முனைவர் நா.இளங்கோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முனைவர் நா.இளங்கோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 நவம்பர், 2021

முனைவர் ஆ. விஜயராணியின் சங்க இலக்கியத்தில் கபிலர் - நூல் அணிந்துரை

  

முனைவர் நா.இளங்கோ


குறிஞ்சி மலர்
 

தமிழில் இலக்கியத் திறனாய்வு மற்றும் ஆராய்ச்சிகள் பல்கிப் பெருகுவதற்கு அடிப்படையாகத் தளம் அமைத்துக் கொடுத்தப் பெருமை தமிழின் சுவடிப் பதிப்பாளர்களையே சாரும். அவர்களின் பதிப்புப் பணி முயற்சிகளால் ஏடுகளிலிருந்து அச்சு வடிவம் பெற்ற பழந்தமிழ் இலக்கியங்களே தமிழின் தொடக்க காலத் திறனாய்வுகளுக்கும் ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் மூலமாய் அமைந்தன. தமிழ் நூல்களின் அச்சு வரலாறு தம்பிரான் வணக்கம் (1557) என்னும் நூலிலிருந்து தொடங்குகிறது. ஐரோப்பிய மிஷனரிகளால் தோற்றம் பெற்ற தமிழ் அச்சு மற்றும் பதிப்புப் பணிகள் தமிழகத்தின் தரங்கம்பாடியில் முதன் முதலில் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட 1712ஆம் ஆண்டு தொடங்கிப் பல்கிப் பெருகின.  

1810ஆம் ஆண்டிற்குப் பின்னரே தமிழில் இலக்கிய இலக்கணப் பதிப்பு முயற்சிகள் தொடங்குகின்றன. 1812ஆம் ஆண்டில் திருக்குறள் மூலபாடமும் நாலடியார் மூலபாடமும் வெளியிடப் பெற்றன. இந்நூல்களே தமிழில் அச்சுருவம் பெற்ற முதல் இலக்கிய நூல்களாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தொல்காப்பிய இலக்கண நூல் அச்சாகியது. மழவை மகாலிங்க ஐயர் 1848இல் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார்.. அதற்குப் பின்னர் 1885இல் யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியப் பொருளதிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிட்டார்.

ஏடுகளில் இடம்பெற்றிருந்த தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சு வாகனம் ஏறியபின் தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வசதி பல்வேறு நூலாக்க முயற்சிகளுக்கு வழிவகுத்தது. 1850களில் ஏற்பட்ட பல்கலைக் கழகக் கல்வி (சென்னைப் பல்கலைக்கழகம் தோன்றிய ஆண்டு 1857) மொழி இலக்கியக் கல்வியில் பல புதிய பரிமாணங்களைத் தோற்றுவித்தது.

சங்க இலக்கியங்களுள் முதன்முதலாக அச்சேறிய நூல்  பத்துப்பாட்டு இலக்கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை. ஆண்டு 1851, பதிப்பித்தவர் ஆறுமுகநாவலர். சங்க நூல்களுள் பெரும்பாலானவற்றைப் பதிப்பித்துப் பெரும் புகழ் கொண்ட உ.வே.சா. அவர்கள் பத்துப்பாட்டு முழுவதையும் 1889 ஆம் ஆண்டில் வெளியிட்டார். தொடர்ந்து புறநானூறு (1894), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904), ஆகிய நூல்களையும் பதிப்பித்தார். வா. மகாதேவ முதலியார் (பொருநர் ஆற்றுப்படை 1907), சௌரிப் பெருமாள் அரங்கனார் (குறுந்தொகை 1915), பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் (நற்றிணை 1915), ரா. இராகவையங்கார் (அகநானூறு 1918) ஆகியோர் சங்க இலக்கிய நூல் பதிப்புகளின் முன்னோடிகளாவர். சற்றேறக் குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் நூற்றாண்டில் தொடங்கிய சங்க இலக்கியப் பதிப்புப் பணி இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டில் நிறைவு பெற்றது.

சங்க இலக்கியப் பதிப்பு முயற்சிகளைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களை, சங்ககாலப் புலவர்களை அறிமுகப்படுத்தும் பணிகள் தமிழிலக்கிய உலகில் தொடர்ந்தன. சங்கத் தமிழ்ப் புலவர்களில் இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெரும் புலவர்கள் பலரில் முதன்மையானவர் கபிலர் ஆவார். 1936ஆம் ஆண்டிலேயே வே. வேங்கடராஜூலு ரெட்டியார் கபிலர் என்ற தலைப்பில் கபிலர் வரலாறு, கபிலர் இலக்கியங்கள் குறித்த விரிவான விளக்கங்களுடன் ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து 1939ஆம் ஆண்டில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கபிலர் என்ற அதே தலைப்பில் ஒரு ஆய்வு நூலை வெளிட்டார். கடந்த நூற்றாண்டில் தொடர்ச்சியாகப் பத்துக்கும் மேற்பட்ட நூல்களும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் கபிலர் தொடர்பாக வெளியிடப் பட்டன. கல்விப் புலத்திற்கு வெளியே இத்தகு முயற்சிகள் தொடர்ந்த நிலையில் கல்விப் புலத்தில் முனைவர்ப் பட்ட ஆய்வுக்கு உரிய பொருண்மையாகக் கபிலரைத் தேர்ந்தெடுத்து ஒரு முழுமையான ஆய்வினை வெளியட்ட பெருமை முனைவர் ஆ.விஜயராணி அவர்களையே சாரும். முனைவர் ஆ.விஜயராணி அவர்களின் முனைவர்ப் பட்ட ஆய்வேட்டின் நூலாக்க வடிவமே சங்க இலக்கியத்தில் கபிலர் என்ற இந்த ஆய்வுநூல்.

முனைவர் ஆ.விஜயராணி புதுச்சேரி அரசின் தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் ஆவார். இவர் புதுச்சேரிப் பல்கலைக் கழகத் தமிழியல் துறையில் ”பிரஞ்சிந்திய விடுதலை இயக்கத்தில் காரைக்காலின் பங்கு” என்ற தலைப்பில் இளமுனைவர்ப் பட்ட ஆய்வினையும் ”சங்க காலக் கபிலர்” என்ற தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் முப்பத்திரண்டு இளமுனைவர்ப் பட்ட ஆய்வுகளுக்கும் எட்டு முனைவர்ப் பட்ட ஆய்வுகளுக்கும் நெறியாளராக இருந்து வழிகாட்டியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ள இவர், சிறந்த கவிஞரும் ஆவார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ள பேராசிரியர் விஜயராணி பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதோடு பல கருத்தரங்குகளுக்கு ஒருங்கிணைப் பாளராகத் திறம்பட செயலாற்றியுள்ளார். அவர் முதுகலைத் தமிழ் பயின்ற காலத்தில் அவருக்குப் பயிற்றுவிக்கும் வாய்ப்பு பெற்ற என்னை இன்றளவும் ஆசானாக ஏற்றுப் போற்றிப் புகழ்ந்து வருகிற பண்பாளர் என்ற பெருமை அவருக்குண்டு. ஆளுமை மிகுந்த பேராசிரியராக மட்டுமன்றி கல்லூரின் நிர்வாகப் பணிகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் திறமை அவரின் தனிச்சிறப்பு. பேராசிரியர். ஆ.விஜயராணியின் அரிய ஆய்வுத் தேட்டத்தில் உருவான சங்க இலக்கியத்தில் கபிலர் என்ற இந்த ஆய்வுநூல் அவரின் கல்வி மற்றும் ஆய்வுப் பயணத்தில் ஒரு தனித்த சிறப்பிற்குரிய படைப்பாகும்.

சங்க இலக்கியத்தில் கபிலர் என்ற இந்நூல் முன்னுரை, முடிவுரை தவிர்த்து நான்கு தலைப்புகளில் தமிழிலக்கியப் பெரும்புலவர் சங்க இலக்கியக் கபிலரின் வாழ்க்கை வரலாறு, அவரின் சமகால அரசர்கள், புலவர்களின் வரலாறு, அவரின் இலக்கியப் பணி மற்றும் அவர் கவிதைகளின் நடையியல் கூறுகள் முதலான செய்திகளை விரிவாகப் பேசுகின்றது.

·         தமிழ் இலக்கியங்களில் கபிலர்

·         சங்க காலக் கபிலர்

·         வரலாற்று நோக்கில் கபிலர்

·         நடையியல் ஆய்வில் கபிலர்

என்ற நான்கு தலைப்புகளும் தமிழிலக்கிய ஆய்வுலகில் இதுவரை பேசப்பட்டு விவாதிக்கப் பட்டு வந்துள்ள கபிலர் தொடர்பான அத்துணை சிக்கல்களுக்கும் தீர்வுகாண முயற்சி செய்கிறது. குறிப்பாகக் கபிலர் பலர் என்ற விவாதத்தை முன்னெடுத்து கால ஆய்வுகளின் துணையோடும், அரசர்கள், குறுநில மன்னர்கள், கடையேழு வள்ளல்களாகப் புகழப்படும் இனக்குழுத் தலைவர்களின் வரலாறுகளோடு சார்த்தியும் கபிலர் படைப்புகளின் நடையியல் கூறுகளின் துணையோடும் இலக்கியப் பாடுபொருளின் அடிப்படையிலும் முழுமையான ஆய்வினை நிகழ்த்தி விடைகாண முயன்றுள்ளது. நூலின் நான்காவது இயலாக இடம்பெற்றுள்ள நடையியல் ஆய்வில் கபிலர் என்ற இயலில் நூலாசிரியரின் அரிய உழைப்பினைக் காண முடிகிறது. நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ள பின்னிணைப்புகள் பதினேழும் வருங்கால ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் விளைக்கும் வகையில் பட்டியலிடப் பட்டுள்ளன.

      நூலின் தொடக்கத்திலேயே நூலாசிரியர் தமிழிலக்கிய வரலாற்றின் நெடும் பரப்பு தோறும் கபிலர் என்ற பெயரிலும் தொல்கபிலர், கபிலதேவர், கபில தேவநாயனார் என்ற பெயர்களிலும் பல்வேறு கபிலர்களை உள்ளனர் என்றும். சங்க இலக்கியத் தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள அகப்புறப் பாடல்கள் பாடிய கபிலர் மட்டுமல்லாது குறிஞ்சிக் கலி பாடிய கபிலர், ஐங்குறுநூற்றின் குறிஞ்சிப் பாடல்களைப் பாடிய கபிலர், பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தினைப் பாடிய கபிலர், பத்துப்பாட்டில் குறிஞ்சிப் பாட்டை பாடிய கபிலர், பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இன்னா நாற்பதைப் பாடிய கபிலர் முதலான சங்க காலக் கவிஞர்கள் மட்டுல்லாது கபிலரகவல் பாடிய புலவர் பக்தி இலக்கியக் கபிலர், பிற்காலத் தனிப்பாடல்களைப் பாடிய கபிலர் என கபிலர்களின் பட்டியல் நீள்கிறது என்றும் இந்த ஆய்வு சங்க காலக் கபிலரைப் பற்றியது என்றும் வரையறை செய்து விடுகிறார்.

