Friday, August 29, 2008

கல்! நில்! வெல்!- புத்தக மதிப்புரை

கல்! நில்! வெல்!

உவப்புரை

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

பாவலர் கு.அ.தமிழ்மொழி புதுவையின் இளைய பாவலர். கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வருபவர். அதாவது அவரின் பத்து வயதில் எழுதத் தொடங்கியவர். பதினைந்தாம் அகவையைத் தொடும் பாவலர் தமிழ்மொழியின் படைப்புகள் வெளிவந்துள்ள இதழ்கள் இருபத்தைந்துக்கும் மேல். இவரின் கவிதைகள் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்புகள் இருபதுக்கும் மேல். பெற்றுள்ள விருதுகள் பத்துக்கும் மேல். இத்துணைச் சிறப்புகளுக்கும் உரிய பாவலர் கு.அ. தமிழ்மொழியின் முதல் கவிதைத் தொகுதி ‘சிறகின் கீழ் வானத்தை’ அடுத்து அவர் வெளியிடவிருக்கும் இரண்டாவது கவிதைத் தொகுதிதான் இந்த, “கல்! நில்! வெல்!”.
ஒரு பாவலர் தம் சிறார் பருவத்திலேயே இத்தகு ஆளுமைகளைப் பெற்றிருப்பது உண்மையிலேயே வியந்து பாராட்டுதற்குரியது. சக சிறார்களோடு ஒப்பிடுகையில் பாவலர் தமிழ்மொழி தனித்தன்மை வாய்ந்தவர். சுயமரியாதைக்காரர், தமிழ்த் தேசியப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர் முதலான பன்முகப் பரிமாணங்களும் பாவலர் தமிழ்மொழிக்கு உண்டு. தமிழ்மொழி நல்ல ஓவியரும் கூட. புதுவைக்குப் பெருமை சேர்க்கும் இவர் 2006 ஆம் ஆண்டிற்கான நடுவண் அரசின் தேசியக் குழந்தைகள் விருதினைப் பெற்றிருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

பாவலர் தமிழ்மொழியின் முதல் தொகுதி சிறகின் கீழ் வானம் (2005) வெளிவந்தபோதே தமிழ் அறிஞர்கள் பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதோடு கவிஞாயிறு தாராபாரதி ஐக்கூ விருது (2005), திருமதி சுந்தராம்பாள் இலக்கிய விருது (2004-05) ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றுச் சாதனை புரிந்தது. 2008 இல் பாவலர் தமிழ்மொழி வெளியிட்டிருக்கும் கல்! நில்! வெல்! என்ற இந்த நூலும் பல்வேறு பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவது திண்ணம்.
II
கல்! நில்! வெல்! என்ற இந்த நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் சிந்தடி நான்காய் அமைந்த வஞ்சித் விருத்தம் (சிந்தடி நான்காய் வருவன வஞ்சி / யெஞ்சா விருத்தம் என்மனார் புலவர் -யாப்பருங்கலம்) யாப்பை ஒத்து அமைந்துள்ளமையும் அடிதோறும் இயைபுத் தொடை அமைய பாடப்பட்டிருப்பதும் ஒரு புதுமை எனலாம். இதோ ஒரு சான்று,

கசடற எதையும் கல்
கற்ற வழியில் நில்
அறிவுப் பாதையில் செல்
எதையும் அறிவால் வெல்.


சிறார் பாடல்கள் என்ற இலக்கிய வகையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறார்களுக்காகப் பாடப்படும் பாடல்கள் அவை. பாவலர் தமிழ்மொழியின் சிறார் பாடல்கள் ஒரு புத்திலக்கியம். ஏனென்றால் பாடல்களை எழுதியவரும் சிறாரே. பாடலுக்கான வாசகர்களும் சிறார்களே.
நாட்டுப்புறப் பாடல் வகைகளில் சிறார் பாடல்கள் என்று ஒருவகை உண்டு. நாட்டுப்புறச் சிறுவர்கள் தம் ஆயத்தோடு விளையாடும் காலங்களில் இவ்வகைப் பாடல்களைப் பாடுவர். நாட்டுப்புறச் சிறுவர் பாடல்களில் விளையாட்டுப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், கேலிப் பாடல்கள், சொற்பயிற்சிப் பாடல்கள், எழுத்துப் பயிற்சிப் பாடல்கள் முதலான பல்வகைப் பாடல்களும் இடம்பெறும்.

உனக்கும் எனக்கும் போட்டி
கதை சொல்லடி பாட்டி
தமுக்கு அடிப்பவன் தோட்டி
கையிலே பிடிப்பது ஈட்டி
(நாட்டுப்புறச் சிறுவர் பாடல்)

அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு போறா சோக்கா
எழுந்து போடா மூக்கா
(நாட்டுப்புறச் சிறுவர் பாடல்)

மேலே சான்று காட்டப்பட்டுள்ள நாட்டுப்புறச் சிறுவர் பாடல் மரபை அடியொற்றி இயைபுத் தொடையமைந்த முச்சீரடிகள் நான்கு கொண்ட பாடல் வடிவத்தைப் பாவலர் தமிழ்மொழி கையாண்டிருப்பது தமிழ்க்கவிதை உலகில் ஒரு புதுமையான பாராட்டத்தக்க முயற்சியே.

பாவலர் தமிழ்மொழி தமிழ்வழிக் கல்வி கற்று வருபவர். அதனால் தாய்மொழியிலேயே சிந்திக்கவும் எழுதவுமான வாய்ப்பு அவருக்கு முழுமையாகக் கிடைத்துள்ளது. தாய்மொழி வழியாக அல்லாமல் ஆதிக்க மொழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இத்தகு வாய்ப்புகள் அமைவதில்லை. உயர்நிலைக் கல்வியைக்கூட இன்னும் முடிக்காத அவருக்கு இருக்கும் தமிழ்மொழியின் சொல்வளம் வியக்கத்தக்கதாய் உள்ளது. தமிழில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட இத்தகு சொல்வளம் பெற்றிருப்பார்களா? என்பது அய்யமே. தமிழ்மொழியில் இடம்பெறும் சொற்களில் சற்றேறக்குறைய ஒன்றுபோல் ஒலிக்கக்கூடிய ண – ன, ல – ள, ர – ற வேறுபாடுடைய சொற்களைத் தேர்ந்தெடுத்து அதன் பொருள் விளக்கமுறுமாறு இயைபுத் தொடையமைய எளிய இனிய நடையில் கவிதை யாத்துள்ள பாவலர் தமிழ்மொழியின் முயற்சி பலபடப் பாராட்டத்தக்கது. நூலின் இறுதியில் கவிதைகளில் பயின்றுவந்துள்ள சொற்களின் ‘சொற்பொருள் அகரவரிசை’யை இணைத்துள்ளமை மிகுந்த பயனளிக்கக்கூடியது.

ஒருவகைப் புல்லே தினை
ஒழுக்கம் இடம்பொருள் திணை

கரும்பின் கட்டி வெல்லம்
நீரின் பெருக்கு வெள்ளம்

கடலின் பெயரோ பரவை
பறக்கும் உயிர்கள் பறவை


தமிழில் பிழையின்றி எழுத விரும்பும் மாணவர்கள் கட்டாயம் இந்தக் கவிதை நு}லை வாசித்துப் பயிற்சி செய்துகொள்வது நல்லது.

கடலில் தோன்றும் அலை
சிலந்தி பின்னும் வலை
ஓவியம் என்பது கலை
சிற்பி வடிப்பது சிலை


கவிதை விளையாட்டு போல் இயைபுத் தொடை அமைய நல்ல ஓசை நயத்தோடு படைக்கப்பட்டிருக்கும் பாவலர் தமிழ்மொழி இவ்வகைக் கவிதைகள் மொழித்திறன் வளர்க்கும் கருவியாக அமைந்திருப்பது “கல்! நில்! வெல்!” என்ற இத்தொகுதிக்குக் கூடுதல் பயனையும் மதிப்பையும் அளிக்கின்றன.

எதையும் செய்வாய் ஆய்வு
உடலுக்குத் தேவை ஓய்வு
பைசா கோபுரம் சாய்வு
வேலையில் வேண்டும் தோய்வு


“எதையும் செய்வாய் ஆய்வு” என்றும் “வேலையில் வேண்டும் தோய்வு” என்றும் சிறார்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் நல்ல பல செய்திகளையும் தம் கவிதைத் தொகுதி வழி வழங்கியிருக்கும் பாவலர் கு.அ.தமிழ்மொழி மேலும் பல நல்ல படைப்பாக்கங்களைத் தமிழுக்குத் தந்து சிறப்புற வேண்டும். அதற்கான அடையாளங்கள் அவர் படைப்பில் மிளிர்கின்றன.
வாழ்க! வளர்க!!
15-8-2008 நா.இளங்கோ

1 comment:

சுப.நற்குணன் - மலேசியா said...

அமெரிக்காவைச் சுற்றிப்பார்த்த பட்டறிவு கிடைத்தது!