தமிழாய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழாய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 அக்டோபர், 2009

தமிழ் ஆய்வா? தமிழியல் ஆய்வா?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தமிழ் ஆய்வுப்புலம் இன்றைக்குத் தமிழ் இலக்கியம் தமிழ் மொழி என்பனவற்றை எல்லாம் கடந்து தமிழியல் ஆய்வுப்புலமாகப் பேருரு எடுக்கத் தொடங்கிவிட்டது. தமிழியல் என்பது தமிழ் இலக்கிய இலக்கண இயல் என்பதானதன்று. அது தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ்- தமிழர் வரலாறு, தமிழர் கலை, தமிழர் அறிவியல் போன்ற பல துறைகளையும் உள்ளடக்கியது. அண்மைக் காலங்களில் தமிழர் கல்விப் புலங்களில் தமிழியல் என்ற சொல்லாடல் பெருகிவிட்டது.

தொடக்கக் காலங்களில் தமிழியல் என்பது மேற்கத்திய இன மொழி ஆய்வுத்துறையின் ஒரு பகுதியாகத்தான் தோற்றம் பெற்றது. மேற்கத்திய ஆய்வாளர்களின் கீழ்த்திசை ஆய்வு மற்றும் இந்தியவியல் ஆய்வுகளின் பின்புலத்திலேயே தமிழியல் ஆய்வுகள் வளரத் தொடங்கின. அந்த வகையில் காலனித்துவம் சார்ந்த கல்வி மற்றும் ஆய்வாகவே தமிழியல் இருந்துவந்தது.

மேற்கத்திய ஆய்வாளர்களின் இத்தகு தமிழியல் ஆய்வுகளில் தமிழ், தமிழர் முதலான உள்ளடக்கங்கள் பெரிதும் கீழ்நோக்கிய பார்வையிலேயே பதிவுசெய்யப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் தமிழ்ப் பண்டிதர்களிடமிருந்து தமிழாய்வு மெல்ல மெல்லத் தமிழ்க் கல்வியாளர்களிடம் இடம் பெயர்ந்தபோது மேற்கத்திய தமிழியல் ஆய்வுகளே நம்மவர்களுக்குப் பெரிதும் முன்னுதாரண ஆய்வுகளாக அமைந்தன.

தமிழியல் ஆய்வுகளில் அவர்களின் பதிவுகளே நமக்கு வழிகாட்டக் கூடியனவாக அமைந்தன. தமிழ், தமிழர் குறித்த தங்கள் அடையாளங்களை அவ்வகை ஆய்வுகளிலேயே நம்மவர்கள் கண்டெடுத்தார்கள். பெரும்பாலான தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் அமைந்து விடுவதும் இக்காரணம் பற்றியே.

இன்றைக்குத் தமிழ் ஆய்வாளர்களுக்குத் தமிழியல் குறித்த பார்வையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலனித்துவ ஆதிக்க மனோபாவத்திலிருந்து விடுபட்டு புதிய தமிழியலை நாம் கட்டமைத்துள்ளோம். நமக்கான வரலாற்றை, பண்பாட்டை, கலையை, அறிவியலை மீட்டெடுக்கும் புதிய தமிழியல் ஆய்வுகள் பெருகத் தொடங்கியுள்ளன.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

முனைவர் நா.இளங்கோவின் தமிழ் இணர் நூல் முன்னுரையின் ஒரு பகுதி

முனைவர் நா.இளங்கோவின் தமிழ் இணர் நூல் முன்னுரையின் ஒரு பகுதி

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.


முன்னுரையாக…

தமிழர்களின் ஆய்வுத் தேட்டத்தைத் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் இடைக்கால உரையாசிரியர்களின் உரைப்பகுதிகளிலும் பரக்கக் காணலாம். ஷமாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதல் காரணம் நோக்கெனப் படுமே| என்று தொல்காப்பியர் குறிப்பிடும் நோக்கு தமிழரின் ஆய்வு அணுகுமுறையின் ஒரு கூறு. முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணுவதும் பாடலுள் பயின்றவை நாடுவதும் ஒருவகை ஆய்வு அணுகுமுறையே. திருவள்ளுவர் குறிப்பிடும் நவில்தொறும் நூல் நயமும், குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளலும் ஆய்வு அணுகுமுறைகளே. இடைக்கால இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள், அனைவரும் ஆய்வாளர்களே. ஆங்கிலக் கல்வி நம்மிடம் இயல்பாக, மரபாக அமைந்திருந்த ஆய்வு மனப் பான்மையை கூர்மைப்படுத்தியது என்பது உண்மை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் தமிழாய்வு சிறிய அளவில் நிறுவனம் சார்ந்த கல்வியாளர்களாலும் பெரும்பான்மை நிறுவனம் சாராத கல்வியாளர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி பல்கலைக் கழகங்களின் பெருக்கத்தாலும் ஆய்வுப் படிப்புகளின் நெருக்கத்தாலும் தமிழாய்வு பெரிதும் நிறுவனம் சார்ந்த கல்வியாளர்களையே சார்ந்து நிற்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. கல்வியாளர் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டு சிறுபத்திரிக்கை வட்டங்களிலும் சில சுதந்திர ஆய்வாளர்களாலும் தமிழாய்வு குறிப்பிடத்தக்க இலக்கை எட்டியுள்ளமை நிறைவளிக்கக் கூடியதே. கடந்த பத்தாண்டுகளில் கல்விப்புலம் சார்ந்து நடத்தப்பெறும் ஆய்வரங்குகள் பெருகியுள்ளன. ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மட்டுமில்லாமல் பல அரசு, தனியார் கல்லூரிகளும் தமிழ் கலை இலக்கிய அமைப்புகள் பலவும் சிற்றிதழ்கள் சார்ந்தும் இவ்வகை ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. இவ் ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் நூலாக்கம் பெருகின்றன. இன்னும் சிலகாலம் கழித்து இவ்வகை ஆய்வரங்குகளின் ஆய்வுகள் மதிப்பிடப்படும். தமிழாய்வுக்கு உண்மையிலேயே இவ்வகை ஆய்வரங்குகளின் பங்களிப்பு யாது? என்பது சீர்தூக்கிப் பார்க்கப்படும். அல்லன நீக்கி நல்லன பாதுகாக்கப்படும்.

அண்மைக் காலங்களில் தமிழாய்வு மேலை இலக்கியத் திறனாய்வு அணுகுமுறைகள் பலவற்றையும் தம்முள் இணைத்துக் கொண்டுள்ளது. புதிய புதியத் துறைகள் புதிய புதிய அணுகுமுறைகள் தமிழாய்வை மேலும் செழுமைப்படுத்தும் என்பதில் நமக்கு எள் அளவும் ஐயமில்லை. அதே சமயம் தமிழின் மரபார்ந்த ஆய்வு அணுகுமுறைகளையும் நாம் மீட்டெடுத்தல் அவசியம்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...