திங்கள், 30 ஜனவரி, 2012

கவிஞர் வேள்பாரியின் "அகம் மலர்ந்த ஆம்பல்கள்" -அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-605 008

இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு விந்தை யென்றால் மனிதனின் படைப்பில் கவிதை ஒரு விந்தை. கவிதைகளுக்குத்தான் எத்தனை சுதந்திரம். ஒருமுறை கவிதையைக் கேட்டோ வாசித்தோ நமக்குள் அனுமதித்து விட்டால் அந்தத் கவிதைகள் நம் மனத்துள் புகுந்து செய்யும் சித்துவேலைகள்தான் என்னென்ன?

சித்தர்கள் செய்யும் எண்வகைச் சித்துகளைப்போல் எண்ணிலாச் சித்துகளை நமக்குள் செய்யும் அந்தக் கவிதைகள். உருவைச் சுருக்குவது, பேருரு எடுப்பது, தனக்குள் ஒன்றுமில்லாதது போல் மயக்குவது, தனக்குள்ளே எல்லாம் இருப்பதாகக் காட்டுவது, சுவைஞனிடத்தில் ஆக்கலும் காத்தலும் அழித்தலும் செய்வது என அப்பப்பா! நல்ல கவிதைகள் செய்யும் மாயங்கள் சொல்லிமாளாது. நல்லவேளையாக இன்றைக்கு கவிதை எழுதும் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் ஆயிரக்கணக்கான கவிதைகளில் நல்ல கவிதைகள் கொஞ்சம் அரிதாயிருப்பதால் நாம் தப்பித்தோம்.

நல்ல கவிதைகள் வாசித்து முடித்தபின் சுவைஞனைத் தூங்க விடுவதில்லை. பனை ஓலைகளில் எழுதிக் கொண்டிருந்த தமிழனுக்கு, ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் கையில் கொஞ்சம் தாளும் மையும் கிடைத்தபிறகு எழுத்து ஒரு சுகமான அனுபவமாயிற்று. இகலோக சுகம் தேடிப் பணம்படைத்த மன்னர், வள்ளல்களைப் பாடுவதோ, பரலோக சுகம் நாடிப் பரமனைப் பாடுவதோ இவைதான் கவிஞனின் வேலை என்றிருந்த இடைக்காலக் கவிஞர்களின் குண்டுசட்டிக் குதிரையோட்டம் காலனியாதிக்கச் சூழலில் புதிய எழுதுகருவி, அச்சு, புதிய பாடுபொருள், புதிய மொழிநடை எனப் புதுக்கோலம் கொண்டது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கங்களில். மகாகவி பாரதி இதனைத் தொடங்கிவைத்தான். அவனே தமிழின் நவீன கவிதைக் கலையின் பிதாமகன்.

பாரதி பிடித்த தேர்வடம் பின்னர் பாவேந்தன் கைக்குச் சென்றது. இன்று அந்தத் தேர் ஓடிக்கொண்டிருக்கிறதா? நிலைக்கு வந்துவிட்டதா? இல்லை வழியிலேயே முட்டுக்கட்டையில் முடங்கிக் கிடக்கிறதா? என்று இன்னும் தீர்;ப்பளிக்கப் படாத பட்டிமன்றம் ஒன்று தமிழுலகில் நடந்துகொண்டிருக்கிறது. பாரதி பிடித்த தேர் இன்னும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்ற அணியைச் சேர்ந்தவன் நான். இப்பொழுது என் மனக்கண்ணில் பாரதி பிடித்தத் தேர் வடத்தைப் பலரோடு சேர்ந்து கவிஞர் வேள்பாரியும் பிடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

கவிஞர் வேள்பாரி சிங்கப்பூர்க் கவிதைக் குடும்பத்தில் ஒருவர். என் இனிய நண்பர் முனைவர் இரத்தின வேங்கடேசன் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்திருந்த பாரதி 126 விழாவில் முதன்முறையாகக் கவிஞர் வேள்பாரியின் கவியரங்கக் கவிதையைக் கேட்டேன். கேட்டேன் என்பதைவிட கேட்டுத் திளைத்தேன். கவியரங்கங்களுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த எனக்கு அவரின் கவியரங்கக் கவிதையும் அதனை அவர் மேடையில் நிகழ்த்திய விதமும் புதுமையாயிருந்தது.

பாரதி குறித்த தன்னுடைய நீண்ட கவிதையைக் கையில் எந்த தாளோ, குறிப்போ இல்லாமல் சரளமாகப் பொழிந்து கொண்டே இருந்தார். இடையில் பாராட்டுதலுக்காகக் கைதட்டல்கள் பல. கைதட்டலுக்குக் கொஞ்சம் இடம்கொடுத்து மீண்டும் மலையருவி எனக் கவிதையை ஆர்ப்பாட்டமும் துள்ளலும் குளிர்ச்சியுமாக ஓடவிட்டார். அன்று அவருடைய கவிதை அருவியில் குளித்துச் சிலிர்க்காதவர்களே இருக்க முடியாது. தொடர்ந்து பல மேடைகளில் அவரின் கவியரங்கப் பொழிவுகளைக் கேட்டு நான் மகிழ்ந்திருக்கிறேன். இப்பொழுது அவரின் கவியரங்கக் கவிதைகளும், சில தனிக் கவிதைகளும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற கவிதைகளும் இணைந்து அகம் மலர்ந்த ஆம்பல்கள் என்ற பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பாக வெளிவருகிறது. இந்நூல் அவரின் முதல் கவிதைத் தொகுப்பு.

கவிதைத் தொகுப்புகள் பொதுவாக, தமக்கென ஒரு முழுமைபெற்ற வடிவம் அற்றவை. கவிதைகளின் கலப்பு அணிவரிசை அது. எப்பொழுதுமே கலவைகளுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. கதம்பங்களைப் போல். கதம்பம், பல மலர்களின் கலப்பு. மலர்கள் மட்டுமல்ல மரு, மருக்கொழுந்து என இலை, தழைகளும் கதம்பத்தில் உண்டு. வண்ணங்களோ பலவிதம், குணங்களும் பலவிதம், மலர்களில் வாசனை உள்ளதும் உண்டு, வாசனையற்றதும் உண்டு. கவிதைத் தொகுப்புகளும் அப்படித்தான். எல்லாக் கவிதைகளும் ஒரே தரத்தில், ஒரே நிறையில் இருப்பதில்லை. கவிஞர் வேள்பாரியின் அகம் மலர்ந்த ஆம்பல்கள் தொகுப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. கவியரங்கங்களில் அவர் பொழியும் கவிதை நிகழ்த்தலின் பரிமாணத்தை அச்சுவடிவத்தில் வரும் அவரின் கவிதைகளில் காணமுடியவில்லை. இரண்டும் வேறுவேறு ஊடாகமாகச் செயல்படுவதே அதற்குக் காரணமாயிருக்கலாம்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மிகப்பல கவிதைகள் பல கவிதைப் போட்டிகளில் அவருக்குப் பல்வேறு பரிசுகளை ஈட்டித்தந்த கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் வேள்பாரி, பொழுது போக்கக் கவிதை எழுதுகிறவர் இல்லை. அவர் ஏன் கவிதை எழுதுகிறார்? எப்பொழுது கவிதை எழுதுகிறார்? என்பதிலேயே அவரின் தனித்தன்மை வெளிப்படுகிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் அவரது மனஅவஸ்தையின் வெளிப்பாடுகளாக இருப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. தனிமனித, சமூக, நாட்டு நிகழ்வுகளின் கோணல்களும் அதற்கான கொதிப்புகளுமே அவர் கவிதைகளின் மையப் பொருளாகின்றன. குறிப்பாக, ஈழத்தில் நடந்துவரும் சிங்களப் பேரினவாதக் கொடுமைகளால் தமிழன் என்பதனையும் மீறி மனிதம் சிதைக்கப்படுவதில் அவருக்குள்ள எல்லையற்ற கோபமும் கொதிப்பும் பல படைப்புகளில் வெளிப்படுகின்றன.

தேகா போட்டியில் பதக்கம் பெற்ற புதுக்கோட்டைச் சாந்திக்காக எழுதும் வாழ்த்துக் கவிதை தொடங்கி சந்திராயன் அனுப்பப்பட்டபோதும், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலின் போதும், கும்பகோணத் தீவிபத்தில் பள்ளிக் குழந்தைகளின் கோரப்பலியின் போதும், ஒரிசாவில் விவசாயிகளின் பஞ்சத்தின் போதும், டில்லி குண்டு வெடிப்பின் போதும், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் போதும் அவர் எழுதியுள்ள கவிதைகளில் உள்@ர், தேச, சர்வதேச அரசியல் நிகழ்வுகள் அலசப்படுவதைக் கூர்ந்து நோக்கும் எவரும் இத்தொகுதியின் மேன்மையினை எளிதில் கண்டுகொள்ள முடியும்.

வேள்பாரியின் கவிதைகளின் நடை மிக மென்மையானது. எதுகை மோனைகளை விட அவர் பெரிதும் நம்புவது இயைபுத் தொடைகளைத்தான். இயைபுத் தொடைகளுக்கும் கவிதையின் ஓசையொழுங்குக்கும் மிகுந்த தொடர்புண்டு. இந்த நுட்பம் தெரிந்து வேள்பாரி தம் கவிதைகளை ஓசைநயத்தோடு படைப்பதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும். எளிய இனிய சொற்களால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தம் படைப்பு எளிதில் சென்று சேரும் வகையில் கவிதை படைப்பது அவரின் தனிஇலாவகம்.
கவிஞரின் அகம் மலர்ந்த ஆம்பல்கள் தொகுப்பில் எல்லா உணர்ச்சிகளும் விரவிக் கிடந்தாலும், இத்தொகுதியில் மிகுதியும் வெளிப்படும் உணர்ச்சி சோக உணர்ச்சியே. பெரும்பாலான கவிதைகளில் மிக மெல்லிய சோகம் இழையோடுவதை எவரும் எளிதில் அவதானிக்க முடியும். தாய்முகம் என்ற அவரின் கவிதையை இங்கே நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

