Saturday, December 25, 2010

கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு - அணிந்துரை

செ. பவானியின்
கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

கவிஞர் தமிழ்ஒளி தமிழிலக்கிய வரலாற்றில் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்பாளி. அவரின் கவிதைகள் காலவெள்ளத்தால் கரைந்து போகாத கவித்துவமும் கருத்துச் செறிவும் உடையவை. பாவேந்தர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலத்துக் கவிஞர். இந்த இருவரது படைப்பாளுமைகளையும் உள்வாங்கித் தமக்கென ஒரு புதுப்பாதை சமைத்துக் கொண்டவர். பாரதி, பாவேந்தர் வரிசையில் புதுச்சேரி தமிழுலகிற்குத் தந்த மிகப்பெரிய கொடை கவிஞர் தமிழ்ஒளி. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதநேயப் படைப்பாளி. எங்கும் எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே உரத்துக் குரல் கொடுத்தவர். அவருடைய படைப்புகள் பல பரிமாணங்களைக் கொண்டவை.

மனிதாபிமானம், தேசியம், சமத்துவம் ஆகிய மாபெரும் கொள்கைகளில் பற்றுகொண்டு, தமிழின் பண்டைய மற்றும் நவீன இலக்கிய மரபுகளில் தோய்ந்து சிந்தனை வளத்தோடும் சந்த நயத்தோடும் செஞ்சொற் கவிதைகளை யாத்தவர் கவிஞர் தமிழ்ஒளி.

கவிஞர் தமிழ்ஒளி தமிழ்ச் சமுதாயத்தில் சாதி வேற்றுமையில்லாத, ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை நிறுவக் கனவு கண்டார். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லதை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார். இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணிவேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் படைப்புகளில் பாராட்டினார், துணைநின்றார்.

கவிஞர் தமிழ்ஒளி தம் கவிதைகளிலும் குறுங்காவியங்களிலும் சிறுகதைகளிலும் எதார்த்த வாழ்விலுள்ள இன்னல்கள் பலவற்றைப் பரவலாக எடுத்துரைக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் சோகமயமான வாழ்க்கைச் சித்திரம் படிப்பவர்கள் நெஞ்சை நெகிழ்விக்கச் செய்யும் வகையில் கவிஞரின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவரின் காவியங்களும் சிறுகதைகளும் மிகுதியும் துன்பியல் முடிவுகளைக் கொண்டதாகவே படைக்கப்பட்டிருக்கும். அவரின் வாழ்க்கைச் சூழல் அப்படி. சொகுசு மாளிகைகளில் இருந்துகொண்டு கற்பனைகளில் மிதந்து அவர் தம் இலக்கியங்களைப் படைக்கவில்லை. வறுமை, பசி, பட்டினி இவைகளோடு வாழ்க்கையே போராட்டமாய்க் காலந்தள்ளும் மக்களோடு மக்களாய் இருந்து தம் படைப்புகளைப் படைத்தவர் தமிழ்ஒளி.

கவிஞர் தமிழ்ஒளி கவிதைத் துறை மட்டுமல்லாது தமிழிலக்கியத்தின் பல்வேறு படைப்பிலக்கிய வடிவங்களிலும் தம் கவனத்தைச் செலுத்தியவர். நாடகம், வரலாறு, காவியங்கள், குறு நாவல்கள், சிறுகதைகள் என அவர் படைத்த நூல்களின் பட்டியல் நீளும். படைப்பிலக்கியத்துறை மட்டுமல்லாது ஆய்வு நூல்கள் படைப்பதிலும் தமிழொளி முத்திரை பதித்துள்ளார்.

II
கவிஞர் தமிழ்ஒளியின் ‘உயிரோவியங்கள்’ சிறுகதைத் தொகுதி பதினைந்து சிறுகதைகளைக் கொண்டது. இச் சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகளை ஆய்வு செய்து கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் -ஓர் ஆய்வு என்ற தலைப்பில் நூலாகத் தந்துள்ளார் செ.பவானி. இவர் என்னுடைய வழிகாட்டுதலில் தம் இளமுனைவர் பட்ட ஆய்வினை இதே தலைப்பில் நிகழ்த்தியவர். அந்த ஆய்வேடே நூலாக்கம் பெற்று இப்பொழுது வெளிவருகின்றது.

இன்றைய கல்வியாளர்களின் ஆய்வுகள் குறித்துக் கல்விப் புலத்துக்கு வெளியே ஓர் அவநம்பிக்கையே நிலவிவரும் சூழலில் இத்தகைய ஆய்வுகள் வெளிவருவது ஒரு நம்பிக்கை ஊட்டக்கூடிய செயலாகும். பட்டங்களுக்காக நிகழ்த்தப்படும் பல்கலைக் கழக ஆய்வுகள் கடந்த முப்பதாண்டுகளில் பல்கிப் பெருகிவிட்டன. அதிலும் பல பல்கலைக் கழகங்கள் வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தம் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் இளமுனைவர் பட்டப் படிப்புகளைத் தொடங்கியபோது கல்வியாளர்கள் மற்றும் நல்ல ஆய்வாளர்கள் மத்தியில் ஓர் அச்சம் தொற்றிக்கொண்டது. அந்த அச்சம் நியாயமானதுதான் என்பதனைக் கடந்தகால நடைமுறைகள் நமக்கு நிரூபித்தன. ஆனால் அதிலும் ஒரு மெல்லிய ஆறுதலை இப்படிப்பட்ட சில நல்ல ஆய்வுகள் நமக்கு வழங்கின. அந்தவகையில் ஆய்வாளர் பவானி அவர்களின் இவ் ஆய்வு முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.

