Tuesday, November 23, 2010

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம் -(பகுதி-1)

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

தமிழிலக்கிய வரலாற்றில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பாவலர்கள் பலருண்டு. ஆனால் தாமே ஓர் இயக்கமாக வாழ்ந்த பாவலர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மட்டுமே. மூச்சிருக்கும் வரை தமிழுக்காக உயிர்த்தவர். பேச்சிருக்கும்வரை தமிழர் உரிமைக்காக முழங்கியவர். நினைவிருக்கும் வரை தமிழர் விடுதலை பற்றியே நினைத்தவர். தமிழக வரலாறு காணாத தமிழ்ப்போராளி பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

ஓய்ந்திடல் இல்லை, என் உள்ளமும் உணர்வும் உயிர்ச்செறிவும்
தேய்ந்திடல் இல்லை, என் விரல்களும் தாளும்! திரிந்தலைந்து
சாய்ந்திடல் இல்லை, என்உடலும், எனவே சலிப்பிலனாய்
மாய்ந்திடல் வரையும் உழைப்பேன், உரைப்பேன், மக்களுக்கே!

என்று முழக்கம் செய்த பாவலரேறு எழுதியவாறே வாழ்ந்தார். அவர் வாழ்வின் இறுதிநாள் வரை தமது எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்க்கையே போராட்டமாய், போராட்டமே வாழ்க்கையாய் வாழ்ந்து மறைந்தார். பாவலரேறு தனித்தமிழ்நாடு, பெரியாரின் தன்மானக்கொள்கை, மார்க்சியப் பொருளியல்கொள்கை என்ற முப்பெருங் கொள்கைகளைத் தம் உயிர்மூச்சாகக் கொண்டு இறுதிவரை போராடினார். தமிழ்த் தேசியமே அவரின் உயிர்க்கொள்கையாய் இருந்தது. தென்மொழி: பெருஞ்சித்திரனாரின் தமிழ் இயக்கப் பணியில் பெரும்பங்காற்றியது அவரின் தென்மொழி இதழே. தமிழன்பர்களின் போர்வாளாகத் தென்மொழி விளங்கியது. தென்மொழியின் முதல் இதழ் 1-8-1959இல் வெளியானது. இதழின் குறிக்கோள்முழக்கமாகப் பின்வரும் பாடல் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறுவது வழக்கம்.

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை! புவியில் எவரும் எதிர் நின்றே!


தென்மொழி இதழ் தன் குறிக்கோளில் ஒருபோதும் பின்வாங்கியதும் இல்லை, சமரசம் செய்து கொண்டதுமில்லை. தென்மொழி ஓர் இதழன்று, ஓர் இயக்கம் என்று பாவலரேறு குறிப்பிட்டதற் கேற்ப இதழின் கட்டுரைகளில் பாடல்களில் தமிழுணர்வு கொழுந்துவிட்டெரியும்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வெண்ணூற்பா:

பாவலரேறு, பாடல்கள் மற்றும் கட்டுரைத் தொகுதிகளாக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். அச்சு வடிவம் பெறாத படைப்புகளும் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாவலரேறுவின் பாடற்படைப்புகளில் தனிப்பெருஞ் சிறப்புடன் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் உலகியல் நூறு. உலகின் இயற்கைத் தன்மைகளை விளக்கும் நூறு பாடல்களைக் கொண்ட நூல் என்ற பொருளில் உலகியல் நூறு என்று பெயரிட்டுள்ளார். இந்நூல் 1973 - 74ஆம் ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பெற்றது என்று நூலாசிரியரே தம் முன்னுரையில் குறிப்பிடுவார். தனிநூலாக இதனைப் படைத்த பின்னர், 1976 முதல் 78 முடிய தென்மொழி இதழில் பகுதி பகுதியாக இந்நூலின் பாடல்கள் வெளியிடப்பட்டன. பின்னர் 1982இல் உலகியல் நூறு முழு நூலாக வெளியிடப் பெற்றது.

இந்நூலுள் உள்ள பாடல்கள் நூறும் வெண்பா யாப்பில் அமைந்தனவாகும். இந்நூலின் பாடல்கள் கருத்துச் செறிவால் நூற்பா எனும் உணர்வினை ஊன்றிப் படிப்பார்க்கு ஊட்டுவதால் இந்நூலின் பாவமைப்பை வெண்ணூற்பா(வெண்-நூல்-பா) எனும் புதிய சொல்லால் வழங்கலாம் என்பார் ஆராய்ச்சி முன்னுரை எழுதிய அருளி. பாடல்களோடு அதன் சுருக்கமான பொழிப்புரையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. பாடல்கள் திண்ணிய மெய்ப்பொருள் கருத்துக்களை வெளிப்படுத்துவன வாகையால், பாடல் அமைப்பும் இறுகலாகவே உள்ளது. அதனைப் பொழிப்பு ஓரளவே குழைவாக எடுத்துக் கூறுகிறது. இதில் உள்ள கருத்துக்களை இதைவிட மிக எளிமையாக எடுத்துக் கூறுவதானால், அஃது இந்நூலைப்போல் பலமடங்கு பெரிதாக அமைந்துவிடும். பிற்காலத்து மெய்ப்பொருளுணர்வும் தமிழ்த் தகுதியும் அறிவு ஒளியும் வாய்க்கப் பெற்றோர் எவரேனும் அதைச் செய்யட்டும்என்று இந்நூலின் பொழிப்புரை குறித்து நூலாசிரியர் கருத்துரைப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நூல் நுவலும் பொருள்:

நூலுள் பேசப்படும் உள்ளடக்கம் பற்றிப் பாவலரேறு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.உலகியல் நூறு என்னும் இந்நூல் உயர்ந்த மறைவான உலகியல் செய்திகளை, ஓரளவு முற்றும் அடக்கிக் கூறுவதாகும். அகண்டாகாரமாகப் புடைவிரிந்து, எண்ணத்திற் கெட்டாமல் பரந்து கிடக்கும் இப்புடவியுள்(பிரபஞ்சத்துள்) மாந்தப் பிறப்பிடத்தின் துகள் இருப்பும், அவனின் துணுக்கிருப்பும், அத்துணுக்கின் ஆட்டமும் அடக்கமும், ஓக்கமும் ஒடுக்கமும் எத்தகையன என்பதைத் துல்லியமாக, மெய்ப்பொருள் நூல்கள் போல் விளக்கிக் காட்டுவது இந்நூல். இந்நூலுள் வரும் உண்மைகள் எல்லாம், எல்லார்க்கும், எவ்வகையானும் எளிதே விளங்குவன அல்ல. ஆழ்ந்து தோய்ந்த சிந்தனையால் வெளிப்படுத்தப் பெற்ற மெய்க்கூறுகள் இவை.

உலகியல் நூறு அடிப்படையில் ஓர் அறவியல் நூல். தமிழின் பிற அறவியல் நூல்களைப்போல் இந்நூல் அமைக்கப்படவில்லை. அறிவியல், மெய்ப்பொருளியல், அறவியல், உலகியல் கருத்துக்களைப் பிசைந்து வார்த்த தனிப்படைப்பாக இந்நூல் அமைந்துள்ளது. அறிவியல், குறிப்பாக இயற்பியல் உண்மைகளையும் மெய்ப்பொருளியல் கருத்துக்களையும் இணைத்து உலகியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களை முன்னிறுத்தி படைக்கப்பட்டுள்ள இந்நூல்போல் ஓர் அறவிலக்கிய நூல் தமிழில் முன்னும் இல்லை பின்னும் இல்லை. தமிழில் இது ஒரு புதிய இலக்கியவகை. உலகின் வேறெந்த மொழியிலாவது இதுபோல் ஓர் அறநூல் எழுதப்பட்டிருக்குமா? என்றால் ஐயமே.

