இலக்கிய ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கிய ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 நவம்பர், 2021

முனைவர் ஆ. விஜயராணியின் சங்க இலக்கியத்தில் கபிலர் - நூல் அணிந்துரை

  

முனைவர் நா.இளங்கோ


குறிஞ்சி மலர்
 

தமிழில் இலக்கியத் திறனாய்வு மற்றும் ஆராய்ச்சிகள் பல்கிப் பெருகுவதற்கு அடிப்படையாகத் தளம் அமைத்துக் கொடுத்தப் பெருமை தமிழின் சுவடிப் பதிப்பாளர்களையே சாரும். அவர்களின் பதிப்புப் பணி முயற்சிகளால் ஏடுகளிலிருந்து அச்சு வடிவம் பெற்ற பழந்தமிழ் இலக்கியங்களே தமிழின் தொடக்க காலத் திறனாய்வுகளுக்கும் ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் மூலமாய் அமைந்தன. தமிழ் நூல்களின் அச்சு வரலாறு தம்பிரான் வணக்கம் (1557) என்னும் நூலிலிருந்து தொடங்குகிறது. ஐரோப்பிய மிஷனரிகளால் தோற்றம் பெற்ற தமிழ் அச்சு மற்றும் பதிப்புப் பணிகள் தமிழகத்தின் தரங்கம்பாடியில் முதன் முதலில் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட 1712ஆம் ஆண்டு தொடங்கிப் பல்கிப் பெருகின.  

1810ஆம் ஆண்டிற்குப் பின்னரே தமிழில் இலக்கிய இலக்கணப் பதிப்பு முயற்சிகள் தொடங்குகின்றன. 1812ஆம் ஆண்டில் திருக்குறள் மூலபாடமும் நாலடியார் மூலபாடமும் வெளியிடப் பெற்றன. இந்நூல்களே தமிழில் அச்சுருவம் பெற்ற முதல் இலக்கிய நூல்களாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தொல்காப்பிய இலக்கண நூல் அச்சாகியது. மழவை மகாலிங்க ஐயர் 1848இல் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார்.. அதற்குப் பின்னர் 1885இல் யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியப் பொருளதிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிட்டார்.

ஏடுகளில் இடம்பெற்றிருந்த தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சு வாகனம் ஏறியபின் தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வசதி பல்வேறு நூலாக்க முயற்சிகளுக்கு வழிவகுத்தது. 1850களில் ஏற்பட்ட பல்கலைக் கழகக் கல்வி (சென்னைப் பல்கலைக்கழகம் தோன்றிய ஆண்டு 1857) மொழி இலக்கியக் கல்வியில் பல புதிய பரிமாணங்களைத் தோற்றுவித்தது.

சங்க இலக்கியங்களுள் முதன்முதலாக அச்சேறிய நூல்  பத்துப்பாட்டு இலக்கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை. ஆண்டு 1851, பதிப்பித்தவர் ஆறுமுகநாவலர். சங்க நூல்களுள் பெரும்பாலானவற்றைப் பதிப்பித்துப் பெரும் புகழ் கொண்ட உ.வே.சா. அவர்கள் பத்துப்பாட்டு முழுவதையும் 1889 ஆம் ஆண்டில் வெளியிட்டார். தொடர்ந்து புறநானூறு (1894), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904), ஆகிய நூல்களையும் பதிப்பித்தார். வா. மகாதேவ முதலியார் (பொருநர் ஆற்றுப்படை 1907), சௌரிப் பெருமாள் அரங்கனார் (குறுந்தொகை 1915), பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் (நற்றிணை 1915), ரா. இராகவையங்கார் (அகநானூறு 1918) ஆகியோர் சங்க இலக்கிய நூல் பதிப்புகளின் முன்னோடிகளாவர். சற்றேறக் குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் நூற்றாண்டில் தொடங்கிய சங்க இலக்கியப் பதிப்புப் பணி இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டில் நிறைவு பெற்றது.

சங்க இலக்கியப் பதிப்பு முயற்சிகளைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களை, சங்ககாலப் புலவர்களை அறிமுகப்படுத்தும் பணிகள் தமிழிலக்கிய உலகில் தொடர்ந்தன. சங்கத் தமிழ்ப் புலவர்களில் இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெரும் புலவர்கள் பலரில் முதன்மையானவர் கபிலர் ஆவார். 1936ஆம் ஆண்டிலேயே வே. வேங்கடராஜூலு ரெட்டியார் கபிலர் என்ற தலைப்பில் கபிலர் வரலாறு, கபிலர் இலக்கியங்கள் குறித்த விரிவான விளக்கங்களுடன் ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து 1939ஆம் ஆண்டில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கபிலர் என்ற அதே தலைப்பில் ஒரு ஆய்வு நூலை வெளிட்டார். கடந்த நூற்றாண்டில் தொடர்ச்சியாகப் பத்துக்கும் மேற்பட்ட நூல்களும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் கபிலர் தொடர்பாக வெளியிடப் பட்டன. கல்விப் புலத்திற்கு வெளியே இத்தகு முயற்சிகள் தொடர்ந்த நிலையில் கல்விப் புலத்தில் முனைவர்ப் பட்ட ஆய்வுக்கு உரிய பொருண்மையாகக் கபிலரைத் தேர்ந்தெடுத்து ஒரு முழுமையான ஆய்வினை வெளியட்ட பெருமை முனைவர் ஆ.விஜயராணி அவர்களையே சாரும். முனைவர் ஆ.விஜயராணி அவர்களின் முனைவர்ப் பட்ட ஆய்வேட்டின் நூலாக்க வடிவமே சங்க இலக்கியத்தில் கபிலர் என்ற இந்த ஆய்வுநூல்.

முனைவர் ஆ.விஜயராணி புதுச்சேரி அரசின் தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் ஆவார். இவர் புதுச்சேரிப் பல்கலைக் கழகத் தமிழியல் துறையில் ”பிரஞ்சிந்திய விடுதலை இயக்கத்தில் காரைக்காலின் பங்கு” என்ற தலைப்பில் இளமுனைவர்ப் பட்ட ஆய்வினையும் ”சங்க காலக் கபிலர்” என்ற தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் முப்பத்திரண்டு இளமுனைவர்ப் பட்ட ஆய்வுகளுக்கும் எட்டு முனைவர்ப் பட்ட ஆய்வுகளுக்கும் நெறியாளராக இருந்து வழிகாட்டியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ள இவர், சிறந்த கவிஞரும் ஆவார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ள பேராசிரியர் விஜயராணி பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதோடு பல கருத்தரங்குகளுக்கு ஒருங்கிணைப் பாளராகத் திறம்பட செயலாற்றியுள்ளார். அவர் முதுகலைத் தமிழ் பயின்ற காலத்தில் அவருக்குப் பயிற்றுவிக்கும் வாய்ப்பு பெற்ற என்னை இன்றளவும் ஆசானாக ஏற்றுப் போற்றிப் புகழ்ந்து வருகிற பண்பாளர் என்ற பெருமை அவருக்குண்டு. ஆளுமை மிகுந்த பேராசிரியராக மட்டுமன்றி கல்லூரின் நிர்வாகப் பணிகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் திறமை அவரின் தனிச்சிறப்பு. பேராசிரியர். ஆ.விஜயராணியின் அரிய ஆய்வுத் தேட்டத்தில் உருவான சங்க இலக்கியத்தில் கபிலர் என்ற இந்த ஆய்வுநூல் அவரின் கல்வி மற்றும் ஆய்வுப் பயணத்தில் ஒரு தனித்த சிறப்பிற்குரிய படைப்பாகும்.

சங்க இலக்கியத்தில் கபிலர் என்ற இந்நூல் முன்னுரை, முடிவுரை தவிர்த்து நான்கு தலைப்புகளில் தமிழிலக்கியப் பெரும்புலவர் சங்க இலக்கியக் கபிலரின் வாழ்க்கை வரலாறு, அவரின் சமகால அரசர்கள், புலவர்களின் வரலாறு, அவரின் இலக்கியப் பணி மற்றும் அவர் கவிதைகளின் நடையியல் கூறுகள் முதலான செய்திகளை விரிவாகப் பேசுகின்றது.

·         தமிழ் இலக்கியங்களில் கபிலர்

·         சங்க காலக் கபிலர்

·         வரலாற்று நோக்கில் கபிலர்

·         நடையியல் ஆய்வில் கபிலர்

என்ற நான்கு தலைப்புகளும் தமிழிலக்கிய ஆய்வுலகில் இதுவரை பேசப்பட்டு விவாதிக்கப் பட்டு வந்துள்ள கபிலர் தொடர்பான அத்துணை சிக்கல்களுக்கும் தீர்வுகாண முயற்சி செய்கிறது. குறிப்பாகக் கபிலர் பலர் என்ற விவாதத்தை முன்னெடுத்து கால ஆய்வுகளின் துணையோடும், அரசர்கள், குறுநில மன்னர்கள், கடையேழு வள்ளல்களாகப் புகழப்படும் இனக்குழுத் தலைவர்களின் வரலாறுகளோடு சார்த்தியும் கபிலர் படைப்புகளின் நடையியல் கூறுகளின் துணையோடும் இலக்கியப் பாடுபொருளின் அடிப்படையிலும் முழுமையான ஆய்வினை நிகழ்த்தி விடைகாண முயன்றுள்ளது. நூலின் நான்காவது இயலாக இடம்பெற்றுள்ள நடையியல் ஆய்வில் கபிலர் என்ற இயலில் நூலாசிரியரின் அரிய உழைப்பினைக் காண முடிகிறது. நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ள பின்னிணைப்புகள் பதினேழும் வருங்கால ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் விளைக்கும் வகையில் பட்டியலிடப் பட்டுள்ளன.

      நூலின் தொடக்கத்திலேயே நூலாசிரியர் தமிழிலக்கிய வரலாற்றின் நெடும் பரப்பு தோறும் கபிலர் என்ற பெயரிலும் தொல்கபிலர், கபிலதேவர், கபில தேவநாயனார் என்ற பெயர்களிலும் பல்வேறு கபிலர்களை உள்ளனர் என்றும். சங்க இலக்கியத் தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள அகப்புறப் பாடல்கள் பாடிய கபிலர் மட்டுமல்லாது குறிஞ்சிக் கலி பாடிய கபிலர், ஐங்குறுநூற்றின் குறிஞ்சிப் பாடல்களைப் பாடிய கபிலர், பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தினைப் பாடிய கபிலர், பத்துப்பாட்டில் குறிஞ்சிப் பாட்டை பாடிய கபிலர், பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இன்னா நாற்பதைப் பாடிய கபிலர் முதலான சங்க காலக் கவிஞர்கள் மட்டுல்லாது கபிலரகவல் பாடிய புலவர் பக்தி இலக்கியக் கபிலர், பிற்காலத் தனிப்பாடல்களைப் பாடிய கபிலர் என கபிலர்களின் பட்டியல் நீள்கிறது என்றும் இந்த ஆய்வு சங்க காலக் கபிலரைப் பற்றியது என்றும் வரையறை செய்து விடுகிறார்.

      நூலின் முடிவுரையில்

சங்க காலக் கபிலர் என்ற ஆய்வின்வழி சங்க இலக்கியங்களில் கபிலர் என்ற பெயரில் நான்கு வேறுபட்ட புலவர்களால் பாடப்பெற்ற இலக்கியங்கள் உள்ளன என்றும்.

அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய தொகை நூல்களில் கபிலர் பெயரில் இடம்பெறும் பாடல்களைப் பாடிய புலவர் ஒருவர்.என்றும் கலித்தொகையில் இடம்பெறும் குறிஞசிக் கலி பாடல்களைப் பாடிய கபிலரும், ஐங்குறுநூற்றில் இடம்பெறும் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடிய கபிலரும் பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டினைப் பாடிய கபிலரும் வேறு வேறானவர்கள். இந்த மூன்று இலக்கியங்களையும் பாடிய கபிலர்கள் தொகைநூலில் இடம்பெற்றுள்ள அகப்புறப் பாடல்களைப் பாடிய கபிலருக்குக் காலத்தால் பிற்பட்டவர்கள் என்பதனைத் தெளிவுபட உரைத்துள்ளார். இக்கூற்று நூலாசிரியர் ஆய்வு உறுதி மற்றும் ஆய்வுத் திறத்துக்கு எடுத்துக்காட்டாகும்.

கபிலர் என்ற சங்க காலப் புலவர் என்ற மையப் பொருளில் இந்த நூல் அமைந்திருந்தாலும் ஒவ்வொரு இயலும் சங்க இலக்கியத்தின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணப்பட்டு சங்க இலக்கியங்களின் முழுமையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. சங்க கால அரசர்கள், புலவர்கள் பலரின் வரலாறும் இலக்கியப் பாடுபொருள்களும் இடையிடையே பேசப்படுவதால் சங்க இலக்கியங்களை முழுமையாகக் கற்றுணர்ந்த நிறைவு நமக்கு ஏற்படுகிறது.

ஆய்வுக்கான கடுநடை இல்லாமல் எளிமையான இனிமையான தமிழில் சங்க இலக்கியச் செய்திகளை விவரித்துச் செல்லும் ஆய்வாளரின் மொழிநடை பாராட்டுதற்குரியது. ஆழ்ந்த இலக்கிய இலக்கணப் பயிற்சி இல்லாமல் சங்க இலக்கியங்களைக் கற்பதோ ஆய்வு செய்வதோ இயலாத செயலாகும். நூலாசிரியர் முனைவர் ஆ.விஜயராணி செப்பமாக இந்த ஆய்வினைச் செய்து முடித்துள்ளமை அவரின் ஆழ்ந்த நூலறிவினைப் புலப்படுத்துகிறது. தொடர்ந்து இத்துறையில் அவர் மேலும் பல ஆய்வுகளை நிகழ்த்தி பொதுமக்களிடம் நமது செம்மொழி இலக்கியங்களின் சிறப்பினைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அணிந்துரையை நிறைவு செய்கிறேன். நல்ல நூல்களை ஏற்றுப் போற்றிப் பராட்டும் தமிழுலகம் இந்நூலையும் போற்றிப் புகழும் எனபதில் ஐயமில்லை.

முனைவர் நா.இளங்கோ

nagailango@gmail.com    

 

 

 

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

விழிகள் தி.நடராசனின் முகமற்றவர்களின் முனகல்கள் - அணிந்துரை



முனைவர் நா.இளங்கோ




உலகக் கலைகளுக்கெல்லாம் தாயாய் இருக்கும் கலை இசைக்கலையே. புவிக்கோளத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலமே உலக உயிரினங்களுக் கெல்லாம் ஆதாரம் ஆனதுபோல், இந்த இயற்கையின் கொடையாகிய வளிமண்டலமே இசைக்கும் ஆதாரம். இசையும் மொழியும் இணைந்த போதுதான் கவிதை பிறந்தது. ஓசையை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தி அதில் சொற்களை இட்டு நிரப்பி மனிதன் கவிதையைக் கற்றுக் கொண்டான். தொடக்கத்தில் கவிதை என்பது பாட்டுதான். எழுத்துக்களைப் படைத்துக் கொள்வதற்கு முன்பே மனிதன் பாட்டைப் படைத்து விட்டான். பாட்டில் இசையே முதன்மை பெற்றது, சொல்லும் பொருளும் அடுத்த இடத்தில்தான். கவிதை, மனித இனத்தின் தனிப்பெரும் சொத்து. மனிதன் மொழியைப் பேசக் கற்றுக்கொண்டதைப் போலவே கவிதை படைக்கவும் கற்றுக்கொண்டான். மொழியோடு உடன்பிறந்த கலை கவிதைக்கலை. மொழியறிந்த ஆதிமனிதன் தொடங்கி இன்றுள்ள நவீன மனிதன்வரை கவிதை படைக்காத மனிதர்கள் இல்லை. மனித சமூகத்தின் வளர்ச்சி வரலாற்றில் கவிதைகள் அவனை இன்புறுத்தின, எழுச்சியூட்டின, போராடத்தூண்டின. சமூக மாற்றங்களின் ஒவ்வொரு கட்டத்திலும் கவிதைகள் உடனிருந்து உற்ற துணைபுரிந்து மனிதர்களை வளப்படுத்தியுள்ளன. சாதாரண பாமர உழைக்கும் மக்கள் தொடங்கிப் புலமையாளர்களுக்கும் மன்னர்களுக்கும் மதகுருமார்களுக்கும் தத்துவ வித்தகர்களுக்கும் கவிதைகளே அன்றைய ஊடகங்களாய் ருந்தன. மனிதகுல வரலாறு கவிதைகளோடு தொடங்கிக் கவிதைகளோடு பயணித்துக் கவிதைகளோடு வாழ்கின்றது. தமிழ்க் கவிதைகளும் இப்படித்தாம்.
தமிழில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கவிதை தொடங்கி நேற்றைய.. இன்றைய கவிதைகள்வரை பல்லாயிரம் தமிழ்க் கவிதைகளைப் பார்த்து.. படித்து.. பழகிவிட்டோம். இன்னும் பிடிபடாத ஒரு வியம். கவிதை செய்யும் கலை. கவிஞர்களுக்கு உள்ளேயிருந்து கவிதை பிறக்கிறது. மற்றவர்களுக்கு? எழுத்தும் சொல்லும் அடம் பிடிக்கின்றன, கவிதையாக மாட்டேன்போ.. என்று!. பிறவிக் கவிஞர்கள் என்று கேள்விப் பட்டிருப்போம். அதென்ன பிறவிக் கவிஞன்? கருவிலே திருவுடையான். அப்படியெல்லாம் யாரும் பிறப்பதில்லை. கவிஞர்கள் கவிஞர்களாகப் பிறப்பதில்லை. அவர்கள் கவிஞர்கள் கிறார்கள் அல்லது ஆக்கப் படுகிறார்கள். நல்ல கவிதை எழுதுவது என்பது செய்ந்நேர்த்தி. “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்என்று ஒளவையார் சொன்னதைப் போல், கவிதை பழகுவதால் வருவது. பழகுவது என்றால் எழுதிப் பழகுவது மாத்திரமில்லை. மனத்தால் பழகுவது.. பழக்குவது. அதனால்தான், “உள்ளத்து உள்ளது கவிதைஎன்று கவிமணி சொன்னார். கவிதை எழுதப் படிப்பறிவு கட்டாயத் தேவையில்லை. இதற்கு நாட்டுப்புறக் கவிதைகளே சாட்சி.
சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய ஹைக்கூவரை தமிழ்க் கவிதைகளின் பயணம் நெடியது. உள்ளடக்கங்கள், வடிவங்கள், உத்திகள் இவற்றில் தமிழ்க் கவிதைகள் சந்தித்த மாற்றங்கள் எத்தனை எத்தனையோ! ஆனாலும் மாற்றங்களின் ஊடாக இழையோடும் ஒருவகை மரபுத் தொடர்ச்சி தமிழ்க் கவிதைகளுக்கு உண்டு. இந்த மரபுத் தொடர்ச்சிதான் தமிழ்க் கவிதைகளின் ஜீவசக்தி. உள்ளார்ந்த ஆற்றல்.
இனிய நண்பர் கவிஞர் விழிகள் தி.நடராசன், விழிகள் பதிப்பக உரிமையாளர். செய்யும் தொழிலே தெய்வம் என்ற கொள்கையுடையவர். ஜென்துறவியைப் போல் எதைச் செய்கின்றோமே அதை முழுமையாக ஈடுபட்டுச் செய்தல் என்ற தத்துவப் பார்வையோடு செயல்படக் கூடியவர். பதிப்புத் துறையில் தனித்திறனாளர். மனிதர்களை நேசிப்பதைப் போலவே நூல்களையும் நேசிக்கத் தெரிந்தவர். அழகுணர்ச்சியோடு அவர் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தில் மட்டுமல்ல கடல்கடந்த சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களையும் வசீகரிக்கக் கூடியன. உலக இயக்கத்தின் அச்சாணியே பணம்தான் என்று வாழும் இன்றைய சராசரி மனிதர்களைப் போல் இல்லாமல் சகமனிதர்களைத் தோழமையோடு அன்பு பாராட்டிக் கொண்டாடும் பேருள்ளத்தர். தமிழின் தலைசிறந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் பலரோடு நாளும் பழகும் நல்லதோர் வாய்ப்பினைப் பெற்றவர் என்பதனால் கவிஞர் தி.நடராசன் அவர்களுக்கு எழுத்தாற்றலும் கைகூடி வந்திருக்கின்றது. அவர் எழுத்தாற்றலின் ஒருமுகம் தான்வாழும் சமூகத்தைப் புறமிறித்துப் பார்க்கும் அவரின் கவிதைகள். முகமற்றவர்களின் முனகல்கள் என்ற இக்கவிதைத் தொகுப்பு விழிகள் தி.நடராசனின் அண்மைப் படைப்பு.
மகாகவி பாரதி தொடங்கிவைத்த சமகாலக் கவிதைகளுக்குக் கடந்த ஒரு நூற்றாண்டில் உரமிட்டு நீர்பாய்ச்சி வளம் சேர்த்தவர்கள் மிகப்பலர். வாழும் சமூகத்தையும் சகமனிதர்களின் இன்ப துன்பங்களையும் பாடாமல் கற்பனையில் மனிதர்களைக் கடைத்தேற்றும் வெற்று வேதாந்தங்களைப் புறந்தள்ளி இருபது, இருபத்தோராம் நூற்றாண்டுக் கவிதைகள் மனிதகுல முன்னேற்றத்திற்குப் புதுப்பாதை சமைத்தன. அந்த வகையில் மரபுக் கவிதையோ, புதுக்கவிதையோ கவிதையாய் இருப்பது புத்துலகுக்கு விதையாய் இருக்கும் என்ற நம்பிக்கையோடு முகமற்றவர் களின் முனகல்களைப் பதிவு செய்கிறார் தி.நடராசன்.
முகமற்றவர்களின் முனகல்கள் என்ற ந்தக் கவிதைத் தொகுப்பின் தனிப்பட்ட குரலை நூலின் தலைப்பிலேயே நாம் இனங்கண்டு கொள்கிறோம். சமகாலப் பிரச்சனைகள் அனைத்தையுமே கவிஞரின் முனகல்களில் நாம் தெளிவாகக் கேட்க முடிகிறது. தனிமனிதச் சோகங்கள் தொடங்கிச் சமூகத்தின், மொழியின், இனத்தின், தேசத்தின் சோகங்கள் ஓர் உள்ளடங்கிய அவலம் தோய்ந்த தொனியில் தொகுப்பின் பக்கங்கள் தோறும் வெளிப்படுகின்றன.  ஆங்காங்கே நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளும் தெரிவது கவிதைத் தொகுப்பின் கனத்தைக் கூட்டுகின்றது.
வாழ்க்கை குறித்த விசாரணைகளை ஓர் ஆழ்ந்த தத்துவத் தேடலோடு கவிஞர் வெளிப்படுத்துவது அவரின் தனித்தன்மையைக் காட்டுகிறது. நீரை இழந்த நதி, கடக்கும் காலம், யாருக்காக யார் அழுவது, சமூக வீதியில் ஓரங்க நாடகம், இறப்பு முதலான கவிதைகளை இவ்வகைக் கவிதைகளாக நாம் அடையாளம் காண முடியும்.
கவிஞர் தி.நடராசனின் பல கவிதைகள் படிமத் தன்மைகளோடு குறியீடுகளின் பிணைப்பில் சொற்களின் பொருட் புலப்பாட்டுக்கு மீறிய வீச்சோடு புனையப் பட்டுள்ளன. இவ்வகைக் கவிதைகளில் கவிஞரின் தீவிரமான இலக்கிய வாசிப்பும் பயிற்சியும் புலப்படுகின்றன.
 சாக்குமூட்டைஎன்ற தலைப்பிலான பின்வரும் கவிதையினை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.
கனவு விழியில்
கால்வைத்துப் படுத்தான்
விழிக்கோள உருண்டை
அவன் கால்களை
நீட்ட முடியாமல்
தடுத்தது..
கண் விழித்தால்..
சாக்குமூட்டையில்
கட்டிப் போட்டிருந்தனர்
அவனையும்
அவன் கனவுகளையும்.
கனவுவிழி’, ‘விழிக்கோள உருண்டைமுதலான சொற் சேர்க்கைகளில் ஓர் அதீதப் படிமம் கட்டமைக்கப் படுவதனை கற்போர் உணர்ந்து மகிழ முடியும்.
கவிஞருக்கு ஜென் தத்துவத்திலே ஆழ்ந்த ஈடுபாடு உண்டு என்பதனை இத்தொகுப்பின் சில கவிதைகள் அடையாளப் படுத்துகின்றன.
மலரில் தேன்எடுக்கும் போது
மலரும் வண்டும் பேசும்
காதல்மொழி உங்களுக்குக் கேட்கிறதா?
இல்லையெனில் -நீங்கள்
ஒரு வண்டாக மாறுங்கள்.
காதல்மொழிஎன்ற தலைப்பிலான இக்கவிதையில் மலரும் வண்டும் பேசும் காதல் மொழியினை நாம் கேட்க வேண்டுமென்றால் நாம் வண்டாக மாறவேண்டும் என்று கவிஞர் பரிந்துரைக்கும் குரலில் ஒரு ஜென்துறவியின் குரலைக் கேட்க முடிகிறது.
நிறைவாக, ‘பிடிக்கலாமா?’ என்ற தலைப்பிலான கவிஞர் தி.நடராசன் அவர்களின் கவிதையோடு அணிந்துரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்
கவிதையைப் பிடிக்கமுடியா தென்பவனுக்கும்
காற்றைப் பிடிக்க முடியா தென்பவனுக்கும்
ஒன்றே ஒன்று சொல்கிறேன்.
இரண்டும் உள்மூச்சில்
அடைபட்டுக் கிடப்பதைஉன்
அறிவுஒளி கொண்டுபார்
தெரியும்.
கவிதை ஒவ்வொரு மனிதனின் உள்மூச்சிலும் அடைபட்டுக் கிடக்கிறது. அதனை உணர்பவன் படைப்பாளி யாகிறான் என்ற கவிஞரின் கூற்று ஆழ்ந்த பொருள் பொதிந்தது. நான் வேறுஒரு கவிதை நூலுக்கு எழுதிய வரிகளை அதன் பொருள் பொருத்தம் நோக்கி இங்கே தருகிறேன்.
கவிதை எல்லோருக்குமானது, ஒவ்வொருவர் மனதிலும் கவிதை இருக்கிறது, அதை வடித்தெடுப்பவன் கவிஞனாகிறான். இதுவரை உலகத்தில் எழுதப்பட்ட கவிதைகளைவிட எழுதப்படாமல் ஒவ்வொருவர் மனதிலும் பிறந்து தவழ்ந்து வெளிவராமல் செத்துப்போன கவிதைகள் ஏராளம். அவற்றில் உலகின் தலைசிறந்த கவிதைகள் ஏராளமிருக்கலாம்.
கவிஞர் தி.நடராசனின்,  முகமற்றவர்களின் முனகல்கள் என்ற இக்கவிதைத் தொகுப்பு நம்மை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஏராளம். சிலகவிதைகள் கேள்விகளோடு விடைகளையும் சொல்கின்றன. சிலகவிதைகள் மௌன சாட்சியாய் நிற்கின்றன. கவிஞரின் ஒவ்வொரு கேள்விக்குப் பின்னும் அவரின் அனுபவத் தோய்வும் தேடலின் தொய்வும் தென்படுகின்றன. கவிஞர் மட்டும்தான் தேடவேண்டுமா? நாமும் தேடுவோம். தேடலுக்கு வழிகாட்டும் இத்தொகுப்பு தமிழுக்குத் தேவையானதோர் நல்வரவு. நல்ல நூல்களை வரவேற்று மகிழும் தமிழுலகம் இந்நூலையும் ஏற்றுப் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை நமக்குண்டு.

-முனைவர்நா.இளங்கோ
nagailango@gmail.com

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...