Sunday, January 23, 2011

பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இயக்கம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தென்மொழி இயக்கம்:

பெருஞ்சித்திரனாரின் தமிழ் இயக்க மற்றும் அரசியல் பணியில் பெரும் பங்காற்றியது அவரின் தென்மொழி இதழே. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழன்பர்களின் போர்வாளாக இவ்விதழ் விளங்கியது. முதல் இதழ் 1-8-1959 இல் வெளியானது. இதழின் குறிக்கோள் முழக்கமாகப் பின்வரும் பாடல் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறுவது வழக்கம்.

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை! புவியில் எவரும் எதிர் நின்றே!


தென்மொழி இதழ் தன் குறிக்கோளில் ஒருபோதும் பின்வாங்கியதும் இல்லை, சமரசம் செய்து கொண்டதுமில்லை. தென்மொழி ஓர் இதழன்று, ஓர் இயக்கம் என்று பாவலரேறு அவர்களே குறிப்பிட்டதற்கேற்ப இதழின் கட்டுரைகளில் பாடல்களில் எப்பொழுதும் தமிழுணர்வு கொழுந்து விட்டெரியும்.

1960 களின் தொடக்கத்தில் தென்மொழி முழுவீச்சில் செயல்படத் தொடங்கிய காலத்தில் தமிழின உணர்வுடைய ஒவ்வொரு தமிழனும் தென்மொழியை வாசிப்பதில் செம்மாப்பு எய்திய நிலை இருந்தது. தமிழுணர்வின் அடையாளச் சின்னமாகத் தென்மொழி அக்காலங்களில் விளங்கியது. பாவாணர், பாவலரேறு ஆகியோரின் படைப்புகள் தனித்தமிழ் உணர்வை ஊட்டியதோடு நில்லாமல் மொழி, இன, நில மீட்சிக்கான எழுச்சியை விதைப்பனவாகவும் விளங்கின. 1965 இல் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இந்தி எதிர்ப்பு மொழிப்போர் நடைபெற்றது. இம்மொழிப் போருக்கான உந்துசக்தியாக இருந்து செயலாற்றிய பெருமை தென்மொழிக்கு உண்டு.

தென்மொழியின் மைய நோக்கம் தமிழ்நாட்டு விடுதலையே என்பதனை அதன் ஒவ்வொரு இதழும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும். தென்மொழி இரண்டாமாண்டின் முதல் இதழில் தென்மொழியின் இம்மைய நோக்கத்தை வலியுறுத்தி ஐயா எழுதிய ஆசிரிய உரையின் ஒருபகுதி பின் வருமாறு,

நாட்டு விடுதலை நோக்கி நாம் வைத்த வலக்காலை எக்காரணம் பற்றியும் பின்னிழுக்க மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஏதம் படுப்பாரை என்னவழி முயன்றேனும் சேதப்படுத்துவோம். இஃது உறுதி! பனிமலை அன்ன உறுதி! அரசினுக்கும் ஆளுமைக்கும் அஞ்சி, நம் முரசம் என்றும் தன் முழக்கை நிறுத்தாது. வாழ்க்கைக்கும் இன்பத்துக்கும் கெஞ்சி நாம் என்றும் நம் குரலில் குழைவைக் காட்டோம்! உயிர்மேல் நமக்கு உவப்பில்லை! செல்வ நிலைக்கு நாம் என்றும் அங்காந்ததில்லை! நாம் பிறந்த நாட்டுக்கும் மொழிக்கும் நமக்கிருக்கும் உடலும் உழைப்பும் செலவிடப்பெறும்.! ..இவற்றுக்கெல்லாம் படைக்கருவியாகத் தொடங்கியதே, தென்மொழி (சுவடி:2, ஓலை:1, ஆசிரிய உரை)

ஆசிரிய உரையில் ஐயா குறிப்பிட்டது போல் தென்மொழி கடைசிவரை தமிழ்நாட்டு விடுதலைக்கான போர்ப்படையாக விளங்கியது என்பதனையும் உயிர்மேல் நமக்கு உவப்பில்லை! செல்வ நிலைக்கு நாம் என்றும் அங்காந்ததில்லை! என்ற வரிகளுக்கு உண்மையாக ஐயாவின் முழுவாழ்க்கையும் அப்பழுக்கற்றதாக விளங்கியது என்பதனையும் காலம் மெய்ப்பித்தது.

தென்மொழி இயக்கத்துக்கு மூன்று நோக்கங்கள் உண்டு. தூய தமிழ் வளர்ச்சி, தமிழின அடிமை நீக்க முயற்சி, தமிழக விடுதலை என்பார் பாவலரேறு. இந்த மூன்று நோக்கங்களும் தமிழக விடுதலை என்ற ஒற்றை இலக்கில் மையம் கொண்டுள்ளன என்பதைத் தருக்க முறையில் விளக்கிச் சொல்லும் ஐயாவின் அரசியல் தெளிவு நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

இந்தியா ஒன்றாக இருக்கும்வரை இந்துமதம் இருக்கும். இந்துமதம் இருக்கும்வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும்வரை மதப்பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையிலிருந்தும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை தமிழ்மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது, தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது எனவே இந்து மதத்தினின்றும் மதப் பூசல்களினின்றும் ஆரியப் பார்ப்பனியதினின்றும் விடுபட வேண்டுமானால் நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.
(பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு மலர், ப.105)

தமிழகத்தில் கடந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய தனித் தமிழியக்கம், திராவிட இயக்கம் முதலான இயக்கங்கள் மொழித் தூய்மையையும் ஆரிய மேலாதிக்க எதிர்ப்பையும் இருவேறு முரண்பட்ட நிலைகளில் சிந்தித்து மயங்கிக் கிடந்த சூழலில் பாவலரேறுவின் தென்மொழி இயக்கம் இந்த இரண்டு முரண்பட்ட இயக்கச் சிந்தனைகளையும் ஒன்றாக இணைத்துத் தமிழக விடுதலையால் அவை முழுமைபெறும் என்பதனை மெய்ப்பித்துக் காட்டியது. தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று எழுதியது பேசியதோடு மட்டும் நில்லாமல் எள்ளளவும் தம் கொள்கையிலிருந்து பிறழாமல் அடக்குமுறைகள் எத்தகு கொடியதாக இருந்தபோதும் தனியனாக நெடுவழி நடந்தவர் ஐயா அவர்கள். அவரின் போராட்ட வாழ்க்கையில் இறுதி மூச்சுவரை கொடுஞ்சிறைக்கும் அஞ்சாமல் தொடர்ந்து செயலாற்றிய காரணத்தால் சிறைவாழ்க்கை அவருக்குப் பூந்தோட்டமாயிற்று.

No comments: