வியாழன், 28 ஜூன், 2012

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் வகுப்பறை.

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சீன ஞானக்கவி தாவோ அவர்களின் கவிதை வரிகளோடு இவ்வுரையைத் தொடங்குகின்றேன்.
களிமண்ணால் பானை செய்கிறோம்
உபயோகிப்பதோ வெற்றிடத்தை.
கதவுகளும் ஜன்னல்களும் வைத்து
வீடு கட்டுகிறோம்
உபயோகிப்பதோ
உள்ளே உள்ள வெற்றிடத்தை
எனவே
எது இல்லையோ அதை உபயோகி
எது இருக்கிறதோ
அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்.
தமிழாசிரியர்களின் பணி மொழி கற்பித்தல். மொழி கற்பித்தல் என்ற தொடர் மொழியில் கற்பித்தல், மொழியைக் கற்பித்தல், என்ற இரண்டு பொருள்களில் கையாளப் படுகின்றது. மொழியில் கற்பித்தல் எனும்போது மொழி ஓர் ஊடகமாகவும் மொழியைக் கற்பித்தல் எனும்போது மொழி ஒரு பாடப் பொருளாகவும் அமைகின்றது. தமிழாசிரியர்களின் முதன்மையான பணி மொழியைக் கற்பிப்பதே. மொழியைக் கற்பிப்பது என்பது வெறுமனே மொழியின் இலக்கண விதிகளை, மொழி அமைப்பினைக் கற்பிப்பது மட்டுமன்று, மொழியை அதன் பயன்பாட்டு நோக்கில் தொடர்பாடல் கருவியாகப் பயன்படுத்தும் நுணுக்கங்களைக் கற்பிப்பதும் ஆகும். மொழியை நன்கு கையாளக் கற்றுக்கொள்வது மட்டுமன்றி மொழி கற்பித்தலுக்கு மற்றுமோர் இன்றியமையாத நோக்கமும் உண்டு, அது மொழிபேசும் இனத்தை, இனத்தின் வரலாற்றை, இனத்தின் பண்பாட்டைக் கற்பது என்பதுமாகும்.
தாவோவின் கவிதையை இங்கே நான் பொருத்திக் காட்ட விரும்புகின்றேன். களி மண்ணால் பானை செய்கிறோம். ஆனால் நாம் பயன்படுத்திக் கொள்வது அதற்குள்ளே உள்ள வெற்றிடத்தை. சுவரெழுப்பி, கதவு ஜன்னல்களைப் பொருத்தி வீடு கட்டுகிறோம், ஆனால் பயன்படுத்திக் கொள்வது அந்தச் சுவர்களுக்கு இடையிலான வெற்றிடத்தைத்தான். இது தாவோவின் தத்துவ மொழி. மொழிக் கல்வியும் அப்படித்தான், இலக்கண விதிகளால் கட்டப்பட்ட மொழியின் அமைப்பை நாம் கற்றுக்கொள்கிறோம். ஆனால் நாம் பயன்கொள்வது மொழிக்கு உள்ளிருந்து இயங்கும் அம்மொழி பேசும் இனத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டு அடையாளங் களைத்தாம். எது இல்லையோ அதை உபயோகி, எது இருக்கிறதோ அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள் என்பது பருப்பொருளான மொழியின் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு நுண்பொருளாயிருக்கும் மொழி பேசும் இனத்தின் பண்பாட்டைப் பயன்கொள்வதாகும். 
இன்றைய உலகமயச் சூழலில், இப்புவியின் அனைத்துக் கண்டங்களிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்கள் காப்பாற்றப்பட, மொழி வாழ வேண்டும். இனம் வாழ்வதால்; மொழி வாழ்ந்துவிடாது. மொழி வாழ்ந்தால்தான் இனம் வாழும். மொழிவாழ மொழிவழி இனத்தின் அடையாளங்கள் பேணப்பட வேண்டும். ரியூனியன், மொரீஷியஸ், பிஜி முதலான நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழினம் தன் இன அடையாளங்களை இழந்து, மொழி இழந்து வாழும் அவலம் உலகத் தமிழர்களுக்கு ஒரு பாடம். ஓர் இனத்தின் வரலாற்று, பண்பாட்டு அடையாளங்கள் அந்த இனம் பேசும் மொழியின் அகத்தும் புறத்தும் செறித்து வைக்கப்பட்டுள்ளன. இருபத்தோராம் நூற்றாண்டில் உலகத் தமிழனுக்குரிய முதல் கடமை, தமிழ்மொழி எழுத்தில் வாழ்ந்தால் மட்டும் போதாது. தமிழ் பேசப்படவேண்டும் என்ற விழிப்புணர்வினைக் கொள்வதும் கொடுப்பதும்தான். தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறையாமல் காக்கப்பட வேண்டும். இன்றைய தகவல்மய உலகில் தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் பேருரு எடுத்துள்ள சூழலில் தமிழர்களின் பேச்சுவழித் தொடர்பாடல் மொழியாகவும் எழுத்துவழித் தகவல் தொடர்பு ஊடகமாகவும் தமிழே இருத்தல் வேண்டும். தமிழர்களின் படைப்பாக்கங்கள் முழுவதும் தமிழிலேயே உருவாக்கப் படல் வேண்டும். இத்தகு இலக்குகளை அடையத் தமிழாசிரியர்கள் மொழிக்கல்வியில் புதிய அணுகுமுறை களோடு புத்துணர்ச்சி ஊட்டும் வகுப்பறைச் சூழல்களை உருவாக்குதல் வேண்டும்.
**
தொல்காப்பியர் காலம் தொட்டு இருபத்தைந்து நூற்றாண்டுகளைக் கடந்து தமிழ்க்கல்வி இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் புதிய சவால்களை எதிர்கொண்டு நிற்கின்றது. இலக்கிய இலக்கணக் கல்வியே தமிழ்க்கல்வி, மனப்பாடம் செய்வதே வெற்றிகரமான கற்கும் முறை என்றிருந்த தமிழ்க்கல்வி வரலாற்றில் இந்நூற்றாண்டின் இணையமும் பல்லூடகமும் பல புதிய கதவுகளைத் திறந்து வைத்துள்ளன. சுவர்களுக்குள் கட்டுப்பட்டிருந்த வகுப்பறைகள் மறைந்து உலகத்தையே வகுப்பறையாக மாற்றிய பெருமை இணையத்திற்குண்டு.
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவி வாயாக நெஞ்சு களனாகக்
கேட்டவை கேட்டவை விடாது உளத்தமைத்து (நன்னூல் -பாயிரம்)
பாடம் கேட்ட மாணவன் உயிர்பெற்று இயக்கத்திலிருந்து ஐம்புலன்களாலும் கற்கும் காலம் கனிந்துவிட்டது. தமிழாசிரியர்கள் இலக்கிய இலக்கணக் கொள்கலன்களாக இருந்து பருத்திக் குண்டிகை போல் (நன்னூல் -பாயிரம்) கொஞ்சமாக கொஞ்சமாகக் கொடுத்த காலங்கள் பழங்கதையாகி, நவீன அறிவியல் தொழில் நுட்பத் தேர்ச்சியும் உலகு தழுவிய விசாலப் பார்வையும் கொண்டவர்களாகப் புதிய அவதாரம் எடுத்துள்ளனர்.
மொழியாசிரியர்களின் முதன்மைப் பணி மொழி கற்பித்தலே. மொழி கற்பித்தல் என்பது அடிப்படையில் பேசுதல், கேட்டல், எழுதுதல், படித்தல் என்ற தொடர்பாடல் திறன்களைப் பயிற்றுவிப்பதே ஆகும். ஒரு மொழியின் இலக்கண இலக்கியங்களைக் கற்பதென்பது அம்மொழியின் வளங்களைக் கற்பது என்பதாக மட்டுமே அமையும். தாய்மொழி வழக்காற்றுச் சூழலில் மொழி பயல்வோர்க்கு ஒருகால் இக்கல்வி போதுமானதாக அமையலாம். ஆனால் மொழியைத் தாம் வாழும் சூழலில் தாய்மொழியாக, இயல்பான நடைமுறை வழக்காற்றோடு இணைத்துக் கற்பதைவிடப் புலம்பெயர் நாட்டில்; மொழி வழக்காறு அற்ற சூழலில் கற்பதென்பது மிகுந்த சிக்கலானது. இத்தகு சூழலில் தாய்மொழியின் அமைப்பையும் இலக்கண விதிகளையும் கற்பதென்பது தாய்மொழி அல்லாத பிறமொழி கற்பதற்கு இணையான இடர்ப்பாடுகளைக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது.
ஆசிரியர்கள் இத்தருணங்களில் மொழியைக் கற்பிப்பது என்பதனை இலக்கண விதிகளைக் கற்பிப்பதாகத் அமைத்துக்கொள்வது பொருத்தமான அணுகுமுறைதானா? என்பதனை எண்ணிப் பார்த்தல் வேண்டும். இத்தகு அணுகுமுறையால் புலம்பெயர் சூழலில் மொழி கற்கும் மாணவர்களின் ஆர்வம் சிதைந்துபோக வாய்ப்புள்ளது. இச்சிக்கலுக்கான ஒரே தீர்வு, மொழியை ஒரு கருத்துப் பரிமாற்றச் சாதனமாகப் பயன்பாட்டுச் சூழலில் கற்பிப்பதே. பயன்பாட்டுச் சூழலைக் கற்பிப்பதென்பது அந்த மொழியைப் பேசும் இனத்தின் பண்பாட்டோடு தொடர்புடையது. மொழியின் மரபுகள், மொழிபேசும் மக்களின் மரபுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கைமுறை முதலான பின்புலங்களைக் கற்பிப்பதே சூழலைக் கற்பிப்பதாகும்.
மாணவர்கள் இலக்கண விதிகளைக் கற்பதைவிட, மொழியைத் தங்களின் கருத்தாடல் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கற்பதே இன்றைய முக்கியத் தேவை. இதனைக் கவனத்தில் கொண்டே மொழியாசிரியரின் கற்பித்தல் செயல்பட வேண்டும். ஏனெனில் வகுப்பறையில் இலக்கண விதிகளை ஒட்டி நாம் கற்றுக் கொடுக்கும் மொழியமைப்புக்கும் அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் நடைமுறை மொழியமைப்புக்கும் இடையே உள்ள இடைவெளி நம் கற்பித்தலை அந்நியப் படுத்திவிடக் கூடும். 
நாட்டின் எதிர்கால மனிதவளம் என்பது மாணவர்களே. இந்த மாணவர்களைச் சரியான முறையில் உருவாக்கும் கடமை ஆசிரியர்களுக்குண்டு. ஆசிரியப் பணி மகத்தானது. எழுத்தறியத் தீரும் இழிதகமை என்பது பழைய வாக்கு. இங்கே எழுத்து என்பது கல்வி. கல்வியே ஒருவனை மேம்படுத்துகிறது. இத்தகைய கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களின் பெருமை சொல்லில் அடங்காதது. என்றாலும் பின்வரும் திருக்குறள் கூறும் உண்மையையும் ஆசிரியர்கள் மனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு             (திருக்குறள்: 396)
தோண்டத் தோண்ட மணற்கேணி சுரக்கும் அதுபோலக் கற்கக் கற்க அறிவு சுரக்கும் என்பது குறளின் சுருங்கிய பொருள். இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு ஒன்று உண்டு. தோண்டத் தோண்ட நீர் சுரக்கும் என்றால் நீர் மணற்கேணியின் உள்ளேயிருந்து வெளிப்படுகிறதே தவிர, தோண்டியவன் அந்த நீரை ஊற்றவில்லை. நீர் வெளிவருவதற்கான முயற்சிதான் தோண்டுதல். இதனை அப்படியே கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் பொருத்திப் பார்ப்போம். கற்பதனாலோ கற்பிப்பதாலோ அறிவு வெளிப்படும் என்பதற்கு உரிய விளக்கம், கற்பித்தவன் அந்த அறிவைக் கொடுக்கவில்லை அது கற்கும் மாணவனிடமிருந்தே வெளிப்படுகிறது என்பதாகும். அந்த அறிவினை வெளிப்படுத்தும் முயற்சிதான் கற்றலும் கற்பித்தலும். கல்வியின் நோக்கமும் அதுவே. ஒவ்வோர் ஆசிரியரும் இதனை மனத்தில் கொண்டே தம் பயிற்றலைத் தொடங்க வேண்டும். ஆசிரியர் கடமை மாணவனுக்கு உள்ளே திறமைகளை வெளிக் கொணர்வதுதான். இதனை நன்குணரும் ஆசிரியர்களே வகுப்பறையை இருவழிப் பாதையாக மாற்றுவர். ஆசிரியர் மாணவர் இடையிலான கருத்தாடல் இருவழியிலும் நிகழ்கிற போதுதான் உண்மையான மொழித்திறன் மாணவர்களுக்குக் கிட்டும்.
                வகுப்பறை என்னும் தளத்தில் பருப்பொருள்களாக ஆசிரியர் மாணவர்கள் மட்டுமே இருந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெறத் தொடங்கியது. தொடக்கக்கால வகுப்புகளில் புத்தகங்களோ(சுவடிகளோ), எழுதுபொருள்களோ கூட இடம் பெற்றிருக்கவில்லை. கற்பித்தல் ஆசிரியன் வாய்வழியாகப் புறப்பட்டு மாணவர்களின் செவி வழியாக நெஞ்சில் ஏற்றப்பட்டது. பின்னர் காலப்போக்கில்  சிலேட்டு, பல்பம், அட்டை, புத்தகம், நோட்டுப் புத்தகம் முதலான கற்றல் கருவிகளும் கரும்பலகை, சாக்பீஸ் முதலான கற்பித்தல் கருவிகளும் வகுப்பறைகளில் இடம்பிடித்தன. இன்று பயிற்றுக் கருவிகள் பல்கிப் பெருகி வகுப்பறைகளை ஆக்கிரமித்துள்ளன. இன்றைய வகுப்பறைப் பயிற்றுக் கருவிகளை அச்சுக் கருவிகள், ஒளி ஊடுருவும் கருவிகள், ஒளி ஊடுருவாக் கருவிகள், செவிப்புலக் கருவி, ஒளி ஒலிக் கருவிகள், கணினி மென்பொருள், வன்பொருட்கள் என வகைப்படுத்தலாம்.
இருபதாம் நூற்றாண்டின் கடைசி வரவான கணினியும் கணினி சார்ந்த பல்லூடகமும் இணையமும் கற்றல், கற்பித்தலில் பயிற்றுக் கருவிகளாக இடம்பெறத் தொடங்கிய பிறகு வகுப்பறை என்பதற்கான பருப்பொருள் தன்மையே மாற்றம் பெறலாயிற்று. இன்றைக்குப் பல்லூடகமும் இணையமும் பயிற்றுக் கருவியாக மட்டுமல்லாமல் பயிற்றுநராகவும் செயல்படத் தொடங்கியுள்ளன. சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு, கற்றல் கற்பித்தலில் 30 சதவீதம் கணினிப் பயன்பாடு இருத்தல் அவசியம் என 2008 இல் அறிவித்த பிறகு தமிழ்மொழிக் கல்வியில் பல்லூடக, இணையப் பயன்பாடுகள் பெருமளவு பரவலாக்கப்பட்டுள்ளன.
இணையம் வழிக் கற்பித்தலில் மின்னஞ்சல், இணைய உரையாடல், காட்சிவழிக் கலந்துரையாடல், செய்திக் குழுக்கள், கோப்புப் பரிமாற்று நெறிமுறை, சமூக வலைத்தளங்கள் முதலான இணைய வாய்ப்புகள் மிகவும் உறுதுணையாக உள்ளன. மேலும் பல்லாயிரக் கணக்கிலான தமிழ் வலைத்தளங்களும் வலைப் பதிவுகளும் கற்பித்தலுக்கு உதவக்கூடிய கட்டுரைகள், கதைகள், கவிதைகள், முதலான தரவுகளை வழங்குவது மட்டுமன்றி மின் இதழ்கள், மின் நூலகங்கள், இணையத் தமிழ் அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் எனப் பல்வேறு வகையான கற்றல், கற்பித்தல் மூலங்களையும் இணையம் வழங்குகின்றது.
கணினி, கணினிவழிப் பல்லூடகம், இணையம், இணைய வழி ஏந்துகள் எனக் கற்றலும் கற்பித்தலும் காலத்திற்கேற்பப் பல புதிய கோலங்களைப் புனைந்து நம்மை வியப்பிலாழ்த்தினாலும் அவைகள் ஒருபோதும் கற்பித்தலில் ஓர் ஆசிரியரின் இடத்தை நிரப்பவல்லன அல்ல. வகுப்பறை என்பது தொழிற்கூடமன்று.
புலன்களால் கற்பது மட்டுமல்ல கல்வி. அது மனத்தால் கற்பது.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்    
என்பார் ஒளவையார். மனப் பழக்கத்தால் பயிலுவதே கல்வி. கற்றலுக்குப் பயன்படும் கருவிகள் மாணவர்களின் புலன்களைப் பழக்கவல்லன. ஆனால் ஆசிரியரே மாணவர்களின் மனத்தைப் பழக்க வல்லவர். வகுப்பறைச் சூழல், மாணவர்கள் மனநிலை இவற்றைக் கருத்தில் கொண்டு அன்றன்றைக்குத் தேவைப்படும் உத்திகளோடு வகுப்பறையை உயிரோட்டம் உள்ளதாக மாற்றும் சக்தி ஆசிரியர்களுக்கே உண்டு. இப்படிச் சொல்வதன் நோக்கம் புதிய தொழில் நுட்பங்களை புறக்கணிப்பதாகாது. எத்தகைய அறிவியல், தொழில் நுட்ப வசதிகள் கிடைத்தாலும் அவற்றையும் பயன்கொண்டு நம்மை உயர்த்திக் கொள்வதுதான் சரியான பகுத்தறிவு என்றாலும் துணைக் கருவிகள் துணைக்குத்தான் என்ற தெளிவு நமக்கு வேண்டும்.
***
சிங்கப்பூர்க் கல்வி அமைச்சகம் இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைச் சூழலிலேயே இத்தகு திறன்களை வளர்த்துக் கொள்ளுதலுக்குத் தங்கள் கற்பித்தல் அணுகுமுறைகளில் புதியன புகுத்திட வேண்டும் என்பதிலும் விழைவு கொண்டிருப்பது காலத்தின் தேவையை உணர்ந்த தக்கதோர் முன் முனைப்பாகும்.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர்கள் பெறுவதற்குப் பிற கல்விப்புலங்களை விட மொழிப்புலமே மிகச் சரியான தளமாகும். மொழித் திறன்களாகிய பேசுதல், கேட்டல், எழுதுதல், படித்தல் ஆகிய தொடர்பாடல் திறன்களின் வழியாகத்தான் மேற்சொன்ன திறன்களை மாணவர்கள் பெறுதல் எளிதாகும். மொழிக் கல்வியின் பாடத்திட்டங்களும் இத்திறன்களைப் பெறுவதற்கு உண்மையிலேயே சரியான களமாக அமைகின்றன.
இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்கள்
1. குடியியல்சார் அறிவு, உலகளாவிய விழிப்புணர்வு, மற்றும் பிற
கலாசாரங்களைப் புரிந்துகொண்டு கையாளக்கூடிய திறன்கள்
துடிப்பான சமூக அக்கறைகொண்ட வாழ்வை மேற்கொள்ளுதல்,
தேசிய மற்றும் கலாசார அடையாளங்களைத் தெரிந்துகொண்டு நாட்டுருவாக்கத்துக்குத் தேவையான பண்புநலன்களைப் பெறுதல்
உலகை மிரட்டும் பிரச்சினைகளை அறிந்துகொள்வதில் அக்கறை காட்டுதல்
சமூகக் கலாசாரக் கூருணர்வும் விழிப்புணர்வும் பெறுதல்
2. நுண்ணாய்வுத் திறனும் புத்தாக்கப்புனைவுத் திறனும்
மாணவர்கள் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, காரண காரியத்தோடு பேசுதல், பிரச்சினைகளுக்குத் தெளிவான முடிவு எடுத்தல் முதலிய திறன்களைப் பெறுதல்
புதியனவற்றை அறிந்துகொள்ளும் முனைப்பு, அவற்றைப்பற்றி மீள்நோக்கிக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் திறன் மற்றும் படைப்பாக்கத்திறன் முதலியன மேம்படுதல்
3. தகவல் மற்றும் கருத்துப் பரிமாற்றத் திறன்கள்
புதிய, பலதரப்பட்ட தகவல்களைத் திறந்த மனத்துடன் பெற்றுப் புரிந்துகொண்டு செயற்படுதல்
தகவல்களைப் பெறும்போது இணையப் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளுதல்
இணையத்தில் பெற்ற தகவல்களைப் பொறுப்புடன் பயன்படுத்துதல்
பெற்ற தகவல்களை பகிர்ந்துகொள்ளும்போது, பிறருக்குப் புரியும் வகையில் எடுத்துக்கூறும் திறனைப் பெறுதல்

இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களின் குவி மையம் உலகைப் புரிந்து கொள்ளுதலும் கருத்துப் பரிமாற்றத் திறன் பெறுதலும்தான். இன்றைய உலகமயச் சூழலில் கல்வியின் இலக்கும் இத்திறன்களைப் பெறுவதில்தான் முழுமைபெறும் என்பதில் ஐயமில்லை. மொழிக்கல்வியின் முதன்மை நோக்கமே கருத்துப் பரிமாற்றத் திறன்களை வளர்ப்பதுதான். கூடுதலாக நாம் கவனம் செலுத்தவேண்டிய திறன் உலகு தழுவிய விசாலப் பார்வையைக் கற்பிப்பது. இந்த இரண்டு நோக்கங்களை மையப்படுத்தி மொழியாசிரியர்கள் தங்கள் கற்பித்தலை மேம்படுத்துதல் வேண்டும்.
உலகம் எதிர்கொண்டுள்ள ஏதேனும் ஒரு சிக்கலை முன்னிறுத்தி 21 ஆம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர்களுக்குக் கற்பிக்கலாம்.
சான்றாக, புவி வெப்பமடைதல்.
புவி வெப்பமடைதல் குறித்த சிக்கல்கள் -தீர்வுகள் -நமது கடமைகள் குறித்து ஆசிரியர் அறிமுக நிலையில் முன்னுரைத்து இப்பிரச்சனை தொடர்பான கூடுதல் தகவல்களை இணைய வழியாகத் திரட்டக் கற்றுக்கொடுத்தல் -தேடுபொறிகளைக் கையாண்டுத் தரவுகளைத் திரட்டப் பயிற்றுவித்தல் -விவாதக் குழுக்களில் இணைந்து இப்பொருள் குறித்து விவாதிக்க வழிகாட்டுதல் -மின்நூலகம், மின்னிதழ்கள் இணையக் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடக் கற்பித்தல்.
புவி வெப்பமடைதல் குறித்த தகவல்களைத் திரட்டியபின் இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் தொடர்பாக மாணவர்களின் கருத்துப் பரிமாற்றத் திறன்களை வளர்த்தல் -நல்ல குடிமகனாகத் தன்னளவில் செய்ய வேண்டுவன யாவை என உணர்த்தலும் உணரச் செய்தலும்.
வகுப்பறைக் குழு விவாதங்களின் வழி, சிக்கலின் தீவிரத்தை அறியச் செய்தல். புவி வெப்பம் குறித்த கட்டுரை, கவிதை, நாடகம் முதலான படைப்பாக்கங்களை உருவாக்க வழிகாட்டுதல், நாடகங்களை நடிக்கச் செய்தல், மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்து சொற்போர் நிகழ்த்தப் பயிற்றுவித்தல் முதலான பல பயிற்சிகளின் வழி இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர் பெற்றுச் சிறக்க ஆசிரியர் தம் கற்பித்தலில் முனைப்பு காட்டலாம் வேண்டும்.  
****
கற்பித்தல் என்பது ஒரு கலை. அதிலும் மொழி கற்பித்தல் என்பதனைத்  தனிப்பட்ட ஒவ்வோர் ஆசிரியரின் செய்நேர்த்தியோடு கூடிய கலையாகவே நாம் கருதுதல் வேண்டும். மொழியாசிரியர் தம் பணியின் தொடக்கக் காலங்களில் தாம் கற்றுக்கொண்ட ஏதோ ஓர் அணுகுமுறையில் மொழிக்கல்வியைத் தொடங்கினாலும் தம் பணியில் அனுபவ முதிர்வு ஏற்பட ஏற்படத் தமக்கான ஒரு கற்பித்தல் அணுகு முறையினைத் தாமே உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். இத்தகு புதிய அணுகுமுறை அவரவர்க்கு வாய்த்த வகுப்பறைச் சூழல்களின் அடிப்படையில் உருவாக வேண்டும். மொழி கற்பித்தலின் வெற்றிகரமான பழைய அணுகுமுறைகள் பலவும் தனிப்பட்ட ஆசிரியர்கள் சிலரால் உருவாக்கப்பட்டவைகளே என்பதனை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
ஓவியக் கலைஞனோ, சிற்பக் கலைஞனோ, இசைக் கலைஞனோ எந்த ஒரு கலைஞனும் தன் கலைத்திறமைக்குத் தேவைப்படும் சில அறிவியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு தன் கலையை வளர்த்துக்கொண்டாலும் அக்கலைஞனின் வெற்றி அவனது தனிப்பட்ட செய்நேர்த்தியிலும் படைப்பாற்றலிலும்தான் முழுமை பெறுகிறது. அதேபோல் ஆசிரியனும் ஒரு கலைஞனே. அவனது வகுப்பறை ஒரு கலைக் கூடமே. அவனது கற்பித்தல் ஒரு கலை வெளிப்பாடே. ஆசிரியனின் வெற்றியும் அவனது தனிப்பட்ட கற்பித்தல் நேர்த்தியிலும் தகுதியான மாணவர்களை உருவாக்கும் படைப்பாற்றலிலும்தான் முழுமை பெறுகிறது. கற்பித்தல் செய்நேர்த்தி என்பது ஆசிரியரின் ஈடுபாட்டோடு தொடர்புடையது. எத்தனை மேடைகளில் பாடியிருந்தாலும், நடனமாடியிருந்தாலும் அன்றைக்குத்தான் முதல்முறையாக மேடையேறும் கலைஞர்களைப்போல பாடகர்களும், நடனக் கலைஞர்களும் சாதகம் செய்தோ ஒத்தகை பார்த்தோ தங்களைத் தயார் செய்துகொள்வதைப் போல் ஆசிரியர்களும் ஒவ்வொரு நாளும் கற்பிக்க வகுப்பறைக்குச் செல்வதற்குமுன் முன்தயாரிப்பில் ஈடுபடவேண்டும். ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய ஈடுபாடே ஆசிரியர்களின் வெற்றிக்கு முதல்படி.
புதுமை புரிவீர்! புத்துணர்ச்சி பெறச்செய்வீர்! இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் வகுப்பறை என்ற இக்கருத்தரங்கின் நோக்கம் முழுமைபெற வேண்டுமென்றால் ஒவ்வொரு மொழியாசிரியரும் தமது கற்பித்தலை ஒரு கலை வெளிப்பாடாக, ஒரு படைப்பாக்க வெளிப்பாடாக மாற்ற முயலவேண்டும். அதன் முழுமையில்தான் புத்துணர்ச்சி அடங்கியுள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டின் தமிழ் வகுப்பறைகள் இயந்திர மயமாக இல்லாமல் உயிரோட்டம் உள்ளனவாக அமைதல் வேண்டும். 
கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகளோடு இந்த உரையை நிறைவு செய்கிறேன்.
உங்கள் குழந்தைகளைத்
தயவுசெய்து
படித்த ஆசிரியரிடம் ஒப்படைக்காதீர்கள்;
படிக்கின்ற ஆசிரியரிடம் ஒப்படையுங்கள்.

துணைநின்ற நூல்கள் கட்டுரைகள்:
1.             இணையம் வழித் தமிழ் கற்பித்தல் (இணையக் கட்டுரை) சுப.நற்குணன்
2.             கணினியும் தமிழ் கற்பித்தலும் (நூல்) டாக்டர் சுப.திண்ணப்பன்,
3.             சிங்கப்பூரில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் கணினியின் பயன்பாடு -(இணையக் கட்டுரை) முனைவர் ஆ.இரா.சிவக்குமரன்.
4.             சீன ஞானம் -வாழ்க்கை வெளிச்சம் (நூல்) டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி
5.             தமிழின் புதிய தேவைகளின் பார்வையில் தமிழ் கற்பித்தல்
(இணையக் கட்டுரை) பேராசிரியர் இ.அண்ணாமலை
6.             தமிழ் கற்பித்தலில் பயிற்சிகள் (நூல்) த.பரசுராமன்


Dr.N.Ilango



செவ்வாய், 19 ஜூன், 2012

காக்கை குருவி எங்கள் ஜாதி (கலாவிசு சிறுகதைகள்) அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் மீது எனக்கு அலாதி ஈர்ப்புண்டு. தமிழின் ஈராயிரம் ஆண்டு இலக்கிய வெளியில் கவிதைகளைப் படித்து, அதில் கரைந்து போவதைவிடச் சிறுகதைகளில்தான் நான் அதிகம் கரைந்து போயிருக்கிறேன். நல்ல சிறுகதை, அதனைப் படித்து முடித்த பின்னும் நெடுநேரம் நம்மோடு உரையாடி உறவாடி நீங்காமல் நிலைத்திருக்கும். சுவையான காபி கடைசிச் சொட்டுவரை குடித்து முடித்த பின்னும் நாக்கிலும் மனதிலும் நெடுநேரம் சுகமாகக் குடியிருப்பதைப் போல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிறந்த சிறுகதை, வாசகனை அடுத்த கதையைப் படிக்க விடாது.

