Thursday, January 31, 2008

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு- பகுதி இரண்டு

கலைஞரின் திருக்குறள் உரை உத்திகள் ஓர் ஆய்வு- பகுதி இரண்டு

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

கருத்துரை கூறுவதில் புதிய உத்திகள்:

பதவுரை என்றால் எல்லாச் சொற்களுக்கும் உரை கூற வேண்டும். பொழிப்புரை என்றால் எல்லாச் சொற்களுக்குமான உரையைத் தொடர்ச்சியாகத் தருதல் வேண்டும். கருத்துரை என்றால் எல்லாச் சொற்களுக்கும் உரைகூற வேண்டுமென்ற தேவையில்லை, பொழிப்புரையைச் சுருக்கித் தந்தால் போதுமானது. கலைஞரின் உரை பதவுரையும் இல்லை. பொழிப்புரையும் இல்லை. ஒருவகையில் கருத்துரை என்று சொல்லத்தக்க அளவில் தம் உரையை வரைந்துள்ளார். கருத்துரையிலேயும் எளிதில் புரிதல் என்னும் புதிய நடைமுறை ஒன்றை உத்தியாக வகுத்துக்கொண்டு உரை வரைகின்றார் கலைஞர்.

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
குறள்: 49

கலைஞர் உரை: பழிப்புக்கு இடமில்லாத இல்லாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.மேலே குறிப்பிட்ட குறளில், சுருக்கத்திற்கே பெயர் பெற்ற திருக்குறளுக்கு உரை விளக்கம் அதைவிடச் சுருக்கமான வடிவில் கலைஞரால் வடிக்கப்பட்டுள்ளது. ஏழு சீரால் அமைந்த குறளுக்கு ஆறு சீரால் உரை. குறளின் எந்தச் சொல்லையும் உரையாசிரியர் புறக்கணிக்கவில்லை. குறம் கூறும் செய்தியின் ஆழமும் அழுத்தமும் உரையிலேயும் பொதித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறளுக்கும் உரைக்கும் என்ன வேறுபாடு என்றால், எளிமை, இனிமை, சுருக்கம், புரிதல் நான்கும் உரையில் மேலோங்கியுள்ளது. மேலே குறிப்பிட்ட குறளுரையின் சீர்மையையும் பெருமையையும் முற்ற முழுதாக உணரவேண்டுமென்றால் இக்குறளின் பிற உரைகளோடு கலைஞர் உரையை ஒப்பிட்டுப் பார்த்து உணரலாம். கலைஞர் உரையின் பெரும்பகுதி இவ்வகையில் அமைந்த சுருக்க உரையாகவே அமைந்திருப்பது இவ்வுரை நூலின் சிறப்பு. கருத்துரையில் இடைப் பிற வரல் எனும் புதிய உத்தியைக் கையாண்டு உரையின் எளிமைக்கு பலம் சேர்க்க்கின்றார் கலைஞர்.

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
குறள்: 128

கலைஞர் உரை: ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல் பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.அடக்கமுடைமை எனும் அதிகாரத்தில் வரும் மேற்கூறிய குறளுக்குப் பரிமேலழகரின் உரைக்கு மாறுபட்டு எளிய, புதிய உரை கூறவந்த உரையாசிரியர் கலைஞர் உரைப் பொருள் எளிமையாக விளங்குதல் பொருட்டு ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல் என்ற நடைமுறையில் உள்ள பொருத்தமான உவமை ஒன்றை எடுத்துக்காட்டி உரை வகுக்கின்றார். பரிமேலழகர் நன்றாகாதாகி விடும் என்ற குறள் பகுதிக்கு, பிற அறங்களால் உண்டான நன்மை தீதாய்விடும் என்று சொன்ன உரையை விட, பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும் என்று கலைஞர் உரைக்கும் உரையே அனுபவ உரையாக பொருத்தமான உரையாக அமைந்து சிறக்கின்றமை உரையில் இடைப்பிறவரலாக அவர் அமைத்த பழமொழியின் உதவியால் எளிதில் விளங்குகிறது. பழமொழியை இடைப்பிறவரலாக இணைத்துத் தம் கருத்துரையில் புதுமை சேர்த்தது போலவே மேலும் பல குறள் உரைகளில் சில புதிய சொற்களை வருவித்து உரைத்து உரைவழங்கும் உத்தியைச் சிறப்பாகக் கையாளுகின்றார். சான்றாக,

உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
குறள்: 339

கலைஞர் உரை: நிலையற்ற வாழ்க்கையில் உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு, திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு இக்குறள் உரையில் குறளில் இல்லாத புதிய சொல்லாக நிலையற்ற வாழ்க்கையில் என்று சேர்த்து நிலையாமை என்ற அதிகாரப் பொருளை நினைவு கூர்கின்றார். மேலும் திருவள்ளுவர் உறங்குவது போலும் சாக்காடு என்று சொன்ன குறட்பகுதிக்கு விளக்கம் சொல்லும் போது மீளா உறக்கம் கொள்வதே இறப்பு என, மீளா என்ற புதிய சொல்லை இணைத்து உரை காண்கின்றார். உறக்கமே இறப்பு என்பதற்கும் மீளா உறக்கமே இறப்பு என்பதற்கும் ஆழமான பொருள் வேறுபாடு உண்டு. மீளா உறக்கம் என்பதில் பிறப்பு இறப்புச் சுழற்சி இல்லை. மறுபிறப்பு இல்லை. பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் இவை முதலான ஆன்மா தொடர்பான கருத்தியல்கள் ஏதும் இல்லை. பிறப்பு இறப்பு என்ற இரண்டுக்கு மட்டுமே இடம் உண்டு. கலைஞர் உரையின் நுட்பமும் ஆழமும் இதுபோன்ற உரை உத்திகளில்தாம் சிறப்புற வெளிப்படுகின்றன. கருத்துரைகளில்தான் எத்துணை புதுமை செய்கின்றார் உரையாசிரியர் கலைஞர். சொல்லுக்குச் சொல் என்று சுருக்கி உரை சொல்ல வந்த கலைஞர் சில குறட்பா உரைகளில் சொல்லுக்குச் சொல் அடைகொடுத்துச் சிறப்பிக்கும் உத்தியைக் கையாண்டு பல குறட்பாக்களின் நுட்ப விளக்கங்களை யெல்லாம் ஒரே குறட்பாவில் விளங்கிக் கொள்ள வைக்கின்றார்.

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
குறள்: 381

கலைஞர் உரை: ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண்சிங்கம் போன்ற அரசாகும்.இக்குறளுக்குப் பரிமேலழகர் படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன் அரசருள் ஏறு போல்வான் என்று இயல்பாக அடுக்கி உரை சொல்ல, கலைஞரோ அடைமொழிகளை யெல்லாம் இணைத்து அரிய உரையொன்றை இக்குறளுக்கு வழங்குகின்றார். ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் என்ற பகுதியில் மோனைகளால் சிறந்து விளங்கும் கவிதை நடையைக் கண்டு இன்புற முடியும். இயல்பாகவே பேச்சிலும் கவிதைநடை மிளிரும் ஆற்றல் மிக்க கலைஞர் குறள் உரையிலும் கவிதை நடையைக் கையாண்டு அழகு சேர்த்துள்ளமையை ஒரு புதிய உத்தி என்றே கொள்ள வேண்டும். இந்த அடைமொழிகள் அழகுக்காகக் கோர்க்கப்பட்ட அணிகலன்களாக இல்லாமல் அரசனின் ஆறு அங்கங்களையும் விளக்கிக் கூறும் ஆற்றல் வாய்ந்த விளக்கங்களாக அமைந்துள்ளமை கண்கூடு. வரும் குறட்பாக்களில் பொருட்பாலில் விவரித்துச் சொல்லப்போகும் ஆறு அங்கங்களின் விளக்கங்களையும் ஒரே குறள் உரையில் பெய்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார்.

கருத்துரையில் ஒரு புதுமை: (சொல்லியதும் சொல்லாததும்)
கலைஞர் உரையில் எளிமை மட்டுமல்ல ஏராளமான புதுமைகளும் உண்டு. திருக்குறள் பல சமயங்களில் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லாமல் வேறொன்றைச் சொல்லி, சொல்ல வந்ததைக் குறிப்பால் உணர்த்திவிடும். பீலி பெய் சாகாடும்.., நுனிக்கொம்பர் ஏறினார்.., கடலோடா கால்வல் நெடுந்தேர்.., போன்ற குறட்பாக்களை இவ்வுத்திக்குச் சான்றாகக் காட்டலாம். அணி நூலார் இதனை ஒட்டணி என்றுரைப்பர். கலைஞரோ தம் திருக்குறள் உரையில், திருவள்ளுவர் நேரடியாகச் சொன்ன ஒரு குறள் செய்தியை விளக்கும் போது அதனோடு தொடர்புடைய பிறிதொரு அறத்தையும் நினைவு படுத்தி ஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போல திருக்குறள் சொல்லியதையும் சொல்கிறார் சொல்லாததையும் சொல்கிறார்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
குறள்: 17

கலைஞர் உரை: ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும். மேற்காட்டிய குறள் உரையில் திருவள்ளுவர் சொன்னது, ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் என்ற செய்தி. திருவள்ளுவர் சொல்லாதது, மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும் என்ற செய்தி. கடலிலிருந்து நீரை முகக்கிற மேகம் மீண்டும் அந்தக் கடலுக்கு மழையாகப் பொழிந்து நீரை வழங்க வேண்டியது அதன் கடமை. மேகம் அப்படிச் செய்யவில்லை யென்றால் அளப்பரிய அந்தக் கடல்கூட வற்றிவிடும். அதே போல் மனித சமுதாயத்தில் பலப்பல நன்மைகளைப் பெற்று உயர்ந்து புகழ் பெற்றவர்களும் மீண்டும் அந்தச் சமூகத்திற்குத் தொண்டு செய்து பயன்பட வேண்டும் அது அவர்களின் கடமை. அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால் சமூகமும் அழிவை எதிர்கொள்ள வேண்டிவரும் என்ற எச்சரிக்கையை இடமறிந்து பொருள் பொருத்தமறிந்து சொன்ன உரையாசிரியர் கலைஞரை வியக்காமலிருக்க முடியாது. உடன் ஒன்று சேர்த்துச் சொல்லல் என்ற இந்த உத்தி கலைஞர் கையாளும் தனித்துவம் வாய்ந்த உத்தி என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

உரை மரபை மீறும் உத்தி:
மூல நூலாசிரியன் சொல்லுகிற கருத்தை வலியுறுத்திக் கூறுவதும் விளக்கமளிப்பதும் மட்டுமே உரையாசிரியன் பணி என்பது மரபார்ந்த உரைநூல்களின் இலக்கணம். ஆனால் கலைஞர் உரை இந்த உரை மரபிலிருந்து மாறுபடுகின்றது. உரை மரபுகளை மீறுதல் என்பதையே ஒரு உத்தியாகக் கையாண்டு பல குறட்பாக்களுக்கு விளக்கமளித்துள்ளார் உரையாசிரியர் கலைஞர்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
குறள்: 319

