ஞாயிறு, 13 மே, 2012

முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா? ஆய்வு நோக்கில் முல்லைப்பாட்டு - பகுதி-4

முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா? 

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப்பேராசிரியர்
புதுச்சேரி-8


முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா?

நப்பூதனார் இம்முல்லைப்பாட்டை 103 அடிகளில் பாடியிருப்பினும் முல்லைக்குரிய முதல், கரு, உரிப் பொருள்கள் ஒன்றும் குறைவு படாது முழுமையாகப் படைத்திருப்பது சிறப்பிற்குரியது. ஆயினும் கார்காலத்து மாலைப்பொழுதில் பெருமழை கண்டு வருந்தும் தலைவியது நிலைவிளக்கும் ‘நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு’ (முல்லை.1) என்பது முதல் ‘பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப’ (முல்லை. 23) எனமுடியும் 23 ஆம் வரியோடு நிறுத்திக் கொண்டு, அவ்வாறு வருந்திக் கிடப்பவள் மகிழ, தலைவன் மீண்டு வந்து சேர்ந்ததை விளக்கும் ‘இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து’ (முல்லை. 80) எனத்தொடங்கும் வரி முதலாக ‘வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே’ (முல்லை. 103) என்ற இறுதி வரையிலான 24 அடிகளை இணைத்து 47 அடியளவினதான முல்லைத் திணைப் பாடலாக மட்டும் அமைக்காமல் ‘கான்யாறு தழீஇய அகன்நெடுப் புறவு’ (முல்லை. 24) தொடங்கி ‘அரசு இருந்து பனிக்கும் முரசு முழுங்கு பாசறை’ (முல்லை. 79) முடிய 56 அடிகள் முல்லைக்குப் புறனாய வஞ்சித் திணையும் விரவி வரும்படி இம்முல்லைப் பாட்டை அமைத்திருப்பது புலவரின் படைப்பாற்றலுக்குத் தக்கதோர் சான்றாகும்.

103 அடிகள் கொண்ட ஓர் அகப்பாடலில் 47 அடியளவில் முல்லைத் திணையாம் அகப்பொருளைக் கூறி 56 அடிகளில் வங்சித் திணையாம் புறப்பொருளை விரித்துரைப்பது இப்பாடல் முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா? என்ற மயக்கத்தினை ஏற்படுத்துகின்றது. ஆயினும் நப்பூதனாரின் இவ்வுத்தி ‘வஞ்சி தானே முல்லையது புறனே’ என்ற தொல்காப்பியப் பொருளிலக்கணத்திற்கு மாறுபடாமல் அமைந்திருப்பதோடு முல்லையாகிய இருத்தல் உரிப்பொருளுக்கு மேலும் அழுத்தமும் அழகும் தருவதாய் பின்னப்பட்டிருப்பது இலக்கிய இன்பத்தை மிகுவிப்பதாய் உள்ளது.

முல்லைப்பாட்டின் உரிப்பொருள் இருத்தலா? இரங்கலா?

முல்லைப்பாட்டின் துறை:
கார்காலத் தொடக்கத்தே மீள்வேன் என உறுதி கூறிப் பிரிந்து சென்ற தலைவன், கார்காலம் வந்த பின்னரும் வாராமை கண்டு ஆற்றாமை மிக்குக் கலங்கி நிற்பதும் அக்கலக்கம் தீரத் தலைவன் வினைமுடிந்து மீண்டுவரும் ஓசை கேட்டு மகிழ்தலுமே இப்பாட்டின் துறையாகும்.

ஆனால் நச்சினார்க்கினியர் இப்பாடலுக்குக் கூறும் துறை, “தலைவன் வினைவயின் பிரியக் கருதியதனைக் குறிப்பால் உணர்ந்து ஆற்றாளாய தலைவியது நிலைமைகண்டு, அவன் வற்புறுப்பவும் உடம்படாதவளைப் பெருமுது பெண்டிர் அவன் வினைமுடித்து வருதல் வாய்வது நீ வருத்தம் நீங்குவதெனக் கூற, அதுகேட்டு அவள் நீடு நினைந்து ஆற்றியிருந்தவழித் தலைவன் அக்காலத்தே வந்ததனைக் கண்டு வாயில்கள் தம்முட் கூறியது” என்பதாகும்.

நச்சினார்க்கினியர் சொல்லும் துறைக் குறிப்பு பாடலில் பல முரண்களைத் தோற்றுவிக்கின்றது.
  • 1. பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டது தலைவன் பிரிந்த காலத்தில் என்றாகிறது. 
  • 2. விரிச்சி கேட்டது கார்கால மாலைப் பொழுதில் என்று பாடல் குறிப்பிடுகின்றது அவ்வாறாயின் தலைவன் பிரிந்தது கார் காலத்தில் எனக் கொள்ள நேரிடும். கார்காலம் தலைவன் திரும்பிவரும் காலமே அல்லாது பிரியும் காலம் அன்று. 
  • 3. விரிச்சி கேட்டல் என்பது ஒரு சிக்கலுக்குத் தீர்வை எதிர்நோக்கி நிகழ்த்தப்படுமே அல்லாது தலைவன் பிரிவின் போது நிகழ்த்தப்பட்டதாகக் கொள்வது பொருந்தாது. 
மேலும் தலைவி அறியாதவாறு தலைவன் பிரிந்தான் என்றும் படுக்கையில் உடன் துயின்றவனைக் காணாமல் தலைவி தேடினாள் என்றும் நச்சர் உரை கூறுவது அகப்பொருள் மரபுக்கு மாறாய் உள்ளது. தலைவன் பிரிந்தகாலம் குறித்து முல்லைப்பாட்டு பேசவேயில்லை.

இவ்வாறு பாடலின் துறைக் குறிப்பினை மாற்றி அமைத்துக் கொண்டதற்கு உரிய காரணமாக அவர் கூறுவதாவது,

“இங்ஙனம் பொருள் கூறாமல் தலைவியது இரக்க மிகுதிகண்டு பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டுவந்து தலைவர் வருவராதல் வாய்வது, நின்னெவ்வங் களையென்று பல்காலும் ஆற்றுவிக்கவும், ஆற்றாளாய்த் துயருழந்து(80) புலம்பொடு(81) தேற்றியும் திருத்தியும்(82) மையல் கொண்டு உயிர்த்தும்(83) நடுங்கி நெகிழ்ந்து(84) கிடந்தோள்(88) எனப்பொருள் கூறியக்கால் நெய்தற்குரிய இரங்கற் பொருட்டன்றி முல்லைக்குரிய இருத்தற் பொருட்டாகாமை யுணர்க. அன்றியும் தலைவன் காலங் குறித்தல்லது பிரியான் என்பதூம், அவன் குறித்த காலங் கடந்தால் தலைவிக்கு வருத்தம் மிகும் என்பதும், அது பாலையாம் என்பதும், அவ்வாற்றாமைக்கு இரங்கல் நிகழ்ந்தால் நெய்தலாம் என்பதும் நூற்கருத்தாதல் உணர்க.”

ஆக, முல்லைப்பாட்டுக்குப் பொருள் கொள்வதில் நச்சினார்க்கினியருக்கு உள்ள சிக்கல் முல்லைத் தினைத் தலைவியின் அழுகையும் ஆற்றாமையுமே. தலைவன் பிரிவுக்கு ஆற்றியிருப்பதே முல்லை உரிப்பொருள். இப்பாடலில் தலைவியின் ஆற்றாமை வெளிப்படுவதால் அது நெய்தலுக்குரிய இரங்கல் உரிப்பொருளாகி விடுமே என்ற ஆதங்கமே அவரை இத்துணை இடர்ப்படச் செய்துள்ளது.

காட்டவும் காட்டவும் காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்பு முத்துஉறைப்ப  
      (முல்லை. 22-23)

இன்துயில் வதியுநன் காணாள். துயர்உழந்து,
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு,
நீடுநினைந்து, தேற்றியும், ஓடுவளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து      
   (முல்லை. 80-84)

எனவரும் முல்லைப் பாட்டின் அடிகளைக் கூர்ந்து நோக்குவார்க்குத் தலைவியின் ஆற்றாமை வெளிப்பட்டாலும் அது எல்லை கடவாமல் கண்ணீர் பெருக்கெடுக்கும் அளவிலேயே நிற்கிறது. நெடுநல்வாடைத் தலைவியும் இத்தகையளே. ஆற்றாமை மிக்கு, தலைவி புலம்பத் தொடங்கியிருந்தால் இது நெய்தல் உரிப்பொருளாம் இரங்கலாகியிருக்கும். அந்நிலை முல்லைப்பாட்டுத் தலைவிக்கு இல்லை. எனவே நச்சினார்க்கினியரின் தயக்கம் தேவையற்றது.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...