தமிழ் வளர்ச்சிக்கும் தமிழின மீட்புக்கும் தமிழ்நில மீட்புக்கும் தொடர்ந்து தொண்டாற்றிய பாவலரேறு உலகியலை விளக்கப் புகுந்த இந்நூலின் நூறு பாடல்களிலும் எவ்விடத்தும் தமிழ், தமிழினம், தமிழ்நாடு இவைகளைக் குறிப்பிடாமல் பொதுமை தோன்றப் படைத்துள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பாகும். நாடு, இனம், மொழி கடந்த நிலையில் உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவானதாகவே இவ்வறவிலக்கியத்தைப் படைத்துள்ளார் பாவலரேறு.

நூல் அமைப்பு:

உலகியல் நூறின் அனைத்துச் செய்யுள்களிலும் உலகின் நுண்பொருள் பருப்பொருள் இயக்கங்கள் அனைத்தும் விளக்கியுரைக்கப் பட்டுள்ளன. இதன் பெரும் பகுப்பு இயல்களாகவும் குறும் பிரிவு நிலைகளாகவும் பாகுபாடு செய்யப்பெற்றுள்ளன. நிலை என்பது இருப்பு நிலை, இயல் என்பது இயங்கு நிலை எனவே உலக இருப்பும் இயக்கமும் இதில் காட்டப்பட்டுள்ளன என்பார் நூலாசிரியர் பாவலரேறு.
உலகியலின் பெரும் பரப்பினை

1.உலகியல்,
2.நாட்டியல்,
3.மாந்தவியல்,
4.பொதுமையியல்,
5.வாழ்வியல்,
6.குடும்பவியல்,
7.ஆண்மையியல்,
8.பெண்மையியல்,
9.உறவியல்,
10.அயலியல்,
11.வினையியல்,
12.செல்வயியல்,
13.ஒப்புரவியல்,
14.அறிவியல்,
15.புகழியல்,
16.இறப்பியல்,
17.பிறப்பியல்,
18.உயிரியல்,
19.ஓர்பியல்,
20.இறைமையியல்

என்ற இருபது இயல்களாகப் பாகுபடுத்தி, ஒவ்வோர் இயலையும் ஐயைந்து நிலைகளாகக் கூறுபடுத்தி மொத்தம் நூறு தலைப்புகளில் நூறு வெண்பாக்களில் நூலை அமைத்துள்ளார்.

நூலின் தொடக்கம்:

தமிழ் நூல் மரபில் உலகம் என்று நூலைத் தொடங்குதல் மரபென்றும் மங்கலமென்றும் கருதப்படும். உலகியல் நூறு நூலின் தொடக்கத்தில் உலகம் என்று முதல் இயலின் தலைப்பிட்டு நூலைத் தொடங்கும் ஆசிரியர்,

புடவிபல ஒன்றுகடல் புன்மணலிஞ் ஞாலம்
அடவியென் மீன்செறிவாம் அண்டம்பல் கோடி
இடவரைகள் எண்டிசைகள் இவ்வுலக வாக்கம்
கடவிடைகள் நேர்ச்சிக் கணிப்பு (பா.1)


என்று முதல்பாடலை அமைத்துள்ளார். இப்பாடல் புடவி என்று தொடக்கம் கொண்டுள்ளது. புடவி என்பது பிரபஞ்சம், புடவிகளை நோக்க இவ்வுலகம் கடற்கரை மணற்பரப்பில் ஒரு மணல் துகளுக்கு ஒப்பாம். உலகு என்று தொடங்குவதிலும் பேரண்டப் பெரும் பரப்பாம் புடவி எனத் தொடங்குவதின் சிறப்பினை ஓர்ந்து உணர்தல் வேண்டும். புடவிகள் பலவாகும். அவற்றுள் ஒன்றினது, கடற்கரையின் புல்லிய மணலைப் போன்றது இவ்வுலகம். அடர்ந்த காடு போலும் செறிந்த விண்மீன்களைக் கொண்ட அண்டங்கள் பல கோடியாகும். இவற்றுள் இடமும் அளவுகளும் எட்டுத்திசைகளும் இவ்வுலகத்திற்கென உருவாக்கிக் கொண்ட ஆக்கங்களாம். வினாக்களும் விடைகளும் இங்குள்ள நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுந்த கணிப்புக் கூறுகளாம்.

