Tuesday, November 23, 2010

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம் -(பகுதி-3)

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

உலகியல் நூறும் இயற்பியலும்:
பாவலரேறு தாம் படைத்த உலகியல் நூறு எனும் அறிவற இலக்கியத்தில் பிற அறநூல்கள் பேசாத பல புதிய உண்மைகளை பேசுகின்றார். நூலின் தொடக்கத்திலும் இடையிலும் நிறைவிலும் அவர்விளக்கும் அறிவியல் மற்றும் மெய்ப்பொருளியல் உண்மைகள் நூலாசிரியரே குறிப்பிடுவது போல் எல்லோர்க்கும் எளிதில் விளங்கக் கூடியதாக இல்லை. ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காணும் அறிவினோர்க்கே விளக்கமுறுதல் கூடும். குறிப்பாக இறப்பியல், உயிரியல், ஓர்பியல், இறைமையியல் முதலான இயல்களில் ஆசிரியர் விளக்கும் அறங்கள் அத்தகையனவே. ஓர்பியலில் இடம்பெறும் இயக்கநிலை பற்றிய பாடலில் ஆசிரியர் பொருள், ஆற்றல் இரண்டின் இயல்புகளையும் விளக்கி, பொருளின் உள்நின்று இயக்குகின்ற உயிர்க்கூறே இறை என்று விளக்குகின்றார்.

பொருளனைத்தும் ஒன்றாகும் ஆற்றலெலாம் ஒன்றாம்
உருளிரண்டும் ஒன்றினோ டொன்றாம் - மருள்நிலைகள்
ஆன்ற வியக்கென்ப ஆதல் பொருளாம்உள்
ஊன்றல் இறையென் றுணர் (பா.93)

உலகில் பொருள்கள் வேறு வேறாகப் பிரிந்து நின்றாலும் அடிப்படையில் பொருட்கூறுகள் அனைத்தும் ஒன்றே. பொருளை மிகச்சிறிய கூறாகப் பகுத்தால் கிடைப்பது அணு. எல்லா அணுவினுள்ளும் மூலக்கூறுகளாய் இருப்பவை எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எனும் இவையே. எனவே பொருளனைத்தும் ஒன்றாகும் என்று ஆசிரியர் உரைப்பது சாலப் பொருத்தமே. பொருள்கள் ஒன்றானால் ஆற்றலும் ஒன்றே, ஏனெனில் பொருளைச் சிதைக்கின் ஆற்றலாகும், ஆற்றல் திரண்டால் பொருளாகும். பொருள், ஆற்றல் இவைகளை விளங்கிக் கொண்டால் இறையை உணர்தல் எளிது என்பதனால் இரண்டையும் விளக்கிவிட்டு ஆற்றலாகவும் பொருளாகவும் இருக்கும் அதனை உள்நின்று இயக்கும் உயிர்க்கூறே இறை என எளிமையாய் விளக்கம் தருகின்றார்.

நவீன இயற்பியலில் அணுக்களை அதைவிட நுட்பமான ஆல்பா துகள்களால் துளைத்துப் பார்த்தபோது அணுவின் உள்ளே பெரும்பாலும் வெட்டவெளியாக இருப்பதையும் மையத்தில் கருபோல் சில புரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றிச் சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதைப் பார்த்தார்கள். ஓர் அணுவுக்கும் மற்றோர் அணுவுக்கும் உள்ள வேறுபாடு அதன் கருவில் இருக்கும் துகள்களின் எண்ணிக்கையில்தான். உள்ளே இருக்கும் துகள்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இந்த இயக்கத்தின் வடிவம்தான் நாம் காணும் பொருள்கள். ஊன்றிப் பார்த்தால் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே இயக்கம்தான். இதுதான் அறிவியலின் முடிபு. இந்த இயக்கம்தான் இறை என்பது பாவலரேறுவின் விளக்கம்.

.. .. .. .. .. .. .. .. .. வற்றாத
ஊற்றாய் உலகமாய் ஒண்கதிராய் நீள்விசும்பாய்
ஆற்றல் நிகழ்த்தும் அலைவு (பா.78)

ஆற்றலின் அலைவுத் தோற்றங்களே உலகமாகவும் விண்மீன்களாகவும் நீண்ட ஆகாயமாகவும் தோற்றம் கொள்கின்றன என்ற இப்பாடல் கருத்து இயற்பியலின் அடிப்படையில் அமைந்துள்ளமை ஆழ்ந்து விளங்கிக் கொள்ளுதற்குரியது. இன்றைக்குப் பல்கிப் பெருகியிருக்கும் சமயங்களும் அவற்றின் இறைத் தத்துவங்களும் குறித்துப் பாவலரேறு தம் விமர்சனத்தைத் தெளிவாக உரைக்கின்றார். எந்த மதங்களும் உண்மையை முழுதாகக் காணவில்லை. எல்லா மதக்கோட்பாடுகளும் கற்பிதங்களே என்பதைப் பின்வரும் பகுதியால் விளக்குகின்றார்.

ஓவத் துணுக்கால் உருவறியார் ஒவ்வொன்றா
மேவத் துடிக்கும் மிகை உருவம் (பா.100)


பெரியதோர் ஓவியத்தைப் பலகூறுகளாக்கிய நிலையில், அவற்றின் ஒவ்வொரு கூறையும் முழுஉருவமாகக் கற்பனை செய்துகொள்ளும் கற்பிதங்களே மதங்களும் கடவுளர்களும் என்று மதங்களின் போலிமையைக் கடிந்துரைக்கின்றார். அதே பாடலில் நீர்க்குண்டோ உண்மை நிறம் என்று முடிப்பதன் வாயிலாக இறைமை தன்னை வெளிப்படுத்தி நிற்கும் உயிர்க் கூற்றானும் பொருட்கூற்றானும் வடிவமெய்துமே அன்றி தனக்கென்று ஓர் வடிவமில்லை என்னும் மெய்ப்பொருளியல் உண்மையை முற்ற முடிபாக முடித்து வைக்கின்றார்.

முடிப்புரை:

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு எனும் இவ்வறநூல் தமிழிலக்கிய உலகிற்கு ஒரு புதிய புதுமையான வரவு. தமிழின் நீண்ட இலக்கியப் பரப்பில் மிகப்பலவான அறநூல்கள் எழுதப் பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து உலகியல் நூறு பெரிதும் மாறுபடுகின்றது. பெரிதும் திருக்குறள் கருத்துக்களை உள்வாங்கி நூல் உருவாகியிருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சி, உலக மெய்ப்பொருளியல் அறிமுகம் முதலான புதிய பரிமாணங்களால் நூல் புதிய தளத்தில் அறம் பேசுகிறது. பாவலரேறுவின் பிரபஞ்ச ஞானம், உலகு தழுவிய பார்வை, பொதுமை வேட்கை, இறையியல் பற்றிய அறிவியல் பார்வை முதலான புதிய பாடுபொருட்கள் இந்நூலின் தனிச்சிறப்பு.

எப்படி யேனும் இத்தமி ழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும் -என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்
தமிழ்ப்படி யேறின் தமிழினம் ஏறும்
தாழ்நிலை இழிவுகள் மாறும்!- நம்
தலைவிலை எனில்தரல் வேண்டும்


என்று தமிழ்மொழிக்காக, தமிழினத்துக்காக, தமிழ் நிலத்துக்காகத் தம் மூச்சையும் தலையையும் தரத் தயாராயிருந்த பாவலரேறுவின் பணி அளப்பரியது, ஒப்புயர்வற்றது, வணக்கத்திற்குரியது. பாவலரேறுவின் படைப்புகளைத் தமிழ் என்ற ஒற்றை நேர்க்கோட்டுப் பார்வையில் மட்டுமே பார்ப்பது படிப்பது பரப்புவது என்பதாக நம் பணி நின்றுவிடுதல் கூடாது. அவரின் பன்முகப் பார்வையும் பல்நோக்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பாவலரேறுவின் படைப்புகளின் சமுதாயப் பார்வை, அரசியல் பார்வை, தத்துவப் பார்வை, நடப்பியல் பார்வை, அறிவியல் மற்றும் உளவியல் பார்வை போன்ற தலைப்புகளில் அவரின் படைப்புகள் அலசப்பட வேண்டும். இம்முயற்சிகளே பாவலரேறுவின் பன்முகப் பரிமாணங்களை உலகுக்குக் காட்டும்.

No comments: