Sunday, August 1, 2010

முதல் ஆற்றுப்படையைப் பாடிய முடத்தாமக் கண்ணியார்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

முடத்தாமக் கண்ணியார்

பத்துப்பாட்டு நூல்களுள் இரண்டாவதாக இடம்பெற்றிருக்கும் பொருநராற்றுப்படை என்னும் இந்நூலைப் பாடியவர். முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவராவார். இவரைப் பெண்பால் புலவர் என்று கருதவும் வாய்ப்புண்டு. வளைந்த ஒளியுள்ள தலைமாலை என்னும் பொருள்படும் ‘முடத்தாமக் கண்ணி’ என்னும் சொற்றொடரை இப்புலவர் தம் கவிதை ஒன்றில் கையாண்டிருக்கலாம் எனவும் அல்லது அசையும் வலிமையில்லாத ஒளியுள்ள கண்களைப் பாடியிருக்கலாம் எனவும் அல்லது ஒளியுள்ள கண்களையுடைய முடப்பெண் ஒருத்தியை இச்சொற்றொடர் குறித்திருக்கலாம் எனவும் மொ.அ. துரையரங்கசாமி கருதுவார்.

செம்புலப் பெயல்நீரார் போன்று தாம் பாடிய பாடலடியால் அவர் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும் என்பது அவர்தம் கருத்து. சங்க இலக்கியங்களில் பொருநராற்றுப்படை ஒன்று மட்டுமே இவர் பாடியதாகத் தெரிகின்றது. வேறு தொகை நூல்கள் ஒன்றிலும் இவர் பாடல் இடம்பெறவில்லை. காவிரியையும் சோழநாட்டினையும் மிகச் சிறப்பித்துப் புகழ்ந்து பாடும் இவர் சோழநாட்டினர் என்று கொள்வதில் தவறில்லை.

இப்புலவரின் பெயர் தொல்காப்பிய உரையாசிரியர் சேனாவரையரால் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது.

இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்கு உரிய எழுத்தின் வினையொடு முடிமே

(தொல். சொல். இடை. நூ. 21)

என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார இடையியல் நூற்பா உரையில் ஆர் விகுதி பன்மையோடு முடிதற்கு, ‘முடத்தாமக் கண்ணியார் வந்தார்’ என்று எடுத்துக் காட்டப்பட்பட்டிருப்பதால் இவரின் இயற்பெயர் முடத்தாமக் கண்ணி என்று கருதுவார் உ.வே.சா. இவர் பெயரின் முன்னர் முடம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதனால் இவர் உறுப்பு முடம்பட்டவர் என்று கருதுவாருமுண்டு.

இவர் பெயரிலுள்ள கண்ணி என்ற சொல் தலையில் சூடும் மாலையைக் குறிப்பதாயின் இவர் பெண்பால் புலவர் என்று கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் கண்ணி என்பது ஆண்கள் தலையில் அணியும் மாலையைக் குறிப்பதாகும்.

நூலின் அகச்சான்று கொண்டு இவர் பெண்பால் புலவராக இருக்கலாம் என்று துணிதற்கு இடமுள்ளது. பொருநராற்றுப்படை நூலின் தொடக்கத்தில் இடம்பெறும் பாலையாழ் வருணனையின் ஒரு பகுதியாக யாழ் பத்தரின் மேல் இரண்டு பக்கத் தோலினையும் இணைத்து மூட்டித் தைத்துள்ளமையை புலவர் வருணிக்கும் பகுதி பின்வருமாறு,

எய்யா இளம்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதிஉறு போர்வை
(பொருநர்: 6-8)

பத்தரின் நடுவிடம் உயர்ந்துள்ளமையும் (இளஞ்சூல் வயிறு போல) பத்தரைப் போர்த்தியுள்ள தோலின் நிறம் விளக்குச் சுடரின் நிறம்போல் சிவந்திருப்பதும் (சூலுற்றவளின் சிவந்த நிறம் போல) பத்தரின் இருபுறத் தோலினையும் இழுத்துத் தைத்துள்ள தையல் இளஞ்சூல் வாய்த்த பெண்ணின் வயிற்று மென்மையான மயிரொழுங்கு போல் உள்ளதென்றும் முடத்தாமக் கண்ணியார் உவமித்து வருணித்துள்ள பாங்கு ஒரு பெண்பால் புலவருக்கே வாய்க்கும் என்பதனால் இவரைப் பெண்பால் புலவர் என்று கொள்வதில் பிழையில்லை.

இவர் இசைத்துறையில் வல்லவராய் இருந்திருக்க வேண்டும் என்பதனை இப் பொருநராற்றுப்படையில் வரும் யாழ் குறித்த விரிவான வருணனைகளின் வழி அறிந்துகொள்ள முடிகிறது. பாலையாழின் ஒவ்வொரு பகுதியையும் தக்க உவமைகளின் வழி நம் கண்முன் நிறுத்துகின்ற கண்ணியாரின் கவியுள்ளம் யாழிசையின் மீது கொண்டுள்ள அளப்பறிய ஈடுபாடும் பக்தியும் பின்வரும் அடிகளில் உணரக் கிடக்கின்றன.

ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை
(பொருநர்: 21-22)

கொடிய ஆறலைக் கள்வர்கள் கூட யாழிசையில் ஈடுபட்டார்களானால் தம் ஆயுதங்களைப் போட்டுவிட்டு கொலைத் தொழிலையும் கைவிட்டு அருள் நெஞ்சினராக மாறிவிடுவர் என்று நம்பும் ஆசிரியர் பண்பட்ட உள்ளம் அவரின் மென்மையான இயல்பினை உறுதிப்படுத்துகிறது.

கண்ணியாரின் கவித்திறனுக்கு நூலில் இடம்பெறும் யாழ் வருணனை மற்றும் பாடினியின் கேசாதிபாத வருணனைகளே சான்று. உவமைகளை அடுக்கிச் செல்லும் அவரின் புலமைநலம் கற்பவர் நெஞ்சைப் பெரிதும் ஈர்க்கக்கூடியது. சோழநாட்டின் வருணனையும் திணைமயக்கக் காட்சிகளும் ஆசிரியர் கற்பனைத் திறனுக்குத் தக்க எடுத்துக்காட்டுகள்.

ஆற்றுப்படை இலக்கிய வகையில் பொருநராற்றுப்படையே முதல் நூல் என்று கருதப்படுகிறது. புதிய இலக்கிய மரபினை உருவாக்கும் துணிவும் இலக்கியப் பயிற்சியும் முடத்தாமக் கண்ணியாரிடம் மிக்கிருந்தமைக்கு நூலே சான்று. அகவல் அடியால் பாடப்பட்ட பொருநராற்றுப்படையின் இடைஇடையே பயில்வார்க்குச் சலிப்பு தோன்றா விதத்திலும் ஓசைநலத்தை மிகுவிக்கும் நோக்கிலும் வருணனைப் பகுதிகளில் வஞ்சி அடிகளை விரவிப் பாடியுள்ள புலவரின் புலமைநலம் பாராட்டுதற்குரியது.

No comments: