வியாழன், 8 அக்டோபர், 2009

ஆய்வு நோக்கில் குறுந்தொகை - பதிப்பு வரலாறு

ஆய்வு நோக்கில் குறுந்தொகை - பதிப்பு வரலாறு

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.



குறுந்தொகைப் பதிப்பு வரலாறு

சங்க நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சி 19 ஆம் நூற்றாண்டில் 1887 முதற் கொண்டுதான் தொடங்கியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டில் 1920 ஆம் ஆண்டிற்குள் சங்க இலக்கியப் பாட்டும் தொகையும் அச்சுருப் பெற்றுவிட்டன. குறுந்தொகைச் சுவடிகளைப் பொறுத்த மட்டில் நாட்டின் பல இடங்களிலும் பரவலாகக் கற்றவர்களிடையே இருந்து வந்துள்ளன.

முதல் பதிப்பு:

முதன் முதலாகக் குறுந்தொகையைப் பதிப்பித்தவர் திருக்கண்ணபுரத் தலத்தான் சௌரிப் பெருமாள் அரங்கன் என்பவராவர். 1915 இல் அரங்கனார் உரையெழுதி இந்நூலை வெளியிட்டார். நூலின் முன்னுரையில், "இத்தொகை நூல் மூலப்பகுதியை யேனும் நந்தமிழர்களில் எவரும் இதுகாறும் வெளிப்படுத்தாதிருந்தது அவர்கட்கு ஒரு குறையென்றே எண்ணலாம்" என்று குறிப்பிட்டிருப்பதால் இதுவே குறுந்தொகையின் முதல்பதிப்பு என்பதை உணரலாம். தம் ஆசிரியப் பணிகளுக்கிடையே எங்கு எங்கெலாம் சென்று எவ்வெவ் வகையில் சுவடிகளைப் பெற்று ஆராய்ந்தார் என்பதனை அவர்தம் பதிப்பு முன்னுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரங்கனார் திணைக் குறிப்பின்றி இருந்த இந்நூற் பாடல்களுக்குத் திணைக் குறிப்புகளை ஆராய்ந்து குறித்துள்ளார். இந்நூலுக்குப் பழைய உரை கிட்டாத நிலையில் தாமே அரிதின் முயன்று உரையும் எழுதிச் சேர்த்துள்ளார்.

"இதனைப் பலகால் முயன்று தமது கூரிய சீரிய நுட்பமதியுடன் எனது ஆருயிர் அன்பர்களாகிய ஸ்ரீமத் பண்டிதர் டி.எஸ். அரங்கசாமி அய்யங்கார் அவர்கள் தாம் இயற்றிய திணை, உள்ளுறை, இறைச்சி, மேற்கோள், இலக்கணக் குறிப்பு முதலியவற்றைக் காட்டிச் சுருங்கச் சொல்லி வியங்க வைத்தலாகிய புத்துரையுடன் ஆராய்ச்சித் திறன் கொண்ட அரும்பெரும் குறிப்புகள் பலவற்றைச் சேர்த்து அழகிய புத்தகமாகப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள்."
எனக் குறுந்தொகை முதல் பதிப்பின் முகவுரையில் மணக்கால் அய்யம் பேட்டை எஸ். முத்து ரத்திந முதலியார் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை பதிப்பாசிரியர் சௌரி அரங்கனாரின் பேருழைப்பையும் புலமையையும் வெளிப்படுத்திக் காட்டவல்லது. குறுந்தொகைப் பாடல்களுக்கு முதன்முதலில் திணை வகுத்துக் காட்டி, உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றைப் பகுத்து விளக்கிய பெருமை சௌரி அரங்கனாருக்கே உரியது.

1920 இல் கா.நமச்சிவாய முதலியார் குறுந்தொகை மூலத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினார் ஆனால் அம்மூலப் பதிப்பு வெளிவந்ததாகத் தெரியவில்லை.
1930 இல் டி.என்.சேஷாசல ஐயர் தாம் வெளியிட்டுவந்த 'கலாநிலையம்' வார இதழில் திரு இராமரத்தின ஐயர் எழுதிய உரையுடன் குறுந்தொகையை வெளியிட்டுவந்தார் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் தொடங்கி வாராவாரம் வெளிவந்த இவ்வுரை அந்த ஆண்டு டிசம்பர்த் திங்களில் முற்றுப் பெற்றது. இவ்வுரை தனி நூலாக வெளிவரவில்லை. இராம ரத்தின ஐயருக்குப் பின் சாம்பசிவ சர்மா என்பவரும் ஒரு திங்களிதழில் உரை எழுதினார் அதுவும் தனிநூலாக வெளிவரவில்லை. இன்னார் உரை என்று பெயர் சுட்டாமல் இவ்விரு உரைகள் வெளிவந்ததைக் குறிப்பிடுகிறார் உ.வே.சா. தம் குறுந்தொகைப் பதிப்பு முன்னுரையில்.

1933 இல் அருணாசல தேசிகர் குறுந்தொகை மூலம் மாத்திரம் கொண்ட பதிப்பு ஒன்றை வெளியிட்டார். சென்னை பி.என். அச்சகத்தில் அச்சிடப்பட்ட அந்நூல் விலை ரூ.1.00 க்கு விற்கப்பட்டுள்ளது. இப்பதிப்பில் சுவடிகள் ஒப்பிட்டு மூலபாடம் செம்மை செய்யப் பெற்றுள்ளது.

உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு:

1937 இல் உ.வே.சாமிநாதய்யரின் விளக்கவுரையுடன் கூடிய குறுந்தொகை ஆராய்ச்சிப் பதிப்பு வெளிவந்தது. குறுந்தொகையின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றிய பெருமை இப்பதிப்பிற்கே உரியது. இப்பதிப்பில் உ.வே.சா அவர்கள் கூற்று, கூற்று விளக்கம், மூலம், பிரதிபேதம், பழைய கருத்து. ஆசிரியர் பெயர், பதவுரை, முடிபு, கருத்து, விசேடவுரை, மேற்கோளாட்சி, ஒப்புமைப் பகுதி எனப் பன்னிரண்டு கூறாகப் பகுத்துக் கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கமான உரை எழுதியுள்ளார்கள்.

சங்கநூல் வெளியீட்டில் உ.வே.சா அவர்களால் இறுதியாக வெளியிடப் பெற்றது இக் குறுந்தொகை உரைநூல். தாம்பெற்ற பெரும் பயிற்சியால் சுவடிகளை ஆராய்ந்து ஒப்புமைப் பகுதிகள், மேற்கோளாட்சிகள், என்று இன்னோரன்னவற்றைத் தொகுத்து ஒப்புநோக்கி உரை வரைந்துள்ளமை இப்பதிப்பின் தனிச்சிறப்பாகும். நூலின் முகப்பில் விரிவான முகவுரை அமைந்திருப்பதோடு நூலாராய்ச்சி என்னும் ஆய்வுப் பகுதி ஒன்றும் இதில் உள்ளது. பாடினோர், பாடப்பட்டோர் அகரவரிசை, அரும்பதம் முதலியவற்றின் அகராதி முதலியனவும் இதன் சிறப்பு அங்கங்களாகும். பதிப்பு, உரை வரலாற்றில் இக் குறுந்தொகை பதிப்பு ஒரு திருப்புமுனையாகும்.

ஒவ்வொரு செய்யுளுக்குமான உயிர்நிலைப் பொருளைத் தெரிவிக்கும் சிறுகுறிப்புகள் சங்க இலக்கிய ஏடுகளில் இடம்பெறும். இதனைப் பழங்குறிப்பு என்று குறிப்பிடுவர். பழங்குறிப்புகளைப் பாடலை அடுத்துத் தந்து, பாடிய புலவர் பெயரைத் தருவது ஏடுகளில் காணப்படும் முறையாகும். இம்முறை சோ.அருணாசல தேசிகர் பதிப்பு, உ.வே.சா. பதிப்பு ஆகியவற்றில் இடம்பெறுகின்றது.

பிற பதிப்புகள்:

1940 இல் சங்க இலக்கிய மூலங்களைத் தொகுத்துப் புலவர் பெயரடைவு அடிப்படையில் சைவசித்தாந்த சமாஜப் பதிப்பாக வெளியிட்டார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. சங்க இலக்கியப் பதிப்பு வரலாற்றில் இடம்பெற்ற இப்பதிப்பு, மூல பாடத்தில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டமைந்த செம்பதிப்பாகும். இப்பதிப்பு உ.வே.சா. பதிப்பிலிருந்து மாறுபட்டு 234 புதிய பாடங்களைக் கொண்டுள்ளது எனக் கணக்கிட்டுள்ளார் மு.சண்முகம் பிள்ளை.

1946 இல் குறுந்தொகை விளக்கம் என்ற பெயரில் கடவுள் வாழ்த்து முதல் 111 ஆம் பாடல் வரையிலான ரா.இராகவய்யங்கார் உரையை அவருடைய மறைவுக்குப் பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. 1993 இல் குறுந்தொகை முழுவதற்குமான ரா.இராகவய்யங்கார் உரையை அவருடைய பெயரர் விசயராகவனிடமிருந்து பெற்று அப்பல்கலைக் கழகமே வெளியிட்டது. மூலபாட ஆய்வு, சொற்பொருள் காணல் ஆகிய நிலைகளில் முற்பதிப்புகளை விடவும் சீரிய திறனாய்வுப் பதிப்பாக அது விளங்குகிறது. அதனுள்ளும் 346 முதல் 351 வரையுள்ள பாடல்கள் மற்றும் 353 ஆம் பாடல் ஆகிய ஏழு பாடல்களுக்கு அவரது உரை கிடைக்காமையால் உ.வே.சா. உரை இட்டு நிரப்பப்பட்டுள்ளது.

1955 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பொ.வே. சோமசுந்தரனாரின் குறுந்தொகை உரையை வெளியிட்டது. இப்பதிப்பில் உ.வே.சா. உரையை ஒட்டியே உரை எழுதப்பட்டுள்ளது.

1957 இல் மர்ரே எஸ்.இராஜம் குறுந்தொகை மூலத்தைப் பதிப்பித்தார். யாவரும் எளிதில் படித்துணரும் வகையில் பாடல்களைச் சந்தி பிரித்துத் தந்திருப்பது இதன் சிறப்பாகும். அரங்கனாரைப் பின்பற்றித் திணையைப் பாடல் தலைப்பாகத் தந்துள்ளார். இதன் மறுபதிப்பை 1983 இல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டது.

சக்திதாசன் சுப்பிரமணியன் எழுதிய உரையைக் குறுந்தொகைக் காட்சிகள் என்ற பெயரில் 1958 இல் முல்லை முத்தையா வெளியிட்டார், அதன் இரண்டாம் பதிப்பை 1967 இல் பாரதி பதிப்பகம் வெளியிட்டது. 1965 இல் புலியூர் கேசிகனின் எளிய தெளிவுரையைக் கொண்ட குறுந்தொகைப் பதிப்பு வெளிவந்தது. அதனுள் பாட்டின் நறுந்தொடர் தலைப்பாக இடப்பெற்றுள்ளது.

1955 முதல் 1958 வரை சிங்கப்பூர் தமிழ்முரசு இதழில் வெளிவந்த சாமி. சிதம்பரனாரின் உரையை, அவருடைய துணைவியார் குறுந்தொகைப் பெருஞ்செல்வம் என்ற பெயரில் இலக்கிய நிலையப் பதிப்பாக வெளியிட்டார். இப்பதிப்பில் 41 பாடல்களுக்கான உரை இடம்பெறவில்லை.

1985 இல் மு.சண்முகம் பிள்ளை எழுதிய குறுந்தொகை உரை தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது. பாடலின் திணையையும் இன்னார் கூற்று என்பதனையும் இணைத்துப் பாடல்களுக்குத் தலைப்பிட்டிருப்பதும் புதிய பாடம் கொள்ளுமிடத்து அதற்கான காரணங்களை விளக்கியிருப்பதும் பாடவேறுபாடு ஒப்பு நோக்கு அட்டவணை, குறுந்தொகைத் தொடரடைவு ஆகியவற்றைப் பின்னிணைப்பாகத் தந்திருப்பதும் இப்பதிப்பின் தனிச்சிறப்புகளாகும்.

1986 இல் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு செய்த எளிய தெளிவுரையோடு குறுந்தொகையை லேனா.தமிழ்வாணன் பதிப்பித்துள்ளார். 1999இல் வர்த்தமானன் பதிப்பகம் சங்க இலக்கியங்களை உரையுடன் மலிவுப் பதிப்பாக வெளியிட்டது. அவற்றுள் குறுந்தொகை இரா. பிரேமா அவர்களின் தெளிவுரையோடு பதிப்பிக்கக் பட்டிருந்தது.

முழுமை நிலையில் அமைந்த இப்பதிப்புகளைத் தவிர தேர்ந்தெடுத்த பாடல்களுக்கு மு.வ.வின் 'குறுந்தொகை விருந்து', 'குறுந்தொகைச் செல்வம்', 'கொங்குதேர் வாழ்க்கை', சுருளியாண்டிப் பாவலர் எழுதிய 'குறுந்தொகை விருந்து', மு.ரா.பெருமாளின் 'எளிய சொற்களில் இனிய குறுந்தொகை' போன்ற நூல்களும் வெளிவந்துள்ளன.

பதிப்புப் பார்வை:

திணை பற்றிய பாகுபாட்டுக் குறிப்பு அகநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் இடம்பெற்றுள்ளமை போலக் குறுந்தொகை, நற்றிணை நூல்களுக்குப் பழமையானதாக இல்லை. இவ்விரு நூல்களையும் முதன்முதலில் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள்தாம் பாடலின்கண் அமைந்த முதல், கரு, உரிப்பொருள்களைக் கருத்தில் கொண்டு திணைப் பாகுபாட்டுக் குறிப்புகளைத் தந்துள்ளார்கள். உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் இப்பாகுபாட்டைக் கொள்ளாது கூற்றுவகைப் பெயர்களைத் தலைப்பாகத் தந்து பதிப்பித்துள்ளார். உ.வே.சா. கூற்றுவகையில் பாடல்களுக்குத் தலைப்பிட்டுப் பதிப்பித்தமை ஒரு புதிய முயற்சியே. மு.சண்முகம் பிள்ளை அவர்கள் தம் பதிப்பில் |அகப்பாடல்கள் ஐந்திணைக் கூறுபாடு உடையவாதலின் திணைக்குறிப்பும் ஐயரவர்கள் சுட்டுவதுபோலக் கூற்றுவகைக் குறிப்பும் இப்பதிப்பில் தரப்பட்டுள்ளன| என்று தம் முகவுரையில் குறிப்பிடுவார். திணையும் கூற்றும் தலைப்பில் இடம்பெறும் வகையில் அமைந்த மு.சண்முகம் பிள்ளை பதிப்பு மிகுந்த பயனுடையதாய் அமைந்துள்ளது.

தி.சௌரிப்பெருமாள் அரங்கனாரே குறுந்தொகையின் முதல் பதிப்பாசிரியரும் முதல் உரைகாரரும் ஆவார். குறுந்தொகைப் பதிப்பு வரலாற்றில் தனியிடம் பெறத்தக்க செம்பதிப்பு என்று குறிப்பிடத்தக்க பெருமைக்குரிய பதிப்பு உ.வே.சாமிநாதய்யரின் பதிப்பே ஆகும். உ.வே.சா. பதிப்பிற்குப் பின்னர் வந்த பதிப்பு மற்றும் உரைகளில் குறிப்பிடத்தக்கன ரா.இராகவய்யங்காரின் பதிப்பும், மு.சண்முகம் பிள்ளை அவர்களின் பதிப்பும் ஆகும். அண்மைக்காலம்வரை தொடர்ந்து வரும் குறுந்தொகைப் பதிப்புகள் எளிமை நோக்கிய முயற்சிகளாக அமைகின்றனவே அன்றிக் குறிப்பிடத்தக்க சிறப்பொன்றுமில்லை.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...