சனி, 23 நவம்பர், 2019

கோட்டக்குப்பம் பேர் பெற்ற ஊர் - நூல் அறிமுகம்

கோட்டக்குப்பம் பேர் பெற்ற ஊர் - நூல் அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி

வரலாறு என்பது மனிதகுல நினைவுகளின் தொகுப்பு. வரலாறு கடந்த காலங்களோடு உறைந்து விடுவதில்லை அது நிகழ்காலத்திலும் தொடர்ந்து எதிர்காலத்டும் நீட்சிபெற்று விளங்குகிறது. பொதுவாக நாம்காணும் வரலாறுகள் பலவும் கடந்தகாலத்தோடு உறைந்துவிட்ட தரவுகளிலிருந்தே கட்டமைக்கப் படுகின்றன.பேரரசுகளின், பேரரசர்களின் போர், வெற்றி, வீரம் இவற்றோடு மட்டுமே வரலாறுகள் முழுமை பெறுவதில்லை. அது மக்களைச் சார்ந்து எழுதப்படவேண்டும். மக்களின் வாழ்க்கையும் அதற்கான போராட்டங்களும் வரலாற்றின் பக்கங்களில் அருகியே காணப்படுகின்றன. உயிரோட்டமுள்ள மக்கள் வாழ்க்கைப் பதிவுகள் வரலாற்றின் பக்கங்களை நிரப்பும்பொழுதுதான் வரலாறு முழுமை பெறுகிறது. புதைபொருட் சின்னங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் நாணயங்கள் இலக்கியங்கள் முதலான தரவுகளிலிருந்தே வரலாறுகள் எழுதப்பட்டாலும் வரலாற்று ஆசிரியனின் வர்க்க. மொழி, இனச் சார்புகளின் அடிப்படையிலேயே வரலாறுகள் கட்டமைக்கப் படுகின்றன. இதுகாறும் வரலாறென அறியப்பட்ட தெல்லாம் ஆள்பவர்களால் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட, நியாயப்படுத்த எழுதப்பட்ட வரலாறுகளே ஆகும். அது தேசிய வரலாறானாலும் மாநிலங்களின் வரலாறானாலும் வென்றவர்களின் வரலாறாகவே அமைந்து விடுகிறது. அரசியல் வரலாறுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தனவோ அதைவிட முக்கியத்துவம் உடையன சமூக வரலாறுகள். மக்கள் சமூகத்தின் வரலாறுகள் உள்ளூர், வட்டார வரலாறுகளிலிருந்து தொடங்க வேண்டும்.

இருபத்தொராம் நூற்றாண்டின் கடந்த பதினைந்தாண்டுகளில் இந்திய வரலாறு எழுதுதலில் இரண்டு எதிரெதிரான புதிய போக்குகள் வேகங்கொள்ளத் தொடங்கியுள்ளன.

ஒன்று: வலதுசாரித் தன்மையுள்ள பௌராணிக நம்பிக்கைகளில் இருந்து கட்டமைக்கப்படும் வரலாறுகள். அது வரலாற்று உண்மைதானா என்று ஆராய்வது அவர்களுக்கு முக்கியமல்ல. அவர்கள் கட்டமைத்திருக்கும் நினைவுகளே வரலாறு என்பதாகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் புதிய வரலாற்றைப் புனைவதே முக்கியமானதாகும். நினைவுகளைக் கொண்டு உருவாக்கப்படும் இத்தகு வரலாற்றை அவர்களே ஒருகட்டத்தில் நம்பத் தொடங்கி விடுவார்கள். கட்டமைக்கப்படும் இவ்வகை வரலாற்றின் அடிப்படையிலேயே அவர்களின் அரசியல் இயங்கும்.

இரண்டாவது: ஓரளவு இடதுசாரித் தன்மையுள்ள வர்க்கங்களின் முரணிலிருந்து வெளிப்படும் வரலாற்றைப் பதிவுசெய்வது. அரசு, அதிகார வர்க்கத்தின் வரலாறாக இதுவரை வெளிவந்துள்ள வரலாறுகளுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை எழுதுவது. மையத்திலிருந்து வரலாற்றைப் பார்க்காமல் விளிம்புகளிலிருந்து வரலாற்றை உருவாக்குவது. விளிம்புநிலை மக்களிடமிருந்து தொடங்கும். இத்தகு ஆய்வுகளில் ஒருவித வட்டாரத் தன்மை மேலோங்கியிருக்கும். இவ்வகை உள்ளூர், வட்டார வரலாறுகள் சாமானிய மக்களின் வாழ்க்கையோடு அணுக்கமாகப் பயணம் செய்வதோடு அவர்களின் தொழில், உணவு, புழங்கு பொருட் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடு, கலைகள் முதலான உயிரோட்டமுள்ள வாழ்வியலைப் பதிவுசெய்யும். அண்மைக் காலத்தின்தான் உள்ளூர் வரலாறுகள் மற்றும் இதுவரைப் பதிவுபெறாத வட்டார ஆளுமைகள் குறித்த வரலாறுகள் தமிழகச் சூழலில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

கோட்டக்குப்பம் பேர்பெற்ற ஊர் எனும் தலைப்பிலான இந்த நூல் கோட்டக்குப்பம், ஜாமிஆ மஸ்ஜித் 150 –வது ஆண்டு பாரம்பரிய விழா வெளியீடாக வெளிவருகின்றது. இந்நூலாசிரியர் கோட்டை கலீம்அவர்கள் தொண்ணூறு ஆண்டு பழமைவாய்ந்த கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுசுரத்துல் இசுலாம் நூலகத்தின் பொறுப்பாளர் ஆவார். இசுலாமிய மார்க்கச் சிந்தனைத் தளத்திலும் அரசியல் சமூகச் செயற்பாட்டுத் தளத்திலும் மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். மத நல்லிணக்கப் பணிகளில் எப்பொழுதும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வரும் தோழர் கோட்டை கலீம்ஒரு முற்போக்குச் சிந்தனையாளரும் கூட. சரியான வரலாற்றைப் பதிவு செய்வதிலும் புதிய வரலாற்றை உருவாக்குவதிலும் அவர் முனைப்போடு செயல்படுவார். மதநல்லிணக்கத் தோழர்களை இணைத்துக் கொண்டு செயலாற்றுவதில் அவரின் தலைமைப்பண்பு தெற்றெனப் புலப்படும். அண்மைக் காலமாகத் தொடர்ந்து முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் இந்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அவர் நடத்திவரும் கருத்துப் போராட்டம் பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவருகிறது. கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தின் பெருமைகளை உலகறியச் செய்யும் நோக்கோடு அவர் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுதற்குரியன.

கோட்டக்குப்பம் பேர்பெற்ற ஊர் எனும் தலைப்பிலான இந்த நூல் தோழர் கோட்டை கலீமின் அரிய முயற்சியாலும் கடின உழைப்பாலும் இன்று நூலாக்கம் பெற்று கோட்டக்குப்பம் சிற்றூர் இசுலாமிய மக்களின் வரலாற்றை, வாழ்வியலை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கின்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள செய்திகளைக் கோட்டக்குப்பத்தின் வரலாறு, கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியல் என்ற இரண்டு பொருண்மைகளின் கீழ் நாம் பகுக்க முடியும்.

கோட்டக்குப்பத்தின் வரலாறு: 1. கோட்டைக் கதவு 2. வேர்கள் 3. ஊரும் நிர்வாகமும் 4. உள்ளாட்சி நிர்வாகம் 5. அரசியல் 6. தொழிலும் பிழைப்பும்என்ற ஆறு தலைப்புகளிலும்கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியல்: 1. பசியும் உணவும் 2. ஆடைக் கலாச்சாரம் 3. கடிதங்கள் 4. பெயர்பெற்ற வீடுகள் தெருக்கள் 5. வட்டார வழக்குகள் 6. அளவையும் அறவையும் 7. கல்யாண வைபோகமே 8. திண்ணை தர்பார் 9. கிணற்றடியும் குளத்தங்கரையும் 10. பாதையும் பயணமும் 11. சேவைத் தலங்கள் என்ற பதினொரு தலைப்புகளிலும் இந்நூலில் மிக விரிவாகப் பேசப்படுகின்றன.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை நூலாசிரியர் அரசியல், வரலாறு, பண்பாட்டு மானிடவியல், புழங்குபொருள் பண்பாடு, சமூகவியல், மொழியியல், இடப்பெயராய்வு, நாட்டுப்புறவியல் முதலான பல அறிவுத்துறைகளின் துணையோடு எழுதியுள்ளமை பாராட்டுதற்குரியது. ஒவ்வாரு கட்டுரையும் நிறைவான தகவல்களோடு நூலாசிரியரின் கடும் உழைப்புக்கும் முயற்சிக்கும் சான்று பகர்வனவாய் அமைந்துள்ளமை இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

      கோட்டக்குப்பத்தின் வரலாறு பேசும் பகுதியில் இடம்பெற்றுள்ள அரசியல் என்ற தலைப்பிலான கட்டுரையும் கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியல் பேசும் பகுதியில் இடம்பெற்றுள்ள திண்ணை தர்பார், கிணற்றடியும் குளத்தங்கரையும் என்ற தலைப்பிலான இரண்டு கட்டுரைகளும் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரைகளாகும். அரசியல் என்ற தலைப்பிலான கட்டுரை பிரஞ்சிந்திய விடுதலைப் போரின் தளபதி மக்கள் தலைவர் சுப்பையாவின் பெருமைகளைப் பேசுவதோடு பிரஞ்சிந்திய விடுதலைக்குக் கோட்டக்குப்பம் மக்கள் ஆற்றியுள்ள அரும்பணிகளையும் மிக நேர்த்தியாகப் பதிவுசெய்கின்றது. திண்ணை தர்பார், கிணற்றடியும் குளத்தங்கரையும் என்ற இரண்டு கட்டுரைகளும் கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவுசெய்வதோடு திண்ணையை ஆண்களோடும் கிணற்றடியைப் பெண்களோடு இணைத்துப்பார்த்து “கிணற்றடி பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றாக இருந்தது எனில், திண்ணை ஒருவகையில் ஆணாதிக்கத்தின் குறியீடு” என்று குறிப்பிடும் நூலாசிரியரின் வைர வரிகளோடுமிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.

      இந்நூலில் இடம்பெற்றுள்ள கல்யாண வைபோகமே என்ற கட்டுரை கோட்டக்குப்பம் திருமண விருந்து, திருமணச் சடங்குகள், நிகழ்த்துமுறை, திருமணப் பதிவு முதலான உட்தலைப்புகளில் இசுலாமிய மக்களின் திருமண முறைமை குறித்த முழுமையான தகவல் களஞ்சியமாக அமைந்து சிறக்கின்றது மேலும் பெயர்பெற்ற வீடுகள் தெருக்கள் என்ற தலைப்பிலான கட்டுரை ஊர்ப்பெயர், இடப்பெயர், குடும்பப்பெயர், மககட்பெயர் ஆய்வுகளைத் தம்மகத்தே அடக்கியுள்ள அரியதோர் கட்டுரையாக அமைந்துள்ளது.

கோட்டக்குப்பம் பேர்பெற்ற ஊர்நூலின் மற்றுமொரு தனிச்சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது இந்நூலின் மொழிநடை. நூலாசிரியர் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் எழுதிவருவதன் எதிரொலியாக இந்நூற் கட்டுரைகளின் பல இடங்களில் நையாண்டியும் பகடியும் களிநடம் புரிவதனைக் காண முடிகின்றது.

பின்வரும் நூலின் பகுதியை மேற்சொன்ன நூலாசிரியரின் மொழிநடைக்குச் சான்றாகக் காட்டலாம்,
“இதே மாதிரி பிரெஞ்சு இந்தியாவை ஒட்டிய எல்லையோரக் கிராமம் என்பதால் பேச்சில் பிரெஞ்சு ஆதிக்கமும் உண்டு. முகத்தில் பூசிக்கொள்ளும் மாவை (talcum powder)பூதரமாவு என்பார்கள். பூசிக்கொண்டால் பூதம் மாதிரி தெரிவதால் இந்தப் பெயர் என்று விபரமில்லாக் காலத்தில் விபரமாக நினைத்துக் கொண்டிருந்தோம். பின்னர்தான் ஆசிரியர்கள் புண்ணியத்தில் பிரெஞ்சு என்ற ஒரு மொழி உலகத்தில் பேசுறாய்ங்க. அப்படி பிரெஞ்சு கூறும் நல்லுலகைச் சேர்ந்தவங்க இங்க பாண்டிச்சேரியில் கொஞ்ச காலம் குப்பை கொட்டாம இருந்திருக்காங்க. அவங்க மொழியில் இந்த மாவுக்கு (talcum powder)பூதர் (poudre)என்று நாமகரணம் சூட்டியிருக்காங்க எனத் தெரிந்து தெளிவாயிட்டோம். அதன் காரணமாகவே இந்த மாவு பூதர மாவு என்று வழங்கப்பட்டது ஷாப் கடை என்பதைப்போல்”

நூலின் பெரும்பாலான பகுதிகளின் சற்றேறக்குறைய மேற்காட்டிய மொழிநடையை ஒட்டியதோர் நடையிலேயே நூலினை ஆக்கியுள்ளார் நூலாசிரியர். ஓட்டம் மிகுந்த இயல்பான பேச்சுநடை விரவிய மொழிநடையின் இடையிடையே இலக்கிய மேற்கோள்களையும் நாட்டுப்புறச் சொலவடை, பழமொழி முதலான வழக்குச் சொற்களையும் இணைத்து ஒருவகைக் கலப்பு நடையிலேயே நூல் அமைந்துள்ளமை வாசிப்பை இலகுவாக்குகின்றது.

நூலாக்கம் என்பது கடந்த காலங்களைப் போல் இன்றைக்கு கடினமாயில்லை. பார்வை நூல்களைத் தேடித் தேடி அலைந்து திரிய வேண்டிய தேவையில்லாமல் இணையத்திலேயே இன்றைக்குத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தகவல்களைத் திரட்டிப் பகுத்துப்பார்த்து உண்மைகளைத் தேடி நூல் எழுதிவிடலாம். ஆனால் இந்த நூல் அப்படிப்பட்டதல்ல. முழுமையான களப்பணியும் சரியான உற்றுநோக்கலும் இல்லாமல் இத்தகு நூல்களை உருவாக்க முடியாது. நூலாசிரியர் அரிதின் முயன்று ஆவணங்களைக் குடைந்து தேடியதோடு மட்டுமல்லாமல் களப்பணிகளின் மூலமாகவும் இவ்வரிய நூலை உருவாக்கியுள்ளார்.

கோட்டக்குப்பத்தைப் போன்றே ஒவ்வாரு கிராமத்திலும் பதிவுசெய்வதற்கு ஏராளமான சமூக அரசியல் அரசியல் பண்பாட்டுச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. பயன்கருதாது உழைக்கும் நல்லவர்கள் ஒருசிலராவது இந்நூலின் தந்த ஊக்கத்தால் உழைப்பார்களானால் அதுவே இந்நூலுக்கு வெற்றி!


அரிதின் முயன்று நூலை உருவாக்கிய கோட்டை கலீமுக்குப் பாராட்டும் வாழ்த்தும்! இந்நூல் முயற்சிக்கு ஒத்துழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி!

கோட்டை கலீம் (லியாகத் அலி)

வெள்ளி, 22 நவம்பர், 2019

சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம் - 27-11-2018

சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம்-1
கடந்த 27-11-2018 நானும் நண்பர் கோ.செங்குட்டுவனும் விழுப்புரம் மாவட்டம் செ.கொத்தமங்கலம் கிராமத்திற்குத் தொல்லியல் பயணம் மேற்கொண்டோம். (உடன் என்மகன் இ.மாறன், புகைப்படக் கலைஞர் ம.கிருஷ்ணா)
"சதிக்கல், தவ்வை" சிலைகளைப் பார்வையிட்ட பின் கொத்தமங்கலம் கிராமத்தை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கே பல்லாயிரக் கணக்கில் குவியல் குவியலாகப் பழங்காலப் பானையோடுகள். கருப்பு சிவப்பு, அடர்கருப்பு, சிவப்பு, பழுப்பு நிறங்களில் சுமார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பானையோடுகள். இதுவரைத் தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்திற்கு வராத அரிய பொக்கிஷம்.
இங்கே நீங்கள் காணும் குவியலைப் போல் பல குவியல்கள் ஆங்காங்கே ஆற்றங்கரை எங்கும்...
முனைவர் நா.இளங்கோ- கோ.செங்குட்டுவன்

முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு


சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம்-2
நீங்கள் காணும் பானையோடுகள் செ.கொத்தமங்கலம் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ளன. இதே சங்கராபரணி ஆற்றங்கரையில்தான் திருவக்கரை, அரிக்கமேடு முதலான தொல்லியல் பகுதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
சங்கராபரணி ஆறு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைத் தொடரின், மேற்கு சரிவில் உற்பத்தியாகிப் புதுச்சேரி, தேங்காய்த் திட்டு அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தற்போது வீடூர் அணை கட்டப் பட்டுள்ளது. 
இந்த நதிக்கு வராக நதி, செஞ்சி ஆறு முதலான பெயர்களும் உண்டு. புதுச்சேரியில் இவ்வாறு சுண்ணாம்பாறு, அரியாங்குப்பம் ஆறு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

செஞ்சி அருகே, ஊரணித்தாங்கல் கிராமத்தை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில், கி.மு., இரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சாதவாகனர் கால செப்பு நாணயம் கிடைத்ள்ளது. (படம் இணைப்பில்)





சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம் -3
செ.கொத்தமங்கலம் சங்கராபரணி ஆற்றங்கரைக்குப் பல்லாயிரக் கணக்கில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பானையோடுகள் எப்படி வந்தன?
(பானையோடுகளின் காலத்தை கி.மு.3 ஆம் நூற்றாண்டு என்று உறுதிசெய்தவர் தொல்லியல் அறிஞர் பேராசிரியர் இரவிச்சந்திரன்)
கிடைக்கும் பானையோடுகள் ஆற்றின் மேற்பரப்பிலேயே குவியல் குவியலாகக் கிடைப்பதைப் பார்த்தால் அவை இந்த ஆற்றங்கரையின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து காலம் காலமாக ஆற்றின் நீரோட்டத்தால் கொண்டு வரப்பட்டு இங்கே குவிந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
செ.கொத்தமங்கலத்திற்கு வடமேற்கே ஆற்றங்கரையை ஒட்டி இரும்புக்கால (2300 ஆண்டுகளுக்கு முந்தைய) மனிதக் குடியிருப்பு ஒன்று இருந்துள்ளமையை நாம் உய்த்துணர முடிகிறது. முழுமையான தொல்லியல் ஆய்வே இதனை உறுதிப் படுத்த முடியும்.


சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம் -4
செஞ்சி மலைத் தொடரின், மேற்கு சரிவில் உற்பத்தியாகும் சங்கராபரணி ஆற்றுடன் பச்சமலை, மேல்மலையனூர் மலைச் சரிவுகளிலிருந்தும் வரும் நீர் தென்பாலை என்னுமிடத்தில் சேர்கிறது.செஞ்சியில் உற்பத்தியாவதால் செஞ்சி ஆறு என்றழைப்படும் இவ்வாற்றின் இரண்டாவது துணையாறு நரியார் ஓடை. இது ஊருணித்தாங்கல் கிராமத்திற்கருகில் சங்கராபரணியுடன் கலக்கிறது (இங்கேதான் சாதவாகனர்களின் செப்புக் காசு கிடைத்தது)
வல்லம் கிராமத்திற்கு அருகே இந்த ஆறு தென்கிழக்கு திசையில் திரும்புகிறது. வீடூர் என்னுமிடத்தில் இதனுடைய மூன்றாவது துணையாறு தும்பியாறு கலக்கிறது. இதனை அடுத்து இருப்பதுதான் வீடூர் நீர்த்தேக்கம்.
வீடூர் நீர்த் தேக்கத்திலிருந்து வெளியேறும் சங்கராபரணி மீண்டும் தென்கிழக்குப் பகுதியில் திரும்பி ராதாபுரம் என்னும் இடத்தில் பம்பையார் என்னும் துணை நதியை தன்னோடு இணைத்துக் கொண்டு அங்கிருந்து புதுச்சேரி பகுதிக்குள் நுழைந்து, செல்லிப்பட்டு என்ற இடத்தில பம்பை என்னும் துணை நதியை இணைத்துக் கொண்டு பயணிக்கிறது சங்கராபரணி ஆறு..
அன்னமங்கலம் ஆறு, நரியார் ஓடை, கொண்டியாறு, பம்பையார், பம்பை, குடுவையாறு ஆகிய ஆறு நதிகள் சங்கராபரணியின் துணை ஆறுகள்.
சங்கராபரணி ஆறு தோன்றும் செஞ்சி மலைச்சாரல் தொடங்கி கடலில் கலக்கும் புதுச்சேரி வரை இதன் கரையோரங்களில் செழித்து வளர்ந்த ஆற்றங்கரை நாகரிகத்தின் சுவடுகள் பல்லாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தன.
புதுச்சேரிப் பேரறிஞர் சுந்தர சண்முகனார் கெடிலக்கரை நாகரிகம் நூலை உருவாக்கியது போல் வருங்காலத் தலைமுறை சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம் என்ற அரிய வரலாற்று நூலை உருவாக்க வேண்டும் என்பதே எனது பேரவா.
செ.கொத்தமங்கலம் பகுதியின் வரலாற்றுத் தொன்மையை வெளிப்படுத்தும் இப்பதிவுகளின் முதன்மை நோக்கம் அரசும் தொல்லியல் துறையும் விரைந்து செயலாற்றி இப்பகுதியைப் பாதுகாத்து தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்த வேண்டும் என்பதே.
இப்பதிவுகளின் வழியாக செ.கொத்தமங்கலம் பகுதியைப் பார்வையிட வரும் வரலாற்று ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் வரலாற்றுத் தடயங்களைச் சிதைத்து அழித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
-முனைவர் நா.இளங்கோ
முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

கொத்தமங்கலம் பானையோடுகள்

தொல்லியல் ஆய்வுப் பயணம் கொத்தமங்கலம்- (27-11-2018)

இன்றைய (27-11-2018) தொல்லியல் ஆய்வுப் பயணம் கொத்தமங்கலம் (விக்கிரவாண்டி அருகில்).
தவ்வை (மூதேவி), சதிக்கல் (நடுகல் வகை) தேடிய பயணம். 
நண்பர் கோ.செங்குட்டுவன், மகன் இ.மாறன், புகைப்படக் கலைஞர் ம.கிருஷ்ணா இவர்களோடு..
முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு
உடன் இ.மாறன் - கோ.செங்குட்டுவன்



இன்று 27-11-2018 நண்பர் விழுப்புரம் கோ.செங்குட்டவன், மகன் இ.மாறன் உடன்வர, பல்லவர்காலத் "தவ்வை -மூதேவி" சிற்பத்தைத் தேடி விக்கிரவாண்டி பேரணிக்கு அருகில் உள்ள செ.கொத்த மங்கலம் சென்றோம்.
கீழே படத்தில் உள்ள தெய்வம்தான் தமிழர்களின் தொன்மைப் பெண் தெய்வம் - தவ்வை. தவ்வைக்கு மூதேவி, சேட்டை, கேட்டை, மாமுகடி, ஜேஸ்டா தேவி எனப் பலபெயர்கள் உண்டு.
மூதேவி என்றால், மூத்த தேவி என்று பொருள். கொற்றவைக்கு அடுத்ததாகத் தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்படும் தொன்மைப் பெண் தெய்வம் மூதேவி - தவ்வையே.
கி.பி 13-ம் நூற்றாண்டு வரைத் தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. அவள் வளமை தெய்வம். இதுவரைக் கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும், பருத்த வயிற்றுடனுமே காணப் படுகின்றன. அவள் வளமைத் தெய்வம் என்பதற்கு இதுவே சான்று.
தவ்வையின் கொடி காக்கை,, வாகனம் கழுதை. தவ்வையின் சிலைகளில் இருபுறமும் உடனிருப்போரை அவளது மகன் மாந்தன் மகள் மாந்தி என்று மக்கள் கருதுகின்றனர்.
பல்லவர் ஆட்சி செய்த 8ம் நூற்றாண்டு வரைத் தமிழர்களின் தாய்த் தெய்வமாக மூதேவி இருந்துள்ளார் என்றும். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். என்றும் அறிகிறோம். பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர் காலத்தில் மூதேவி வழிபாடு சிறப்புற்றிருநததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன..
முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

கொத்தமங்கலம் களஆய்வு -இ.மாறன் - கோ.செங்குட்டுவன்



செ.கொத்தமங்கலத்திற்கு "தவ்வை - மூதேவி" சிலையைத் தேடிச் சென்ற (27-11-2018) இடத்தில் எதிர்பாராமல் கிடைத்த அரிய வரலாற்றுப் புதையல், "சதிக்கல்" என்ற வகையைச் சேர்ந்த நடுகற்கள்.
போரில் வீரமரணம் எய்திய மறவர்களுக்கு‍ நடுகல் வைத்து‍ வணங்கும் வழக்கம் தமிழகத்தில் சங்ககாலத்திற்கு‍ முன்பிருந்தே இருந்துவருகிறது. அத்தகு நடுகற்களில் பல வகைகள் உண்டு.1. தொரு கல், 2. வேடியப்பன் கல், 3. நவகண்டக் கல், 4. சதிக்கல் முதலான பலவகை நடுகற்களில் சதிக்கல்லும் ஒன்று.
"சதிக்கல்" என்பது ஆநிரை மீட்டல் முதலான போர்களில் வீரமரணம் அடைந்த வீரனின் மனைவியும் அவ்வீரனோடு உடன்கட்டை ஏறி உயிரை மாய்ந்துக் கொண்டதன் அடையாளமாக நாட்டப்படும் கல்.
இவ்வகை சதிக்கல்லில் வீரன் மற்றும் மனைவி இருவரின் உருவமும் செதுக்கப்படும்.
கொத்தமங்கலத்தில் கிடைத்த இந்த சதிக்கற்கள் நாயக்கர் காலத்ததாய் {14 ஆம் நூற்றாண்டு} இருக்கலாம் என்கிறார் கோ.செங்குட்டுவன்.
பல சதிக்கற்களில் கல்வெட்டுகளும் இடம்பெறுவதுண்டு.
இங்கே இடம்பெற்றுள்ள கொத்தமங்கலம் சதிக்கற்களில் ஒருகையில் வாளும் மறு கையில் கேடயமும் ஏந்திய வீரனும் உடன் அவன் மனைவியும் இடம் பெற்றுள்ளனர்

கொத்தமங்கலம் சங்க காலத்திற்கு முந்தைய பானையோடுகள்
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் பதிவிலிருந்து:
 “இத்தனை ஆயிரம் இலட்சம் பானை ஓடுகள்! இப்படி ஒரே இடத்தில் நான் பார்த்ததில்லை” என வியக்கிறார், புதுவை தாகூர் கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்கள்.
செ.கொத்தமங்கலம், பானை ஓடுகளின் குவியல் தான் அவரை இப்படி வியக்க வைத்துள்ளது.
புதுவை மாநிலம் அரிக்கமேடும் நம்முடைய கொத்தமங்கலமும் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரிக்கமேட்டில் பழங்காலப் பானை ஓடுகளைத் தேடித் தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால், விழுப்புரம் அருகே உள்ள செ.கொத்தமங்கலத்தில் நிலைமை அப்படி இல்லை.
மேற்பரப்பிலேயே ஓடுகள், அதுவும் குவியல் குவியலாக.
இது, அனைவரையும் அதிசயிக்க வைக்கிறது.
இதோ, குறியீட்டுடன் கூடிய பானை ஓடு ஒன்று, பேராசிரியர் கையில் கிடைத்து விட்டது. அவருக்கு மகிழ்ச்சி.
“இந்த ஓடுகள் எப்படியும் 2000 ஆண்டுகளுக்கு குறைவானவை அல்ல” என்று சொல்லும் பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள், “தொல்லியல்துறை, புவியியல் துறை ஆகியவற்றின் வல்லுனர்கள் இப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வின் முடிவுகள், நிச்சயம் தமிழக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார்.
உண்மைதான். பேராசிரியர் அவர்களின் கருத்தை நாமும் வழிமொழிகிறோம்…
(இணைப்பில்: பேராசிரியர் Ilango Nagamuthu அவரது மகனார் Maran Ilango ஆகியோருடன், கடந்த 27ஆம் தேதி, செ.கொத்தமங்கலத்தில் கள ஆய்வு.
முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...