புதன், 17 அக்டோபர், 2007

வள்ளலாரும்… பேருபதேசமும்…

வள்ளலாரும்… பேருபதேசமும்…

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

திருவருட்பிரகாச வள்ளலார் என்றும் வள்ளலார் என்றும் அழைக்கப்படுகின்ற சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றி மறைந்த ஒரு சமூகப் புரட்சியாளர். 1825 முதல் 1858 வரை சென்னையிலும் அதன்பின் 1867 வரை கருங்குழி கிராமத்திலும் பின்னர் 1874 ஜனவரி 31 வரை வடலூர் மேட்டுக் குப்பத்திலும் வாழ்ந்த வள்ளலார் காலத்தில் தமிழகத்தில் பஞ்சமும் பட்டினியும் பரவலாக இருந்தன. மக்களின் பசியும் பட்டினியும் வள்ளலாரை மிகவும் கவலை கொள்ள வைத்தன. தமிழகத்தின் சைவ சித்தாந்த, சித்தர் மற்றும் பக்தர் மரபில் இதுவரை யாரும் வலியுறுத்தாத சமுதாயத்தின் கடைகோடி மக்கள் கூட்டத்தின் பசியைப் போக்கும் ஜீவகாருண்யமாம் உயிர் இரக்கத்தையும் உயிர்களின் சமத்துவத்தை வலியுறுத்தும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையையும் வள்ளலார் தமது சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் ஒப்பற்ற கொள்கைகளாக முன்மொழிந்தார். இறைவன் மீது பக்தி, உயிர்கள் மீது கருணை இரண்டையும் ஒன்றாக இணைத்து உயிரிக்கமே இறை வழிபாடு என்ற புதிய முழக்கத்தை வலியுறுத்தினார். இதனால், அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அறியப்படும் என்பது வள்ளலாரின் வாக்கு (ஜீவகாருண்ய ஒழுக்கம், வள்ளலார் உரைநடை நூல், ப.171). உயிர்கள் மீது கொண்ட இரக்கத்திற்குப் பெரும் தடையாய் வாய்த்ததன் காரணமாகவே சாதி, மத, சமய, சாத்திர விகற்பங்களை அடியோடு புறக்கணிக்கும் ஆன்மீகப் புரட்சியாளராக வள்ளலார் விளங்கினார்.

வள்ளலாரும், திருவருட்பாவும்:

வள்ளலாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் இராமலிங்கம் என்பதாகும். தாம் எழுதும் கடிதங்களிலும் பிற இடங்களிலும் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கையொப்பமிடும் வழக்கத்தை வள்ளலார் கொண்டிருந்தார். மிகச்சில இடங்களில் இராமலிங்கம் பிள்ளை என்று கையொப்பமிட்டுள்ளார். தாம் பதிப்பித்த நூல்களிலும் சிதம்பரம் இராமலிங்கம் என்றே அவர் பதிவுசெய்துள்ளார். திருவருட்பா நூல் பதிப்புப் பணியைத் தொடங்கிய தொழுவ+ர் வேலாயுத முதலியார் நூலின் முகப்பில் இராமலிங்க சாமி என்று பதிப்பிக்கக் கருதியிருப்பார் போலும். இது குறித்து இறுக்கம் இரத்தினவேலு முதலியார் வள்ளலாருக்குக் கடிதமெழுதிக் கேட்ட போது,

இராமலிங்கசாமி யென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று. என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில். இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும் (28-3-1866, திருமுகங்கள், வள்ளலார் உரைநடை நூல், ப.591)
என்றெழுதி மறுத்துவிட்டார்கள். தம்பெயரைக் குறிப்பிடுவதில் கூட ஆரவாரத் தன்மையை விரும்பாத வள்ளலாரை, திருவருட் பிரகாச வள்ளலார் என்று முதன்முதலில் குறிப்பிட்டு இவர் நூலைப் பதிப்பித்தவர் தொழுவ+ர் வேலாயுத முதலியாரே. சாமி என்றே குறிப்பிட விரும்பாதவருக்குத் திருவருட் பிரகாச வள்ளலார் என்ற பெயரைச் சூட்டி, அப்பெயரை அடிகளார் ஏற்றுக்கொள்ளச் செய்த தொழுவூராரின் முயற்சி எத்தகையது என்பதை அறிய இயலவில்லை. அதேபோல் வள்ளலாரின் பாடல் தொகுப்பிற்குத் திருவருட்பா என்ற பெயரைச் சூட்டியவரும் தொழுவூர் வேலாயுத முதலியாரே என்பது குறிப்பிடத்தக்கது. வள்ளலார் தமது பாடல்களைத் தாமே தம் கைப்பட எழுதி வைத்தாரே அன்றி நூலாக வெளியிட விரும்பவில்லை. வள்ளலாரிடம் உள்ள பாடல் ஏடுகளைத் தம்மிடம் அனுப்பிவைக்குமாறு இறுக்கம் இரத்தின முதலியார் பலமுறை வேண்டியும் வள்ளலார் பாராமுகமாக இருந்தார். தமது பாடல்கள் அச்சாவதில் அவருக்கு ஆர்வமோ விருப்பமோ இல்லை.
நான் சென்னைப்பட்டணம் விட்டு இவ்விடம் வந்த நாள் தொடங்கி நாளது வரையில் பாடிய பாடல்கள் பல. அவைகளை முழுதும் எழுதிவைக்க வேண்டுமென்கிற லட்சியம் எனக்கு இல்லாமையால் அப்படி அப்படிச் சிதறிக் கிடக்கின்றன (30-12-1860, திருமுகங்கள், வள்ளலார் உரைநடை நூல், ப.565).
திருவருட்பா அச்சிட்டு நூலாக வெளிவந்தவுடன் இதனைக் கண்ட வள்ளலார், இறுக்கம் இரத்தின முதலியாருக்கு எழுதிய கடிதத்தில்,

தாங்கள் வரவிட்ட பங்கி தபாலிலடங்கிய புத்தகமும் கடிதமும் முன்னும் பின்னுமாக வரப்பெற்றேன். இவற்றுள் பங்கி தபாலிலடங்கிய புத்தகத்தைக் கண்டபோது பசியில்லாதவன் பழஞ்சோறு கண்டாற் போலும் குறிப்பில்லாதவனாக இருந்தேன். ஏனெனில் திருவருள் சாட்சியாகத் திருவடிக் கண்ணன்றி வேறொன்றையும் என்மனம் விரும்புகின்றதாகத் தெரியவில்லை. என்றால் இந்தப் பனை ஏட்டையும் அதில்வரைந்த சிறுபிள்ளை விளையாட்டையும் தானோ விரும்பும். விரும்பாது, விரும்பாது. யாரோ தங்களுக்கு வீணாக அலுப்புண்டு பண்ணினார்கள். அது குறித்து விசனமடைந்தேன் (திருமுகங்கள், வள்ளலார் உரைநடை நூல், ப.587).
என்று எழுதியிருப்பதைப் பார்க்கும் போது வள்ளலார் தாம் எழுதிய பாடல்களைச் சிறுபிள்ளை விளையாட்டு என்றே கருதி வெளியீட்டில் பாராமுகமாயிருந்தமை தெளிவாகின்றது. தொடக்கத்தில் வள்ளலார் நூல் வெளியீட்டில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் காலப்போக்கில் வெளியீட்டுப் பணிகளைப் புறக்கணிக்காமல் தம்மாலியன்ற உதவிகளைச் செய்து நூல் வெளிவருவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பதை அவரின் கடிதங்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகின்றது.


திருவருட் பிரகாச வள்ளலாரென்னும்
சிதம்பரம்இராமலிங்க பிள்ளை அவர்கள்
திருவாய் மலர்ந்தருளிய
திருவருட்பா

எனத் திருவருட்பா முதல் நான்கு திருமுறைகள் முதல்பதிப்பின் (1867) முகப்பேட்டில் குறிப்பிட்டுப் பதிப்பித்தார் தொழுவூரார். திருவருட்பா முதல் நான்கு திருமுறைகளின் முதல்பதிப்பு 1867 இல் வெளிவந்த போது அதன் பதிப்பாசிரியராகிய வேலாயுத முதலியார், நூலாசிரியராகிய வள்ளலாரின் வரலாற்றையும் நூலாகிய திருவருட்பாவின் வரலாற்றையும் 66 செய்யுட்களாகப் பாடித் திருவருட்பா வரலாறு என்னும் பெயருடன் நான்காம் திருமுறைக்குப் பின்னர் நூலிறுதியில் சேர்த்து அச்சிட்டு வெளியிட்டார். தொழுவூராருக்குத் திருவருட்பா என்ற நூல் பெயரும் திருவருட்பிரகாச வள்ளலார் என்ற அடிகள் பெயரும் பின்னாலே சைவ இலக்கிய உலகத்தில் எத்தகு சூறாவளிகளை உண்டாக்கும் என்பது தெரியாமல் போயிற்று. இந்தப் பெயர்கள் வள்ளலார் வாழும் காலத்திலும் பின்னரும் அருட்பா மருட்பா பூசலாய்ப் பேருரு எடுத்தது ஒரு தனிவரலாறாகும்.


பகுதி-இரண்டு

வள்ளலாரின் ஆன்மீக வாழ்க்கை வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரிப்பார் ஊரன் அடிகள் (ஊரன் அடிகள், இராமலிங்க அடிகள் வரலாறு) அவை,

1. 1835 முதல் 1858 வரையிலான சென்னை வாழ்க்கைப் பகுதி
2. 1858 முதல் 1867 வரையிலான பூர்வஞான சிதம்பரப் பகுதி
3. 1867 முதல் 1870 வரையிலான உத்தரஞான சிதம்பரப் பகுதி
4. 1870 முதல் 1874 வரையிலான சித்திவளாகப் பகுதி

வள்ளலாரின் இந்நான்கு வாழ்க்கைப் பகுதிகளிலும் 1867 முதல் 1874 வரையிலான கடைசி இரண்டு பகுதிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலும் 1870 முதல் 1874 வரையிலான நிறைவு வாழ்க்கைப் பகுதி மிகுந்த முக்கியத்தும் பெற்ற பகுதியாகும். இந்தச் சித்திவளாக வாழ்க்கைப் பகுதியில், ஷஸ்ரீமுக வரு~ம் ஐப்பசி மாதம் ஏழாம் தேதி புதவாரம் பகல் 8 மணிக்கு மேட்டுக்குப்பம் சித்திவளாக மாளிகையில் முதல் முதல் கொடி கட்டியவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு என்று சன்மார்க்க அன்பர் ஒருவரால் குறித்து வைக்கப்பட்ட வள்ளலாரின் மஹோபதேசம் மிக மிக முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். மஹோபதேசம் என்று குறிக்கப்பட்ட இப்பேருரை வள்ளலார் உபதேசங்களில் தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்ததாகும்.

வள்ளலாரின் பேருபதேசம்:

22-10-1873 அன்று காலை சித்திவளாக மாளிகையில் முதன்முதலாக சன்மார்க்கக் கொடியை ஏற்றிவைத்து வள்ளலார் பேருரை ஒன்றை நிகழ்த்தினார். இப்பேருரை பல விதங்களில் வள்ளலார் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றது. பேருரையில் இடம்பெற்ற சிறப்புச் செய்திகள் வருமாறு,

1. இனியும் வீண்காலம் கழிக்க வேண்டாம் என வேண்டியது.
2. பரலோக விசாரத்தின் தேவையை வலியுறுத்தியது.
3. வேதம், புராணம், ஆகமம், இதிகாசம் இவைகளை மறுத்துரைத்தது.
4. சைவ, வைணவ முதலிய சமயங்களையும் வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களையும் மறுத்துரைத்தது.
5. ஆண்டவர் வள்ளலாரை ஏறாதநிலையில் மேலேற்றி விட்ட செய்தி.
6. இம்மேலான நிலைக்கு தயவு என்னும் கருணையே காரணம் என்றது.
7. ஒருமையுடன் இருப்பதன் சிறப்பு.
8. அண்ட விசாரம் பிண்ட விசாரம் முதலான ஆராய்ச்சியை வலியுறுத்தியது.
9. அருட்பெருஞ்சோதி மந்திரத்தின் சிறப்பை எடுத்துரைத்தது.
10. இத்தருணம் இக்காலமே சன்மார்க்க காலம் என்றுரைத்தது.
11. சன்மார்க்கக் கொடியின் தத்துவம் கூறியது
12. ஆண்டவர் வரும் தருணம் இதுவென உறுதி கூறியது.

மேற்கூறிய பன்னிரு சிறப்புச் செய்திகளை உள்ளடக்கிய வள்ளலாரின் பேருபதேசம் எப்படி வள்ளலாரின் ஆன்மீக, சமூகப் புரட்சிiயைக் கட்டமைக்கின்றது என்று காண்போம்.

சமயங்களையும், மதங்களையும் மறுத்துரைத்தது:

முதலில் வள்ளலார் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம் (பேருபதேசம், வள்ளலார் உரைநடை நூல், ப. 540) என்கிறார். வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் இவைகளின் பேரால் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஆரியப் பார்ப்பனர்களின் செல்வாக்கு உச்சத்தில் உள்ள தமிழகத்தில் அதுவும் 19ஆம் நூற்றாண்டில் இப்படி ஓர் ஆன்மீகவாதி வெளிப்படையாகச் சொல்ல எத்துணை துணிபு வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்திய லோகாதிபதி என்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனு~னுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். தெய்வத்துக்குக் கை கால்கள் இருக்குமா? என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல முடியாது விழிக்கிறார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள் (பேருபதேசம், வள்ளலார் உரைநடை நூல், பப. .540-541)

மதவாதிகளின் கண்மூடித் தனமான உளறல் என்று இத்தகு வேத, ஆகம, புராணங்களை விமர்சிக்கும் வள்ளலாரின் பகுத்தறிவு வியத்தற்குரியது. வேதங்கள் ஆகமங்கள் மட்டுமல்ல சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் முதலான சமயங்களும் மதங்களும் கூட வள்ளலாரின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

இதுபோல் சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக்குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா! அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற ஸ்தோத்திரங்களே போதும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. (பேருபதேசம், வள்ளலார் உரைநடை நூல், பப. .542-543)

மேற்காட்டிய பேருபதேசப் பகுதியில் சமயங்களையும் மதங்களையும் மறுத்துரைக்கும் வள்ளலார் தன்னுடைய திருவருட்பாக்களையே (பதிப்பில் வந்த முதல் நான்கு திருமுறைகள்) விமர்சனத்திற்கு உட்படுத்தி அந்தப் பாக்கள் என் அற்ப அறிவால் பாடப்பட்டவை அவைகளில் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார். இத்தகு வேத ஆகம சாத்திர இதிகாசங்களையும் சமயங்களையும் மதங்களையும் கடந்து வந்ததால் இப்போது ஆண்டவர் அவரை ஏறாத நிலை மேல் ஏற்றிவிட்டிருப்பதாகக் கூறுகின்றார். இவைகளைத் துறந்து தயை, கருணை என்னும் உயிர் இரக்கத்தையும் ஆன்ம ஒருமைப்பாட்டுணர்ச்சியும் கைக்கொண்டதால்

இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கும் அப்பாலும் கடந்திருக்கிறது என்கிறார் (பேருபதேசம், வள்ளலார் உரைநடை நூல், ப. 544).

இப்படி அண்டங்களுக்கு அப்பாலும் விரிந்திருக்கக் கூடிய அறிவைப் பெறுவது ஒருமையால் சாத்தியமானது என்கிறார் வள்ளலார். இங்கே ஒருமை என்றது ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்ச்சி.

ஆராய்ச்சி மனப்பான்மையை வலியுறுத்தியது:

தெய்வத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முக்கிய லட்சியத்திலிருந்து விசாரம் செய்து கொண்டிருங்கள் என்பது வள்ளலாரின் பேருபதேசத்தில் வரும் ஒரு கட்டளை. விசாரம் செய்தல் என்பது ஆராய்ச்சி செய்தல் என்ற பொருள்படும். இரண்டு வகையான ஆராய்ச்சிகளைச் செய்யச் சொல்கிறார் வள்ளலார். ஒன்று அண்ட விசாரம். மற்றது பிண்ட விசாரம்.

அந்த விசாரம் செய்வது எப்படியென்றால் அண்டத்தில் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் இவைகள் எப்படிப்பட்டன? அவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத்தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவதேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமும் செய்து கொண்டிருங்கள். இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால் இவ்வுலகத்தின் கண்ணுள்ள ஜனங்கள் அதைக் குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில் அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லட்சியம் செய்தல் கூடாது (பேருபதேசம், வள்ளலார் உரைநடை நூல், பப. .545- 546)

வள்ளலாரின் ஆராய்ச்சி மனப்பான்மைக்கு மேற்காட்டிய அவரின் பேருபதேசப் பகுதி மிகப்பெரிய சான்றாகும். உலகத்தவர் ஏளனங்களுக்குச் செவிசாய்க்காமல் அவர்களின் அறியாமையைக் கருத்தில் கொண்டு மற்றவர் ஏளனங்களைப் புறக்கணித்து எது குறித்தும் விசாரம் செய்தல் அவசியம் என்கிறார் வள்ளலார். அண்ட விசாரம், பிண்ட விசாரம் என்று அவர் குறிப்பிட்டது வான மண்டலமாகிய பிரபஞ்ச ஆராய்ச்சியும் மனித உடலியல் அதாவது உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியும் ஆகும். உயிரின ஆராய்ச்சியில் தாவரவியல் விலங்கியல் மனித உடற்கூற்று இயல்களையும் நாம் அடக்கிக் கொள்ளலாம். எதையும் ஏன்? எப்படி? எதற்கு? என்று கேள்வி கேட்டு அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற இன்றைய நவீன அறிவியல் சிந்தனைப் போக்கை வள்ளலாரின் பேருபதேசப் பகுதியில் காணமுடிகிறது.

கருணையே இறை என்ற தெளிவு:

வள்ளலார் மீண்டும் மீண்டும் தமது பேருபதேசத்தில் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையைக் குறிப்பிடுகின்றார். ஆன்ம நேய ஒருமையால் விளைந்த கருணையைக் குறிப்பிடுகின்றார். பெரிய தயவுடைய அறிவே ப+ரண இன்பமாம் என்றும் குறிப்பிடுகின்றார்.

எனது மெய்யறிவின் கண் அனுபவித்தெழுந்த உண்மை அறிவு அனுபவ ஆனந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன், குறிப்பிக்கின்றேன், குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில் நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே ஆண்டவர் முதற்சாதனமாக

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம் (பேருபதேசம், வள்ளலார் உரைநடை நூல், பப. .547-548).

பேருபதேசத்தின் இப்பகுதி வள்ளலாரின் இறைக் கோட்பாட்டை வரையறுக்கின்றது. இறைவன் மீது பக்தி உயிர்கள் மீது கருணை ஆகிய இரண்டையும் ஒன்றாக இணைப்பதன் வழியாக, அன்பு கருணை தயை அருள் இரக்கம் என்ற பண்புகளின் அடிப்படையில் இறைத்தன்மையை உணர்கிறார் வள்ளலார். வள்ளலாரின் பேருபதேசம்

இங்குள்ள நீங்கள் எல்லோரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள் என்ற எச்சரிக்கையோடு தொடங்கி ஆண்டவர் வருவார், கட்டாயம் வருவார் அதுவரை உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள் இது ஆண்டவர் கட்டளை என்பதாக முடிகிறது.

வள்ளலாரின் ஆன்மீக, சமூகப் புரட்சியின் மைய அச்சாக இந்தப் பேருபதேசம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு.


பகுதி- மூன்று

வள்ளலாரின் மறைவு: புதிரா?

வள்ளலாரின் வாக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியை விட அவரின் மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சி பெரிது. வள்ளலாரின் வரலாற்றை முழுமையாக எழுதிய ஊரனடிகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 1873, கார்த்திகை மாதம் இராமலிங்கர் தமது அறையிலிருந்த விளக்கை வெளியில் வைத்து, அன்பர்களை அதனை வழிபடச் சொல்லி அறைக்குள்ளே பூட்டி இருந்து கொண்டார். கார்த்திகை மார்கழி மாதங்கள் கடந்தன. தை மாதம் தொடங்கிய போது வெளியே வந்த இராமலிங்கர் சில நாட்கள் இருந்தார். 30-1-1874 தைப்பூச நாள் வந்தது. அன்று முன்னிரவில் அடிகள் அன்பர்களை அழைத்து தாம் அறைக்குள்ளே சென்று உடம்பை மறைத்துக் கொள்ளப் போவதாகக் கூறினார். இரவு 12 மணிக்கு அடிகள் தம் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தி இரண்டரை நாழிகையில் இறைவனோடு இரண்டறக் கலந்தார்(வள்ளலார் உரைநடை நூல், பப. .619-620).