கலைஞர் உரை: பிறர்க்குத் தீங்கு விளைவித்து விட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே, அதே போன்ற தீங்கு அவரையே தாக்கும்.இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் வரும் இக்குறட்பாவிற்குக் கலைஞர் கூறும் உரையை நுணுகிப் பார்த்தால் இரண்டு புதிய செய்திகளை அவர் பதிந்துள்ளது தெரியவரும். ஒன்று, இன்னா செய்யின் என்று மட்டுமே மூல நூலாசிரியன் சொல்லியிருக்க உரையாளரோ தீங்கு விளைவித்து விட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே என, தீங்கு செய்தவரின் மகிழ்ச்சியைப் பதிவு செய்கிறார். ஒருவர் மனமறிந்து அல்லது வேண்டுமென்றே தீங்கு செய்தால் அதாவது பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடிய நெஞ்சினராக இருந்தால் அவர் செய்த தீமை அவருக்கே வந்து மூளும் என்று புதிய விளக்கம் தருகிறார். அறியாமல் பிறர்க்கு தீங்கு விளைவித்து விட்டவர்களுக்கு இவ்விதி பொருந்தாது என்பது உரையாசிரியரின் மற்றுமொரு உட்கருத்து.இரண்டாவது, பிறருக்கு நாம் முற்பகலில் தீங்கு செய்தால் பிற்பகலிலேயே நமக்குத் தீங்கு வந்து சேரும் என்று திருவள்ளுவர் தம் குறளில் சொல்லியிருக்க உரையாசிரியரோ, ஒருவர் பிறர்க்குத் தீங்கு செய்ததை நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே அதேபோன்ற தீங்கு அவரைத் தாக்கும் என்று உரை செய்துள்ளார். முற்பகல் பிற்பகல் என்று கால வேறுபாட்டை மூல நூலாசிரியன் சொல்லியிருக்க, கலைஞரோ கால இடையீடின்றி உடனே தீங்கு செய்தவனைத் தாக்கும் என்கிறார். இந்த உரை வேறுபாட்டினைக் கூர்ந்து கவனித்தால் அறத்தை வலியுறுத்துவதில் மூல நூலாசிரியனை விட உரையாசிரியர் வேகம் காட்டுகிறார் என்பது புலனாகும். இப்போக்கு உரை மரபுக்கு மாறானது என்றாலும் கூட இதனையே ஓர் உத்தியாகக் கையாண்டு வெற்றிபெற்றுள்ளார் உரையாசிரியர் கலைஞர் என்பதை உணரமுடியும்.

புதிய விளக்கங்களை இணைக்கும் உத்தி:
உரையாசிரியர்கள் மூல நூலுக்கு உரை எழுதும் போது, தாம் எழுதும் இவ்வுரைக்கு முன் தோன்றிய உரைகள் அனைத்தையும் படித்து உள்வாங்கி எழுதுவது வழக்கம். அப்படி உரை வகுக்கும்போது பிறர் உரைகளை ஏற்று எழுதுவதும், மறுத்து அல்லது மாறுபட்டு எழுதுவதும் வழக்கமான நடைமுறைகளாகும். உரையாசிரியர்கள் சிலர் பழைய உரைகளோடு ஒத்துப் போகும் இடங்களில் கூடச் சில சொற்களுக்குப் புதிய விளக்கங்களை இணைத்துத் தமது உரைக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்றிவிடுவதுண்டு. உரையாசிரியர் கலைஞர் குறளுரையின் பல இடங்களில் இத்தகு உத்தியைக் கையாண்டுதம் உரைக்குப் புதுமை சேர்க்கின்றார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை.
குறள்: 43

கலைஞர் உரை: வாழ்ந்து மறைந்தாரை நினைவு கூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல், ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்கு உரியனவாம்.இல்வாழ்க்கை அதிகாரத்தில் வரும் மேற்குறிப்பிட்ட குறளுக்குப் பரிமேலழகர் பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம் என்று உரை எழுதுகின்றார். ஆனால் கலைஞரோ இக்குறள் உரையில் மூன்று புதிய விளக்கங்களை இணைத்துப் புத்துரை படைக்கின்றார்.

1. தெய்வம் என்று குறள் குறிப்பிடும் சொல்லுக்கு தேவர் என்று பொருள் கூறுகின்றார் பரிமேலழகர். கலைஞரோ தெய்வம் எனடபதற்கு வாழ்வாங்கு வாழ்வோர் என்று பொருள் காணுகின்றார்.

2. ஐவருக்கும் செய்யும் அறங்கள் என்று பொதுப்பட பரிமேலழகர் உரை சொல்லியிருக்க, கலைஞரோ ஒவ்வொரு அறத்தையும் நினைவு கூர்தல், போற்றுதல், ஓம்புதல், பேணுதல், நிலைப்படுத்திக் கொள்ளல் என்று விளக்கி விரிவுரை செய்கின்றார்.

3. இல்வாழ்வான் அறநெறியை வழுவாமல் செய்ய வேண்டிய இடங்கள் ஐந்தினைக் குறிப்பிடும்போது, தான் என்று இல்வாழ்வானையும் இணைத்துக் கொள்கின்றார். இல்வாழ்வான் தனக்கே அறநெறி வழுவாமல் எப்படி? என்ன? செய்துகொள்ள முடியும் என்ற மயக்கம் இவ்வுரையில் தோன்றுகிறது. உரையாசிரியர் கலைஞரோ இத்தகு குழப்பத்திற்கு இடமில்லாமல் உரை எழுதுகின்றார். எப்படியெனில், வாழ்ந்து மறைந்தாரை நினைவு கூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல், ஆகிய நான்கு கடமைகளையும் நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் என்று ஐந்தாவதாக இடம்பெறும் தான் என்பதற்கு விளக்கம் கூறிக் குறளுரையை முழுமை செய்கின்றார்.

புதிய விளக்கங்களை இணைக்கும் இவ்வுத்தி கலைஞரின் உரை உத்திகளில் தனிச்சிறப்பானதாகும்.காமத்துப்பாலில் இடம்பெறும்,

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
குறள்: 1311

மேற்கூறிய புலவி நுணுக்கம் அதிகாரப் பாடலில் பரத்த நின் மார்பு என்பதற்குப் பரத்தமை ஒழுக்கம் உடையவனே என்று எல்லா உரையாசிரியர்களும் உரை கூற, கலைஞரோ பரத்த என்பதை வலித்தல் விகாரமாகக் கொண்டு பரந்த நின் மார்பு என்று புதிய விளக்கம் தருகின்றார். இப்புதிய விளக்கம் பரத்தமை செய்திகளை முற்றிலுமாக விலக்கி நூல் சமைத்த திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் உரையாக அமைந்து சிறக்கின்றது.

முடிப்புரை: கலைஞரின் திருக்குறள் உரை வழக்கமான திருக்குறள் உரைகளிலிருந்து மாறுபட்டுப் பல இடங்களில் புத்தம் புத்துரையை வழங்குகின்ற உரையாகத் திகழ்கின்றது. கலைஞரின் புத்துரைகள் தனித்தலைப்பில் ஆராயப்பட வேண்டிய தனித்தன்மை வாய்ந்தவை. கலைஞரின் உரையிலியே அளவில் பெரிய உரை அறத்தாறு இதுவென வேண்டா.. என்ற குறளுக்குக் கலைஞர் வரைந்துள்ள உரையே. நுட்பம் வாய்ந்த இக்குறள் தனியே விரித்துரைக்கத் தக்கது. இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரையெழுதுவதும் ஒன்றுதான் என்று உரையாசிரியர் கலைஞர் தம் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது குறள் உரையில் அவர் காட்டும் சிரத்தைக்கு ஓர் அடையாளம். அவையடக்கமாக இச்செய்தியைக் கலைஞர் குறிப்பிட்டாலும் இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் பெரிய முயற்சியில் அவர் வெற்றிபெற்றுள்ளார் என்றே தோன்றுகிறது. திருக்குறளை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் எளிதில் குறட்கருத்துக்கள் புரிதல் வேண்டும் என்ற கொள்கையோடு உரை வரையத் தலைப்பட்ட கலைஞர் தம் எளிமையான நடையாலும் தாம் கையாண்டு வெற்றி பெற்றுள்ள பல்வகைப் புதிய உத்திகளாலும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். கலைஞர் உரையை வாசிக்கும்தோறும் நம் நினைவுக்கு வருகிற திருக்குறள்,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
குறள்: 517.

No comments: