அக இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அக இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மே, 2019

நாட்டுப்புற இலக்கியமும் திணைக் கோட்பாடும்

முனைவர் நா.இளங்கோ
முதல்வர்,
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி,
புதுச்சேரி- 605008

திணைக் கோட்பாடும் அகமும்

மனிதன் உள்ளிட்ட எந்தவகை உயிரினத்திற்கும் உள்ள உயிர்க்கடமை இனப்பெருக்கமே. உயிரினங்கள் உண்பதும் உயிர் வாழ்வதும் இதன் பொருட்டே. பாலின ஈர்ப்பும் இன்ப நாட்டமும் எல்லா உயிர்களுக்கும் இயல்பான உயிர் இயக்கம்.
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்   (தொல். பொருள். பொரு. 27.)
இன்பநாட்டம் எல்லா உயிரினங்களுக்கும் இயல்பூக்கமாய் அமைவது என்று இலக்கணம் வகுக்கிறார் தொல்காப்பியர். இன்ப நாட்டத்திற்கான ஒருவகை உளவியல் வெளிப்பாடே அகம். ஆணும் பெண்ணும் கூடிக்கலக்கும் பாலியல் தேவைக்கான அழகியல் வெளிப்பாட்டு வடிவமே அகப்பாடல்கள். இத்தகு அகப்பாடல்கள் இலக்கிய ஆக்கம்பெற வடிவமைத்துக் கொள்ளப் பெற்றயே அகப்பொருள் மரபுகள்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்   (தொல். பொருள். அகத். 56.)
என்ற நூற்பாவில் புலனெறி வழக்கம் என்று இத்தகு மரபுகளைக் குறிப்பிடுவார் தொல்காப்பியர். புலனெறி வழக்கின் அகக் கட்டமைப்புகளே தொல்காப்பியர் குறிப்பிடும் திணைமரபு, கைகோள் மரபு, கூற்று மரபு ஆகிய மூன்றுவகை மரபுகளும். இவற்றுள் திணைமரபு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. தமிழின் திணைமரபு இரண்டு அடுக்குகளைக் கொண்டது. முதல் அடுக்கு நிலம் சார்ந்த தமிழர் வாழ்வியலின் பதிவுகளைக் கொண்டது. இரண்டாவது அடுக்கு புனைவியல் சார்ந்த இலக்கியக் கோட்பாடு.

அகத்திணை மரபுகள்:

தமிழ் இலக்கியத்தில் நீண்ட நெடிய அகப்பாடல் மரபுத்தொடர்ச்சி உண்டு. அவற்றுள் அகப்பாடல் மரபுகளைக் கட்டமைப்பதில் சங்க அகப்பாடல்களும் தொல்காப்பியமும் சிறப்பான பங்களிப்பினை வழங்கியுள்ளன. ஆயினும் தொல்காப்பியம் வரையறுக்கும் சிலமரபுகள் சங்க இலக்கிங்களில் பொருந்தி வரவில்லை. சங்க இலக்கியங்கள் முழுமைக்குமான பொதுவான அகத்திணை மரபுகள் என்று திட்டவட்டமாக எதனையும் வரையறுக்க இயலவில்லை. சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களிலேயே பல்வேறு அகத்திணை மரபுகளும் மரபு மீறல்களும் காணப்படுகின்றன.

திணை நில வாழ்க்கை:

மனிதர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய நிலத்தின் வெளியாகிய இயற்கைச் சூழலே திணைக் கோட்பாட்டிற்கு அடிப்படைக் காரணமாகத் திகழ்கின்றது. தமிழ் இலக்கியங்கள் சுட்டும் திணைநிலக் கோட்பாடு ஒரே சமயத்தில் இலக்கிய இலக்கண ஆசிரியர்களால் உருவானதன்று. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணையாகிய நிலங்களுக்கும் தமிழர் நாகரிக வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமூக வரலாற்றிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தொடக்கத்தில் மலைகளில் தொடங்கிய ஆதித் தமிழர்களின் வாழ்க்கை வேட்டையோடும் கூடியுண்ணலோடும் தொடர்புடையதாயிருந்து, இது குறிஞ்சித் திணை வாழ்க்கை. காலப்போக்கில் பல்லாயிரம் ஆண்டுக்கால இடைவெளிகளில் மலைகளில் வாழ்ந்த கூட்டத்தின் ஒருபிரிவு இடநெருக்கடி காரணமாகவோ வேறு காரணங்களாலோ மலையிருந்து கீழிறங்கி மலைச் சாரல்களில், காடுகளில் வாழ்க்கைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தக் காடு சார்ந்த முல்லைத் திணை வாழ்க்கையில் மனிதன் விலங்குகளைப் பழக்கப்படுத்தி வளர்க்கத் தொடங்கியதன் வாயிலாக ஆநிரை வளர்ப்புச் சமூகம் உருவாகியிருக்க வேண்டும். இதே காலகட்டத்தில் அவர்கள் வன்புல விவசாயத்தைக் கற்றிருக்க வேண்டும் மீண்டும் பல்லாயிரம் ஆண்டுக்கால இடைவெளிகளில் ஒருபிரிவினர் காடுகளிலிருந்து இடம்பெயர்ந்து சமவெளி களையும் ஆற்றங்கரைகளையும் நாடி வாழத் தொடங்கியபோது மென்புல விவசாயத்தை மேற்கொண்டிருக்க வேண்டும், இதுவே மருதத் திண வாழ்க்கை. மருதத்திணை வாழ்க்கையில் மென்புல விவசாயம் தந்த உபரி உற்பத்தி, வளமான வாழ்க்கை அடுத்த தேடலுக்கு வழிவகுத்திருக்க வேண்டும் காலம் செல்லச் செல்லப் பெருங்கடல் குறித்த அச்சம் விலகி கடற்கரை வாழ்க்கையும் ஆழ்கடல் மீன்பிடிப்பும் உப்பு உற்பத்தியும் தொடங்கியிருக்கும். இந்த கடற்கரையும் வணிக நாகரிகமும் நெய்தல் திணை வாழ்க்கையாக அமைந்திருக்க வேண்டும்.
(இங்கே, பாலைத்திணை ஒரு புதிர். தமிழ்ச் சமூக வரலாற்றில் பாலைத் திணைநிலக்கான இடம் யாது என்ற ஐயத்திற்குச் சிலப்பதிகாரம் அளிக்கும் விடை,
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" 
குறிஞ்சி, முல்லைத் திணைநிலங்கள் இயற்கை மாற்றங்களால் பலகாலம் மழையின்றி வறண்டு உருமாறிச் சிதையும் காலங்களில் பாலைநிலமாக மாற்றம் பெறும். நிலம் மழையின்றி வறண்டால் வாழும் மக்களின் வாழ்க்கையும் தடம்புரளும் பாலைத்திணை வாழ்க்கையும் அவ்வாறே) 
எனவே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணை வாழ்க்கையும் தமிழ்ச் சமூகத்தின் சமூக வரலாற்றுப் பதிவுகளாக அமைந்திருப்பது சிறப்பு. சங்க அகப்புற இலக்கியங்களும் தொல்காப்பியமும் இந்தத் திணைநில வாழ்க்கையை இலக்கியத்தின் பாடுபொருளாகவும் இலக்கிய படைப்பாக்கக் கோட்பாடுகளாகவும் வரித்துக் கொண்டன.
மலை, காடு, வயல், கடல், வறண்ட பகுதி ஆகிய ஐந்து நிலப்பகுதியையும் அக வாழ்வின் புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் முதலான சூழல்களுடன் தொடர்புப்படுத்தி இலக்கியம் படைக்கும் மரபானது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் இதனை ஓர் இலக்கியப் படைப்பாக்கக் கோட்பாடாக இலக்கணம் செய்கிறது. இங்கே திணை என்ற சொல் ஒரு குறியீடாக வாழ்க்கையையும் இலக்கியப் படைப்பையும் இணைக்கின்றது. திணை என்ற சொல்லுக்குத் தொல்காப்பியர் விளக்கம் தரவில்லை. திணை என்பதற்கு ஒழுக்கம், இடம், குடி, குலம், நிலம், பொருள் ஆகிய பொருள்களை அகராதிகள் சுட்டுகின்றன. இவற்றுள் தொல்காப்பியர் சுட்டுவது ஒழுக்கம் எனும் பொருளில் என்கிறார் நச்சினார்க்கினியர். திணையைத் தொல்காப்பியர் கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை என்ற மூவகைப்பட்ட எழுதிணையாகப் பகுக்கின்றார். இத்திணையானது முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனும் முப்பொருளை உள்ளடக்கியதாக அமையும்.
அகப்பொருளின் திணைக் கோட்பாடு முதல், கரு, உரி என்ற மூன்று கூறுகளை உள்ளடக்கியது என்றாலும் திணைக் கோட்பாட்டின் உயிர்நாடி உரிப்பொருளே. முதலும் கருவும் பாட்டின் உள்ளடக்கமாகிய உரிப்பொருளைச் சிறப்பிக்கவே பாடலில் கையாளப்படுகின்றன. குறிஞ்சித் திணைக்கான உரிப்பொருள் புணர்தல் என்றால் அந்த உள்ளடக்கம் கற்போர் நெஞ்சில் மனஓவியமாக விரிவதற்கு மலை என்ற நிலமும் குளிர்காலம் என்ற பெரும் பொழுதும் நள்ளிரவு என்ற சிறுபொழுதும் முதல்பொருளாக அமைந்து துணை செய்கின்றன. அவ்வாறே விலங்கு, பறவை, மரம், செடிகொடி முதலான இயற்கையும் இன்னபிறவும் கருப்பொருட்களாக அமைந்து கவிதைதரும் மனவுணர்வினை மிகுவிக்கின்றன.
குறிஞ்சித் திணைக்கு உரிப்பொருள் புணர்தல் என்று வரையறுப்பதும் திணைக் கோட்பாடே. அகவாழ்க்கையில் தலைமக்களின் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் எல்லா நிலங்களில் நிகழும் என்றாலும் மலைநிலத்தில் அதாவது குறிஞ்சித் திணையில் புணர்தல் உரிப்பொருள் நிகழும் என வரையறுப்பது திணைக் கோட்பாடாகிய இலக்கியப் படைப்பாக்கக் கோட்பாடாகும். இவ்வாறே ஐந்திணைக் கோட்பாடுகளையும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்
திணைக் கோட்பாட்டின் அடிப்படை மக்களின் அகவாழ்க்கையை அதாவது பாலியல் மற்றும் இல்லறவியல் வாழ்க்கையை உரிப்பொருட்களாக வகைப்படுத்தி ஐந்து நிலங்களின் பின்னணியில் அந்தந்த நிலத்திற்குரிய உரிப்பொருளைப் பாடும் மரபுகளை வரையறுப்பது என்பதாகும். நிலங்களைத் திணையாக்கி உரிப்பொருளை வரையறுத்து முதல், கரு முதலான பின்னணிகளைச் சேர்ப்பதன் வழியாகத் திணைக் கோட்பாடு கட்டமைக்கப் படுகிறது.
அகப்பொருள் – அகத்திணை – திணைமரபு – கைகோள் மரபு என்றெல்லாம் எழுத்திலக்கியங்கள் போற்றி வளர்த்த இலக்கியப் படைப்பாக்கக் கோட்பாடுகளின் தொடர்ச்சியைச் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து கொஞ்சம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணமுடிகிறது என்றாலும் தொடர்ந்து தமிழிலக்கிய நெடும்பரப்பில் காண இயலவில்லை. இலக்கண நூல்கள் தொல்காப்பியத்தை ஒட்டியும் உறழ்ந்தும் அகப்பொருள் இலக்கணங்களைத் தொடர்ச்சியாகக் காப்பாற்றி வந்த நிலையிலும் இலக்கியங்கள் அகப்பொருட் பாடல்களைத் திணைமரபோடு பாடும் நிலையைக் கைவிட்டுவிட்டன. அகப்பாடல்களின் இடத்தைக் காதல் பாடல்கள் நிரப்பின. காதல்பாடல்களுக்கு திணைமரபு, கைகோள், கூற்று மரபு முதலான அகப்பொருள் மரபுகள் இல்லை. காதல் பாடல்கள் அகப்பொருள் மரபுகளைக் கைவிட்டாலும் தொல்காப்பியர் வரையறுத்த புலனெறி வழக்கினைக் கைவிடவில்லை.
ஏட்டிலக்கியங்களில் காணமுடியாத அகப்பொருள் மரபுத் தொடர்ச்சியினை நாட்டுப்புறக் காதல் பாடல்கள் கொஞ்சம் காப்பாற்றி வைத்துள்ளன.

காதலும் – அகப்பாடல்களும்

காதல் என்பது பாலுறவுத் தேவையை ஒட்டிய ஒரு செயற்கையான வெளிப்பாடே ஆகும். காதல், கற்பு, திருமணம் முதலான சிந்தனைகளுக்கு உடைமைச் சமூகத்திற்கு முந்தைய தாய்வழிச் சமூகத்தில் தேவை ஏற்படவில்லை. உடைமைச் சமுதாயம் தோன்றுகிற போதுதான் ஒருதார மணத்திற்குத் தேவை ஏற்படுகின்றது. தன்னுடைய உடைமையை நேராகத் தன்வாரிசே பெற பெண் ஒருகணவ மணத்தைக் கைக்கொள்ள வேண்டியதாகிறது. இத்தகு சூழ்நிலையில்தான் ஒருகணவ மணக் கோட்பாட்டைக் கட்டிக் காப்பதற்காகக் காதலும் கற்பும் கோட்பாடுகளாக உருவாயின. தனியுடைமை, ஆணாதிக்கம் இவற்றைக் கட்டிக் காக்க உருவாக்கப்பட்ட காதல் கோட்பாடு காலந்தோறும் இலக்கியவாதிகளாலும் ஆண்களாலும் ஆணாதிக்கத் தாக்குதலுக்கு உள்ளான பெண்களாலும் மிக உயரியதாகக் கருதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தது. சங்க அகப்பாடல்களும் திட்டமிட்ட முறையில் காதலை அகமாக்கி வளர்த்தன. ஆனால் நடைமுறையோ சமுதாயத்தில் பொருளாதார, சாதீய முரண்பாடுகளையும் மீறிய முறையில் காதல் உருவாக வாய்ப்பளித்தது. காதல் கோட்பாட்டின் நோக்கமும் நடைமுறை வாழ்க்கை நிலையும் முரண்படுகின்ற காரணத்தால்தான் மக்கள் இலக்கியக் காதலுக்குத் தரும் மதிப்பை நடைமுறைக் காதலுக்குத் தருவதில்லை.

நாட்டுப்புறக் காதல் பாடல்கள்:

பருவமடைந்த பெண்ணிற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் காதலர்களுக்கு இருக்கும் பாலினத் தடையும் சமுதாய முரண்பாடுகளுமே நாட்டுப்புறங்களில் காதல்பாடல்கள் தோன்ற வாய்ப்பளித்தன. தொழிற்களங்களில் தொழில்புரியும் ஆண் பெண்களுக்கிடையே இயல்பாக எழும் காதல் உணர்ச்சி சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவற்றால் தடைசெய்யப்படும்போது நிறைவேறாத காதலின் பக்கவாட்டுக் கால்வாயாக நாட்டுப்புறக் காதல்பாடல்கள் தோன்றுகின்றன என்பார்  நா.வானமாமலை.
காதல்பாடல்களும் அக இலக்கிய மரபுகளும்:
தனியுடைமையும் நிலவுடைமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஒட்டியே அக இலக்கியங்கள் உருவாயின. எனவேதான் அடியோரும் வினைவலரும் அன்பின் ஐந்திணைக்கு உரியர் அல்லர் என்றும் அவர்கள் அகப்புற ஒழுக்கங்களாகிய கைக்கிளை பெருந்தினைக்கே உரியர் என்றும் அகப்பொருள் வரையறுக்கின்றது, அடியோருக்கும் வினைவலருக்கும் மணஉரிமை, வாரிசுரிமை, சொத்துரிமை முதலான உரிமைகள் மறுக்கப்பட்டமைக்கான அடையாளமே இவ்வகை ஒதுக்கீடு. ஆனால் நாட்டுப்புறக் காதல்பாடல்களில் அடியோரும் வினைவலருமாகிய உழைக்கும் மக்களே (வயற்களத் தொழிலாளர்கள், வண்டியோட்டி, தோட்டத் தொழிலாளி, படகோட்டி முதலான அடித்தள மக்களே) தலைமக்களாக அமைந்தனர். அகப்பாடல்களுக்குரிய எவ்வகைக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெற்றியோ தோல்வியோ, சரியோ தவறோ, முறையோ பிசகோ எதனையும் வெளிப்படையாக வெளிப்படுத்தின நாட்டுப்புறக் காதல்பாடல்கள்.
நாட்டுப்புறக் காதல் பாடல்கள் சங்க அகஇலக்கியங்களைப் போல் அல்லாமல் காதலன் காதலி கணவன் மனைவி கூற்றாகவும் ஊரார் அலர்மொழிப் பாடல்களாகவுமே அமைந்துள்ளன. அகப் பொருளில் இன்றியமையா இடம்பெறும் தோழியை நாட்டுப்புறக் காதல்பாடல்களில் காணமுடியவில்லை.
இவ்வகைக் காதல் பாடல்கள் பொருண்மை அடிப்படையில் ஒரே வகையாக அமைந்தாலும் நிகழ்த்தலின் அடிப்படையில் மூன்று வகைப்படுகின்றன.
1. காதல் உறவுடைய ஆணும் பெண்ணும் காதல் பொருண்மையில்  பாடுவன.
2. காதலர் அல்லாதோர் தொழில் செய்யும்போதோ பொழுது போக்கிற்காகவோ பாடுவன.
3. தொழில் களத்திலோ பிற இடங்களிலோ காதல் நோக்கமின்றி ஆனால் காதல் உணர்வில் பாடுவன.
என்பன அவை.

காதல்பாடல்களின் வகைப்பாடு:

நாட்டுப்புறக் காதல் பாடல்கள் அவற்றின் பொருள் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப் பெறுகின்றன.
1. வருணனைப் பாடல்கள் (தலைவன் தலைவி வருணனை)
2. குறியிடம் கூறல், தூது பற்றிய பாடல்கள்.
3. திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தும் பாடல்கள்.
4. அலர், இற்செறிப்புப் பாடல்கள்.
5. பிரிவுத்துயர் பாடல்கள்.
6. வேசி உறவைப்பழிக்கும் பாடல்கள்.
7. கெடுத்துவிட்டு ஏமாற்றுபவனை ஏசும் பாடல்கள்.
என ஏழாக வகைப்படுத்தலாம்.
அகப்பாடல்களின் ஊற்று நாட்டுப்புறப்பாடல்களே!
நமக்குக் கிடைக்கும் மிகப்பழைய அகப்பாடல்கள் சங்க இலக்கிய அகப்பாடல்களே ஆகும். அவற்றிற்குரிய மரபுகள் தொல்காப்பியத்துள் விளக்கப் பெற்றுள்ளன. சங்கப்பாடல்கள் யாவும் கிரேக்க வீரயுகப் பாக்களைப் போல் வாய்மொழி இலக்கிமாகவே இருந்திருக்கலாம் என்று தாம் ஊகிப்பதாக ஜே. ஆ. மார் 1958-ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய ஆய்வுரையைத் தொடர்ந்து டாக்டர் க. கைலாசபதி சங்க இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்களே என ஆராய்ந்து அறுதியிட்டுக் கூறினார். ''வீரநிலைக் காலத்தில் எழுந்த இலக்கியங்கள் வாய்மொழிப் பாடல் இலக்கியங்களாகவே இருந்திருக்கின்றன” என்ற கைலாசபதியின் கூற்றால், ஒப்பியல் நோக்கில் ஆராயும்போது வீரநிலைக் காலத்தில் எழுந்த சங்க இலக்கியப் பாடல்களும் வாய்மொழி இலக்கியங்களாகவே இருந்திருக்கலாம் என்ற கருத்து வலிமை பெறுகின்றது.

காதல் பாடல்கள் அகப்பாடல்களான வரலாறு:

சங்க அகப்பாடல்களுக்கும் காதல் பாடல்களுக்கும் உள்ள உறவை நிரூபித்து நிலைநாட்டத் தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பா ஒன்றனை நாம் சான்று காட்ட வேண்டியுள்ளது. இந்நூற்பா அகப்பொருள் மரபைச் சுட்டுவதாக விளங்கிக்கொள்வதோடு வேறுஒரு சிறப்புப் பொருளும் இந்நூற்பாவில் பொதிந்துள்ளது,
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டுஎன ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர்    (தொல். பொருள். அகத். 56.)
இந்நூற்பாவிற்கு வழக்கமாக வழங்கிவரும் பொருள் புனைவியலும் உண்மையும் கலந்த நூல்நெறியாகிய அகப்பாடல்கள் கலிப்பா பரிபாடல் என்ற இருவகை யாப்பாலும் பாடப்படும் என்பதாகும்.
இந்நூற்பாவில் வரும் 'புலனெறி" என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளுமிடத்து, தொல்காப்பியர் எண்வகை வனப்பினுள் ஒன்றாகக் கூறிய 'புலன்" என்னும் வனப்பிற்குரிய விளக்கத்தைப் பொருத்திப் பார்த்து, நாடக வழக்கு-உரையாடல், உலகியல் வழக்கு- பாமர மக்கள் மொழி, பாடல் சான்ற- இசை கலந்து நிறைந்த, புலன்நெறி வழக்கு- சேரிமொழி இலக்கியம் எனப் புதுப் பொருள் கண்டு'' உரையாடலாகவும் பாமர மக்கள் மொழியும் கொண்ட இசை கலந்து நிறைந்த சேரிமொழி இலக்கியம் கலிப்பாவாலும் பரிபாட்டாலும் எழுதப்பெறும்" என இந்நூற்பாவை விளக்கலாம்
      நாட்டுப்புறக் காதல் பாடல்களுக்கும் சங்க அகஇலக்கியப் பாடல்களுக்கும் உள்ள உறவினை புலன்நெறி வழக்கு என்ற தொல்காப்பியக் கோட்பாட்டிலிருந்து விளங்கிக் கொள்வதனைப் போலவே நாட்டுப்புறக் காதல் பாடல்களின் உள்ளடக் கங்களை அகப்பாடல்களின் உரிப்பொருளோடு பொருத்திப் பார்த்தும் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
நாட்டுப்புற இலக்கியங்களும் திணைக் கோட்பாடும் என்ற இக்கட்டுரை தொல்காப்பியத் திணைக் கோட்பாட்டின் அங்கமான உரிப்பொருள் அமைப்பு நாட்டுப்புறக் காதல் பாடல்களில் எவ்வாறு ஒத்தும் உறழ்ந்தும் இடம்பெற்றுள்ளன என்பதனைக் களவியல் பாடல்களை மட்டும் களமாகக் கொண்டு ஆய்கின்றது. 

திணைக் கோட்பாடும் நாட்டுப்புறக் காதல் பாடல்களும்:

முதல் நிகழ்ச்சி தலைவன் - தலைவிக்கிடையே நிகழும் சந்திப்பு ஆகும். சந்திப்புக்குப் பிறகு பிரிந்து செல்லும் தலைவன், தலைவியின் எழில் நலத்தில் மயங்கிப் பாங்கனிடம் தன்னுடைய ஏக்கத்தைப் புலப்படுத்துகிறான். தானே அடுத்த சந்திப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு தலைவியிடம் பேச முயல்கிறான். அகக்காதல் மரபுப்படி தலைவனே தன்னுடைய காதலை வெளிப்படுத்தியாக வேண்டும். தலைமக்களின் காதல் களவில் தொடங்குகிறது. பகற்பொழுதினும், இரவுப் பொழுதினும் தலைவன் தலைவியைச் சந்தித்து, களவு மேற்கொள் கின்றான். அவை முறையே பகற்குறி, இரவுக்குறி எனப்படுகின்றன. இப்பகற்குறி, இரவுக்குறிகளுக்கு இடமும், நேரமும் அமைத்துக் கொடுப்பவள் பெரிதும் தலைவியுடைய தோழி ஆவாள்.
தலைவன் களவுக் காலத்தை நீட்டிக்க விரும்புவதையும், திருமணத்தைப் பற்றி நினைக்காததையும் உணர்ந்து, வரைவு கடாவுதலை மேற்கொள்ளத் தூண்டும் பொறுப்பு தோழிக்குரியது. களவு நீடிப்பதால் ஊரில் அலர் எழுகிறது. இதனால் களவு பெற்றோர்க்கும் தெரியவருகிறது. எனவே தலைவியின் பெற்றோர் தலைவியை இற்செறிப்புச் செய்கின்றனர். தலைவன் - தலைவி இருவரின் வதுவையில் நாட்டம் உடையவளான தோழி, உடன்போக்குக்கு ஏற்பாடு செய்கிறாள். தலைவன் தலைவியை அழைத்துச் சென்று தன்னுடைய ஊரில் திருமணம் செய்து கொள்கிறான். அதன்பிறகு கற்புக்காலம் தொடங்குகிறது.
அகப்பாடல்கள் சுட்டும் காதல் நிகழ்ச்சிக் கூறுகளில் பெரும்பாலானவை நாட்டுப்புறக் காதல் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. எத்தகைய மரபுகளைப் பின்பற்றி இக்காதல் நிகழ்ச்சிகள் சங்க அகப்பாடல்களில் பாடப்பட்டுள்ளன என்பதையும், அம்மரபுகள் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் எந்த அளவில் பயின்று வந்துள்ளன என்பதையும் காணும் போக்கில் இனிவரும் பகுதி அமைந்துள்ளது.

சந்திப்பு (இயற்கைப் புணர்ச்சி)

சங்க அகப்பாடல்களில் தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் சந்திப்பு எதிர்பாராத சந்திப்பாகும். தலைவி, தன் தோழியருடன் தினைப்புனம் காக்கச் செல்வாள். அவ்விடத்திற்கு வேட்டையாடும் பொருட்டு, வேட்டை நாய்களோடு, மலையெலாம் சுற்றித்திரிந்து, தலைவன் வந்து சேர்வான். மார்பில் செங்கழுநீரும் தலையில் வெட்சிப்பூவும் உடலில் சந்தனப்பூச்சும் கையில் வில்லும் அம்பும் கொண்டு முன்னிற்கும் தலைவனைக் காணத் தோழியர் நிற்பார். இதற்கிடையில் தலைவனும் தலைவியும் கண்ணொடு கண்ணினை நோக்கிக் காதற்குறிப்புக் கொள்வர்.
நாட்டுப்புறக் காதல் பாடல்களில் இத்தகைய சந்திப்பைக் காண முடிவதில்லை. நாட்டுப்புறக் காதலர்களாகச் சித்தரிக்கப்படுபவர்கள் பெரிதும் மணஉறவுமுறை சார்ந்தவர்களாக உள்ளனர். சிறுவயது முதலே ஒன்றாகப் பழகியவர்கள், பிறப்பு முதலே திருமண நிச்சயத்துடன் பழகி வருபவர்கள்.

இடந்தலைப்பாடு

முதல் சந்திப்பிற்குப் பிறகு காதல் வேட்கையுற்ற தலைவன், மறுநாளும் முதல்நாள் சந்தித்த இடத்திற்குச் சென்று, தலைவியைக் கண்டு பேசமுயலுவதை ‘இடந்தலைப்பாடு;’ என அகப்பாடல்கள் விளக்குகின்றன. இடந்தலைப்பாடு நிகழ்ச்சியில் தலைவனே தலைவியைப் புகழ்ந்துரைப்பான் தலைவியைப் பேசத்தூண்டுவான், தலைவி நாணம் மிக்குறுதல் காரணமாக ஏதும் பேசாது நிற்பாள்.
நாட்டுப்புறக் காதல் பாடல்களிலும் தலைவனும் தலைவியும் சந்தித்துப் பேசமுயலும் நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் இக்காதல் பாடல்களில் பல காதலியே காதலனிடம் பேச விருப்பம் கொள்வதுபோன்று அமைந்துள்ளன. காதலர் இருவரும் சிறுவயது முதல் ஒன்றாகப் பழகிவந்த உரிமைபற்றி இவ்விதப்பாடல்கள் அமைந்திருக்கலாம். மேலும் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் சுட்டப்படும் இத்தகைய பேசமுயலும் நிலை முதல் சந்திப்புக்குப் பிறகு நடப்பதாகக் காட்டப்படவில்லை. தனக்கு மிகவும் பழக்கமுள்ள மாமனிடம் காதலி பேசத்துடிப்பதாகவே பாடல்கள் அமைந்துள்ளன. தன்விருப்பத்தை ஆடவனுக்கு முன்பாகத் தெரிவிக்கும் மரபு பெண்ணுக்கில்லை என்ற தொல்காப்பிய மரபு (தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக்கு இல்லை” தொல்.களவியல் நூ. 28) நாட்டுப்புறக் காதலிக்குக் கிடையாது.

நலம்புனைந்துரைத்தல்

இடந்தலைப்பாட்டின் பின்னர், தலைவன், தலைவியின் எழில் நலத்தில் மயங்கி, காமநோய் கொண்டு, உறக்கமில்லாது தவிப்பான். அக்காலத்துத் தன் ஆருயிர்த் தோழனான பாங்கனிடம் தன்னிலை உரைப்பான். தலைவியுடைய எழில் நலங்களைக் கூறி, அவளுடன் ஒருநாள் உறவு கொண்டாலும் போதும், மேலும் வேறு வாழ்நாள் தேவையே இல்லை எனக் கூறுவான்.  தலைவனது ஆறாக்காதலை உணர்ந்த பாங்கன், தலைவன் சொன்ன இடம்சென்று, முன்னரே வந்து நிற்கும் தலைவியின் அன்பைக் கண்டு வியப்புற்றுத்  தலைவனுக்கும் தலைவிக்குமிடையே கூட்டம் நிகழக் காரணமாவான். இவை மரபை ஒட்டிச் சங்க அகப்பாடல்கள் தெரிவிக்கின்ற நிகழ்ச்சிகளாகும். ஆனாலும் தலைவி வருந்துதல், தலைவனின் எழில்நலத்தில் மயங்கி அவனை வருணித்துக் கிறங்குதல் போன்றவை சங்க அகப்பாடல்களில் இடம் பெறவில்லை.
நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காதலனுக்கு உதவிடப் பாங்கன் என்ற துணையும், காதலிக்கு உதவிடத் தோழி என்ற துணையும் கிடையாது. நாட்டுப்புறக் காதல் பாடல்களில் இடம்பெறும் காதலர்கள் தமது எண்ணங்களை ஒருவருக்கொருவர் தமக்குத் தாமே பரிமாறிக் கொள்பவர்களாக உள்ளனர். காமநோயால் காதலியின் நலங்களை எண்ணித் துயருறும் காதலனைப் போலவே, காதலனை எண்ணிக் காமவேதனையால் வருந்தும் காதலியையும் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காணமுடிகிறது.
“ஒருநாள் புணரப் பெறின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே”  என ஏங்கும் குறுந்தொகைத் தலைவனின் காதல் ஏக்கத்தைச் “செத்தாலும் செத்திடுவேன் சீமாட்டி மடிமீது” என்று ஏங்குகிற நாட்டுப்புறக் காதலனின் எண்ணத்தில் காணமுடிகிறது. நாட்டுப்புறக் காதலன், தன்னுடைய காதலியை உலகத்திலுள்ள வேறெதனையும்விடச் சிறப்பானவளாகக் கருதுகின்றான். உலகப்பொருள்கள் மட்டுமல்லாது தெய்வத்தை விடவும் தன் காதலியையே உயர்வானவளாகவும் கருதுகிறான் அவன். நாட்டுப்புறக் காதலியும் தன் காதலனின் உருவத் தோற்றத்தை நினைத்து அவனை மறக்க முடியாமல் அவதிப்படுவதை நாட்டுப்புறக் காதல் பாடல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிலை போடுவதால் சிவந்து காணப்படும் தலைவனின் வாயழகையும், மை இட்டதுபோல் கறுத்திருக்கும் கண்ணழகையும் ஆலிலைபோல் தோற்றமளிக்கக் கூடிய மேல் வகிடையும் வேப்பிலைபோல் தோன்றுகின்ற புருவ அழகையும் எண்ணிக் காதலி, காதலனை மறக்க மனம் வராமல் மயங்குவதையும், எழுத்தாணிச் சட்டம்போல வளையும் காதலனின் மேனி அழகில் காதலியின் மனம் ஒன்றியிருப்பதையும் நாட்டுப்புறக் காதல் பாடல்கள் விளக்குகின்றன.
சங்க அகப்பாடல்களில் தலைவனுக்கே உரியதாகப் போற்றப்படும் நலம் புனைந்துரைக்கும் பண்பு நாட்டுப்புறக் காதல் பாடல்களில் தலைவிக்கும் உரியதாகப் பேசப்படுகிறது.

குறியிடம்

சங்க இலக்கிய அகப்பாடல் மரபுப்படி, காதல் வயப்பட்ட தலைவனும் தலைவியும் அடிக்கடி சந்தித்துக் களவு மேற்கொள்வர். தலைவனும் தலைவியும் சந்தித்துக் களவு புரிதற்குத் தோழி உதவியாக இருப்பாள். இக்களவொழுக்கம் பகற்பொழுதிலும் இரவுப்பொழுதிலும் நடைபெறும். பகற்பொழுதைய களவு பகற்குறி எனவும், இரவுப் பொழுதைய களவு இரவுக்குறி எனவும் அழைக்கப் பெறும்.

பகற்குறி

தொல்காப்பியர் பகற்குறியின் இடமாக ஊரின் புறப்பகுதியை மொழிகிறார். வீட்டைவிட்டு நெடுந்தொலைவில் பகற்குறி நடைபெறும். பெரும்பாலும் தலைவி காவல்காக்கும் தினைப்புனத்தை ஒட்டிய இடங்களில் பகற்குறி நேரலாம். ஒரு பாடலில் தோழி ஒருத்தி, தானும் தலைவியும் கூந்தலுக்கு எருமண் கொணரும் பொருட்டு, ஊருக்கு அருகேயுள்ள கான்யாற்றுக்கு வருவதாகவும், அவ்வாற்றங் கரையிலுள்ள பொழிலில் தலைவியைச் சந்திக்கத் தலைவனை வருமாறும் பகற்குறி அமைத்துக் கொடுக்கிறாள். தினைப்புனத்தில் சந்திக்க முடியாது. தினைக்கதிர்கள் முற்றி விளைந்ததனால், வேட்டுவர் கொய்துசெல்ல வருவர், ஆதலின் புனங்காவலைக் காரணமாக் கொண்டு தலைவனோடு பேசுதல் இனி முடியாத காரியம் என்று தலைவன் காதில் விழுமாறு தோழி கூறுகிறாள். இத்தகைய நிலையில் பகற்குறியில் தலைவனைச் சந்திக்க நாணமடைந் திருப்பதாகத் தோழி தலைவனிடம் உரைப்பதை, அகநானூற்றுப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. பகற்குறிக்குத் தடை ஏற்பட்;ட பிறகு, இரவுக்குறியில் தலைவியைத் சந்திக்கத் தலைவனிடம் வேண்டுவாள் தோழி.

இரவுக்குறி

இரவுக்குறி நிகழும் இடம் வீட்டிற்கு அருகில் இருக்கும். வீட்டிலுள்ளோர் பேசுவது காதலர்க்குக் கேட்கும் தூரத்தில் இரவுக்குறி நடைபெறும். இதனைத் தொல்காப்பியர்.
            இரவுக்குறியே இல்லத் துள்ளும்
            மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே
            மனையகம் புகாஅக் காலை யான
என்று வரையறுக்கிறார்.
முதலில் வீட்டினருக்குப் பயந்து வீட்டின் புறத்தே சந்தித்துப் பழகியவர்கள், நாளடைவில் பயம் தெளிந்து வீட்டினுள்ளும் சென்று பழகத் தலைப்படுவர். அகப்பாடல்களில் காணப்படும் தலைவனும் தலைவியும் வேறுவேறு ஊரினர் ஆதலால் இரவுக்குறிக்காகத் தலைவியின் ஊருக்கு வரும் தலைவனை, அவ்வூர் மக்கள் எவரும் அறிதல் இயலாது எனத் தலைவனுக்குத் துணிவு கூறுகிறாள் தோழி. ஆயினும் இரவுக்குறிச் சந்திப்பைத் துன்பங்கள் நிறைந்த சந்திப்பாக விளக்குகின்றன அகப்பாடல்கள். தலைவன் தன் ஊர்விட்டு, தலைவியின் ஊர் வரவேண்டியுள்ளது. அவ்வாறு வரும்வழியில் ஏற்படும் பல இடர்ப்பாடுகளைப் பாடல்கள் விளக்குகின்றன.