இரண்டரை நாழிகையில் இறைவனோடு இரண்டறக் கலந்தார் என்பதற்கு வள்ளலாரின் திருவருட்பா பாடலிலிருந்தே சான்று காட்டுகிறார் ஊரன் அடிகள். பின்வரும் பாடலே அது.

என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது
பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார். (5818)

ஊரன் அடிகள் சான்று காட்டும் பாடல் இறைவன் வள்ளலார் உடம்பில் கலந்து பிரியாமல் இருப்பார் என்று அடிகள் குறிப்பிட்ட பாடல். வள்ளலார் எனது பேருடம்பில் கலந்து என்று குறிப்பிடுவதால் அங்கே வள்ளலாரின் உடம்பு இருக்கிறது என்பதும் அது இறைவனோடு இரண்டறக் கலந்து கரைந்து விடவில்லை என்பதையும் நாம் உணரமுடியும். 30-1-1874 அன்று இரவு வள்ளலார் தனியறையில் சென்று தாழிட்டுக்கொள்வதற்கு முன் சன்மார்க்க சங்கத்தார்க்கு அவர் தெரிவித்த செய்தி,

நான் உள்ளெ பத்துப் பதினைந்து தினமிருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக்கொடார்.
(ஊரன் அடிகள், இராமலிங்க அடிகள் வரலாறு, பப. 619-620)

என்பதாகும். இச்செய்தியில் நான் உள்ளே சென்று பத்துப் பதினைந்து தினமிருக்கப் போகிறேன் என்றுதான் குறிப்பிடுகிறார். அறைக்குள் சென்று உடலை மறைத்துக் கொள்ளப் போகிறேன் என்று குறிப்பிடவில்லை. ஆனால் இச்சம்பவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கார்த்திகைத் திங்களில் அறைக்குச் சென்று தாழிட்டுக் கொள்ளுமுன், உள்ளிருந்த விளக்கை சித்தி வளாக மாளிகையின் வெளிப்புறத்தில் வைத்து, இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்தக் கதவைச் சாத்திவிடப் போகிறேன். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்துகொள்வேன். (ஊரன் அடிகள், இராமலிங்க அடிகள் வரலாறு, ப. 618) என்று குறிப்பிட்டுள்ளார்.

வள்ளலாரின் இந்த இரண்டு வேண்டுகோள்களையும் நோக்கும் போது ஓர் உண்மையை ஊகிக்க முடிகின்றது. ஏதோ ஒருவகை அற்புதத்தை நிகழ்த்த அவர் தொடர்ந்து முயற்சித்ததும் அம்முயற்சியில் சிலபோது வெற்றிகிட்டாமல் போனதும் தெரிகின்றது. வள்ளலார் தாமே தேர்ந்தெடுத்த ஒரு தைப்ப+ச நன்னாளில் இறைவனாம் ஜோதியோடு இரண்டறக் கலந்தார் என்று அவரின் சீடர்கள் நம்புகின்றார்கள்.

கடை விரித்தோம் கொள்வாரில்லை கட்டிவிட்டோம்

என்று வருந்திக் கூறிய வள்ளலாரின் கண்முன்னே விரித்த கடையில் கொள்வாரில்லாததால் அவர்கட்டிக் கொண்டார் என்பது மட்டும் கசப்பான உண்மை.

துணை நூல்கள்:
1. ஊரன் அடிகள், இராமலிங்க அடிகள் வரலாறு,
சமரச சன்மார்க்க அராய்ச்சி நிலையம்,
வடலூர், மூன்றாம் பதிப்பு 2006
2. வள்ளலார் உரைநடை நூல், வர்த்தமானன் பதிப்பகம்,
சென்னை-17, மறு பதிப்பு: 2006

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...