வெள்ளி, 21 டிசம்பர், 2007

வலைப்பதிவு செய்யலாம் வாங்க...



வலைப்பதிவு செய்யலாம் வாங்க...

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

 

உலகக் கணிப்பொறிகளை இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் இணையம், உலகை ஒரு மேசையளவிற்குச் சுருக்கிவிட்டது. கொட்டிக் கிடக்கும் அளப்பரிய தகவல்கள், இருமுனை மற்றும் பல்முனைத் தொடர்பு, பல்ஊடகத் தொழில்நுட்பம், வேகம், உலக மொழிகளைக் கையாளும் யுனிகோட் குறிமுறை முதலான பல்வேறு சாத்தியக் கூறுகள் இணையத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அடிப்படைகள். இணையம் வழங்கும் மின் அஞ்சல், இணைய அரட்டை, இணைய வணிகம், கோப்புகள் பரிமாற்றம் (F.T.P.) முதலான பல்வேறு சேவைகளில் அதிக கவனத்தைப் பெற்றது உலகளாவிய வலைத்தளச் சேவை www என்றழைக்கப்படும் World Wide Web சேவையாகும். வலைத்தளச் சேவையின் ஒரு பிரிவாகத் தோற்றம் பெற்று இன்றைக்குத் தனித்ததொரு இணையச் சேவையாகப் புகழ் பெற்றிருப்பதுதான் வலைப்பதிவுகள் என்றழைக்கப்படும் Blogs ஆகும்.
Blog என்ற சொல் Web - log என்ற இரண்டு சொற்களின் சுருங்கிய வடிவம் ஆகும்.

இணையத்தில் வலைப்பதிவுகள் தொடர்பாக அடிக்கடி பயன்படுத்தப்படும் சில சொற்கள் இதோ.
வலைப்பதிவு : Blog -(பெயர்ச்சொல்) இணைய வலைப்பதிவு
வலைப்பதிவு ஆசிரியர் : Blogger -(பெயர்ச்சொல்) வலைப்பதிவு எழுதுபவர்.
வலைப்பதிவு எழுது : Blog -(வினைச்சொல்) வலைப்பதிவில் எழுது.
வலைப்பதிவு எழுதுதல் : Blogging -(வினைச்சொல்) வலைப்பதிவில் எழுதுதல்.

வலைப்பதிவு என்பது தனிநபர்கள் அல்லது ஒரு குழு, தினமும் தங்கள் கருத்துக்களைப் பதிந்து வைக்கும் இடம் என்று தொடக்கத்தில் கருதப்பட்டது. கருத்துக்களை அல்லது படைப்புகளைப் பதித்தல் என்ற நிலை வளர்ச்சி பெற்று இணையப் பயனாளர்களின் பார்வைக்கு வைத்தல் என்ற மாற்றம் பெற்றது. பின்னர் அந்தப் பதிவுகளே இதழ் போன்ற ஒரு வகை ஊடகமாகப் பரிமாணம் பெற்றுப் பலரின் பார்வைக்கும் அவர்களின் பின்னூட்டத்திற்கும் தொடர்ந்த விவாதங்களுக்கும் இடமளித்து வலைப்பதிவுகள் என முழுமை பெற்றன..
தினமும் ஆயிரக் கணக்கானோர் தங்கள் கருத்துக்களை / படைப்புகளைத் தங்கள் தாய்மொழியிலேயே வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். பல்வேறு புகழ்பெற்ற இணைய தளங்கள் வலைப்பதிவுச் சேவைகளை இலவசமாக வழங்குகின்றன. கணினி பற்றிய தொழில் நுட்பம் தெரியாதவர்கள் கூட உருவாக்கிக் கொள்ளும் வகையில் வலைப்பதிவுகள் எளிமையானவை. ஒருவர் வலைப்பதிவுகள் குறித்த முழுமையான அறிமுகத்தைப் பெற வலைப்பதிவுகளின் அமைப்பைத் தெரிந்து கொள்ளுதல் நலம் பயக்கும்.
வலைப்பதிவுகளின் அமைப்பைத் தெரிந்துகொள்வதற்கு முன் வலைப்பதிவு முகவரி (URL) பற்றித் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். வலைப்பதிவைத் தொடங்குவதில் முதல்கட்டப் பணி வலைப்பதிவுச் சேவையை இலவசமாக வழங்கும் இணையதளத்தில் நமக்கான வலைப்பதிவு முகவரியைப் பதிவு செய்தல். நாம் பதிவு செய்யும் பெயர் ஏற்கனவே உபயோகத்தில் இல்லையென்றால் உடனே அனுமதி கிடைத்துவிடும். அனுமதிக்கப்பட்ட அந்தப் பெயரோடு வலைப்பதிவு சேவை வழங்கும் இணையதளத்தின் பெயரும் சேர்த்து குறிப்பிடப்படும். சான்றாக என்னுடைய வலைப்பதிவு முகவரிக்கான பெயர்: nailango. என்னுடைய வலைப்பதிவு முகவரி: nailango.blogspot.com என்பதாகும். பெயருக்குப் பின்னால் இடம் பெறும் blogspot.com என்பது வலைப்பதிவுச் சேவையை வழங்கும் இணையதளத்தின் பெயர்.

வலைப்பதிவின் அமைப்பு:
ஒவ்வொரு வலைப்பதிவும் சில அடிப்படை உறுப்புகள் அல்லது பகுதிகளைப் பெற்றிருக்கும். அவை பின்வருமாறு:
1.வலைப்பதிவுத் தலைப்பு.
2.வலைப்பதிவு முகப்பு.
3.பதிவின் தலைப்பு.
4.பதிவின் உடல்பகுதி.
5.பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள்.
6.பின்னூட்டங்கள்.
7.சேமிப்பகம்.
8.இணைப்புகள்.
9.வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள்.

-மேலே குறிப்பிடப்பட்ட ஒன்பது பகுதிகளையும் வலைப்பதிவின் அடிப்படைப் பகுதிகள் அல்லது வலைப்பதிவின் உறுப்புகள் என்று குறிப்பிடலாம். இவை தவிர்ந்த வேறு சில இணைப்புகளும் பகுதிகளும் அரிதாகப் பதிவுகளில் இடம் பெறுவதுண்டு.

மலையருவி கவிதைகள் என்ற வலைப்பதிவின் படம் சான்றுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

1. வலைப்பதிவுத் தலைப்பு (Title):

ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் ஒரு தலைப்பு உண்டு. இதுவே அவ்வலைப்பதிவின் பெயர். இதழ்கள், செய்தித்தாள்களுக்கு எப்படி ஒரு பெயரைச் சூட்டுகிறோமோ அதுபோல் வலைப்பதிவுக்கு நாம் சூட்டும் பெயர். வலைப்பதிவரின் பெயர், குறியீட்டுப்பெயர், இடுகுறியாக ஒருபெயர், வித்தியாசமான கவரத்தக்க வாசகம் எப்படி வேண்டுமானாலும் வலைப்பதிவுக்குப் பெயர் வைக்கலாம். அந்தப் பெயரே வலைப்பதிவுக்கான அடையாளம் என்பதைக் கவனத்தில் கொண்டு பெயரிடுதல் நலம். மேலே சான்றுக்காக காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகள் என்பது அந்த வலைப்பதிவின் தலைப்பு ஆகும்.

2. வலைப்பதிவு முகப்பு (Description):

வலைப்பதிவுத் தலைப்பை அடுத்து, வலைப்பதிவர் தம்மைப் பற்றியோ, தமது வலைப்பதிவின் நோக்கத்தைப் பற்றியோ சுருக்கமாகக் குறிப்பிடும் பகுதி இது. புதிதாகக் குறிப்பிட்ட வலைப்பதிவைப் பார்வையிடும் ஒருவருக்கு வலைப்பதிவை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த முகப்பு வாசகங்கள் இடம் பெறுதல் வேண்டும். செய்தித்தாள்களில் செய்தித் தலைப்பை அடுத்து இடம்பெறும் முகப்பு (Lead) போல சுருங்கிய வடிவில் அமைக்கப்படுவதால் இப்பகுதி வலைப்பதிவின் முகப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகளுக்கான புதிய மேடை என்பது அந்த வலைப்பதிவின் முகப்பு ஆகும்.

3. பதிவின் தலைப்பு (Title of the Post):

வலைப்பதிவில் ஒருவர் பதிக்கும் ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பிடுதல் அவசியம். ஒரு பதிவு நாம் வாசிப்பதற்குரியது தானா? என்பதைப் பார்வையாளர் தெரிந்து கொள்ள உதவும் பகுதி இது. வலைப்பதிவுகளில் ஒருவர் படைப்பு முக்கியத்துவம் பெறுவது பதிவுகளுக்கு அவர் இடும் தலைப்பைப் பொறுத்தே அமையும். தலைப்பு, பதிவின் உள்ளடக்கங்களின் சாரமாகவோ, அதையொட்டியோ அமைதல் வேண்டும். தலைப்பில்லாத பதிவுகள் தலையில்லாத உடலுக்குச் சமம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்பது அந்தப் பதிவின் தலைப்பு ஆகும். பதிவில் இடம்பெற்றுள்ள துளிப்பாக்களைக் குறிக்கும் விதத்தில் துளித் துளியாய் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

4. பதிவின் உடல்பகுதி (Post):

வலைப்பதிவில் ஒருவர் எழுதிப் பதிக்கும் உள்ளடக்கமே பதிவு. ஒரு வரிப் பதிவு தொடங்கி நூற்றுக்கணக்கான வரிகள் வரை பதிவின் அளவு இருக்கலாம். பதிவுகளின் அளவு குறித்து எல்லைகள் ஏதுமில்லை. அளவில் சிறிய பதிவுகளுக்குத்தான் வலைப்பதிவுகளில் வாசகர்கள் மிகுதி. பதிவின் உள்ளடக்கங்கள் எழுத்துரைகளாக மட்டுமில்லாமல் வரைபடங்கள், படங்கள், ஒலிகள், சலனப்படங்கள் என்று பல்லூடக உள்ளடக்கங்களாகவும் அமையலாம். பதிவுகளில் மீஉரை (Hyper Text) வசதிகளையும் உருவாக்கலாம். கடைசியாகப் பதித்த பதிவே முதலில் இடம்பெறும் வகையில் வலைப்பதிவுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பதிவுகள் கவிதை, கதை, கட்டுரை போன்ற படைப்பாக்கங்களாக, கருத்துரைகளாக, துணுக்குகளாக எப்படி வேண்டுமானாலும் அமையலாம். ஒரு பதிவின் மீது, தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற புதுமையைச் சாத்தியமாக்கும் இடம் பதிவின் உடல்பகுதியே. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் உடனுக்குடன் வாசகர்களைச் சென்றடையும் பதிவுகளே வலைப்பதிவுகளின் தலையாய பகுதி. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ள நான்கு துளிப்பாக்களும் தான் பதிவின் உடல்பகுதி.

5. பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள் (Date, Time, Author Stamp):

சில வலைப்பதிவுகள் தனிநபர் வலைப்பதிவுகளாக இல்லாமல் குழு வலைப்பதிவுகளாக இருக்கும். அத்தகு வலைப்பதிவுகளில் எழுதியவர் பெயர் முத்திரை இன்றியமையாதது. தனிநபர் வலைப்பதிவுகளில் இந்த முத்திரை அவசியமில்லை என்றாலும் எல்லா வலைப்பதிவுகளும் இந்த வசதியைப் பெற்றுள்ளன. பதிவுகள் பதிவு செய்யப்பட்ட நாளும், நேரமும் முக்கியமான தகவல்கள் என்பதால் பதிவுகளுக்கு மேலே பதிவுகள், பதிவு செய்யப்பட்ட நாள், கிழமை பற்றிய முத்திரையும் பதிவுகளுக்குக் கீழே பதிவு செய்யப்பட்ட நேரமும் வலைப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரே நாளில் வலைப்பதிவுகள் பலமுறை இற்றைப் படுத்தப்படும் (up-to-date) போது அல்லது பலமுறைப் பதிவுகளைப் பதிக்கும் போது நேர முத்திரை முக்கியத்துவம் பெறும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் பதிவின் மேலே, SATURDAY, NOVEMBER, 17, 2007 என்று பதிவின் நாள் முத்திரையும் பதிவின் கீழே, Posted by முனைவர் நா.இளங்கோ > at 6:55 P.M என்று பதித்தவர் பெயர் மற்றும் நேர முத்திரையும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

6. பின்னூட்டங்கள் (Comments):

வலைப்பதிவின் முக்கிய அம்சமே வாசகர் ஊடாடுவதற்கான வசதியினைப் பெற்றிருப்பதுதான். வலைப்பதிவின் இந்த வாசகர் ஊடாட்டமே பின்னூட்டம் (Feed- back) என்றழைக்கப்படுகிறது. பதிவை வாசிப்பவர் உடனுக்குடன் தம் கருத்தைப் பதிக்கும் வசதியே இது. வலைப்பதிவுகளில் ஒவ்வொரு பதிவின் கீழும் Comments என்ற பகுதி இடம் பெற்றிருக்கும். அவ்விடத்தில் இதுவரை எத்தனைக் கருத்துக்கள் பின்னூட்டங்களாக இடப்பட்டுள்ளன என்ற விபரத்துடன் கூடிய சுட்டி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்தச் சுட்டியைச் சொடுக்கினால் பின்னூட்டங்களைக் காணவும் மேலும் பின்னூட்டங்களைப் பதிவு செய்யவும் வாய்ப்பளிக்கும் புதிய சன்னல் திறக்கப்படும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்ற பதிவின் கீழ் 0 Comments என்ற சுட்டி இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

7. சேமிப்பகம் (Archives):

வலைப்பதிவுகள் தொடர்ச்சியாக இற்றைப் படுத்தப்படும் வசதியினைப் பெற்றிருப்பதால் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பதிவுகளையும் ஒரே பக்கத்தில் இடம் பெறச் செய்வது சாத்தியமில்லை. முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகள் தவிர்த்த முந்தைய பதிவுகள் வார வாரியாகவோ, மாத வாரியாகவோ தனியே சேமிப்பகம் என்ற பகுதியில் சேமித்து வைக்கப்படும். வலைப்பதிவுகளில் Archives என்ற பெயரில் இடம்பெறும் இப்பகுதி தனி வலைப்பக்கங்களாக வடிவமைக்கப்பட்டு அவற்றைத் திறப்பதற்கான மீஉரை சுட்டியுடன் அமைக்கப்பட்டிருக்கும். சேமிப்பகங்களைப் பராமரித்துப் பட்டியலிடும் பணிகளை வலைப்பதிவுச் சேவையை வழங்கும் வலைத்தளங்களே பார்த்துக் கொள்ளும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்ற பதிவுக்கு இடப்பக்கம் கீழே Blog Archive என்ற தலைப்பில் முந்தைய பதிவுகள் 2007 (11)> November (7) என்று பட்டியலிடப் பட்டிருப்பதைக் காணலாம்.

8. இணைப்புகள் (Links):

ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்களுக்கு விருப்பமான வலைத்தளங்களுக்கோ, வலைப்பதிவுகளுக்கோ இணைப்பு கொடுப்பது வழக்கம். வலைப்பதிவுத் திரட்டிகள், மென்பொருள் வழங்கும் தளங்கள், எழுத்துருக்கள் கிடைக்குமிடம், இணைய இதழ்கள் முதலான பல இணைப்புகளை வழங்க வலைப்பதிவுகளில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள் வழங்குதல் என்பது முழுக்க முழுக்க வலைப்பதிவரின் விருப்பத்தைச் சார்ந்தது. இத்தகு இணைப்புகளுக்கான சுட்டிகளைச் சொடுக்கிப் புதிய சன்னலில் இணைப்புக்குரிய வலைத்தளங்களையோ, வலைப்பதிவுகளையோ நாம் பார்வையிடலாம்.

9. வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள் (Page Elements):

வலைப்பதிவுகளில் இடப்பெறும் பதிவுகளுக்கு இடப்பக்கத்திலோ வலப்பக்கத்திலோ வார்ப்புருவின் (Template) வடிவமைப்புக்கு ஏற்பச் சில பக்கக் கூறுகளை இணைக்க முடியும். பக்கக் கூறுகளைப் பயன்படுத்தி வலைப்பதிவரின் புகைப்படம், வலைப்பதிவர் பற்றிய குறிப்புகள் போன்றவற்றை வலைப்பதிவுகளில் இணைக்கலாம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்ற பதிவுக்கு இடப்பக்கம் மேலே எனது புகைப்படம் என்ற தலைப்பில் வலைப்பதிவரின் புகைப்படமும் About Me என்ற தலைப்பில் வலைப்பதிவர் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

10. வலைப்பதிவின் பிற பகுதிகள்:

வலைப்பதிவரின் HTML அறிவு மற்றும் தேவைகளைப் பொறுத்து வலைப்பதிவுகளில் வேறு பல பகுதிகளையும் இணைப்பதுண்டு. சான்றாக, வலைப்பதிவுகளைப் பார்வையிட்டவர்கள் பற்றிய தகவல்கள் தரும் வலைத்தளங்களை இணைப்பது. வலைப்பதிவுத் திரட்டித் தளங்களை இணைப்பது, வலைப்பதிவுகளை அழகூட்டுவது இன்ன பிற வசதிகளை வலைப்பதிவுகளில் இணைத்துக் கொள்வதும் நடைமுறையில் உண்டு.
மேலே குறிப்பிடப்பட்ட வலைப்பதிவின் அமைப்பு மற்றும் பகுதிகள் பற்றிய விளக்கங்கள் வலைப்பதிவுகள் குறித்த அறிமுகமாக அமையும்.

முடிப்பாக :

கணிப்பொறி மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவோர் ஒவ்வொருவரும் தனித்தனியாகவோ, குழுவாகவோ பல வலைப்பதிவுகளை உருவாக்கிப் பயன்படுத்தப் போகும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும். வலைப்பதிவுகள் இலவசச் சேவையாக வழங்கப்படுவது மட்டுமே அதன் பரவலுக்கும் பயன்பாட்டுக்கும் காரணம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் படைப்பாக்கத் தாகமும் எழுதிய பதிவுகள் உடனே உலகெங்கும் பரவும் வேகமும் வலைப்பதிவுகளின் பரவலாக்கத்திற்கு அடிப்படைக் காரணங்களாகின்றன. உலக வலைப்பதிவுகளின் வரலாறு 1999 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் வலைப்பதிவுகள் பெற்றிருக்கும் வெற்றி நம்மை மலைக்க வைக்கிறது. வரும் காலங்களில் வலைப்பதிவுகள் எட்டிப்பிடிக்கப் போகும் சிகரங்கள் எத்தனையோ?


" வாருங்கள் ... வலைப்பதிவு செய்யலாம்..."

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமிழுக்கு நல்ல முறையில் செய்யப்படும்
தொண்டு.ஆனால் இன்று பல வலைப்பதிவுகளில் அரசியல் கோபங்களும்,சாதீய தாக்கமும் மலிந்து கிடப்பதுடன் சொற்போரும் தரம் தாழ்ந்த விமர்சனங்களும் படிப்பவர்களுக்கு சங்கடத்தைத் தரும் வகையில் அமைந்து வருவது வருந்தத்தக்க முன்னேற்றம்தான்.இது ஒரு ஆரோக்கியமான போக்காகுமா?

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

அன்புத் தோழரே!
உங்கள் வருத்தம் நியாயமானது. நெல்லோடு புல்லும் விளைவதுதானே இயற்கை! நாம் நெல்லை அறுவடை செய்வோம்! புல்லைக் களையெடுப்போம்.
நன்றி

முனைவர் நா.இளங்கோ

maa.sargunam@gmail.com சொன்னது…

very useful service.proceed
with best wishes,
m.sargunam

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...