திங்கள், 5 நவம்பர், 2007

காரை இறையடியானின் திருவருட்பாவை-ஓர் அறிமுகம்

காரை இறையடியானின் திருவருட்பாவை-ஓர் அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் காரை இறையடியானின் இயற்பெயர் மு.முகம்மது அலி என்பதாகும். ஹாஜி, முகம்மது அப்துல்காதர், பாத்திமா அம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகனாக 17-11-1935 இல் பிறந்தவர்;பன்னிரு நூல்களை இயற்றிய கவிஞரும், மார்க்க அறிஞருமாகிய அமுதகவி அ.சாயபு மரைக்காயரின் பெயரனாகத் தோன்றியவர்; தமிழ் பிரவே, வித்துவான் முதலிய தமிழ்க் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்; காரைக்கால் மு.வி.ச. உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்; பூஞ்சோலை என்னும் தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழை ஒன்பதாண்டுகள் வெற்றிகரமாக நடத்தியவர்; சமரசம் இதழின் துணையாசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்; மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணரோடு தொடர்பு கொண்டு, அவர்தம் உலகத் தமிழ்க் கழகத்தில் மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுத் தொண்டாற்றியவர். தனித்தமிழ்க் கொள்கையைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டு பணியாற்றிய சிறப்பினால் தனித்தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக்கப் பெற்றவர்.
பாவலர் காரை இறையடியான் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியிருந்தாலும் அச்சில் வெளிவந்துள்ள நூல்கள் பத்து மட்டுமே, அவை:
1. திருவருட்பாவை
2. திருநபி இரட்டை மணிமாலை
3. காரைக்கால் மஸ்தான் சாகிபு வலியுல்லா வரலாற்றுப் பேழை
4. தமிழமுதம்
5. வாழ்வியல்
6. அறிவியல் ஆத்திசூடி விளக்கவுரை
7. கல்லறைக் காதல்
8. கன்னித்தமிழ் வளர்த்த காரைக்கால் அம்மையார்
9. செந்தமிழ்த் தொண்டர் ஆற்றுப்படை
10. நபிமொழிக் குறள்
பாவலரின் பத்து நூல்களில் தமிழமுதம் என்ற கவிதைத் தொகுப்பு நூல் 1987 ஆம் ஆண்டின் தலைசிறந்த கவிதை நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. 1994 ஆம் ஆண்டு அவர்தம் நபிமொழிக் குறள் என்னும் நூல் தத்துவம், சமயம், அறவியல் ஆகிய துறைகளில் வெளியான மிகச் சிறந்த நூல் என்று தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

திருவருட்பாவை:

காரை இறையடியானின் முதல்நூல் என்ற பெருமைக்குரிய படைப்பு அவரின் திருவருட்பாவையாகும். இஸ்லாத்தின் பெருமைகளை விளக்கும் பல சிற்றிலக்கியங்கள் தமிழில் உண்டு என்றாலும் பாவைப்பாடல் என்ற வகையில் எழுந்த முதல் இஸ்லாமியச் சிற்றிலக்கிய நூல் இதுவே.

சங்க காலத்தில் பெண்கள் விளையாடிய பாவை விளையாட்டில் தொடங்கிக் காலந்தோறும் பற்பல மாற்றங்களுடன் வளர்ச்சி பெற்றுப் பாவை எனும் சிற்றிலக்கியம் உருவாயிற்று. இறைவனின் அருட் குணங்களைப் போற்றியும் நாடு நலம் பெற மழைவேண்டியும் மகளிர் குழுவாகப் புறப்பட்டுப் பிற பெண்களைத் துயிலெழுப்பியும் நீராட அழைத்தும் பாடுவதாக அமைவதே பாவை இலக்கியம் ஆகும். பாவை விளையாட்டில் தொடங்கி, சமயச் சார்பு பெற்றுப் பாவை நோன்புக்கும் சமய வளர்ச்சிக்கும் பயன்பட்டு, அதன் பின்னர் நாடு, இனம், மொழி பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்தும் பாட்டாய் பாவை இலக்கியம் வளர்ந்துள்ளது.

ஆண்டாள் எழுதிய திருப்பாவை வைணவத்திற்கும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை சைவத்துக்கும், அவிரோத நாதரின் சமணத் திருவெம்பாவை சமணத்திற்கும் பாவை நூல்களாகத் திகழ்வதைப் போன்று காரை இறையடியானின் திருவருட்பாவை இஸ்லாமிய பாவை இலக்கியமாகத் திகழ்கின்றது. பிற பாவை நூல்களில் கூறப்பட்ட துயிலெழுப்புதல், நீராடல் போன்ற பாவை இலக்கியக் கூறுகள் இந்நூலிலும் அமைந்து சிறக்கின்றன. பாவை பாடலுக்கென்றே அமைந்த ஏலோ ரெம்பாவாய் என்னும் தொடர் இத்திருவருட் பாவையின் ஒவ்வோர் பாடல் ஈற்றிலும் அமைந்திருப்பது பாவை சிற்றிலக்கிய மரபைக் காப்பதாய் அமைந்துள்ளது.

திருப்பாவை, திருவெம்பாவைகளில் பாவை நோன்பின் நோக்கங்களாக நல்ல கணவரை அடைதலும் நாடும் வீடும் சிறப்புற்றோங்கலும் வலியுறுத்தப்படுகின்றன. திருவருட்பாவையோ எல்லாம் வல்ல இறை அல்லாவின் திருவருளைத் தேடலும் பெறலுமே நோக்கமெனக் குறிப்பிடுகின்றது.

இஸ்லாமியப் பண்பாட்டை மறந்து ஆழ்துயிலில் ஆழ்ந்திருந்திருக்கும் சமுதாய மக்களுக்கு இஸ்லாமிய நெறியின் ஐந்து பெரும் கடமைகளை எடுத்துரைத்து வலியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. புனித இரமலான் மாத நோன்பின்போது முப்பது நாட்களும் இஸ்லாமியர் இல்லந்தோறும் பாடப்படும் வகையில் முப்பது பாடல்களால் இந்நூல் அமைந்திருப்பது மிகப் பொருத்தமுடையது. இம்முப்பது பாடல்களும் இறை, இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, பொருளறம், அருள்வெளிப் பயணம் என்னும் ஆறு தலைப்புகளாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் ஐந்து பாடல்கள் வீதம் அமைந்துள்ளது. இத்தகு பகுப்பு முறை ஏனைய பாவை நூல்களில் இடம்பெறவில்லை. இஸ்லாத்தின் ஐந்து கடமைகளையும் வலியுறுத்தும் விதத்தில் நூலை அமைத்துள்ள கவிஞரின் திறத்தால் இந்நூல் அக அமைப்பு, புற அமைப்பு இரண்டிலும் சிறந்து விளங்குகின்றது.

இந்நூலுக்குச் சீரியதோர் உரையைத் தெளிவுரையாக இலக்கியத் தென்றல் பேராசிரியர் சா.நசீமாபானு அவர்கள் எழுதியுள்ளமை இந்நூலுக்கு மற்றுமோர் மணிமகுடம்.

காரை இறையடியானின் தமிழ்ப்பற்று:

கவிஞர் காரை இறையடியானின் தனிச்சிறப்பு அவரின் இறைப்பற்றும் இன்பத் தமிழ்ப் பற்றும். இரண்டையும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் அவர் வெளிப்படுத்த மறப்பதே இல்லை.

தண்டை தமிழ்பாடத் தாழம்பூத் தண்கூந்தல்
கொண்டை குலுங்கியெழிற் கூத்திடுங் கோதையீர்! (பா.3)

முத்தமிழால் பாராட்ட முந்தேலோ ரெம்பாவாய்! (பா.25)

மூல முழுமுதலை முத்தமிழைத்; தந்தானை (பா.13)

துயிலெழுப்பும் பெண்களின் தண்டை தமிழ் பாடுகிறதென்றும், அல்லாவை முத்தமிழால் பாராட்ட வேண்டுமென்றும் தமிழை மறக்காமல் குறிப்பிடும் கவிஞர், உலகுக்கெல்லாம் ஒரே இறைவன் அல்லா, அவனே உலக மொழிகள் அனைத்தையும் படைத்தவன் என்ற பொருளில் முத்தமிழைத் தந்தானை என்று குறிப்பிட்டு தம் இறைக்கொள்கையைத் தெளிவாக விளக்குகின்றார். இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி என்ற கவிஞரின் கோட்பாட்டை விளக்கும் இத்தொடர் திருவருட்பாவையின் தலைசிறந்த தொடர் எனப்போற்றத் தக்கது.

நடைநலத்தால் சிறக்கும் திருவருட்பாவை:

காரை இறையடியானின் தனித்தமிழ்க் கவிதைநடை கற்பவர் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும் கவினுடையது. மரபுக்கவிதையில், எதுகை மோனை அழகுகளுடன் ஓசைநயம் மிக்கதாய் அவரின் பாவைப்பாடல்கள் அமைந்து சிறக்கின்றன.

கண்ணில் கயலாடக் கார்க்கூந்தல் காற்றாட
வண்ண வடிவெங்கும் வாகிளமை வந்தாடத் (பா.6)

அண்டம் அனைத்துலகும் ஆர்படைத்தான் ஆய்ந்திடுக. (பா.3)

அல்லலார் அம்புவியில் அல்லாவை ஆய்ந்துணர்மின் (பா.7)

மொட்டுப்ப+ மூக்காலே மூச்செறியும் மொய்ங்குழலீர்! (பா.10)

மேலே எடுத்துக்காட்டப்பட்ட அடிகள் மட்டுமல்ல நூல் முழுமையுமே இத்தகு மோனை சிறந்தோங்கும் நடைநயத்தைப் பரக்கக் காணலாம். திருவருட்பாவையின் பெரும்பாலான பாடல் அடிகள் நான்கு சீர்களிலும் மோனை அமைந்து முற்று மோனையாக அமைந்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. இசையோடு பாடப்படுவதற்கு ஏற்ப முப்பது பாடல்களும் சொல்லழகுடன் அற்புதமான ஓசை ஒழுங்கும் பெற்று அமைந்துள்ளமையை இசைத்து மகிழ்வார் உணர்வர். இறைவனின் பெருமையைக் கூறும் பின்வரும் இரண்டடிகளில் அகரம், ஆகாரம், இகரம் என உயிர் எழுத்து வரிசையில் அல்லாவின் புகழை வருணிக்கும் நடை கற்போர் நெஞ்சைக் கவரக்கூடியது.

அன்பன் அருளறிவன் ஆகமிலாப் பேரழகன்
இன்பன் இறையல்லா இன்னுணர்வாய் என்நெஞ்சில் (பா.14)

அன்பன்- அருளன் என இறைவனின் பண்பை அடுக்கிக் கூறலும், ஆகமிலாப் பேரழகன் என இறைவனின் உருவமற்ற பேரழகை முரண்தொடை அமைய சிறப்பித்துக் கூறலும் இறையடியானின் கவிநயத்துக்குத் தக்க சான்றுகளாகும்.

காரை இறையடியானின் வருணனைத் திறம்:

திருவருட்பாவையின் முப்பது பாடல்களுமே வருணனைச் சிறப்புடன் விளங்குகின்றன. ஒவ்வொரு பாடலிலும் வரும் முதல் இரண்டடிகள் உறங்கும் பெண்களைத் துயிலெழுப்பி நீராட அழைக்கும் பெண்கள் ஒருவரையெருவர் வருணித்துக்கொள்வதாக அமைந்துள்ளன.

கோலக் குளிர்திங்கள் கொண்முகத்தீர், காண்கூந்தல்
நீல நெடுமுகிலீர், நெற்றிப் பிறையழகீர் (பா.5)

சித்திரப் பாவையீர்! செவ்விதழ்க் கோவையீர்!
முத்துநகைப் பூவையீர்! மொய்வளைச் செங்கையீர்! (பா.25)

நெற்றிக் களத்தில் நிறக் கருமை வில்லிரண்டால்
மற்றோர் மனங்குத்தும் மாவடுக்கண் அம்புடையீர்! (பா.15)

தமிழிலக்கியங்கள் காலந்தோறும் பெண்களை வருணித்துச் சிறப்பித்த அழகு வருணனைகளை யெல்லாம் உள்வாங்கித் தாம் படைத்த பாவை நூலில் பொருள் பொருத்தமுற அவ்வருணனைகளை இடம்பெறச் செய்த கவிஞரின் திறம் பாராட்டுதற்குரியது. காலைப் பொழுதில் பறவைகள் எழுப்பும் ஓசைகளை வருணிக்கும் பகுதியைப் பாருங்கள்,

காகக் கரைவும் கனற்கொண்டை பூச்சிறகாம்
ஆக வணியாடை அஞ்சேவல் கூவலும்
வேகமாய்க் கூர்ந்தும் விழவில்லையோ நுஞ்செவியில் (பா.11)

(காகங்கள் கரையும் ஓசையும் தீப்பிழம்புபோல் சிவந்த கொண்டையினையும் புள்ளிகள் பொருந்திய இறக்கைகளாகிய ஆடையினையும் உடைய அழகிய சேவல் கூவும் ஒலியும் வேகமாகக் கேட்கிறதே, உங்கள் செவிகளில் விழவில்லையா?) இந்தப் பாடலடிகளைக் கூர்ந்து கவனித்தால் காலைப் பொழுதின் வருணனையை ஓசைகளால் காட்சிப்படுத்திக் காட்டும் பாங்கும், அதேசமயம் சேவலை வருணிக்கும் போது அதன் சிவந்த கொண்டைகளை நெருப்புக்கு இணையாகயும் பூஞ்சிறகை ஆடையாகவும் நுட்பமாக வருணித்துக் காட்டும் பாங்கும் இணைந்து இவ்வருணனைப் பகுதியை அழகூட்டுகின்றன.

இயற்கை தரும் பாடம்:

இயற்கையைக் கூர்ந்து கவனித்தால் அதன் இயல்பான நடவடிக்கைகள் கூட நமக்குப் புதிய புதிய அறவுரைகளையும் அறிவுரைகளையும் தருவதாக உணரமுடியும். கவிஞர்களின் கற்பனை மனது இத்தகு பாடங்களை எளிதாகக் கண்டுணரவல்லது. காரை இறையடியான் நிலவின் வளர்பிறை தேய்பிறை மாற்றங்களைக் கண்டு நமக்குணர்ந்தும் பாடம் சிறப்பானது.

தோற்ற முழுமதியம் தொண்டாற்றித் தேய்திங்கள்
ஆற்றல் அறிஞருக்கு அஃதோர் பெரும்பாடம்!
மாற்ற மதிபார்த்தும் மாமயக்கம் கொண்டீரேல் (பா.28)

(முழுமதியாக வலம் வரும் திங்கள் தொண்டு ஆற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்கிறது. ஆற்றல் மிக்க அறிவாளிகளுக்கும் கூட நிலையற்ற உலகில் வாழ்க்கையும் வளர்பிறை போன்றும், தேய்பிறை போன்றும் இன்பமும் துன்பமும், நன்மையும் தீமையும் மாறி மாறி அமைவது என்ற பெரிய பாடத்தை அது கற்பிப்பதாக உள்ளது.) திங்கள் தொண்டாற்றித் தேய்கிறது என்ற கவிஞரின் கூற்றில், நிலவு உலகத்துக்கு ஒளியைத் தந்து தந்து அதனால் தேய்ந்து ஒளிமங்குகிறது என்ற தற்குறிப்பேற்றம் உள்ளதை உணரமுடியும். முழு மதியம் தேய்ந்து மறைவதும் பின்னர் வளர்ந்து முழுமதியாவதும் வாழ்க்கையின் இன்ப துன்ப சுழற்சியைக் காட்டுகிறது என்ற இறையடியானின் கற்பனை திருவருட்பாவையின் பெருமைக்கு பெருமை சேர்க்கின்றது.

இலக்கிய ஆட்சி:

திருவருட்பாவையைக் கற்குந்தோறும் கவிஞரின் சொல்லாட்சி தமிழின் பல்வேறு இலக்கியங்களை நமக்கு நினைவு படுத்துகின்றது. கவிஞரின் இலக்கியப் புலமையையும் தமிழிலக்கியங்கள்பால் அவருக்கு உள்ள ஈடுபாடுமே இத்தகு இலக்கியச் சொல்லாட்சிகளுக்குக் காரணம்.

கற்றலால் காண்பயன் கண்ணியமெய் அல்லாவைப்
பற்றிப் பணிகின்ற பண்புத் தொழுகையன்றோ? (பா.15)

மேலே குறிப்பிட்டுள்ள திருவருட்பாவையின் அடிகள் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் தாக்கத்தால் உருவானது என்பதைக் கற்போர் உணர்வர்.

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (குறள்: 2)

(நாமக்கல் கவிஞர் உரை: படிப்பதன் பயன் அறிவு பெறுதல். அப்படியானால் நம் அறிவுக்கெல்லாம் எட்டாத ஒருபொருள் இருப்பதை உணர்ந்து அதைப் போற்றாவிட்டால் படிப்பினால் என்ன பயன்?) திருக்குறளின் கருத்தும் நாமக்கல் கவிஞரின் உரைக்கருத்தும் பின்னிப் பிணைந்திருப்பதைப் போல் இறையடியான் அவர்கள் மேலே குறிப்பிட்ட பாவை அடிகளை அமைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. தொழுகை என்பதைக் குறிப்பிடுமிடத்தில், பற்றிப் பணிகின்ற பண்புத் தொழுகை என்று அடைகள் பல சேர்த்துக் குறிப்பிட்டிருப்பது கவிஞரின் இஸ்லாமிய மெய்யறிவின் மேன்மையைப் புலப்படுத்துகின்றது.

திருவருட்பாவையின் நோக்கமும் பயனும்:

இஸ்லாமிய மார்க்கத்தை எளிதாக எடுத்துரைக்கும் வகையில் பாடப்பட்ட இத் திருவருட்பாவையை ஒரு முழுமைபெற்ற இலக்கியம் என்று சிறப்பித்துரைக்கலாம். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளையும் கற்போர் மனம் கொள்ளும் வகையில் விரித்துக் கூறிய கவிஞர் முப்பதாவது பாடலாகிய கடைசிப் பாடலில் மிக அழகாகத் தொகுத்துக் கூறுகின்றார்.

உற்ற திருநோன்பை ஓர்திங்கள் ஏற்றுயர்ந்தோம்
பெற்ற நம்பேரின்பம் பேண்கடன் ஐந்துணர்ந்தோம்
சுற்றம் வறியோர்க்கும் சோரா தறஞ்செய்தோம்
பெற்றித் தொழுகையினால் பேருணர்வு யாம் எய்தோம்
குற்றங் குறைதீர் குணக்குர்-ஆன் கொண்டிசைத்தோம்
மற்றும் திருக்கஃபா மாமதினாச் சீருணர்ந்தோம்
வெற்றி யெனக்கீந்து வியன்தலைவன் நெஞ்சணைத்தான்
தெற்றத் திருவருளைத் தேடேலோ ரெம்பாவாய் (பா.30)

வெற்றிகரமாக நோன்பு நோற்றதும், ஐந்து கடமைகளை உணர்ந்ததும், அறஞ்செய்ததும், தொழுகைகளைத் தவறாது கடைபிடித்ததும், திருமறையை ஓதி உணர்ந்ததும், இறையில்லமாம் கஃபா, மதீனா இவைகளின் சிறப்புணர்ந்ததும் ஆகிய இஸ்லாம் மார்க்கத்தின் அனைத்துக் கடமைகளையும் சிறப்புற செய்து முடித்த செய்தி இப்பாடலில் தொகுத்துரைக்கப் பட்டுள்ளது. இக்கடமைகளைச் செய்து முடித்ததன் பயனாக வெற்றி எனக்கீந்து வியன் தலைவன் நெஞ்சனைத்தான் என்ற அடிகளில் அல்லாவின் அருளைப் பெற்ற பெண், ஆற்றுப்படை போல் தெற்றத் திருவருளைத் தேடேலோ ரெம்பாவாய்! என்று மற்ற பெண்களுக்கு ஆற்றுப்படுத்துகின்றாள். இந்நூலின் பயன் என கவிஞர் விதந்தோதுவது, திருவருளைத் தேடுங்கள் என்பதே.
இஸ்லாமிய திருநெறியின் சிறப்பம்சம், அது உலக வாழ்விலும் சிறப்பானதை, அழகானதை அனுபவிக்கச் செய்கிறது. எதிலும் வரம்பு மீறிடாத அளவோடு கூடிய, நியாயமான இவ்வுலக இன்பங்களைச் சுகிக்க அனுமதித்து, அத்தகு வரம்பிட்ட வாழ்க்கை முறையையே எதிர்கால நிலையான நீடித்த வாழ்க்கை முறைக்கு அடிப்படையாகவும் ஆக்கி வைத்திருக்கிறது. (சிராஜூல் மில்லத் சிந்தனைகள், ப.19)
தூக்கம் தேவையானதுதான், அது ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். தூக்கம் எல்லை கடந்தால்,

சீர்மை யொளிரமலான் செப்பப் பிறைகண்டும்
கூர்மை விழிமயங்கக் கொண்டீரோ பேருறக்கம்
பார்மைப் பணிமுடங்கின் பண்பாடு மாழ்காதோ?
ஊர்மை உலகியலும் ஊழலாய் மாறாதோ?
நேர்மை நிலைதுலங்க நேரிழையீர் நீரெழுக! (பா.1)

இவ்வுலகில் நாம் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகள் தவறிடும், கடமைகள் தவறினால் நமக்கே உரிய பண்பாடுகள் அழிந்துவிடும், பண்பாடு அழிந்தால் நாம் வாழும் ஊரின் செயல்பாடுகளும் உலகின் நடைமுறைகளும் ஊழல் நிறைந்ததாகிவிடும் எனவே விழிமின்! எழுமின்! என உலக மக்களுக்கே விழிப்பை ஊட்டும் ஒப்பற்ற இலக்கியமாய் இத்திருவருட் பாவையைக் கவிஞர் காரை இறையடியான் படைத்துள்ளமை பாராட்டுதற்குரியது. தூய தமிழே தம் வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிக் குவித்து தமிழுக்கும் இஸ்லாத்துக்கும் கடைசி மூச்சுவரைப் பணியாற்றிய காரை இறையடியானின் பணியை உலகம் உணர்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...