திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 நவம்பர், 2021

பாவலர் வ.விஜயலட்சுமியின் திருக்குறளில் உளவியல் கூறுகள் – நூல் அணிந்துரை

 

முனைவர் நா.இளங்கோ




கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் திருக்குறள் தான் தோன்றிய காலந்தொடங்கி இன்றுவரை தமிழுலகில் நிலைத்து வாழ்ந்தும் தமிழர்களை வாழ்வித்தும் வருவது கண்கூடு.

ஓதற் கெளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் -தீதற்றோர்
உள்ளுந்தொ றுள்ளுந்தொ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

மாங்குடி மருதனாரின் இப்பாடல் திருக்குறளின் தனிப்பெருஞ் சிறப்பினைத் தெளிவு படுத்துகின்றது. படிப்பதற்கு எளிய சொற்களை உடையதாகவும் அறியப்படுவதற்கு அருமைப்பாடுடைய நுட்பமான பொருளை உடையதாகியும் வடமொழியில் சிறப்பித்துச் சொல்லப்படும் வேதங்களின் பொருளை உள்ளடக்கியும் அந்த வேதங்களை விடவும் சிறப்புபெற்றும் குற்றமற்றவர்கள் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அவர்களுடைய மனதை உருக்கக் கூடியதாகவும் வள்ளுவர் வகுத்துத்தந்த திருக்குறள் விளங்குகிறது என்பது மாங்குடி மருதனாரின் பாடல் கருத்து.

திருக்குறள் கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளில் எத்தனையோ சமய, இன, மொழித் தாக்குதல்களை எல்லாம் வென்று காலம் கடந்து இன்றும் நிலைத்து நிற்பதற்குப் பல காரணங்கள் உண்டு, அவற்றுள் தலையாய காரணம் அதன் பொதுமைப்பண்பு. மொழி, இனம், நாடு கடந்த உலகப் பொதுமைநலம் வாய்ந்த அறங்களைப் பேசுவதால் திருக்குறள் உலகப் பொதுமறை என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே திருவள்ளுவ மாலை,

வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு (திரு.மா.47)

என்று திருக்குறளைப் புகழ்ந்து பேசுகின்றது.

சற்றேறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த பிறகும் கூட திருக்குறளின் மொழிநடை இன்றும் எளிதில் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இருக்கின்றது. திருக்குறளின் காலத்தை ஒட்டிய சங்க இலக்கியங்களுக்கோ, சங்கம் மருவிய கால இரட்டைக் காப்பியங்களுக்கோ இத்தகு மொழிநடை அமையவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவேதான் மாங்குடி மருதனார் ஓதற்கு எளிதாய் என்றார். இத்தகு எளிய நடையைக் கொண்டிருந்தும் திருக்குறளுக்கு எண்ணிலடங்கா உரைகள் காந்தோறும் தோன்றிவருவது ஏன்? என்ற வினா எழுதல் இயல்பே, உணர்தற்கு அரிதாகி என்று அதற்கும் விடை சொல்கின்றார் மாங்குடி மருதனார்.

காலந்தோறும் திருக்குறளுக்கு உரைகள் தோன்றிவருவது திருக்குறளின் சிறப்புக்களில் ஒன்று. பரிமேலழகருக்கு முன் திருக்குறளுக்கு ஒன்பது உரைகள் தோன்றின. பத்தாவது உரையாகக் குறளுக்குப் பரிமேலழகரின் சீர்மிகு உரை தோன்றியது. பரிமேலழகரின் நுட்பமான உரைக்குப் பின்னும் கூட இன்று வரைக் கணக்கற்ற உரைகள் குறளுக்குத் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

பிற தமிழ் இலக்கிய இலக்கண நூல்களுக்கு இல்லாத அளவில் திருக்குறளுக்கு மட்டும் இத்துணை உரைகள் தோன்றியும் தோன்றிக் கொண்டேயும் இருக்கக் காரணங்கள் என்ன?

திருக்குறளின் கவிதை வடிவம் செறிவானது. அதன் சொற்கட்டமைப்புக்குள் தத்தமக்கான பொருளைக் கற்பவர்கள் பொருத்திக்கொள்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. திருக்குறளின் இத்தகு அமைப்பே அதற்குப் பல விளக்கங்களும் உரைகளும் பெருகுவதற்குக் காரணமாய் அமைந்துள்ளது. திருக்குறள் காட்டும் பொதுப்பொருள், சிறப்புப் பொருள், குறிப்புப்பொருள் என்று அதற்குப் பொருள் காண வழிகள் பல உள்ளன. அறிவியல் சார்ந்தும் அறவியல் சார்ந்தும் பொருளியல் சார்ந்தும் தத்துவம் சார்ந்தும் பண்பாட்டியல் சார்ந்தும் மொழியியல் சார்ந்தும் மரபியல் சார்ந்தும் உளவியல் சார்ந்தும் பல கோணங்களில் திருக்குறளை ஆராய்வதற்கு வழிவகை செய்து வைத்துள்ளார் வள்ளுவர். அவரின் குறுகத் தரித்த குறளே விரிவான பொருள் புரிதலுக்குத் துணைநிற்கிறது. குறளின் மிகச்சிறிய ஏழு சீர்களே கொண்ட யாப்பு வடிவமே உரைகள் பெருகுவதற்கு முதல்காரணம். விரித்துச் சொல்ல வாய்ப்பில்லாமல் பொதுவாகக் குறிப்பிட்டு அறங்களைக் கூறும் போக்கினால் உரையாசிரியர் விரித்துக் கூற முற்படும்போது பொருள் வேறுபாடுகள் தோன்றுவது இயற்கையே. கால வேறுபாடு அல்லது காலத்தின் தேவை சில குறட்பாக்களைப் புதிய நோக்கில் வாசிக்க இடந்தருகிறது. எனவே கால மாற்றங்களும் புத்துரைகளுக்குக் காரணங்களாகின்றன..

புதுவைப் பாவலர் வ.விஜயலட்சுமி அவர்களின் திருக்குறளில் உளவியல் கூறுகள் என்ற இந்நூலும் திருக்குறளுக்குப் புத்துரை வழங்கும் ஒரு முயற்சியே. நூலாசிரியர் திருக்குறளின் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களுக்கும் உளவியல் நோக்கில் ஒரு அழகான புத்துரை வழங்க முயன்றுள்ளார். ஒவ்வொரு அதிகாரத்திலும் தேர்ந்தெடுத்த சில குறட்பாக்களைக் கொண்டு உளவியல் பார்வையோடு விளக்கமளிக்கும் அவரின் முயற்சி பாராட்டத்தக்கது.

பாவலர் வ.விஜயலட்சுமி புதுச்சேரியின் மரபுப் பாவலர்களில் ஒருவர். ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான அவர் தொடர்ச்சியாக உளவியல் சார்ந்த நூல்கள் பலவற்றை எழுதி வருபவர். ”நாட்டுப்புறப் பாடல்களில் உளவியல் கூறுகள்” எனும் தலைப்பில் தமது இளமுனைவர் பட்டத்திற்கான ஆய்வினை என்னுடைய வழிகாட்டுதலில் நிகழ்த்திவர். இவர் மொழிபெயர்ப்புத் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு பல மொழிபெயர்ப்புக் கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். கல்வியியல், உளவியல், ஆன்மீகம் தொடர்பான அவரின் படைப்புகள் பலரது பாராட்டையும் வாழ்த்தினையும் பெற்ற சிறப்புக்குரியன. சிறுவர் இலக்கியம், மரபுக் கவிதை, புதுக்கவிதை, மொழிபெயர்ப்புக் கவிதைகள் என கவிதைத் துறையிலும் இடையறாது ஈடுபட்டு வருபவர். புதுச்சேரியின் இலக்கிய மேடைகளில் தமது சிறந்த கவிதைப் படைப்புகளால் தனித்த அடையாளம் பெற்றவர். முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய அமைப்புகள் அவருக்கு ஔவை விருது, கபிலர் விருது, மரபு மாமணி முதலான விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன. ஆற்றல் வாய்ந்த ஆளுமையோடு நல்லாசிரியராகயும் இலக்கியப் படைப்பாளியாகவும் சிறந்த ஆய்வாளராகவும் மொழி இலக்கியப் பணிகளை ஆற்றிவரும் பாலவர் வ.விஜயலட்சுமி அவர்களின் பதினைந்தாவது நூல் என்ற பெருமைக்குரியது இந்த திருக்குறளில் உளவியல் கூறுகள் இந்நூல்.

உளவியல்  (Psychology) என்பது மனதின் இயல்பு, செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். இத்துறை மனிதனுடைய மனதையும், நடத்தையையும் ஆராய்கிறது.. இத்துறையின் விற்பன்னர்கள் உளவியலாளர்கள் என்றழைக்கப் படுகின்றனர். இவர்கள் தனிமனிதனின் புலன் உணர்வு, அறிவாற்றல், செயல்திறன், மன அழுத்தம், ஆளுமை, நடத்தை ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து உரிய தீர்வு அளிக்கின்றனர். உளவியல் சார்ந்த அறிவானது அன்றாட வாழ்வில் மனிதர்கள் எதிர்கொள்ளும் கல்வி, குடும்பம், தொழில், சமூகம் உள்ளிட்டவைகளைப் பற்றி முழுவதும் ஆராய்ச்சி செய்கிறது. மேலும் அவற்றால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், அதற்கான தீர்வுகள் என அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துகின்றது.