நாட்டுப்புறக் காதல் பாடல்களில் குறியிடம்

நாட்டுப்புறக் காதல் பாடல்களும் குறியிடம் பற்றிக் கூறுகின்றன. நாட்டுப்புறக் காதலர்களிடையேயும் பகற்குறியும் இரவுக்குறியும் நிகழ்கின்றன. ஆனால் இங்குக் காதலன்- காதலியைச் சேர்த்து வைக்கத் தோழி என்பவள் இல்லை. இருவரும் தங்களுக்குள் குறியிடத்தைக் குறிப்பிட்டுக் கொள்வர். பெரிதும் காதலியே காதலனுக்குக் குறியிடம் சுட்டுவாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகப்பாடல்களில் பகற்குறி, தலைவி காவல் காக்கும் தினைப்புனத்தை ஒட்டிய இடங்களில் நிகழும். நாட்டுப்புறக் காதல் பாடல்களில் பகற்குறி, காதலி உழவுத்தொழில் தொடர்பான நாற்றுநடுதல், களை பிடுங்குதல், அறுவடை போன்ற வேலைகளுக்குச் செல்லும்போது வயற்புனத்தை ஒட்டிய இடங்களில் நடைபெறும். கோயில்களுக்குள்ளும் காதலனும் காதலியும் பகலில் சந்தித்துக் கொள்வதுண்டு. ஆயின் அங்குக் களவு நிகழுமா? என்பது ஐயத்திற்குரியது. காதலி வயல்வேலைக்குச் செல்லும்போது காதலன் அவளிடம், தாங்கள் பகலில் சந்திக்க வேண்டிய இடத்தைக் கூறும்படி கோருவதுண்டு. காதலன் கோயில் குளத்தில் வந்து தன்னைச் சந்திக்கும்படி கூறிச் செல்வதும் காதலி, காதலனைச் சவுக்குத் தோப்புக்கு வரச்சொல்வதாகவும் நாட்டுப்புறக் காதல் பாடல்கள் தெரிவிக்கின்றன. பகற்குறியில் காதலனும் காதலியும் சந்தித்துக் கொள்ளும்போது, யாருக்கும் ஐயப்பாடு எழாதிருப்பதற்காக அவர்கள் ஏதேனும் காரணத்திற்காகச் செல்வது போல் பாவனை செய்வர். விறகு திரட்டுவதற்காகக் காதலியை வரச்சொல்லியும், காளை ஒன்று தப்பிச் சென்றதைத் தேடி நான் வருவதாகவும் பகற்குறிக்கான இடத்தைக் குறிப்பிடுகின்றான் காதலன். பாக்கை நாவில் இட்டு வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தேடும் பாவனையில் தன்னை வந்து சந்திக்கும்படி, காதலி காதலனிடம் கூறுகிறாள். இவ்வாறு ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டுக் குறியிடம் கூறுவதாக அமையும் நாட்டுப்புறக் காதல் பாடல்களைப் போன்று அகப்பாடல்களில் காணமுடிவதில்லை.
நாட்டுப்புறக் காதல் பாடல்களில் சுட்டப்படும் இரவுக்குறி காதலியின் வீட்டருகிலேயே நடப்பதாக உள்ளதைக் காணமுடிகிறது. வீட்டிற்குள்ளும் இரவுக்குறி நிகழ்ந்ததை நாட்டுப்புறக் காதல் பாடல் சுட்டுகிறது. களவு முடிந்து, காதலன் திரும்பும் போது ஓசைகேட்டு விழித்துக்கொண்ட காதலியின் தந்தை, மகளிடம் காரணத்தை வினவுகிறார். காதலி காரம் பசுவும் கன்றும் கதறிக்கொண்டு ஓடக்கண்டேன் என்று கூறிச் சமாளித்து விடுகிறாள்.
நாட்டுப்புறக் காதல் பாடல்களிலும், இரவுக்குறிக்காக வரும் தலைவனை இடர்ப்படுத்தும் வழியருமைகள் சொல்லப்படுகின்றன. ஆற்றிலே ஆள் இறங்காத அளவுக்கு வேகத்துடன் தண்ணீர் வர, அவற்றைப் பொருட்படு;த்தாது நீந்திக் காதலன் வருவதாக நாட்டுப்புறக் காதல் பாடல் ஒன்று சித்தரிக்கிறது. நடுயாமத்தில் கற்களை வீசிப் பயப்படுத்தும் கன்னிமார்கள் நடமாடும் வழியைக் கடந்து காதலன் வருவதாகவும் நாட்டுப்புறக் காதல் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.
நாட்டுப்புறக் காதல் பாடல்களில் பகற்குறி, இரவுக்குறிகளை அமைத்துக் கொடுக்கத் தோழி என்கிற பாத்திரம் கிடையாது. காதலன் காதலியே குறியிடங்களைச் சுட்டிக் கொள்கின்றனர். ஊரார் தங்கள் மேல் ஐயம் கொள்ளா திருப்பதற்காக ஏதேனும் காரணங்களுடன், காதலர்கள் குறியிடங்களில் சந்தித்துக் கொள்கின்றனர்.

அலர்

தலைவனுடைய ஆர்வம் களவை நீட்டிப்பதிலேயே இருக்கும். திருமணத்தைப் பற்றிப் பெரிதும் தலைவன் நாட்டம் கொள்ளவில்லை. களவு நீடிப்பதால், ஊரார் இதைப் பற்றி முணுமுணுத்துப் பேசத் தொடங்குவர். இவ்வாறு களவைப்பற்றி ஊரில் எழும் முணுமுணுப்பே ‘அலர்’ என அகப்பாடல்களில் சுட்டப்படுகிறது. இங்கு ஊரார் எனக் குறிக்கப்படுவது ஊர்ப்பெண்கள் ஆவர். “ஐந்திணை இலக்கியத்துக்கு அழகு செய்பவர் உள்ளுர்ப் பெண்டுகள். அவரின்றேல் அவ்விலக்கியம் உப்பின்றியிருக்கும்” என்று வ.சுப. மாணிக்கம் குறிப்பிடுகிறார்.
ஊரார் தூற்றும் அலரால் நன்மைகள் உண்டு. களவைத் தடைசெய்து திருமணத்திற்கு வழிகோலுகிறது அலர். அலர் எழுவதால் தலைவி இற்செறிக்கப்படுகிறாள். இதனால் ஊராரைப் பற்றித் தலைவி ஆத்திரம் கொண்டாலும் தலைவனோடு தன்னை இணைத்துப் பேசித் திருமணத்திற்கு வழிவகுத்த ஊராரை அவள் போற்றவும் செய்கிறாள் என்பதை அகப்பாடல்கள் உணர்த்துகின்றன. அலர் ஏற்பட்டுப் பரவுகின்ற போதும் அவ்வலரைப் பற்றிக் கவலை கொள்ளாது. களவின்பத்திலேயே நாட்டம் உடைய தலைவனை அகப்பாடல் உணர்த்துகிறது. இச்சமயத்தில் தலைவனைத் தோழி இடித்துரைத்துத் திருமணத்திற்கு ஏற்ப்பாடு செய்யச் சொல்கிறாள்.
அலரைப் பொருட்படுத்தாத காதலனை நாட்டுப்புறக் காதல் பாடல்களிலும் காணமுடிகிறது. ஆனால் நாட்டுப்புறக் காதலன், களவுநாட்டம் உடையவனாய் அலர் எழுகின்ற சமயங்களில் காட்டப்படவில்லை. ஆயினும் களவு நாட்டம் உடைய அவன் அலர் பரவிவருகின்ற நேரத்தில், காதலைப் பற்றிய மதிப்பு உடையவனாகக் காணப்படுகிறான். ஊரார் பேசிவரும் அலரினால் பழிவந்து சேர்ந்தாலும், கழுவில் ஏற்றினாலும் காதலியின் முகத்தைக் காணாமல் இருக்கப் போவதில்லை என்று நாட்டு;ப்புறக் காதலன் சூளுரைக்கின்றான். தன்மனமும் காதலிமனமும் ஒன்றுபட்டிருந்தால் ஊரார் தம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்று காதலிக்குத் தேறுதல் மொழி கூறும் காதலனையும் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காணமுடிகிறது.
அகத்திணைப் பாடல்களில் அலர் காரணமாகத் தலைவி துன்பமும் மகிழ்ச்சியும் அடைவதாக முன்னர்க் கூறப்பட்டது. ஆனால் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காணப்படும் காதலி அலர் காரணமாகப் பெரிதும் துன்பமே அடைவதைக் காணமுடிகிறது. தாங்கள் கூடியதில் எந்தக் குற்றமும் இல்லை என்றும், ஊரார் வீணாகப் பேசித் தன் மனத்தை நோகச் செய்கின்றனர் என்றும் காதலி வேதனையுறுகிறாள். கதையளக்கும் ஊர்ப்பெண்கள் ‘நாய்கள்’ எனச் சாடுகிறாள் காதலி. அவ்வாறு தேவையின்றிப் பேசிவரும் அவர்களைச் செருப்பால் அடிக்க வேண்டுமென்று தன் மனத்திற்குள் வைது கொள்வதையும் நாட்டுப்புறப் பாடலில் காணமுடிகிறது.
அகத்திணைப் பாடல்களில் தலைவனும் தலைவியும் களவை நீட்டிக்காது, விரைவில் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற பயன்பாட்டு எண்ணத்துடன் அலர் பேசப்படுகிறது. திருமண நோக்கம் காரணமாக இருப்பதால் அலர் எழுவதற்குத் தலைவி மகிழ்ச்சி அடைகிறாள். ஆனால் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் சுட்டப்படுகின்ற அலர் திருமண நோக்கம் கொண்டிருக்கவில்லை எனத் தெரிகிறது. காதலன் - காதலியுடைய களவொழுக்கம் தவறானதாகக் கருதப்பட்டு அவர்களை ஊரார் குறை கூறுவதாகவே காதலி நினைப்பதுடன், அலர் எழுப்புகின்ற சமுதாயத்தின் மேல் அவள் ஆத்திரம் கொள்கிறாள்.

இற்செறிப்பு

அலர் மிகுகின்ற காரணத்தால் கவலையுள்ள தலைவியின் தாய், தலைவியை வெளியில் சென்று தலைவனைச் சந்திக்க முடியாமல் வீட்டினுள்ளே இருத்தி வைப்பாள். இற்செறிப்பைப் பற்றி விளக்கக் கூடிய நேரடியான பாடல்கள் சங்க அகத்திணைப் பாடல்களில் காணப்படவில்லை. பகற்குறியிலும் இரவுக்குறியிலும் தலைவியைச் சந்திக்க வரும் தலைவனிடம் தோழி, அலர் காரணமாகத் தலைவி இற்செறிக்கப்பட்டுள்ளாள் என்று உணர்த்துவதாகப் பாடல்கள் உள்ளன. இரவுக்குறியில் தலைவியைச் சந்திக்க வந்து அவளைக் காணமுடியாமல் திரும்பிச் சென்ற காதலனிடம் அடுத்தமுறை அவனைச் சந்திக்கத் தோழி, தன் தலைக்கொண்டை சிதைய, பீலிகளும் சாய, வலையிடத்தே அகப்பட்ட மயில் வருந்துவதைப் போல் தலைவியும் இற்சிறைப்பட்டு வருந்திக் கிடக்கிறாள்’ என்று கூறுவதைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.55 குறுந்தொகைப் பாடல் மற்றொன்றில் தோழி, இற்செறிப்பின் கொடுமையைத் தலைவியிடம் கூறுவது போலத் தலைவனும் கேட்டு அறியுமாறு உரைக்கிறாள். இற்செறிப்பைக் குறித்துத் தலைவன் அடைந்த உணர்ச்சிகளைப் பற்றி விவரிக்கக் கூடிய பாடல்கள் அகத்திணை இலக்கியத்தில் இடம்பெறவில்லை.
நாட்டுப்புறக் காதல் பாடல்களில் இற்செறிப்பின் கொடுமைகளைப் பற்றிய பாடல்கள் நிறைந்திருப்பதைக் காணமுடிகிறது. அலர் காரணமாக மகள் மேல் கோபம் கொண்ட தாய், மகள் ஒப்பனை செய்து கொண்டு வெளியே கிளம்புவதைக் கண்டு திட்டுகிறாள். வீட்டை விட்டு வெளியே சென்றால் மகளை வெட்டிப்போட்டு விடுவதாக மிரட்டுவதையும் நாட்டுப்புறக் காதல் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. காதலியுடைய தந்தை மகளை அடித்துத் துன்புறுத்தியதையும் நாட்டுப்புறக் காதல் பாடல்வழித் தெரிந்து கொள்ள முடிகிறது. காதலி இற்செறிக்கப்பட்டதை அறிந்து காதலன் வாடுவதையும் நாட்டுப்புறப் பாடல்கள் சித்தரிக்கின்றன. பெற்றோரின் இற்செறிப்பினால் பல கொடுமைகளை அனுபவித்தும், எப்படியேனும் காதலனை அடைய உறுதியேற்கும் காதலியின் துணிச்சலையும் நாட்டுப்புறக் காதல் பாடல்வழி தெரிந்துகொள்ள முடிகிறது.
இற்செறிப்பைப் பற்றி விவரித்தல், அகத்திணைக் காதல் ஒழுக்கத்திற்கு இழுக்காகும் எனக்கருதி, அத்துறையைப் புலவர்கள் பாடாது விடுத்திருக்கலாம். சமுதாய நடைமுறைகளை ஒளிவுமறைவின்றிச் சித்தரிக்கின்ற காரணத்தால் நாட்டுப்புறக்காதல் பாடல்கள் இற்செறிப்பினால் காதலி படும் துன்பங்களையும் விளக்கியுள்ளன எனக் கருதமுடிகிறது.

நொதுமலர் வரைவு

தலைவியின் பெற்றோர், அவளுடைய காதல் ஒழுக்கம் அறியாது, மணப்பருவம் காரணமாக மணம் பேச முயல்வர். ஆண்வீட்டார், பெண்வீட்டாரை அணுகிப் பேசுதலை மேற்கொள்வர். இந்நிகழ்ச்சிகள் அகப்பாடல்களில் ‘நொதுமலர் வரைவு’ என்னும் துறையில் சுட்டப்படுகின்றன.
அயலார் மணம் பேசவரும் காலகட்டம் களவொழுக்கம் ஒழுகும் தலைவியைப் பொறுத்தவரையிலும், இற்செறிப்புக் காலத்தைவிடத் துன்பமான சூழ்நிலை கொண்டதாகும். தலைவி தோழியிடம் கூறித் தலைவனுக்கு நொதுமலர் வரைவைப் பற்றித் தெரிவிக்கச் சொல்லுவாள். அகத்திணைப் பாடல்களில் தோழி படைக்கப்பட்டதன் நோக்கங்களுள் இதுவும் ஒன்று. எக்காலத்தும் அவள், தலைவனிடம் திருமணத்தைப் பற்றியேதான் குறிப்பிட்டுக் கொண்டிருப்பாள். நொதுமலர் வரைவுக் காலத்தில் தலைவனிடம் தலைவி கூறவில்லையாயினும் தோழி அப்பணியை மேற்கொள்வாள். நொதுமலர் வரைவுக் காலத்தில் தோழி தலைவனிடத்தில், தலைவியின் நிலைபற்றிக் குறிப்பாக உணர்த்துவதாக ஐங்குறுநூற்றுப் பாடலொன்று சுட்டுகிறது. “கடலிற் பிடித்து வரும் வளமான மீன்களை இரையாகக் கொள்ளக் காத்திருக்கும் கிழநாரைகள் மிகுந்த தொண்டிப் பட்டினத்திற்கு ஒப்பாகத் தலைவி உள்ளாள்” என்று குறிப்புமொழியாகத் தோழி உரைக்கிறாள். எனவே கிழவனாகிய ஒருவன் தன் காதலியை மணம்பேச முனைவதை அறிந்து தலைவன் வரைவுமுடுக்கம் கொள்வான்.
அகத்திணைப் பாடல்களில் சுட்டப்படும் ‘நொதுமலர் வரைவு’ நிகழ்ச்சிகளை, நாட்டுப்புறக் காதல் பாடல்களைப் பொறுத்தவரையில், ‘பெண் கேட்டல்’ எனும் தலைப்பில் அடக்கலாம். நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காதலியே, காதலனிடம் தன்னைப் பெண் கேட்கத் தன் வீட்டிற்கு வருமாறு தூண்டுகிறாள். நாலு காசு சம்பாதித்துக் கொண்டு வந்து மாமாவைப் பெண்கேட்டு மணம் முடிக்குமாறு காதலனிடம் வேண்டுவதை ஒருபாடல் விளக்குகிறது. பணம் வைத்திருந்தாலும் கூடத் தன் தாய்- தகப்பனிடம் காதலன் எதிர்வார்த்தை பேசாமலிருந்தால் தன்னை அவனுக்கே மணம்முடித்து வைப்பார்களென்று அறிவுரை கூறுவதை ஒரு பாடல்வழி தெரிந்துகொள்ள முடிகிறது.
பெண் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியில் பெண்ணுடைய அப்பா, அண்ணன், தம்பி, ஆகிய அனைவரும் மறுத்துரைக்க, தாய்மட்டும் ஒப்புதல் தெரிவித்து வந்தவர்களை அமர வைத்ததை விளக்கும் நாட்டுப்புறப் பாடல் ஒன்றின் வழி காதல் வயப்படாத பெண்களின் திருமணம் குறித்தும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன என்பதை அறியமுடிகிறது.
‘நொதுமலர் வரைவுத்’ துறை அகத்திணைப் பாடல்களில், தலைவி காதல் வயப்பட்டதை அறியாத பெற்றோர், மகளுக்கு மணம்பேச முனைகின்றனர். தோழி தலைவனிடம் இது பற்றிக் கூறித் தலைவியை விரைவில் மணந்து கொள்ளத் தூண்டுகிறாள். நாட்டுப்புறக் காதல் பாடல்களில் பெண்கேட்டல் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. தலைவியே தலைவனிடம் தன்னை மணம் பேச வருமாறு வேண்டுகிறாள். காதல் வயப்படாத பெண்களுக்கும் திருமணம் நிச்சயிப்பதற்காகப் பெண் கேட்டல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை நாட்டுப்புறக் காதல் பாடல்கள் விளக்குகின்றன.

உடன்போக்கு

ஊரில் அலர் மிகுந்து, தலைவி இற்செறிக்கப்பட்ட காரணத்தினால் தோழி தலைவனிடம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுவாள். தலைவன் உடன்போக்குச் செல்வதே ஏற்றது என்பான். தோழியின் உதவியினால், தலைவன் தலைவியைத் தன்னூர்க்கு அழைத்துச்சென்று மணம் புரிந்து கொள்வான். தலைவனுடன் தலைவி இசைந்து செல்லுதலே ‘உடன்போக்கு’ என அகத்திணைப் பாடல்கள் சுட்டுகின்றன.
“திருமணம் என்பது தலைவனுந் தலைவியுந் தமக்குள் மறைவாய்க் காதலித்து வந்தமையை நிகழ்ச்சி ஒன்றன் வழியாக எல்லார்க்குந் தெரியச் செய்தலாகும். அவ்வாறே உடன்போக்கும் இன்னானை இன்னாள் காதலித்தாள் என்பதை வெளிப்படுத்து கின்றமையினால் இஃதும் ஒருவகைத் திருமணமே யாகும்” என விளக்குகிறார் இளவழகனார். எனவே சங்ககாலத்தில் உடன்போக்கு நிகழ்ச்சி சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தது என்பதைக் கருதமுடிகிறது. தன் மகள் உடன்போக்குச் சென்றதை அறிந்த அன்னை, அவள் முன்பே தன்னுடைய காதலை அறிவித்திருந்தால் திருமணம் செய்து வைத்திருக்கலாமே என ஏங்குவதாக ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. அத்தாய், மகள் உடன்போக்குச் சென்றதைக் குறித்து இழிவடைய வில்லை. தன்னிடம் தம் காதலை வெளிப்படுத்த வில்லையே என நினைந்தே வாடுகிறாள். களவு நாடகத்தில் இறுதிக் காட்சியாக உடன்போக்கைக் குறிப்பிடுகிறார் வ.சுப.மாணிக்கம்.
அகத்திணைப் பாடல்களில் சுட்டப்படும் தலைவனும் தலைவியும் வேறுவேறு ஊரைச் சேர்ந்தவர்கள். தலைவன், தலைவியின் இருப்பிடத்திற்கு வந்து களவு நிகழ்த்துவான். அலர், இற்செறிப்புப் போன்றவை ஏற்பட்டபின் தலைவியைத் தன்னூர்க்கு அழைத்துச் சென்று மணம்முடித்துக் கொள்வான். ஆனால் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் வரும் காதலர்கள் ஒரே ஊரினர். மணஉறவு முறையினர். மணஉறவு இருந்தாலும் களவு ஒழுக்கத்தில் ஈடுபடுவதால் அலர் எழுகிறது. காதலி இற்செறிக்கப் படுகிறாள். இதனால் திருமணம் செய்து கொள்ளுதற் பொருட்டுக் காதலனும் காதலியும் வேறு (புதிய) ஊருக்குச் சென்றுவிடுகின்றனர். நாட்டுப்புறத்தில் உடன்போக்கு நிகழ்ச்சியை ‘ஓடிப்போதல்’, ‘இழுத்துக்கொண்டு போதல்’ போன்ற தொடர்களால் சுட்டுகின்றனர். சங்கப்பாடல்களில் உடன்போக்கு ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சியாகச் சுட்டப்படுகிறது. ஆனால் நாட்டுப்புறப் பாடல்களில் உடன்போக்கு இழிவானதாகக் கருதப்படுகிறது.

அறத்தொடு நிற்றல்.

‘அறத்தொடு நிற்றல்’ என்பது தலைவியின் களவொழுக்கத்தை முறையாகப் பெற்றோர்க்குத் தெரியப்படுத்தலாகும். அறத்தொடு நிற்றல் நிகழ்ந்தால் உடன்போக்கு நிகழ வாய்ப்பில்லை. அறத்தொடு நிற்பதனால் பெற்றோர் உண்மை யறிந்து காதலர்க்கு மணம் நிகழ்த்தி வைப்பர். அறத்தொடு நிற்கும் நிலை ஒருவித வரையறையுடன் நிகழும். தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தைக்கும் எனத் தலைவியின் களவொழுக்கச் செய்தி முறையே வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது இலக்கண விதி. ஆனால் இந்நிலையைத் தலைவியின் விருப்பம் இல்லாமல் தோழி தொடங்க முடியாது. நாட்டுப்புறக் காதல் பாடல்களில் அறத்தொடு நிற்றல் நிலை பற்றிய பாடல்கள் மிகுதியாகக் காணப்படவில்லை. ஒரேயொரு பாடல் தாய்க்கும் மகளுக்கும் நிகழும் உரையாடலாக, அறத்தோடு நிற்றல் நிலையைக் குறிப்பதாக அமைந்துள்ளது. மகளின் உடல்மாற்றத்தையும், முகவாட்டத்தையும் கண்டு தாய் மகளிடம் வினவும்போது, அத்தை மகன் வாடைபட்டுச் சூலானதை அன்னைக்குத் தெரிவிக்கிறாள் மகள். இவ்வாறு அமைந்த பாடலை அறத்தொடு நிற்றல் நிலைக்கு உதாரணமாகக் கொள்ளலாம். அகப்பாடல்கள் போலல்லாமல் நாட்டுப்புற அறத்தொடு நிற்றல் மரபு நேரே தாய் -மகள் இருவரிடையே நிகழ்வதாக அமைகிறது.
நாட்டுப்புறக் காதல் பாடல்களில் களவியல் என்ற கைகோளில் அமையும் பாடல்களின் திணைமரபினை அவற்றின் உள்ளடக்க உரிப்பொருள் அடிப்படையில் மேலே ஒப்பிட்டுப் பார்த்தோம். சங்க இலக்கியத் தொல்காப்பியத் திணைக் கோட்பாடுகளிலிருந்து நாட்டுப்புறக் காதல் பாடல்கள் ஒத்தும் உறழ்ந்தும் அமைந்துள்ளமை கண்கூடு.
தொல்காப்பியத் திணைக் கோட்பாடு என்பது அகப்பாடல்களுக்கான ஓர் இலக்கியக் கோட்பாடு. சங்க இலக்கியங்களிலேயே அகப் பாடல்கள் மரபுகள் கலித்தொகையிலும் பரிபாடலிலும் மீறப்பட்டுள்ளன. என்றாலும் காலந்தோறும் அகப்பாடல்கள் மரபைப் போற்றியோ மீறியோ ஒரு தொடர்ச்சியான இலக்கிய ஆக்க மரபாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சங்க இலக்கியத்தில் அதிகம் பாடப்படாத நிலமில்லாத் திணைகளான கைக்கிளை பெருந்திணை ஆகிய திணைகளில் கைக்கிளைத் திணை பக்தி இலக்கியங்களிலும் சிற்றிலக்கியங் களிலும் பாடுபொருளாயின. தற்காலத் தமிழ்க் கவிதைகளில் பெருந்திணைப் பாடல்கள் பெருவழக்காய் உள்ளன. எனவே காலத்திற்கேற்ற பாடுபொருள் மாற்றங்கள் தமிழின் திணைக் கோட்பாட்டிலும் தவிர்க்க முடியாதனவாகி விட்டன. ஆனால் நாட்டுப்புற இலக்கியங்களோ கைக்கிளைப் பெருந்திணைப் பாடல்களை ஒருபோதும் ஒதுக்கியதில்லை. அடியோரும் வினைவலரும் அங்கே பாட்டுடைத் தலைவர்களாவர். சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறுவதும் இங்கே இயல்பாகும். பாங்கன் பாங்கியர்களுக்கு இங்கே இடமில்லை. தலைமக்களே நேருக்கு நேர் உரையாடி உறவாடி மகிழ்வது இங்கே இயல்பு. அகப்பாடல்களில் அதிகம் பேசாத தலைவி இங்கே நிறையப் பேசுவாள், சண்டையிடுவாள், சாபம் விடுவாள், எதிர்க்குரல் எழுப்புவாள். நாட்டுப்புறக் காதல் பாடல்கள் கோட்பாடுகளைக் கடந்த மக்கள் இலக்கியம், இதுவே நாட்டுப்புற இலக்கியங்களின் இலக்கியக் கோட்பாடு.

nagailango@gmail.com




புதன், 17 அக்டோபர், 2007

அகஇலக்கிய மரபுகளும் நாட்டுப்புறக் காதல் பாடல்களும்

அகஇலக்கிய மரபுகளும் நாட்டுப்புறக் காதல் பாடல்களும்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

அகம்:

மனிதன் உள்ளிட்ட எந்தவகை உயிரினத்திற்கும் உள்ள உயிர்க்கடமை இனப்பெருக்கத்தில் ஈடுபடலே. உயிரினங்கள் உண்பதும் உயிர்வாழ்வதும் இந்தவொரு பணிக்காகவே. இனப்பெருக்கத்திற்காகவே பாலினஈர்ப்பும் இன்பநாட்டமும் இயல்பாக எல்லா உயிரினங்களிடமும் அமைந்துள்ளன. தொல்காப்பியர் இதனை,எல்லா உயிர்க்கும் இன்பம் என்பதுதான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும் (தொல். பொருள். பொரு. 27.)என்கிறார். இன்பநாட்டம் உல்லா உயிரினங்களுக்கும் உரிய இயல்பூக்கம் என்று இலக்கணம் வகுக்கிறார் தொல்காப்பியர். இந்த இயல்பூக்கத்திற்கான ஒருவகை வெளிப்பாடே அகம். ஆணும் பெண்ணும் கூடிக்கலக்கும் பாலியல் தேவைக்கான அழகியல் வெளிப்பாட்டு வடிவமே அகப்பாடல்கள். இத்தகு அகப்பாடல்கள் இலக்கிய ஆக்கம் பெற வடிவமைத்துக் கொள்ளப்பெற்றவைகளே அகப்பொருள் மரபுகள்.நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல். பொருள். அகத். 56.)என்ற நூற்பாவில் புலனெறி வழக்கம் என்று இத்தகு மரபுகளைக் குறிப்பிடுவார் தொல்காப்பியர்.

அகத்திணை மரபுகள்:

தமிழ் இலக்கியத்தில் நீண்ட நெடிய அகப்பாடல் மரபுத்தொடர்ச்சி உண்டு. ஆயினும் அகப்பாடல் மரபுகளைக் கட்டமைப்பதில் சங்கஅகப்பாடல்களுக்கும் தொல்காப்பியத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்புண்டு. ஆயினும் தொல்காப்பியம் வரையறுக்கும் சிலமரபுகள் சங்க இலக்கிங்களில் பொருந்திவரவில்லை. சங்க இலக்கியங்கள் முழுமைக்குமான பொதுவான அகத்திணை மரபுகள் என்று திட்டமாக வரையறுக்க இயலவில்லை. சங்க இலக்கியங்களிலேயே பல்வேறு மரபுகளும் மரபு மீறல்களும் காணப்படுகின்றன.
காதலின் தொடக்கம்:மனிதர்களில் ஆணோ! பெண்ணோ! விரும்பிய நேரத்தில் விரும்பியவாறு இணைவிழைச்சுக்கு வாய்ப்பிருந்தவரைக் காதலை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த வாய்ப்பு பல காரணங்களால் மறுக்கப்படும் போதுதான் மனிதன் காதலை முதன்முதலில் உணர்ந்திருப்பான். இங்கே காதல் என்பது பாலுறவுத் தேவையை ஒட்டிய வெளிப்பாடே ஆகும். இந்தக் காதல் பல்வேறு மேல்பூச்சுகளோடு கூடி புனிதப்படுத்தப்பட்டது ஆணாதிக்க தனியுடைமைக் காலங்களில்தான்.

காதல் கோட்பாடு:

தனியுடைமைச் சமுதாயம் தோன்றுகிற போதுதான் ஒருதார மணத்திற்குத் தேவை ஏற்படுகின்றது. தன்னுடைய உடைமையை நேராகத் தன்வாரிசே பெற பெண் ஒருதாரமணத்தைக் (ஒருகணவ மணம்) கைக்கொள்ள வேண்டியதாகிறது. ஆனால் ஆணுக்கு அத்தகைய தேவை இல்லை. இத்தகு சூழ்நிலையில்தான் ஒருதார மணக் கோட்பாட்டைக்(பெண்களுக்கு மட்டும்) கட்டிக்காப்பதற்காகக் காதலும் கற்பும் கோட்பாடுகளாக உருவாயின.
காதல் கோட்பாடும் நடைமுறையும்:தனியுடைமை, ஆணாதிக்கம் இவைகளைக் கட்டிக் காக்க உருவாக்கப'பட்ட காதல் கோட்பாடு காலந்தோறும் இலக்கியவாதிகளாலும் ஆண்களாலும் ஆணாதிக்கத் தாக்குதலுக்கு உள்ளான பெண்களாலும் மிக உயரியதாகவே கருதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தது. சங்க அகப்பாடல்களும் திட்டமிட்ட முறையில் காதலை அகமாக்கி வளர்த்தன. ஆனால் நடைமுறையோ சமுதாயத்தில் பொருளாதார, சாதீய முரண்பாடுகளையும் மீறிய முறையில் காதல் உருவாக வாய்ப்பளித்தது.காதல் கோட்பாட்டின் நோக்கமும் நடைமுறை வாழ்க்கை நிலையும் முரண்படுகின்ற காரணத்தால்தான் மக்கள் இலக்கியக் காதலுக்குத் தரும் மதிப்பை நடைமுறைக் காதலுக்குத் தருவதில்லை.

நாட்டுப்புறக் காதல் பாடல்கள் தோன்றக் காரணம்:

பருவமடைந்த பெண்ணிற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் காதலர்களுக்கு இருக்கும் தடையும் சமுதாய முரண்பாடுகளுமே நாட்டுப்புறங்களில் காதல்பாடல்கள் தோன்ற வாய்ப்பளித்தன.தொழிற்களங்களில் தொழில்புரியும் ஆண் பெண்களிடையே இயல்பாக எழும் காதல் உணர்ச்சி சாதி பொருள்நிலை இவற்றால் தடைசெய்யப்படும்போது நிறைவேறாத காதலின் பக்கவாட்டுக் கால்வாயாகக் காதல்பாடல்கள் தோன்றுகின்றன என்கிறார் நா.வானமாமலை.

காதல்பாடல்களும் அக இலக்கிய மரபுகளும்:

தனியுடைமையும் நிலவுடைமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஒட்டியே அக இலக்கியங்கள் உருவாயின. எனவேதான் அடியோரும் வினைவலரும் அன்பின் ஐந்திணைக்கு உரியர் அல்லர் என்றும் அவர்கள் அகப்புற ஒழுக்கங்களாகிய கைக்கிளை பெருந்தினைக்கே உரியர் என்றும் மரபமைக்கப்பட்டது. அடியோருக்கும் வினைவலருக்கும் மணஉரிமை வாரிசுரிமை சொத்துரிமை முதலான உரிமைகள் மறுக்கப்பட்டன.ஆனால் நாட்டுப்புறக் காதல்பாடல்களில் அடியோரும் வினைவலருமாகிய உழைக்கும் மக்களே (வயற்களத் தொழிலாளர்கள், வண்டியோட்டி, தோட்டத் தொழிலாளி, படகோட்டி முதலான அடித்தள மக்களே) தலைமக்களாக அமைந்தனர். அகப்பாடல்களுக்குரிய எவ்வகைக் கட்டுப்பாடுகளும் இன்றி வெற்றியோ தோல்வியோ, சரியோ தவறோ, முறையோ பிசகோ எதனையும் வெளிப்படையாக வெளிப்படுத்தின நாட்டுப்புறக் காதல்பாடல்கள்.நாட்டுப்புறக் காதல் பாடல்கள் சங்க அகஇலக்கியங்களைப் போல் அல்லாமல் காதலன் காதலி கணவன் மனைவி கூற்றாகவும் ஊரார் அலர்மொழிப் பாடல்களாகவுமே அமைந்துள்ளன. அகப் பொருளில் இன்றியமையா இடம்பெறும் தோழியை நாட்டுப்புறக் காதல்பாடல்களில் காணமுடியவில்லை.இவ்வகைக் காதல் பாடல்கள் பொருண்மை அடிப்படையில் ஒரே வகையாக அமைந்தாலும் நிகழ்த்தலின் அடிப்படையில் மூன்று வகைப்படுகின்றன.
1. காதல் உறவுடைய ஆணும் பெண்ணும் காதல் பொருண்மையில் பாடுவன.
2. காதலர் அல்லாதோர் தொழில் செய்யும்போதோ பொழுது போக்கிற்காகவோ பாடுவன.
3. தொழில் களத்திலோ பிற இடங்களிலோ காதல் நோக்கமின்றி ஆனால் காதல் உணர்வில் பாடுவன.என்பன அவை.

காதல்பாடல்களின் வகைப்பாடு:

நாட்டுப்புறக் காதல் பாடல்கள் அவற்றின் பொருள் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப் பெறுகின்றன.
1. வருணனைப் பாடல்கள் (தலைவன் தலைவி வருணனை)
2. குறியிடம் கூறல், தூது பற்றிய பாடல்கள்.
3. திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தும் பாடல்கள்.
4. அலர், இற்செறிப்புப் பாடல்கள்.
5. பிரிவுத்துயர் பாடல்கள்.
6. வேசி உறவைப்பழிக்கும் பாடல்கள்.
7. கெடுத்துவிட்டு ஏமாற்றுபவனை ஏசும் பாடல்கள்.
என ஏழாக வகைப்படுத்தலாம்.
அகப்பாடல்களின் ஊற்று நாட்டுப்புறப்பாடல்களே!நமக்குக் கிடைக்கும் மிகப்பழைய அகப்பாடல்கள் சங்க இலக்கிய அகப்பாடல்களே ஆகும். அவற்றிற்குரிய மரபுகள் தொல்காப்பியத்துள் விளக்கப் பெற்றுள்ளன.சங்கப்பாடல்கள் யாவும் கிரேக்க வீரயுகப் பாக்களைப் போல் வாய்மொழி இலக்கிமாகவே இருந்திருக்கலாம் என்று தாம் ஊகிப்பதாக ஜே. ஆ. மார் 1958-ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய ஆய்வுரையைத் தொடர்ந்து டாக்டர் க. கைலாசபதி சங்க இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்களே என ஆராய்ந்து அறுதியிட்டுக் கூறினார். ''வீரநிலைக் காலத்தில் எழுந்த இலக்கியங்கள் வாய்மொழிப் பாடல் இலக்கியங்களாகவே இருந்திருக்கின்றன"". (கதிர். மகாதேவன், ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம், ப. 231.) என்ற கைலாசபதியின் கூற்றால், ஒப்பியல் அறிவு கொண்டு ஆராயும்போது வீரநிலைக் காலத்தில் எழுந்த சங்க இலக்கியங்களும் வாய்மொழி இலக்கியங்களாகவே இருந்திருக்கலாம் என்ற கருத்து உறுதிப்படுகின்றது.

காதல் பாடல்கள் அகப்பாடல்களான வரலாறு:

சங்க அகப்பாடல்களுக்கும் காதல் பாடல்களுக்கும் உள்ள உறவை நிரூபித்து நிலைநாட்ட தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பா ஒன்றனை நாம் சான்று காட்ட வேண்டியுள்ளது. இந்நூற்பா அகப்பொருள் மரபைச் சுட்டுவதாக விளங்கிக்கொள்வதோடு வேறுஒரு சிறப்புப் பொருளும் இந்நூற்பாவில் பொதிந்துள்ளது,

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டுயென ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர் (தொல். பொருள். அகத். 56.)

இந்நூற்பாவிற்கு வழக்கமாக வழங்கிவரும் பொருள் புனைவியலும் உண்மையும் கலந்த நூல்நெறியாகிய அகப்பாடல்கள் கலிப்பா பரிபாடல் என்ற இருவகை யாப்பாலும் பாடப்படும் என்பதாகும்.இந்நூற்பாவில் வரும் 'புலநெறி" என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளுமிடத்து, தொல்காப்பியர் எண்வகை வனப்பினுள் ஒன்றாகக் கூறிய 'புலன்" என்னும் வனப்பிற்குரிய விளக்கத்தைப் பொருத்திப் பார்த்து,நாடக வழக்கு-உரையாடல், உலகியல் வழக்கு-பாமர மக்கள் மொழி, பாடல் சான்ற-இசை கலந்து நிறைந்த, புலன்நெறி வழக்கு-சேரிமொழி இலக்கியம் எனப் புதுப் பொருள் கண்டு '' உரையாடலாகவும் பாமர மக்கள் மொழியும் கொண்ட இசை கலந்து நிறைந்த சேரிமொழி இலக்கியம் கலிப்பாலும் பரிபாட்டாலும் எழுதப்பெறும்"' என இந்நூற்பாவை விளக்கலாம்''கலித்தொகை பரிபாடல் பாக்கள் நாடகப் பாங்கினவாயும் இசைப் பாங்கினவாயும் இருத்தல் அவை பாமர மக்களுடன் நெருங்கியவை என்பதைக் காட்டும்"" எனப்புதிய ஒளியினை அந்நூற்பாவில் ஏற்றுகிறார் க.ப. அறவாணன்.( க.ப.அறவாணன், அற்றை நாள் காதலும் வீரமும், பக். 193-200)மேலே சொல்லப்பட்ட விளக்கம் காதல் பாடல்களுக்கும் அகப்பாடல்களுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தி நிற்பதை உணரலாம்.