      நூலின் முடிவுரையில்

சங்க காலக் கபிலர் என்ற ஆய்வின்வழி சங்க இலக்கியங்களில் கபிலர் என்ற பெயரில் நான்கு வேறுபட்ட புலவர்களால் பாடப்பெற்ற இலக்கியங்கள் உள்ளன என்றும்.

அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய தொகை நூல்களில் கபிலர் பெயரில் இடம்பெறும் பாடல்களைப் பாடிய புலவர் ஒருவர்.என்றும் கலித்தொகையில் இடம்பெறும் குறிஞசிக் கலி பாடல்களைப் பாடிய கபிலரும், ஐங்குறுநூற்றில் இடம்பெறும் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடிய கபிலரும் பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டினைப் பாடிய கபிலரும் வேறு வேறானவர்கள். இந்த மூன்று இலக்கியங்களையும் பாடிய கபிலர்கள் தொகைநூலில் இடம்பெற்றுள்ள அகப்புறப் பாடல்களைப் பாடிய கபிலருக்குக் காலத்தால் பிற்பட்டவர்கள் என்பதனைத் தெளிவுபட உரைத்துள்ளார். இக்கூற்று நூலாசிரியர் ஆய்வு உறுதி மற்றும் ஆய்வுத் திறத்துக்கு எடுத்துக்காட்டாகும்.

கபிலர் என்ற சங்க காலப் புலவர் என்ற மையப் பொருளில் இந்த நூல் அமைந்திருந்தாலும் ஒவ்வொரு இயலும் சங்க இலக்கியத்தின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணப்பட்டு சங்க இலக்கியங்களின் முழுமையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. சங்க கால அரசர்கள், புலவர்கள் பலரின் வரலாறும் இலக்கியப் பாடுபொருள்களும் இடையிடையே பேசப்படுவதால் சங்க இலக்கியங்களை முழுமையாகக் கற்றுணர்ந்த நிறைவு நமக்கு ஏற்படுகிறது.

ஆய்வுக்கான கடுநடை இல்லாமல் எளிமையான இனிமையான தமிழில் சங்க இலக்கியச் செய்திகளை விவரித்துச் செல்லும் ஆய்வாளரின் மொழிநடை பாராட்டுதற்குரியது. ஆழ்ந்த இலக்கிய இலக்கணப் பயிற்சி இல்லாமல் சங்க இலக்கியங்களைக் கற்பதோ ஆய்வு செய்வதோ இயலாத செயலாகும். நூலாசிரியர் முனைவர் ஆ.விஜயராணி செப்பமாக இந்த ஆய்வினைச் செய்து முடித்துள்ளமை அவரின் ஆழ்ந்த நூலறிவினைப் புலப்படுத்துகிறது. தொடர்ந்து இத்துறையில் அவர் மேலும் பல ஆய்வுகளை நிகழ்த்தி பொதுமக்களிடம் நமது செம்மொழி இலக்கியங்களின் சிறப்பினைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அணிந்துரையை நிறைவு செய்கிறேன். நல்ல நூல்களை ஏற்றுப் போற்றிப் பராட்டும் தமிழுலகம் இந்நூலையும் போற்றிப் புகழும் எனபதில் ஐயமில்லை.

முனைவர் நா.இளங்கோ

nagailango@gmail.com    

 

 

 

வை.இராமதாசு காந்தியின் சிலம்பு கூறும் சீரிய அறம் நூல் அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ


 

தமிழின் முதல்காப்பியம் என்ற பெருமைபெற்ற சிலப்பதிகாரம், தன் காப்பியக் கட்டமைப்பாலும் எடுத்துரைப்பாலும் உலகின் வேறெந்த மொழியிலும் காணக் கிடைக்காததோர் முன்மாதிரிக் காப்பியம் என்ற பெருமையினைப் பெறுகின்றது. வாய்மொழிக் காப்பியம், எழுத்து மொழிக் காப்பியம் என்ற வரையறைகளைக் கடந்து இரண்டின் பிணைப்பாலும் இயன்றதோர் புத்தாக்கப் படைப்பாகச் சிலப்பதிகாரம் திகழ்வது கற்போர்க்குப் பெருவியப்பினை அளிக்கின்றது. இக்காப்பியத்தின் தனித்தன்மை யானதோர் அகக் கட்டமைப்பை உணர்ந்தே நம் முன்னோர்கள் இதனை இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்றும் முத்தமிழ்க் காப்பியம் என்றும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் பலவாறாகப் பல அடைகளோடு அடையாளப்படுத்த முனைந்தனர்.

எந்தவொரு இலக்கியப் படைப்பும் தான் தோன்றிய காலத்தின் சமூகச்சூழல், தேவை இவற்றோடு மட்டும் முழுமை பெற்றுவிடுவதில்லை. அது ஒவ்வொரு காலத்தின் தேவைகளுக்குத் தகுந்தவாறு மீண்டும் மீண்டும் மறுவாசிப்புக்கு உள்ளாகி எப்பொழுதும் தன்னை ஒரு நிகழ்கால இலக்கியமாக நிலைநிறுத்திக் கொள்கிறது. என்பார் பேராசிரியர் க.பஞ்சாங்கம். அந்த வகையிலிலேயே சிலப்பதிகார இலக்கியமும் தமிழ்ச் சமூகம் இருபதாம் நூற்றாண்டில் எதிர்கொண்ட பல்வேறு சமூக அரசியல் சூழல்களுக்கு ஏற்பப் பல்வேறு வாசிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்திய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம், திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் என்று சென்ற நூற்றாண்டில் செல்வாக்கு செலுத்திய அத்தனை இயக்கங்களுக்கும் இடமளிக்கும் வகையில் சிலப்பதிகாரம் பல்வேறு வாசிப்பு மற்றும் விளக்கங்களைப் பெற்றுள்ளது. இனிவரும் காலத்து சமூக அரசியல் சூழல்களுக்கும் இடமளித்து புதிய வாசிப்புகளுக்கும் களமாக அமையத்தக்க இலக்கியமாக சிலப்பதிகாரம் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.

இலக்கிய வாசிப்பு என்பதனைத் தனிமனித வாசிப்பு, சமூகத்தின் வாசிப்பு என்று வகைப்படுத்த முடியும். தனிமனித வாசிப்புகளைவிட சமூகத்தின் வாசிப்பு என்பது காத்திரமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. சிலப்பதிகாரம் தமிழ்ச் சமூகத்தின் வாசிப்பில் பல்வேறு காத்திரமான தாக்கங்களை சமூக, அரசியல், படைப்புத் தளங்களில் நிகழ்த்தியுள்ளது. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திற்கு முன்னும் பின்னும் கண்ணகி என்ற பெண் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று ஒரு அடையாளமாக, ஒரு குறியீடாக ஒரு தொன்மமாக மாற்றம் பெற்றுள்ளாள். மொழி எல்லைகளை, நாட்டு எல்லைகளைக் கடந்தும் கண்ணகித் தொன்மம் பரவலாக்கம் பெற்றுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

      புதுச்சேரிக் கவிஞர் வை.இராமதாசு காந்தி ஓர் இலக்கியச் செயற் பாட்டாளர், தமிழ் மரபுக் கவிதைகளில் நல்ல தேர்ச்சி உடையவர், புதுச்சேரி, தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளோடு இணைந்து செயல்படக் கூடிய துடிப்புமிக்க தமிழ் ஆர்வலர். இலக்கிய நண்பர்களை இணைப்பதிலும் ஆற்றுப் படுத்துவதிலும் இடையறாத ஆர்வமுடையவர் பல்வேறு இலக்கியப் படைப்புகளை உருவாக்கியுள்ள பெருமைக் குரியவர். அனைத்திற்கும் மேலாக வள்ளலார் வழி ஒழுகும் பண்பாளர். அவரது வாழ்க்கைத் துணை திருமதி விசயலட்சுமி அமைமையார் போற்றி ஒழுகும் வள்ளலார் வாழ்வியலுக்கு என்றும் துணைநிற்பவர். அந்த வகையில் என்னைப் பெரிதும் கவர்ந்தவர்.

கவிஞர் வை.இராமதாசு அவர்களின் இலக்கியப் படைப்பு வரிசையில் ஏழாவது இலக்கியப் படைப்பு சிலம்பு கூறும் சீரிய அறம் என்ற இந்நூல். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்தை இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் வாசிப்புக்கு உரியதாக மறுஆக்கம் செய்துள்ளார் இராமதாசு காந்தி. சிலப்பதிகாரத்தின் மூன்று காண்டங்களில் வஞ்சிக் காண்டத்தைத் தவிர்த்து புகார், மதுரைக் காண்டங்களின் கதைப்போக்கினையும் கருத்துச் செறிவினையும் காப்பிய அழகுகளாம் கற்பனை, உவமை, உருவகங்களையும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே வாரியெடுத்து தமது எளிமையான கவிதை நடையில் இன்றைய இளந் தலைமுறையினரும் வாசித்துச் சுவைக்கத் தக்க வகையில் சிலம்பு கூறும் சீரிய அறம் என்ற இக் காப்பியத்தை உருவாக்கி அளித்துள்ளார். நூலின் இறுதியில் சிலப்பதிகாரக் கதைச் சுருக்கத்தினை அறுபத்தெட்டு இனிமை வாய்ந்த சந்தப் பாக்களில் வடித்துள்ளமை நூலுக்கு ஒரு மணிமகுடம்.

அகவற் பாக்களால் முத்தமிழ்க் காப்பியமாகப் படைத்தளித்த காப்பியப் புலவன் இளங்கோவின் கவிதைகளை எழுத்தெண்ணி வாசித்து அதன் கவிநலத்திலும் கவிநயத்திலும் தோய்ந்து மூலநூலின் பெருமைக்கு எந்த விதத்திலும் ஊறுநேர்ந்திடா வகையில் சொற்களைச் செதுக்கிச் செதுக்கிச் சிலம்புக்குப் புதுவடிவம் கொடுத்துள்ளார் இராமதாசு காந்தி. அகவற் பாக்களை விருத்தப் பாக்களாகவும் சந்தப் பாக்களாகவும் மாற்றிப் புதுக்கோலம் புனைந்ததில் புதுவைப் புலவர்கள் பாவேந்தர், தமிழ்ஒளி கவிதை நடைகளின் சாயல் மிளிர்வது பாராட்டத் தக்கது.

கவிஞர் இராமதாசு காந்தி அவர்களின் கவிப்பெருக்கின் பெருமைக்கு நூல் முழுமையுமே அத்தாட்சி என்றாலும் சான்றாக ஒருபாடலை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் இருந்தும் இராமதாசு காந்தியின் சிலம்பு கூறும் சீரிய அறம் நூலிலிருந்தும் தருகின்றேன். வழக்குரை காதையில் வாயிற் காவலன் கண்ணகியின் வருகையை பாண்டிய மன்னனுக்கு உரைக்கும் பகுதி இது. இரண்டு பகுதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்வீர்! சுவைத்துணர்வீர்!

 

சிலப்பதிகாரம்

அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி  
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் 40 
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே

சிலம்பு கூறும் சீரிய அறம்

வாயிலில் மங்கை வளர்தெழு கனலாய்

தாயவள் கூந்தல் தலைவிரி கோலம்

கையொரு சிலம்பும் காரிகை அவள்தன்

மெய்யுடல் குருதி மேலவள் கறையாம்

வேல்கை கொண்ட வெற்பெனும் கொற்றவை

சேல்விழி தடக்கை சினந்தவள் தோற்றம்

சப்த கன்னிகையில் சன்னதி இளையோள்

ஒப்பிலாப் பிடாரி உற்றவோர் தோற்றம்

ஞால இருளில் நன்னடம் புரியும்

கோல விழியாள் கொற்றவை தோற்றம்

அன்றவள் அப்பால் அழலொடு நடமிடும்

பொன்தாள் காளி புதுப்பொழில் கொண்டவள்

தாருகா சூரன் தன்மார் பிளந்த

நேரிடை துர்கா நீள்கண் கனலாள்

வாள்கண் சினமும் வரிசிலம் பவள்கை

தாள்நிலம் நில்லா தளிர்மகள் இவளே!

கணவனை இழந்த காரிகை தானும்

காண நின்றாள் கடைவாய் உள்ளாள்

 

சிலப்பதிகாரத்தை மறுஆக்கம் செய்வதில் சவாலான பகுதிகள் அரங்கேற்றுக் காதையும் கானல்வரியும். கவிஞர் இராமதாசு காந்தியின் சிலம்பு கூறும் சீரிய அறம் என்ற இந்நூலை வாசித்துக் கொண்டே வருகையில் அரங்கேற்றுக் காதையையும் கானல்வரியையும் வாசிக்கத் தொடங்கும்போதே பதட்டமும் பதைபதைப்பும் என்னைப் பற்றிக் கொண்டன. இளங்கோவடிகளின் கவிதைச் சுவையைக் கருத்தாழத்தை நுண்மாண் நுழைபுலத்தை இந்தக் கவிஞர் இளங்கோவடிகளுக்கு இழுக்கு நேராமல் சிலம்பைச் சிதைக்காமல் புதுவடிவம் தந்திருக்க வேண்டுமே என்ற தயக்கத்தோடு வாசிக்கத் தொடங்கினேன். வாசித்தேன்.. சுவாசித்தேன்.. ரசித்தேன்.. மகிழ்ந்தேன். கவிஞர் இராமதாசு காந்தி இந்தப் படைப்பில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டார் என்பதற்கு இந்நூலின் அரங்கேற்றுக் காதையும் கானல்வரிகளுமே சாட்சி. சொல்லழகும் பொருளழகும் மிளிர கவிதைகள் இந்நூலில் களிநடம் புரிகின்றன. இந்த அணிந்துரையை நான் கவிதைகளால் நிரப்பிவிட விரும்பவில்லை. கவிதைகளை நீங்கள் நூலின் அகத்தே நுழைந்து வாசித்துக் கொள்ளுங்கள்.

ஒரு மூலநூலை எவ்வளவுதான் கைதேர்ந்த இருமொழிப் புலமையுள்ள ஒரு படைப்பாளி மொழிபெயர்த்தாலும் மூலநூலின் எல்லா ஆழ அகலங்களையும் ஒரு படைப்பாளியால் அப்படியே கொண்டுவந்துவிட முடியாது. அது மூலநூலின் கவிதைகளுக்கே உரிய தனிச்சிறப்பு. மறுஆக்கங்களிலும் இதே நிலைமைதான் கவிதையின் உள்ளடக்கங்களை மறுஆக்கம் செய்வதுபோல் மூலநூலின் கவிதைகளை வேரோடும் வேரடி மண்ணோடும் கொண்டுவந்துவிட முடியாது. இந்நூலும் அதற்கு விதிவிலக்கல்ல.

இசை, நாடக நுணுக்கங்களோடும் நாட்டுப்புற வரிப்பாடல் சந்தங்களோடும் நாட்டுப்புறக் கலைவடிவ ஆடற்சந்தங்களோடும் ஒரு நிகழ்த்துகலை வடிவம் போல் படைக்கப்பட்ட சிலப்பதிகார முத்தமிழ்ப் படைப்பை காலத்திற்கேற்ப ஒரு இயல்தமிழ் படைப்பாக மாற்றி,

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கடிய சந்தம் பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை யுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகின்றான். ஒரிரண்டு வருத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும். 

   (மகாகவி பாரதி, பாஞ்சாலி சபதம், முன்னுரை

என்ற மகாகவி பாரதியின் கூற்றுக்கேற்ப கவிஞர் இராமதாசு காந்தி எளிய சொற்களோடும் எளிய நடையிலும், அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய சந்த நயங்களோடும் இக்காலத்துத் தமிழ் மக்களுக்கு நன்கு விளங்கும்படியான காவியம் ஒன்றனைச் செய்து தந்துள்ளார். தமிழுலகம் கவிஞரின் தமிழ்ப்பணியினை என்றென்றும் போற்றிப் பாராட்டி மகிழும் என நான் நம்புகிறேன்.

 

முனைவர் நா.இளங்கோ

 

பாவலர் வ.விஜயலட்சுமியின் திருக்குறளில் உளவியல் கூறுகள் – நூல் அணிந்துரை

 

முனைவர் நா.இளங்கோ




கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் திருக்குறள் தான் தோன்றிய காலந்தொடங்கி இன்றுவரை தமிழுலகில் நிலைத்து வாழ்ந்தும் தமிழர்களை வாழ்வித்தும் வருவது கண்கூடு.

ஓதற் கெளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் -தீதற்றோர்
உள்ளுந்தொ றுள்ளுந்தொ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

மாங்குடி மருதனாரின் இப்பாடல் திருக்குறளின் தனிப்பெருஞ் சிறப்பினைத் தெளிவு படுத்துகின்றது. படிப்பதற்கு எளிய சொற்களை உடையதாகவும் அறியப்படுவதற்கு அருமைப்பாடுடைய நுட்பமான பொருளை உடையதாகியும் வடமொழியில் சிறப்பித்துச் சொல்லப்படும் வேதங்களின் பொருளை உள்ளடக்கியும் அந்த வேதங்களை விடவும் சிறப்புபெற்றும் குற்றமற்றவர்கள் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அவர்களுடைய மனதை உருக்கக் கூடியதாகவும் வள்ளுவர் வகுத்துத்தந்த திருக்குறள் விளங்குகிறது என்பது மாங்குடி மருதனாரின் பாடல் கருத்து.

திருக்குறள் கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளில் எத்தனையோ சமய, இன, மொழித் தாக்குதல்களை எல்லாம் வென்று காலம் கடந்து இன்றும் நிலைத்து நிற்பதற்குப் பல காரணங்கள் உண்டு, அவற்றுள் தலையாய காரணம் அதன் பொதுமைப்பண்பு. மொழி, இனம், நாடு கடந்த உலகப் பொதுமைநலம் வாய்ந்த அறங்களைப் பேசுவதால் திருக்குறள் உலகப் பொதுமறை என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே திருவள்ளுவ மாலை,

வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு (திரு.மா.47)

என்று திருக்குறளைப் புகழ்ந்து பேசுகின்றது.

சற்றேறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த பிறகும் கூட திருக்குறளின் மொழிநடை இன்றும் எளிதில் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இருக்கின்றது. திருக்குறளின் காலத்தை ஒட்டிய சங்க இலக்கியங்களுக்கோ, சங்கம் மருவிய கால இரட்டைக் காப்பியங்களுக்கோ இத்தகு மொழிநடை அமையவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவேதான் மாங்குடி மருதனார் ஓதற்கு எளிதாய் என்றார். இத்தகு எளிய நடையைக் கொண்டிருந்தும் திருக்குறளுக்கு எண்ணிலடங்கா உரைகள் காந்தோறும் தோன்றிவருவது ஏன்? என்ற வினா எழுதல் இயல்பே, உணர்தற்கு அரிதாகி என்று அதற்கும் விடை சொல்கின்றார் மாங்குடி மருதனார்.

காலந்தோறும் திருக்குறளுக்கு உரைகள் தோன்றிவருவது திருக்குறளின் சிறப்புக்களில் ஒன்று. பரிமேலழகருக்கு முன் திருக்குறளுக்கு ஒன்பது உரைகள் தோன்றின. பத்தாவது உரையாகக் குறளுக்குப் பரிமேலழகரின் சீர்மிகு உரை தோன்றியது. பரிமேலழகரின் நுட்பமான உரைக்குப் பின்னும் கூட இன்று வரைக் கணக்கற்ற உரைகள் குறளுக்குத் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

பிற தமிழ் இலக்கிய இலக்கண நூல்களுக்கு இல்லாத அளவில் திருக்குறளுக்கு மட்டும் இத்துணை உரைகள் தோன்றியும் தோன்றிக் கொண்டேயும் இருக்கக் காரணங்கள் என்ன?

திருக்குறளின் கவிதை வடிவம் செறிவானது. அதன் சொற்கட்டமைப்புக்குள் தத்தமக்கான பொருளைக் கற்பவர்கள் பொருத்திக்கொள்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. திருக்குறளின் இத்தகு அமைப்பே அதற்குப் பல விளக்கங்களும் உரைகளும் பெருகுவதற்குக் காரணமாய் அமைந்துள்ளது. திருக்குறள் காட்டும் பொதுப்பொருள், சிறப்புப் பொருள், குறிப்புப்பொருள் என்று அதற்குப் பொருள் காண வழிகள் பல உள்ளன. அறிவியல் சார்ந்தும் அறவியல் சார்ந்தும் பொருளியல் சார்ந்தும் தத்துவம் சார்ந்தும் பண்பாட்டியல் சார்ந்தும் மொழியியல் சார்ந்தும் மரபியல் சார்ந்தும் உளவியல் சார்ந்தும் பல கோணங்களில் திருக்குறளை ஆராய்வதற்கு வழிவகை செய்து வைத்துள்ளார் வள்ளுவர். அவரின் குறுகத் தரித்த குறளே விரிவான பொருள் புரிதலுக்குத் துணைநிற்கிறது. குறளின் மிகச்சிறிய ஏழு சீர்களே கொண்ட யாப்பு வடிவமே உரைகள் பெருகுவதற்கு முதல்காரணம். விரித்துச் சொல்ல வாய்ப்பில்லாமல் பொதுவாகக் குறிப்பிட்டு அறங்களைக் கூறும் போக்கினால் உரையாசிரியர் விரித்துக் கூற முற்படும்போது பொருள் வேறுபாடுகள் தோன்றுவது இயற்கையே. கால வேறுபாடு அல்லது காலத்தின் தேவை சில குறட்பாக்களைப் புதிய நோக்கில் வாசிக்க இடந்தருகிறது. எனவே கால மாற்றங்களும் புத்துரைகளுக்குக் காரணங்களாகின்றன..

புதுவைப் பாவலர் வ.விஜயலட்சுமி அவர்களின் திருக்குறளில் உளவியல் கூறுகள் என்ற இந்நூலும் திருக்குறளுக்குப் புத்துரை வழங்கும் ஒரு முயற்சியே. நூலாசிரியர் திருக்குறளின் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களுக்கும் உளவியல் நோக்கில் ஒரு அழகான புத்துரை வழங்க முயன்றுள்ளார். ஒவ்வொரு அதிகாரத்திலும் தேர்ந்தெடுத்த சில குறட்பாக்களைக் கொண்டு உளவியல் பார்வையோடு விளக்கமளிக்கும் அவரின் முயற்சி பாராட்டத்தக்கது.

பாவலர் வ.விஜயலட்சுமி புதுச்சேரியின் மரபுப் பாவலர்களில் ஒருவர். ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான அவர் தொடர்ச்சியாக உளவியல் சார்ந்த நூல்கள் பலவற்றை எழுதி வருபவர். ”நாட்டுப்புறப் பாடல்களில் உளவியல் கூறுகள்” எனும் தலைப்பில் தமது இளமுனைவர் பட்டத்திற்கான ஆய்வினை என்னுடைய வழிகாட்டுதலில் நிகழ்த்திவர். இவர் மொழிபெயர்ப்புத் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு பல மொழிபெயர்ப்புக் கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். கல்வியியல், உளவியல், ஆன்மீகம் தொடர்பான அவரின் படைப்புகள் பலரது பாராட்டையும் வாழ்த்தினையும் பெற்ற சிறப்புக்குரியன. சிறுவர் இலக்கியம், மரபுக் கவிதை, புதுக்கவிதை, மொழிபெயர்ப்புக் கவிதைகள் என கவிதைத் துறையிலும் இடையறாது ஈடுபட்டு வருபவர். புதுச்சேரியின் இலக்கிய மேடைகளில் தமது சிறந்த கவிதைப் படைப்புகளால் தனித்த அடையாளம் பெற்றவர். முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய அமைப்புகள் அவருக்கு ஔவை விருது, கபிலர் விருது, மரபு மாமணி முதலான விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன. ஆற்றல் வாய்ந்த ஆளுமையோடு நல்லாசிரியராகயும் இலக்கியப் படைப்பாளியாகவும் சிறந்த ஆய்வாளராகவும் மொழி இலக்கியப் பணிகளை ஆற்றிவரும் பாலவர் வ.விஜயலட்சுமி அவர்களின் பதினைந்தாவது நூல் என்ற பெருமைக்குரியது இந்த திருக்குறளில் உளவியல் கூறுகள் இந்நூல்.

உளவியல்  (Psychology) என்பது மனதின் இயல்பு, செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். இத்துறை மனிதனுடைய மனதையும், நடத்தையையும் ஆராய்கிறது.. இத்துறையின் விற்பன்னர்கள் உளவியலாளர்கள் என்றழைக்கப் படுகின்றனர். இவர்கள் தனிமனிதனின் புலன் உணர்வு, அறிவாற்றல், செயல்திறன், மன அழுத்தம், ஆளுமை, நடத்தை ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து உரிய தீர்வு அளிக்கின்றனர். உளவியல் சார்ந்த அறிவானது அன்றாட வாழ்வில் மனிதர்கள் எதிர்கொள்ளும் கல்வி, குடும்பம், தொழில், சமூகம் உள்ளிட்டவைகளைப் பற்றி முழுவதும் ஆராய்ச்சி செய்கிறது. மேலும் அவற்றால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், அதற்கான தீர்வுகள் என அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துகின்றது.

திருவள்ளுவரின் குறட்பாக்களை ஆழ்ந்து கற்போருக்கு அவர் ஓர் உளவியல் வல்லுநராகவே தெரிகின்றார். தனிமனித உளவியல் மட்டுமல்லாது சமூகத்தின் கூட்டுமன உளவியல் குறித்தும் திருக்குறள் பேசுகிறது. அறத்துப்பால், காமத்துப்பால் இரண்டிலும் தனிமனித உளவியல் பெரிதும் பேசப்படுகிறது என்றால்,. பொருட்பால் மனித சமூகத்தின் கூட்டுமனம் மற்றும் அதன் செயற்பாடுகளை விவரிக்கிறது. நூலாசிரியர் உளவியல் துறையில் ஆழங்கால் பட்டவர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு அதிகாரத்தையும் உளவியல் கண்கொண்டு பார்க்கிறார். அதிகாரப் பொருண்மைகளை உளவியல் நோக்கில் விரித்துரைக்க முற்படுகிறார். சில குறட்பாக்களுக்கு உளவியல் விளக்கங்களை வழங்குகிறார். நூலாசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. விரிவான வருங்கால ஆய்வுகளுக்கு வழிகாட்டத் தக்கது.

அறிவுடைமை அதிகாரத்தின் கருத்துகளை உளவியல் பார்வையில் விவரிக்கும் நூலாசிரியரின் பின்வரும் பகுதியினை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வெல்ஸ் என்ற அறிஞரின் கூற்றுப்படி, அறிவுடைமை என்பது நமது நடத்தைக் கூறுகளை ஒழுங்குபடுத்தி, முற்றிலும் புதியதொரு சூழலில் அதற்கேற்ப மிகச் சிறப்பாகச் செயல்படுவது என்பதாகும். வில்லியம் ஸ்டெர்ன் கருத்துப்படி, அறிவுடைமை என்பது ஒரு புதிய சூழலில் அதற்குத் தகுந்தாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதாகும்.

இக்கருத்துகளோடு வள்ளுவரின்

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு (குறள்-426)

என்ற குறள் ஒப்பு நோக்கத் தக்கதாகும்.

நுண்ணறிவு என்பது பல்வேறு சக்திகளின் கூட்டமைப்பாகும். வெச்லர் என்பாரின் கருத்துப்படி நுண்ணறிவு என்பது ஒருவன் தன் சூழ்நிலைக்குத் தக்கவாறு நோக்கத்துடன் செயல்படவும், பகுத்தறிவோடு சிந்திக்கவும் திறமையோடு கையாளவும் தெரிந்திருக்கும் ஒரு திறனாகும்.

தன் பழைய அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு எதிர்காலச் செயல்களைத் திட்டமிடுதல் அறிவுடைமை.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர் (குறள்-427)

இவ்வாறு ஒவ்வொரு திருக்குறள் அதிகாரங்களிலும் அதன் பொருண்மையோடு தொடர்புடைய உளவியல் செய்திகளை மேற்கத்திய உளவியலாளர் கருத்துக்களோடு தொடர்புபடுத்தி மேற்கோள் காட்டி, குறட்பாக்களை விளக்கிச் செல்லும் நூலாசிரியரின் அணுகுமுறை சிறப்பானது. ஆயினும் விவரித்துச் சொல்ல வேண்டிய இடங்களில் கூட விவரித்துச் சொல்லாமல் சுருக்கமான முன்னுரையோடு குறட்பாக்களைச் சுட்டிச்செல்வது நமக்கு முழுநிறைவைத் தரவில்லை.

      திருவள்ளுவர் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் ”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” (குறள்-34) என்று அறத்திற்கு ஓர் எளிமையான விளக்கத்தினைச் சொல்லிச் செல்கின்றார். மனதில் குற்றமில்லாமல் இருப்பது எவ்வாறு முழுமைபெற்ற அறமாகும் என்ற வினா அனைவர் மனதிலும் எழலாம், நூலாசிரியர் இக்குறட்பாவிற்கு சிறப்பான விளக்கமொன்றனை வழங்கி புத்துரை தருகின்றார். அவர் தரும் புத்துரை பின்வருமாறு,

ஒவ்வொருவர் உள்ளத்திலும் நல்ல உணர்வுகளும் இருக்கும் தீய உணர்வுகளும் இருக்கும். நல்ல எண்ணங்கள் சிலர் மனதில் மேலோங்கி இருக்கும், தீய எண்ணங்கள் சிலரிடம் மேலோங்கி ஆதிக்கம் செலுத்தும். அத்தீய எண்ணங்களே மனதில் மிதக்கும் மாசுகள். உடலில் துர்நாற்றம் வீசுவதை மறைக்க நறுமணப் பொருட்களைப் பூசிக் கொள்வதைப் போல, சுவரின் விரிசலை மறைக்க அழகிய வண்ணப் படங்களை அதன்மீது ஒட்டுவதைப் போல சிலர் தங்கள் மனமாசுகளை மறைக்க ஆடம்பரமாக அன்னதானம், ஆடைதானம், பொருள்தானம் செய்வார்கள், இவை உண்மையில் அறமாகவே கொள்ளப்படா. எதையும் எவர்க்கும் தா இயலா ஏழையாக இருந்தாலும் மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறமெனக் கருதப்படும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற (குறள்-34)

நூலாசிரியர் வ.விஜயலட்சுமி இந்தக் குறட்பாவுக்குத் தரும் புத்துரை சிறப்பானது. நூலின் பக்கங்கள் தோறும் இவ்வாறு பல குறட்பாக்களுக்கு எளிய புதிய விளக்கங்களையும் சில புத்துரைகளையும் நூலாசிரியர் சுட்டிச் செல்வது பாராட்டத் தக்கது.

      திருக்குறள் ஓர் ஆழ்கடல். அதன் ஆழம் அளவிட முடியாதது. அதனை மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டடி போல் காட்டி நம்மை ஏமாற்றும். அந்த ஆழ்கடலில் மூழ்கி முத்துக் குளித்தவர்களுக்கே அதன் ஆழம் புரியும். நூலாசிரியர் வ.விஜயலட்சுமி அவர்களும் திருக்குறள் என்ற ஆழ்கடலில் மூழ்கி முத்துக் குளித்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்தும் பாராட்டும். இனி வாய்ப்பு கிடைக்கும் பொழுதிலெல்லாம் அவர் திருக்குறள் கடலில் மூழ்கி மூச்சடக்கி முத்துக் குளிப்பார். திரட்டிய முத்துகளை எல்லாம் கோர்த்து அழகான மாலையாக்கித் தமிழுலகிற்குப் பரிசளிப்பார் என்று நம்புவோம்.

 

nagailango@gmail.com

 

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...