ஊடக அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடக அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 மே, 2020

ஊடக விளம்பரங்களும் நுகர்வுப் பண்பாடும்


முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8


நுகர்வுப் பண்பாடு என்பது மேலும் மேலும் கூடுதலான அளவில் பொருள் மற்றும் சேவைகளை நுகர்வதை மிகுவிக்கச் செய்யும் பொருளாதாரம் சார்ந்த ஒரு வாழ்வியல்  முறைமை ஆகும். ஒரு நாட்டின் பொருளாதார நலன் அந்நாட்டு மக்களின் நுகர்வுப் பண்பாட்டை நம்பியே உள்ளது என்ற கருத்தாக்கம் சந்தைப் பொருளாதாரத்தின் தாரக மந்திரமாகும்.
நுகர்வுப் பண்பாடு, தேவைக்கும் /தேவைக்கு அதிகமாகவும் பொருள் மற்றும் சேவைகளை நுகர்வதை நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு, தொழில் உற்பத்தித் துறை, சேவை மையத் தொழில் வாய்ப்புகள், விளம்பரங்கள், ஊடகங்கள் இவற்றின் ஊடாகச் சாத்தியப்படுத்துகின்றன. தொழில் புரட்சிக்குப் பிந்தைய உற்பத்திப் பெருக்கத்திற்கும் பெரு முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பின் ஆக்கத்திற்கும் நுகர்வுப் பண்பாடே உந்துசக்தியாக விளங்குகின்றது.
தனிமனித மதிப்பீடுகள் தொடங்கி சமூகத்தில் மனிதர்களின் அல்து குடும்பத்தின் அடையாளம் எனப் பல தளங்களில் நுகர்வுப் பண்பாடு தன் வீச்சினை வெளிப்படுத்தி நிற்கின்றது. ஒருவரின் வெற்றியும் மகிழ்ச்சியும் அவர் எவ்வளவு பொருட்களை வாங்கிக் குவிக்கிறார் எவ்வளவு சேவைகளை நுகர்கிறார் என் மதிப்பீட்டில் பெரிதும் தங்கி இருக்கின்றன. ஒருவரின் அடையாளம் அவர் இல்லத்தில் நிறைந்து கிடக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், தொலைக்காட்சிப் பெட்டி, ஹோம் தியேட்டர், குளிர்சாதனப் பெட்டி, கார், மோட்டார் சைக்கிள், கணினி, செல்போன் முதலான நுகர்பொருட்களிலும் சுற்றுலா, அயல்நாட்டுப் பயணம் முதலான விடுமுறைக் கொண்டாட்டங்களிலும் காதுகுத்து, மஞ்சள் நீர், திருமணம், வளைகாப்பு முதலான இல்லத்தின் விழா ஆடம்பரங்களிலுமே பெரிதும் தங்கி இருக்கிறது என நாம் நம்புகிறோம். இவை அனைத்துமே பொருள் மற்றும் சேவை நுகர்வோடு தொடர்புடையன என்பதனை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இத்தகைய நுகர்வுப் பண்பாடே சமூகத்தின் முதன்மைப் பண்பாடாக மாறியிருக்கிறது.
நுகர்வுப் பண்பாடு பொதுவாக ஒரு சமூகத்தின் கூட்டு உற்பத்தித் திறனையும் தனிமனிதர்களின் உற்பத்தி மற்றும் பணித் திறன்களையும் தேவையற்றனவாக மாற்றி இல்லங்களை நுகர்வு முனையங்களாக மாற்றுகிறது. இல்லம் சார்ந்த சமையல், தைத்தல், துணி துவைத்தல், விளையாட்டுக்கள், குழந்தை வளர்ப்பு, கல்வி, வீட்டுத் தோட்டம், கைத்தொழில்கள், வீட்டு மருத்துவம் போன்றவை கொஞ்சம் கொஞ்சமாகக் காலாவதியாகி வழக்கொழிந்து போவதும் எதையும் எப்பொழுதும் பொருளாயினும் சேவையாயினும் விலைகொடுத்து வாங்கிவிட முடியும் என்ற மனப்பாங்கு மேலோங்குவதும் இதன் வெளிப்பாடே ஆகும். மேலும் விலைகொடுத்து வெளியில் இருந்து எதையும் வாங்கிக் கொள்வது இலகுவானதாகவும் நேரச் சேமிப்பாகவும் கருதப்படுகின்றது.
நுகர்வுப் பண்பாடும் மத்தியதர வர்க்கமும்:
பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வியல் தேவைகள் மிக எளிமையானவை. உணவு, உடை, இருப்பிடம், உடல்நலம் மற்றும் எளிமையான பொழுதுபோக்கு சார்ந்த அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்து கொள்வதிலேயே அவர்கள் முழுநிறைவு அடைந்து விடுகின்றனர். பெரும்பாலும் உள்ளூரில் தயாராகிக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
பொருளாதார நிலையில் மிக வளவான வாழ்க்கை வாழும் உயர்குடி மக்களின் நிலைமை வேறு. அவர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளை நுகர்வதற்குப் பதிலாக விருப்பம் அல்லது ஆசையின் அடிப்படையில் பொருட்களை வாங்கிக் குவிக்க முற்படுகிறார்கள். இதில் சமூக அந்தஸ்து முதன்மை இடத்தைப் பிடிக்கின்றது.
பொருளாதார நிலையில் இடைத்தரத்தில் உள்ள மத்தியதரக் குடும்பங்களின் நிலைதான் மிகவும் சிக்கலானது. தேவைகளுக்கும் ஆசைக்கும் இடையில் உழல்பவர்கள் இவர்கள். இவர்களின் ஆசைகள் திடீர் ஆசைகளாக மட்டுமல்லாமல் நீண்டநாள் ஆசைகளாகவும் தொடர்கின்றன. வருவாய் – சேமிப்பு – தேவை - பொருள் நுகர்வு என்ற இயல்பான வரிசையில் இவர்களின் நுகர்வு வாழ்க்கை அமையும்வரை சிக்கல்கள் ஏதுமில்லை. மாறாக வருவாய் – நீண்டநாள் ஆசை – கடன் – தவணைமுறை – பொருள் நுகர்வு என இன்றைய மத்திரதரக் குடும்பங்களின் நுகர்வு வாழ்க்கை முன்பின்னாக நெளிந்து கிடக்கின்றது. பொருட்களை வாங்கிக் குவிப்பதின் பின்னணியில் தனிமனித அல்லது குடும்பத்தின் மகிழ்ச்சி என்பதனைக் காட்டிலும் தம்மைச் சுற்றியுள்ளவர்களின் மத்தியில் தமது அந்தஸ்தை நிலைநாட்டும் ஒருவகைப் பதட்டமே இவர்களிடம் மேலோங்கியுள்ளது. குறிப்பிட்ட பொருளைப் வாங்காமல் போனால் மற்றவர் முன்னால் எங்கே நாம் தரம் தாழ்ந்துபோய் விடுவோமோ என்ற தாழ்வுணர்ச்சியே பொருட்களை வாங்கு! வாங்கு! எப்படியாவது வாங்கு! கடன் பட்டாவது வாங்கு எனத் தூண்டுகிறது.
ஊடகங்களும் விளம்பரங்களும்:
இன்றைய உலகம் ஊடக உலகம். இந்த ஊடக உலகின் மிகப் பெரிய பலமும் பலஹீனமும் விளம்பரங்கள்தாம். குறிப்பாக அச்சு ஊடகங்களும் மின் ஊடகங்களும் விளம்பரங்கள் இல்லையென்றால் இயங்கவே முடியாது என்று சொல்லுமளவிற்கு விளம்பரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒருவகையில் இந்த ஊடகங்களின் வாழ்வாதாரமே விளம்பரங்களை நம்பித்தான் உள்ளன. பொருளாதார ரீதியில் விளம்பரங்களைச் சார்ந்தே ஊடகங்கள் இயங்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் ஊடகங்கங்களால் விளம்பரங்கள் உயிர்வாழும் நிலைமை தலைகீழாகி விளம்பரங்களால் ஊடகங்கள் உயிர்வாழ்கின்றன. விளம்பரங்களின் இந்த அதீத பலத்திற்கு ஆதாரம் விளம்பரங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் நுகர்வுப் பண்பாடே.. தம்மால் உருவாக்கப்படும் நுகர்வுப் பண்பாட்டால் கொழுக்கும் இவ்விளம்பரங்கள் தமக்கு இடமளிக்கும் ஊடகங்களையும் தின்று கொழுத்து அசுர வளர்ச்சி பெற்றுவருகின்றன.
ஊடகங்கள் பணக்கார மேட்டுக்குடி மக்களின் ஆடம்பரப் பொருட்களை, இன்றைய வாழ்வின் அத்தியாவசியத் தேவையாக விளம்பரப்படுத்தி அப்பொருட்களை வாங்குமாறு உழைக்கும் எளிய மக்களைத் தூண்டுகிறது. இதன் மூலம் பொருட்களுக்கான செயற்கையானத் தேவையை உலகமயம் தானே வலிந்து உருவாக்குகின்றது. அது மட்டுமல்லாமல் நாட்டு எல்லைகளைக் கடந்து ஆதிக்கம் செலுத்தும் பெரும் நிதி மூலதனத்துடன் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் தான் உலகத்தரமானவை என்றும் அந்தந்த மண்ணில் அம்மண்ணின் மக்களே தங்களின் பாரம்பரிய முறைகளைக் கையாண்டு தயாரிக்கும் பொருட்கள் தரமற்றவை என்றும் உலகமயம் தானே உருவாக்கி வைத்திருக்கிற சில தர நிர்ணய அமைப்புகளைக் கொண்டு பரப்புரையும் மேற்கொள்கிறது. மக்களிடம் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நுகர்வு வெறியைக் கட்டமைக்கும் ஊடகங்கள் பணமே உலகம், பணம் இருந்தால் உலகத்தில் எதையும் வாங்கலாம் என்ற நுகர்வுப் பண்பாட்டு உளநிலையில் மக்களை மனங்களைக் கட்டமைக்கிறது.
ஊடகம், விளம்பரம், நுகர்வோர்:
ஊடகங்கள் செயல்படப் பணம் தேவை. மாறிவரும் இன்றைய ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சிச் சூழலில் ஊடகங்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுப் போட்டிகளைச் சமாளித்து வாசகர்கள்/ நேயர்கள்/ பார்வையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் பணம் தேவை. ஊடகங்கள் தயாரிப்புச் செலவைச் சமாளித்து அதனை நுகர்வோர் மேல் திணிக்காமல் நிலைத்து இயங்க வேண்டுமென்றால் பணம் தேவை. இந்நிலையில் ஊடகங்கள் நம்பியிருப்பதும் சார்ந்திருப்பதும் விளம்பரங்களைத்தாம். இந்த விளம்பரங்களை ஊடகங்களுக்கு வழங்குபவை பன்னாட்டு, உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களே. எனவே திட்டமிட்டோ திட்டமிடாமலோ இந்தத் தொழில் நிறுவனங்கள் ஊடகங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிறது. விளைவு, தொழில் நிறுவனங்களின் அதாவது வெளிநாட்டு, உள்நாட்டு, பன்னாட்டுத் தொழிலதிபர்களின் நலம் நாடுவதே ஊடகங்களின் பணியாகிறது. தொழிலதிபர்களின் நலன், பொருள் உற்;பத்திவிற்பனைஇலாபம் - கொள்ளை என்ற நுகர்வுப் பண்பாட்டுப் பெருக்கத்தில் உள்ளது. ஊடக விளம்பரங்கள் இந்த மகத்தான பணியைத்தான் மிகநுட்பமாகச் செயல்படுத்துகின்றன. இத்தகு நுகர்வோர் பண்பாட்டுக்கான இலக்கு உயர்மத்தியத் தர வகுப்பினர்களே. இவர்களே ஊடகங்களின் பெரும்பான்மை வாசகர்கள்/ பார்வையாளர்கள். மிக எளிதில் வாழ்க்கை மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளும் நெகிழ்ச்சிப் போக்காளர்களும் இவர்களே. உயர்மத்தியத் தர வகுப்பினர்களை நம்பித்தான் ஊடகம், விளம்பரம், நுகர்வோர் பண்பாடு, பொருளுற்பத்தி, விற்பனை, இலாபம், பணப் புழக்கம், முதலாளிகளின் நலன் என்ற சுழற்சிச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கின்றது.
நுகர்வுப் பண்பாடு:
பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பே நுகர்வுப் பண்பாட்டின் அடையாளம். நமக்கு எது எது தேவை? எவையெவை தேவையில்லை என்ற தெளிவில்லாமல், விளம்பரம் செய்யப்படும் அனைத்துமே நமக்குத் தேவை என்று எண்ணும் ஆசை மனம். இன்றைக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் அனைத்துப் பொருட்களுமே மக்களின் தேவை கருதி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நினைப்பது சரியல்ல. மாறாக உற்பத்தி செய்யப்பட்டு அங்காடிக்கு வந்துள்ள பொருட்களின் அடிப்படையிலேயே நம்முடைய தேவைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. சான்றாக, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் என்ற அறிமுகத்தோடு பாட்டிலில் அடைத்து ஒரு லிட்டர் 15 ரூபாய் வரை விற்கப்படும் மினரல் வாட்டர். இன்று மினரல் வாட்டர் குடிப்பதே பாதுகாப்பானது, ஆரோக்கியமானது என்பதே பொது நியதி ஆக்கப்பட்டு விட்டது. பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் பாதுகாப்பானதா? ஆரோக்கியமானதா? என்றால் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். அது ஒரு புறமிருக்கட்டும். மினரல் வாட்டர் பாட்டில்கள் மக்களின் தேவை கருதி உருவாக்கப்பட்டதா? அல்லது உற்பத்தியாகி விற்பனைக்கு வந்தபிறகு நம்முடைய தேவை நிர்ணயிக்க அல்லது நிர்பந்திக்கப்பட்டதா? என்று பார்த்தால் உற்பத்தி, விற்பனை, விளம்பரம் என்ற தொடர்ச்சியிலேயே அவை நம்மீது திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. நுகர்வோர் மனதில் தூய்மை, சுகாதாரம், ஆரோக்கியம் என்று கட்டப்பட்ட புனைவுகள் நுகர்வுப் பண்பாட்டின் பண்பு.
நுகர்வுப் பண்பாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தைவிட அதன் வடிவமைப்பு, பேக்கிங், மிகுத்துச் சொல்லப்படும் வாக்குறுதிகள், விளம்பரப்படுத்தும் பிரபலம் இவைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகர் நடிகைகளும் தோன்றி விளம்பரம் செய்யும் பொருள்கள் அதிகம் விற்பனைகின்றன. தரமான பொருள்களுக்குத்தான் அவர்கள் விளம்பரம் செய்வார்கள் என்பதா உண்மை? எந்த நிறுவனம் அதிகக் கோடிகளைக் கூலியாகத் தருகிறதோ அந்த நிறுவனப் பொருள்களைத் தானே அவர்கள் விளம்பரம் செய்வர். இதை நாம் தெரிந்திருந்தும் உணராமலிருக்கிறோமே அதுதான் நுகர்வுப் பண்பாட்டின் பண்பு.
சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது? எது வாங்கினால் எது இலவசம்? எந்தப் பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி? முதலான நுகர்வுப் பண்பாட்டுத் தகவல்களை ஊடகங்கள் நம்மீது வாரி இறைக்கின்றன. அந்தத் தகவல்களைச் சுமந்து கொண்டுதான் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உலகைப் பார்க்கிறார்கள். புதிதாகச் சந்தையில் அறிமுகமாகும் பொருள்கள், முன்பே அறிமுகமான பொருள்களுக்கான புதிய மாடல்கள், மேம்படுத்தப்பட்டதாக வாக்குறுதியளிக்கப் பட்ட பழைய பொருள்கள் போன்றவை விளம்பரப் படுத்தப்படும்போது நுகர்வோரிடத்தில் ஒருவகைப் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. புதியதை வாங்கும்வரை சமூக அந்தஸ்தில் பிறருக்குப் பின்தங்கி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சிக்கு நுகர்வோர் ஆளாகிவிடுகின்றனர். பொருள்களை வாங்கும் ஆசையிருந்தும் வாங்க வசதியில்லாதவர்கள் ஒருவிதமான தாழ்வுணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தேவை, ஆசை இரண்டும் சமனற்ற முரணிலேயே வாழ்க்கையைப் நிறுத்திவைக்கிறது நுகர்வுக் கலாச்சாரம். உண்மையில் விளம்பரங்கள் முன்னிறுத்தும் மகிழ்ச்சியான குடும்பம் என்பது ஒரு கற்பனையே.
விளம்பரங்கள் நுகர்வோரிடம் எதை விற்கின்றன?
நாம் தினம் காலையில் ஏதோ ஒரு பிரஷ்ஷால் ஏதோ ஒரு பற்பசை கொண்டு பல் துலக்குகிறோம். ஏன்? எங்கே போயின நம் பல் குச்சிகள்! குளிக்கும்போது தலையைச் சுத்தம் செய்ய ஏதோ ஒரு ஷாம்புவைக் கொண்டு குளிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் சீகைக்காய்!. தாகமாயிருக்கிறதா? ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனக் குளிர்பானத்தைக் குடிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் நீராகாரமும், இளநீரும்! இப்படியே காப்பி, டீ, பூஸ்ட் இன்னும் எத்தனை எத்தனையோ! இவையெல்லாம் நம் வாழ்வின் அங்கங்கள் ஆயினமை எப்படி?
ஒரு குறிப்பிட்ட பற்பசையைப் பயன்படுத்தச் சொல்லி விளம்பரப் படுத்தியது விளம்பரம். ஆனால் நமது மரபான பல்துலக்கும் பழக்கத்திலிருந்து நம்மைப் பற்பசைகளுக்கும் பிரஷ்களுக்கும் மாற்றிய மனோநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள். குறிப்பிட்ட ஷாம்புவை விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் ஏதேனும் ஒரு ஷாம்பு போட்டுத்தான் தலைக்குக் குளிக்க வேண்டும் என்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள். அதேபோல் ஒரு குறிப்பிட்ட டீ யைக் குடிக்கச் சொல்லி விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் டீயோ, காப்பியோ ஏதோ ஒன்றைக் குடித்தே தீரவேண்டுமென்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள்.
உடல் நலமில்லாத ஒருவரைப் பார்க்கச் செல்லும் பலர் ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்கின்றனர். ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்லும்படி பிறரால் அறிவுறுத்தப்படுகின்றனர். நோயாளிக்குப் பிறர் ஹார்லிக்ஸ் குடிக்க ஆலோசனை கூறுகிறார்கள். இதெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று? இனிப்பு கலந்த சோளமாவு, ஊட்டச் சத்துமிக்க பானமானது எப்படி? விளம்பரம் செய்த விந்தை இது. ஆழ்மனம் வரை ஊடுருவிச் சென்று அரியாசனமிட்டு அமர்ந்துகொண்டன விளம்பரங்கள் விற்பனை செய்த கருத்தாக்கங்கள்
நுகர்வோருக்கு விளம்பரங்கள் தரும் இலவசம்:
விளம்பரங்களின் முழுமையான அரசியல் அது செய்யும் விளம்பரங்களில் இல்லை. மாறாக விளம்பரங்கள் விற்பனை செய்யும் நுகர்வோர் பண்பாட்டு மனோநிலையில்தான் உள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய மக்கள் தொகையில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்நாட்டில் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும் மக்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல். இந்தியர்களில் பலருக்கு மூன்றுவேளை உணவு என்பதே பெருங்கனவு. அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், இருப்பிடம், உணவு, உடை போன்றவைகள் இன்னும் இந்தியர்களுக்கு முழுமையாகக் கிடைத்து விடவில்லை. 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியத் திருநாட்டின் யதார்த்த நிலைமை இப்படியிருக்க, நம் ஊடக விளம்பரங்கள் சித்தரித்துக் காட்டும் வாழ்க்கை உண்மையில் யாருடைய வாழ்க்கை?
விளம்பரங்கள் உருவாக்கும் கனவு வாழ்க்கையும் மேற்கத்திய கருத்தாக்கங்களும், போலியான மதிப்பீடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகு புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும் நுகர்வோராகிய நம் மனதில் ஆழப்பதிந்து பல்வேறு உளச் சிக்கல்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் நம்மை ஆளாக்குகின்றன. இந்தப் புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும்தாம் விளம்பரங்கள் நமக்கு இலவசமாய் வழங்கியவை.
இந்த இலவசங்களில் முக்கியமானவை பாலியில் சார்ந்த மதிப்பீடுகள். அழகு, கவர்ச்சி குறித்த புதிய சித்தாந்தங்கள். சிவப்பாயிருப்பதும், ஸ்லிம் என்ற மெல்லிய தேகமும், நீண்ட அடர்த்;தியான பட்டுப்போன்ற கூந்தலுமே அழகு. தமிழகத்தில் சிவப்பழகுக் கிரீமைத் தெரிந்துகொள்ளாதவர் அபூர்வம். இந்த அழகுகள் எல்லாம் ஓரிரு நாட்களில் ஒரு பாக்கெட் கிரீம், ஷாம்பு போன்றவைகளால் சாத்தியமாகும் என நம்பவைக்கின்றன விளம்பரங்கள். இத்தகு விளம்பரங்கள் பொருளை மட்டும் விற்கவில்லை. அழகு குறித்த புதிய சித்தாந்தங்களையும் விற்கின்றன. முழுக்க முழுக்க உடலுழைப்பு சார்ந்த, அழுக்கும் வியர்வையும் கொண்ட உண்மையான இந்தியக் கிராமியப் பெண்களுக்கும் இவ்வகை விளம்பரங்களுக்கும் உள்ள முரணை உணர்ந்தால் விளம்பரங்களின் அரசியல் புரியும்.
ஆண்களின் சாதனையே பெண்களை வசீகரிப்பதில்தான் உள்ளது என்பதாக விளம்பரங்கள் சித்தரிக்கின்றன. குறிப்பிட்ட ஷேவிங் கிரீம், ஜட்டி, வாசனை திரவியங்கள், பற்பசை போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆடவர்களைப் பெண்கள் மொய்த்துக் கொள்வார்கள், விரும்புவார்கள், உடன்படுவார்கள் என்பதாக விளம்பரங்கள் சொல்கின்றன. ஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் இவ்வகை விளம்பரங்கள் பெண்களைக் கொச்சைப் படுத்துவதோடு பாலியல் ஈர்ப்பு குறித்த பிழையான மதிப்பீடுகளையும் நம்மிடம் திணிக்கின்றன.
விளம்பரங்கள் பாலியல் ரீதியில் எவ்வளவுதான் புதிய கருத்தாக்கங்களோடும் மேற்கத்திய மதிப்பீடுகளோடும் படைக்கப்பட்டாலும் பெண் குறித்த நமது பழைய சித்தாந்தங்களை விளம்பரங்கள் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. நமது விளம்பரங்களில் பெண்கள் எப்போதும் துணிதுவைத்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து, நாப்கின் தேர்ந்தெடுத்து, அலங்கரித்துக் கொண்டு, கணவன் மெச்ச வாழ்கிறார்கள். ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வையில் பெண் ஒரு அழகுப்பதுமை, சுகம் தரும் கவர்ச்சிப் பொருள் மற்றொரு கோணத்தில் சேவை செய்யும் அடிமை, பணிப்பெண் என்பதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய விளம்பரங்களும் பழைய சித்தாந்தங்களை மீறாமல் கட்டிக் காப்பாற்றுகின்றன.
முடிப்பாக:
130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியநாடு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய சந்தை. முயற்சி செய்தால் இந்தியர்களிடம் எதையும் விற்கலாம் என்பதைப் பொருள் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் கண்டுகொண்டார்கள். இல்லையென்றால் அதிகத் தூசு, புழுதிக்கு வாய்ப்பில்லாத குளிர் நாடுகளில் மட்டுமே செல்லுபடியாகும் வாக்குவம் கிளீனர்களை இந்தியா போன்ற அதிகத் தூசு, புழுதி மண்டிய வெப்பமண்டல நாட்டில் விற்க முடியுமா? முடிகிறதே! உங்க வீட்டில் டேபிள் மேட் இல்லையா? உடனே இந்த்த் தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்க என்று கேட்டு கேட்டு எதையும் விற்கமுடிகிறதே! ஆமேசான் காடுகளில் கிடைக்கும் அரியவகை மூலிகை எது என்று சொல்லாமலே முடி வளர்க்கும் தைலத்தை எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் விற்க முடிகிறதே! சக்திவாய்ந்த விளம்பரத்தின் மூலம் இந்திய நுகர்வோரிடம் எதையும் விற்க முடியும் என்பதுதானே இதன் பொருள்.
விளம்பரங்கள் நமக்கு எதிரிகள் இல்லை. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் விளம்பர வருவாய் மட்டும் இல்லையென்றால் ஊடகங்கள் இத்தனை மலிவாக நமக்குக் கிடைக்க வழியில்லை. பத்திரிக்கைகள் 1 ரூபாய், 2 ரூபாய்க்குக் கிடைப்பதும், 24 மணி நேரமும் தொடர்ந்து பல பண்பலை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசிப்பதும் 100 ரூபாய் செலவில் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேனல்களைக் கண்டு களிப்பதும் விளம்பரங்களால் மட்டுமே சாத்தியமாயிருப்பது உண்மை. சந்தையில் வந்து குவியும் பொருட்களைத் தெரிந்து கொள்ளவும் தேர்ந்தெடுக்கவும் விளம்பரங்களே நமக்கு உற்றதுணை. என்றாலும் விளம்பரங்களிடத்தில் நாம் எப்பொழுதும் விழிப்பாயிருக்க வேண்டும். பொருட்களைப் போலவே வாழ்க்கையையும் வாங்கிவிடலாம் என்று நுகர்வோரிடம் விளம்பரங்கள் சொல்லாமல் சொல்கின்றன. நம் வாழ்க்கை நமக்கானது, அதை ஒருபோதும் விலைகொடுத்து வாங்கமுடியாது.
nagailango@gmail.com

வியாழன், 6 பிப்ரவரி, 2014

என்கவுண்டர்களில் மடியும் மனித உரிமைகள்



ஊடக அரசியலை முன்வைத்து..
முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8
மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் ஆகும். இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமுகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமானவைகளாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், நாம் அழைக்கின்றோம்.
மனித உரிமைகள் என்பன யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டனவுமல்ல. எனவேதான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றன. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.
ஐ.நா. பொதுச்சபை 10-12-1948 அன்று மனித உரிமைகள் பற்றிய சர்வ தேசியப் பிரகடனத்தை நிறைவேற்றி வெளியிட்டது. அதில் விவரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பட்டியல், ‘எல்லா நாடுகளுக்கும் எல்லா மனிதருக்கும் பொதுவான மனித உரிமையின் எட்டப்பட வேண்டிய இலக்கினைக் குறிப்பிடுகின்றது. இப்பிரகடனத்தின் உலகளாவிய சரித்திரப் புகழ் காரணமாகவே அவ்வறிக்கை வெளியிடப்பட்ட டிசம்பர் 10 ஆம் நாளை நாம் உலக மனித உரிமைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
ஐ.நா. பொதுச்சபையின் சர்வ தேசியப் பிரகடனம் வழங்கும் மனித உரிமைகள் அனைத்துமே சமமான முக்கியத்துவம் உடையவை. அவ்வுரிமைகளில் எவ்வகைப்பட்ட ஏறு வரிசைகளோ இறங்கு வரிசைகளோ கிடையா. மேலும் ஐ.நா. பிரகடனம் மனித உரிமைகளை எவ்வகையிலும் வகைப்படுத்திக் கூறவில்லை. ஆயினும் மனித உரிமைகளை நாம் பின்வரும் வகைப்பாடுகளுக்குள் பொருத்திப் பார்க்கலாம்.
1. குடியியல் உரிமைகள்
2. அரசியல் உரிமைகள்
3. பொருளாதார உரிமைகள்
4. சமூக உரிமைகள்
5. பண்பாட்டு உரிமைகள்
என்கின்ற இந்த வகைப்பாடுகளுக்குள் இடம்பெறும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமைகள் அனைத்துமே ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய பிறப்புரிமை ஆகும்.
ஐ.நா. பொதுச்சபையின் சர்வ தேசியப் பிரகடனத்தின்படி ஒவ்வொரு தனிமனிதர்க்கும் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில உரிமைகள் பின்வருமாறு:
1. உயிர் வாழ்வதற்கான உரிமை
2. சமத்துவ உரிமை,
3. சுதந்திரமாக வாழும் உரிமை,
4. சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை
5. கருத்துகளை வெளியிட உரிமை
6. வாக்களிப்பதற்கான உரிமை
7. அரசியல் பங்கேற்புக்கான உரிமை
8. வேலைக்கான உரிமை
9. கல்வி பெறுவதற்கான உரிமை
10. சமூகப் பாதுகாப்புக்கான உரிமை
11. சுகாதாரப் பாதுகாப்புக்கான உரிமை
12. பாலியல் சமத்துவத்திற்கான உரிமை
மனித உரிமைகள் என்பன தனி மனிதர்களின் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்று அம்சங்களையும் பேணிப் பாதுகாப்பதைத் தம் அடிப்படை இலக்காகக் கொண்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் சர்வதேசிய மனித உரிமைப் பிரகடனத்தின் அனைத்து அடிப்படை மனித உரிமை அம்சங்களையும் உள்வாங்கியே உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முதன்மையான கொள்கைத் திட்டத்தை 1993-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்தான் நிறைவேற்றித் தந்துள்ளது. இந்த மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையிலேதான் நம் நாட்டில் தேசிய மனித உரிமை ஆணையம் (National Human Rights Commission) அமைக்கப்பட்டது. அரசு அல்லது அரசின் கீழுள்ள அமைப்புகள் மனித உரிமைகளைப் பறிக்க முயலும்போதும் மீறுகிற போதும் ஆணையம் அந்த விவகாரத்தில் தலையிடும். அது தானாகவோ, பாதிக்கப்பட்டவரின் புகார் அடிப்படையிலோ விசாரணை மேற்கொள்ளும். மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்டங்கள் சரிவர நிறைவேற்றப் படுகின்றனவா என்பதனை ஆராயவும் உரிய தீர்வுகளைப் பரிந்துரைக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
இந்தியா தன் அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே மனித உரிமைகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கியிருந்தாலும் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி யிருந்தாலும் தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்களை முறைப்படி அமைத்திருந்தாலும் இந்தியாவில் இன்றைக்கும் மனித உரிமை என்பது ஓர் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது. குறிப்பாகக் கொலை, கொள்ளை, பயங்கரவாதம் முதலான குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் குற்றம் சாட்டப்பட்டவர்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவிக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகப் புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் கடந்த 2009–ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2013–ஆம் ஆண்டு பிப்ரவரி 15– ஆந்தேதி வரை பாதுகாப்புப் படைவீரர்கள், துணைப் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் போலீசாரால் 555 போலி என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தேசிய மனித உரிமை ஆணையம் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் அதிக அளவிலான போலி என்கவுண்டர்கள் நடைபெற்றது உத்தரபிரதேச மாநிலத்திலாகும். அங்கு 138 போலி என்கவுண்டர்கள் அரங்கேறியுள்ளன. தமிழ்நாட்டில் 23 என்கவுண்டர்கள் மற்றும் மணிப்பூர் 62, அஸ்ஸாம் 52, மேற்கு வங்காளம் 35, ஜார்கண்ட் 30, சட்டீஷ்கர் 29, ஒடிஸா 27, ஜம்மு-கஷ்மீர் 26, மத்தியபிரதேசம் 20 என மாநில வாரியான என்கவுண்டர்களின் பட்டியல் நீண்டு செல்கிறது. போலி என்கவுண்டர் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் தேசிய மனித உரிமை கமிஷனின் தலையீட்டின் காரணமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஏசியன் செண்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸின் இயக்குநர் சுஹாஸ் சக்மா தெரிவித்துள்ளார். (தகவல்: http://www.newindia.tv/tn/india/141-crime/)
கடந்த பதினைந்து ஆண்டுகளில் (1998- 2012) தமிழகத்தில் நடந்தேறிய காவல்துறை என்கவுண்டர்களின் பட்டியல் பின்வருமாறு,
· 1998: சென்னையில் நடந்த மோதலில், ரவுடி ஆசைத்தம்பி, அவரது கூட்டாளி .
· 2002: பெங்களூருவில் பதுங்கியிருந்த இமாம் அலி கூட்டாளிகள் ஐந்து பேர்.
· 2003: சென்னையில் வெங்கடேசப் பண்ணையார். அதே ஆண்டு சென்னையில் ரவுடி வீரமணி.
· 2004 அக். 18: சந்தனமரக் கடத்தல் வீரப்பன்.
· 2007 ஆக. 1: ஓசூர் அருகே வெள்ளை ரவி, கூட்டாளி குணா .
· 2008 ஏப். 11: தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஜெயக்குமார் அவரது கூட்டாளி. அதே ஆண்டு ஜூலை 11இல் ரவுடி பாபா. நவ.16 ஆம் தேதி, ஆறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுத் தலைமறைவாக இருந்த "கொர' கோபி என்ற கோபி.
· 2010 ஆம் ஆண்டு கோவையில் பள்ளிக் குழந்தைகளைக் கொலை செய்த கார் டிரைவர் மோகனகிருஷ்ணன்.
· 2010 நீலாங்கரைப் பகுதியில் திண்டுக்கல் பாண்டி உள்ளிட்ட இருவர்.
· 2012 பிப்., 23: சென்னை வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட ஐந்து பேர்.
· 2012 நவ., 30: திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி பிரபு, பாரதி சுட்டுக்கொலை.
(தகவல்: http://newsalai.blogspot.in/2012/12/blog-post_1704.html)
மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனத்தின் கீழ்க்காணும் விதிகள் கவனத்தில் கொள்ளத்தக்கன. இவ்விதிகள் என்கவுண்டர்களோடு தொடர்புடையன.
விதி எண்-3:
ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை, சுதந்திரம், தமக்கான பாதுகாப்பு ஆகிய உரிமைகள் உண்டு.
விதி எண்-5:
யாரையும் சித்திரவதைக்கோ, கொடுமையான மனித நேயமற்ற முறையில் அவமானபடுத்தவோ தண்டனைக்கு ஆட்படுத்தவோ கூடாது
விதி எண்-6:
சட்டத்தின்முன் ஒரு மனிதனாக நடத்தப்படும் உரிமை எங்கும் எவருக்கும் உண்டு.
விதி எண்-11:
குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் விசாரணைப்படி குற்றம் நிரூபிக்கப்படாதவரை நிரபராதி என்றுதான் கொள்ளப்பட வேண்டும் என்ற உரிமை உண்டு.
சர்வதேசியப் பிரகடனத்தின் மேற்சொன்ன விதிமுறைகள் குற்றம் சாட்டப்பட்டவர் களுக்கான மனித உரிமைகளைத் தெளிவாக வரையறுக்கின்றன. மேலும் “சட்டத்தினால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை மீறி வேறு எந்த வகையிலும் ஒரு நபரின் உயிரைப் பறித்தல் கூடாது” (விதி எண்: 21) என்று இந்திய அரசியலமைப்புச் சாசனமும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனித உரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் விதியினை வரையறுத்துள்ளது. மனித உரிமையின் அடிப்படை உரிமைகளில் இதுவும் ஒன்று என்பதோடு அல்லாமல், இதுவே பிரதானமான உரிமையாகவும் கருதப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இவ்வகை மனித உரிமைகள் பெரும்பாலும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்பதோடு வேண்டுமென்றே திட்டமிட்டு என்கவுண்டர் என்ற போர்வையில் மீறப்படுகின்றன என்பது மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காகவும் வன்முறையில் ஈடுபடுகிறவர்களை ஒடுக்குவதற்காகவுமே இவ்வகை என்கவுண்டர்கள் நிகழ்த்தப்படுகின்றன என்று அரசும் காவல்துறையும் இந்நிகழ்வுகளை நியாயப்படுத்தினாலும் சட்டத்தின் அடிப்படையில் இவை மிகக்கொடிய மனித உரிமை மீறல்களாகும். காவல்துறையின் என்கவுண்டர் மரணங்களால் பல உண்மைகள் மக்கள் சமூகத்திற்குத் தெரியாமல் போகிற ஆபத்து ஏற்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் உயிரோடு பிடிக்கப்பட்டுக் குற்றத்திற்கான காரணங்கள், பின்னணி உள்ளிட்ட பல உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கின்ற போதுதான் குற்றத்தைத் தடுப்பதற்கு அல்லது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். அதனைத் தவிர்த்து, தங்கள் உயிரைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் என்கவுண்டர்கள் நடந்ததாகத் தொடர்ந்து காவல்துறையினர் பரப்புரை செய்து வருவது மனித உரிமைகளுக்கு விடப்படும் மிகப்பெரிய சவாலாகும்.
கடந்த 2012 அக்டோபர் மாதம் 30 ஆம் நாளன்று காவல்துறை, சார்பு ஆய்வாளர் ஆல்வின் சுதன் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்ட மானாமதுரைப் பகுதியைச் சேர்ந்த பாரதி, பிரபு இருவரும் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் .இவ்விருவரையும் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிவிட்டனர் என்றும் பின்னர் அவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் தங்களைத் தற்காத்துக் கொள்ளக் காவல் துறையினர் முயன்றதில் பாரதி, பாலா இருவரும் நெஞ்சில் குண்டடிபட்டு மரணமடைந்தனர் என்றும் காவல்துறை அறிவித்தது.
இந்த என்கவுண்டர் குறித்துப் பேட்டியளித்த டி.எஸ்.பி.வெள்ளைத்துரை அவர்கள், “நாங்கள் மனிதர்களைக் கொல்வதில்லை. மிருகங்களைத்தான் வேட்டையாடுகிறோம். போலீஸ் தன் கடமையைச் செய்திருக்கிறது. மனிதர்களைத் துன்புறுத்தும் மிருகங்கள் இருக்கும்வரை இதுபோன்ற வேட்டை தொடரும்” என்று கூறியிருந்தார். (தகவல்: http://tamil.oneindia.in/news/2012/12/06/)
மிருகங்களைத்தான் வேட்டையாடுகிறோம் மனிதர்களை அல்ல என்ற டி.எஸ்.பியின் கூற்று மேலோட்டமாகப் பார்க்கும்போது நியாயம்போலத் தோன்றினாலும், விலங்கு, வேட்டை முதலான சொற்பயன்பாடுகள், அவர்கள் வாதத்தில் உள்ள உள்முரண்களை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. வேட்டை தொடரும் என்ற காவல்துறையின் நிலைப்பாடு, நடைபெறும் என்கவுண்டர்கள் எதிர்பாராத நிகழ்வுகள் அல்ல என்பதனையும் அவை ஒரு தயாரிப்பு நிகழ்நிரலின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகின்றன என்பதனையும் சொல்லாமல் சொல்கின்றன.
சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதிபதி சந்துரு, ஒருமுறை காலச்சுவடு இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியின் ஒரு பகுதி வருமாறு,
கேள்வி: என்கவுண்டர்கள் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக உங்களது அனுபவம் என்ன?
சந்துரு: தமிழகத்தில் என்கவுண்டர்கள் மிகப் பரவலாக நடத்தப்படுகின்றன. மக்கள் மத்தியில் விரைவான தீர்ப்பு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் நீதித் துறையோ மிக மெதுவாகச் செயல்படுகிறது. எனவே என்கவுண்டர்கள் நியாயமான வையாக மக்களுக்குப் படுகின்றன. என்கவுண்டர் என்பது கொலை என்னும் எண்ணம் மக்களுக்குத் தெரிவதில்லை. என்கவுண்டரில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிக்குக் கதாநாயக அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. மனித உரிமை ஆணையம் என்கவுண்டரை ஒரு குற்ற வழக்காகப் பதிவு செய்து இதில் ஈடுபட்ட அதிகாரி தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் நடைமுறையில் என்கவுண்டரில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பரிசும் பாராட்டுமே கிடைக்கின்றன. இந்தியாவில் சட்டத்திற்கு உட்பட்டு இறந்தவர்களைவிட சட்டத்திற்கு உட்படாமல் இறந்தவர்களே அதிகம். அதாவது மரண தண்டனையில் இறந்தவர்களைவிட என்கவுண்டரில் இறந்தவர்கள் அதிகம். (http://www.kalachuvadu.com/issue-161/page40.asp)
மேனாள் உயர்நீதிமன்ற நீதிமதி சந்துரு அவர்களின் பேட்டியில் கவனிக்கத் தக்க தகவல்கள் பல. ஒன்று: என்கவுண்டர்கள் கொலையே. அதனைக் குற்றவழக்காகப் பதிவு செய்யவேண்டும். இரண்டு: என்கவுண்டரில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்குக் கதாநாயக அந்தஸ்தும் பரிசும் பாராட்டும் கிடைக்கின்றன. மூன்று: இந்தியாவில் மரண தண்டனையில் இறந்தவர்களைவிட என்கவுண்டரில் இறந்தவர்கள் அதிகம்.
நீதிபதி சந்துரு அவர்கள் குறிப்பிடும் என்கவுண்டரில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்குக் கதாநாயக அந்தஸ்து என்பது கூர்ந்து கவனிக்கத்தக்க தகவலாகும்.
ஒரு குறிப்பிட்ட என்கவுண்டர் நிகழ்வின்போது, அந்நிகழ்வினை மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் முக்கியப் பங்காற்றுவன ஊடகங்களே. அச்சு ஊடகமோ, காட்சி ஊடகமோ மக்களுக்கு அந்தத் தகவலை ஊடகங்கள்தாம் சொல்கின்றன. என்கவுண்டர்கள் குறித்தான ஊடகங்களின் நிலைப்பாடு என்பது பொதுவில் அரசு மற்றும் அதிகாரத்தின் நிலைப்பாடாகவே இருக்கின்றது. அரசு மற்றும் அதிகாரத்தின் காவலர்களாகக் கட்டமைக்கப் பட்டிருக்கும் காவல்துறையின் என்கவுண்டர்கள் அவர்களின் மொழியிலேயே ஊடகங்களுக்குச் சொல்லப்படுகின்றன. ஊடகங்கள் அந்தத் தகவல்களைத் தங்களுக்கான கதையாடல் மொழியில் மக்களுக்கு விவரிக்கின்றன. வெகுஜன உளவியலைக் கட்டமைக்கும் ஊடகங்களின் அரசியல் இங்கேதான் தொடங்குகிறது.
ஊடகங்கள் செய்திகளை ஒரு கதையாகத் தருகின்றன. நிகழ்வுகளின் அல்லது தகவல்களின் பன்முகத் தன்மை மறைக்கப்பட்டுத் தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்று நேர்க்கோட்டுப் பார்வையில் கதைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்தக் கதையாடலில் பல தகவல்கள் விடுபட்டுப் போவதும் சுவாரஸ்யத்திற்காகப் புதிய புதிய விஷயங்கள் இணைக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகின்றன. தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமன்று உலகம் முழுவதும் ஊடகங்களிடையே இத்தகைய போக்குக் காணப்படுகிறது. செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் இத்தகு கதையாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.
இத்தகு கதையாடலின் வழி ஊடகங்கள் சொல்லும் என்கவுண்டர் கதைகளில் காவல்துறை அதிகாரிகளே கதாநாயகர்கள். குற்றச்சாட்டுக்கு உள்ளான, குற்றம் நிரூபிக்கப்படாத கைதிகளே வில்லன்கள். என்கவுண்டர்களே சுபமான முடிவு என்ற நேர்க்கோட்டில் ஊடகங்களின் கதைகள் முன்மொழியப் படுகின்றன. இந்த என்கவுண்டரை மக்கள் வரவேற்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் யாரும் மகான்கள் அல்லர், பரிதாபப்பட. சட்டப்படி தண்டிக்கக் காலம் கடக்கலாம், குற்றவாளி தப்பிக்கவும் வாய்ப்புண்டு எனவே என்கவுண்டர்களே சரியான தண்டனை, இதுவே நியாயம், இதுவே தர்மம் என்று மக்கள் இதனைக் கொண்டாடுகிறார்கள் என்றெல்லாம் பல கிளைக்கதைகளும் பின்இணைப்புகளும் ஊடகங்களால் சொல்லப்படுகின்றன.
ஊடகங்களைப் பொறுத்த மட்டில் அதிரடி ரிப்போர்ட்களும் பரபரப்புச் செய்திகளும் பகீர் தகவல்களும்தாம் அவற்றின் உயிர்நாடி. குற்றங்களும் கைதுகளும் என்கவுண்டர்களும் ஒரு ஆக்‌ஷன் படத்திற்கு இணையான விறுவிறுப்புடன் ஊடகங்களால் சொல்லப்பட்டதன் பின்னணியில் வெகுஜனங்களின் உளவியலைக் கட்டமைக்கும் நுண்ஊடக அரசியல் செயல்பாடும் வெகுநேர்த்தியாக நடந்தேறி விடுகிறது. குறிப்பாக, ஆட்சியாளர்கள் மிகப்பெரிய அரசியல் சிக்கல்களை எதிர்கொள்ளும் நேரங்களில் எல்லாம் ஊடகங்களின் இந்த அதிரடி ஆக்‌ஷன் கதைகள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும். விறுவிறுப்பாகப் புனையப்பட்ட ஒவ்வொரு கதையாடலையும் பின்நோக்கிப் புரட்டிப்பார்த்தால் அவை எல்லாமே கவனிப்பாரற்று வழியெங்கும் சிதறிக்கிடப்பதைக் காணலாம். மருத்துவ மாணவன் நாவரசு கொலைவழக்குத் தொடங்கி தர்மபுரி திவ்யா- இளவரசன் பிரச்சினை வரை எல்லாமே பரபரப்பாக நிகழ்த்தப்பட்ட கதையாடல்கள்தாம். இன்று அப்பிரச்சினைகளின் நிலை என்ன? எல்லாமே அப்படித்தான்.
என்கவுண்டர் நிகழ்வுகளிலும் நமது ஊடகங்களின் நிலைப்பாடு இதுதான். என்கவுண்டர்கள்தாம் நியாயமானவை என்றால் ஒரு தேசத்திற்குச் சட்டங்களும் நீதிமன்றங்களும் எதற்கு?. காவல்துறையினரின் கடமை குற்றவாளி என்று அவர்கள் சந்தேகிப்பவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர் குற்றவாளியா? நிரபராதியா? என்று முடிவெடுக்க வேண்டியது சட்டத்தின் அதாவது நீதிமன்றத்தின் கடமை. காவல்துறையினரே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு என்கவுண்டர் எனும் பெயரில் மரணதண்டனை வழங்குவதும் அதனை நியாயப்படுத்தும் விதத்தில் ஊடகங்கள் பொதுக்கருத்தை உருவாக்குவதும் அப்பட்டமான மனிதஉரிமை மீறல்களாகும்.
என்கவுண்டர் என்ற பெயரிலான திட்டமிட்ட படுகொலைகளைக் கதாநாயகக் காவல்துறை அதிகாரிகளின் தனிப்பட்ட வீரதீரச் சாகசங்களாகக் காட்டி என்கவுண்டர்களை நியாயப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் கடந்த இருபதாண்டுகளில் இந்திய – தமிழகச் சூழலில் வெகுவாக வரவேற்கப்படுகின்றன.
