Saturday, May 5, 2012

தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் நூல் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ

இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் தமிழ் எழுத்தாளர் களுக்கும் பதிப்பாளர்களுக்கும் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தமிழில் வெளிவந்துள்ள நூல்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தொடும். இந்த எண்ணிக்கையில் மறுபதிப்பு நூல்களும் அடங்கும். சென்னை மூர் மார்க்கட் எரிந்த அல்லது எரிக்கப்பட்ட பிறகு பழைய தமிழ் நூல்கள் காணக் கிடைக்காத அரிய பொருள்களாக இருந்த நிலைமாறி அரிய பழைய தமிழ் நூல்கள் புதிதாய் அச்சேறி நம் கைளில் தவழும் இந்தப் புதிய மாற்றம் தமிழர்களுக்கு உவப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. 

ஒவ்வோராண்டும் மாவட்டங்கள் தோறும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளும் கண்காட்சிக்கு வருகைதரும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையும் கண்காட்சிக்கு வந்து வேடிக்கை பார்த்ததோடு மட்டுமின்றி நூறு, ஆயிரங்களைச் செலவிட்டு நம் தமிழர்கள் நூல்களை வாங்கிச் செல்லும் மாற்றங்களும் இருபத்தோராம் நூற்றாண்டு நமக்குத் தந்த புத்தம் புதிய நம்பிக்கை வித்துகள். 

ஒருபக்கம் இப்படித் தமிழ் அச்சு நூல்கள் பழையனவும் புதியனவுமாகப் படையெடுக்க, மறுபக்கம் மின்னூடக வடிவில் மின் இதழ்கள், மின் படைப்புகள், மின் நூல்கள், மின் நூலகங்கள் எனத் தமிழ் எழுத்துத்தாக்கங்கள் இணையத்தில் இடம்பெயர்ந்து நிலைபெறத் தொடங்கிவிட்டன. இவை போதாதென்று சமூக வலைத்தளங்களும், வலைப்பதிவுகளும் பல்லாயிரக்கணக்கில் தத்தம் பங்குக்குத் தமிழ் எழுத்தாக்கங்களைப் பதிந்து காட்சிப்படுத்தி வைத்துள்ளன. 

ஆக தமிழில் எழுதுவதும் எழுதியதை அச்சேற்றுவதும் வாசகர்களிடம் கொண்டு செல்வதும் அத்துணை பெரிய காரியமாகத் தோன்றவில்லை. இனி நாம் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றுதான். திருவள்ளுவர் சொன்னது போல் கற்க கசடற- கற்பவை கற்க- கற்றபின் அதற்குத் தக நிற்க என்பதுதான். கருத்தூன்றிப் படிப்பதும், தேர்ந்தெடுத்துப் படிப்பதும், படித்தவற்றை பயன்கொள்வதும்தான் இன்றைய தேவை. தமிழர்களிடம் இன்னும் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. 

II
தமிழின் இத்தகு எழுத்துலகச் சூழலில்தான் தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் எனும் இந்நூல் வெளிவருகின்றது. இனிய நண்பர் முனைவர் ம.ஏ. கிருட்டினகுமாரின் ஐந்தாவது நூல் இது.

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார் சிறந்த கல்வியாளர். தமிழ் இலக்கியம், மொழியியல், ஊடகவியல், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் சைவ சித்தாந்தம், நாட்டுப்புறவியல் முதலான துறைகளில் பட்டயமும் தமிழ் இலக்கியத்தில் இளமுனைவர் மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், பிரஞ்சு முதலான மொழிகளைக் கற்றவர். தமிழ்க் கல்விப் புலத்தில் முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார் போல் பன்மொழிப் பயிற்சியுடைய இளைஞர்களைக் காண்பது அரிது. கற்றலிலும் கற்பித்தலிலும் தொடர்ந்து முனைப்போடு செயல்பட்டுவரும் இவர் ஒரு சிறந்த மரபுப் பாவலரும் கூட. ஆசிரியர், பேச்சாளர், கவிஞர், ஆய்வாளர் முதலான பன்முக ஆளுமைகளால் சிறந்த ஒருவரின் சமூக அக்கறையோடு கூடிய படைப்பாக்கத் திறனாய்வாக வெளிவரும் இந்நூல் மானுடம் பாடிய மக்கள் கவிஞரின் மாண்புரைக்கும் ஒரு நல்ல படைப்பு.
ஐஐஐ
தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் எனும் இந்நூல் பட்டுக் கோட்டையார் கவிதைகளை நயமுரைக்கும் பாங்கில் விரித்துரைத்துள்ளது. கவிதைகளின் உள்ளடக்க அடிப்படையில் குடும்பம், சமூகம், வாழ்க்கை நெறி, நடை, உண்மைத் தத்துவம் எனும் ஐந்து தலைப்புகளில் நூல் பகுக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ்க் கவிஞர் மரபில் மிகவும் வித்தியாசமான ஆளுமையைக் கொண்டவர். 29 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழிலக்கிய வரலாற்றில் ஓர் அழுத்தமான தடத்தைப் பதித்தவர். உண்மையில் கலையும் இலக்கியங்களும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கானதே என்பதனை வெறும் கொள்கையளவில், படித்ததோடு நின்றுவிடாமல் அதனை நடைமுறைப் படுத்துவதிலும் முழு வெற்றி கண்டவர். தாம் ஈடுபாடு கொண்டிருந்த விவசாயச் சங்கம் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் கொள்கைகளைத் தம் படைப்புகளில் முழுவீச்சோடு பதிவுசெய்தவர் அவர். பட்டுக்கோட்டையார் கவிதைகளின் இத்தகு தனித்தன்மையை முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார் இந்நூலில் மிகத் தெளிவாக விரித்துரைத்துள்ளார். நூலின் ஆற்றொழுக்கான எளிய இனிய மொழிநடை படிப்பவர்களுக்கு வாசிப்பு அனுபவத்தினை இனிமையாக்குகின்றது.

இந்நூலின் தனித்தன்மைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1.    பட்டுக்கோட்டையாரின் வாழ்வையும் படைப்பையும் அறிமுகம் செய்வது.
2.    அவரின் கவிதைகளை முழுதாகக் கற்ற நிறைவைத் தருவது.
3.    பாடல்களின் பின்னணியை விளக்குவது.
4.    படைப்பின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துவது.
5.    பாடல்களைப் பொருள் நோக்கில் வகைப்படுத்திக் காண்பது.
6.    சுவையான பொருள் பொதிந்த பாடல்வரிகளை இனம் காண்பது.

மேற்கண்ட வகையில் தம் நூலை விரித்துரைக்கும் நூலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைகள் குறித்தான தமது முழுமையான பார்வையையும் மதிப்பீட்டையும் பதிவுசெய்வதில் வெற்றிபெற்றுள்ளார்.

நூலாசிரியர் நூலின் நுவல்பொருளை விரித்துரைக்கும் பாணி சிக்கலற்றது. சிறு சிறு உட்தலைப்புகளில் விவரிக்கும் பொருளை இனங்காட்டி ஓர் எளிய முன்னுரையோடு செய்தியைத் தொடங்கி விவரித்து தம் கருத்துக்கு அணி சேர்க்கும் பொருத்தமான கவிதை வரிகளையும் தக்க மேற்கோள்களையும் உடன்தந்து சிறிய அளவிலான முடிப்புரையோடு அப்பகுதியை முடிக்கும்முறை அவரின் ஆய்வுநடை நலத்தை அடையாளப் படுத்துகின்றது. 

    சான்றாக, பாடல் புனையும் திறன் என்ற சிறுதலைப்பின் பொருளை அவர் விவரிக்கும் பகுதியைப் பார்ப்போம்,

கவிஞர் பாடல் புனைவதற்கான களங்களைத் தேடி ஓடாமல் தமக்கு அமைந்த வாழ்வினையே களமாக்கிக் கொண்டு பாடியவர். ஒவ்வொரு இனத்தாரும் தமக்குரிய பாடல் எனப் போற்றும் வகையில் எளிமையான நடையில் பேச்சு வழக்கில் இலக்கியத் தரத்துடன் பாடல் புனைந்தார். இதனால் கற்கும்போது கற்றாரும் கேட்கும்போது கல்லாதாரும் பாடலின் சுவையினை உணர்ந்து மகிழ்ந்தனர். காதல் பாடலாக இருந்தாலும் அதில் சமத்துவக் கருத்துக்களையும் மண் சார்ந்த மணத்தினையும் கையாளும் சிறப்பு இவருடைய தனித்தன்மையாக விளங்குவதனைக் காணலாம். 

கவிஞரின் பாடல்கள் பாட்டாளிகளின் வாழ்வினையும் இனத்தின் பெருமையினையும் பொதுவுடைமையின் தத்துவங்களையும் தன்மானத்தின் கூறுகளையும் உள்ளடக்கியதாகவே அமைந்தன. உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்னும் புலவர் குலத்தில் தோன்றிய கவிஞருக்குக் கவிஞனுக்கே உரிய மிடுக்கு இருந்ததனை..

தாயால் பிறந்தேன் தமிழால் வளர்ந்தேன்
நாயே நேற்றுன்னை நடுவழியில் சந்தித்தேன்
நீயார் என்னை நில்லென்று சொல்வதற்கு 
(ப.பா. ப. 308)
என்னும் பாடல் வெளிப்படுத்தும். இதன்வழி கவிஞரின் தன்னம்பிக்கை யையும் தன்மானத்தினையும் தெளிவாக அறியலாம். “நாட்டு விடுதலை இயக்கம், சமுதாய விடுதலை இயக்கம், பொருளாதார விடுதலை இயக்கம் என மூவகை இயக்கங்கள் இங்கே பரவலாக மக்கள் மன மண்ணில் வேர்ஊன்றி ஆலமரமாக வளரத் தொடங்கின. பட்டுக் கோட்டையின் பாடல்களில் இம்மூன்று இயக்கங்களின் சிந்தனை வீச்சையும் அழுத்தத்தையும் காணலாம்” (பட்.. பா. ப.17) எனச் சா.பா. கூறவது இங்கு எண்ணத்தக்கது.

மேலே சான்றுகாட்டியுள்ள பகுதியை ஒப்பவே இந்நூல் முழுவதிலும் நூலின் பொருளை விவரித்துச் சென்றுள்ளார் நூலாசிரியர்.   
    தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் எனும் இந்நூலினைக் காலத்திற்கேற்ற வரவு என்று நாம் கொண்டாடலாம். ஏனெனில் இன்றைய உலகமயமச் சூழலில் முதலாளித்துவத்தின் கோரத் தாண்டவத்தில் சிக்குண்டு சமூகத்தின்; அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் பறிகொடுத்து வாழ வழியற்று வதங்கிக் கிடக்கும் நிலைமையில், 

    சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா நான்
சொல்லப் போற வார்த்தையை நன்றாய் எண்ணிப் பாரடா
நீ எண்ணிப் பாரடா
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா 
நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா  

என்று கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் உரத்துக் கொடுத்த உழைக்கும் மக்களுக்கான உண்மைக் கவி பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பாடல்களை இன்றைய இளந் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமன்றோ. பட்டுக்கோட்டையார் வலியுறுத்திய தன்மான உணர்ச்சியும் பொதுவுடைமை வேட்கையும் இருபத்தோராம் நூற்றாண்டில் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடக்கூடாது என்ற நூலாசிரியரின் ஏக்கம் இந்நூலில் தொட்டஇடம் எல்லாம் கண்ணில் தட்டுப்படுகிறது. மக்கள் கவிஞரின் கவிதையைப் போலவே இந்த நூலும் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான படைப்பாக எளிமையோடும் இனிமையோடும் எழுத்தாக்கம் பெற்றிருப்பது பாராட்டத்தக்கது.

நூலாசிரியர் ம.ஏ. கிருட்டினகுமார் இந்நூலின் வழியாகத் தம் கடமையைச் செவ்வனே ஆற்றியுள்ளார். மக்களுக்கான இலக்கியம் என்பது குறித்த சரியான புரிதல்களோடும் சமூக உணர்வோடும் எழுதப் பட்டிருக்கும் இந்நூல் தக்க தருணத்தில் வெளிவருகின்றது. தமிழுலகம் இதனை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை. 

nagailango@gmail.com

1 comment:

பரிதி முத்துராசன் said...

அருமையான படைப்பு அய்யா வாழ்த்துக்கள் ........பரிதி