Sunday, May 13, 2012

முல்லைப்பாட்டா? நெஞ்சாற்றுப்படையா? ஆய்வு நோக்கில் முல்லைப்பாட்டு -பகுதி-3

முல்லைப்பாட்டா? நெஞ்சாற்றுப்படையா?


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

    முல்லைப்பாட்டு என்ற இவ்வகப்பாட்டு நூலைச் சில இலக்கிய வரலாற்றாசிரியர்கள் நெஞ்சாற்றுப்படை என்று குறிப்பிடுகின்றனர். ஆற்றுப் படுத்துதல் என்பதற்கு வழிகூறுதல் அல்லது நெறிப்படுத்துதல் என்பதாகப் பொருள் கொள்ளலாம். ஆற்றுப்படுத்துவதன் வழி நன்மை உண்டாதல் வேண்டும் அதுவே ஆற்றுப்படையின் நோக்கம். இங்கே நெஞ்சு ஆற்றுப்படுத்துவதனால் தலைவியின் நிறையழியும் எனில் அது ஆற்றுப்படை ஆகாது.

இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து,
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,       
    (முல்லை. 80-83)

எனவரும் முல்லைப்பாட்டுப் பகுதியில் தலைவி தன் தலைவனைக் காணாளாய் துன்புற்று நெஞ்சம் செலுத்தும் வழியில் தம் நிறையழியும் என்பதை உணர்ந்து நெஞ்சின் போக்கிலிருந்து விடுபட்டுத் தன்னைத் தேற்றிக்கொள்கிறாள் என்பதாகவே நப்பூதனார் தம் இலக்கியத்தைப் படைக்கின்றார். நெஞ்சு இங்கே ஆற்றுப்படுத்த முயன்று தோற்றுப்போகிறது. அதுமட்டுமன்றி தலைவி தன் நெஞ்சைத் தேற்றுகிறாள் அதாவது ஆற்றியிலிருத்தலே கடன் என நெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றாள். இப்படியிருக்க நெஞ்சு ஆற்றுப்படுத்திய நெஞ்சாற்றுப் படையே முல்லைப்பாட்டு என வலிந்து பொருள் கொள்ளுதல் பொருத்தமாகத் தோன்றவில்லை.

பொருட்சுருக்கம்:
   
திருமால், வாமனனாகச் சென்று இரந்தபோது மாவலி வார்த்த நீர் கையில் பட்ட அளவில் பேருரு எடுத்ததைப் போல் கடல்நீரைக்குடித்து உலகத்தை வளைத்து வலமாக உயரந்தெழுந்த மேகம் மலைகளில் தங்கி மாலைக் காலத்தில் பெருமழையைப் பெய்தது. போர்வினை முடித்து கார்காலத்தில் திரும்பிவருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் பெருமழை தொடங்கிய பின்னும் வராத காரணத்தால் தலைவி கண்கலங்கி அழுகின்றாள். பெருமுது பெண்டிர் அவள் துயரைத் தணிப்பதற்கு நெல்லும் பூவும் தூவி நற்சொல் கேட்டு கைதொழுது நிற்கின்றனர்.

அப்பொழுது ஆயர் குலப் பெண்ணொருத்தி, தாய்ப் பசுவைப் பிரிந்த கன்றுகளின் துயரத்தைப் பார்த்து, கன்றுகளே, இடையர்கள் பின்னின்று செலுத்திக் கொண்டுவர உங்கள் தாய்ப் பசுக்கள் இப்பொழுதே வரும் என்று சொல்கிறாள். இச்சொல் கேட்ட பெருமுது பெண்டிர் இதனையே நற்சொல்லாகக் கொண்டு தலைவியிடம் வந்து, மாயோளே! நற்சொல் கேட்டோம் ஆகவே போர்மேல் சென்ற தலைவர் வெற்றிகரமாக வினைமுடித்து இப்பொழுதே வரவர் நீ உன்னுடைய கவலையை விட்டொழிப்பாயாக என்று தேற்றுகின்றனர். அவர்கள் தேற்றவும் ஆற்றாதவளாய் தலைவி கண்ணீர் சோர அழுது வருந்துகின்றாள்.

    தலைவியின் நிலை இவ்வாறிருக்க, வினைமேற் சென்ற தலைவன் நிலையை அடுத்து விவரிக்கின்றார் நப்பூதனார்.
படையெடுத்துச் சென்ற மன்னன் பகையரசனுடைய நகரத்துக்குப் பாதுகாப்பாக இருந்த காடுகளை வெட்டி, வேட்டுவர் குடிசைகளை அழித்து, முட்களை மதிலாக வளைத்துக் கடல் போன்று அகன்றதொரு பாடி வீட்டை அமைத்திருக்கின்றான். தழைகளால் வேயப்பட்ட அப்பாடி வீட்டின் நாற்சந்தியில் காவலாக நிற்கும் யானைகள் கரும்பும் நெற்கதிரும் அதிமதுரத் தழையும் சேர்ந்த உணவை உண்ணாது தம் துதிக்கையால் நெற்றியைத் துடைத்துக் கொண்டும், வளைந்த கொம்பிலே தும்பிக்கையைத் தொங்கவிட்டுக் கொண்டும் நிற்கின்றன. யானைப் பாகர்கள் அங்குசத்தால் குத்தி வடசொற்களால் அதட்டி யானைக்குக் கவளத்தை ஊட்டுகின்றனர்.
 குந்தாயுதங்களை ஊன்றி அவற்றின் மேல் கேடயங்கள் படல்கள் போல் பிணைக்கப்பட்டுள்ளன.

இப்படி வில், வேல், கேடயம் இவைகளால் பாதுகாப்பு அரண் அமைத்த பல கூடாரங்களுக்கு நடுவே அரசனுடைய பாசறை அமைந்திருக்கின்றது. அப்பாசறையில் இடையில் வாளைத் தொங்கவிட்டிருக்கும் வீரப்பெண்கள் விளக்கு அவியும் பொழுதெல்லாம் அவற்றைச் சீர் செய்யும் வகையில் திரிகளைக் கொளுத்திக் கொண்டும் எண்ணெய் ஊற்றும் சுரையைக் கைக்கொண்டும் விளங்குகின்றனர். மணியோசைகள் அற்ற அந்த நள்ளிரவில் உடலில் சட்டையணிந்து தலைப்பாகை திரித்திருக்கும் அனுபவம் மிக்க அரசனது மெய்க்காப்பாளர்கள் மோசி மல்லிகைக் கொடி அசைவது போல் தூக்கம் நிறைந்த முகத்தோடு திரிகின்றனர். பொழுதை அளந்து அறியும் பணியாளர்கள் அரசனை வாழ்த்தி நேரத்தை அவனுக்குத் தெரிவிக்கின்றனர்.

   வலிய கயிற்றால் திரை அமைக்கப்பட்டு உள் அறை, வெளி அறை என இரண்டாக அமைக்கப்பட்ட அரசனின் பாசறையில் சட்டை அணிந்த, குதிரைச் சவுக்கை மாட்டிய, அச்சம் தரும் தோற்றம் கொண்ட, வலிமை வாயந்த யவனர்கள் வெளிச்சம் காட்ட அரசன் உள்அறையை அடைகிறான், அங்கே ஊமையரான மிலேச்சர்கள் காவல் காக்கின்றனர். பாசறையின் உள் அறையில் அமைந்துள்ள படுக்கையில் அரசன் உறக்கம் வராமல் படுத்திருக்கின்றான்.

முதல்நாள் போரில் புண்பட்ட யானைகளை நினைக்கின்றான். யாகைளின் தும்பிக்கைகளை வெட்டி வீழ்த்தி வெற்றிமுரசு கொட்டிய வீரர்களை நினைந்து நெகிழ்கின்றான். அம்பு பாய்ந்த வலியால் உணவு உண்ணாது காதுகளைக் கவிழ்த்துக் கிடக்கும் குதிரைகளை எண்ணி நோகின்றான். அவனுடைய ஒருகை படுக்கையிலும் ஒருகை தலையிலும் இருக்கின்றது. நாளைய போர் குறித்துத் திட்டமிட்டுக் கொண்டே கண் துயில்கிறான் அரசன். மறுநாள் போரில் பகைவரை வென்று வெற்றி முரசு முழங்க தாம் சூடிய வஞ்சி மாலைக்கு வெற்றியை ஈட்டிய மகிழ்வில் கண்துயில்கிறான்.

பாசறையில் தலைவன் நிலை இவ்வாறிக்க இரண்மனையில் தலைவியின் எவ்வாறிருந்தது என்பதை அடுத்துச் சொல்லத் தொடங்குகிறார் புலவர். பாவை விளக்குகள் ஒளிவீசும் உயர்ந்த ஏழடுக்கு மாளிகையிலிருக்கும் தலைவி பாசறையிலே தலைவனிருக்க அவனைத் தன் படுக்கையில் காணாது துயருருகிறாள். பின்னர், தலைவி நெஞ்சம் ஆற்றுப்படுத்திய வழியில் நிறையழியும், ஆற்றியிருத்தலே கடமை என்பதுணர்ந்து தம்மை தேற்றிக் கொண்டும் கழலும் தமது வளையல்களைச் செறித்துக் கொண்டும் மயங்கியும் பெருமூச்செறிந்தும் அம்புதைத்த மயில் போல் நடுங்கிப் படுக்கையில் கிடக்கிறாள் 

கார்காலத்து மழைநீர், கூரை கூடும் இடங்களில் அருவிபோல் சொரிய அதனால் உண்டான பல்வேறு இனிய ஓசைகளைக் கேட்டவாறு ஆற்றியிருக்கிறாள் தலைவி.

அப்பொழுது,    பகைவரை வென்று அவர்தம் நிலங்களைக் கவர்ந்த பெரிய படையோடு, வெற்றிக் கொடி உயர்த்தி, ஊதுகொம்பும், சங்கும் முழங்க வருகிறான் தலைவன். அவன் வரும் வழியில் அஞ்சனம் போல் காயா மலர்களும் பொன்போல் கொன்றை மலர்களும் கைபோல் வெண்காந்தள் மலர்களும் இரத்தச் சிவப்பில் தோன்றி மலர்களும் பூத்திருக்கின்றன. வரகங் கொல்லையில் இளமான்கள் துள்ளி விளையாடுகின்றன. வள்ளியங்காடுகள் பின்னே போகும்படி தலைவன் முல்லைநில வழியில் வரும் தலைவனின் தேரில் பூட்டிய குதிரைகள் எழுப்பிய ஆரவார ஓசை தலைவியின் காதுகள் மகிழும்படியாக எழுந்தது.

No comments: