சனி, 25 டிசம்பர், 2010

கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு - அணிந்துரை

செ. பவானியின்
கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

கவிஞர் தமிழ்ஒளி தமிழிலக்கிய வரலாற்றில் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்பாளி. அவரின் கவிதைகள் காலவெள்ளத்தால் கரைந்து போகாத கவித்துவமும் கருத்துச் செறிவும் உடையவை. பாவேந்தர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலத்துக் கவிஞர். இந்த இருவரது படைப்பாளுமைகளையும் உள்வாங்கித் தமக்கென ஒரு புதுப்பாதை சமைத்துக் கொண்டவர். பாரதி, பாவேந்தர் வரிசையில் புதுச்சேரி தமிழுலகிற்குத் தந்த மிகப்பெரிய கொடை கவிஞர் தமிழ்ஒளி. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதநேயப் படைப்பாளி. எங்கும் எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே உரத்துக் குரல் கொடுத்தவர். அவருடைய படைப்புகள் பல பரிமாணங்களைக் கொண்டவை.

மனிதாபிமானம், தேசியம், சமத்துவம் ஆகிய மாபெரும் கொள்கைகளில் பற்றுகொண்டு, தமிழின் பண்டைய மற்றும் நவீன இலக்கிய மரபுகளில் தோய்ந்து சிந்தனை வளத்தோடும் சந்த நயத்தோடும் செஞ்சொற் கவிதைகளை யாத்தவர் கவிஞர் தமிழ்ஒளி.

கவிஞர் தமிழ்ஒளி தமிழ்ச் சமுதாயத்தில் சாதி வேற்றுமையில்லாத, ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை நிறுவக் கனவு கண்டார். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லதை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார். இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணிவேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் படைப்புகளில் பாராட்டினார், துணைநின்றார்.

கவிஞர் தமிழ்ஒளி தம் கவிதைகளிலும் குறுங்காவியங்களிலும் சிறுகதைகளிலும் எதார்த்த வாழ்விலுள்ள இன்னல்கள் பலவற்றைப் பரவலாக எடுத்துரைக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் சோகமயமான வாழ்க்கைச் சித்திரம் படிப்பவர்கள் நெஞ்சை நெகிழ்விக்கச் செய்யும் வகையில் கவிஞரின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவரின் காவியங்களும் சிறுகதைகளும் மிகுதியும் துன்பியல் முடிவுகளைக் கொண்டதாகவே படைக்கப்பட்டிருக்கும். அவரின் வாழ்க்கைச் சூழல் அப்படி. சொகுசு மாளிகைகளில் இருந்துகொண்டு கற்பனைகளில் மிதந்து அவர் தம் இலக்கியங்களைப் படைக்கவில்லை. வறுமை, பசி, பட்டினி இவைகளோடு வாழ்க்கையே போராட்டமாய்க் காலந்தள்ளும் மக்களோடு மக்களாய் இருந்து தம் படைப்புகளைப் படைத்தவர் தமிழ்ஒளி.

கவிஞர் தமிழ்ஒளி கவிதைத் துறை மட்டுமல்லாது தமிழிலக்கியத்தின் பல்வேறு படைப்பிலக்கிய வடிவங்களிலும் தம் கவனத்தைச் செலுத்தியவர். நாடகம், வரலாறு, காவியங்கள், குறு நாவல்கள், சிறுகதைகள் என அவர் படைத்த நூல்களின் பட்டியல் நீளும். படைப்பிலக்கியத்துறை மட்டுமல்லாது ஆய்வு நூல்கள் படைப்பதிலும் தமிழொளி முத்திரை பதித்துள்ளார்.

II
கவிஞர் தமிழ்ஒளியின் ‘உயிரோவியங்கள்’ சிறுகதைத் தொகுதி பதினைந்து சிறுகதைகளைக் கொண்டது. இச் சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகளை ஆய்வு செய்து கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் -ஓர் ஆய்வு என்ற தலைப்பில் நூலாகத் தந்துள்ளார் செ.பவானி. இவர் என்னுடைய வழிகாட்டுதலில் தம் இளமுனைவர் பட்ட ஆய்வினை இதே தலைப்பில் நிகழ்த்தியவர். அந்த ஆய்வேடே நூலாக்கம் பெற்று இப்பொழுது வெளிவருகின்றது.

இன்றைய கல்வியாளர்களின் ஆய்வுகள் குறித்துக் கல்விப் புலத்துக்கு வெளியே ஓர் அவநம்பிக்கையே நிலவிவரும் சூழலில் இத்தகைய ஆய்வுகள் வெளிவருவது ஒரு நம்பிக்கை ஊட்டக்கூடிய செயலாகும். பட்டங்களுக்காக நிகழ்த்தப்படும் பல்கலைக் கழக ஆய்வுகள் கடந்த முப்பதாண்டுகளில் பல்கிப் பெருகிவிட்டன. அதிலும் பல பல்கலைக் கழகங்கள் வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தம் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் இளமுனைவர் பட்டப் படிப்புகளைத் தொடங்கியபோது கல்வியாளர்கள் மற்றும் நல்ல ஆய்வாளர்கள் மத்தியில் ஓர் அச்சம் தொற்றிக்கொண்டது. அந்த அச்சம் நியாயமானதுதான் என்பதனைக் கடந்தகால நடைமுறைகள் நமக்கு நிரூபித்தன. ஆனால் அதிலும் ஒரு மெல்லிய ஆறுதலை இப்படிப்பட்ட சில நல்ல ஆய்வுகள் நமக்கு வழங்கின. அந்தவகையில் ஆய்வாளர் பவானி அவர்களின் இவ் ஆய்வு முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.

கவிஞராக மட்டுமே தமிழுலகிற்குத் தெரிந்த கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆய்வாளர் இப்பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டமையே அவரின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. எடுத்துக்கொண்ட பொருளை நுணுகிக் கற்று வகைதொகை செய்து நல்லதொரு ஆய்வாகப் பின்வரும் நான்கு இயல்களாக அமைத்துள்ளார் செ.பவானி.

1. கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்வும் படைப்பும்
2. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் கருவும் உருவும்
3. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் பாத்திரப்படைப்பு
4. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வெளிப்படும் சமுதாயப் பார்வை.


நான்கு இயல்களிலும் இழையோடியிருப்பது கவிஞர் தமிழ்ஒளியின் மனிதநேயம் குறித்த பதிவுகள்தாம் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

உயிரோவியங்கள் நூலின் முன்னுரையில் கவிஞர் இன்குலாப் தமிழ்ஒளியின் மனிதநேயம் எப்படிப்பட்டது என்பதை மிகத் தெளிவாக வரையறுக்கின்றார். அப்பகுதி வருமாறு,
“மனிதநேயம் என்பது ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுவனையும் ஒரே நிலையில் வைத்து, அன்பு காட்டுவதன்று. .. .. மனசாட்சியுள்ளவன் இருவருக்கும் பொதுவாக நிற்கமாட்டான். தமிழ்ஒளியின் மனிதநேயம் ஒடுக்குமுறைக்கு எதிரானது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒருகுரல் வேண்டியிருக்கிறது. தம் காலத்தில் கவிஞர் தமிழ்ஒளி அத்தகைய குரலாக இருந்திருக்கின்றார். ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் தமக்குச் சொந்தமான ஒரு குரலைக் கேட்காமல் போனதுதான் பரிதாபத்துக்குரியது. இதற்குக் கவிஞர் தமிழ்ஒளியோ, ஒடுக்கப்பட்டவர்களோ பொறுப்பாக மாட்டார்கள். இந்த நியாயத்தின் குரல்களைத் தமது பகட்டு ஆரவாரத்தால் மூழ்கடிக்கும் முதலாளியம் மட்டுந்தான் இதற்குப் பொறுப்பாகும்.”

கவிஞர் இன்குலாப்பின் மேற்கோளைத் தமது நூலில் எடுத்துக்காட்டும் நூலாசிரியர் செ.பவானி தமது நூலின் மையப்புள்ளியாக தமிழ்ஒளியின் மனிதநேயம் குறித்த பதிவுகளை அமைத்துக் கொண்டுள்ளார். ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான குரலாகவும் சிறுகதையாசிரியர் தமிழ்ஒளியின் குரல் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே அவரின் ஆய்வுநூல் அமைந்துள்ளது.

தமிழ்ஒளியின் சிறுகதைகள் எப்பொழுதும் பசி, பட்டினி, வறுமை, சாவு என்று ஒரே சோக மயமாயிருக்கிறது என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரின் சிறுகதையிலேயே அவர் பதில் சொல்கிறார். பட்டினிச் சாவு கதையில் கதையாசிரியரும் (தமிழ்ஒளி) அவரது நண்பர் ராமுவும் பேசிக் கொள்வதாக வரும் உரையாடல் பின்வருமாறு,

‘சமுதாயம் முன்னேறுகிறது’ என்று ராமு சொன்னான், ‘இல்லை செத்துக் கொண்டிருக்கிறது’ என்று நான் பதில் சொன்னேன். ‘உனக்கு எப்பொழுதும், சாவு, பயங்கரம், ட்ராஜெடி இதுதான் நினைவு, எல்லாம் கற்பனை’ என்று தன்னுடைய எதிர் வாதத்தைத் தொடங்கினான்.
‘எட்ட இருந்துகொண்டு சமுதாயத்தைப் பார்த்தால் எல்லாம் கற்பனையாகத்தான் இருக்கும்’ என்று நான் சூடு கொடுத்தேன்.
‘நான் எழுத்தாளனல்ல, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க. எனக்கு வேறே வேலையிருக்கிறது’ என்றான்.

சமுதாயத்தை எட்ட இருந்துகொண்டு வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் தமழ்ஒளியின் சிறுகதைகள் சோகக் கற்பனைகளாகத் தோன்றலாம். ஆனால் அவை புனைவுகளற்ற முழு உண்மைகள். அச்சோகங்களைப் பதிவுசெய்வதும் தீர்வுகளை முன்மொழிவதும் படைப்பாளனின் தலையாய பணி என்பதையே தமிழ்ஒளி தம் சிறுகதைகளில் பிரகடனம் செய்கிறார்

காலவெள்ளத்தில் கரைந்துபோன தமிழ்ஒளியின் சிறுகதைகளை ஆய்வுப் பொருளாக்கி மறைக்கப்பட்டஃ மறுக்கப்பட்ட அவரின் படைப்பாளுமையை வெளிக் கொணர்கிறார் நூலாசிரியர். சிறுகதைகளின் வடிவ நேர்த்தியில் வெளிப்படும் படைப்பாளுமையை விட உணர்வு பூர்வமான உள்ளடகத்தால் வெளிப்படும் படைப்பாளுமையே சிறந்தது. அந்தவகையில் தமிழ்ஒளியின் சிறுகதைகள் மிகச் சிறந்த படைப்பாக விளங்குகின்றன என்பதே அவரது ஆய்வு நமக்குத் தரும் செய்தியாகும்.

நல்லதோர் ஆய்வுப்படைப்பை வழங்கியிருக்கும் நூலாசிரியர் செ.பவானியின் ஆய்வுப்பணியும் எழுத்துப்பணியும் தொடர வாழ்த்துக்கள்.


6-12-2010

தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு -அணிந்துரை

வி.அமலோற்பவமேரியின்
தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு
-அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

கவிஞர் தமிழ்ஒளி இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவி. அவர் திராவிட இயக்கச் சிந்தனைகளில் கால்கொண்டு பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகளில் தம் சிறகுகளை விரித்தவர். சுரண்டுகிறவனும் சுரண்டப்படுகிறவனுமாகப் பிரிந்துகிடக்கும் இச்சமூக அமைப்பில் ஒரு படைப்பாளி யார் பக்கம் நிற்கவேண்டும் என்பதில் தெளிவான பார்வை அவருக்கிருந்தது.

ஏ செந்தமிழா! என்னுடைய சோதரா!
நீ யார்பக்கம்? நிகழ்த்திட வேண்டும்
கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா?
துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா?


என்று தம் கவிதைகளில் கேள்வியெழுப்பும் கவிஞர் தமிழ்ஒளி, தம் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் எப்பொழுதுமே துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கம்தான் இருந்தார். 1944 இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி, தமிழ், தமிழினம், தமிழர் எழுச்சி, சீர்திருத்தம் என்ற போக்கில் அதாவது தேசிய இனங்களின் உரிமை, தமிழ் ஆட்சிமொழி, சுயமரியாதை, சமத்துவம் என்ற செயல்பாட்டில் தம் படைப்;புப் பணியைத் தொடங்கினார். 1945இல் கவிஞர் மார்க்சீயத் தத்துவத்தை ஆழ்ந்து பயிலத் தொடங்கினார். அதன் விளைவாகவே நிலைபெற்ற சிலை, வீராயி ஆகிய காவியங்களைப் படைத்தார்.

1947இல் இலக்கியப் பேராசான் ஜீவா முன்னிலையில் தமிழ்ஒளி பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தார். 1947 தொடங்கி ஒன்பது ஆண்டுகள் பொதுவுடைமை இயக்கத்தில் உறுப்பினராகவும் கலை இலக்கியத் தளத்தில் புரட்சிப் படைப்பாளராகவும் விளங்கினார். 1953இல் பொதுவுடைமை இயக்கத்திலிருந்து வெளியேறினார். 1953க்குப் பிறகு புதியபுதிய உள்ளடக்கங்களிலும் உத்திகளிலும் கவிதைகள், காவியங்கள் படைப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். தம் இன்னல் மிகுந்த வாழ்வின் கடைசிவரை உழைக்கும் மக்களுக்கான படைப்பாளியாகவும் களப் போராளியாகவும் வாழ்ந்தவர். ஆக, தமிழிலக்கிய நெடும்பரப்பின் மிகச்சிறந்த பொதுவுடைமைக் கவிஞராக வாழ்ந்து மறைந்த தமிழ்ஒளிக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைத்த பாடில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்துவிட்டதைத் தவிர, அவர் வேறு ஒருபிழையும் செய்யவில்லை. தமிழகத்தின் சாதீயச் சமூகம் தமிழ்ஒளியை மறைத்துவிட்டது, மறந்துவிட்டது.

ஆனால், கடந்த முப்பதாண்டுகளில் கல்விப்புலத்தில் பெருகிவரும் இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான களம் காலத்தால் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பல படைப்பாளிகளின் படைப்புகளை ஆய்வு செய்து தமிழுலகிற்கு மீட்டெடுத்து வருகின்றது. அவ்வகையில் வி. அமலோற்பவமேரி என்னுடைய வழிகாட்டுதலில் உருவாக்கிய இளமுனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவமே தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு என்கிற இந்நூல்.

நாற்பதாண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி கவிதை, காவியங்கள், சிறுகதை, குறுநாவல்கள், நாடகம், ஆய்வுக் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல துறைகளிலும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தளித்துள்ளார். இவை அனைத்தும் 1944 முதல் 1965 வரையிலான இருபத்தோரு ஆண்டுகளில் படைக்கப்பட்டவை. சிறுகதை, நாடகம், குறுநாவல்கள், ஆய்வு என அவரின் படைப்புகள் பன்முகப்பட்டாலும் தமிழ்ஒளிக்கு மிகுந்த பெயரும் புகழும் பெற்றுத்தந்த படைப்புகள் அவரின் குறுங்காவியங்களே. தமிழ்ஒளி மொத்தம் ஒன்பது குறுங்காவியங்களைப் படைத்துள்ளார்.

குறுங்காவியங்கள்: எழுதிய ஆண்டு வெளிவந்த ஆண்டு
1. கவிஞனின் காதல் 1944 1947
2. நிலைபெற்ற சிலை 1945 1947
3. வீராயி 1947 1947
4. மேதின ரோஜா 1952 1952
5. விதியோ? வீணையோ? 1954 1961
6. மாதவி காவியம் 1958 1995
7. கண்ணப்பன் கிளிகள் 1958 1966
8. புத்தர் பிறந்தார் 1958 1966
9. கோசலக்குமரி 1962 1966


மேற்கண்ட தமிழ்ஒளியின் ஒன்பது குறுங்காவியங்களில் முதல் மூன்று குறுங்காவியங்களான கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி குறித்த ஆய்வே இந்நூலாகும்.

II
இந்நூலாசிரியர் வி.அமலோற்பவமேரி என்னுடைய ஆய்வு மாணவர். சிறந்த கவிஞர், நல்ல மேடைப் பேச்சாளர், நுணுக்க ஆய்வாளர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். வானொலி, தொலைக்காட்சி முதலான ஊடகங்களின் வழியாகத் தமிழுலகம் அறிந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரர். மாடலிங் துறையிலும் ஆர்வத்தோடு முனைந்து செயல்படுபவர். முற்போக்கு இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர். அதுமட்டுமன்றி உழைப்பே உயர்வு என்ற கொள்கையாளராய் நாளும் சுறுசுறுப்போடு தொடர்ந்து இயங்கிவருபவர். தம் இளமுனைவர் பட்டத்திற்கு வழக்கமான தலைப்புகளிலிருந்து மாறுபட்டு முற்போக்குச் சிந்தனையாளரும் பாட்டாளிகளின் தோழனும் மிகச்சிறந்த மனிதநேயப் படைப்பாளியுமான தமிழ்ஒளியின் படைப்புகளை ஆய்வுப்பொருளாகத் தேர்ந்தெடுத்தமையே இந்நூலாசிரியரின் சமூக அரசியல் ஈடுபாட்டினை வெளிப்படுத்தும். எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருளை வகைதொகை செய்பவராக மட்டும் அமையாமல் சமூகம் பயன்கொள்ளத்தக்க வகையில் தமிழ்ஒளியின் குறுங்காவியங்களைத் தமிழுலகிற்கு மிகச்சரியாக இனம் காட்டும் பெரும்பணியினையும் இவர் செய்துள்ளார். அந்தவகையில் நூலாசிரியர் அமலோற்பவமேரியின் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது.

தமிழ்ஒளியின் குறுங்காவியங்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்யும் இந்நூல் பின்வரும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
1. கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்வும் பணியும்.
2. கவிஞர் தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் ஓர் அறிமுகம்.
3. சமூக நோக்கில் தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள்.

முதல் இயல், தமிழனே! நான் உலகின் சொந்தக் காரன், தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து எனப் பிரகடனம் செய்துகொண்ட மக்கள்; கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் அவரின் படைப்புகள் குறித்த அறிமுகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இயல், காவிய இலக்கியவகை குறித்த அறிமுகங்களோடு ஆய்வுக்குரிய மூன்று குறுங்காவியங்களின் கதைச் சுருக்கம் மற்றும் பாத்திரப்படைப்புகளை அறிமுகம் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் இயல், ஆய்வுக்குரிய கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி காவியங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்கிறது. அந்த வகையில் இக்குறுங்காவியங்களில் பேசப்படும் சாதியச் சிக்கல்கள், தொழிலாளர் பிரச்சனை, வறுமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பொதுவுடைமைச் சமூகத்திற்கான போராட்டம், தமிழ்மொழி உயர்வு முதலான உள்ளடக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இவ்வியல்.

நூலின் நிறைவுப் பகுதியில் நூலாசிரியர் தரும் முடிப்புரை பயன்தரத்தக்க வகையில் தொகுத்தளிக்கப் பட்டுள்ளது.

நூலின் மொழிநடை தனித்துக் குறிப்பிடத் தக்கவொன்றாகும். எளிய இனிய மொழிநடையில் இவ்ஆய்வுநூல் அமைந்திருக்கின்றது. ஆய்வு நூல்களுக்கே உரிய கடுநடை தவிர்க்கப்பட்டு எளிய இனிய தமிழில் இடையிடையே தமிழ்ஒளியின் கவிதைப் பகுதிகள் மிளிர ஆய்வாளர்கள் மட்டுமின்றிப் பொதுமக்களும் மாணவர்களும்கூட இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
கவிஞர் தமிழ்ஒளி, 1947இல் வெளியிட்ட வீராயி காவியத்தின் முன்னுரையில் பின்வருமாறு எழுதினார்.

“நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தவன் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள்"


கவிஞர் தமிழ்ஒளி எழுத்தாள நண்பர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்குத் தாமே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து தம் படைப்புகளைப் படைத்துக் காட்டினார். கவிஞர் தமிழ்ஒளியின் படைப்பாளுமை அளப்பரிது. அவர் படைப்பின் உள்ளடக்கங்களோ வீரியமிக்க புரட்சி வித்துக்களைக் கொண்டது. காலத்தின் தேவை கருதி இவ்வாய்வு நூலைத் தமிழுலகிற்கு உவந்தளிக்கும் வி. அமலோற்பவமேரி பாராட்டுக்குரியவர். அவரின் சமூகப் பணியும் எழுத்துப் பணியும் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

கோவைக் கொண்டாட்டம் - அணிந்துரை

தோழர் புதுச்சேரி லெனின் பாரதியின்
கோவைக் கொண்டாட்டம்

அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
புதுச்சேரி-8


இன்றைய சமூக அரசியல் சூழலில் ஒரு தகவலைப் பதிவு செய்வதிலும் பதிவு செய்யாமல் விடுவதிலும் கூட அரசியல் உண்டு. ஏனென்றால் பதிவுகளே வரலாற்றிற்கான மூலங்கள். எப்பொழுதும் வரலாறுகள் பதிவுகளைக் கொண்டே புனையப்படுகின்றன.
* * *

கோவைக் கொண்டாட்டம் என்ற இந்நூல் தோழர் புதுச்சேரி லெனின் பாரதியின் அரிய உழைப்பால் உருவான ஒரு தொகுப்பு நூலாகும். கடந்த 2010 ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை தமிழகத்தின் கோயம்பத்தூரில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டிய ஒரு சிறிய பதிவே இந்நூல்.

தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசும் அதன் பிதாமகன் கலைஞர் அவர்களும் இம்மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினர் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. பொதுவாக இத்தகு அரசியல் பின்னணி கொண்ட மாநாடுகள் மிகப் பெரிய அளவில் கொண்டாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் மட்டுமே கவனம் செலுத்தி வேடிக்கை காட்டுவதுதான் வாடிக்கை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சற்றே விதிவிலக்கானது. கோவை மாநாட்டிலும் கொண்டாட்டங்கள் உண்டு என்றாலும் அதில் நேரடியான அரசியல் வண்ணங்கள் தலைகாட்டவில்லை என்பது ஓர் ஆறுதல். மாநாட்டின் இன்றியமையாத பகுதியான கல்வியாளர்கள் பங்கேற்ற ஆய்வரங்கப் பகுதிகள் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுச் செம்மையாக நடைபெற்றன என்பது மாநாட்டின் தனிச்சிறப்பு.

தோழர் லெனின் பாரதி மிகச்சிறந்த சமூக சேவகர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாகச் சமூக அரசியல் மாற்றத்தை விரும்பும் ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர். உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தோழர் லெனின் பாரதியின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பதற்கான ஓர் அடையாளமே அவரின் கோவைக் கொண்டாட்டம் என்ற இத்தொகுப்பு நூல்.

இந்நூலைத் தாம் தொகுத்து வெளியிட முயன்றதற்கான நோக்கத்தை அவரே நூலின் முன்னுரையில் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்,

மாநாட்டு நிகழ்வுகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் தமிழக அரசு தொகுப்பாக வெளிக்கொணர வேண்டுமென அறிஞர் பெருமக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு சிறிய படைப்பாவது பதிவாக வேண்டுமே என்ற ஆதங்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்தச் சிறிய நூல். முடிந்தவரை பேச்சுகளும் தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. (முன்னுரை)

பதிவுகளுக்கான ஆதாரங்களாக அவர் எடுத்துக்கொண்டன ஹிந்து, தினமலர், தினகரன், தினத்தந்தி, தீக்கதிர் முதலான செய்தித்தாள்களில் இடம்பெற்ற தகவல்களைத்தாம். நமது தினசரிகளிலிருந்து இத்தகு நல்ல தகவல்களைத் திரட்ட முடிந்திருந்திருக்கிறது என்பதே ஒரு வரலாற்று அதிசயம்தான்.

மாநாடு தொடர்பான அவரது பதிவுகளை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை,
1. மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகள்.
2. மாநாட்டுப் பங்கேற்பாளர்களின் கருத்துப் பதிவுகள்.
(குறிப்பாக வெளிநாட்டுப் பேராளர்கள் மற்றும் அறிஞர்களின் கருத்துக்கள்)
3. மாநாட்டோடு ஒட்டிய தகவல் குறிப்புகள்.

மாநாட்டு உரைகளில் தமிழக முதல்வரின் தொடக்கவிழாப் பேருரையும் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் வாழ்த்துரையும் சிறப்பாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. குறிப்பாக, யெச்சூரி அவர்களின் உரையில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டுக்குப் பிந்தைய பணிகள் பற்றிய கருத்துரை கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

அவை வருமாறு,
தமிழுக்குப் பழமையான மரபு உண்டு. இன்றைக்கும் மிகவும் பொருந்தக் கூடிய பெருமைமிகு இலக்கியங்களைத் தமிழ் தன்னகத்தே கொண்டுள்ளது. இது தவிர ஏட்டில் எழுதப்படாத வாய்மொழி வரலாற்றுச் செல்வங்களையும் அபரிமிதமாகக் கொண்டுள்ள மொழி தமிழ். இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களை உடனடியாக ஆவணப்படுத்தி என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதாக மாற்றிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

நாட்டுப்புற இசை, நாடகம், கூத்து, நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் மதிப்புமிக்க பொக்கி~ங்களாகக் கிராமப்புற மக்கள் மத்தியில் விளங்குகின்றன. இவற்றைப் பாதுக்காக்க வேண்டிய நடவடிக்கைகளை மாநாடு எடுக்குமென்று நான் நம்புகிறேன்.

தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களால் தமிழ்ச் சமூகம் செழுமையடைந்த ஒன்றாகும். இந்த இயக்கங்களின் இலக்கியப் பங்களிப்பு மூலம் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்து இம்மாநாடு சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். (சீத்தாராம் யெச்சூரி)

இடதுசாரிகள் ஆதரவு பெற்ற அரசால் தமிழ் செம்மொழித் தகுதி பெற்றது என்ற வரலாற்றை யெச்சூரி அவர்கள் தம்பேச்சின் இடையே குறிப்பிட, அதனையே தலைப்பாக்கி அவரது பேச்சைத் தொகுப்பில் இடம்பெறச் செய்திருப்பது லெனின் பாரதியின் படைப்பாற்றலுக்குத் தக்க சான்றாகும்.

தொகுப்பின் இடையிடையே பொருத்தமான படங்களை இடம்பெறச் செய்திருப்பது நூலுக்கு அழகு சேர்ப்பதோடு வரலாற்று ஆதாரங்களாகவும் அமைந்து சிறக்கின்றன. சான்றாக, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி இந்திய அஞ்சல் துறையின் சார்பில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது என்ற தகவலோடு மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட அந்த அஞ்சல் அட்டையின் படத்தையும் நூலில் இணைத்திருப்பதனைக் குறிப்பிடலாம்.

செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் அவர்கள் முன்மொழிந்த மாநாட்டுத் தீர்மானங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ள பதிவுகளில் மிக மிக இன்றியமையாதனவாகும். வருங்காலத் தலைமுறைக்கும் தமிழின் வருங் காலத்துக்கும் தேவைப்படுவன அவை. மாநாட்டுத் தீர்மானங்களைத் தொடர்ந்து தீர்மானங்களின் செயல்வடிவம் குறித்த சில தகவல்களும் இடம்பெற்றிருப்பது நம்பிக்கையூட்டக் கூடியதாயுள்ளது.

நூலில் இடம்பெற்றுள்ள சில முக்கிய பதிவுகள்:
1. தொடக்கவிழாவில் அணிவகுத்த இனியவை நாற்பது என்று பெயரிடப்பட்ட அலங்கார ஊர்திகள் பற்றிய விபரங்கள்.
2. செம்மொழி மாநாட்டுக் கண்காட்சி அரங்கு குறித்த தகவல்கள்.
3. சமயம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள கருத்தரங்கச் செய்தித் திரட்டுகள்.
4. ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்ட பல இன்றியமையாத தகவல்களின் தொகுப்பு.
5. வெளிநாட்டுத் தமிழறிஞர்களின் பேட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில சுவையான தகவல்கள்

தொகுப்பாசிரியர் தோழர் லெனின் பாரதி தம்முடைய குரலை எங்குமே பதிவு செய்யாமல் விட்டிருப்பதும் மாநாட்டுக்கு முன்னும் பின்னுமான அரசியல் குறித்தும் அதற்கான எதிர்வினைகள் குறித்தும் ஏதும் பேசாமல் மௌனம் சாதித்திருப்பதும் இத்தொகுப்பின் பலமா? பலவீனமா? என்கிற விவாதம் இந்நூலில் தொக்கி நிற்கின்றது. பதிவாக வேண்டும் என்ற நூலூசிரியரின் ஆதங்கமே இந்நூலை உருவாக்கக் காரணம் என்பதனால் தொகுப்பு முயற்சி என்ற வகையில் நூலாசிரியர் மிகக் கடுமையாக உழைத்து நூலை உருவாக்கியுள்ளார். தோழர் லெனின் பாரதியின் தமிழார்வமே இத்தகு கடின உழைப்புக்கு உந்துசக்தியாக இருந்துள்ளது. செம்மொழிக்கு அணிசேர்க்கும் வகையில் கோவைக் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ள நூலாசிரியரின் பணி பாராட்டுதலுக்குரியது.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...