வெள்ளி, 22 நவம்பர், 2019

சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம் - 27-11-2018

சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம்-1
கடந்த 27-11-2018 நானும் நண்பர் கோ.செங்குட்டுவனும் விழுப்புரம் மாவட்டம் செ.கொத்தமங்கலம் கிராமத்திற்குத் தொல்லியல் பயணம் மேற்கொண்டோம். (உடன் என்மகன் இ.மாறன், புகைப்படக் கலைஞர் ம.கிருஷ்ணா)
"சதிக்கல், தவ்வை" சிலைகளைப் பார்வையிட்ட பின் கொத்தமங்கலம் கிராமத்தை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கே பல்லாயிரக் கணக்கில் குவியல் குவியலாகப் பழங்காலப் பானையோடுகள். கருப்பு சிவப்பு, அடர்கருப்பு, சிவப்பு, பழுப்பு நிறங்களில் சுமார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பானையோடுகள். இதுவரைத் தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்திற்கு வராத அரிய பொக்கிஷம்.
இங்கே நீங்கள் காணும் குவியலைப் போல் பல குவியல்கள் ஆங்காங்கே ஆற்றங்கரை எங்கும்...
முனைவர் நா.இளங்கோ- கோ.செங்குட்டுவன்

முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு


சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம்-2
நீங்கள் காணும் பானையோடுகள் செ.கொத்தமங்கலம் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ளன. இதே சங்கராபரணி ஆற்றங்கரையில்தான் திருவக்கரை, அரிக்கமேடு முதலான தொல்லியல் பகுதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
சங்கராபரணி ஆறு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைத் தொடரின், மேற்கு சரிவில் உற்பத்தியாகிப் புதுச்சேரி, தேங்காய்த் திட்டு அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தற்போது வீடூர் அணை கட்டப் பட்டுள்ளது. 
இந்த நதிக்கு வராக நதி, செஞ்சி ஆறு முதலான பெயர்களும் உண்டு. புதுச்சேரியில் இவ்வாறு சுண்ணாம்பாறு, அரியாங்குப்பம் ஆறு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

செஞ்சி அருகே, ஊரணித்தாங்கல் கிராமத்தை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில், கி.மு., இரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சாதவாகனர் கால செப்பு நாணயம் கிடைத்ள்ளது. (படம் இணைப்பில்)





சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம் -3
செ.கொத்தமங்கலம் சங்கராபரணி ஆற்றங்கரைக்குப் பல்லாயிரக் கணக்கில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பானையோடுகள் எப்படி வந்தன?
(பானையோடுகளின் காலத்தை கி.மு.3 ஆம் நூற்றாண்டு என்று உறுதிசெய்தவர் தொல்லியல் அறிஞர் பேராசிரியர் இரவிச்சந்திரன்)
கிடைக்கும் பானையோடுகள் ஆற்றின் மேற்பரப்பிலேயே குவியல் குவியலாகக் கிடைப்பதைப் பார்த்தால் அவை இந்த ஆற்றங்கரையின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து காலம் காலமாக ஆற்றின் நீரோட்டத்தால் கொண்டு வரப்பட்டு இங்கே குவிந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
செ.கொத்தமங்கலத்திற்கு வடமேற்கே ஆற்றங்கரையை ஒட்டி இரும்புக்கால (2300 ஆண்டுகளுக்கு முந்தைய) மனிதக் குடியிருப்பு ஒன்று இருந்துள்ளமையை நாம் உய்த்துணர முடிகிறது. முழுமையான தொல்லியல் ஆய்வே இதனை உறுதிப் படுத்த முடியும்.


சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம் -4
செஞ்சி மலைத் தொடரின், மேற்கு சரிவில் உற்பத்தியாகும் சங்கராபரணி ஆற்றுடன் பச்சமலை, மேல்மலையனூர் மலைச் சரிவுகளிலிருந்தும் வரும் நீர் தென்பாலை என்னுமிடத்தில் சேர்கிறது.செஞ்சியில் உற்பத்தியாவதால் செஞ்சி ஆறு என்றழைப்படும் இவ்வாற்றின் இரண்டாவது துணையாறு நரியார் ஓடை. இது ஊருணித்தாங்கல் கிராமத்திற்கருகில் சங்கராபரணியுடன் கலக்கிறது (இங்கேதான் சாதவாகனர்களின் செப்புக் காசு கிடைத்தது)
வல்லம் கிராமத்திற்கு அருகே இந்த ஆறு தென்கிழக்கு திசையில் திரும்புகிறது. வீடூர் என்னுமிடத்தில் இதனுடைய மூன்றாவது துணையாறு தும்பியாறு கலக்கிறது. இதனை அடுத்து இருப்பதுதான் வீடூர் நீர்த்தேக்கம்.
வீடூர் நீர்த் தேக்கத்திலிருந்து வெளியேறும் சங்கராபரணி மீண்டும் தென்கிழக்குப் பகுதியில் திரும்பி ராதாபுரம் என்னும் இடத்தில் பம்பையார் என்னும் துணை நதியை தன்னோடு இணைத்துக் கொண்டு அங்கிருந்து புதுச்சேரி பகுதிக்குள் நுழைந்து, செல்லிப்பட்டு என்ற இடத்தில பம்பை என்னும் துணை நதியை இணைத்துக் கொண்டு பயணிக்கிறது சங்கராபரணி ஆறு..
அன்னமங்கலம் ஆறு, நரியார் ஓடை, கொண்டியாறு, பம்பையார், பம்பை, குடுவையாறு ஆகிய ஆறு நதிகள் சங்கராபரணியின் துணை ஆறுகள்.
சங்கராபரணி ஆறு தோன்றும் செஞ்சி மலைச்சாரல் தொடங்கி கடலில் கலக்கும் புதுச்சேரி வரை இதன் கரையோரங்களில் செழித்து வளர்ந்த ஆற்றங்கரை நாகரிகத்தின் சுவடுகள் பல்லாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தன.
புதுச்சேரிப் பேரறிஞர் சுந்தர சண்முகனார் கெடிலக்கரை நாகரிகம் நூலை உருவாக்கியது போல் வருங்காலத் தலைமுறை சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம் என்ற அரிய வரலாற்று நூலை உருவாக்க வேண்டும் என்பதே எனது பேரவா.
செ.கொத்தமங்கலம் பகுதியின் வரலாற்றுத் தொன்மையை வெளிப்படுத்தும் இப்பதிவுகளின் முதன்மை நோக்கம் அரசும் தொல்லியல் துறையும் விரைந்து செயலாற்றி இப்பகுதியைப் பாதுகாத்து தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்த வேண்டும் என்பதே.
இப்பதிவுகளின் வழியாக செ.கொத்தமங்கலம் பகுதியைப் பார்வையிட வரும் வரலாற்று ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் வரலாற்றுத் தடயங்களைச் சிதைத்து அழித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
-முனைவர் நா.இளங்கோ
முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

கொத்தமங்கலம் பானையோடுகள்

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...