கவிஞராக மட்டுமே தமிழுலகிற்குத் தெரிந்த கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆய்வாளர் இப்பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டமையே அவரின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. எடுத்துக்கொண்ட பொருளை நுணுகிக் கற்று வகைதொகை செய்து நல்லதொரு ஆய்வாகப் பின்வரும் நான்கு இயல்களாக அமைத்துள்ளார் செ.பவானி.

1. கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்வும் படைப்பும்
2. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் கருவும் உருவும்
3. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் பாத்திரப்படைப்பு
4. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வெளிப்படும் சமுதாயப் பார்வை.


நான்கு இயல்களிலும் இழையோடியிருப்பது கவிஞர் தமிழ்ஒளியின் மனிதநேயம் குறித்த பதிவுகள்தாம் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

உயிரோவியங்கள் நூலின் முன்னுரையில் கவிஞர் இன்குலாப் தமிழ்ஒளியின் மனிதநேயம் எப்படிப்பட்டது என்பதை மிகத் தெளிவாக வரையறுக்கின்றார். அப்பகுதி வருமாறு,
“மனிதநேயம் என்பது ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுவனையும் ஒரே நிலையில் வைத்து, அன்பு காட்டுவதன்று. .. .. மனசாட்சியுள்ளவன் இருவருக்கும் பொதுவாக நிற்கமாட்டான். தமிழ்ஒளியின் மனிதநேயம் ஒடுக்குமுறைக்கு எதிரானது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒருகுரல் வேண்டியிருக்கிறது. தம் காலத்தில் கவிஞர் தமிழ்ஒளி அத்தகைய குரலாக இருந்திருக்கின்றார். ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் தமக்குச் சொந்தமான ஒரு குரலைக் கேட்காமல் போனதுதான் பரிதாபத்துக்குரியது. இதற்குக் கவிஞர் தமிழ்ஒளியோ, ஒடுக்கப்பட்டவர்களோ பொறுப்பாக மாட்டார்கள். இந்த நியாயத்தின் குரல்களைத் தமது பகட்டு ஆரவாரத்தால் மூழ்கடிக்கும் முதலாளியம் மட்டுந்தான் இதற்குப் பொறுப்பாகும்.”

கவிஞர் இன்குலாப்பின் மேற்கோளைத் தமது நூலில் எடுத்துக்காட்டும் நூலாசிரியர் செ.பவானி தமது நூலின் மையப்புள்ளியாக தமிழ்ஒளியின் மனிதநேயம் குறித்த பதிவுகளை அமைத்துக் கொண்டுள்ளார். ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான குரலாகவும் சிறுகதையாசிரியர் தமிழ்ஒளியின் குரல் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே அவரின் ஆய்வுநூல் அமைந்துள்ளது.

தமிழ்ஒளியின் சிறுகதைகள் எப்பொழுதும் பசி, பட்டினி, வறுமை, சாவு என்று ஒரே சோக மயமாயிருக்கிறது என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரின் சிறுகதையிலேயே அவர் பதில் சொல்கிறார். பட்டினிச் சாவு கதையில் கதையாசிரியரும் (தமிழ்ஒளி) அவரது நண்பர் ராமுவும் பேசிக் கொள்வதாக வரும் உரையாடல் பின்வருமாறு,

‘சமுதாயம் முன்னேறுகிறது’ என்று ராமு சொன்னான், ‘இல்லை செத்துக் கொண்டிருக்கிறது’ என்று நான் பதில் சொன்னேன். ‘உனக்கு எப்பொழுதும், சாவு, பயங்கரம், ட்ராஜெடி இதுதான் நினைவு, எல்லாம் கற்பனை’ என்று தன்னுடைய எதிர் வாதத்தைத் தொடங்கினான்.
‘எட்ட இருந்துகொண்டு சமுதாயத்தைப் பார்த்தால் எல்லாம் கற்பனையாகத்தான் இருக்கும்’ என்று நான் சூடு கொடுத்தேன்.
‘நான் எழுத்தாளனல்ல, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க. எனக்கு வேறே வேலையிருக்கிறது’ என்றான்.

சமுதாயத்தை எட்ட இருந்துகொண்டு வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் தமழ்ஒளியின் சிறுகதைகள் சோகக் கற்பனைகளாகத் தோன்றலாம். ஆனால் அவை புனைவுகளற்ற முழு உண்மைகள். அச்சோகங்களைப் பதிவுசெய்வதும் தீர்வுகளை முன்மொழிவதும் படைப்பாளனின் தலையாய பணி என்பதையே தமிழ்ஒளி தம் சிறுகதைகளில் பிரகடனம் செய்கிறார்

காலவெள்ளத்தில் கரைந்துபோன தமிழ்ஒளியின் சிறுகதைகளை ஆய்வுப் பொருளாக்கி மறைக்கப்பட்டஃ மறுக்கப்பட்ட அவரின் படைப்பாளுமையை வெளிக் கொணர்கிறார் நூலாசிரியர். சிறுகதைகளின் வடிவ நேர்த்தியில் வெளிப்படும் படைப்பாளுமையை விட உணர்வு பூர்வமான உள்ளடகத்தால் வெளிப்படும் படைப்பாளுமையே சிறந்தது. அந்தவகையில் தமிழ்ஒளியின் சிறுகதைகள் மிகச் சிறந்த படைப்பாக விளங்குகின்றன என்பதே அவரது ஆய்வு நமக்குத் தரும் செய்தியாகும்.

நல்லதோர் ஆய்வுப்படைப்பை வழங்கியிருக்கும் நூலாசிரியர் செ.பவானியின் ஆய்வுப்பணியும் எழுத்துப்பணியும் தொடர வாழ்த்துக்கள்.


6-12-2010

1 comment:

முல்லை அமுதன் said...

nalla vimarsanam.
nadpudan.
mullaiamutha.