திங்கள், 17 டிசம்பர், 2007

தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாய் இருப்பவர்கள் ஆட்சியாளர்களே!

வழக்காடுமன்றம்
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாய் இருப்பவர்கள் ஆட்சியாளர்களே!

முனைவர் நா.இளங்கோஇணைப்பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

நடுவர் : பேராசிரியர் இராச.குழந்தைவேலனார்

வழக்குத் தொடுப்பவர் : சீனு.வேணுகோபால்

வழக்கை மறுப்பவர் : முனைவர் நா.இளங்கோ.

வழக்கை மறுத்துரைத்து வாதிட்டமுனைவர் நா.இளங்கோ அவர்கள் பேச்சின் சுருக்கம்.

மாண்பமை நடுவர் அவர்களே!
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாய் இருப்பவர்கள் ஆட்சியாளர்களே! என்ற வழக்கினை இந்த மன்றத்தில் பதிவு செய்து ஆவேசத்தோடும் ஆற்றலோடும் பேசி அமர்ந்திருக்கின்ற சீனு. வேணுகோபால் அவர்களின் மொழிப் பற்றிற்கு நான் தலை வணங்குகிறேன். அவர் புதுச்சேரியை மையப்படுத்தி இந்த வழக்கைப் பதிவுசெய்தார். அவரின் ஆதங்கத்தை என்னால் உணர முடிகின்றது. ஆனால், வழக்குரைஞர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். புதுச்சேரி ஒரு முழுமையான மாநிலம் அல்ல. இது மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட ஒரு ய+னியன் பிரதேசம். இங்கே இருக்கும் சட்டசபையோ, முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களோ முழுமையான அதிகாரம் படைத்தவர்கள் அல்லர். புதுவையின் ஆட்சி அதிகாரம் இரண்டுமே மேதகு துணைநிலை ஆளுநர் மற்றும் அரசுச் செயலர்கள் வசம்தான் உள்ளன.

வழக்குரைஞர் வேணுகோபால் அவர்களே!
நீங்கள் குறிப்பிடும் ஆட்சியாளர்கள் யார்? என்பதை முதலில் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யும் அமைச்சர்கள்தான் நீங்கள் குறிப்பிடும் ஆட்சியாளர்கள் என்றால், உங்கள் குற்றச்சாட்டு பலவீனமாகப் போய்விடும். ஏனென்றால் இந்த ஆட்சியாளர்கள் அதிகாரமற்றவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இவர்கள் நம் தாய்மொழியாம் தமிழுக்குப் பகைவர்கள் என்பதை ஒரு வாதத்திற்காகக் கூட என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நம் சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றி நாம் நன்கு அறிவோம். நம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவருமே சொல்லாலும் செயலாலும் நம் தாய்த்தமிழின் நலம் நாடுபவர்கள். அவர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தடையாய் இருப்பதையோ செயல்படுவதையோ விரும்பமாட்டார்கள். அதற்கு முக்கியக் காரணம் ஓட்டளிக்க வேண்டிய மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு அந்த அவப்பெயரால் அடுத்த தேர்தலுக்கான வெற்றி வாய்ப்பை இழக்க அவர்கள் யாருமே விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு மற்றெல்லாவற்றையும் விட மக்களின் ஓட்டு மிக மிக முக்கியம்.

நீங்கள் குறிப்பிடும் ஆட்சியாளர்கள், துணைநிலை ஆளுநர் மற்றும் அரசுச் செயலர்கள் என்றால் அப்போதும் உங்கள் குற்றச்சாட்டு மேலும் பலவீனமாகிப் போகும். ஏனென்றால் புதுச்சேரியைப் பொருத்தவரை இத்தகு ஆட்சியாளர்கள் பெரிதும் பிற மொழியாளர்களாகவே அமைந்து விடுகின்றனர். பெரும்பாலும் வடஇந்தியர்கள். இவர்களுக்கு நம் தாய்மொழியாம் தமிழின் பெருமையும் வரலாறும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை. பிற மாநிலங்களில் உள்ளதுபோல் ஷஒரு மாநிலத்தில் பணியாற்றும் அரசுச் செயலர்கள் அந்த மாநில மொழியைக் கற்று அம்மாநில மக்களின் மொழியிலேயே நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த நம் புதுவைக்கு வலிமையில்லை.

அக்கறை உள்ளவர்களுக்கு அதிகாரம் இல்லை. அதிகாரம் உள்ளவர்களுக்கு அக்கறை இல்லை.

உண்மையிலேயே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு யார் தடை? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழகத்தைப் பொருத்த வரை தாய்மொழிவழிக் கல்வி பரவ, நாம் விடுதலை பெறுவதற்கு முன்னிருந்தே முயற்சி செய்து வருகிறோம். தாய்மொழிவழிக் கல்வி தொடர்பாக நாம் எடுக்காத மாநாடுகள் இல்லை. நடத்தாத ஊர்வலங்கள் இல்லை. எழுப்பாத முழக்கங்கள் இல்லை. நாடு விடுதலை பெற்றது முதல் தமிழகத்தை ஆண்ட அரசுகள் போதுமான அக்கறை செலுத்தவில்லை என்பது ஒருவகையில் உண்மை என்றாலும் முழுமையான காரணம் அவர்களல்லர்! நாமே முழுமுதற் காரணம், நம்மிடத்துள்ள தாழ்வு மனப்பான்மை, அறியாமை, அச்சம் இவைகளே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இதுநாள் வரை தடைகளாக இருந்து வந்துள்ளன.

கடந்த 2000 ஆண்டுகளில் தமிழன் தழிழர்களை ஆண்ட காலங்கள் குறைவு. சங்கம் மருவிய காலம் தொடங்கி நாடு விடுதலை பெற்றதுவரை கிட்டத்தட்ட பதின்மூன்று நூற்றாண்டுகள் தமிழகம் அந்நியர் ஆட்சியிலேயே இருந்திருக்கின்றது. ஆட்சி மொழியாகவும் அந்நிய மொழிகளே இருந்திருக்கின்றன.களப்பிரர் காலத்தில் பாலி மொழியும் சமஸ்கிருதமும், பல்லவர் காலத்தில் பிராகிருதமும் சமஸ்கிருதமும் ஆதிக்கம் பெற்றன. சோழர்காலத்தில் தமிழ், ஆனால் செல்வாக்கு பெற்ற மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. நாயக்கர் காலத்தில் தெலுங்கும் சமஸ்கிருதமும், மராட்டியர் காலத்தில் மராட்டி, மொகலாயர் காலத்தில் பாரசீகம், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம், புதுவையில் பிரஞ்சியர் ஆட்சியில் பிரஞ்சு என்று தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாகத் தமிழுக்கு இடமில்லாத அவலநிலை. ஆங்கிலேயர் ஆட்சியில் புதிய கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட போது நம்மைப் பிடித்த ஆங்கிலவழிக் கல்வி இன்று வரை தொடர்கிறது.

பிற இனத்தவர்களின் வேட்டைக்காடாகிய தமிழகம் கடந்த காலங்களில் இழந்தவைகள் எத்தனையோ. ஆட்சியை இழந்தோம், மொழியை இழந்தோம், பண்பாட்டை இழந்தோம். வந்தேறிகளின் வாய்மொழியில் மயங்கி சுயமரியாதை அற்றுத் தாழ்வு மனப்பான்மையால் தகவறியாது திகைத்து நிற்கிறோம். தமிழனின் பண்பாட்டை ஆரியத்திடமும், தமிழனின் கல்வியை, ஆட்சியை ஆங்கிலத்திடமும் பறிகொடுத்து விட்டுப் பரிதவித்து நிற்கிறோம். நாடு விடுதலை பெற்றபின், ஆங்கிலேயன் செயற்கையாகப் பிணைத்து வைத்த இந்தியா என்ற சிறைக்குள் சிக்கிக் கொண்டோம். இந்தியா ஒரு துணைக்கண்டம் என்பது மறக்கடிக்கப்பட்டு ஒரே நாடு என்ற போலி முழக்கத்தால் இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்தும் போராட வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்கு ஆளானோம்.

வழக்குரைஞர் வேணுகோபால் அவர்களே!
நீங்களே குறிப்பிட்டீர்கள், ஆட்சியாளர்கள் தமிழின் வளர்ச்சிக்காகப் பல்வேறு சட்டங்களைப் போட்டுள்ளார்கள் என்று. ஆட்சி மொழிச் சட்டம். பெயர்ப் பலகை ஆணை, தமிழில் ஒப்பமிடும் ஆணை என்று பல சட்டங்களை ஆண்டு வாரியாகக் குறிப்பிட்டு உங்கள் வாதத்தை வைத்தீர்கள். நான் கேட்கிறேன் இந்தச் சட்டங்களை ஏன் நம் தமிழர்கள் பின்பற்றவில்லை? தமிழ்வளர்ச்சி தொடர்பான பல போராட்டங்களைத் தமிழ் ஆர்வலர்கள் நடத்தியும் மக்களிடத்தில் ஏன் விழிப்புணர்வு இல்லை? தமிழ் தொடர்பான போராட்டங்களின் போது தமிழ் மக்களின் ஆதரவு இல்லை என்பதோடு அவர்களின் கேலிக்கும் கிணடலுக்கும் தமிழன்பர்கள் ஆளாவது ஏன்? யோசித்தீர்களா?பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்ற மறுப்பவன் யார்? தமிழில் கையெழுத்துப் போட மறுப்பவன் யார்? குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதைக் கேலி செய்பவன் யார்? ஆலயங்களில் வடமொழி அர்ச்சனைதான் வேண்டும் என்று கேட்பவன் யார்? ஆலயக் குடமுழுக்கை வடமொழியில் நடத்துவதுதான் சரியென்று வாதிடுபவன் யார்? தமிழில் பேசுவது தரக்குறைவு ஆங்கிலத்தில் அளவளாவுவதுதான் படித்தவன் என்பதற்கான அடையாளம் என்று நினைப்பவன் யார்? சொல்லுங்கள்…! இவர்களெல்லாம் யார்? தமிழர்கள் தானே! தமிழ் வளர்ச்சியின் சிறு சிறு பகுதிகளான மேற்சொல்லப்பட்ட அத்தனைக்கும் ஆட்சியாளர்களா தடை? இல்லை, இல்லவே இல்லை. தமிழனின் தாழ்வு மனப்பான்மைதான் தடை.

தமிழ் வளர்ச்சிக்குக் கடுமையான சட்டங்கள் இல்லையே! சட்டங்களைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் இல்லையே! என்கிறீர்கள். கடுமையான சட்டங்களும் நடிவடிக்கைகளும் மட்டுமே போதும் என்றால், இந்தியக் குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தவுடன் நாட்டில் குற்றங்கள் நடைபெறாமல் போயிருக்க வேண்டும். அவ்வளவு வேண்டாம் குறைந்திருக்கவாவது வேண்டுமே! நடைபெற்றதா? சட்டங்களாலும் தண்டனைகளாலும் குற்றங்களைக் குறைக்க முடியுமா? முடியாது, முடியவே முடியாது. வறுமையும் ஏழ்மையும் பசியும் ஒருபக்கம். கோடி கோடிகளாகக் குவிக்கும் பணமுதலைகள் ஒருபக்கம் என்று பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகுந்துள்ள நாட்டில் திருட்டும் வழிப்பறியும் கொள்ளையும் இருந்தே தீரும். சட்டங்களும் தண்டனைகளும் அதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. தமிழ்வளர்ச்சியிலும் அப்படித்தான். சட்டங்கள், தண்டனைகளால் தமிழை வளர்த்துவிட முடியாது.

தமிழனுக்குத் தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டும். தமிழன் சுயமரியாதை உள்ளவனாக மாற வேண்டும்.

மாண்பமை நடுவர் அவர்களே!
தமிழை வளர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தமிழைப் புகழ்ந்து கொண்டே இருந்தால் தமிழ் வளர்ந்து விடுமா? தமிழைப் பாதுகாக்கிறேன் என்று சிலர் போடும் வேலிகளால் தமிழ் தழைத்து விடுமா? பயிரைப் பாதுகாக்கிறேன் என்று வேலி போடுகிறவர்கள் உள்ளே பயிர்வளரவும் பணியாற்ற வேண்டும் அல்லவா? பயிரை வளர்க்காமல் வெறுமனே பாதுகாத்து என்ன பயன்?தமிழறிஞர்கள் தமிழின், தமிழரின் வரலாற்றுப் பெருமைகளைச் சொல்லித் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் அதே நேரத்தில் தமிழை அறிவியல், தொழில் நுட்ப மொழியாக மேம்படுத்த வேண்டும். அறிவியல் நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பதன் மூலம் தமிழ் அறிவியல் மொழியாகிவிடாது. தமிழில் அறிவியல், தமிழில் தொழில் நுட்பம் என்பது மொழிபெயர்ப்புப் பணியன்று. அது ஒரு படைப்புப் பணி. ஆங்கிலச் சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்ததால் தமிழில் சிறுகதை இலக்கியம் உருவாகி விடவில்லை. தமிழில் சிறுகதைகள் பல படைக்கப்பட்டதனால் உருவானது அது. அறிவியல் தமிழும் அப்படித்தான் உருவாக வேண்டும். இது தமிழனின் பணி. தமிழ் படித்தவனின் பணி மட்டுமல்ல. பிற துறை வல்லுநர்களும் நாம் தமிழர்கள், நமக்கான வரலாற்றுக் கடமை இது என உணர்ந்து தமிழ் வளர்ச்சிக்குக் கடமையாற்ற வேண்டும்.

ஆட்சியாளர்களைக் குறைசொல்வதென்பது, நம் கடமைகளிலிருந்து நாம் நழுவிக் கொள்ளும் தந்திரம். ஆட்சியாளர் என்பவர்கள் யார்? உண்மையில் அவர்கள் நமது பணியாளர்கள். நமக்கான பணியைச் செய்யக் காத்திருப்பவர்கள். முழு அதிகாரம் படைத்தவர்கள் மக்களாகிய நாம்தான். நம்மிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் ஆட்சியாளர்கள் கையைக் கட்டிக்கொண்டு காலம் தள்ள முடியாது. மக்கள் சக்திக்கு முன்னால் ஆட்சி, அதிகாரம் இவைகள் எல்லாம் தூள் தூளாகிப் போகும். உலக வரலாறு நமக்குச் சொல்லித்தரும் பாடம் இதுதான்.தமிழர்களே! அரசியல்வாதிகள் நம் ஓட்டுக்காகக் காத்திருப்பவர்கள். அவர்கள் நம் விருப்பத்திற்கு மாறாக ஒன்றையும் செய்யத் துணிய மாட்டார்கள். ஆட்சியாளர்களோ! நமக்குப் பணிசெய்யக் காத்திருக்கும் பணியாளர்கள். நாம் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதுதான் அவர்கள் பணி. தமிழ் வளர்ச்சி நம் கையில்தான் உள்ளது. நாம் ஒன்று கூடினால், உரத்த குரலெழுப்பினால், நம் கரங்களை உயர்த்தினால் சிகரங்களும் தவிடு பொடியாகும். தமிழ்ப் பகைவர்கள் உருக்குலைந்து போவார்கள். தமிழ் வளர்ச்சி உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே.

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு

வெங்குருதி தனில்கமழ்ந்து வீரம் செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்.

நன்றி! வணக்கம்!!

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...