திருவள்ளுவரின் குறட்பாக்களை ஆழ்ந்து கற்போருக்கு அவர் ஓர் உளவியல் வல்லுநராகவே தெரிகின்றார். தனிமனித உளவியல் மட்டுமல்லாது சமூகத்தின் கூட்டுமன உளவியல் குறித்தும் திருக்குறள் பேசுகிறது. அறத்துப்பால், காமத்துப்பால் இரண்டிலும் தனிமனித உளவியல் பெரிதும் பேசப்படுகிறது என்றால்,. பொருட்பால் மனித சமூகத்தின் கூட்டுமனம் மற்றும் அதன் செயற்பாடுகளை விவரிக்கிறது. நூலாசிரியர் உளவியல் துறையில் ஆழங்கால் பட்டவர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு அதிகாரத்தையும் உளவியல் கண்கொண்டு பார்க்கிறார். அதிகாரப் பொருண்மைகளை உளவியல் நோக்கில் விரித்துரைக்க முற்படுகிறார். சில குறட்பாக்களுக்கு உளவியல் விளக்கங்களை வழங்குகிறார். நூலாசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. விரிவான வருங்கால ஆய்வுகளுக்கு வழிகாட்டத் தக்கது.

அறிவுடைமை அதிகாரத்தின் கருத்துகளை உளவியல் பார்வையில் விவரிக்கும் நூலாசிரியரின் பின்வரும் பகுதியினை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வெல்ஸ் என்ற அறிஞரின் கூற்றுப்படி, அறிவுடைமை என்பது நமது நடத்தைக் கூறுகளை ஒழுங்குபடுத்தி, முற்றிலும் புதியதொரு சூழலில் அதற்கேற்ப மிகச் சிறப்பாகச் செயல்படுவது என்பதாகும். வில்லியம் ஸ்டெர்ன் கருத்துப்படி, அறிவுடைமை என்பது ஒரு புதிய சூழலில் அதற்குத் தகுந்தாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதாகும்.

இக்கருத்துகளோடு வள்ளுவரின்

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு (குறள்-426)

என்ற குறள் ஒப்பு நோக்கத் தக்கதாகும்.

நுண்ணறிவு என்பது பல்வேறு சக்திகளின் கூட்டமைப்பாகும். வெச்லர் என்பாரின் கருத்துப்படி நுண்ணறிவு என்பது ஒருவன் தன் சூழ்நிலைக்குத் தக்கவாறு நோக்கத்துடன் செயல்படவும், பகுத்தறிவோடு சிந்திக்கவும் திறமையோடு கையாளவும் தெரிந்திருக்கும் ஒரு திறனாகும்.

தன் பழைய அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு எதிர்காலச் செயல்களைத் திட்டமிடுதல் அறிவுடைமை.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர் (குறள்-427)

இவ்வாறு ஒவ்வொரு திருக்குறள் அதிகாரங்களிலும் அதன் பொருண்மையோடு தொடர்புடைய உளவியல் செய்திகளை மேற்கத்திய உளவியலாளர் கருத்துக்களோடு தொடர்புபடுத்தி மேற்கோள் காட்டி, குறட்பாக்களை விளக்கிச் செல்லும் நூலாசிரியரின் அணுகுமுறை சிறப்பானது. ஆயினும் விவரித்துச் சொல்ல வேண்டிய இடங்களில் கூட விவரித்துச் சொல்லாமல் சுருக்கமான முன்னுரையோடு குறட்பாக்களைச் சுட்டிச்செல்வது நமக்கு முழுநிறைவைத் தரவில்லை.

      திருவள்ளுவர் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் ”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” (குறள்-34) என்று அறத்திற்கு ஓர் எளிமையான விளக்கத்தினைச் சொல்லிச் செல்கின்றார். மனதில் குற்றமில்லாமல் இருப்பது எவ்வாறு முழுமைபெற்ற அறமாகும் என்ற வினா அனைவர் மனதிலும் எழலாம், நூலாசிரியர் இக்குறட்பாவிற்கு சிறப்பான விளக்கமொன்றனை வழங்கி புத்துரை தருகின்றார். அவர் தரும் புத்துரை பின்வருமாறு,

ஒவ்வொருவர் உள்ளத்திலும் நல்ல உணர்வுகளும் இருக்கும் தீய உணர்வுகளும் இருக்கும். நல்ல எண்ணங்கள் சிலர் மனதில் மேலோங்கி இருக்கும், தீய எண்ணங்கள் சிலரிடம் மேலோங்கி ஆதிக்கம் செலுத்தும். அத்தீய எண்ணங்களே மனதில் மிதக்கும் மாசுகள். உடலில் துர்நாற்றம் வீசுவதை மறைக்க நறுமணப் பொருட்களைப் பூசிக் கொள்வதைப் போல, சுவரின் விரிசலை மறைக்க அழகிய வண்ணப் படங்களை அதன்மீது ஒட்டுவதைப் போல சிலர் தங்கள் மனமாசுகளை மறைக்க ஆடம்பரமாக அன்னதானம், ஆடைதானம், பொருள்தானம் செய்வார்கள், இவை உண்மையில் அறமாகவே கொள்ளப்படா. எதையும் எவர்க்கும் தா இயலா ஏழையாக இருந்தாலும் மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறமெனக் கருதப்படும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற (குறள்-34)

நூலாசிரியர் வ.விஜயலட்சுமி இந்தக் குறட்பாவுக்குத் தரும் புத்துரை சிறப்பானது. நூலின் பக்கங்கள் தோறும் இவ்வாறு பல குறட்பாக்களுக்கு எளிய புதிய விளக்கங்களையும் சில புத்துரைகளையும் நூலாசிரியர் சுட்டிச் செல்வது பாராட்டத் தக்கது.

      திருக்குறள் ஓர் ஆழ்கடல். அதன் ஆழம் அளவிட முடியாதது. அதனை மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டடி போல் காட்டி நம்மை ஏமாற்றும். அந்த ஆழ்கடலில் மூழ்கி முத்துக் குளித்தவர்களுக்கே அதன் ஆழம் புரியும். நூலாசிரியர் வ.விஜயலட்சுமி அவர்களும் திருக்குறள் என்ற ஆழ்கடலில் மூழ்கி முத்துக் குளித்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்தும் பாராட்டும். இனி வாய்ப்பு கிடைக்கும் பொழுதிலெல்லாம் அவர் திருக்குறள் கடலில் மூழ்கி மூச்சடக்கி முத்துக் குளிப்பார். திரட்டிய முத்துகளை எல்லாம் கோர்த்து அழகான மாலையாக்கித் தமிழுலகிற்குப் பரிசளிப்பார் என்று நம்புவோம்.

 

nagailango@gmail.com

 

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

திருக்குறள் பேச்சுப் போட்டி - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

திருக்குறள் பேச்சுப் போட்டி


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

முனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி-8

அவையோர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்! இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதாகும். இச்சொற்றொடர் திருக்குறள் பொருட்பாலில் பெருமை என்ற அதிகாரத்தில் இடம்பெறும் அரிய குறளின் ஓர் பகுதியாகும். திருக்குறளின் பெருமையினை நான் சொல்லித்தான் இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.

“எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்”


என்று மதுரைத் தமிழ்நாகனாராலும்,
“உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு”


என்று மாங்குடி மருதனாராலும் போற்றிப் புகழப்படும் மாண்புடைய நூல் திருக்குறளாகும். எக்காலத்தும் உலகப் பொதுமறை என்று உலக மக்களால் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நூல் திருக்குறளாகும்.

திருவள்ளுவர் நமக்கு அருளிய திருக்குறள் ஓர் அறிவு நூல், அறநூல், தத்துவ நூல். எப்படிப் புகழ்ந்தாலும் திருக்குறளின் முழுமையை நம்மால் வார்த்தைகளால் அளந்து கூறிவிட முடியாது. மக்கள் வாழ்வு முழுவதையும் திருவள்ளுவர் நுணுகி அறிந்து, ஆராய்ந்து உணர்ந்துள்ளார். தமிழரின் வாழ்வியலை மட்டுமின்றி உலக மக்களின் வாழ்வியலையும் தம் நுண்மாண் நுழைபுலத்தால் ஓர்ந்து உணர்ந்ததால்தான் அவரால் ஓர் உலகப் பொதுமறையைப் படைக்க முடிந்தது. குறள் கூறும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாழ்வியல் மெய்ம்மை நமக்கு இதனைத் தெளிவாக உணர்த்துகின்றது.

இச்சொற்றொடர் அமைந்த அந்த அரிய திருக்குறளை முழுதுமாக உங்களுக்கு நான் சொல்லிக்காட்ட விரும்புகின்றேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் குறள்: 972


இத்திருக்குறளுக்கு நேரிய பொருள்: பிறப்பினால் உலக மக்கள் அனைவரும் ஒருவரே ஆவர். அவர்கள் செய்யும் தொழில்கள் வேறுபட்டிருந்தாலும் அதனால் அவர்களுக்குத் தனித்த சிறப்புகள் ஏதுமில்லை என்பதாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது ஓர் அடிப்படை உயிரியல் உண்மை. இவ்வுண்மையைத் திருவள்ளுவர் வாழ்வியல் விழுமியமாக முன்வைக்கின்றார். பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்படும் இந்தியச் சமூகச் சூழலில் திருவள்ளுவர் முன்வைக்கும் பிறப்பொக்கும் என்ற கருத்து ஒரு பாரிய புரட்சிக் கருத்தாகும். இந்தப் பரந்த உலகத்தையும் உலகத்து மக்களையும் இன்னும் கேட்டால் புல், பூண்டு, மரம், செடி., கொடி, பறவை, விலங்கு முதலான உலகத்து உயிர்கள் அனைத்தையுமே ஒரே தரத்தில் வைத்து எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்று உரத்து குரல் கொடுக்கின்றார் அவர். திருவள்ளுவரின் பொதுமைக் கரங்களில் அடங்காத சாதியில்லை, மதமில்லை, மொழியில்லை, வீடில்லை, நாடில்லை, நிறங்கள் இல்லை எல்லோரும் ஒன்று. ஒன்றே ஒன்றன்றி மேல் கீழ் என்ற பேதமில்லை, உயர்வு தாழ்வென்ற தரமில்லை, நான் நீ என்ற பிரிவில்லை, நாம், நாம், நாம்தான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவச் சிந்தனையின் வெளிப்பாடுதான் வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்ச்சி.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்!அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட
என்சிந்தை மிகவிழைந்த தாலோ


வள்ளலாரின் திருஅருட்பாக்களின் அடிநாதமாய் விளங்கின்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்ச்சிக்கு மேலே சொல்லப்பட்ட பாடல் ஒரு சான்று. இப்பாடலில் வரும் ‘எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்’ என்ற பாடலடிகளில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் புரட்சிக் குரலைக் கேட்கமுடியும். பிறப்பொக்கும் என்பதைத்தான் வள்ளலார் எத்துணையும் பேதமுறாது என்கிறார். எல்லா உயிர்க்கும் என்பதைதான் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி என்கிறார். ஆக திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற விழுமியமே வள்ளலாரால் ஆன்மநேய ஒருமைப்பாடு என்பதாக மாற்றம் பெறுகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நம்புகிறவன் உள்ளத்திலேதான் இறைவன் திருநடனமிடுகிறார் என்று திருவள்ளுவரின் பொதுமைச் சிந்தனைக்கு ஆன்மீகம் என்ற புதிய பரிமாணத்தை அளிக்கின்றார் வள்ளலார்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று திருமூலர் படைத்துக் காட்டும் ஓருலக ஒருமைப்பாட்டுக்கும் வழியமைத்துக் கொடுத்தது திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தொடரே என்றால் மிகையில்லை.

மகாகவி பாரதி தமிழ்மரபில் தொடர்ந்து வரும் திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சிந்தனைமரபின் தொடர்ச்சியாக ஓர் புதுமையைப் புகுத்துகின்றார். அதனைப் பின்வரும் பாடல் தெளிவுபடுத்தும்.

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே


என்று பாடினான பாரதி;. இப்பாடலின் உள்ளீடு திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதேயாகும். எல்லாரும் ஓர் குலம் என்று பாடும் அந்தப் பாடலில் அவன் பொதுவுடைமைத் தத்துவத்தைப் பேசுகிறான்.
முப்பது கோடி ஜனங்களின் சங்க
முழுமைக்கும் பொதுவுடைமை.
என்றும்

இனியொரு விதி செய்வோம் - அதை
எந்தநாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றும்

பாரதி பேசும் பொதுவுடைமைச் சிந்தனைக்கு பலம் சேர்த்தது திருவள்ளுவரின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற விழுமியமே. சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்ற திருக்குறளின் வரிகளையும் அவன் உள்வாங்கியதால்தான் செய் தொழிலின் வேறுபாட்டால் சிறப்புகள் இல்லை. எனவே உழைப்பு பொது, அதேபோல் ஊதியமும் பொதுவாயிருக்க வேண்டும். உடல் உழைப்பாளி குறைந்த ஊதியம் பெற்றதால் போதிய உணவின்றி பசித்திருக்க நேருகின்றதென்றால் இந்த உலகத்தையே அழித்துவிடலாம் என்று ஆவேசப்படுகிறான். திருவள்ளுவரும் இப்படி ஆவேசத்தின் உச்சியில் பரந்து கெடுக உலகியற்றியான் என்று சபிப்பதை இங்கே நாம் நினைவிற்கொள்ளுதல் வேண்டும்.

இன்றைக்கு உலகின் உயர்ந்த சித்தாந்தமாகப் போற்றப்படும் மார்ச்சீய சிந்தாந்தத்தின் வித்தாக பாரதி அமைத்துக் காட்டியது திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயிர்த்துடிப்புள்ள அடிகளைத்தான் என்று நினைக்கும் போது உண்மையிலேயே நாம் வியந்து போகிறோம்.

திருக்குறள் ஒரு தெளிந்த நீரோடை. ஆதன் உண்மையான ஆழம் ஆயிரம் அடிகளும் அதற்கு மேலும், அது அதனை இரண்டடியாகக் காட்டி ஏமாற்றுகிறது.

நன்றி! வணக்கம்!

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

பொறியின்மை யார்க்கும் பழியன்று -திருக்குறள் பேச்சுப் போட்டி

திருக்குறள் பேச்சுப் போட்டி


தலைப்பு: பொறியின்மை யார்க்கும் பழியன்று

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.


அவையோர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்! இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு “பொறியின்மை யார்க்கும் பழியன்று” என்பதாகும். இச்சொற்றொடர் திருக்குறள் பொருட்பாலில் ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்தில் இடம்பெறும் அரிய குறளின் ஓர் பகுதியாகும். திருக்குறளின் பெருமையினை நான் சொல்லித்தான் இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.

எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்

என்று மதுரைத் தமிழ்நாகனாராலும்,

உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு

என்று மாங்குடி மருதனாராலும் போற்றிப் புகழப்படும் மாண்புடைய நூல் திருக்குறளாகும். எக்காலத்தும் உலகப் பொதுமறை என்று உலக மக்களால் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நூல் திருக்குறளாகும்.
இச்சொற்றொடர் அமைந்த அந்த அரிய திருக்குறளை முழுதுமாக உங்களுக்கு நான் சொல்லிக்காட்ட விரும்புகின்றேன்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


இத்திருக்குறளின் சுருங்கிய பொருளாவது, ‘புத்திகூர்மை இல்லாதிருப்பது யார்க்கும் குற்றமன்று. ஆனால் புத்திகூர்மை இருந்தும் அறிய வேண்டியதை அறிந்தும் முயற்சி இல்லாதிருப்பது குற்றமாகும்’ என்பதே. அதாவது ஆள்வினையுடைமை என்ற அதிகாரமே முயற்சியின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதுதான். “முயற்சி திருவினையாக்கும்”, “தெய்வத்தான் ஆகாதுஎனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்றெல்லாம் முயற்சியை வலியுறுத்தும் திருவள்ளுவர் இந்தக்குறளில் முயற்சி இன்மை என்பது பழிக்குரிய செயல் என்பதோடு நிறுத்தாமல், வேறு ஒரு புதிய செய்தி ஒன்றையும் பதிவு செய்கின்றார். அதுதான் பொறியின்மை யார்க்கும் பழியன்று என்பதாகும். நான் மேலே சொன்ன விளக்கம் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் சொன்ன விளக்கமாகும்.

அதாவது பொறியின்மை என்றால் அறிவின்மை, பொறி என்பதற்கு அறிவு என்று அவர் பொருள் கொள்ளுகிறார்.
“நூலில் பரித்தஉரை யெல்லாம் பரிமேலழகன் தெரித்த உரையாமோ தெளி” என்ற என்ற புகழ்மொழியால் திருக்குறள் உரைகளிலேயே தலைசிறந்த உரை என்று போற்றப்படும் பரிமேலழகர் உரையில் பொறியின்மை என்பதற்குச் சொல்லப்படும் விளக்கத்தையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொறியின்மை என்றால் பயனைத் தருவதாய விதியில்லாமை. அதாவது பரிமேலழகரைப் பொறுத்தமட்டில் இக்குறளில் வரும் பொறி என்ற சொல்லுக்கு பயனைத் தருவதாய விதி, ஆகூழ் என்பதே பொருளாகும். ஆக இந்தக் குறளின் உண்மைப் பொருளை நாம் விளங்கிக் கொள்ள நமக்குத் தடையாக இருக்கும் சொல் பொறி என்பதாகும்.

பொறி என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் என்னவென்று பார்ப்போம். தமிழின் மிகப்புகழ்பெற்ற நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி தரும் விளக்கம் பொறி: அடையாளம், அறிவு, இயந்திரம், செல்வம், தீப்பொறி, புலப்பொறி, புள்ளி முதலானவைகளாகும்.

பொறி என்ற சொல்லுக்கு நிறைய பொருள் விளக்கங்கள் இருப்பதால் திருக்குறள் உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர்கள் கருத்துக்கு ஏற்ப விளக்கம் கூறுகின்றார்கள். இதில் தவறொன்றும் இல்லை. ஆனால் எக்காலத்துக்கும் எவ்விடத்தவர்க்கும் எச்சூழலுக்கும் பொருந்தும் விளக்கம் தந்து திருக்குறளை விளங்கிக் கொள்வதுதான் சரியான தாயிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரைகாரர்கள் பத்து பேரில் பரிதியார் என்று ஒரு உரையாசிரியர் இருந்தார். அவர் இந்தத் திருக்குறளில் இடம்பெறும் பொறியின்மை என்பதற்கு தரும் விளக்கம் மிகப்பொருத்தமாய் இருப்பது வியப்பிற்குரியது. பொறி என்ற சொல்லுக்குப் பரிதியார் புலன் என்று பொருள் கொள்ளுகிறார். திருவள்ளுவரே வேறு இடங்களில் பொறி என்ற சொல்லைப் புலன்கள் என்ற பொருளில் கையாளுகின்றார். பொறிவாயில் ஐந்தவித்தான் (குறள்:6) கோளில் பொறியில் குணமிலவே (குறள்:9) இந்த இரண்டு திருக்குறள்களிலும் பொறி என்ற சொல் ஐம்பொறிகள் என்ற பொருளிலேயே திருவள்ளுவரால் வழங்கப்படுகின்றன. ஆக பொறியின்மை யார்க்கும் பழியன்று என்றால் ஐம்புலன்களில் அதாவது கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய புலன்களில் ஏற்படும் குறை ஒருவருக்கு குற்றமாகாது என்பதாகும்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


மேலே சொல்லப்பட்ட அந்த முழுக்குறளுக்குமான பொருத்தமான பொருள் எது? என்றால் “உறுப்புக் குறைபாடு ஒருவருக்கு குற்றமாகாது முயற்சி இல்லாமையே குற்றமாகும்” என்பதாகும்.

இன்றைய சூழலில் இத்திருக்குறள் எவ்வளவு பொருத்தமானதாய் இருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஊனமுற்றோர் நலம் குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்துக்கு ஏற்ற சிந்தனையைத் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றுள்ள திறத்தைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்கமுடியாது. பிறப்பிலேயோ அல்லது விபத்து முதலான செயற்கையிலேயோ ஒருவருக்கு ஊனம் அமைந்து விடுவதென்பது ஒரு பெரிய பழியன்று. முயற்சி இல்லாமல் இருப்பதுதான் பழி என்று சொல்லும் இக்குறள் ஊனமுற்றவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஊட்டக்கூடியதாயிருப்பது வெளிப்படை. பொருத்தம் நோக்கி ஒரு திரைப்படப் பாடலை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகின்றேன்.

ஊனம் ஊனம் ஊனமிங்கே ஊனம் யாருங்கோ
உடம்பிலுள்ள குறைகளெல்லாம் ஊனமில்லிங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்ல
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே


முன்னே நாம் குறிப்பிட்ட திருக்குறளுக்கு முழுதுமாக ஒத்துப் போகக்கூடிய இத்திரைப்படப் பாடலுக்கு ஆதாரமே ‘பொறியின்மை யார்க்கும் பழியன்று’ என்ற திருக்குறள்தான்.

ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு மாற்றாக அண்மைக் காலமாக ஒரு புதிய சொல் வழங்கி வருகின்றது. அது என்ன சொல் தெரியுமா? “மாற்றுத் திறனுடையோர்” என்பதுதான் அந்தச் சொல். மாற்றுத் திறனுடையோர் என்ற இப்புதிய சொல்லின் பொருளைக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். ஒரு புலன் செயலற்ற நிலையிலும் மற்றவர்கள் போல் வாழ, வாழ்ந்து காட்ட, வாழ்ந்து சாதித்துக் காட்ட அவர்களுக்குச் செயலற்ற புலன்களுக்கு மாற்றாகப் பிற புலன்கள் மிகுந்த திறனுடையதாயிருக்கும். இன்னும் இதனை எளிமையாக ஒரு சான்று வழியாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். பார்வைப் புலன் இழந்த ஒருவருக்கு கேட்கும் புலனும் நுகரும் புலனும், தொடு புலனும் மிகவும் கூர்மையானதாயிருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். அவர்கள் மாற்றுத் திறன் உடையோர்கள் தானே!

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


என்ற திருக்குறளும் இதே செய்தியைத்தான் குறிப்பிடுகின்றது.
பொறியின்மை யார்க்கும் பழியன்று: ஒரு புலனில் ஏற்பட்டுள்ள குறையினால் ஒன்றும் குற்றமில்லை.

அறிவறிந்து: ஒரு புலனில் ஏற்பட்ட குறையை சமன் செய்ய இயற்கை பிற புலன்களுக்குக் கூடுதல் திறனைத் தந்துள்ளது, எனவே அத்தகைய கூடுதல் அறிவால் அறிய வேண்டியதை அறிந்தும்

ஆள்வினை இன்மை பழி: முயற்சி செய்யாமல் இருப்பது குற்றம்.

நடைமுறை வாழ்க்கையில் நாம் எத்தனையோ மாற்றுத் திறனுடைய (ஊனமுற்ற) மனிதர்களைச் சந்திக்கின்றோம். அவர்களில் பலர் பொறியின்மையை ஒரு குறையாகக் கருதாமல் அறிவறிந்து முயற்சியால் நாளும் சாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். சான்றுகள் பல உண்டு என்றாலும் காலத்தின் அருமை கருதி ஒருவரைக் குறிப்பிடுகின்றேன். சுதாசந்திரன், ஒரு விபத்தில் காலை இழந்தவர். சாதிக்க வேண்டும் என்ற மனத்திட்பத்தோடு தொடர்ந்த முயற்சியின் விளைவாக செயற்கைக் கால்களோடு நடனம் ஆடினார். மயூரி என்ற திரைப்படத்தில் ஒரு நாட்டியப் பேரொளியாகத் தோன்றி தன் மிகச்சிறந்த நடனத் திறமையால் அன்று முழு இந்தியாவின் ஏன்? உலகத்தின் கவனத்தையே ஈர்த்தவர். இன்றும் தமிழ், இந்தி முதலான பல மொழி தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து சாதனை செய்து கொண்டிருக்கின்றார்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று என்ற தலைப்பில் பேச எனக்கு வாய்ப்பளித்ததன் காரணமாக நானும் என்னைப் போன்றவர்களும் ஊனமுற்றோர் குறித்த விழிப்புணர்வு பெறுவதற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்கி விடைபெறுகிறேன். வணக்கம்.

வியாழன், 31 ஜனவரி, 2008

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு -பகுதி-ஒன்று

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு பகுதி-ஒன்று

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் திருக்குறள் தான் தோன்றிய காலந்தொடங்கி இன்றுவரை தமிழுலகில் நிலைத்து வாழ்ந்தும் தமிழர்களை வாழ்வித்தும் வருவது கண்கூடு.

ஓதற் கெளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் -தீதற்றோர்
உள்ளுந்தொ றுள்ளுந்தொ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

மாங்குடி மருதனாரின் இப்பாடல் திருக்குறளின் தனிப்பெருஞ் சிறப்பினைத் தெளிவு படுத்துகின்றது. படிப்பதற்கு எளிய சொற்களை உடையதாகவும் அறியப்படுவதற்கு அருமைப்பாடுடைய நுட்பமான பொருளை உடையதாகியும் வடமொழியில் சிறப்பித்துச் சொல்லப்படும் வேதங்களின் பொருளை உள்ளடக்கியும் அந்த வேதங்களை விடவும் சிறப்புபெற்றும் குற்றமற்றவர்கள் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அவர்களுடைய மனதை உருக்கக் கூடியதாகவும் வள்ளுவர் வகுத்துத்தந்த திருக்குறள் விளங்குகிறது என்பது மாங்குடி மருதனாரின் பாடல் கருத்து. திருக்குறள் கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளில் எத்தனையோ சமய, இன, மொழித் தாக்குதல்களை எல்லாம் வென்று காலம் கடந்து இன்றும் நிலைத்து நிற்பதற்குப் பல காரணங்கள் உண்டு, அவற்றுள் தலையாய காரணம் அதன் பொதுமைப்பண்பு. மொழி, இனம், நாடு கடந்த உலகப் பொதுமைநலம் வாய்ந்த அறங்களைப் பேசுவதால் திருக்குறள் உலகப் பொதுமறை என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே திருவள்ளுவ மாலை,

வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு (திரு.மா.47)

என்று திருக்குறளைப் புகழ்ந்து பேசுகின்றது. தொல்காப்பியத்துள்ளும் (இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை -தொல், களவியல்.1) சங்க இலக்கியத்தும் (அறனும் பொருளும் இன்பமும் ஆற்றும் பெரும நின் செல்வம் -புறம்,28) சிறப்பித்துச் சொல்லப்பட்ட அறம் பொருள் இன்பம் என்ற தமிழர் தம் தனிப்பெரும் உறுதிப்பொருள் கோட்பாட்டினைச் சிறப்பித்து முப்பாலாய் நூல் செய்த திருவள்ளுவரின் பெருமை அளவிடற்கரியது. எனவேதான் திருக்குறள் முப்பால் என்ற பெயராலேயே சிறப்பித்து வழங்கப்படுகிறது.

