செவ்வாய், 1 ஜூன், 2010

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் - பகுதி 4

புதுமைப் பித்தனும் அகலிகைத் தொன்மமும்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுமைப் பித்தன் சிறுகதைகளில் அகலிகைத் தொன்மம்:

புதுமைப்பித்தன் இவற்றில் அகலிகைத் தமிழ்த் தொன்ம மரபையே தம் படைப்புகளில் பயன்படுத்துகின்றார். முதல்கதை அகல்யை 1934-இல் எழுதப்பட்டது. இரண்டாம் கதை சாபவிமோசனம் 1943-இல் எழுதப்பட்டது. இரண்டு கதைகளும் படைப்புத் தளத்தில் வேறு வேறு கோணங்களில் படைக்கப்பட்டுள்ளன.

முதல்கதை அகல்யாவில் வரும் பாத்திரங்களான அகலிகை, கௌதமர், இந்திரன் என்ற பெயர்கள்தாம் தொன்மப்பெயர்கள், சம்பவங்கள் எல்லாம் இயற்கையானவை. இயற்கை இகந்த புனைவுகளே கதையில் இல்லை. இந்திரன் கோழிபோல் கூவுகிறான், கோழியாக வடிவெடுத்து வரவில்லை. இந்திரன் பூனைபோல் மெதுவாக வருகிறான், பூனையாகவில்லை. இந்திரன் இந்திரனாகவே அகலிகையைக் கூடுகிறான், கௌதமன் வேடத்தில் வரவில்லை. அகலிகை கல்லாகவில்லை, இந்திரன் சாபம் பெறவில்லை, இந்திரனை கௌதமர் மன்னித்துவிடுகிறார். கதை முழுமையும் நடப்பியலோடு இணைந்துசெல்கிறது. கௌதமர்தான் இலட்சியக் கதாபாத்திரமாகிறார். ‘மனத் தூய்மையில்தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்.’ (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 135) கௌதமரின் இந்தக் கேள்வி கற்பொழுக்கம் பற்றிய புதிய விளக்கத்தை வாசகனுக்குத் தருகிறது.

கௌதமரின் இந்த வாசகத்தை இருபதாம் நூற்றாண்டின் கற்புக் கோட்பாடு எனலாம். மனத் தூய்மைதான் கற்பு, உடல் களங்கம் கற்புக்கேடு ஆகாது என்ற இக்கூற்றைக் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கலாம். உடல் களங்கம் என்பதில் வரும் களங்கம் என்றசொல் கற்பு பற்றிய பழைய தொன்மங்களை அப்படியே போற்றிப் பாதுகாக்கின்றமையை உணரமுடியும். தூய்மை, களங்கம் என்ற இரண்டு சொற்களும் பெண்உடல் குறித்த ஆண்மைய வாதங்களையே இங்கு முன்வைக்கின்றது.

இரண்டாவது கதை சாப விமோசனம். அகலிகை, இராமனால் சாப விமோசனம் பெற்றபின் வாழ்ந்ததாகப் புதுமைப்பித்தனால் கற்பனை செய்யப்பட்ட வாழ்க்கையைப் பேசுகிறது இக்கதை. இதிகாசக் கதையாகவே, இதிகாசக் கதையின் நீட்சியாகவே இதனைப் படைக்கிறார் புதுமைப் பித்தன். சாப விமோசனம் புதுமைப்பித்தன் படைப்புகளில் தனிச்சிறப்புடையது, தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பேசப்படுவது. கதையைத் தொடங்குமுன்னே ‘ராமாயண பரிச்சய முள்ளவர்களுக்கு இந்தக்கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.’ ஆசிரியரின் இத்தனிக்கூற்று முன்னுரையாக இடம்பெற்றுள்ளது. அகலிகை இராமனால் சாப விமோசனம் பெறுவதில் கதை தொடங்குகிறது. இராமன் கால்துகள் பட்டுச் சிலை பெண்ணாகிறது. ‘நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக் கொள்வதுதான் பொருந்தும்’ (மேற். நூ. ப.529) என்கிறார் விசுவாமித்திரர் கோதமனிடம். கோதமன் அகலிகை வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது. அகலிகை மனதால் களங்கமற்றவள் என்பதை கோதமர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ஊர் உலகம் அவளைத் தூற்றுகிறது. ‘சாப விமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கிடையாதா? ‘ (மேற். நூ. ப.535) இராமாயணக் கதை நெடுகிலும் அகலிகைக் கதை தொடர்கிறது. சீதை சிறை மீட்புக்குப் பின் சீதையும் இராமனும் ஒருநாள் அகலியைக் காண வருகின்றனர்.