காதல் பாடல்களா? தொழில் பாடல்களா?

பாடுவோரை அடிப்படையாகக்கொண்டு, ''காதல் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று காதலர்களே பாடுவது, மற்றொன்று காதல் சுவையை எண்ணி மகிழ்ச்சிக்காகக் காதலர் அல்லாதார் பாடுவது"" என்று வகைப்படுத்த முடியும். காதலர் அல்லாதார் இன்பச்சுவை கருதிக் காதல் பொருண்மை அமைந்த பாடல்களைப் பாடுதல் இயல்பே. உலக இலக்கியங்களில் பொதுவான நோக்கில் காதல் பற்றிப் பாடாத இலக்கியங்களே இல்லை என்று சொல்லலாம். அவ்வகைக் காதல் பாடல்களைப் புனைவியலாகக் கொள்ளவேண்டுமெ ஒழிய, காதலரே நேரில் சந்தித்துப் பாடும் களநிலைப் பாடல்களாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

காதல் பாடல்கள் பாடப்படுவது ஏன்?

நாட்டுப்புற மக்கள் தங்களுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை உடலுழைப்பிலேயே செலவழிக்க வேண்டியுள்ளது. வெயிலின் கொடுமையும் வேலையின் கடுமையும் சேர்வதால் ஏற்படுகின்ற களைப்பைப் போக்குவதன் பொருட்டு அவர்கள் பாடத்தொடங்குகின்றனர். பாடக்கூடிய திறன் படைத்த தொழிலாளர்களை வெலைக்கமர்த்தும் பழக்கமும் உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தொழிற்களத்தில் அவர்கள் பாடக்கூடிய பாடல்கள் குறிப்பிட்ட தொழில் பற்றியும். தொழில் தொடர்பான கருவிகள் பற்றியும், உழைக்கும் திறன் அளித்து வாழச்செய்வதாகக் கருதப்படும் தெய்வங்களின் பெருமை பற்றியும் கூறுவதோடு அமைந்து விடலாம். ஆயின் அவை மட்டுமே இறுகிக் கிடக்கும் மனத்தில் நெகிழ்ச்சியினை ஊட்டுவனவாய் அமையா. வாட்டமுற்ற நிலையினின்று ஊக்கம் பெறுவதற்குக் கற்பனையில் வளரும் காதல் பொருண்மை தேவைப்படுகின்றது.

காதல் பாடல்களின் நோக்கம்:

நாட்டுப்புற மக்களின் அடிப்படைத் தொழில் உழவு. ஏர் உழுதல் தொடங்கி, போர் அடித்து விளைச்சல் முதலாளி வீடு சேரும்வரை ஆண்களும் பெண்களும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தொழில் உழவுத்தொழில். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெறும் அவர்கள், உழைப்பினால் ஏற்படும் சோர்வுக்கு மாற்றாக மட்டுமின்றி, காதல் வயப்பட்டவர்கள் தங்களுக்குள் சாடைமாடையாகப் பேசிக் கொள்வதற்கும் காதல் பொருண்மை அமைந்த பாடல்களைப் பாடிக்கொள்கின்றனர். அப்பாடல்கள் அவர்களிடையே அடுத்த சந்திப்பினை ஏற்படுத்திக் கொள்ளப் பயன்படுகின்றன. ''குறியிடம் கூறும் பாடல்கள் பாவனை அடிப்படையில் அமைந்தபோதிலும் உண்மையிலேயே தொழிற்களத்தில் உடன் வேலை செய்யும் பெண்களுடன் உரையாடும் பாணியில் அவை அமைந்திருக்கின்றன என்பதும், இரவு வேளைகளில் அவர்கள் தனிமையில் சந்திக்க இப்பாடல்கள் வழிகாட்டுகின்றன என்பதும் குறிப்பிடற்பாலன"". (இ.பாலசுந்தரம், ஈழத்து நாட்டார் பாடல்கள், ப.263.)காதலர்களே பாடுவதுபோலத் தனியாகப் பாடல்கள் ஏதும் இல்லை என்றே கூறலாம். தொழில் செய்யும்போது சாடைமாடையாகக் காதலைக் குழைத்துப் பாடுகின்றனர். இக்காதல் பாடல்களில் காதலர் சந்திப்பதும், காதலை வெளிப்படுத்துவதும், நலம் பாராட்டுவதும், கேலி செய்வதும், பரிசளிப்பதும், உறுதி மொழிதலும், தூது விடுவதும் மணம் வேண்டுவதும், வீட்டுக் காவல் வைப்பதும், பிரிவதும், கூடுவதும், ஊடுவதும், காதலை மறப்பதும், காதலில் தோல்வி அடைவதும் பாடுபொருள்களாக அமைகின்றன.

தொழில் பாடல்களில் காதல் பாடல்:

காதலர்கள் தாங்கள் தனிமையில் சந்தித்துக் கொள்ளும்போது பாடிக் கொள்வதில்லை என்ற உண்மை பெறப்பட்டாலுங்கூட அவர்களுக்குள் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதற்குக் காதல் பொருண்மை நிறைந்த தொழிற்களப் பாடல்கள் பயன்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. இத்தகைய பயன்பாட்டைக் கருதி காதல்சுவை உடைய தொழில்பாடல்களைக் காதல்பாடல்கள் எனக் குறிப்பிட வேண்டியுள்ளது.

காதல் பாடல்களா? அகப்பாடல்களா?
பெயர் கூறும் மரபு:

'' நாட்டுப்பாடல்களில்தான் காதல் பாட்டுகளில் பெயரின்றி அமையும் மரபுண்டு"" என்று தமிழண்ணல் தம்முடைய சங்க இலக்கிய ஒப்பீடு என்னும் நூலில் கூறுகிறார். மேலும் அவர், நாட்டுப்பாடல்களின் மரபையொட்டி, அகத்திணைப் பாடல்கள் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாமல் தலைவன், தலைவி, தோழி எனப் பொதுப்படவே அமைகின்றன என்றும் குறிப்பிடுகின்றார். அகத்திணை இலக்கியத்தின் சிறப்புக்கூறு என விதந்தோதப்படும் பெயர் சுட்டா மரபு, நாட்டுப்புறக் காதல் பாடல்களிலிருந்து பெறப்பட்டது என்பது ஆய்விற்குரியது.

நாட்டுப்பாடலில் பெயர் சுட்டியும் வரும் மரபு:

'' நாட்டுப்புறப் பாடல்களில்தான் பெயர் சுட்டா மரபு காக்கப்பட்டு வந்தது"" என்று தமிழண்ணல் கூறியிருக்க,

''கொத்து மல்லித் தோட்டத்திலே
குளிக்கப் போயி நிக்கையிலே
அத்தை மகன் முத்துசசாமி
அத்தெரிந்தான் பிச்சிச் சரம்""

என்று காதலி தன் காதலன் பெயரைச் சுட்டி உரைப்பதை மேற்காட்டிய பாடலில் காணமுடிகிறது. இதேபோல் இன்னும் சுப்பையா, காளிமுத்து என்பன போன்றபெயர்களைச் சுட்டி வருகின்ற பாடல்களும் உள்ளன. இப்பாடல்களும் தமிழண்ணல் அவர்கள் கருத்தும் முரணாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் சுட்டலில் பிற்கால மரபு:

சங்க காலத்திற்குப் பிறகு சங்கம் மருவிய காலத்திலும் அதற்குப் பின்னும் தோன்றிய காப்பிய இலக்கியங்களில் கோவலன்-கண்ணகி, சீவகன்-தத்தை எனப்பெயர் சுட்டிய கதை மாந்தர்களின் காதல் நிகழ்ச்சிகளைக் காணமுடிகிறது. இவற்றை அகப்பாடல்கள் என்ற நிலையிலிருந்து தள்ளிவிட முடியுமா? அன்றியும் நாட்டுப்புறப் பாடல்கள் வாய்வழிப் பரவும் தன்மையுடையனவாய் இருப்பதால் பாடுபவன் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப. கூடியிருந்து கேட்போரின் உற்சாகத்தை மிகுதிப்படுத்த அவர்களுடைய ஊரின் பெயரை அல்லது அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பெயரைத் தான் பாடும் பாடலில் சேர்த்துப் பாடுவது இயல்பு. இந்தக் காரணத்தினாலும் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் பெயர்சுட்டும் மரபு தோன்றியிருக்கலாம்.

நாட்டுப்புறக் காதல்:

நாட்டுப்புறப் பாடல்கள் கூறும் காதலர் மணஉறவுமுறை உடையவர்களாய்க் காணப்படுகின்றனர். பாலதாணைக் காதலை நாட்டுப்புறப் பாடல்கள் காட்டவில்லை. ஆனால் கட்டாய மணம் செய்வதை விதி என்று கூறுகிறது நாட்டுப்புறப் பாடல். சங்க இலக்கியங்கள் கூறும் நலம் புனைந்துரைத்தல், குறியிடம் கூறல், அலர், இற்செறிப்பு முதலாயின இங்கும் உண்டு. ஆயின் வெறியாடல் பற்றிய செய்தி நாட்டுப்புறப் பாடல்களில் காணப்பெறவில்லை.நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காதல் தோல்வி பற்றிய செய்திகளே மிகுதியும் காணப்படுகின்றன. கைக்கிளை, பெருந்திணையாகிய பொருந்தாமணம் ஆகியவற்றையும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.திருமணத்திற்குப் பிறகு கணவன் பரத்தையரோடு பழகுதல், முதல் மனைவி இருக்க இரண்டாம் மணம் புரிந்துகொள்ளுதல் முதலான செய்திகளையும் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காணமுடிகிறது. காவல், ஓதல் காரணமாகக் கணவன் பிரிந்து செல்லுதலைச் சில பாடல்கள் கூறுகின்றன.செந்நெறி இலக்கியங்களுக்கும் நாட்டுப்புறப் பாடல்களுக்கும் உள்ள வேறுபாடுகளில் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கது, இரண்டிலும் புனைவுகள் உண்டு, ஆனால் இன்னதைப் பாடவேண்டும் இன்னதை விலக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நாட்டுப்புறப் பாடல்களுக்கு இல்லை.'' ஏட்டிலக்கியங்கள் கல்வியறிவு பெற்ற தனி மனிதர்களால் படைக்கப்படுகின்றன. பெரும்பாலும் அத்தனி மனிதர்கள் ஆட்சியாளர்களையும், செல்வந்தர்களையும் சார்ந்தே வாழ்க்கை நடத்துவர். எனவே அவர்களால் படைக்கப்படும் இலக்கியங்கள் அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும் இலட்சியங்களையுமே பிரதிபலிக்கும்"' (ஆறு.இராமநாதன், நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், ப. 3.)''நாட்டுப்புறப்பாடல்கள் முதன்முதலில் யாரோ ஒரு தனிமனிதனால் படைக்கப் பட்டாலுங்கூட உடனே அவை ஒரு சமுதாயத்திற்குப் பொதுமையாக்கப் படுகின்றன. அச்சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு மக்களின் எண்ண ஓட்டங்கள் அங்கே சங்கமிக்கின்றன"".(ஆறு.இராமநாதன், நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், ப. 17.) இவ்விரு மேற்கோள்களிலிருந்தும் ஏட்டிலக்கியங்களின் இலட்சிய நோக்கையும் நாட்டுப்புறப் பாடல்களின் மக்கள் நோக்கையும் நாம் புரிந்து கொள்ளமுடியும்.

காதல்பாடல்களில் இணைவிழைச்சுப் பொருண்மை:

தொழில் புரிவோர் தாங்கள் பாடும் நேரங்களில் உரிமையாளர் அருகிருந்தால் பாடுபொருளில் வரம்பு மீறாமல் பாடுவதும் ஆண்கள் தனித்துத் தொழில் புரியும் போதும் இரவுநேர வண்டிப் பயணத்தின் போதும் சூழ்ந்து பாடல்பாடும் நேரங்களின் போதும் இணைவிழைச்சுப் பொருண்மை அமையப் பாடல்களைப் பாடுகின்றனர். (க. கிருட்டினசாமி, கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள், தொகுதி-2, பக். 135-136)'''வண்டி ஓட்டிச்செல்வோர் இரவு நேரங்களில் உறக்கத்தைத் தவிர்ப்பதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் காதல் கவிகளைப் பாடுவர்.இப்பாடல்கள் பாவனை ரீதியில் பாடப்படுவதுடன் இவற்றில் இணைவிழைச்சுத் தன்மையை அதிகமாகச் சேர்த்துக் கொள்கின்றனர். வண்டி பயணப்பாதை பெண்கள் சஞ்சாரமற்றதாகவும் இரவு வேளையாகவும் இருப்பதனால் அவர்களது பாடல்களில் இணைவிழைச்சுத் தன்மை அதிகமாகக் கலந்துவிடுகிறது. (இ.பாலசுந்தரம், ஈழத்து நாட்டார் பாடல்கள், ப.192 )

காட்டோரம் கொட்டாயாம்
கவண்டன் மகள் குப்பாயாம்
குப்பாயி பாடு
கொட்டாய கேட்டுப்பாரு
(கோபெநா, பாலைமலைப் பாடல்கள், ப.91)

போன்ற பாடல்களை மேலே குறிப்பிட்ட இணைவிழைச்சுத் தன்மை அமைந்த பாடல்கள் என்பதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

காதல் பாடல்கள் பாவனைப் பாடல்களா?

''உண்மையான உணர்ச்சியின் காரணமாகத்தான் காதல் பாடல்கள் தோன்றுகின்றன என்று நான் கருதுகின்றேன்"' என்று ஈழத்து நாட்டார் பாடல்கள் நூலுக்கு அணிந்துரை வழங்குகையில் நா.வானமாமலை கூறுகிறார். மேலும் அவரே காதல் புரிந்துதான் காதல் பாடல்கள் பாடப்படவேண்டும் என்பதில்லை என்றும் குறிப்பிடுகிறார். (ஈழத்து நாட்டார் பாடல்கள், முன்னுரை, ப.ஏஐ)'' முன்பு காதல் வாழ்க்கைப் பிண்ணனியில் பாடப்பட்ட பாடல்கள் வாய்மொழி மரபில் பரம்பரை பரம்பரையாக வழங்கி வந்துள்ளன என்பதும், தேவைக்கும் பாடுவோருக்கும், கேட்போருக்கும் ஏற்ப இவை தொழிற்களப் பாடல்களாகவும் பாடப்படும் நிலையடைந்தன"" என்று காதல் பாடல்களின் களநிலை மாற்றம் மற்றும் தற்போதயநிலை இவைகள் பற்றிய கருத்தைத் தெரிவிக்கின்றார் இ.பாலசுந்தரம் (இ.பாலசுந்தரம், ஈழத்து நாட்டார் பாடல்கள், ப.191)

காதல் பாடல்கள் கூத்துப்பாடல்களா?

காதல் பாடல்களின் தொடக்கத்தைப் பற்றிய வேறொரு கருத்தைக் குறிப்பிடுதல் இங்கு தேவையாகிறது. நாட்டுப்புறக் காதல்பாடல்கள் முதலில் கூத்துப் பாடல்களிடையே கட்டியங்காரனால் பாடப்பட்டிருந';;தன என்று தன் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் பொன். கோவிந்தசாமி நிறுவியுள்ளார். (பொன்.கோவிந்தசாமி, தமிழ் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கட்டுரைகள், ப.7 )கூத்து நடக்கும் சமயத்தில் மக்கள் சோர்வுற்றுத் தூங்கத் தொடங்கும் போது அவர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி மறுபடியும் அவர்கள் உற்சாகமாகக் கூத்து நிகழ்ச்சியில் கவனம் செலுத்த கட்டியங்காரனால் சுவையோடு இட்டுக்கட்டிப் பாடப்பட்ட காதல் பாடல்கள்தான் பின்னர் தொழிற்களங்களில் தொழிலாளர் சோர்வு நீக்கும் பயன்பாடுடையனவாய் ஆயின என்று கொள்ளவும் இடமுண்டு. தொடக்க காலத்தில் காதல் பாடல்கள் காதலர்களால் பாடப்பட்டன, பிறகு சமுதாயச் சூழலுக்கு ஏற்ப அப்பாடல்களின் களநிலை மாறின என்ற இ.பாலசுந்தரம் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதானால், சமுதாயத்தில் காதலிப்பவர்கள் எல்லோரும்
கவிஞர்களாக இருக்க வாய்ப்புண்டா? காதலர்கள் தங்களுக்குள் பாடிக்கொண்ட காதல் பாடல்களைக் கேட்டவர்கள் யார்? எப்படிப் பரவியது? என்ற வினாக்களுக்கெல்லாம் விடைதேட வேண்டியிருக்கும்.காதலர்கள் சந்தித்துக் கொள்கிற போதெல்லாம் காதல் பாடல்களைக் கலந்து கனிந்து பாடுவதில்லை. சிலர் தங்கள் உள்ளத்து உணர்ச்சிகளை எழுதத்தெரிந்த ஒருவரிடம் கூறி எழுதுவித்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றனர்.காதலர்கள் சந்தித்துக் காதல் பாடல்களைப் பாடிக்கொள்ளுதல் என்பது இயல்பான நிகழ்வு இல்லை என்பதாலும், கூத்துப் பாடல்களில் இவை பாடப்பட்டு வந்தன என்ற கருத்திலும் உண்மையுண்டு என்பதனாலும், தொழிற்களங்களில் இவ்வகைப் பாடல்கள் சோர்வு நீக்கும் மருந்தாகப் பயன் படுதலானும் நாட்டுப்புறக் காதல் பாடல்களைப் பாவனைப் பாடல்களாகவே கொள்ளவேண்டும்.

காதல் பாடல்களைப் பாடுவோர்:

தொழிற்களங்களில்தான் மிகுதியும் காதல் பாடல்கள் பாடப்படுகின்றன. உழவுத் தொழிலின் போதும் சுண்ணாம்பு இடித்தல், மீன்பிடித்தல் முதலான தொழில் நேரங்களிலும் காதல்பாடல்கள் பாடப்படுகின்றன. குழுவாக இருக்கும்போது அவர்களுள் வயது முதிர்ந்தவரோ அல்லது நன்றாகப் பாடக்கூடிய திறன்பெற்றவரோ முதலில் பாடத் தொடங்குவர், மற்றவர் பின்தொடர்ந்து பாடுவர். ஏற்றம் இறைத்தல், ஏர்உழுதல் முதலான நேரங்களில் குழுவினர் இருக்க மாட்டார்கள். ஏற்றம் இறைக்கும் போது மேலே உள்ளவன் பாடத்தொடங்க கீழே உள்ளவன் பாடலைத் தொடர்வான். ஏர் உழும்போது முன்னேர் கட்டுபவன் பாடலைத் தொடங்க பின்னே வருபவர்கள் தொடர்ந்து பாடுவார்கள்.சில தொழில்கள் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியதாய் இருக்கும், சில தொழில்கள் பெண்கள் மட்டுமே செய்யக்கூடியதாயிருக்கும் சில தொழில்களை இருவருமே சேர்ந்து செய்யக்கூடும். எனவே தொழிலை அடிப்படையாக வைத்து ஆண்கள் மட்டும் பாடும் பாடல்கள், பெண்கள் மட்டும் பாடும் பாடல்கள், இருவரும்சேர்ந்து பாடும் பாடல்கள் எனப் பாடுவோர் அடிப்படையில் தொழில்சார் காதல்பாடல்களை மூவகைப்படுத்தலாம்.உழவுத் தொழிலில் ஏற்றம் இறைத்தல், ஏர் உழுதல் ஆகிய வேலைகளை ஆண்கள் மட்டுமே செய்வர், எனவே அவ்வேளைகளில் ஆண்கள் மட்டுமே பாடக்கூடியவராய் இருப்பர். நாற்று நடுதல், களையெடுத்தல் போன்ற வேலைகளைப் பெண்கள் மட்டுமே செய்வர், அப்போது பெண்கள் மட்டுமே பாடக்கூடியவராய் இருப்பர். அறுவடை, போர்அடித்தல் ஆகிய நேரங்களில் இருவருமே சேர்ந்து வேலையில் ஈடுபட வேண்டியிருப்பதால் அத்தருணங்களில் ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடுகின்றனர். ஆண்கள் பாடுவதாயினும் பெண்கள் பாடுவதாயினும் சரி அத்தருணங்களில் அருகிருந்து கேட்போராக எதிர்பாலாரும் இருப்பதுண்டு.

காதல் பாடல்களும் தெம்மாங்கு வடிவமும்:

நாட்டுப்புறக் காதல் பாடல்கள் பெரும்பாலும் தெம்மாங்குப் பாடல்களாகவே அமைவதுண்டு. காதல் பாடல்களை நாட்டுப்புறத் தெம்மாங்கு என்றே குறிப்பிடலாம். தெம்மாங்குப் பாடலின் வடிவத்தை வரையறுப்பது காதல் பாடல்களுக்கான வடிவ வரையறையாகவே அமையும்.நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் ஒன்று தெம்மாங்கு. தேன் போன்று இனிக்கும் பாடல் என்பதால் தேன்பாங்கு என்று கூறுவர். தென்பகுதியில் வாழும் மக்களால் பெரும்பாலும் பாடப்பெறுகிற காரணத்தால் தென்பாங்கு என்றும் அழைக்கப்பட்டது. தேன்பாங்கு- தென்பாங்கு- தெம்மாங்கு என வழங்கியிருக்கலாம்.தெம்மாங்கிற்கு ஒரேஒரு மெட்டுதான் உண்டு. ஆனாலும் அதைப் பல்வேறு தாளங்களில் மாற்றிப் பாடுவதுண்டு என்கிறார் கி.வா.ஜ. (கி.வா. ஜகந்நாதன், மலையருவி, ப. 32.) வண்டி ஓட்டும்போதும் வயல்வேலைகளின் போதும் பாடப்படும் பாடல் தெம்மாங்காய் அமைவதுண்டு. இவ்வகைப் பாடல்களை ஒருவரே பாடுவதும், இருவர் எதிரெதிர் வாதம் புரியப் பாடுவதும் என இருவகை மரபில் பாடுவதுண்டு.தெம்மாங்குப் பாடலின் உட்பொருன் பெரும்பாலும் காதலாகவே இருப்பதால் காதல்பாட்டு என்றே இதனைக் கூறலாம். (குருவிக்கரம்பை சண்முகம், தெம்மாங்கு, ப. 124 )

தொகுப்புரை:

Ö தமிழ் இலக்கியத்தில் நீண்ட நெடிய அகப்பாடலல் மரபுத் தொடர்ச்சி உண்டு.
Ö சங்க இலக்கியங்களிலேயே பல்வேறு மரபுகளும் மரபு மீறல்களும் காணப்படுகின்றன.
Ö ஒருதாரமணக் கோட்பாட்டைக் கட்டிக் காப்பாற்றவே காதலும் கற்பும் கோட்பாடுகளாக உருவாயின.
Ö மக்கள், இலக்கியக் காதலுக்குத் தரும் மதிப்பை நடைமுறைக் காதலுக்குத் தருவதில்லை.
Ö காதலுக்கு இருக்கும் சமுதாயத் தடைகளே காதல் பாடல்கள் தோன்றக் காரணம்
Ö தனியுடைமையும், நிலவுடைமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஒட்டியே அக இலக்கியங்கள் உருவாயின.
Ö நாட்டுப்புறக் காதல்பாடல்களில் அடித்தள மக்களே தலைமக்களாக அமைந்தனர்.
Ö காதல் பாடல்கள் நிகழ்த்தலின் அடிப்படையில் மூன்றாகப் பகுக்கப்படும்.
Ö சங்க அகப்பாடல்களுக்கு அடிப்படை வாய்மொழி இலக்கியங்களே.
Ö புலநெறி வழக்கு எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது சேரிமொழி இலக்கியமே.
Ö தொழிற்களத்தில் பாடப்படும் காதல் பொருண்மை அமைந்த பாடல்களே காதல்பாடல்கள் எனப்படும்.
Ö நாட்டுப்புறக் காதல்பாடல்களில் பெயர் சுட்டிவரும் மரபு உண்டு.
Ö நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காதல் தோல்வி பற்றிய செய்திகளே மிகுதியும் காணப்படுகின்றன.
Ö கைக்கிளை, பெருந்திணையாகிய பொருந்தாமணம் ஆகியவற்றையும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.
Ö நாட்டுப்புறக் காதல் பாடல்களில் இன்னதைப் பாடவேண்டும் இன்னதை விலக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
Ö காதல் பாடல்களில் இணைவிழைச்சுப் பொருண்மை அமைவதுண்டு.
Ö நாட்டுப்புறக் காதல்பாடல்கள் கட்டியங்காரனால் கூத்துப் பாடல்களிடையே பாடப்பட்டிருக்கலாம்.
Ö நாட்டுப்புறக் காதல் பாடல்களைப் பாவனைப் பாடல்களாகவே கொள்ளவேண்டும்.
Ö நாட்டுப்புறக் காதல் பாடல்களை ஆண்கள் பாடுவது, பெண்கள் பாடுவது, இருவரும் சேர்ந்து பாடுவது என மூவகைப்படுத்தலாம்.
Ö நாட்டுப்புறக் காதல் பாடல்கள் பெரும்பாலும் தெம்மாங்குப் பாடல்களாகவே இருக்கும்.
@@@@@@@@

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...