சனி, 15 ஜனவரி, 2011

பாவலரேறு பெருஞ்சித்தினரனார் வாழ்க்கைக் குறிப்புகள்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பாவலரேறு எனவும் பெருஞ்சித்திரனார் எனவும் போற்றி மதிக்கப்படும் இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்ற சிற்றூரில் 1933 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் நாளன்று பிறந்தார். இவரின் பெற்றோர் துரைசாமி -குஞ்சம்மாள் தம்பதியினர். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம். ஆனால் இவர் தம்முடைய தந்தையார் பெயரை இணைத்துத் துரை.மாணிக்கம் என்று தன்பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார்.

பள்ளிப் பருவத்தில் குழந்தை என்னும் பெயரில் கையெழுத்து இதழையும் சிறிது காலம் கழித்து அருணமணி என்னும் புனைபெயரில் மலர்க்காடு என்ற கையெழுத்து இதழையும் நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களைத் துரை.மாணிக்கம் தம் பள்ளிப் பருவத்திலேயே இயற்றினார். சேலம் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இவரின் தமிழாசிரியர்களாக அமைந்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் சேலம் நடேசனாரும் தமிழ்மறவர் பொன்னம்பலனாரும் ஆவர்.

1950 இல் பள்ளிப்படிப்பை முடித்த துரை. மாணிக்கம் சேலம் அரசுக் கல்லூரியில் தம் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இவரின் ஆசானாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைந்து சிறந்தது இக்கல்லூரியில்தான் என்பது மிக முகாமையான செய்தியாகும். கல்லூரியில் ஆசிரியர் மாணவர் என்ற நிலையில் தொடங்கிய இவர்களின் உறவு கடைசிவரை தொடர்ந்தது. கல்லூரிப் படிப்பிற்கு இடையிலேயே சேலம் ஆட்டையாம்பட்டி சின்னசாமி -செல்லம்மாள் இணையரின் புதல்வி கமலம் என்கிற தாமரையம்மையாரைக் காதலித்து மணம் புரிந்துகொண்டார். திருமண நாள் 25-4-1951.

1954 இல் அஞ்சல்துறை உதவியாளராகப் புதுவையில் பணியமர்த்தம் கிடைத்தது. பாவேந்தரோடு பழகக்கூடிய வாய்ப்பை எண்ணி மிக மகிழ்வோடு புதுவைப் பணியை ஏற்றார் பாவலரேறு. எதிர்பார்த்தது போல் பாவேந்தருடனான நட்பு கிட்டியது. பாவலரேறுவின் பாக்கள் பல இதழ்களிலும் வெளிவந்தன. 1959 இல் பாவலரேறு கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பாவலரேறுவின் அச்சிதழ் நடத்தும் நோக்கம் நிறைவேறும் தக்கசூழல் அமைந்தது கடலூரில்தான்.

பாவாணர் இக்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அகரமுதலிப் பணிப் பொறுப்பேற்றிருந்தார். பாவாணரின் வழிகாட்டுதலுடன் திங்கள் ஈரிதழாக 01-08-1959 இல் கடலூரிலிருந்து பாவலரேறுவின் தென்மொழி வெளிவரத் தொடங்கியது. துரை.மாணிக்கம் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் பொறுப்பாசிரியராகத் தென்மொழியில் இடம்பெற்றார். பதினாறு இதழ்கள் வெளிவந்த நிலையில் தொடர்ந்து இதழை நடத்தமுடியாமல் பொருள் முட்டுப்பாடு காரணமாக இதழ் நின்றுபோனது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1963 பிப்ரவரி முதல் மீண்டும் தென்மொழி புத்துயிர் பெற்றது. இதழின் சிறப்பாசிரியராகப் பாவாணர் இடம்பெற்றார். உறுப்பாசிரியர்களாக ம.லெனின் தங்கப்பா, மு.சாத்தையா, செம்பியன் ஆகியோர் குறிக்கப் பெற்றனர். தென்மொழி முன்னிலும் வீறுடன் மொழி, இன, நில விடுதலைக்கான சிந்தனைகளை ஆழமாகத் தமிழர் நெஞ்சில் விதைக்கத் தொடங்கியது. இந்நிலையில் 1965 இல் இந்தி வல்லாண்மை எதிர்ப்புப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இப்போராட்ட முனைப்புகளில் தென்மொழியின் பங்கு மிகக் கணிசமானது. போராட்டங்களின் உச்சத்தில் பெருஞ்சித்திரனார் தம் அஞ்சல்துறை அரசுப்பணியை உதறித்தள்ளினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டும் வகையில் எழுதிய காரணத்தால் தென்மொழி இதழின் பொறுப்பாசிரியரான பெருஞ்சித்திரனாரைக் கைதுசெய்து வேலூர் சிறையில் அடைத்தது தமிழக அரசு.

1966 இல் தென்மொழிக்கான சொந்த அச்சுக்கூடம் நிறுவப்பெற்றது. தமிழ்ச்சிட்டு எனும் சிறுவர் இதழ் பெருஞ்சித்திரனாரால் தொடங்கப்பெற்றது. 1968 இல் திருச்சியில் நடைபெற்ற தனித்தமிழ்க் கழக மாநாட்டின் போது உலகத் தமிழ்க் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தலைவராக மொழிஞாயிறு பாவாணர் அவர்களும் பொதுச் செயலராகப் பெருஞ்சித்திரனார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மொழிவளர்ச்சிப் பணிகளோடு நில்லாமல் நாட்டு விடுதலை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்ற முனைப்புடன் ஐயா அவர்கள் 1972 இல் திருச்சியில் தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு என்னும் பெயரில் தமிழக விடுதலை மாநாடு ஒன்றை நடத்தினார். இரண்டாவது தமிழக விடுதலை மாநாட்டினை 1973 இல் மதுரையில் நடத்த முற்பட்டபோது காவல்துறை பெருஞ்சித்தினாரைக் கைது செய்து சிறைப்படுத்தியது. 1974 இல் சிங்கை, மலேசியத் தமிழன்பர்களின் அழைப்பையேற்று ஐயா அவர்கள் மூன்று திங்கள் சிங்கப்பூர், மலேசியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்மொழி உணர்வினையும் இனவுணர்வினையும் ஊட்டும் பல பொழிவுகளை நிகழ்த்தித் தாயகம் திரும்பினார்கள்.

1974 இல் பாவலரேறுவின் குடும்பமும் தென்மொழி அச்சகமும் சென்னைக்கு இடம் பெயர்ந்தன. 1975 இல் மூன்றாவது தமிழக விடுதலை மாநாடு சென்னைக் கடற்கரையில் நடத்தத் திட்டமிடப்பட்டது. அரசு மாநாட்டை நடத்தவிடாமல் ஐயா மற்றும் முரசொலி அடியார் உள்ளிட்ட இருபத்திரண்டு தனித்தமிழ் மறவர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்தது. 1976 இல் நெருக்கடிக் கால அடக்குமுறைச் சட்டத்தின் கீழ்ப் பாவலரேறு ஐயா அவர்களைத் தளைசெய்து சிறையிலடைத்தது இந்திய நடுவணரசு. மிசா காலங்களில் தென்மொழி தடைசெய்யப்பட்ட போது ஐயாவின் தமிழ்ச்சிட்டு இதழே தென்மொழி இதழாக வெளிவந்தது. தமிழன்பர்களின் அழைப்பையேற்றுப் பாவலரேறு அவர்கள் 1977 இல் இலங்கைப் பயணத்தையும் 1978 இல் அந்தமான் செலவையும் மேற்கொண்டார்கள்.

தொடர்ந்து, ஐயா அவர்களின் தமிழ்ப்பணியோடு குமுகாயச் சீர்திருத்தப் பணிகளும் அரசியல் செயற்பாடுகளும் முடுக்கம் பெற்றன. 1981 இறுதியில் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பு நிறுவப்பெற்றது. இதன் தொடக்க மாநாடு சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் தமிழின உணர்வாளர்கள் பலர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். 1982 இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் இதழாகத் தமிழ்நிலம் தொடங்கப்பட்டது. 1983 -84 இல் தென்மொழி அன்பர் திரு. வளங்கோ அவர்களின் முன்முயற்சியில் பாவலரேறு அவர்கள் ஐரோப்பியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து, பிரான்சு, செருமனி, சுவிட்சர்லாந்து நாடுகளில் தமிழ்மொழி, இன உணர்வூட்டும் பொழிவுகளை ஆற்றித் தாயகம் திரும்பினார்கள். தொடர்ச்சியாக, தமிழ் மொழி, இன நலம் நாடும் அமைப்புகளெல்லாம் தத்தம் நிகழ்ச்சிகளில் பாவலரேறு அவர்களின் பங்கேற்பினை விழைந்தன. ஐயா அவர்களும் தமிழகமெங்கும் இடையறாது பயணம்செய்து சொற்பொழிவுகளாற்றித் தொடர்ந்து செயல்களத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

1983 இல் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போரின்போதும் அதற்கு முன்பும் தமிழகம் வரும் தமிழீழத் தலைவர்கள் பலரும் பாவலரேறு அவர்களைச் சந்திப்பதும் கலந்துரையாடுவதும் கருத்துரைகள் பெறுவதும் வழக்கமாயிருந்தன. விடுதலைப் புலிகள், தமிழீழப் போரில் முனைப்புடன் வினையாற்றிக் கொண்டிருந்த காலங்களில் பாவலரேறு ஐயா அவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதும் எழுதுவதும் காலத்தின் கடமை என்பதனை உணர்ந்து செயலாற்றிக் கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராசீவ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழ ஆதரவுக் குரல்களுக்கு இந்திய அரசு தடைவிதித்தது. விடுதலைப் புலிகள் இயக்கமும் தடை செய்யப்பட்டது. ஐயா அவர்கள் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து எழுதியும் பேசியும் வந்தார்கள். 1993 இல் தமிழீழ ஆதரவுப் பேரணி நடத்தத் திட்டமிட்டதாலும் தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையைத் தென்மொழியில் தொடர்ந்து எழுதியதாலும் ஐயா பாவலரேறு அவர்களைத் தடா எனும் அடக்குமுறைச் சட்டத்தின்படி கைதுசெய்து கொடுஞ்சிறையிலடைத்தது தமிழக அரசு. தடாச் சிறைக் கொடுமைகளால்; ஐயாவின் உடல்நலம் நலிவுற்றது.

ஏழுமாத கால தடாக் கொடுஞ்சிறை வாசத்தின் பின்னர் ஐயா அவர்களின் உடல் நலிவுற்றாலும் உள்ளம் முன்னிலும் பலமடங்கு வீறுகொண்டெழுந்தது. தொடர்ந்து போராட்டங்கள், சிறைவாழ்க்கை என ஐயாவின் செயல்களங்கள் விரிந்தன.
1995 மார்ச் திங்களில் உடுமலைப்பேட்டை, ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் பங்கேற்கப் புறப்பட்ட ஐயா உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை திரும்பினார். தொடர்ந்து காய்ச்சலில் துன்புற்ற நிலையிலும், தமிழே பயிற்றுமொழி, ஆட்சிமொழி என்பதை வலியுறுத்தித் தலைநகர்த் தமிழ்க்கழகம் நடத்திய பேரணியில் குடும்பத்தோடு பாவலரேறு ஐயா அவர்கள் கலந்துகொண்டு தளைப்பட்டார்கள். ஐயா அவர்கள் பங்கேற்ற இறுதிப் போராட்டம் இதுவே.

பின்னர் 7-6-95 இல் இராமச்சந்திரா மருத்துவமனையில் உடலநலக் குறைவு காரணமாக மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதிப்பட்டிருந்த ஐயா அவர்களின் குருதி அழுத்தம் குறைந்து சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் 11-6-1995 ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணியளவில் பாவலரேறு ஐயா இயற்கை எய்தினார்கள். உலகத் தமிழர்களின் உரிமைக்குச் செயலாற்றும் ஒப்பற்ற ஒரு போராளி மறைந்தார். 16-6-1995 அன்று ஐயா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட உலகத் தமிழன்பர்கள் கலந்துகொண்டு தமிழின விடியலுக்கான வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...