புதன், 12 ஆகஸ்ட், 2015

மலையருவி மாலை

முனைவர் அவ்வை நிர்மலா


பிறப்பு

கடற்கரைப் பாறையில் அலையடிக்கும் - மிக
அடர்ந்திடு பாசியில் அதுவழுக்கும்
இடத்தினில் காரைகள் தடம்பதிக்கும் - அத்
தடத்தினில் நாரைகள் தினம்படிக்கும் 1

தருசேர்ந்து நிழல்வார்க்கும் இளங்காற்று - தளிர்
குருத்தோடு உழல்கின்ற மனநாற்று
கருத்தோடு படைக்கின்ற கதைநூற்று - துளிர்
விருப்போடு திளைக்கின்ற மதுஊற்று 2

வேகஅலை மோதுகின்ற புதுச்சேரி - வாழ்
நாகமுத்து வர்ணமுத்து பதிசதியாம்
மோகமுத்து தந்தசொத்து ஐவராம் - அவர்
தாகத்திற்கும் தமிழருந்தி உய்வராம் 3

இளையமக னாகஅவர் தோன்றினார் - தொல்
இளங்கோவின் பெயரதனைத் தாங்கினார்
விளங்கிடுநல் பாடசாலை ஏகினார் - பேர்
விளங்கிடவே நாளும்முற் றோதினார் 4

பள்ளிக் கல்வி

தமிழவேள் என்னுமொரு ஆசான் - கவி
சிமிழ்திறக்கக் கற்பித்த நேசன்
இமைகளுக்குள் ஒளிபடரா வாசன் - நல்
அமைப்புகளின் பொழிவுகட்குத் தாசன் 5

விழியற்ற ஆசான்கைப் பற்றினார் - திசை
வழிகாட்டிப் போகுமிடம் சுற்றினார்
பொழிகவிதை மழைகேட்கப் ஒற்றினார் - மரபு
வழிபாடும் முறைமையதில் முற்றினார் 6

கூட்டங்களில் இருக்கைகளைப் போடும் - ஏவல்
வாட்டமின்றி துடிப்பாகச் செய்தார்
கேட்டஉரை காதுக்குள் நிலைக்கப் - பேசும்
நாட்டமதை ஒழியாமல் நெய்தார் 7

கோலிகுண்டு ஆடுகின்ற பருவம் - மன
வேலியிட்டுப் புலன்காத்த உருவம்
வாலியெனப் பொழிவுகளை மடுத்தார் - புத்தி
சாலியெனப் பேச்சாற்றல் தொடுத்தார் 8

பதினோறாம் வகுப்பினையே முடித்தார் - இனி
கதியேது எனநினைத்துத் துடித்தார்
நிதியான தமிழ்படிக்கத் தூண்டினார் - மாமன்
மதிபோற்றி மயிலம்படி தாண்டினார் 9

இளங்கலைப் பட்டம்

ஆசிரியர் வட்டத்தை நெருக்கினார் - நுண்
ஆசிரிய கல்விநலம் தருக்கினார்
வாசிக்கும் பழக்கத்தைப் பெருக்கினார் - வசை
மாசுதரும் மடமெல்லாம் சுருக்கினார் 10

ஆர்வமுடன் தமிழமுதம் பருகினார் - பகர்
நீர்மையினில் முற்றிலுமாய் மருகினார்

வீரியமாய்க் கவிபுனைந்து முருகினார் - பொருட்
சாரத்தைச் சுவைத்தவர்கள் உருகினார் 11

விடுதியினில் தங்கியவர் பயின்றார் - வீண்
கடுமைமிகு சட்டம்மீற முயன்றார்
ஒடுங்குகின்ற கோழையல்ல என்றே  - நா
நடுக்கமின்றி உறுதியோடு துயின்றார் 12

இடையிடையே சிற்சிலவாய்க் குறும்புகள் - தொடர்
இடைவிடாத நட்பெனும்நல் எறும்புகள்
தடைபடாத ஆனந்த அரும்புகள் - அட
உடைந்தனவே குமிழ்த்திட்ட வரம்புகள் 13

வில்லியம்டெல் லென்னும் முன்னவர் - நேயம்
வெல்இளவல் கிருட்டின மூர்த்தியும்
நல்லதொரு தோழமை வளர்த்தனர் - காலம்
சொல்லுகின்ற வரலாறு படைத்தனர் 14

பொதுவுடைமை வாதிகளைச் சுற்றினார் - கொள்கை
மெதுமெதுவாய் அசைபோட்டு ஒற்றினார்
இதுகையென விடாப்பிடியாய் முற்றினார் - நெறி
அதுவெனவே அவ்வழிபின் பற்றினார் 15

சான்றோர்கள் பற்பலரை அண்டினார் - பல்
சான்றுரைத்த செய்திகளைக் கிண்டினார்
வானொலிக்கும் பொழிவுகேட்க மண்டினார் - அதைத்
தானொலித்து ரசிகநெஞ்சம் தண்டினார் 16

போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தார் - வழி
காட்டியாக இளையவர்க்கு நிலைத்தார்
கேட்டினைமுன் னறிந்துடனே துடைத்தார் - திகழ்
ஏட்டினிலே தம்பெயரைப் பொறித்தார் 17

நான்காண்டு இலக்கியத்தைப் படித்தார் - பாடத்
தேன்பிழிவை வண்டெனவே குடித்தார்
வான்புகழை அதுவிளைக்கும் என்றே - நம்பித்
தானடைந்தார் பட்டத்தை நன்றே 18

அடுத்ததென்ன என்னும்பெருங் கேள்வி - காலம்
விடுத்திடவே கிடைத்ததொரு வேள்வி
எடுத்ததைநீ முடித்திடுக வென்றே - உளம்
கொடுத்ததுநல் முயற்சியெடு இன்றே 19

முதுகலைப் பட்டம்

தாகூர்கலைக் கல்லூரி சாலை - மிக
வாகாக அருகமைந்த வேளை
நோகாமல் ஊருடனே இருந்து - தொலைவு
போகாமல் படித்துயர்ந்தார் புரிந்து 20

கருங்குயில்கள் ஒலித்திடுமுயர் தருக்கள் - இரு
மருங்கினிலும் அகன்றுசெலும் தெருக்கள்
விருப்புடனே கற்பித்திடும் ‘குரு’க்கள் - எழுது
கரு‘மை’யிலே கவிதையாகும் கிறுக்கல் 21

தமிழ்முதுகலை முறையாகப் பயின்றார் - ஒலி
இமிர்ந்திடுநறுந் தேனீயென அயின்றார்
நிமிர்ந்திடுமால் உருபோலே வளர்ந்தார் - நனி
திமிர்ந்திடுநல் அறிவதனில் விளைந்தார் 22

பஞ்சாங்கம் எடுத்திடுநல் பாடம் - நிதம்
பஞ்சமின்றித் தூண்டிவிடும் வாதம்
அஞ்சாத இளங்கோவுள் தேக்கும் - தினம்
துஞ்சாமல் சிந்தனைகள் பூக்கும் 23

அடுக்குமொழி பேசுமரைக் காயர் - அவரை
மடக்குபவர் தோற்றோடிப் போவர்
மிடுக்குநடை பாடமதைக் கேட்க - தேன்
மடுக்குமொழி இளங்கோவும் சூழ்வர் 24

தில்லைவனம் கற்பித்தார் பொறுமை - சுடர்
நல்வீரம் தந்தார்திரு மாவளவன்
எல்லையில்நுண் ணாய்வளித்தார் பசுபதி - வாழ்
கல்வியுடன் கைகொடுத்தார் பூபதி 25