அகலிகை சீதை இவர்களின் தனித்த உரையாடலில் இலங்கையில் நடந்த சம்பவங்களைச் சீதை சொல்லிக்கொண்டிருந்தாள். சாப விமோசனம் கதையின் உச்சம் இப்பகுதி,அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்துவிட்டாள்.அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய் என்று கேட்டாள்.அவர் கேட்டார், நான் செய்தேன் என்றாள் சீதை அமைதியாக.அவன் கேட்டானா? என்று கத்தினாள் அகலிகை, அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர்.உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா? என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது. நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா, உள்ளத்தைத் தொடவில்லை யானால்? நிற்கட்டும், உலகம் எது? என்றாள் அகலிகை. (மேற். நூ. ப.539) மனதால் களங்கமற்று இருந்தாலே போதும் என்று அகலிகைக்கு பேசப்பட்ட அறம், சீதை விசயத்தில் உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்றாகிறதே, ஏன்? அகலிகைக்கு ஒரு நீதி அவனுக்கு ஒரு நீதியா? ஊருக்கு உபதேசம் செய்துவிட்டுத் தன் மனைவி என்கிற போது நியாயம் ஏன் மாறுகிறது? எது மாற்றுகிறது? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? என்று கொதிக்கும் அகலிகை மீண்டும் கல்லாகிறாள்.

புதுமைப்பித்தனின் இந்தச் சாப விமோசனம் கதை ஆழ்ந்து படிப்போர்க்கு இரண்டு சிக்கல்களை எழுப்பியிருப்பதாக க. கைலாசபதி கருதுகிறார்.

1. நெருக்கடி ஏற்படும் பொழுது கணவன் மனைவி உறவுப் பிரச்சனை எப்படித் தோன்றுகிறது, அதாவது மனித உறவுகள் பற்றிய சிக்கல்.

2. ஒழுக்கம், அறம் என்பவைக்கும் வாழ்க்கைக்கும் எவ்வாறு முரண்பாடு தோன்றுகிறது, அதாவது அறவியல் - பெற்றுள்ள வலிமை பற்றிய சிக்கல் (க.கைலாசபதி, அடியும் முடியும், ப.156)

மனித உறவுகள் பற்றிய சிக்கலையும், அறவியலின் வலிமை பற்றிய சிக்கலையும் பேசும் சாப விமோசனம் இச்சிக்கல்களுக்கு வெளிப்படையாக விடைகூறவில்லை என்பார் கைலாசபதி. அகலிகைத் தொன்மத்தை மறுபடைப்பாக்கம் செய்த பலரும் உளவியல் நோக்கிலேயே இத்தொன்மத்தை அணுகியுள்ளார்கள். புதுமைப்பித்தனும் சாப விமோசனம் பெற்ற பின்னர் அகலிகை, கோதமன் இருவரின் மனதிலும் இழையோடும் குற்ற உணர்ச்சி பற்றிப் பலபடப் பேசுகிறார். அகலிகைக்கு அச்ச உணர்ச்சியே மேலோங்கி நின்றது. இயல்பான பேச்சு இல்லை, மற்றவர் பேச்சையும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அகலிகைக்கு பயம் நெஞ்சில் உறையேறிவிட்டது. ஆயிரம் தடவை மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாடம் பண்ணிக்கொண்டு, அந்த வார்த்தை சரிதானா என்பதை நாலு கொணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் எதையும் சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளுக்குக் கூட உள்ளர்த்தம் உண்டோ என்று பதைப்பாள். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 531)கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் களங்கமின்றிப் பேச நாவெழவில்லை. அவளை அன்று விலைமகள் என்று சுட்டது, தன்நாக்கையே பொசுக்க வைத்துவிட்டது போல இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது? … இருவரும் இருவிதமான மனக்கோட்டைக்குள் இருந்து தவித்தார்கள். கோதமனுக்குத் தான் ஏற்றவளா? என்பதே அகலிகையின் கவலைஅகலிகைக்கு தான் ஏற்றவனா என்பதே கோதமனின் கவலை (மேற். நூ. ப.530)சேர்ந்து வாழ்ந்தாலும் இருவரும் இரண்டு விதமான மனக்கோட்டைகளுக்குள் வாழ நேர்ந்ததால் ஏற்படும் உளவியல் சிக்கல்களே சாப விமோசனம் கதையின் முதல்பாதி.

சாப விமோசனம் கதையின் இரண்டாம் பாதி, இராமன் கதை என்ற ஒற்றைத் தொன்மத்திற்குள் இயங்கும் சீதை, அகலிகை என்ற இரட்டைத் தொன்மங்களைக் குறித்தது. அதாவது சீதைத் தீக்குளிப்பு ஒரு தொன்மம், இத்தொன்மம் கற்பு- நெருப்பு- உலகம் என்பதோடு தொடர்புடையது. அகலிகை கல்லுயிர் பெறல் மற்றுமொரு தொன்மம், இத்தொன்மம் கற்பு- உடல்-மனம் என்பவற்றோடு தொடர்புடையது. இந்த இரண்டு தொன்மங்களையும் இணைக்கும் தொன்மம் இராமன் குறித்த தொன்மம். சீதை, அகலிகை என்ற இரண்டு தொன்மங்களுக்குள் இயங்கும் செயல்பாடுகள் ஒரே வாய்பாட்டில் இயங்குகின்றன. ஒத்த வாய்பாட்டில் இயங்கும் இக்கதைகளில் மாறுபடும் மதிப்பீடுகள் குறித்த விசாரணையே புதுமைப்பித்தனின் சாப விமோசனம் முன்வைக்கும் சிக்கல். இச்சிக்கல் அகலிகை வழியாக எழுப்பப்படுகிறது. தொன்மத்தில் இது அகலிகையின் குரலாக ஒலித்தாலும், வரலாறு நெடுகிலும் பெண்களின் ஒற்றைக் குரலாகவே எதிரொலிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...