ஐரோப்பியர் வருகை, அச்சியந்திர அறிமுகம், ஆங்கிலக் கல்வி வாய்ப்பு முதலான அகப்புறச் சூழல்களே தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோன்ற வாய்ப்பளித்தன. தமிழில் உருவான உரைநடை இலக்கிய வகைகளில் சிறுகதை என்பது கடைசி வரவு. தமிழில் நாவல்கள் தோன்றி ஐம்பதாண்டுகள் கழித்தே தமிழ்ச் சிறுகதைகள் உருவாயின. உரைநடை இலக்கிங்களில் சிறுகதைதான் கடைசிக் குழந்தை என்பதால் கடைக்குட்டியின் மீது எல்லோருக்குமே ஒரு தனி ஈர்ப்பு இருப்பது இயல்புதானே.
தமிழில் சிறுகதைகள் பிறந்து இன்னும் ஒரு நூற்றாண்டைக் கூடக் கடக்கவில்லை. 1926 இல் வ.வே.சு. ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதை யிலிருந்துதான் தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு தொடங்குகிறது. முதல் ஐம்பதாண்டு களிலேயே தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகள் எல்லாம் எழுதப்பட்டு விட்டன என்ற நம்பிக்கை எனக்குண்டு. இரண்டாம் ஐம்பதாண்டுகளில் தமிழ்ச் சிறுகதைகள் அந்தப் பழம்பெருமையைக் காப்பாற்றித் தக்கவைத்துக் கொள்ளவே பெரும்பாடு படவேண்டியுள்ளது. முதல்பாதி நூற்றாண்டுச் சிறுகதைகளை வாசித்த அதே ஈடுபாட்டோடுதான் இன்றைக்கு வருகிற சிறுகதைகளையும் நான் வாசிக்கிறேன். படைப்பின் செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதைகளுக்கு மட்டும் அப்படி என்னத் தனிச்சிறப்பு? தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி, நாடி துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து, கூட்டுக்கு வந்ததும் ஆறஅமர வயிற்றிலேயே சிலபல வேதி மாற்றங்களைச் செய்து அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே, அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும். வாழ்க்கை அவர்களின் படைப்பில், படைப்பாற்றலில் வேதிமாற்றமடைந்து அழியாத கலையாகிறது! இலக்கியமாகிறது.
சிறுகதை என்பது வடிவில் சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதை சொல்வதனாலேயே அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ, இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை. கலாவிசுவின் சிறுகதைகளும் சற்றேறக்குறைய அதைத்தான் செய்கின்றன.
II
நூலாசிரியர் கலாவிசு புதுவை அறிந்த நல்ல கவிஞர். கவிதை வானில் என்ற இலக்கிய அமைப்பையும் அதே பெயரிலான ஓர் இலக்கிய இதழையும் தொடங்கித் தொடர்ந்து நடத்திவருபவர். நண்பர்கள் தோட்டம் நடத்தி வெற்றிபெற்ற முழுநிலாப் பாட்டரங்கங்களைத் தொடர்ந்து, கவிதை வானில் பாட்டரங்குகள் புதுவையில் தனிமுத்திரைப் பதித்து வருகின்றன. புதுச்சேரியின் கவிதை வளர்ச்சிக்கும் கவிஞர்களின் வளர்ச்சிக்கும் இந்தப் பாட்டரங்குகளின் பங்கு நிச்சயம் உண்டு. முதன்முதலாகக் கவிதைவானில் நிகழ்ச்சியில் மேடையேறி இன்றைக்கு நல்ல கவிஞர்களாய்ப் புதுவையில் வலம் வருவோர் பலருண்டு. குறிப்பாகப்  பெண் படைப்பாளியர் பலருக்கு அவர் தக்க களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். கவிதைகளை ஜனநாயகப் படுத்தியதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். படைப்பிலக்கியத் துறையில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எனத் தொடர்ந்து இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள கலாவிசு, இலக்கியப் பணியோடு சமுதாயப் பணியிலும் ஆர்வமுடையவர். தன் விருப்பப் பணியாகப் புதுச்சேரிக் குடும்பநல வழக்குமன்றத்தில் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். இந்நூல் இவரின் பத்தாவது நூல். சிறுகதை வரிசையில் இது மூன்றாவது நூல்.

காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருபத்தாறு சிறுகதைகள் உள்ளன. இன்றைக்கு வருகின்ற சிற்றதழ்களுக்கு ஏற்றவகையில் அவை அளவால் சிறுத்துக் காணப்படுகின்றன. பெரும்பாலான சிறுகதைகள், அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து, அதாவது அவர் பார்த்த, கேட்ட, அனுபவித்த வாழ்க்கையின் பகுதிகளிலிருந்து சிறுகதை வடிவம் பெற்றிருக்கின்றன. ஊடகங்களின் வழியாக இவர் வாசிக்க நேர்ந்த குறிப்பிடத்தக்க குற்றச் செய்திகளும் கூட இவரின் கதைக் கருவுக்குத் தப்பவில்லை. நூலாசிரியர் கலாவிசு சிறுகதைகளின் மையஅச்சு, குடும்பம் மற்றும் குடும்ப உறவுகள். இந்த மைய அச்சினைச் சுற்றியே அவரின் கதைகள் இயங்குகின்றன. அவர் அன்றாடம் தாம் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் இவைகளின் ஊடாகப் பயணம் செய்து குடும்பம் மற்றும் குடும்ப உறவுகள் சிதைக்கப்படுகிற கணங்களையும் அதன் உடனடி விளைவாக மறுமுனையிலிருந்து குடும்ப உறவுகள்; காப்பாற்றப்படுகிற கணங்களையும் கூர்ந்து கவனித்து எளிய கதைகளாக்கி இத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள,
1.    என்னை மன்னிச்சுடு பானும்மா..
2.    ஏரோட்டம் நின்னுபோனா!
3.    இந்தக் காலத்துப் புள்ளங்க
4.    காக்கைக் குருவி எங்கள் ஜாதி
5.    மனதோடு தான்
6.    பாட்டியும் பேத்தியும்
7.    பெத்தாதான் புள்ளயா?
8.    சூப்பர் மூன்
9.    ஏழையென்ற போதும்


முதலான கதைகளில் நூலாசிரியர் கலாவிசுவின் சிறுகதைப் படைப்பாற்றல் தனித்தன்மையோடு வெளிப்படுவதனைச் சிறப்பாகக் குறிப்பிடமுடியும்

    காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற இச்சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சாமான்ய மனிதர்கள், குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்கள், மற்ற உயர், மத்தியதர வகுப்பு மனிதர்களைக் காட்டிலும் போலித்தனப் பகட்டுகள் அற்றவர்களாகவும் பிறருக்கு உதவும் இரக்ககுணம் மிக்கவர்களாகவும் இயல்பாகச் சித்தரிக்கப் பட்டுள்ளனர்.
ஏழையென்ற போதும் என்ற சிறுகதையில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் குடும்பத்தில் உடல்நலமில்லாத குழந்தையை யாரிடம் விட்டுவிட்டுப் போவது என்ற சிக்கல் எழும்போது வேலைக்காரியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லலாம் என்று கணவன் சொல்ல மனைவி தயங்குகிறாள். அப்பொழுது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்,
என்னங்க? உங்களுக்குப் பைத்தியமா புடிச்சிருக்கு? சேரியில வாழ்ற பொம்பளகிட்ட புள்ளைய விட்டு, வீட்டையும் தொறந்து விட்டுட்டுப் போகணுங் கறீங்களே? அவ எதையாவது தூக்கிட்டுப் போயிட்டா?
இங்கபாரு! உனக்கு ஏழைங்கன்னா இளக்காரமா போயிடுச்சு! அவங்க உண்மையா இருப்பாங்க. நம்பள மாதிரி ஒளிச்சு அவங்களுக்குப் பேசத் தெரியாது. பழகினவங்களுக்கு ஒண்ணுன்னா உயிரைக்கூடக் கொடுப்பாங்க.
என்று விளிம்புநிலை மக்களின் போலித்தனமற்ற வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். மேலும் கதையின் முடிவில் வேலைக்காரியின் தன்னலமற்ற சேவையில் மனம்மகிழ்ந்த கதைத் தலைவியிடம் அவள் கணவன்,

அப்பாடா! இப்பவாவது உனக்கு புத்திவந்துச்சே.. அதுவே எனக்குப் போதும். எட்டி நின்னு என்னான்னு கேக்கற உறவுக்காரங்களை விட கூடவே இருந்து உதவுற ஏழைங்களத்தான் நம்மளோட சொந்தக்காரங்களா நினைச்சுக்கணும். அவங்ககிட்ட பணம் மட்டும்தான் இல்லை, குணத்தால அவங்கத்தான் உயர்ந்தவங்கன்னு உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
என்று சொல்வது கதையின் சிறந்த முடிப்பு.

    கலாவிசு சிறுகதைகளின் தனித்தன்மைகளாகச் சிலவற்றைப் பட்டியலிடமுடியும்.
1.    எளிய இனிய மொழிநடை.
2.    அளவான உரையாடல்
3.    இயற்கை இகந்த, அதீதப் புனைவுகளைக் கையாளாமை.
4.    கதை நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல்
5.    நம்பிக்கையளிக்கும் விதத்தில் வாழ்க்கையைப் பதிவுசெய்வது.
6.    விளிம்புநிலை மக்களின் பக்கம் நின்று படைப்பை உருவாக்குவது.
7.    சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது.
8.    இயற்கை, மனிதர்கள், பறவை விலங்கினங்கள் என விரிந்த தளத்தில்
மனிதநேயத்தைப் பேசுவது.
என்பன அவை.

    சிறுகதைகளின் மொழிநடையைப் பொருத்தமட்டில் அவற்றுக்கென்று சிறப்பான தனித்தன்மை வாய்ந்த விவரித்தல் முறை ஒன்றுண்டு. கதையை, சிறுகதை யாக்குவதில் அத்தகு விவரிப்பு நடைக்கு ஒரு முக்கிய பங்குண்டு. கதை நிகழ்ச்சிகளின் கோர்வைமட்டுமே சிறுகதை ஆவதில்லை. சொல்லப்போகும் கதையின் எடுத்துரைப்பில்தான் சிறுகதை முழுமைபெறுகிறது. நூலாசிரியர் கலாவிசு சிறுகதையின் இத்தகு எடுத்துரைப்பில் கணிசமான கவனம் செலுத்துதல் வேண்டும். இது என்அவா.
இத்தொகுப்பின் பெரும்பாலான சிறுகதைகளில் நூலாசிரியர் கலாவிசு ஒரு பார்வையாளராக இருந்தே அக்கதைகளைப் பதிவுசெய்கிறார். எந்தக் கதையிலும் படைப்பாளி சட்டென்று மூக்கை நீட்டி போதனை செய்யத் தொடங்கிவிடக் கூடாது என்பதில் அவர் விழிப்போடு இருக்கிறார். இந்த அம்சம் கலாவிசு கதைகளில் பாராட்டப்பட வேண்டிய அம்சம். பொதுவாகப் படைப்பாளிகளிடம் காணப்படும் நம்பிக்கை வறட்சி கலாவிசு சிறுகதைகளில் அறவே கிடையாது. சமூகம் குறித்த அவரின் பார்வையில் முழுக்க முழுக்க நம்பிக்கை ஒளிக்கீற்றுகளே விரவிக் கிடக்கின்றன. தான் வாழும் சமூகத்தை, சமூகத்தின் மக்களை மிகவும் நேசிக்கும் ஒருவரால்தான் இது சாத்தியம்.
இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வாசகர்கள் மனதிலும் நிச்சயம் இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கையை ஆசிரியர் தம் படைப்பாற்றலால் உறுதிப்படுத்தியுள்ளார்.

நூலாசிரியர் கலாவிசு தொடர்ந்து சிறுகதைத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும். அதற்கான முழுத்தகுதியும் அவருக்குண்டு என்பதை அடையாளம் காட்டும் தொகுதியாக காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற இச்சிறுகதைத் தொகுதி விளங்குகிறது. படைப்பாளிக்குப் பாராட்டுக்கள்.

         

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...