நசீமா பானுவெனும் ஆசான் - சொல்
வசீகரம் கூட்டும்சுவைத் தேனாம்
விசையுறு இளங்கோவெனும் தூணை - நாளும்
வசையற உயர்த்திட்ட வானாம்!   26

இன்னும் இவர்போல் பற்பலர் - சீர்
மன்னும் செய்திகள் நிறைத்தனர்
அன்னம் உண்ணும் பாலெனத் - தம்
முன்னர் கண்டதைப் பிரித்தனர் 27

வகுத்து முதுகலை பயின்று - தம்
தகுதியை வளர்த்தனர் முயன்று
தொகுத்த அறிவெனும் உலையில் - ஒளிர்
நகையெனப் புடமிட உயர்ந்து 28

ஆய்வு

அடுத்த கட்டம் ஆய்வென்று - அதன்
அடிமுடி காணப் புறப்பட்டார்
விடியலைத் தேடிச் சென்னையிலே - அவர்
விடுவிடு வென்றே நடைபோட்டார் 29

சென்னைக் கடற்கரை எதிரில் - விரி
விண்ணை முட்டிநின் றோங்கும்
வண்ணச் சிவப்பதன் தோற்றம் - காணும்
கண்கள் இமைகளை விரிக்கும் 30

நவமிகு மாநிலக் கல்லூரி - அங்கு
உவந்து உறைவாள் கலைவாணி
தவமெனக் கல்வியைத் தினம்பேணி - மாணவர்
தவறாமல் ஏறுவர் புகழேணி 31

இளமுனை வராய்வினை முடிக்க - அங்கு
வள்ளுவர் முதற்குறள் எடுத்தார்
அளவினில் பெரிதெனச் சொல்லி - நாகு
அதிலொரு பாதியை விடுத்தார் 32

மெரினாக் கடற்கரை எதிரில் - அடர்
கருநிற மேகக் குதிரில்
மறைந்திடு சிகர நுனியில் - பகல்
பருதியும் சற்றிளைப் பாறும் 33

வள்ளுவர் சிலையின் முன்னே - விரி
பல்கலைக் கழக வளாகம்
சில்லெனும் கீழைக் காற்றும் - வந்து
மெல்லென ஆய்வினை ஆற்றும் 34

ஓய்வுகள் இன்றி உழைப்போர் - செயும்
ஆய்வுகள் அங்கே கொழிக்கும்
காய்தலும் உவத்தலும் இன்றி - பல்
ஆய்வுகள் நடுநிலை வகிக்கும் 35

முனைவர் பட்டம் பெறவே - குறள்
மோகன ராசை அடைந்தார்
அனைவரும் மெச்சிப் புகழ - கள
ஆய்வினைத் திறம்பட முடித்தார் 36

வேலைதேடும் ஓட்டத்திலே தாவினார் - அதி
காலையிளம் பருதிபோலே மேவினார்
மேல்விளைத்த நம்பிக்கைநல் நாற்றினால் - தக்க
வேலைபெற்று சோலைமல ராயினார் 37

துதிபாடும் கூட்டமங்கு இருந்தது - சிலர்
விதியாடும் ஓட்டமென மாய்ந்தனர்
சதியாளர் சோதனைகள் சூழினும் - காட்டு
நதியாக ஊற்றெடுத்து ஓடினார் 38

திருமணம்

படமென விரிபெருந் தோப்பு - அது
மடற்பனை அன்றிலின் காப்பு
குடையெனும் மரத்தினில் முசுக்கள் - கீழ்
குடம்நிறை கரந்திடும் பசுக்கள் 39

அறியாங் குப்பமெனும் ஊராம் - பேர்
அறியார் புதுவையில் பிறவார்
அறிந்தவர் பெண்கொளப் பணித்தார் - திறம்
அறிந்துநல் வதுவையில் இணைத்தார் 40

சாந்தியெனும் பேர்படைத்த பெண்ணாள் - அருள்
காந்தவொளி வீசுகின்ற கண்ணாள்
ஏந்தியகை தான்பிடித்த நன்னாள் - எதிர்
நீந்துகின்ற வாழ்வினிலே பொன்னாள் 41

குடும்பவிளக் கேற்றவந்த தங்கம் - அவர்
வடுவிலாத அன்பினிலே வங்கம்
கடுகளவும் சினங்கொளாத நங்கை - உறவு
விடுத்திடாமல் அரவணைக்கும் கங்கை 42

மாமிமாமன் மனம்கோணா மருமகள் - அவரைச்
சாமியெனப் பேணுகின்ற திருமகள்
பூமியென குடும்பபாரம் தாங்கிட - நிதி
சேமித்துச் செலவுசெயும் குலமகள் 43

தூய்மையோடு இலந்துலங்கச் செய்வார் - நொடி
ஓய்விலாது வீட்டினழகில் உய்வார்
வாய்த்திட்ட வசதிகளில் மகிழ்ந்து - நலம்
தோய்த்திடுவார் இல்லறமாண் பிசைந்து 44

அறுசுவையாய் உணவுதனைச் சமைப்பார் - அதில்
நறுஞ்சுவையாய் அன்பதனைக் குழைப்பார்
ஒருமுறையே அவர்கையில் உண்டோர் - உடன்
மறுமுறையும் வந்திடநாள் குறிப்பார் 45

பொங்கிடுநல் மகிழ்வினிலே திளைத்து - அன்பு
தங்கிநிற்கும் இல்லறத்தில் களித்துத்
தங்கமென இருகுழந்தை அளித்தார் - வளர்
திங்களென நல்லறத்தை விளைத்தார் 46


ஆசிரியர் பணி

பணியினில் சேர்ந்ததைச் சிறப்பாய் - தகும்
பணிவுடன் செய்தனர் உவப்பாய்
மணியெனப் பதினைந் தாண்டு - தாகூர்
அணிபெறச் செய்தனர் முனைப்பாய் 47

கட்டுக் கடங்கா மாணவர் - இவர்
சுட்டும் நெறியால் மீண்டவர்
சட்டம் ஏந்திய கையினர் - சிறு
பெட்டிப் பாம்பென ஆயினர் 48

காஞ்சிமா முனிவர் மையம் - புரி
வாஞ்சையோ டேழிரண் டாண்டு
பூஞ்சோலைத் தேனினம் ஆய - கூர்
நாஞ்சிலாய் நெறியுறச் செய்தார் 49

காரைக்கால் அவ்வை கல்லூரி - இங்கு
ஓராண்டாய்ப் பெற்ற நற்பேறு
சீர்மிகு முதல்வராய் அமர்ந்தார் - அதன்
சீர்மைக்கு வழிகோல முனைந்தார் 50

செய்திடும் செயல்களில் நேர்த்தி - நட்பில்
மெய்யாக இருப்பதில் சீர்த்தி
பொய்யுரை இல்லாத மூர்த்தி - அவை
உய்த்திடும் என்றுமே கீர்த்தி 51

புனைதல் இல்லாப் புரிதல் - சொல்
வனைதல் இல்லா மொழிதல்
கண்ணற உண்மையில் நிற்றல் - மனம்
புண்படா தெதனையும் சாற்றல் 52

புலமை பளிச்சிடும் ஆற்றல் - பிறர்
புலமை வியந்துளம் போற்றல்
துலங்கா மாந்தரின் சதிகளை - நிலை
கலங்கா தெதிர்கொளும் மனநிலை 53

களராய்க் கிடக்கும் மாந்தர் - மனக்
களைகளைக் கண்டுணர் பயிற்சி
உளம்கொள விளக்கிடும் முயற்சி - அதில்
விளைந்திடா என்றுமே அயர்ச்சி 54

பணிவாய் அணுகிடும் பண்பு - நனி
தணிவாய்ப் பேசிடும் அன்பு
பிணிநேர் நெருக்கடி எனினும் - தனித்
துணிவுடன் எடுத்திடும் முடிவு 55

மழலையும் அணுகிட எளியர் - கேள்
பழகிடத் தாய்போல் இனியர்
வழுக்கியே செல்லா நெறியர் - சுய
விழைவுகள் இல்லாப் பெரியர் 56

எளிமை ஒளிர்ந்திடு தோற்றம் - மிளிர்
தெளிவு ஒலித்திடும் கூற்று
களித்துப் புடமிடு நேர்மை - நிறை
குளித்து நிமிர்ந்தது சீர்மை 57

வகுப்பினில் பெற்றிடும் பட்டம் - திறன்
தகுதியை வளர்த்திட வேண்டும்
மதிப்பெண் பெறுவது மட்டும் - மாணவர்
கதியெனில் கல்வியே நட்டம் 58

மாணவர் மேம்பட நாளும் - வெகு
முனைப்புடன் அவர்செயல் நீளும்
திறமிகு கலைகளில் பயிற்சி - நிதம்
பெற்றிடத் தொடர்ந்திடும் முயற்சி 59

சிந்திய சில்லறை போலே - மிகு
சிரிப்பொலி வகுப்பினில் கேட்கும்
சலசல அருவியைப் போலே - ஒலி
கலகல வெனும்நகை கோர்க்கும் 60

உடன்பணி யாற்றிடு வோரை - தம்
குடும்பமாய்ப் போற்றிடும் நேயர்
தமக்கையாம் பூங்கா வனமும் - உடன்
தங்கையாய் நிர்மலா தகைந்தார் 61

நடிப்பு

நசையுடன் நாடகம் பயின்றார் - நவ
ரசங்களை முகத்தினில் ஈந்தார்
இசையுற மேடையில் நடித்துத்  - தம்
வசத்தினில் காண்பவர்ப் பிணித்தார் 62

நவீன நாடகம் நடித்தார் - தம்
கவனம் இளைஞரில் பதித்தார்
நவமாய் நாடகம் விதைத்தார் - புவி
அவலம் கண்டதைச் சிதைத்தார் 63

கணினிப் புலமை

கணினியில் தடத்தினைப் பதித்தார் - முக
நூலினில் தோழமை பொதித்தார்
அரியபல் கட்டுரை யாத்தார் - ஒரு
விரலால் எழுத்துகள் கோர்த்தார்! 64

சுற்றுலா

சுற்றுலா விரும்பும் மனத்தர் - எங்கும்
சுற்றிடத் தயங்காக் குணத்தர்
கற்றிட அதுவும் வழியாம் - எனும்
பெற்றியை உணர்ந்த திறத்தர் 65

பனிபடர் இமய வெற்பு - வெண்
பனிலமூர் தீவாம் இலங்கை
கனியடர் மலேயா சிங்கை - என
நனிபல இடங்கள் திரிந்தார் 66

சமூகப் பணி

பதவிகள் வணங்காப் பண்பினர் - பணிந்து
உதவிகள் விழையா உன்னதர்
சிறந்தநற் கொள்கையர் நட்பினர் - தோழர்
நல்ல கண்ணதில் முதன்மையர் 67

சமூகநீதி அமைப்புகளில் இணைந்தார் - நல்
குமுகமனப் பான்மைதனை வனைந்தார்
அமுக்கப்படு மக்கள்நிலை கண்டு - உளங்
குமுறியவர் மேன்மைபெற முனைந்தார் 68
தொழிலாளர் நலங்காணும் சங்கம் - தனில்
விழியாக உற்றிடுவார் அங்கம்
தமிழுக்கு நேருமெனில் பங்கம் - விழி
உமிழ்கனலாய் மாறிவிடும் சிங்கம் 69
மேடைப்பேச்சு
ஆடல் பாடல் தமக்கே - விழாக்
கூடம் சிறக்கும் என்பார்
மேடைப் பேச்சென் றாலே - அட
ஓடிடும் கூட்டம் என்பார் 70
அரங்கில் கேட்போர் இன்றி - பல
இருக்கைகள் உறங்கிடும் குன்றி
வருபவர் இலரெனும் போது - உரை
தரும்பயன் செவிகளுக் கேது?  71
நாவலர் பேசிடும் அரங்கைப் - பிறர்
ஆவலாய் ஒருமுறை அணுகின்
தேவலாம் மேடைப்பேச் சென்றே - அதில்
மேவலாம் புகழெனக் கணிப்பார் 72
நோக்கவுரை வாழ்த்து தலைமை - எனும்
சாக்கிட்டு அவரை அழைப்பார்
தேக்கிடும் கூட்டம் பார்த்து - பெற்ற
பாக்கியம் என்றே நினைப்பார் 73
செயற்கைத் தனம்சிறி தின்றி - அவர்
செப்பிடும் நகைகளை அணிந்து
செவிகள் சுவைத்துக் களிக்கும் - தாய்
செந்தமி ழாள்மனம் சிலிர்க்கும் 74
கோடையின் இடியது இல்லை - உயர்
மேடையில் வீசுமென் காற்று
திட்டையில் ஏறிடும் நீர்போல் - கைத்
தட்டலில் கைகளும் வேர்க்கும் 75
புதுமலர் நறுந்தேன் போலே - மனம்
விதுப்புறு கருத்துகள் நூற்பார்
முதுபெரும் உரைவலர் கூட - அதில்
மதுவுணும் வண்டெனத் திளைப்பார் 76
பட்டி மன்றம் பலவும் - அவர்
கட்டுப் பாட்டில் களிக்கும்
விட்டுக் கொடுக்கா உண்மை - உரம்
பட்டுப் பேச்சில் சிலிர்க்கும் 77
நடுவர் தீர்ப்புக் கேட்க - உளம்
நாடுவர் இருதிறத் தாரும்
எடுத்துரை செய்தி களாலே  - உரை
தடுமாற் றங்கள் களைவார் 78
உரூபாய்த் தாளூடு இழைபோல் - ஆய்
உரையிலும் இளநகை இழையும்
வரையா உளம்மிகக் குழையும் - மனம்
திரும்பவும் கேட்டிட விழையும் 79
நற்றமிழ் நாவலர் பேச்சு - என்றும்
உற்றது புதுச்சுவை என்பார்
கற்றது கடலள வென்பார் - தமிழ்
பற்றது கொண்டது என்பார் 80
நூல்கள்
மலையருவி எனும்பெயர்ப் புனைவு- கவி
உலையினில் வெளிப்படும் விழைவு
அலைத்திடும் உலக நிகழ்வு - தனைக்
குலைத்திடும் உயரிய முயல்வு 81
காலடியில் தலையெனும் கவிதை - சில
தாள்களில் விரிந்திடும் நூலே
வேலென வருத்தும் திறத்தில் - அதைப்
போலிலை வேறொரு நூலே 82
மனிதத் தின்னிகள் எல்லாம் - இங்கு
புனிதர் வடிவில் திரிவார்
சனியாம் உலகிற் கவர்தாம் - என
முனிந்தவர் முகத்திரை களைவார்! 83
சிந்தனை வளமதில் துய்த்து - பார்
தந்தார் மென்பொருள் வடித்து
அந்தமில் கார்த்திக் வாழ்க - பயன்
நந்துக புவிநலம் சூழ்க! 84
பொருநராற் றுப்படை தனக்குப் - புதுப்
பொருளுரை இளங்கோ படைத்தார்
விரும்பி அதனையும் அந்தமில் - மென்
பொருளில் வடித்துக் கொடுத்தார் 85
நுணுகிக் காணும் ஆய்வு - யாரும்
அணுகாப் பொருளில் தோய்வு
பேணுவர் பல்துறைக் குறிப்பு - பின்
காணுவர் அரியநல் முடிபு! 86
‘மலடியும் மழலையும்’ என்ற - நல்
ஆய்வினை நூலாய் விடுத்தார்
‘மலர்நீட் டமெ’னும் நூலும் - அவர்
இலக்கிய ஆய்வினில் தொடுத்தார் 87
‘படர்க்கை’, ‘தமிழ்இணர்’ என்றே - மிகத்
தொடர்ந்தன ஆய்வுரை நூல்கள்
அடஅட என்றே புகழ்ந்து - இமை
விடுத்தன விரிந்தன விழிகள்! 88
விருதுகள்
‘மண்ணுரி மைக்கல்வி யாளர்’ - என
தண்ணுமை முழக்கித் திளைத்த
நண்பர்கள் தோட்டம்  அமைப்பு - அது
நண்ணும் அறிஞர் துடிப்பு! 89
சிந்தனை வளமதைக் கண்டு - உடன்
தந்தது தமிழ்க்கலை மன்றம்
‘செந்தமிழ் ஞானச் செம்மல்’ - எனும்
பைந்தமிழ் போற்றும் விருது 90
கிங்பிஷர் இளைஞர் மன்றம் - என்றும்
மங்காப் புகழ்க்கொரு சான்றாய் 
குமிழும் விருப்பொடு தந்தது - பொலி
‘தமிழ்ப்பணிச் செம்மல்’ விருது  91
பாத்திர மறிந்து தந்தது - புதுவைப்
பாத்திர வணிகர் சங்கம்
பாத்திறம் அறிந்த இளங்கோ - பெற
‘செம்மொழிச் செம்மல்’ விருது 92
பற்றுடன் நண்பர்கள் தோட்டம் - திகழ்
சொற்றமிழ் மகிழ வரைந்தது
‘நற்றமிழ் நாவலர்’ விருது - அது
உற்றது பெற்றியை மிகுத்து 93
‘சிந்தனைச் செல்வர்’ என்று - மிகு
வந்தனை யுடனே தந்தது
பிந்தைய தலைமுறை உவக்க - அனைத்
திந்திய சமூகநல் அமைப்பு 94
‘காம ராசர்’ விருதை - புகழ்
நாமம் விளங்கச் சூட்டியே
சேம முறவே நின்றது - காம
ராசர் நற்பணி மன்றமே 95
‘இலக்கியச் செம்மல்’ என்றும் - நல்
‘இலக்கிய மாமணி‘’ என்றும்
‘செந்தமிழ் அருவி’ என்றும் - தூய
சிங்கையர் விருதுக ளளித்தார் 96
புதுவை அண்ணா என்று - மிகத்
தகுதி யானதோர் விருதை
மகிழ்வுடன் தந்தணி சேர்த்தது - புதுவை
குழந்தைகள் இலக்கியக் கழகம்! 97
நீளும் இளங்கோ புகழால் - பலர்
நாளும் விருதுகள் தந்தார்
கோளை நம்பா அண்ணல் - புகழ்
மாளா தென்றும் நிலைக்கும் 98
பொதுப்பணிச் சேவையில் என்றும் - மிகக்
கதுமென கைகள் நீளும்
தமிழ்ப்பணி செய்திடும் அன்னார் - செந்
தமிழ்போல் என்றும் வாழ்க! 99
வளமுடன் நலமுடன் வாழ்க - திரு
மகளுடன் சிறப்புற வாழ்க
புகழுடன் மகிழ்வுமே சூழ - பைந்
தமிழ்போல் என்றும் வாழ்க! 100

ஐம்பத் தேழாம் அகவையில் 
அடியினை எடுத்து வைத்திடும்
இளங்கோ அண்ணனின் வாழ்வியல்
இயம்பிய இச்சிறு மாலையோ
இளைய சகோதரி யாகிய
ஒளவை நிர்மலா யாத்தது - அது
அன்புப் பரிசாய் வாய்த்தது!

 

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...