நூலின் முழுச்சிறப்பும் முதற்பாடலிலேயே தெற்றெனப் புலப்படுகின்றது. காலம் என்று தனிப்பட்டு ஒன்றும் கிடையாது. தூரத்தையும் இடைவெளிகளையும் காலத்திலிருந்து தனியாகப் பிரிக்க முடியாது. ஒளியின் வேகத்தில் நம்மால் செல்லமுடியும் எனில் காலம் அங்கே மறைந்துவிடுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளிப்படுத்திய ரிலேடிவிட்டி - சார்பியல் கோட்பாடு இப்பாடலில் பொதிந்துள்ளது. காலம் முதலான அளவுகள், மேல் கீழ், இடம் வலம், முன் பின் என்பன போன்ற இடம் திசைகள் குறித்த விளக்கங்களும் நாம் வகுத்துக் கொண்டவையே அன்றி வேறில்லை. நிகழ்ச்சிகளும் அது குறித்த கணிப்புக் கூறுகளுமே வினா விடைகளுக்கு அடிப்படை. இப்படி, தொடக்கச் செய்யுளிலேயே நம்மை மலைக்கச் செய்துள்ளார் நூலாசிரியர். பிரபஞ்சத் தோற்றம் பெருக்கம் ஒப்பு இவைகளை முதல்பகுதியில் குறிப்பிடும் ஆசிரியர் இப்புவியின் இறுதி பற்றியும் சுட்டிக்காட்டுகின்றார்.

தாயொளியும் ஒல்கத் தணந்து நிலைமாறிப்
போயழியும் கங்குற் பொடிந்து. (பா.5)

இதன் பொழிப்பு, இத்தொன்மையான உலகம் என்றோ ஒரு காலத்தில் தனக்கு ஒளி நல்கும் தாயாகிய கதிரவனின் ஒளி குறைந்து குளிரடைதலால் தன் நிலையில் திரிபுற்று, அதனின்று விலகியோடி இருட்பகுதிக்குள் புகுந்து பொடிந்து அழிவதாகும். சூரியன் வெப்ப ஆற்றல் முழுவதையும் இழந்த நிலையில் கரும்பொந்தாய் மாறும் அதனுள் பூமி தன்னையழித்துக் கொள்ளும் என்ற அறிவியல் உண்மை இப்பாடலில் பொதிந்துள்ளது. தமிழரின் தனிப்பெருஞ் சொத்தாகவும் உலகப் பொதுமறை என்ற சிறப்பிற்குரியதாகவும் விளங்கும் திருக்குறளின் பிழிவாக இவ்வுலகியல் நூறு நூலைப் பெருஞ்சித்திரனார் வடித்துள்ளார்.
பல குறட்பாக்களில் சொல்லப்பட்ட அறங்கள் இந்நூலின் ஒரே வெண்பாவில் அமைந்து சிறக்கின்றமை ஆழ்ந்து பயிலுதற்குரியது. குடும்பவியல், உறவியல், வினையியல், செல்வயியல், அறவியல் முதலான இயல்கள் திருக்குறளோடு ஒப்பிட்டு ஆய்தற்கு இடம்தருவனவாய் அமைந்துள்ளன.

1 comment:

இக்பால் செல்வன் said...

அய்யா தங்களின் வலைத் தளம் கண்டு மிக்க மகிழ்ச்சி. சிறப்பான பல தகவல்களையும், செய்திகளையும் கொடுத்து உள்ளீர்கள். தங்களின் சில கட்டுரைகளை எமது தளத்தில் மீள்பதிவு ( தங்களின் பெயரிலேயே, காப்புரிமை அனைத்தும் உங்களுடையதே ) செய்ய அனுமதி கோருகிறேன்.

குறிப்பாக புதுச்சேரியில் பௌத்தம் மற்றும் போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி? ஆகிய கட்டுரைகளை மீள்பதிவு செய்ய அனுமதி வேண்டும்.

நன்றிகள்.