கற்றைக்குழல் முடித்துக்
காலையிலே விழித்திடுவாள்
சற்றேனும் ஓய்வின்றி
சலசலத்து உழைத்திடுவாள்

கற்றவித்தை எதுவென்றால்
கண்ணீரைச் சொரிந்திடுவாள்
குற்றமற்றத் தாயுள்ளம்
குறையேதும் கண்டதில்லை

நெற்றியிலே நீர்வடிய
நெருப்பூட்டிச் சமைத்தாயே
வெற்றியைக் காணுமுன்னே
வெந்தணலில் வெந்தாயே


வேள்பாரியின் இந்தக் கவிதையைப் படிப்பவர்களுக்குப் பட்டினத்தாரின் தாயை எரியூட்டிய பாடல்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. வேள்பாரியின் தாயன்பு மீதான நீங்கா நினைவுச் சிதறல்கள் தொகுப்பின் பல இடங்களிலும் விரவிக் கிடக்கின்றன. தாய்மையைப் போற்றும் கவிஞரின் உள்ளமும் தாயுள்ளம் போன்றதுதான். அதனால்தான் அவரின் எல்லாப் பாடுபொருள்களிலும் அன்பும் ஆழ்ந்த மனிதநேயமும் இழையோடுகின்றன.

இந்தியா அமெரிக்கா கூட்டு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த வேள்பாரியின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் அணு என்ற தலைப்பிலான ஒரு கவிதை,

அணு ஒப்பந்தம்
அமெரிக்க நிர்பந்தம்
ஆராய வேண்டிய சம்பந்தம்
செர்பியாவின் உலைக்கழிவு
நாகசாகியில் உயிர்க்கழிவு
போபாலில் நடந்த நிகழ்வு
போதுமடா நம்ம இழவு


அழிவைத் தருவது அணுஉலை
பொழிவைத் தருவது அன்புஉலை

அணுஎன்பது ஆக்க சக்தியா?
அண்டத்தை அழித்திட புதிய யுக்தியா?


கவிதையின் ஒரு சில வரிகளிலேயே கவிஞரின் உள்ளத்தை நீங்கள் அடையாளம் கண்டுவிட முடியும். உலக வல்லரசுகளின் ஆதிக்கச் சக்திகளுக்குத் துணைபோவோர் மட்டுமல்லாமல் அப்பாவியான பொதுமக்களும் கூட இந்த ஒப்பந்தம் ஏதோ இந்தியாவை ஈடேற்ற வந்த அற்புத ஒப்பந்தம் என்று பிதற்றிக் கொண்டிருந்த காலத்தில் கவிஞர் அணுசக்தி ஒப்பந்தத்தின் ஆபத்தையும் அதன்பின்னால் மறைந்திருக்கும் சர்வதேசக் கூட்டுச் சதியையும் அம்பலப்படுத்தும் விதத்தில் எழுதியுள்ள கவிதை அவரின் மனிதநேயத்தை மட்டும் படம் படிக்கவில்லை, மாறாக உலக அரசியல் குறித்த அவரின் தீர்க்கமான பார்வையையும் வெளிப்படுத்துகின்றது.

இனி, போலிச் சாமியார்கள் குறித்த கவிதை ஒன்று,

கருவறையில் காமலீலை
கடவுளர்கள் அங்குஇல்லை
சல்லாப சாமிகளின்
உல்லாச உலகமடா
கல்லாகிப் போனாலும்
கடவுள்கள் பாவமடா!


கவிஞர், இறை நம்பிக்கையாளர் என்றாலும் கடவுளின் பேரால் நடக்கும் கயமைகளையும் பக்தியின் பேரால் நடக்கும் பகட்டுகளையும் அம்பலப் படுத்துவதில் கவிஞர் தமக்குரிய சமூகக் கடமையைச் சரியாகவே செயல்படுத்துகின்றார்.

இப்படி, தொட்ட இடத்திலெல்லாம் கவிஞர் வேள்பாரியின் சமூக அக்கறையும் ஆழ்ந்த மனிதநேயமும் வெளிப்படுவது இத்தொகுதியின் தனிச் சிறப்பு. இந்தியத் தாயகத்திலிருந்து வாழ்தல் வேண்டி சிங்கப்பூர் சென்று பணியாற்றிவரும் கவிஞர் வேள்பாரி தம் அயராத உழைப்பு நெருக்கடிகளுக்கு இடையிலும் இப்படிக் கவிதைப் பணி ஆற்றுகிறார் என்பதுதான் நாம் சிறப்பாக கவனத்தில் கொள்ளவேண்டியது. அவரின் தமிழ்ப்பணியும் சமூகப் பணியும் இடையீடின்றி நடைபெற வேண்டும் என்பதே நம் அவா! தொடர்ந்து நல்ல பல நூல்களைத் தமிழுலகிற்குத் தந்து தமிழுக்கு அணி சேர்ப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. வாழ்த்துக்களுடன்!

முனைவர் நா.இளங்கோ



"ஊடகங்களின் ஊடாக" -நூல் முன்னுரையின் ஒரு பகுதி


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8


ஊடகங்கள் அதாவது செய்தித்தாள்கள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் முதலான தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாமல் இன்றைய மனித வாழ்க்கை இல்லை. தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்ப்பது கூட இயலாததாகி விட்டது. நாம் இப்போது தொடர்புச் சாதனங்களால் ஆன உலகத்தில் வாழ்கிறோம்.

ஊடகங்கள் நமக்குச் செய்தி மற்றும் தகவல்களைத் தருகின்றன. பொழுது போக்க உதவுகின்றன. அவை அத்தோடு நிறுத்திக் கொள்வதில்லை. நம் வாழ்க்கையை, நம் சிந்தனையை, நம் தேவைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்குகின்றன. உலகை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பனவற்றையும் அவை சொல்கின்றன. உலக நிகழ்வுகளில் எவை எவை முக்கியத்துவம் உடையவை, எவை எவை முக்கியத்துவம் அற்றவை என்பனவற்றை எல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் விளங்குகின்றன. நாம் எதைப்பற்றிப் பேச வேண்டும், எதை விட்டுவிட வேண்டும் என்பனவற்றையும் ஊடகங்களே முடிவுசெய்கின்றன.

செய்தி மற்றும் தகவல்களை ஊடக நுகர்வோருக்கு வழங்கிச் சேவை செய்வது தகவல் தொடர்புச் சாதனங்களின் பணி என்பதெல்லாம் பழங்கதை. இன்றைய உலகில் ஊடகங்கள் வழங்கும் செய்திகள் ஒரு தகவல் மட்டுமல்ல. அவை ஓர் உற்பத்திப்பொருள். முதலாளித்துவ உற்பத்திப் பண்டம். அதனை உற்பத்தி செய்யும் பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படப் பணியாளர்களாகிய ஊடகவியலாளர்கள் அனைவரும் பண்ட உற்பத்தித் தொழிலாளர்கள்.

ஊடக முதலாளிகள் உற்பத்தி செய்துதரச் சொல்லும் தகவல்களைச் செய்தி என்ற பெயரில் அவர்கள் செய்து தருகிறார்கள். நுகர்வோராகிய நமக்கு எது தேவை என்று தெரிந்து ஊடகங்கள் தகவல்களை உற்பத்தி செய்வதில்லை. நமக்கு எதைத் தரவேண்டும் அல்லது நம்மிடம் எதை விற்க வேண்டும் என்பதையும் இன்றைய ஊடக முதலாளிகளே முடிவு செய்கிறார்கள். பழகப் பழக அதுவே நமது தேவையாகவும் மாறிப்போகிறது. இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது தகவல்கள் உருவாக்கப் படுகின்றன என்பதுதான்.

தொடக்கக் காலங்களில் ஊடகங்களின் பணி சமூகம், சமயம், தேசம் சார்ந்த ஒரு சேவையாக, ஒருவகைப் போராட்ட ஆயுதமாகத்தான் இருந்தது. அறிவித்தலையும், அறிவுறுத்தலையும் மகிழ்வூட்டலையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த ஊடகங்கள் இன்றைக்கு வணிகம் செய்தல், பொருளீட்டல் என்பதனையே முதன்மை நோக்கமாகக் கொள்ளத் தொடங்கிவிட்டன. ஆக, இன்றைய ஊடகஉலகில் செய்தி என்பது வெறும் தகவல் இல்லை, அது ஒரு உற்பத்திப் பொருள். ஊடகங்களின் தகவல் வழங்கல் வெறும் சேவை மட்டுமல்ல அது ஒரு உலகமய வணிகம். இந்த மாற்றத்தைச் சராசரி வாசகர்களும் பார்வையாளர்களும் உணர்ந்து கொள்ளாத வகையில் நடைமுறைப் படுத்துவதில்தான் ஊடகங்களின் நுண்அரசியல் செயல்படுகின்றது.

அப்பாவி ஊடக நுகர்வோரைப் பொறுத்த வரையில் தகவல் தொடர்புச் சாதனங்கள் உண்மை விளம்பிகள். அவை உண்மையைத் தவிர வேறொன்றையும் பேசுவதில்லை. இன்றைக்கும் பலர் தகவல் தொடர்புச் சாதனங்களில் இடம்பெறும் தகவல்கள் அனைத்தும் உண்மையே என்று நம்புகின்றனர். இன்னும் ஒரு சிலர் தனியார் ஊடகங்கள் வேண்டுமானால் பொய் சொல்லலாம், உண்மையைத் திரித்து வெளியிடலாம் ஆனால், அரசு ஊடகங்கள் அப்படியில்லை, அவை நூற்றுக்கு நூறு உண்மைகளைத்தான் எழுதும், பேசும், காண்பிக்கும் என்று பிடிவாதமாக நம்புகின்றனர். ஆனால் உண்மை அவர்கள் நம்பிக்கைக்கு நேர்மாறானது. ஊடகங்களின் அதிகார அரசியலின் வெற்றி இது. ஊடகங்களின் அதிகார அரசியலை விளங்கிக் கொள்வது இன்றைக்கு மிகமிக அவசியமானது. ஊடக நுகர்வோர் மட்டுமல்ல கல்வி, தொழில் சார்ந்து ஊடகங்களைப் பயில்வோருக்கும் ஊடகங்களின் அதிகார அரசியல் குறித்த விழிப்புணர்வு தேவை.
II
ஊடகவியலுக்கும் எனக்குமான தொடர்பு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலானது. கடந்த எண்பதுகளில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் தொடங்கிய மக்கள் தொடர்பியல் படிப்பில் சேர்ந்து கற்றது தொடங்கி, புதுவைப் பல்கலைக் கழக இளங்கலை, முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கு ஊடகவியலைப் பயிற்றுவிக்கும் நோக்கில் பலமுறை பாடத்திட்டங்களை வடிவமைத்தது, தொடர்ந்து தமிழ் மாணவர்களுக்கு அதனைப் பயிற்றுவித்து வருவது என இருபத்தைந்து ஆண்டுகாலத் தொடர்பு. கல்விப் புலத்தில் மட்டுமல்லாமல் இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் எனத் தொடர்ந்து ஊடகத் துறையோடு இயங்கியும், இயக்கியும் வரும் அனுபவமும் எனக்குண்டு. புத்தகங்களில் கற்பதினும் மேலாக வகுப்பறைச் சூழலும் மாணவர்களும் எனக்கு நிறைய போதிப்பதுண்டு. கற்பதும் கற்பிப்பதும், கற்பித்துக் கற்பதும் தானே ஆசிரியப் பணி. அந்தவகையில் நிறைய கற்றிருக்கிறேன், கற்பித்திருக்கிறேன். அந்த அனுபவங்களின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் ஊடகங்களின் ஊடாக என்ற இந்நூல்.

ஊடகவியல், இதழியல் குறித்துத் தமிழில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிறைய நூல்கள் வந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் பல்கலைக் கழகப் பாடத்திட்டங்களை ஒட்டி, தேவைக்காக உருவாக்கப்பட்டவை. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமாக எழுதப்பட்டவை. ஊடகங்கள் குறித்த புரிதலை மையப்படுத்தித் தமிழில் மிகச் சில நூல்களே வெளிவந்துள்ளன. அவற்றுள் சுரேஷ்பால் அவர்களின் மீடியா உலகம் (1999), கண்ணன் அவர்களின் பிறக்கும் ஒரு புதுஅழகு (2007) இரண்டும் குறிப்பிடத்தக்க நூல்கள். இந்நூலின் ஆக்கத்தில் அவற்றுக்கும் பங்குண்டு.

ஊடகங்களின் ஊடாக என்னும் இந்நூலில் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதல் கட்டுரை ஊடகங்களின் கதையாடல் குறித்தது. இரண்டாவது கட்டுரை திரைப்படங்களில் இடம்பெறும் காலக்குறியீடுகள் குறித்தது. மூன்றாவது கட்டுரை தமிழ்த் திரைப்படத் துறையின் முதல் பெண்மணி டி.பி.ராஜலட்சுமியின் நாவல் மற்றும் திரைப்படம் குறித்தது. நான்காவது கட்டுரை விளம்பரங்களின் நுண்அரசியல் குறித்தது. ஐந்து மற்றும் ஆறாம் கட்டுரைகள் இணைய வலைப்பதிவுகளின் அதிகார உடைப்பு குறித்தது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் விமர்சனங்களுக்கு இடமளிக்கக் கூடியன. ஊடகங்களுக்கு இருக்கும் வரவேற்பு, இது போன்ற ஊடகவியல் சார்ந்த ஆய்வு நூல்களுக்கும் இருக்க வேண்டும். ஊடகங்கள் நம் எதிரிகள் இல்லை. அதேசமயத்தில் அவை நண்பர்களும் இல்லை.

நான் கற்ற தமிழ்க்கல்வி என்னை ஒரு இலக்கியவாதியாக மட்டுமே வளர்த்தெடுத்தது. புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றமும் அதன் தோழர்களும்தான் என் இலக்கியப் பயணத்திற்கான இலக்கினை அடையாளம் காட்டியவர்கள். இலக்கியப் பேராசான் ஜீவா அவர்களின் வழியில், ‘கலையும் இலக்கியமும் மக்களுக்கே’ என்ற தெளிவோடு சமுதாயப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆற்றுப்படுத்திய அமைப்பு அதுவே. அதற்கு நன்றி கூறும் வகையில் புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றத்துக்கு, ஊடகங்களின் ஊடாக என்னும் இந்நூலை அன்புக் காணிக்கையாகப் படைத்துள்ளேன்.

தமிழ்கூறு நல்லுலகம் நல்ல நூல்களைப் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கையுடன்,

நன்றி!
முனைவர் நா.இளங்கோ

புதுவைத் தமிழ்நெஞ்சனின் "தோழர் வ.சுப்பையா" நூல் அணிந்துரை

முனைவர் நா. இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தோழர் வ.சுப்பையா அவர்கள் புதுச்சேரி விடுதலைப் போராட்டத் தளபதி. புதுச்சேரி மண்ணின் விடுதலைக்காகவே தம் உடல், பொருள், உழைப்பு, சிந்தனை முழுவதையும் அர்ப்பணித்தவர். இந்தியாவின் விடுதலை வரலாற்றிலும் புதுவையின் விடுதலை வரலாற்றிலும் இரண்டறக் கலந்து நிற்கும் இணையற்ற வீரர். ஆங்கில ஏகாதிபத்யம், பிரஞ்சு ஏகாதிபத்யம் என்ற இரண்டு ஏகாதிபத்யங்களை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட ஒரே விடுதலை வீரர் என்ற பெருமைக்குரியவர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்க்கையில் மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வி.வி.கிரி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தந்தைப் பெரியார், சத்தியமூர்த்தி, டாக்டர் இராதாக் கிருஷ்ணன், வினோபாஜி, பெருந்தலைவர் காமராசர், திரு.வி.க., மற்றும் பல தேசிய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு நாட்டுப்பணியும் சமுதாயப் பணியும் ஆற்றியுள்ளார்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் பன்முகப்பட்ட பணிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், குறிப்பாக புதுவையின் விடுதலைப் போருக்கு வித்திட்டு வளர்த்து விடுதலையை முழுமைப்படுத்திப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த தேசபக்த விடுதலை மறவர். 1934 ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் என்ற பத்திரிக்கையை உருவாக்கித் தொடர்ந்து நடத்தி முற்போக்கு இதழ்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்ந்த சிறந்த பத்திரிக்கையாளர்.

அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் என்ற தேசிய அமைப்பின் திறமை மிக்க தலைவர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சமூகம், பொருளாதாரம், அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் எழுத்தாற்றலும் நாவன்மையும் ஒருங்கே கொண்ட சிந்தனையாளர். அரசியலில் பல பெரும் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நிர்வாகம் செய்த ஆற்றல் மிக்க நிர்வாகி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களால் மதித்துப் போற்றப்படும் மக்கள் தலைவர்.
II
தோழர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழாக்(1911-2011) காலமிது. பொதுவாகத் தலைவர்களின், மிகச்சிறந்த சாதனையாளர்களின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படுவதில் ஒரு சிக்கல் உண்டு. அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் ஒருமுறை குழி தோண்டிப் புதைக்கப்படுவார்கள். இந்தமுறை இன்னும் கொஞ்சம் ஆழமாகவே அவர்களின் புதைகுழி அமைந்துவிடும். அதாவது நூற்றாண்டு விழாக்கள் அவர்களின் இரண்டாவது மரணமாக அமைந்துவிடும் ஆபத்து தவிர்க்க இயலாமல் நேர்ந்து விடுவதுண்டு. இவ்விபத்து எல்லா நூற்றாண்டு விழா நாயகர்களுக்கும் ஏற்படுவதில்லை. சராசரித் தலைவர்களுக்கும் சராசரிப் படைப்பாளிகளுக்கும்தான் இப்படி நேர்ந்துவிடும் ஆபத்துண்டு.

ஆனால் வாழும் காலத்திலேயே வரலாறாக வாழ்ந்து காலத்தினால் அழிக்கமுடியாத புதிய வரலாற்றைப் படைத்தளிக்கும் மகத்தான தலைவர்களுக்கு இவ்விதி பொருந்துவதில்லை. அவர்களின் நூற்றாண்டு விழாக்கள் அவர்களை மீண்டும் இந்த உலகிற்குப் பெற்றுத் தருகின்றன. மகத்தான தலைவர்கள், நூற்றாண்டு விழாக்களின் போது மீண்டும் பிறக்கிறார்கள். இந்தமுறை அவர்களின் பிறப்பு முதல் பிறப்பைவிட அதிக முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துவிடுகின்றது. வாழும் காலத்தில் சாதித்ததைவிடப் பல மடங்குச் சாதனைகளை அவர்கள் இந்த இரண்டாம் பிறப்பிலே சாதிப்பார்கள். அண்ணல் காந்தி, அண்ணல் அம்பேத்கர், தந்தைப் பெரியார், மகாகவி பாரதி முதலான சரித்திர நாயகர்களின் நூற்றாண்டு விழாக்கள் என்னுடைய கூற்றுக்குச் சான்று பகரும். மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழாவும் இத்தகு சரித்திர நாயகர்களின் நூற்றாண்டு விழாக்களைப் போல மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

எந்த ஒரு மண்ணுக்கும் நேராத, நேரக்கூடாத அவலம் புதுச்சேரிக்கு நேர்ந்து விட்டமை ஒரு வரலாற்றுக் கொடுமை. புதுச்சேரியின் விடுதலைநாள் எது? என்பதை அறியாத மக்கள், தெரிந்தும் தெரியாததுபோல் காட்டிக்கோள்ளும் அரசுகள் இதெல்லாம் புதுச்சேரிக்கு மட்டுமே கிடைத்த சாபக்கேடு. 1954 நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரியின் விடுதலைநாள். இது வரலாற்று உண்மை. ஆனால் புதுச்சேரி அரசும் மக்களும் கொண்டாடும் நாளோ! ஆகஸ்டு 16. இந்த வரலாற்றுப் பிழையின் பின்னால் ஒளிந்துகிடக்கும் நாடகங்கள் எத்தனை எத்தனையோ! தோழர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழாக்களின் பின்விளைவாக இந்தக் கபட நாடகங்கள் முடிவுக்கு வரவேண்டும்! வரும்! ஆதனைச் செய்து முடிப்பதில்தான் நூற்றாண்டு விழாக்களின் முழுமையே அடங்கியுள்ளது.

III
புதுவைத் தமிழ்நெஞ்சன் புதுச்சேரியின் ஆற்றல் மிக்க இளைஞர். பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டவர். அன்பும் தோழமையும் கொண்டு அனைவரிடமும் பழகும் பண்பாளர். கவிதை, உரைநடை இரண்டு வடிவங்களையும் அழுத்தமாகக் கையாளக் கூடியவர். எழுத்து, பேச்சு என்பதோடு நின்றுவிடாமல் செயலிலும் முற்போக்காளர். பேராட்ட குணம் அவரின் அடிப்படைப் பண்பு. எதையும் வெளிப்படப் பேசி விமர்சிக்கக் கூடிய துணிச்சல் மிக்கவர். அதனால் வரும் பகைமையைக் கண்டு அஞ்சாதவர். இனவுணர்வாளர். மொழி, இன, நிலக் காப்புப் போராட்டங்களில் முன்வரிசையில் நிற்பவர்.

தோழர் புதுவைத் தமிழ்நெஞ்சன் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதத்தில் உருவாக்கியுள்ள ஓர் உயரிய படைப்பே தோழர் வ.சுப்பையா என்ற இக்கவிதை நூல். அடிப்படையில் மக்கள் தலைவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் பதிவாக உருவாகியுள்ள இக்கவிதை நூலில் பொதுவுடைமை மற்றும் செங்கொடிகளின் மேன்மையும் தோழர் கருணாசோதியின் பெருமைகளும் இடையிடையே பேசப்படுகின்றன.

மக்கள் தலைவரின் வாழ்க்கையைப் பேசும் நூலின் இடையிடையே அவரோடு தொடர்புடைய இயக்கம் மற்றும் இயக்கத் தோழர்கள் குறித்துப் பேசுவது நூலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகின்றது. தோழர் வ.சுப்பையாவின் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வாழ்க்கையில் உடன் பணியாற்றும் வாய்ப்பு பெற்ற நூலாசிரியரின் தந்தை சீனுவாசனார் குறித்த வரலாற்றுப் பதிவுகளையும் நூலாசிரியர் தமிழ்நெஞ்சனுக்கும் மக்கள் தலைவருக்குமான சந்திப்புகள் குறித்த பதிவுகளையும் ஆசிரியர் நூலில் இடம்பெறச் செய்திருப்பது காலத்தின் தேவையறிந்த நல்லபணி.

சீனுவாசன் திருமணமே
சீர்திருத்த முதல்மணமாம் சண்முகாபுரத்தில்
சீனுவாசன் சுப்பையாவின்
சிந்தனைக்கு ஏற்றமுள்ள உண்மைத் தோழர்
பாவேந்தர் வந்திருந்து
பாராட்டிச் சென்றுவிட்டார் ஊரில் உள்ளோர்
நாவேந்தித் திருமணத்தை
நல்லபடி பேசுகின்றார்.. .. புரட்சியாக
சாவேந்தா சுப்பையா
சரியாக வந்திருந்து வாழ்த்திச் சென்றார்.


தம் தந்தையாரின் திருமணம் அந்த நாளிலேயே சீர்திருத்தத் திருமணமாக நடைபெற்றதையும் மக்கள் தலைவர், பாவேந்தர் முதலானவர்கள் வந்திருந்து வாழ்த்துக் கூறியமையும் மிக அழகாகப் பதிவுசெய்கிறார் நூலாசிரியர்.

மார்க்சியமே வாழும் வழி, பொதுவுடைமை, செங்கொடி ஏந்தடா! முதலான தலைப்புகளில் மார்க்சியம் குறித்தும், பொதுவுடைமை இயக்கம் குறித்தும், செங்கொடியின் பெருமை குறித்தும் நூலில் விரிவாகப் பேசும் தமிழ்நெஞ்சன் இந்திய இடதுசாரி இயக்கங்கள் குறித்த தமது விமர்சனப் பார்வையையும் நூலில் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றார்.

பொதுவுரிமை இல்லாமல்
பொதுவுடைமை அமையாது
இதுவரையில் மார்க்சியர்கள்
இதையறிதல் கிடையாது
சாதிக்குக் காப்பளிக்கும்
சட்டத்தை மீறாமல்
சமவுரிமை வந்திடுமா?
சமவுடைமை அமைந்திடுமா?
ஒப்போலை வழியாக
ஒழியாது சாதிமதம்
இப்போதே புரட்சியினைச்
செய்யாமல் விடிவேது


வருணாசிரம வல்லடி மிக்க இந்தியச் சமூக அவல நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாமல் இங்கே மார்க்சியம் பேசப்படுவதில் தமக்கு உடன்பாடில்லை என்பதனையும் பாராளுமன்ற சனநாயக வழியில் சமவுடைமை சாத்தியமில்லை, புரட்சி ஒன்றே வழி என்பதனையும் நூலாசிரியர் தெளிவுபடுத்தியிருப்பது அவரின் அரசியல் தெளிவை வெளிப்படுத்துகின்றது.

மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் போர்ப்படையின் இளைய தளபதியாக வீறுடன் செயல்பட்டுப் புதுச்சேரியின் விடிவெள்ளி என்ற நம்பிக்கையூட்டிய தோழர் கருணாசோதி குறித்த தமிழ்நெஞ்சனின் கவிதைகள் உண்மையில் நல்ல வரலாற்றுப் பதிவுகள்.

கருணா சோதி ஒளியில் தானே
காரிருள் இங்கே ஓடியது –அவன்
வருகை தந்த வழியில்தானே
இளைஞர் கூட்டம் கூடியது
பொதுமை உலகைப் படைக்க விரும்பி
புரட்சிப் படையை அமைத்திட்டான் - நம்
புதுவை மண்ணில் பூத்த செம்மல்
புரட்சி இளைஞனாய் வாழ்ந்திட்டான்


தோழர் கருணா சோதியின் எதிர்பாரா மறைவு (படுகொலை) புதுச்சேரியின் பொதுவுடைமை இயக்க அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்பதனையும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை.

மக்கள் தலைவரின் வரலாறு இன்றைய இளந்தலைமுறை யினருக்குச் சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் அவரின் போராட்ட வாழ்க்கையின் முக்கியப் பக்கங்களைக் கவிதை வடிவில் வடித்துக்காட்டும் இந்நூல், பலவகை மரபுப் பாவடிவங்களில் அமைந்துள்ளமை இதன் தனிச்சிறப்பு. திட்டமிட்ட வகையில் வாழ்க்கை வரலாறாக இந்நூலினை அமைக்காமல் தலைவரின் வாழ்க்கைப் பதிவுகள் சிதறிக் கிடக்கும் போக்கில் நூல் அமைந்துள்ளதால் போதிய மனநிறைவு கிடைக்கவில்லை என்பது ஒரு குறை என்றாலும் ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் ஒரு முழுமையைப் பெற்றிருப்பதனால் அந்தக் குறையும் பெரிதாகத் தோன்றவில்லை.

மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நூற்றாண்டை ஒட்டித் தமிழிலும் ஆங்கிலம் முதலான பிற மொழிகளிலும் நிறைய நூல்கள் வந்திருக்க வேண்டும். தனித்தன்மை மிக்க அவரின் சுதந்திரப் போராட்ட வாழ்க்கை பரவலாகப் புதுவை மட்டுமின்றி தமிழகத்திற்கும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே சொல்லப்பட்டிருக்க வேண்டும். தேன்னிந்தியாவில் இடதுசாரி இயக்கம் தோன்றவும் பரவவும் தக்க துணையாய் இருந்து களத்தில் நின்று பணியாற்றிச் சொல்லவொண்ணா வேதனை களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு சாதித்துக்காட்டிய ஓர் ஒப்பற்ற தலைவர் தோழர் வ.சுப்பையா அவர்கள். அவரின் பேராட்ட வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. ஏன் தெரியாது? என்றால் சொல்லப்படவில்லை. சொல்ல விரும்பவில்லை.

இந்திய விடுதலையைப் போலவே புதுச்சேரியின் விடுதலையும் ஒரு குறிப்பிட்ட தேசிய இயக்கத்திற்குத்தான் சொந்தமானது என்று புனையப்பட்ட புனைவுகளையே உண்மையென்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் நாம். ஆனால் வரலாற்றின் பக்கங்கள் பொய்பேசுவதில்லை. தோழர் சுப்பையாவின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பு யாராலும் மறுக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாதது. தோழர் தமிழ்நெஞ்சன் இந்நூலின் வழியாகத் தம் வரலாற்றுக் கடமையைச் செவ்வனே ஆற்றியுள்ளார். புதுச்சேரியின் இடதுசாரி இயக்கம் குறித்த சரியான புரிதல்களோடும் வரலாற்றுணர்வோடும் எழுதப் பட்டிருக்கும் இக் கவிதைநூல் உரிய காலத்தில் வெளிவருகின்றது. தமிழுலகம் இதனை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை.






புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...