்வதோடு,

“கையுழைப்பும் கால் உழைப்பும் காட்டடிமை போல் உழைத்த
மேய்யுழைப்பும் போயொழிய விஞ்ஞானப் பேரொளியால்
வேலைகுறைய விருப்பம் நிறைவெய்த
ஆணும் பேண்ணும் அன்றே சமத்துவமாய்....
விஞ்ஞானப் பூங்கா விரித்த மலர்களாய்
அஞ்ஞானம் நீக்கி அடிமைத்தளை போக்கி....
சூரிய நன்மை சுடர்க பொதுவுடைமை
வாழிய வையம் வளர்க அணுவாற்றல்"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.94)

என்றெல்லாம் அறிவியல் யுகத்தில் ஏற்படப் போகும் மாற்றங்களைப் பட்டியல் இடுவதோடு, அறிவியலை அணுவாற்றலை வாழ்த்தவும் செய்கின்றார்.
அறிவியல் வளர்ச்சியால் அறியாமை நீங்கும், அறியாமை நீங்கினால் அறிவு ஓங்கும், அறிவு ஓங்கப் பொதுவுடைமை மலரும், பொதுவுடைமைச் சமூகத்தில் வறுமை ஒழியும், சமத்துவச் சமூகத்தில்,

“உழுபவனே நிலத்திற்குச் சொந்தக்காரன்!
உழைப்பவனே தேசத்தின் உரிமையாளன்!"


(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 2,ப.37)
என்ற விபரம் பிறக்கும் இது கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நம்பிக்கை.

வெள்ளி, 14 செப்டம்பர், 2007

மக்கள் கவிஞர் புதுவைத் தமிழ்ஒளி -ஓர் அறிமுகம்

மக்கள் கவிஞர் புதுவைத் தமிழ்ஒளி

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கவிஞர் தமிழ்ஒளி:
தமிழனே நான்உலகின் சொந்தக் காரன் தனிமுறையில் நான்உனக்குப் புதிய சொத்து - தமிழ்ஒளி1947 நவம்பர் 15 அன்று கவிஞர் தமிழ்ஒளி வீராயி என்ற காவியத்திற்கு எழுதிய முன்னுரையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தான் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப்போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள். உலகம் முழுதும் உருவாகிக்கொண்டு வரும் உழைக்கும் இனத்தின் கூட்டு முன்னணிக்கு உங்கள் எழுத்து உறுதுணையாகட்டும். … …”1
இம்முன்னுரையில் கவிஞர் தமிழ்ஒளியின் இலக்கியக் கோட்பாடு எது என்பதை அவரே தௌ;ளத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்;. மக்களுக்காக எழுதுங்கள். மக்கள் உயர எழுதுங்கள். உழைக்கும் மக்களின் உயர்வுக்கு எழுதுங்கள் என்பதே அவரின் வேண்டுகோள்.

கவிஞர் தமிழ்ஒளி அறிமுகம்:
(1924-1965)கவிஞர் தமிழ்ஒளி பிறந்த மண் புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சார்ந்த சாமிப்பிள்ளைத் தோட்டம். புதுவைக்குப் புகழ்சேர்க்கும் கவிஞர்கள் வரிசையில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு பாரதிதாசன் பரம்பரையில் வந்த மக்கள் கவிஞன் தமிழ்ஒளி. கவிஞரின் இயற்பெயர் விஜயரங்கம். பிறந்த நாள்: 21-9-1924. பெற்றோர்;: திரு.சின்னையா நயினார், திருமதி செங்கேணியம்மாள் ஆவர். தாழ்த்தப்பட்ட சாதியின் ஒரு பிரிவான வள்ளுவர் இனத்தைச் சேர்ந்தவர். கவிஞர் விஜயரங்கம் புதுவை கல்வே கல்லூரியில் பயின்ற மாணவர். அங்கேதான் அடிப்படைக் கல்வியும் உயர்நிலைக்கல்வியும் பயின்றார். ஃபிரெஞ்சு மொழியும் கற்றார். பின்னர் முறையாகத் தமிழ் கற்க விரும்பி கரந்தைச் செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1945 முதல் தம் இறுதிக்காலம் நெருங்கும் வரை சென்னையிலேயே வாழ்ந்தார். அவர் அமரரானதும் அடக்கமானதும் புதுவையில். நாள்: 29-3-1965.

தமிழ்ஒளியின் படைப்புகள்:
1944இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி தம் இறுதிக்காலம் (1965)வரை எழுதிக்கொண்டே இருந்தார்.
படைப்புகள்: எழுதிய ஆண்டு வெளிவந்த ஆண்டுகாவியங்கள்:

1. கவிஞனின் காதல் 1944 1947
2. நிலைபெற்ற சிலை 1945 1947
3. வீராயி 1947 1947
4. மேதின ரோஜா 1952 1952
5. விதியோ? வீணையோ? 1954 1961
6. மாதவி காவியம் 1958 1995
7. கண்ணப்பன் கிளிகள் 1958 1966
8. புத்தர் பிறந்தார் 1958 1966
9. கோசலக்குமரி 1962 1966

தனிக்கவிதைகள்:
1. நீ எந்தக் கட்சியில்? 1948 1948
2. மேதினமே நீ வருக! 1949 1952
3. தமிழ்ஒளியின் கவிதைகள் 1954-64 1966
4. மக்கள் கவிதைகள் 1954-58 1987

குழந்தைப் பாடல்கள்:
1. அந்திநிலா பார்க்கவா! 1948-62 2001

ஆய்வு நூல்கள்:
1. சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா? 1959 1959
2. திருக்குறளும் கடவுளும் 1959 1959
3. தமிழும் சமஸ்கிருதமும் 1960 1960
4. தமிழர் சமுதாயம் 1961 1962

கதைகள்:
1. சாக்கடைச் சமுதாயம் 1948-49 1952
2. அறிவ+ட்டும் 100 அற்புதக் கதைகள் 1960 1961
3. குருவிப்பட்டி 1954-60 1961
4. உயிரோவியங்கள் 1948-49 1989

குறு நாவல்கள்;:
1. மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் 1952 1952
2. மாமாவின் சாகசம் 1952 1952

வரலாறு:
1. தோழர் ஸ்டாலின் 1952 1952

நாடகங்கள்:
1. கவிஞர் விழா(ஓரங்க நாடகங்கள்) 1947 1947

அச்சில் வெளிவராத மேடை நாடகங்கள்:
1. சிற்பியின் கனவு 1945
2. சேரன் செங்குட்டுவன் 1946
3. தோழர் ஸ்டாலின் ------

(இன்னும் வெளிவராத சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் சில)

ஆக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கவிதை, காவியம், கட்டுரை, நாடகம், ஆய்வுகள் எனப் பலதுறைகளிலும் எழுதி வெளியிட்ட மாபெரும் படைப்பாளி கவிஞர் தமிழ்ஒளி. இத்தனைக்கும் அவர் வாழ்ந்த காலங்கள் வெறும் நாற்பதே ஆண்டுகள். நாற்பதாண்டுகளே வாழ்ந்தாலும் காலத்தினால் அழியாத கவிதைகளையும் இலக்கியங்களையும் படைத்துக் கொடுத்திருக்கிறார்.