தர்மம் வெல்லும் பாவம் தோற்கும் என்ற அறமதிப்பீடுகளோடு வெளிவந்த கடந்த தலைமுறைத் திரைப்படங்களில் அறத்தின் அடையாளமாக நிற்கும் கதாநாயகனிடம் பாவத்தின் ஒட்டுமொத்த பிம்பமாகச் சித்திரிக்கப்பட்ட வில்லன்கள் தோற்பதும் திரைப்படக் கதையாடலின் உச்சத்தில் அவர்கள் திருந்தி மன்னிப்பு கேட்பதாகவோ காவல்துறை யினரிடம் ஒப்படைக்கப்பட்டு கைவிலங்கிடப் படுவதாகவோ திரைப்படங்களில் சித்தரிக்கப்படும். ஆனால் இந்தத் தலைமுறைத் திரைப்படங்களில் கதாநாயகன் தனக்கான அறத்தை நிலைநாட்டச் சட்டத்தைத் தானே தன் கையிலெடுத்துத் தனிமனிதனாகவே வில்லன்களைக் கொன்றுகுவிக்கிறான். கதாநாயகர்கள் காவல்துறை அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் வேலை இன்னும் எளிதாகிறது. துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனம் என்பதற்கேற்ப அவனே குற்றவாளிக்கு மரணதண்டனை அளித்து உலகைக் காப்பாற்றுகிறான். கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் வெளிவந்த தெலுங்கு இறக்குமதி ராஜசேகரின் இதுதாண்டா போலீஸ் தொடங்கி நரசிம்மா, வாஞ்சிநாதன், சாமி, காக்க காக்க, போக்கிரி, வேட்டையாடு விளையாடு, அஞ்சாதே, சிங்கம், துப்பாக்கி, ஹரிதாஸ் என என்கவுண்டர் கதாநாயகர்களின் திரைப்பட வரிசை நீண்டுகொண்டே போகிறது. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்கிற சொல்லாடலைத் தமிழ்த்திரையில் அறிமுகப்படுத்தி அதை நியாயப்படுத்தியது கௌதம்மேனனின் காக்க காக்க திரைப்படம்தான். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படமும் இவ்வகையைச் சேர்ந்ததே.
திரைப்படங்களில் என்கவுண்டர்களைக் காவல்துறைக் கதாநாயகர்களின் பக்கம் நின்று நியாயப்படுத்தி, கைதட்டி ரசித்த அதே மனநிலையில்தான் மக்கள் நிஜவாழ்க்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களாக நிகழ்த்தப்படும் திட்டமிட்ட கொடூர என்கவுண்டர்களையும் நியாயப்படுத்தி, கைதட்டாமல் ரசிக்கப் பழகிக் கொண்டார்கள். மரணம் எங்கு இயற்கையாக நிகழாமல் செயற்கையாக நிகழ்த்தப்படுகிறதோ அங்கே மனித உரிமை மீறல் நடக்கிற‌து என்பதே உண்மை. மனிதர்களுக்கு மரணம் இயற்கையாகத் தான் நிகழ வேண்டுமேயன்றிக் கொலையாக அன்று. ஒருவர் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்வதைக் கூடச் சட்டம் அனுமதிப்பதில்லை என்ற நிலையில் அடுத்தவர் உயிரைப் பறிக்கும் உரிமையை இவர்களுக்குக் கொடுத்தது யார்? என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி கேட்பது நியாயமானதுதானே!.
என்கவுண்டர்கள் குறித்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் முக்கியமான பகுதிகள் பின்வருமாறு:
1. என்கவுண்டரை கொலையாகப் பாவித்து காவல்துறையினர் மீது கொலைவழக்கு (இந்தியத் தண்டனைச் சட்டம்: 302) பதிய வேண்டும். அவர்கள் தங்களைக் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும்.
2. கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களைச் சாட்சிகளாக விசாரிக்க வேண்டும். என்கவுண்டரில் ஈடுபட்டவருக்கு உடனடி பதவி உயர்வோ, பாராட்டோ வழங்கக் கூடாது.
3. எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுச் சம்பவம் நடந்த காவல் எல்லைக்கு வெளியே உள்ள காவல்துறையினர் விசாரிக்க வேண்டும்.
4. என்கவுண்டர் குறித்து ஆர்.டி.ஓ. விசாரனைக்குப் பதிலாக நீதிமன்ற விசாரனை நடத்தப்பட வேண்டும். தன்னாட்சி கொண்ட சிபிசிஐடி மற்றும் சிபிஐ தொடர் விசாரணை தேவை.
5. என்கவுண்டரில் இறந்தவர்களுக்காக இரங்கல் கூட்டம் நடத்துபவர்கள், மக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் போன்றவர்களை விசாரணை என்ற பெயரில் சோதனை செய்வதும், உடல், மனரீதியாகச் சித்ரவதை செய்வதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் இந்த வழிகாட்டுதல்கள் பலசமயங்களில் மத்திய, மாநில அரசுகளால் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதோடு என்கவுண்டர்களோடு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்குப் பரிசும் பாராட்டும் ஆட்சியாளர்களால் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி இப்படிப்பட்ட என்கவுண்டர்களுக்கான எதிர்ப்பைப் பதிவுசெய்யும் மனித உரிமை ஆர்வலர்களின் நடவடிக்கைகளைக் குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் ஆதரவான நடவடிக்கை எனக் காவல்துறையும் ஆட்சியாளர்களும் ஊடகங்களும் வேண்டுமென்றே திட்டமிட்டுத் திரித்துக் கூறி வருகின்றன. மேலும் மனித உரிமை ஆர்வலர்களைப் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் எனவும் அவர்கள் சித்தரிக்கத் தயங்குவதில்லை. திட்டமிட்ட இவ்வகைப் பொய்ப் பிரச்சாரங்களால்தாம் மனித உரிமைகள் என்ற கருத்தே பொதுமக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
என்கவுண்டர் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி மனிதஉரிமையின் மாண்பினைக் காக்க நாம் பின்பற்றவேண்டிய உடனடி நடவடிக்கைகள் பின்வருமாறு:
1. என்கவுண்டர்களை நியாயப்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் தவறான அணுகுமுறை குறித்து அவர்களோடு விவாதிக்க வேண்டும். கிரிமினல்கள்தாமே கொல்லப்படுகிறார்கள் என்று அசட்டை கொள்ளும் அவர்களிடம் என்கவுண்டர்களின் உள் அரசியலை விளக்கிக் கூறவேண்டும்.
2. திரைப்படம், பத்திரிக்கை, சமூக வலைத்தள ஊடகத்துறையினரோடு கலந்துரை யாடல்களை நிகழ்த்தி மனித உரிமையின் பக்கம் அவர்களைக் கொண்டுவர முயலவேண்டும்.
3. மனித உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து வீரியமிக்க, என்கவுண்டர் எதிர்ப்பியக்கத்தை உருவாக்கிப் பேராட வேண்டும்.
4. தேசிய மனித உரிமை ஆணையம் 1996 நவம்பர் 5இல் வெளியிட்ட என்கவுண்டர்கள் குறித்தான வழிகாட்டுதல்களையும் அவ் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 2007 ஆகஸ்டு 8 இல் தமிழக அரசு உருவாக்கி அளித்துள்ள நெறிமுறைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக மனித உரிமை ஆர்வலர்கள் முன்னெடுக்க வேண்டும்.
துணைநின்ற நூல்கள்:
1. தமிழகத்தில் மனித உரிமைகள் மக்கள் கண்காணிப்பகம் – 1998-2000 தமிழ்நாடு மதுரை -2, 2000
2. மனித உரிமைகள் ஒரு அடிப்படை நூல் நாக.வேணுகோபால் (தமிழாக்கம்) நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி, 2011
3. மீடியா உலகம் சுரேஷ்பால், தீபிகா, சென்னை, 1999
4 .கீற்று http://www.keetru.com/
- முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர்

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...