ஞாயிறு, 13 மே, 2012

முல்லைப்பாட்டின் தலைவன் - ஆய்வு நோக்கில் முல்லைப்பாட்டு -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-605008

முல்லைப்பாட்டின் தலைவன்:

    முல்லைப்பாட்டு ஓர் அகப்பொருள் இலக்கியம். புறப்பொருள் இலக்கியங்களுக்குப் பாட்டுடைத் தலைவர்கள் உண்டு. அகப்பொருள் இலக்கியங்களுக்கு பாட்டுடைத் தலைவர்கள் இல்லை. கிளவித் தலைவர்கள் மட்டுமே பாடப்படுவர். கோவை முதலான அகப்பொருள் இலக்கியங்களில் பாட்டுடைத் தலைவர், கிளவித் தலைவர் என இருவேறுபட்ட தலைவர்கள் அமையப் பாடும் மரபு பிற்கால வழக்கு.

    மக்கள் நுதலிய அகனைந் திணையும்
    சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்

என்ற அகப்பொருள் மரபை ஒட்டி, முல்லைப்பாட்டுக்குப் பாட்டுடைத் தலைவர் இன்னார் என்று சுட்டி சொல்லப்பட முடியாது என்பதே உண்மையாயினும் முல்லைபாட்டு ஆராய்ச்சியுரையில் மறைமலையடிகள்,
  • இம் முல்லைப்பாட்டை அடுத்திருக்கின்ற மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு விளங்கலால், அவற்றை அடுத்திருக்கின்ற இதுவும் அவனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கலாமென்பது கருதப்படும்.
என்று குறிப்பிடுவார்.

பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங் கானம் என்னும் இடத்தில் தன்னைப் பகைத்து எதிர்ந்த சேரன் சோழன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்னும் அரசர் எழுவரொடும் போர்புரிந்தான் என்ற சங்க இலக்கியச் செய்தியோடு முல்லைப்பாட்டினைப் பொருத்தி இப்பாடலில் குறிப்பிடப்படும் போர் தலையாலங் கானப் பேரே என்றும் தலைவியைப் பிரிந்து பாசறையில் வினையாற்றி மீளும் தலைவன் நெடுஞ்செழியனே என்றும் மறைமலையடிகள் குறிப்பிடுவார்.

வாடைக்காலத்தும் வேனிற்காலத்தும் அரசர்கள் போர்மேற்சென்று பாசறைக்கண் இருப்பது பண்டைக்காலத் தமிழ்நாட்டு வழக்கம். வேனிற் காலத்துப் போர்மேற் சென்ற பாண்டிய நெடுஞ்செழியனை நினைந்து கார்காலத்தில் பிரிவாற்றியிருந்த தலைவியின் இருத்தல் ஒழுக்கத்தைப் பொருளாக வைத்து நப்பூதனார் இம்முல்லைப் பாட்டை இயற்றினார் என்றும் திரும்பவுங் கூதிர்காலத் துவக்கத்திலே நெடுஞ்செழியன் தன் மனையாளைப் பிரிந்து போர்மேற் செல்லத், தலைமகள் பிரிவாற்றாது வருந்திய பாலையென்னும் அகப்பொருள் ஒழுக்கத்தைப் பொருளாக வைத்து நக்கீரனார் நெடுநல்வாடை இயற்றினாரென்றும் அடிகளார் கருதுவார்.

இவ்வாறு வலிந்து கிளவித்தலைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொள்வதில் அகப்பாடல்களுக்குச் சிறப்பொன்றும் கூடுவதில்லை, அதேசமயம் அகப்பொருளுக்குரிய பொதுமைத் தன்மை சிதைந்து தனிப்பட்டவர்களின் காதல் வாழ்க்கைச் சித்தரிப்பாக மாறி கற்போர் நெஞ்சில் சுவை குன்றக்கூடும் என்பதனால் இத்தகு அகப்பாடல் தலைமக்களைக் கிளவித் தலைவர்களாகவே கொள்ளல் பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...