திருக்குறளும் உரைகளும்:

சற்றேறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த பிறகும் கூட திருக்குறளின் மொழிநடை இன்றும் எளிதில் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இருக்கின்றது. திருக்குறளின் காலத்தை ஒட்டிய சங்க இலக்கியங்களுக்கோ, சங்கம் மருவிய கால இரட்டைக் காப்பியங்களுக்கோ இத்தகு மொழிநடை அமையவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவேதான் மாங்குடி மருதனார் ஓதற்கு எளிதாய் என்றார். இத்தகு எளிய நடையைக் கொண்டிருந்தும் திருக்குறளுக்கு எண்ணிலடங்கா உரைகள் காந்தோறும் தோன்றிவருவது ஏன்? என்ற வினா எழுதல் இயல்பே, உணர்தற்கு அரிதாகி என்று அதற்கும் விடை சொல்கின்றார் மாங்குடி மருதனார்.

காலந்தோறும் திருக்குறளுக்கு உரைகள் தோன்றிவருவது திருக்குறளின் சிறப்புக்களில் ஒன்று. பரிமேலழகருக்கு முன் திருக்குறளுக்கு ஒன்பது உரைகள் தோன்றின. பத்தாவது உரையாகக் குறளுக்குப் பரிமேலழகரின் சீர்மிகு உரை தோன்றியது. பரிமேலழகரின் நுட்பமான உரைக்குப் பின்னும் கூட இன்று வரைக் கணக்கற்ற உரைகள் குறளுக்குத் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. திருக்குறளுக்கு நேரே உரை எழுதியவர்களே அல்லாமல் இளங்கோ அடிகள், சீத்தலைச் சாத்தனார், சேக்கிழார், கம்பர் போன்ற புலவர் பெருமக்கள் தம் நூல்களில் ஆங்காங்கே திருக்குறள் பகுதிகளை எடுத்தாண்டு, விளக்கமும் கூறியுள்ளனர். அப்பகுதிகளை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்த்தால் அச்சான்றோர்கள் திருக்குறளுக்குச் செய்யுள் வடிவில் உரைவிளக்கம் கூறி இருப்பது வெளிப்படும். பிற்காலத்தில் நீதி நூல்களை இயற்றிய சான்றோர்களும், திருக்குறளுக்குச் செய்யுள் வடிவில் உரை இயற்றியுள்ளனர். (மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள், ப.337)

திருக்குறளுக்கு உரை எழுதாமல் வேறு நூல்களுக்கு உரை வரைந்த உரையாசிரியர்கள் சிலர் தத்தம் உரைகளில் தேவையான இடங்களில் குறட்பாக்கள் சிலவற்றிற்கு உரை எழுதியுள்ளனர். சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் ஆகியோர் தம் உரைகளில் வாய்ப்பு நேர்ந்தபோது திருக்குறள் சிலவற்றிற்கு உரை கண்டுள்ளனர். அவ்வுரைகள் புதிய கருத்துக்களுடன் திருக்குறளுக்கு அணி செய்கின்றன.திருக்குறளின் பழைய உரையாசிரியர் பெயர்களைக் குறிப்பிடும் பழம்பாடல்,

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் -திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்

என்று பத்து உரையாசிரியர்கள் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. இப்பத்து உரைகளில் இன்று பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய ஐவர் இயற்றிய உரைகள் கிடைத்துள்ளன. ஏனையோர் உரைகள் கிடைக்கவில்லை. இந்தப் பத்து உரைகளே அன்றி இயற்றியவர் பெயர் தெரியாத மேலும் இரண்டு பழைய உரைகளும் திருக்குறளுக்கு உண்டு. பிற தமிழ் இலக்கிய இலக்கண நூல்களுக்கு இல்லாத அளவில் திருக்குறளுக்கு மட்டும் இத்துணை உரைகள் தோன்றியும் தோன்றிக் கொண்டேயும் இருக்கக் காரணங்கள் என்ன? திருக்குறளுக்கு ஒவ்வொருவரும் வேறு வேறு பதிய பொருள்களைக் காண முயன்றதும் கண்டதும்தான். குறளுக்கு வரையப்பட்ட இந்த உரை வேறுபாடுகள்தாம் புதிய புதிய உரைகள் தோன்றுவதற்குக் காரணமாயின. குறளின் உரை வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன?,திருக்குறள் உரை வேற்றுமைகளை நன்கு ஆராய்ந்து வெளியிட்ட இரா.சாரங்கபாணி உரை வேற்றுமைகளுக்கான காரணத்தைப் பின்வருமாறு உரைக்கின்றார்,

ஏடெழுதுவோர் பிழையால் புகுந்த பாட வேறுபாடுகளும், குறளைப் பிரிக்கும் முறைகளும் சொற்களைக் கொண்டு கூட்டும் நெறிகளும், காலத்தால் சொற்கள் எய்திய பொருள் வேறுபாடுகளும், சமுதாயத்தின் பழக்க வழக்க மாறுபாடுகளும் இயல்பாகவே உரை வேற்றுமைகட்கு இடங்கொடுத்து விட்டன. புற நாகரீகச் சார்பும் சமயச் சார்பும் அரசியற் சார்பும் முன்னிற்க, வலிந்து வேறுபட்ட உரைகளை எழுதினோரும் உளர். (மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள், ப.340)

மேற்கூறிய காரணங்கள் மட்டுமில்லாமல் திருக்குறளின் அமைப்பே அதற்குப் பல உரைகள் பெருகுவதற்குக் காரணமாய் அமைந்துள்ளது. குறளின் மிகச்சிறிய ஏழு சீர்களே கொண்ட யாப்பு வடிவமே உரைகள் பெருகுவதற்கு முதல்காரணம். விரித்துச் சொல்ல வாய்ப்பில்லாமல் பொதுவாகக் குறிப்பிட்டு அறங்களைக் கூறும் போக்கினால் உரையாசிரியர் விரித்துக் கூற முற்படும்போது பொருள் வேறுபாடுகள் தோன்றுவது இயற்கையே. கால வேறுபாடு அல்லது காலத்தின் தேவை சில குறட்பாக்களைப் புதிய நோக்கில் வாசிக்க இடந்தருகிறது. எனவே காலமாற்றங்களும் புத்துரைகளுக்குக் காரணங்களாகின்றன.

உரையாசிரியர் கலைஞர்:

அரசியல் அரங்கில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் தமிழவேள் டாக்டர் கலைஞர் என்று சிறப்பிக்கப்படும் மு.கருணாநிதி அவர்கள் இலக்கிய உலகிலும் தன்னேரில்லாத படைப்புகள் பலவற்றைப் படைத்துத் தமிழிலக்கிய உலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே.கலைஞர் தம் பன்னிரண்டாம் வயதில் எழுதத் தொடங்கி இன்றுவரை எழுதிக்குவித்த இலக்கியங்கள் எத்தனையோ. நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் இருபதிற்கும் மேற்பட்ட நாடக நூல்களையும் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைக்கதை உரையாடல்களையும் உருவாக்கியுள்ள கலைஞர் ஒரு பன்முகப் படைப்பாளி. கலைஞரின் இலக்கியப் படைப்புக்களை எட்டு வகையாகப் பாகுபடுத்தலாம்.

1. கவிதைகள்
அ. கவியரங்கக் கவிதைகள், ஆ. திரைப்படப் பாடல்கள், இ. தனிப்பாடல்கள்

2. கதைகள்
அ. சிறுகதைகள், ஆ. குறும் புதினங்கள், இ. புதினங்கள்

3. நாடகங்கள்
அ. ஓரங்க நாடகங்கள், ஆ. முழு நாடகங்கள்

4. காப்பியங்கள்

5. மடல்கள்

6. சொற்பொழிவுகள்

7. இலக்கிய விளக்கங்கள்

8. இலக்கிய இலக்கண உரைகள்

என்பன கலைஞரின் இலக்கியப் படைப்பின் வகைப்பாடுகளாகும். இலக்கண இலக்கிய உரைகள் என்ற எட்டாம் வகைப்பாட்டில் அடங்கும் நூலே கலைஞரின் திருக்குறள் உரை ஆகும். தமிழன் நாளேட்டில்தான் கலைஞரின் திருக்குறள் உரை முதன் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் முரசொலி நாளேட்டில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெளிவந்து முழுமைபெற்றது. திருக்குறள் கலைஞர் உரை என்ற பெயரில் நூலாக வெளிவந்த ஆண்டு 1996.

திருக்குறள் கலைஞர் உரை:

கலைஞர் குறளோவியம் என்ற பெயரில் முந்நூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களுக்கு விரிந்த அளவில் சொல்லோவியமாய்த் தீட்டிய குறள் உரை இலக்கியம் தமிழுக்குக் கிடைத்த ஓர் புத்திலக்கியம் எனும் பாராட்டையும் பெற்றது. குறளோவியத்தின் வெற்றி திருக்குறள் முழுமைக்கும் உரையெழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பை எனக்குள் ஏற்படுத்தியது என்று உரையாசிரியர் கலைஞரே உரையெழுதியதற்கான காரணத்தைத் தம் நூல் முன்னுரையில் குறிப்பிடுவார்.தம்முடைய உரையின் நோக்கத்தையும் அமைப்பையும் உரையெழுதுகையில் கையாண்ட நெறிமுறைகளையும் முன்னுரையில் உரையாசிரியரே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள பொருளன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மைநிலையைக் கடைபிடித்து, நான் எண்ணுவது போல் அவர் எண்ணினாரா என்று நோக்காமல் அவர் எண்ணி எழுதியது என்ன என்பதை அறிவதில் மட்டுமே அக்கறை கொண்டு என் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டிய வரையில் இந்தப் பொன்னாடையை நெய்துள்ளேன் (உரை எழுதியுள்ளேன்).

இந்த முன்னுரைப் பகுதியில் உரையாசிரிர் கலைஞர் உரை எழுதுவதற்கான நெறிமுறைகள் சிலவற்றை வகுத்துத் தருகின்றார்.

1. உரையெழுதப் போகும் நூலின், நூலாசிரியனின் காலத்து நம்பிக்கைள், பண்பாடுகள், அவைகள் குறித்த நூலாசிரியன் பார்வை என்ன என்பதையெல்லாம் உரையாசிரியர் அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.

2. நூலாசிரியன் கருத்துக்கு மாறாக வலிந்து உரையாசிரியர் தம் கருத்துக்களை உரையில் திணித்தல் கூடாது.

3. உரையாசிரியர் எண்ணுவதை விட நூலாசிரியன் எண்ணியதற்கே முதன்மை அளித்தல் வேண்டும்.

4. உரையாசிரியர் தம் அறிவையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தி உரை வரைதல் வேண்டும்.

மேற்கூறிய நெறிமுறைகள் கலைஞரால் வகுத்துக் கொள்ளப்பட்ட நெறிமுறைகள். இந்த நெறிமுறைகளைப் பின்பற்றியே இவர் தமது உரையை எழுதிச் செல்கின்றார் என்பதும், எந்த இடத்திலும் தாம் வகுத்துக்கொண்ட நெறிமுறைகளுக்கு மாறாக அவர் உரை எழுதவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கடவுள் வாழ்த்தா? வழிபாடா?

திருக்குறளின் அதிகார வரிசைமுறை, குறள் வரிசைமுறை, அதிகாரப் பெயர்கள் முதலான நூலின் அமைப்புமுறை ஒவ்வொரு உரையாசிரியருக்கும் வேறுபடுகின்றது. எனவே இன்று நாம் காணும் திருக்குறள் அமைப்பு முறை திருவள்ளுவர் வடிவமைத்ததல்ல என்ற கருத்து அறிஞர் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உரையாசிரியர்கள் பலரும் பல இயல் பகுப்புகளில் மாற்றம் செய்தும் அதிகாரங்களை இயல் மாற்றி வகைப்படுத்தியும் அதிகாரத்திற்குள் வரும் குறட்பாக்களை இடம் மாற்றியும் அமைத்து உரை வகுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறளின் முதல் அதிகாரப் பெயராக இருந்துவந்த கடவுள் வாழ்த்து என்ற பெயரைக் கலைஞர் வழிபாடு என்று பெயர்மாற்றம் செய்கின்றார். கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத் தலைப்பை வழிபாடு எனக் குறித்துள்ளேன். வள்ளுவரைக் கடவுள் மறுப்பாளர் அல்லது கடவுள் நம்பிக்கையாளர் எனும் வாதத்திற்குள் சிக்கவைக்க நான் விரும்பவில்லை. வழிபாடு எனும் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களுக்கு நான் எழுதியுள்ள உரைகளைக் கொண்டு இதனை உணரலாம்.என்று உரையாசிரியர் முன்னுரையில் குறிப்பிடும் பகுதி இது. கடவுள் கோட்பாட்டை மறுக்கவோ மறைக்கவோ நான் அதிகாரத் தலைப்பை மாற்றவில்லை என்று எழுதும் கலைஞர், வழிபாடு எனப் பெயர் மாற்றம் செய்ததற்கான காரணத்தைத் தம் முதலதிகார உரையில் வெளிப்படுத்துகின்றார். பத்து குறட்பாக்களில் எங்கும் கடவுள் சொல்லோ வாழ்த்தோ இடம் பெறவில்லை. மாறாக வணக்கத்திற்குரிய பெருந்தகையாளரை வழிபடுதல் பற்றிய செய்திகளே காணக் கிடைக்கின்றன. அடி சேர்தல், தாள் சேர்தல் என்ற சொற்களுக்கெல்லாம் அடியொற்றி நடத்தல் என்றே உரை கூறுகின்றார் கலைஞர். தன் உரையின் வழி வழிபாடு என்ற பெயரே முதலதிகாரத்திற்குப் பொருந்தும் என நிறுவுகிறார் அவர்.

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள்:

கலைஞரின் திருக்குறள் உரை நூலுக்குப் பதிப்புரை எழுதிய பேராசிரியர் மா.நன்னன் அப்பதிப்புரையை ஓர் ஆய்வுரையாகவும் வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்னன் கலைஞர் உரையின் சிறப்பியல்புகளைக் குறிப்பிடும் போது,இவர் மரபுப் பொருள், சொற்பொருள், தெளிவுப் பொருள், சுருக்கப் பொருள் என்பன போன்ற முறையில் பொருள் கூறிச் செல்லாமல் இக்காலத் தமிழன் ஒரு குறளைப் படித்தால் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை இற்றெனக் கிளந்து, தெற்றெனக் காட்டுவதையே தம் உத்தியாகக் கொண்டுள்ளார் எனத் தெரிகிறது.என்று கலைஞர் உரையின் தனித்தன்மையை, அதன் புரிதலை, அதன் எளிமையை உத்தியாக எடுத்துக் காட்டுகின்றார். புலவரேறு அரிமதி தென்னகன் திருக்குறள் கலைஞர் உரை ஒரு பார்வை என்ற நூலில் கலைஞர் உரையின் தனித்தன்மையைப் பின்வருமாறு விளக்கியுரைக்கின்றார்.

அது பதவுரையா? இல்லை! தோலுரித்த பழம் போன்ற பொழிப்புரையா? இல்லை! பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கிய சுளைகளைப் போன்ற சுருக்கமான கருத்துரையா? இல்லை! கனியைப் பிழிந்திட்ட சாறு என்பார்களே அத்தகைய கனியுரையே கலைஞர் உரை! ஆம் குறளின் பிழிவே கலைஞர் உரை என்பதே உண்மை. .. அதுதான் எளிமை! அதுவே இனிமை! அதுதான் தெளிவு! அதுதான் தேவை!.. (அரிமதி தென்னகன், திருக்குறள் கலைஞர் உரை ஒரு பார்வை, ப.129)

கனியைப் பிழிந்திட்ட சாறு போல் எளிமையின் வடிவாகவே கலைஞர் உரை அமைந்துள்ளது எனக்குறிப்பிடும் புலவரேறு, கலைஞர் உரையின் சிறப்பியல்புகளாக மேலும் சில செய்திகளைக் குறிக்கின்றார். அவை,

1.குறளிலிருந்து பெறும் பொருளைவிடக் குறளால் உணரப்படும் செய்தியே எளிமையானதாக அமையும் என்பதில் கலைஞர் உறுதியாக நின்றுள்ளார்.

2.அறிவால் பெறப்படும் செய்தியைவிட நெஞ்சால் உணரப்படும் செய்தியை உரையாகத் தருவதே, சேர வேண்டிய இடத்திற்கு எளிதாகக் கொண்டு செல்லும் என்னும் நோக்கமே கலைஞர் உரையாகப் பொலிவு பெற்றுள்ளது.

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு- பகுதி இரண்டு

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு- பகுதி இரண்டு

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

கருத்துரை கூறுவதில் புதிய உத்திகள்:

பதவுரை என்றால் எல்லாச் சொற்களுக்கும் உரை கூற வேண்டும். பொழிப்புரை என்றால் எல்லாச் சொற்களுக்குமான உரையைத் தொடர்ச்சியாகத் தருதல் வேண்டும். கருத்துரை என்றால் எல்லாச் சொற்களுக்கும் உரைகூற வேண்டுமென்ற தேவையில்லை, பொழிப்புரையைச் சுருக்கித் தந்தால் போதுமானது. கலைஞரின் உரை பதவுரையும் இல்லை. பொழிப்புரையும் இல்லை. ஒருவகையில் கருத்துரை என்று சொல்லத்தக்க அளவில் தம் உரையை வரைந்துள்ளார். கருத்துரையிலேயும் எளிதில் புரிதல் என்னும் புதிய நடைமுறை ஒன்றை உத்தியாக வகுத்துக்கொண்டு உரை வரைகின்றார் கலைஞர்.

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
குறள்: 49

கலைஞர் உரை: பழிப்புக்கு இடமில்லாத இல்லாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.மேலே குறிப்பிட்ட குறளில், சுருக்கத்திற்கே பெயர் பெற்ற திருக்குறளுக்கு உரை விளக்கம் அதைவிடச் சுருக்கமான வடிவில் கலைஞரால் வடிக்கப்பட்டுள்ளது. ஏழு சீரால் அமைந்த குறளுக்கு ஆறு சீரால் உரை. குறளின் எந்தச் சொல்லையும் உரையாசிரியர் புறக்கணிக்கவில்லை. குறம் கூறும் செய்தியின் ஆழமும் அழுத்தமும் உரையிலேயும் பொதித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறளுக்கும் உரைக்கும் என்ன வேறுபாடு என்றால், எளிமை, இனிமை, சுருக்கம், புரிதல் நான்கும் உரையில் மேலோங்கியுள்ளது. மேலே குறிப்பிட்ட குறளுரையின் சீர்மையையும் பெருமையையும் முற்ற முழுதாக உணரவேண்டுமென்றால் இக்குறளின் பிற உரைகளோடு கலைஞர் உரையை ஒப்பிட்டுப் பார்த்து உணரலாம். கலைஞர் உரையின் பெரும்பகுதி இவ்வகையில் அமைந்த சுருக்க உரையாகவே அமைந்திருப்பது இவ்வுரை நூலின் சிறப்பு. கருத்துரையில் இடைப் பிற வரல் எனும் புதிய உத்தியைக் கையாண்டு உரையின் எளிமைக்கு பலம் சேர்க்க்கின்றார் கலைஞர்.

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
குறள்: 128

கலைஞர் உரை: ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல் பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.அடக்கமுடைமை எனும் அதிகாரத்தில் வரும் மேற்கூறிய குறளுக்குப் பரிமேலழகரின் உரைக்கு மாறுபட்டு எளிய, புதிய உரை கூறவந்த உரையாசிரியர் கலைஞர் உரைப் பொருள் எளிமையாக விளங்குதல் பொருட்டு ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல் என்ற நடைமுறையில் உள்ள பொருத்தமான உவமை ஒன்றை எடுத்துக்காட்டி உரை வகுக்கின்றார். பரிமேலழகர் நன்றாகாதாகி விடும் என்ற குறள் பகுதிக்கு, பிற அறங்களால் உண்டான நன்மை தீதாய்விடும் என்று சொன்ன உரையை விட, பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும் என்று கலைஞர் உரைக்கும் உரையே அனுபவ உரையாக பொருத்தமான உரையாக அமைந்து சிறக்கின்றமை உரையில் இடைப்பிறவரலாக அவர் அமைத்த பழமொழியின் உதவியால் எளிதில் விளங்குகிறது. பழமொழியை இடைப்பிறவரலாக இணைத்துத் தம் கருத்துரையில் புதுமை சேர்த்தது போலவே மேலும் பல குறள் உரைகளில் சில புதிய சொற்களை வருவித்து உரைத்து உரைவழங்கும் உத்தியைச் சிறப்பாகக் கையாளுகின்றார். சான்றாக,

உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
குறள்: 339

கலைஞர் உரை: நிலையற்ற வாழ்க்கையில் உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு, திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு இக்குறள் உரையில் குறளில் இல்லாத புதிய சொல்லாக நிலையற்ற வாழ்க்கையில் என்று சேர்த்து நிலையாமை என்ற அதிகாரப் பொருளை நினைவு கூர்கின்றார். மேலும் திருவள்ளுவர் உறங்குவது போலும் சாக்காடு என்று சொன்ன குறட்பகுதிக்கு விளக்கம் சொல்லும் போது மீளா உறக்கம் கொள்வதே இறப்பு என, மீளா என்ற புதிய சொல்லை இணைத்து உரை காண்கின்றார். உறக்கமே இறப்பு என்பதற்கும் மீளா உறக்கமே இறப்பு என்பதற்கும் ஆழமான பொருள் வேறுபாடு உண்டு. மீளா உறக்கம் என்பதில் பிறப்பு இறப்புச் சுழற்சி இல்லை. மறுபிறப்பு இல்லை. பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் இவை முதலான ஆன்மா தொடர்பான கருத்தியல்கள் ஏதும் இல்லை. பிறப்பு இறப்பு என்ற இரண்டுக்கு மட்டுமே இடம் உண்டு. கலைஞர் உரையின் நுட்பமும் ஆழமும் இதுபோன்ற உரை உத்திகளில்தாம் சிறப்புற வெளிப்படுகின்றன. கருத்துரைகளில்தான் எத்துணை புதுமை செய்கின்றார் உரையாசிரியர் கலைஞர். சொல்லுக்குச் சொல் என்று சுருக்கி உரை சொல்ல வந்த கலைஞர் சில குறட்பா உரைகளில் சொல்லுக்குச் சொல் அடைகொடுத்துச் சிறப்பிக்கும் உத்தியைக் கையாண்டு பல குறட்பாக்களின் நுட்ப விளக்கங்களை யெல்லாம் ஒரே குறட்பாவில் விளங்கிக் கொள்ள வைக்கின்றார்.

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
குறள்: 381

கலைஞர் உரை: ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண்சிங்கம் போன்ற அரசாகும்.இக்குறளுக்குப் பரிமேலழகர் படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன் அரசருள் ஏறு போல்வான் என்று இயல்பாக அடுக்கி உரை சொல்ல, கலைஞரோ அடைமொழிகளை யெல்லாம் இணைத்து அரிய உரையொன்றை இக்குறளுக்கு வழங்குகின்றார். ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் என்ற பகுதியில் மோனைகளால் சிறந்து விளங்கும் கவிதை நடையைக் கண்டு இன்புற முடியும். இயல்பாகவே பேச்சிலும் கவிதைநடை மிளிரும் ஆற்றல் மிக்க கலைஞர் குறள் உரையிலும் கவிதை நடையைக் கையாண்டு அழகு சேர்த்துள்ளமையை ஒரு புதிய உத்தி என்றே கொள்ள வேண்டும். இந்த அடைமொழிகள் அழகுக்காகக் கோர்க்கப்பட்ட அணிகலன்களாக இல்லாமல் அரசனின் ஆறு அங்கங்களையும் விளக்கிக் கூறும் ஆற்றல் வாய்ந்த விளக்கங்களாக அமைந்துள்ளமை கண்கூடு. வரும் குறட்பாக்களில் பொருட்பாலில் விவரித்துச் சொல்லப்போகும் ஆறு அங்கங்களின் விளக்கங்களையும் ஒரே குறள் உரையில் பெய்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார்.

கருத்துரையில் ஒரு புதுமை: (சொல்லியதும் சொல்லாததும்)
கலைஞர் உரையில் எளிமை மட்டுமல்ல ஏராளமான புதுமைகளும் உண்டு. திருக்குறள் பல சமயங்களில் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லாமல் வேறொன்றைச் சொல்லி, சொல்ல வந்ததைக் குறிப்பால் உணர்த்திவிடும். பீலி பெய் சாகாடும்.., நுனிக்கொம்பர் ஏறினார்.., கடலோடா கால்வல் நெடுந்தேர்.., போன்ற குறட்பாக்களை இவ்வுத்திக்குச் சான்றாகக் காட்டலாம். அணி நூலார் இதனை ஒட்டணி என்றுரைப்பர். கலைஞரோ தம் திருக்குறள் உரையில், திருவள்ளுவர் நேரடியாகச் சொன்ன ஒரு குறள் செய்தியை விளக்கும் போது அதனோடு தொடர்புடைய பிறிதொரு அறத்தையும் நினைவு படுத்தி ஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போல திருக்குறள் சொல்லியதையும் சொல்கிறார் சொல்லாததையும் சொல்கிறார்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
குறள்: 17

கலைஞர் உரை: ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும். மேற்காட்டிய குறள் உரையில் திருவள்ளுவர் சொன்னது, ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் என்ற செய்தி. திருவள்ளுவர் சொல்லாதது, மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும் என்ற செய்தி. கடலிலிருந்து நீரை முகக்கிற மேகம் மீண்டும் அந்தக் கடலுக்கு மழையாகப் பொழிந்து நீரை வழங்க வேண்டியது அதன் கடமை. மேகம் அப்படிச் செய்யவில்லை யென்றால் அளப்பரிய அந்தக் கடல்கூட வற்றிவிடும். அதே போல் மனித சமுதாயத்தில் பலப்பல நன்மைகளைப் பெற்று உயர்ந்து புகழ் பெற்றவர்களும் மீண்டும் அந்தச் சமூகத்திற்குத் தொண்டு செய்து பயன்பட வேண்டும் அது அவர்களின் கடமை. அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால் சமூகமும் அழிவை எதிர்கொள்ள வேண்டிவரும் என்ற எச்சரிக்கையை இடமறிந்து பொருள் பொருத்தமறிந்து சொன்ன உரையாசிரியர் கலைஞரை வியக்காமலிருக்க முடியாது. உடன் ஒன்று சேர்த்துச் சொல்லல் என்ற இந்த உத்தி கலைஞர் கையாளும் தனித்துவம் வாய்ந்த உத்தி என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

உரை மரபை மீறும் உத்தி:
மூல நூலாசிரியன் சொல்லுகிற கருத்தை வலியுறுத்திக் கூறுவதும் விளக்கமளிப்பதும் மட்டுமே உரையாசிரியன் பணி என்பது மரபார்ந்த உரைநூல்களின் இலக்கணம். ஆனால் கலைஞர் உரை இந்த உரை மரபிலிருந்து மாறுபடுகின்றது. உரை மரபுகளை மீறுதல் என்பதையே ஒரு உத்தியாகக் கையாண்டு பல குறட்பாக்களுக்கு விளக்கமளித்துள்ளார் உரையாசிரியர் கலைஞர்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
குறள்: 319

கலைஞர் உரை: பிறர்க்குத் தீங்கு விளைவித்து விட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே, அதே போன்ற தீங்கு அவரையே தாக்கும்.இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் வரும் இக்குறட்பாவிற்குக் கலைஞர் கூறும் உரையை நுணுகிப் பார்த்தால் இரண்டு புதிய செய்திகளை அவர் பதிந்துள்ளது தெரியவரும். ஒன்று, இன்னா செய்யின் என்று மட்டுமே மூல நூலாசிரியன் சொல்லியிருக்க உரையாளரோ தீங்கு விளைவித்து விட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே என, தீங்கு செய்தவரின் மகிழ்ச்சியைப் பதிவு செய்கிறார். ஒருவர் மனமறிந்து அல்லது வேண்டுமென்றே தீங்கு செய்தால் அதாவது பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடிய நெஞ்சினராக இருந்தால் அவர் செய்த தீமை அவருக்கே வந்து மூளும் என்று புதிய விளக்கம் தருகிறார். அறியாமல் பிறர்க்கு தீங்கு விளைவித்து விட்டவர்களுக்கு இவ்விதி பொருந்தாது என்பது உரையாசிரியரின் மற்றுமொரு உட்கருத்து.இரண்டாவது, பிறருக்கு நாம் முற்பகலில் தீங்கு செய்தால் பிற்பகலிலேயே நமக்குத் தீங்கு வந்து சேரும் என்று திருவள்ளுவர் தம் குறளில் சொல்லியிருக்க உரையாசிரியரோ, ஒருவர் பிறர்க்குத் தீங்கு செய்ததை நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே அதேபோன்ற தீங்கு அவரைத் தாக்கும் என்று உரை செய்துள்ளார். முற்பகல் பிற்பகல் என்று கால வேறுபாட்டை மூல நூலாசிரியன் சொல்லியிருக்க, கலைஞரோ கால இடையீடின்றி உடனே தீங்கு செய்தவனைத் தாக்கும் என்கிறார். இந்த உரை வேறுபாட்டினைக் கூர்ந்து கவனித்தால் அறத்தை வலியுறுத்துவதில் மூல நூலாசிரியனை விட உரையாசிரியர் வேகம் காட்டுகிறார் என்பது புலனாகும். இப்போக்கு உரை மரபுக்கு மாறானது என்றாலும் கூட இதனையே ஓர் உத்தியாகக் கையாண்டு வெற்றிபெற்றுள்ளார் உரையாசிரியர் கலைஞர் என்பதை உணரமுடியும்.

புதிய விளக்கங்களை இணைக்கும் உத்தி:
உரையாசிரியர்கள் மூல நூலுக்கு உரை எழுதும் போது, தாம் எழுதும் இவ்வுரைக்கு முன் தோன்றிய உரைகள் அனைத்தையும் படித்து உள்வாங்கி எழுதுவது வழக்கம். அப்படி உரை வகுக்கும்போது பிறர் உரைகளை ஏற்று எழுதுவதும், மறுத்து அல்லது மாறுபட்டு எழுதுவதும் வழக்கமான நடைமுறைகளாகும். உரையாசிரியர்கள் சிலர் பழைய உரைகளோடு ஒத்துப் போகும் இடங்களில் கூடச் சில சொற்களுக்குப் புதிய விளக்கங்களை இணைத்துத் தமது உரைக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்றிவிடுவதுண்டு. உரையாசிரியர் கலைஞர் குறளுரையின் பல இடங்களில் இத்தகு உத்தியைக் கையாண்டுதம் உரைக்குப் புதுமை சேர்க்கின்றார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை.
குறள்: 43

கலைஞர் உரை: வாழ்ந்து மறைந்தாரை நினைவு கூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல், ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்கு உரியனவாம்.இல்வாழ்க்கை அதிகாரத்தில் வரும் மேற்குறிப்பிட்ட குறளுக்குப் பரிமேலழகர் பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம் என்று உரை எழுதுகின்றார். ஆனால் கலைஞரோ இக்குறள் உரையில் மூன்று புதிய விளக்கங்களை இணைத்துப் புத்துரை படைக்கின்றார்.

1. தெய்வம் என்று குறள் குறிப்பிடும் சொல்லுக்கு தேவர் என்று பொருள் கூறுகின்றார் பரிமேலழகர். கலைஞரோ தெய்வம் எனடபதற்கு வாழ்வாங்கு வாழ்வோர் என்று பொருள் காணுகின்றார்.

2. ஐவருக்கும் செய்யும் அறங்கள் என்று பொதுப்பட பரிமேலழகர் உரை சொல்லியிருக்க, கலைஞரோ ஒவ்வொரு அறத்தையும் நினைவு கூர்தல், போற்றுதல், ஓம்புதல், பேணுதல், நிலைப்படுத்திக் கொள்ளல் என்று விளக்கி விரிவுரை செய்கின்றார்.

3. இல்வாழ்வான் அறநெறியை வழுவாமல் செய்ய வேண்டிய இடங்கள் ஐந்தினைக் குறிப்பிடும்போது, தான் என்று இல்வாழ்வானையும் இணைத்துக் கொள்கின்றார். இல்வாழ்வான் தனக்கே அறநெறி வழுவாமல் எப்படி? என்ன? செய்துகொள்ள முடியும் என்ற மயக்கம் இவ்வுரையில் தோன்றுகிறது. உரையாசிரியர் கலைஞரோ இத்தகு குழப்பத்திற்கு இடமில்லாமல் உரை எழுதுகின்றார். எப்படியெனில், வாழ்ந்து மறைந்தாரை நினைவு கூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல், ஆகிய நான்கு கடமைகளையும் நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் என்று ஐந்தாவதாக இடம்பெறும் தான் என்பதற்கு விளக்கம் கூறிக் குறளுரையை முழுமை செய்கின்றார்.

புதிய விளக்கங்களை இணைக்கும் இவ்வுத்தி கலைஞரின் உரை உத்திகளில் தனிச்சிறப்பானதாகும்.காமத்துப்பாலில் இடம்பெறும்,

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
குறள்: 1311

மேற்கூறிய புலவி நுணுக்கம் அதிகாரப் பாடலில் பரத்த நின் மார்பு என்பதற்குப் பரத்தமை ஒழுக்கம் உடையவனே என்று எல்லா உரையாசிரியர்களும் உரை கூற, கலைஞரோ பரத்த என்பதை வலித்தல் விகாரமாகக் கொண்டு பரந்த நின் மார்பு என்று புதிய விளக்கம் தருகின்றார். இப்புதிய விளக்கம் பரத்தமை செய்திகளை முற்றிலுமாக விலக்கி நூல் சமைத்த திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் உரையாக அமைந்து சிறக்கின்றது.

முடிப்புரை: கலைஞரின் திருக்குறள் உரை வழக்கமான திருக்குறள் உரைகளிலிருந்து மாறுபட்டுப் பல இடங்களில் புத்தம் புத்துரையை வழங்குகின்ற உரையாகத் திகழ்கின்றது. கலைஞரின் புத்துரைகள் தனித்தலைப்பில் ஆராயப்பட வேண்டிய தனித்தன்மை வாய்ந்தவை. கலைஞரின் உரையிலியே அளவில் பெரிய உரை அறத்தாறு இதுவென வேண்டா.. என்ற குறளுக்குக் கலைஞர் வரைந்துள்ள உரையே. நுட்பம் வாய்ந்த இக்குறள் தனியே விரித்துரைக்கத் தக்கது. இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரையெழுதுவதும் ஒன்றுதான் என்று உரையாசிரியர் கலைஞர் தம் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது குறள் உரையில் அவர் காட்டும் சிரத்தைக்கு ஓர் அடையாளம். அவையடக்கமாக இச்செய்தியைக் கலைஞர் குறிப்பிட்டாலும் இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் பெரிய முயற்சியில் அவர் வெற்றிபெற்றுள்ளார் என்றே தோன்றுகிறது. திருக்குறளை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் எளிதில் குறட்கருத்துக்கள் புரிதல் வேண்டும் என்ற கொள்கையோடு உரை வரையத் தலைப்பட்ட கலைஞர் தம் எளிமையான நடையாலும் தாம் கையாண்டு வெற்றி பெற்றுள்ள பல்வகைப் புதிய உத்திகளாலும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். கலைஞர் உரையை வாசிக்கும்தோறும் நம் நினைவுக்கு வருகிற திருக்குறள்,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
குறள்: 517.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...