தமிழ்ஒளியின் பாதை:
கவிஞர் தமிழ்ஒளி பாரதியை ஞானத் தந்தையாகக் கருதினார், பாரதிதாசனை வழிகாட்டியாகக் கொண்டார். அவர்களிருவரும் வகுத்துத் தந்த வழியை மேலும் செம்மைப்படுத்தினார்.1944 இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி தமிழ், தமிழ்இனம், தமிழர் எழுச்சி, சீர்திருத்தம் என்ற போக்கில் அதாவது தேசிய இனங்களின் உரிமை, தமிழ் ஆட்சிமொழி, சுயமரியாதை, சமத்துவம் என்ற செயல்பாட்டில் தம் படைப்;புப் பணியைத் தொடங்கினார். 1945இல் கவிஞர் மார்க்சீயத் தத்துவத்தை ஆழ்ந்து பயிலத் தொடங்கினார். அதன் விளைவாகவே ‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி ’ ஆகிய காவியங்களைப் படைத்தார்.1947இல் இலக்கியப் பேராசான் ஜீவா முன்னிலையில் தமிழ்ஒளியும் குயிலனும் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தனர். 1947 தொடங்கி ஒன்பது ஆண்டுகள் பொதுவுடைமை இயக்கத்தில் உறுப்பினராகவும் கலை இலக்கியத் தளத்தில் புரட்சிப் படைப்பாளராகவும் விளங்கினார் தமிழ்ஒளி. 1953இல் பொதுவுடைமை இயக்கத்திலிருந்து வெளியேறினார். 1953இற்குப் பிறகு புதியபுதிய உள்ளடக்கங்களிலும் உத்திகளிலும் காவியங்கள் படைப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். வாழ்வின் கடைசிவரை பிற்போக்கு சக்திகள் தம்மை அண்டாமல் பார்த்துக் கொண்டார்.

தமிழ்ஒளியும் பொதுவுடைமையும்:
1948இல் இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறி இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினைக் காங்கிரஸ் அரசு தடைசெய்தது. தடையின் விளைவாகக் கம்னிய+ஸ்ட் கட்சி அலுவலகம், தொழிற்சங்க அலுவலகங்கள், கட்சிப் பத்திரிக்கை அலுவலகங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. தலைவர்கள் பலர் கைதாயினர். வேறு சிலர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். நாட்டில் நடப்பதைக் கட்சி ஆதரவாளர்கள் அறிந்து கொள்ள இயலாத சூழ்நிலை உருவானது.இந்த இக்கட்டான சூழலில் இந்திய கம்னிய+ஸ்ட் கட்சி நடத்திவந்த ஜனசக்தி தடைசெய்யப்பட்டது. முன்னணி என்ற பெயரில் பொதுவுடைமைச் சார்பு இதழ் ஒன்று புதியதாகத் தொடங்கப்பட்டது. கட்சியின் நம்பிக்கைக்குரிய தோழர் குயிலன் ஆசிரியர் பொறுப்பேற்றார். துணைஆசிரியர் பொறுப்பில் தமிழ்ஒளியும் எஸ்.ஆர்.எஸ்.ராஜனும் செயல்பட்டனர். 1948 அக்டோபர் தொடங்கி 1949 செப்டம்பர் வரை தொடர்ந்து 48 இதழ்கள் வெளிவந்தன. பின்னர் முன்னணி இதழும் தடைசெய்யப்பட்டது.இந்த முன்னணி ஏட்டின் ஒவ்வொரு இதழிலும் கதை, கட்டுரை, கவிதை, நாடகம் ஆகிய பல இலக்கிய வடிவங்களில் தம் முற்போக்குக் கருத்துக்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்து எழுதி வந்தார் தமிழ்ஒளி. மார்க்சீய தத்துவ ஞானத்தை மக்களுக்கு விளக்குவதற்காகவே ஜனயுகம் என்ற பெயரில் புதிய மாத இதழ் ஒன்றைத் தொடங்கினார் தமிழ்ஒளி. அந்த ஏடு பற்றிய ஒரு விமர்சனம் 4-9-1948இல் முன்னணி ஏடு ஒன்றில் கவிஞர் குயிலன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி:“மார்க்சிஸ்ட் தத்துவத்தை விளக்குவதற்கே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மாத சஞ்சிகை தமிழில் வெளிவருவது மிகவும் பொருத்தமானது. மகிழ்ச்சி தரும் செய்தி. அவசரத் தேவையைப் ப+ர்த்தி செய்யும் ஆயுதம். சஞ்சிகையின் ஆசிரியர் விஜயரங்கத்தைப் பாராட்டுகிறோம்.”2 என்று தமிழ்ஒளியைப் பாராட்டி எழுதியுள்ளார் தோழர் குயிலன் அவர்கள்.

கவிஞர் தமிழ்ஒளியின் தனித்தன்மைகள்:
தமது கவிதைகளின் உருவமும் உள்ளடக்கமும் சிறப்பாகவும் முற்போக்காகவும் அமைய வேண்டுமென்று விரும்பி எழுதிய கவிஞர் தமிழ்ஒளி, பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் இன்றைய புதுமை இலக்கியங்களிலும் அளவற்ற ஈடுபாடு கொண்ட இலக்கிய ரசிகர். கம்பரும் திருவள்ளுவரும் இளங்கோவும் மகாகவிபாரதியும்; அவரது குருநாதர்கள்.மனிதாபிமானம், தேசியம், சோஷலிசம் ஆகிய மாபெரும் கொள்கைகளில் பற்றுகொண்டு, தமிழின் பண்டைய - நவீன இலக்கிய மரபுகளில் தோய்ந்து சிந்தனை வளத்தோடும் சந்த நயத்தோடும் செஞ்சொற் கவிதைகளை யாத்தவர் கவிஞர் தமிழ்ஒளி.கவிஞர் தமிழ்ஒளி தமிழ்ச் சமுதாயத்தில் சாதி வேற்றுமையில்லாத ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை நிறுவக் கனவு கண்டார். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லதை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார்.தமிழ்ஒளி இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணிவேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை உணர்ந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் கவிதைகளில் பாராட்டினார், துணைநின்றார். தொழிலாளர் சங்கங்களையும், துறைமுகத் தொழிலாளி, டிராம்வேத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, நகர சுத்தித் தொழிலாளி எனச் சங்கம் வைத்துப் போராடத் தொடங்கிய அனைத்து உழைக்கும் மக்களையும் பாராட்டிக் கவிதை புனைந்தார். சென்னைத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார்.உலகத் தொழிலாளர்களின் உரிமைத் தினமான மே தினத்தைப் பற்றி முதல் முதல் தமிழில் பாடிய கவிஞன் தமிழ்ஒளியே ஆவார்.

தமிழ்ஒளி கவிதைகள்:
தமிழ் இலக்கியப் படைப்புலகில் இருபதாம் நூற்றாண்டு மகத்தானது. தேசிய இனம், தேசியம், சர்வ தேசியம் போன்ற கருத்தாக்கங்கள் கால்கொண்ட காலம் அது. இவ்வகைக் கருத்தாக்கங்களை உள்வாங்கிக் கவிதை படைத்த பாரதியே இந்த மரபிற்குச் சொந்தக்காரன். பாரதியின் இத்தகைய பாடுபொருள்களை மிகச்சரியான மார்க்சியத் தத்துவப் பின்புலத்தோடு புரிந்துகொண்டு, பாவேந்தன் பாரதிதாசனின் மறுமலர்ச்சிச் சிந்தனைகளையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு புதுப்பாதை சமைத்த கவிஞன்தான் தமிழ்ஒளி. பாரதியைப் போல் தமிழ்ஒளியும் கவிதையை வாழ்வாகக் கொண்டவர். வாழ்க்கையையும் கவிதையாக மாற்றியவர். தனக்கென்று வேறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் கவிஞனாகவே வாழ்ந்து கவிதையாக நிலைத்திருப்பவர்.பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் தமிழ்ஒளிக் கவிதைகளில் மூன்று வகைகளைக் காணமுடியும் என்று மதிப்பிடுகிறார். முதல்வகைக் கவிதைகள், பாரதி பாரதிதாசன் வழியில் நின்று முற்போக்குக் கருத்துக்களைக் கூறும் கவிதைகள். இரண்டாம்வகைக் கவிதைகள் கற்பனைத் திறனோடும், உவமை முதலிய அணியழகுத் திறன்களோடும் தமிழ்ஒளி புனைந்த கவிதைகள். இதில் அவர் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் அனைவரையும் விஞ்சிவிட்டார் என்று புகழ்ந்துரைக்கின்றார். மூன்றாம் வகைக் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டுக்கே புதுமையான கவிதைகள் முத்தமிழ்க் கவிஞன் இளங்கோவின் முழுமைச்சிறப்பை ஒத்த கவிதைகள் என்று கூறி இவ்வகைக் கவிதைகளுக்குச் சான்றாக, கவிஞரின் விதியோ? வீணையோ? என்ற இசை நாடகத்தைக் குறிப்பிடுகின்றார் பன்மொழிப் புலவர்.3

தமிழ்ஒளி கவிதைகளில் மூன்று கட்டங்கள்:
கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகளை மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1. 1944 முதல் 1947 வரையிலான கவிதைகள்.(சீர்திருத்தக் கவிதைகள்)
2. 1947 முதல் 1953 வரையிலான கவிதைகள்.(முற்போக்குக் கவிதைகள்)
3. 1954 முதல் 1965 வரையிலான கவிதைகள்.(பொதுமைக் கவிதைகள்)
இம்மூன்று காலக் கட்டங்களிலும் தமிழ்ஒளியின் கவிதைகளில் சமூகத்தின் ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குரலே ஓங்கி ஒலிக்கின்றது. கவிஞர் தமிழ்ஒளி கேட்கிறார்,

ஏ செந்தமிழா! என்னுடைய சோதரா! நீ யார்பக்கம்? நிகழ்த்திட வேண்டும் கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா? துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா? 4 
கவிஞர் எப்பொழுதுமே துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கம்தான். இதில் நான் யார் பக்கமும் இல்லை பொதுவான மனிதன் என்று கூறுபவர்கள் ஊமையர், பேடியர், பேதையர் என்று சாடுகிறார் தமிழ்ஒளி.கவிஞரின் கடைசிப் பத்தாண்டுக் கால வாழ்க்கை புதிர் நிறைந்தது, குழப்பமானது என்றெல்லாம் சொல்பவர்கள் உண்டு. இக்காலக் கட்டத்தில் கவிஞர் இரண்டு பெரும் இடர்ப்பாடுகளுக்கு ஆளானார் என்பர். ஒன்று அவரின் காதல் தோல்வி. மற்றது அவரை மரணம்வரை துரத்திச் சென்று வாட்டி வதைத்த காசநோய்.

தமிழ்ஒளியின் சோகமும் நம்பிக்கையும்:
கவிஞர் தமிழ்ஒளி தம் கவிதைகளிலும் குறுங்காவியங்களிலும் சிறுகதைகளிலும் எதார்த்த வாழ்விலுள்ள இன்னல்கள் பலவற்றைப் பரவலாக எடுத்துரைக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் சோகமயமான வாழ்க்கைச் சித்திரம் படிப்பவர்கள் நெஞ்சை நெகிழ்விக்கச் செய்யும் வகையில் கவிஞரின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும். காவியங்கள் மிகுதியும் துன்பியல் முடிவுகளைக் கொண்டதாகவே பாடப்பட்டிருக்கும். ஆனால் கவிஞர் எதிர்கால வாழ்வின் மீது தளராத நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவர் கவிதைகளின் வழி உணரமுடியும்.
உழுபவனே நிலத்திற்குச் சொந்தக் காரன்
உழைப்பவனே தேசத்தின் உரிமை யாளன்
புழுவைப்போல் கிடந்ததுவும் பிச்சை வாங்கும்
புன்மைநிலை அடைந்ததுவும் வாடைக் காற்றில்
அழுதுதுயர் அடைந்ததுவும் இனிமே லில்லை
அடங்காத வேகமொடும் ஆர்வத் தோடும்எழுந்து வா! 
உழைப்பவரின் போராட் டத்தில் 
இரண்டின்றிக் கலந்துவிட இதுதான் நேரம் 5

எதிர்காலத்தின் மீது எவ்வளவு நம்பிக்கையோடு கவிதை யாத்துள்ளார் என்பதை உணர்தல் வேண்டும்.

செஞ்சேனைகளின் வெற்றி:
தமிழ்க் கவிஞர்களில் சீனப்புரட்சியை வரவேற்று இங்கே புரட்சிக்குரல் எழுப்பிய ஒரே கவிஞன் தமிழ்ஒளியே. உலகில் எங்கெல்லாம் செஞ்சேனைகள் வெற்றி பெறுகின்றனவோ அவற்றை வரவேற்கத் தமிழ்ஒளி தவறுவதே இல்லை. சீனத்து செஞ்சேனைகளின் வெற்றியைப் பல பாடல்களில் புகழ்ந்து பாடுகின்றார்,
சீனம் நமக்கொரு நம்பிக்கை - அதன்
செஞ்சேனை வெற்றிக ளால்
புது ஞானம் பிறக்குது மண்ணிலே - இந்த
ஞானத்தை அன்று விதைத்தது
வானர சாகிய சோவியத் - அது
வாழ்த்தி மகிழுது தாயென ஈனர்கள்
ஓட்டம் பிடிக்கிறார் - நான்கிங்
எல்லை பரிசுத்தம் ஆகுது. 6 
சோவியத் புரட்சியைப் பல பாடல்களில் புகழ்ந்து பாடியிருந்தாலும் சீனப் புரட்சியைப் பாடும்போதும் சோவியத்நாடு தாய்போல் சீனாவை வாழ்த்தி மகிழ்வதாகப் பாடுகின்றார். சீனப் புரட்சி இந்திய ஏழைகளின் கனவுகளில் நம்பிக்கையை ஊட்டுவதாகவும் இந்தியத் தொழிலாள வர்க்கத்தினருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கிறது என்று சீனப்புரட்சி தந்த நம்பிக்கையில் இந்தியப் புரட்சியையும் கனவு காண்கிறார் கவிஞர் தமிழ்ஒளி.

மே தினமே வருக:
உலகு தழுவிய நிலையில் அவர் படைத்த மேதினக் கவிதை ஒரு நீண்ட கவிதை. தமிழிலக்கியத்திற்கு அது ஒரு புதுமை இலக்கியம். இந்திய மொழிகளில் மேதினத்தை வரவேற்று இதுபோன்றதொரு கவிதையை வேறு யாரும் படைத்ததில்லை என்பதே இக்கவிதையின் தனித்தன்மைக்கு ஒரு சிறந்த சாட்சி. உழைப்பாளி வர்க்கத்தின் உரிமைக்குரலாக, போர்ப்பரணியாக ஒலிக்கும் புரட்சிக் கவிதை அது,
கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமை போலுழைத்துப்பாடுபட்ட ஏழைமுகம் பார்த்துப் பதைபதைத்துக்கண்ணீர் துடைக்கவந்த காலமே நீ வருக!மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கிவிண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்பாய்ச்சிவாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளிகையில் விலங்கிட்டுக் காலமெல்லாம் கொள்ளையிட்டபொய்யர் குலம்நடுங்கப் பொங்கி வந்த மேதினமே! 7என்றெல்லாம் சர்வதேசத் தொழிலாளர் உரிமைப் பிரகடனத்தை நினைவ+ட்டும் வகையில் உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கின்றார். மேதினத்தின் வலிமையையும் சாதனையையும் நினைவு கூர்கின்றார், கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்ஏற்றிவைத்த நின்பெருமை என்னுயிர்க்கும் மேலன்றோபோற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக. 8உலகத் தொழிலாளர்கள் உள்ளவரை நிலைத்திருக்கும் கவிதையை காலத்தால் அழிக்க முடியாத கவிதையைத் தந்து காலத்தை வென்று நிற்கிறார் கவிஞர் தமிழ்ஒளி.

கவிதையின் உள்ளடக்கத்தோடு உருவத்திலும் புதுமை:
கவிஞர் தமிழ்ஒளி முற்போக்கான புரட்சிகரமான சிந்தனைகளை வெறும் பரப்புரையாகத் தம் கவிதைகளில் பெய்துவிடவில்லை. கவிதைகளுக்கே உரிய அழகியலோடு தம் கவிதைகளைப் படைக்கின்றார். இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் இவர்போல் சந்த நயத்தோடும் உவமை உருவகப் புதுமைகளோடும் சொல்லாட்சிச் சிறப்புகளோடும் புரட்சிக்கவிதைகள் யாத்தவர் இல்லை என்று சொல்லும்படியாகக் கவிஞரின் கவிதைகள் மிளிர்கின்றன. தமிழ்ஒளியின் காவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்த படைப்புகளாக விளங்குகின்றன.“கருத்துக்களைச் சொல்லுவது மட்டுமே கவிதையின் நோக்கமெனில், யாப்புவகைகள் பல இருக்கத் தேவையிராது. கவிதை ஒரு கலை, அந்த உணர்வோடு இலக்கியம் படைக்கும் கவிஞன் தான் விரும்பும் வண்ணம் கவிதையைக் கையாளும் பொருட்டே யாப்பு வகைகள் பல உருவாக்கப்பட்டன.” 9 என்பது கவிஞர் தமிழ்ஒளியின் கருத்தாக இருந்தது. அதனால் ஒவ்வொரு காவியத்திற்கும் ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்பப் பலப்பல சந்த நடையுடைய கவிதைகளையும் யாப்பு வடிவங்களையும் தேர்ந்தெடுத்தார் தமிழ்ஒளி.

கவிதைகள் நிலைக்கும் கவிஞன் வாழ்வான்:
காலத்தை வெல்லும் கவிதைகள் தந்த கவி தமிழ்ஒளி கவிதை உலகில் வாழ்ந்தபோதும், வாடி வீழ்ந்தபோதும் மறக்கப்பட்டான், மறைக்கப்பட்டான். சாதி செய்த சதி அது.கவிஞர் தமிழ்ஒளியே கூறுவதுபோல்,

‘வஞ்சகக் காலன் வருவதும் போவதும் வாழ்க்கை நியதியடா! –எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று சிரிப்பது இயற்கையடா!’10 

என்று ஆறுதல் கொள்ளத் தோன்றுகிறது.கவிஞர் தமிழ்ஒளி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் காலமானபோது சொன்ன கவிதை வரிகளைத்தான் தமிழ்ஒளி அவர்களின் மரணத்தின் போதும் நினைவு கொள்ள வேண்டியுள்ளது. அந்த வைர வரிகள் இதோ,சென்னையினின்று பிணம் வரும் என்கின்றசெய்தியைச் சிற்சிலர் பேசி நின்றார் - அவர் சொன்னது கேட்டுக் கொதிப்படைந்து, ‘வெறும் சொத்தைகள்’ என்று வழிதொடர்ந்தேன்!உயிரில் உணர்வில் கலந்த கவிஞன் என்உயிரில் உயிர் கொண்டு உலவுகின்றான்! - வெறுந்துயரில் நான் மூழ்கிக் கிடக்கவில்லை, அவன்தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வேன்!.11கவிஞரின் இந்த வரிகளை நினைவு கொண்டு கவிஞர் தமிழ்ஒளியின் மரணம் தந்த துயரத்தில் நாம் மூழ்கிவிடாமல் நம் உயிரில் உணர்வில் கலந்து நிற்கும் கவிஞர் அவர்களின் தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வோம்.

அடிக்குறிப்புகள்:

1. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி காவியங்கள் தொகுதி- ஒன்று, பக். 129-130.
2. சங்கை வேலவன், தமிழ்ஒளியின் கவிப்பயனம், ப.217.
3. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்; தொகுதி.2, பக்.8,9
4. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்; தொகுதி.2, ப.42
5. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.37
6. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.54
7. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.75
8. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.75
9. செ.து.சஞ்சீவி, தமிழ்ஒளி, பக்.401
0. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.1, ப.64
11. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.1, ப.102

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...