புதன், 5 டிசம்பர், 2007

ஹைக்கூ... கடவுளின் கடைசிக் கவிதை -நூல் மதிப்புரை



கடவுளின் கடைசிக் கவிதை (மணிகண்டன்)

நூல் மதிப்புரை



முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

ஹைக்கூ ஒரு விந்தையான கவிதை வடிவம். உருவத்தில் சிறிய கவிதை வடிவங்கள் தமிழின் மரபிலும் உண்டு. குறள் வெண்பா, மூன்றடி அகவல், வஞ்சி விருத்தம் என்றெல்லாம். ஆனால் அந்தக் கவிதை வடிவங்களில் இருந்தெல்லாம் மாறுபட்டது. ஹைக்கூ. ஜப்பான்தான் ஹைக்கூவின் தாயகம். பிறந்தகத்திலிருந்து புகுந்தகம் வந்தபிறகு ஹைக்கூ.விடம் எத்தனையோ மாற்றங்கள். ஜப்பான் ஹைக்கூ.க்குக் கன்னிப் பெண்ணின் அழகு. தமிழ் ஹைக்கூ.வுக்கு தாய்மையின் அழகு. துளிப்பா, குறும்பா, சிந்தர், ஹொக்கு என்றெல்லாம் தமிழில் ஹைக்கூ.வுக்கு எத்தனை செல்லப்பெயர்கள். மூன்றடிக் கவிதை ஹைக்கூ.. வாமனனை ஞாபகப்படுத்தும் வடிவம். கவிதை அளவில் சிறியதென்றாலும் அது எடுக்கும், விஸ்வரூபம்.

கவிதை வாசகனிடம் வெளிப்படையாகப் பேசுகிற விஷயங்களை விடப் பேசாமல் விடுகிற விஷயங்கள் ஏராளம். கவிதை பேசாமல் விட்டனவற்றைக் கவிதைக்குள்ளே தேடி வாசிப்பதில்தான் வாசகனின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் அடங்கியுள்ளது. தமிழின் மரபுக் கவிதைகளுக்கும் புதுக் கவிதைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் போலவே, புதுக் கவிதைகளுக்கும் ஹைக்கூ. கவிதைகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. புதுக் கவிதையை மூன்றடியில் எழுதிவிட்டால் அது ஹைக்கூ. ஆகிவிடாது.

காதலியின் பேச்சு போல் ஹைக்கூ. நம்மிடம் பேசும். காதலி பேசுகிற ஒன்றிரண்டு வார்த்தைகளே ஒருவனுக்குக் காவியமாய் விரிவடையும். சொல்லிய வார்த்தைகளிலிருந்து சொல்லாதவற்றை எல்லாம் கற்பனை செய்துகொள்ளும் பித்துற்ற காதலனைப் போல் நம்மை கணப்பொழுதில் மாற்றிவிடும் ஆற்றல் நல்ல ஹைக்கூ.வுக்கு உண்டு. நல்ல ஹைக்கூ.! அதில்தான் கவிஞனின் செய்நேர்த்தியே இருக்கிறது.

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோருமே கவிஞர்கள்தாம். பலர் இன்னும் எழுதவில்லை என்பதால் அவர்கள் கவிஞர்கள் இல்லை என்று சொல்லமுடியாது. இன்னும் எரியவில்லை என்பதால் விறகுக்குள் நெருப்பில்லை என்று சொல்லமுடியுமா?. எழுதும் கவிதைக்கு உயிர் வேண்டுமே! உயிருள்ள கவிதைகள் தாமே வாழும். உயிருள்ள கவிதையை யார் எழுதமுடியும்? எப்படி எழுத முடியும்?
நன்னூல் ஆசிரியன் பவணந்தி விடை சொல்கிறான்,

பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.
கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது! அது வெறும் பிணம். கருத்து மட்டுமே கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. பவணந்தியார் சொல்லும் இலக்கணம் எல்லா கவிதைகளுக்கும் பொதுவானது. ஹைக்கூ.வுக்குச் சிறப்பானது.

சென்ற நூற்றாண்டின் 80 களுக்குப் பிறகுதான் தமிழில் தமிழில் ஹைக்கூ தொகுதிகள் வெளிவரத் தொடங்கின. தமிழில் ஹைக்கூவுக்கு 25 ஆண்டுக் கால வரலாறுதான். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த ஹைக்கூ நூல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். பெருகும் ஹைக்கூ நூல்களின் / ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சி ஒரு வகையில் அச்சத்தை உண்டாக்குகிறது. என்றாலும் அச்சப்பட நாம் யார்? நமக்கென்ன தகுதி? அதைக் காலம் பார்த்துக் கொள்ளும் என்ற மெல்லிய ஆறுதல் நம்மைத் தேற்றுகிறது.

பகுதி இரண்டு

தோழர் மணிகண்டனின் கடவுளின் கடைசிக் கவிதை (சென்ரியூ கவிதைகள்) என்ற தலைப்பில் வெளிவரும் ஹைக்கூ நூல் கவிஞரின் முதல் முயற்சி. மணிகண்டன் என்ற கவிஞரை நான் நன்கு அறிவேன். அவர் இளங்கலைத் தமிழ் பயிலும் காலத்தில் அவருக்குப் படைப்பிலக்கியம் பாடப்பகுதியில் மரபுக் கவிதைகள் எழுதக் கற்றுக் கொடுத்தேன். அப்பொழுதே தன்னை ஒரு கவிஞன் என்று அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு படைப்பாளி அவர். பாடம் சொல்லித்தரும் நிலையிலிருக்கும் நான் கொஞ்சம் சிரமப்பட்டு வெண்பா எழுத, மாணவர் மணிகண்டனோ மிக எளிதாக வெண்பா படைப்பார். புதுமைப்பித்தன், ஆகாசம்பட்டு சேஷாசலம் வெண்பாக்களை நினைவுபடுத்தும் பாணியில் அவருக்கு வெண்பா சரளமாக வந்து விழும். புதிய பாணியில் மரபுக் கவிதைகளை எழுதக்கூடிய நல்ல கவிஞர்.

மணிகண்டன் தமது முதல் கவிதைத் தொகுதியை ஹைக்கூவில் படைத்துள்ளார். வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க பல நல்ல ஹைக்கூக்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இந்தவகை ஹைக்கூக்களைக் கவிஞர் சென்ரிய+ கவிதைகள் என்கிறார். சென்ரியூ என்றால் வேறொன்றுமில்லை, சமூக அக்கறையோடு எழுதப்படும் ஹைக்கூ கவிதைகள், அவ்வளவுதான். இந்தத் தொகுப்பில் மொத்தம் 190 ஹைக்கூ கவிதைகள் உள்ளன. கவிதைகள் பல்வேறு தலைப்புகளின் கீழ் வரிசைப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனியே தலைப்புகள் இல்லை. ஏன் அப்படி? என்றால், அது அப்படித்தான். ஹைக்கூ கவிஞர்கள் கவிதைகளுக்குத் தலைப்பிடுவதை அனுமதிப்பது இல்லை. கவிதைகளுக்குத் தலைப்பிட்டால் அது வாசகனின் வாசிப்பு அனுபவத்தில் கவிஞன் தேவையின்றித் தலையிட்டதாகிவிடும். ஒரு கவிதையை என்னவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது வாசகனுக்குத் தெரியும். எனவேதான் மணிகண்டனும் கவிதைகளுக்குத் தலைப்பிடவில்லை.

சில ஹைக்கூக்கள்:
இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஷஇந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கிறது என்ற வெற்று ஆராவாரம் ஒரு பக்கம். கிராமங்கள்தாம் இந்தியாவின் முதுகெலும்பு என்ற கூச்சல் மறுபக்கம். உண்மையில் இந்தியக் கிராமங்கள் எப்படி இருக்கின்றன? ஊர் தனி! சேரி தனி! வெட்கப்பட வேண்டாமா? ஊரையும் சேரிகளையும் தனித்தனியே பிரித்து வைக்கும் ஆதிக்கச் சாதிவெறி மண்டிக்கிடக்கும் இந்தியக் கிராமங்களில்தாம் இந்தியாவின் ஆன்மா இருக்கிறது என்றால்? இந்தியாவின் முகவரி சாதிவெறி தானா?

தேர்வராத சேரிக்குள்
ஊரே வரும் …
தேர்தல் நேரம்

கவிஞர் மணிகண்டனின் மேலே காட்டப்பட்ட சென்ரியூ எழுப்பும் கேள்விகள் ஒன்றா? இரண்டா? இரண்டாயிரம் ஆண்டுக்கால மனுராஜ்ஜியத்தையே அல்லவா நார்நாராகக் கிழிக்கிறது கவிதை. அத்தோடு விட்டாரா! தேர் வராத சேரிக்குள் ஊரே வருகிறது. எப்பொழுது? தேர்தல் நேரம். நம் கேலிக்குரிய ஜனநாயகத்தையும் அல்லவா புரட்டிப் போடுகிறார். இந்தக் கவிதைக்கு இப்படி விளக்கம் சொல்லிக்கொண்டே செல்வதைவிட கொஞ்சம் ஊன்றி, மீண்டும் மீண்டும் வாசித்துப் பாருங்கள், வாமன வடிவில் இருக்கும் கவிதை விஸ்வரூபம் எடுப்பதை உணரமுடியும். இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கவிதைகளில் மேலே குறிப்பிட்ட கவிதையும் ஒன்று.

உலகமே இருமை. ஒன்று, அதற்கு எதிரான மற்றொன்று என்று எல்லாமே பைனரி மயம். நன்மை- தீமை, உண்மை- பொய், ஆக்கம்- அழிவு, தோன்றல்- மறைதல், கடவுள்- சாத்தான் இந்த இணைகளைக் கூர்ந்து பாருங்கள். இவற்றில் ஒன்றைக் கொண்டாடுகிறோம், மற்றொன்றை ஒதுக்குகிறோம். உண்மையில் ஒன்று இல்லையென்றால் மற்றொன்று ஏது? இந்த ஞானம்தான் அறிவியல், அறவியல், அழகியல், ஆன்மஇயல் எல்லாமே.

தேவாலய மணியோசை
கேட்கும் பொழுதெல்லாம் …
சாத்தானின் ஞாபகம்

என்ற மணிகண்டனின் ஹைக்கூ நமக்குச் சொல்லாமல் சொல்லுகிற ஞானம் அதுதான். தேவனின் நினைவு வருகிறபோதெல்லாம் சாத்தானின் ஞாபகம் வருகிறது. கவிஞருக்கு மட்டுமா? எல்லோருக்கும்தான். தேவன், தேவனாயிருப்பது சாத்தானின் இருப்பால், சாத்தான், சாத்தானாயிருப்பது தேவனின் இருப்பால்.

இப்படி முரண்களை நிரல்படுத்தும் ஹைக்கூக்கள்தாம் இந்தத் தொகுப்பில் மிகுதி. ஹைக்கூ கவிதைகளுக்கு இவ்வகை உத்தி ஒரு புதிய வாய்பாட்டு வடிவத்தைக் கொடுக்கிறது.

ஆயுதங்களுடன் இருந்தும்
திருடு போனது
பத்திரகாளி சிலை
தொலைந்த பணம் கிடைக்குமா?
புறப்படத் தயாராக
கடைசிப் பேருந்து

அடிக்கடி வருவார்
அம்மாவின் வார்த்தைகளில்
இறந்துபோன அப்பா

மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள ஹைக்கூக்களைக் கொஞ்சம் ஆழ்ந்து வாசியுங்கள், கவிஞரின் செய்நேர்த்தி அந்தக் கவிதைகளில் மிளிர்வதை உணரமுடியும்.

கடவுளின் கடைசிக் கவிதை என்ற இந்தத் தொகுப்பு சமகாலக் கவிதைத் தொகுப்புகளையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது.

கவிதைப் புத்தகத்தில்
கடைசிப் பக்கம் வரை தேடல்
கிடைக்க வில்லை கவிதை

ஆனால் மணிகண்டனின் கவிதைத் தொகுப்பில் பக்கங்கள் தோறும், தொட்ட இடம் எல்லாம் கண்ணில் தட்டுப்படுகிறது கவிதை. கவிஞரின் முதல் தொகுப்பு என்பதால் வீறுநடை யில்லாமல் சில இடங்களில் தளர்நடை தெரியலாம். இந்தத் தளர்நடைதானே வீறுநடைக்கு ஆதாரம் என்பதை உணர்ந்து தமிழுலகம் இந்நூலை ஏற்றுப் போற்றி மகிழும் என நம்புகிறேன்.

நா.இளங்கோ

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...