ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

மனிதநேயக் கவிஞர் தமிழ்ஒளி - முனைவர் நா.இளங்கோ

மனிதநேயக் கவிஞர் தமிழ்ஒளி

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

1947 நவம்பர் 15 அன்று கவிஞர் தமிழ்ஒளி வீராயி என்ற காவியத்திற்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு எழுதுகின்றார்.
“நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தவன் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள்"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி காவியங்கள் தொகுதி ஒன்று, பக். 129-130)

கவிஞர் தமிழ்ஒளி எழுத்தாள நண்பர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்குத் தாமே ஒரு முன்னுதாரணமாகத் தம் படைப்புகளைப் படைத்துக் காட்டினார். தமிழ்க் கவிதையுலகில் தமிழ்ஒளி போல் மனித நேய மிக்க படைப்பாளிகள் தோன்றுவது அபூர்வம். கவிஞரின் மனித நேயம் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான நேயமாக உருவம் கொண்டது. சமூகத்தில் பொதுவான மனித நேயம் பேசும் படைப்பாளிகள் பலருண்டு. ஆனால் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டு அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லல்படும் ஏழை எளிய மக்களின் வாழ்வைக் கூர்ந்து நோக்கித் தம் எழுத்துக்களால் அவர்கள் படும் துயரங்களைப் படம் பிடித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களின் துயர் நீக்கும் வழிகளையும் தெளிவுபடுத்திப் படைப்புலகில் தமக்கென ஒரு தனியிடம் பெற்றவர் கவிஞர் தமிழ்ஒளியே.

தமிழ்ஒளி இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணி வேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை உணர்ந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் கவிதைகளில் பாராட்டினார். துணைநின்றார். தொழிலாளர் சங்கங்களையும், துறைமுகத் தொழிலாளி, டிராம்வேத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, நகர சுத்தித் தொழிலாளி எனச் சங்கம் வைத்துப் போராடத்தொடங்கிய அனைத்து உழைக்கம் மக்களையும் பாராட்டிக் கவிதை புனைந்தார். சென்னைத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார்.
உலகத் தொழலாளர்களின் உரிமைத் தினமான மே தினத்தைப் பற்றி முதன் முதல் தமிழில் பாடிய கவிஞன் தமிழ்ஒளியே ஆவார்.

தமிழ்ஒளியின் மனித நேயம் எப்படிப்பட்டது?

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது ஒருவகை மனித நேயம். சமூகத்தின் விளிம்பு நிலையில், வாழ்க்கையே போராட்டமாய்ச் சமூக ரீதியாகச் சாதிஎ ன்ற பேரிலும் வர்க்க ரீதியாக தொழிலாளி என்ற நிலையிலும் சுரண்டப்படும் உழைக்கும் மக்கள் மீதான மனித நேயம் மற்றொரு வகை. எல்லா மனிதர்களிடத்தும் பேசும் அன்பும் மனித நேயமும் சமூகத்தின் கடைசிச் குடிமகன் வரைத் தன் கரங்களை நீட்டுவதில்லை. உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரோடு அந்த வகை மனித நேயம் நின்று விடுகிறது.

தமிழ்ஒளிக்குமுன் கவிதை படைத்த எத்தனையோ கவிஞர்கள் அன்பையும் அருளையும் பேசியிருக்கிறார்கள். சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியின் அவலம், கழைக்கூத்தாடியின் துயரம் மற்றும் இன்னபிற கடைக்கோடி மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் அவர்களைப் பாதித்திருக்கின்றனவா? இல்லையே, அதனால்தான் கவிஞர் தே.ப.பெருமாள் தமிழ்ஒளியைப் புகழ்ந்து கவிதை பாடும்பொழுது,

“ஏழை நெடுந்துயரை ஏய்ப்பவரின் சூழ்ச்சியினை
ஊழல் சமுதாய ஊனத்தைப் பாழாக்கும்
கீழ்மேல் பிரிவினையைக் கேடளிக்கும் பேதத்தை
வீழ்த்தக் கவிசெய்தான் வேந்து”

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.154)

என்று அவரின் உண்மையான மனித நேயப் பண்பினை விதந்து பேசுகின்றார்.
எல்லாக் கவிஞர்களும் பூத்துக் காய்த்துக் குலுங்கும் மரத்தை, அதன் அழகை வியந்து பாடுவார்கள். தமிழ்ஒளி,

“குந்த நிழல்தரக் கந்த மலர்தரக் கூரை விரித்தஇலை!
வெந்து கருகிட இந்த நிறம்வர வெம்பிக் குமைந்தனையோ?
கட்டை எனும்பெயர் உற்றுக் கொடுந்துயர் பட்டுக் கருகினையே!
பட்டை எனும்உடை இற்றுக் கிழிந்தெழில் முற்றும் இழந்தனையே!”

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.57)

என்று வெந்து கருகிப் பட்டைகள் உரிந்து பட்டுப்போய் நிற்கும் மரத்தைப் பரிவோடு பாடும் தமிழ்ஒளியின் கவிதையில் தெரியும் மனித நேயம் வியப்புக் குரியதல்லவா?

இயற்கையைப் பாடும் கவிஞர்கள்

இயற்கையைப் பாடாத கவிஞர்களே இல்லை. இயற்கையைப் பாடும்போது உழைக்கும் மக்களை நினைக்கும் கவிஞர்கள் மிகச் சிலரே. இந்த மிகச் சிலரிலும் கவிஞர் தமிழ்ஒளி எப்படி வேறுபட்டுத் தம் மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றார் என்பதைக் காணலாம்.

“கருணையில்லார்-மிதிக்கின்றார் ஏழைகளை
இரவெனும் தாய்
மீட்சி தந்தாள் ஏழை மக்களுக்கே!
தூக்கம் என்னும் -புத்தமுதப் பால் சுரந்து பருக வைத்தாள்"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.15)

இரவையும் இருட்டையும் பாடும் போதெல்லாம் கவிஞர்களுக்கு வேறு ஏதேதோ நினைவுக்கு வரும். ஆனால் கவிஞர் தமிழ்ஒளிக்கு, உழைப்பவர்களின் உழைத்த உடல்வலி நீங்க இரவு என்னும் தாய் தூக்கம் என்னும் புத்தமுதப்பால் கொடுத்து உறங்க வைப்பதாகத் தோன்றுகிறது.

“நெடுந்தறியோடு ஆலையிலே உழன்றோர் தாமும்
நெருப்புருவாய் உலையருகே- இருந்தோர் தாமும்
கொடுந்துன்பச் சேற்றினிலே உழன்றோர் தாமும்
கொளுத்தும் வெயிலில் வாடிக் கிடந்தோர் தாமும்
படுந்துயரம் போதும் எனக் கதறும் போதில்
பறந்தோடி வந்தாய் நீ இரவே"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.15)

என்று இரவை மனித நேயத்தோடு இணைத்துப் பாடுகிறார்.

தொழிலாளியின் மாளிகை

துறைமுகத் தொழிலாளர்களின் அவலம் மிக்க வாழ்க்கையைப் படம் பிடிக்கும் கவிஞர் தமிழ்ஒளி, அவர்களின் குடும்பம் வாழ்ந்து வரும் இருப்பிடத்தை வருணிக்கும் பாடலில்,

“இநத்ப் பெரும்குடும்பம் என்றும் வசித்துவர
கந்தல் படுதாவில் கட்டியதோர் மாளிகையாம்
கோணி அதன்மேலே கூரை பழந்தகரம்
தூணோ சிறுகொம்பு தொட்டில் பழங்கந்தை"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.27)

‘கந்தல் படுதாவில் கட்டிய மாளிகை’ என அவர்களின் வீட்டைக் குறிப்பிடும் பகுதி சோக உணர்வின் படப்பிடிப்பாக இருப்பதை உணரமுடியும். இப்படித் தெருவோர, சாக்கடையோரப் பகுதிகளில் குடியிருக்கும் இலட்சக் கணக்கான இந்தியக் குடிமக்களைப் பற்றி நினைத்துப் பார்த்து அவர்களின் வேதனைகளைப் பதிவும் செய்யும் படைப்பாளிகள் தமிழ்ஒளியைப் போன்ற ஒரு சிலரே என்பதை உணர்தல்வேண்டும்.

பேதைச் சமூகம்

கழைக் கூத்தாடிகளின் சோகம் மிகுந்த வாழ்க்கையைப் பாடும் கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் குழந்தைகள் செய்யும் ஆபத்து மிக்க வித்தைகளைக் கணகலங்கிப் பாடுகின்றார்.

“உச்சியில ஒரு சின்னக்கம்பி-அதில்
ஒட்டிய வட்டத் தகரத்திலே
குச்சி உடலொன்று சுற்றுதையா-விசை
கொஞ்சம் தவறிடில் மிஞ்சிடுமோ?"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.23)

பேதைச் சுமூகம், அறிவற்ற சமூகம், இரக்கமற்ற சமூகம் என்றெல்லாம் இந்தச் சமூகத்தைச் சாடுவதன் வழியாகத் தம் மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றார் கவிஞர்.

அறிவியலின் மேன்மை

கவிஞர் தமிழ்ஒளி விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை அவலங்களை மனித நேய உணர்வோடு பாடித் தம் மனித நேயத்தைக் கட்டமைக்கின்றார். அவலங்களைப் பாடுவதும் கண்ணீர் விடுவதும் மட்டுமே மனித நேயமாகுமா? ஆகாது. அவர்கள் துயர் நீக்க என்ன வழி என்று இனங்காட்டுவதே உண்மையான மனித நேயமாகும். எனவேதான் கவிஞர் தமிழ்ஒளி அணுவின் ஆற்றலை வியந்து பாடும் சூழலில் அறிவியல் வளர்ச்சியால், அறிவியலின் ஆற்றலால், உலகில் ‘யந்திரம் கொக்கரிக்க ஆலைகள் தாம் சிரிக்க எந்திரத்தாலே உலாம் நடக்கும் எங்கெங்கும்’ என்று மகிழ்வதோடு,

“கையுழைப்பும் கால் உழைப்பும் காட்டடிமை போல் உழைத்த
மேய்யுழைப்பும் போயொழிய விஞ்ஞானப் பேரொளியால்
வேலைகுறைய விருப்பம் நிறைவெய்த
ஆணும் பேண்ணும் அன்றே சமத்துவமாய்....
விஞ்ஞானப் பூங்கா விரித்த மலர்களாய்
அஞ்ஞானம் நீக்கி அடிமைத்தளை போக்கி....
சூரிய நன்மை சுடர்க பொதுவுடைமை
வாழிய வையம் வளர்க அணுவாற்றல்"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.94)

என்றெல்லாம் அறிவியல் யுகத்தில் ஏற்படப் போகும் மாற்றங்களைப் பட்டியல் இடுவதோடு, அறிவியலை அணுவாற்றலை வாழ்த்தவும் செய்கின்றார்.
அறிவியல் வளர்ச்சியால் அறியாமை நீங்கும், அறியாமை நீங்கினால் அறிவு ஓங்கும், அறிவு ஓங்கப் பொதுவுடைமை மலரும், பொதுவுடைமைச் சமூகத்தில் வறுமை ஒழியும், சமத்துவச் சமூகத்தில்,

“உழுபவனே நிலத்திற்குச் சொந்தக்காரன்!
உழைப்பவனே தேசத்தின் உரிமையாளன்!"


(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 2,ப.37)
என்ற விபரம் பிறக்கும் இது கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...