ஞாயிறு, 2 ஜூன், 2019

கடகம்பட்டுக் கல்மரங்கள் (27-12-2018)

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8
9943646563

கடகம்பட்டுக் கல்மரங்கள் -1 (27-12-2018)
தென்னார்க்காடு மாவட்டத்தில் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருவக்கரையில் உள்ள கல்மரங்கள் குறித்து அறிந்திருப்பீர்கள்.
இங்கே நீங்கள் காண்பது திருவக்கரை ஊருக்குக் கிழக்கே உள்ள கடகம்பட்டு- செம்மண் குவாரியில் காணப்படும் கல்மரங்கள். திருவக்கரையில் இதுவரைக் கண்டெடுத்துள்ள கல்மரங்களை விடப் பலமடங்கு மிகுதியான அளவில் கல்மரங்கள் காணக்கிடைக்கும் இடம்தான் கடகம்பட்டு (கூகுள் வரைபடப் படத்தை இணைத்துள்ளேன்) -(இப்படத்தில் திருவக்கரைக்குக் கிழக்கே செம்மண் நிறத்தில் காணப்படும் திட்டுபோன்ற பகுதிதான் கடகம்பட்டு செம்மண் குவாரி).
இங்கே புதையுண்டிருந்த பலநூறு கல்மரங்கள் நமது அறியாமையாலும் பேராசையாலும் வரலாற்று உணர்வு இன்மையினாலும் செம்மண் குவியல் "லோடு"களோடு கலந்து அழிந்துபோய்க் கொண்டிருக்கின்றன.

கடகம்பட்டு கல்மரம்

கடகம்பட்டு கூகுள் வரைபடம்

முனைவர் நா.இளங்கோ - கடகம்பட்டு

கல்மரப் புதைவு - கடகம்பட்டு

முனைவர் நா.இளங்கோ - கடகம்பட்டு

கல்மரங்கள் - ஓர் அறிமுகம்
கல்மரம் (FOSSIL WOOD) என்று குறிப்பிடப் படுவது இப்பொழுது கல்லாக மாற்றம் பெற்றுள்ள கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மரங்களையே ஆகும்.
இந்தியாவில் கல் மரங்கள் அதிகமாகக் காணப்படுவது தமிழகத்தில்தான். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை எனும் கிராமத்தை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் மிகவும் அரிய, முழுவதும் கல்லாக மாறிப்போன கல்மரங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.
இந்திய புவியியல் ஆய்வுத் துறை (GEOLOGICAL SURVEY OF INDIA) இந்தப் பகுதியில் கல்மரப் பூங்கா ஒன்றினை 1957ஆம் ஆண்டில் அமைத்து சில கல்மரங்களைப் பாதுகாத்து வருகிறது.
புவி மண்படிவங்களில் ஏற்படும் வேதிமாற்றங்களால் படிவப்பாறைகள் உருவாகும் போது நீர்நிலைகளில் இருந்த நீர்வாழ் உயிரினங்கள், ஆற்றில் அடித்து வரப்பட்ட பிறவகை உயிரினங்கள் மற்றும் மரம் செடி கொடிகளின் மிச்சங்கள் முதலானவை நிலமண் படிவங்களோடு சேர்ந்து படிந்து மடிந்து கோடிக்கணக்கான ஆண்டுகளில் கல்லாய் உருமாறி விடுகின்றன. இப்படிக் கல்லாய் உருமாறிய பழங்காலத்து உயிரினங்களின் மிச்சங்களும் -எச்சங்களுமே ‘பாசில்ஸ்’(fossils) தொல்லுயிரெச்சங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தொல்லுயிரெச்சங்கள் பொதுவாகப் படிவப் பாறைகளிலேயே காணப்படுகின்றன. தமிழகத்தின் கிழக்கு மண்டலங்களில் படிவப் பாறைகள் மிகுதியாக உள்ளன. அதிலும் தொல்மர எச்சங்கள் திருவக்கரை, நெய்வேலி, அரியலூர் பகுதிகளில் காணக் கிடைக்கின்றன. இத்தகு தொல்மர எச்சங்களில் ஒருவகையே கல்மரங்கள்.
திருவக்கரையை ஒட்டிய பகுதிகளில் கிடைக்கும் கல்மரங்கள் சுமார் இரண்டு கோடி ஆண்டுகள் பழமையானவை. (ஆறு கோடி ஆண்டுகள் என்ற கருத்தும் உண்டு).இங்கு காணப்படும் கல்மரங்கள் பட்டையில்லாத தாவர (Psilophyton) பேரினத்தைச் சேர்ந்தவை.
ஐரோப்பிய இயற்கையியல் அறிஞர் M. Sonneret, 1781 ஆம் ஆண்டில் திருவக்கரைக் கல்மரங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார்.



கடகம்பட்டு -திருவக்கரைக் கல்மரங்கள்
இக்கல்மரங்கள் பட்டையில்லாத் தாவர (Psilophyton) பேரினத்தைச் சேர்ந்தவை. இங்குள்ள மரங்களில் பூக்கும் தாவரங்கள், பூவாத் தாவரங்கள் ஆகிய இரு வகைகளும் உள்ளன. புன்னைக் கட்டாஞ்சி, ஆமணக்கு வகை மரங்களும், புளியமரக் குடும்பத்தை சேர்ந்த மரங்களும் இங்கே இனம் காணப் பட்டுள்ளன
கடகம்பட்டுத் தொடங்கி திருவக்கரை வரை பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் செம்மண் பாறை நிலப்பரப்பு கிழக்கு மேற்காக விரிந்துள்ளது. இந்நிலப்பகுதியில் ஆயிரக்கணக்கில் கல்மரங்கள் மண்ணில் புதைந்துள்ளன. இந்த செம்மண் நிலப்பரப்பு "கடலூர் மணற்பாறைகள்" எனும் படிவப் பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகளில்தான் கல்மரங்கள் படிந்துள்ளன. சில மரங்கள் 20 மீ. நீளமும் 1.5 மீ குறுக்களவும் கொண்டவை. இந்த மரங்களில் வேர்ப் பகுதியோ கிளைகளோ இல்லை. எல்லாக் கல்ரமங்களும் படுக்கை வாட்டிலேயே கிடைக்கின்றன. எனவே இந்தவகை மரங்கள் வேறு எங்கிருந்தோ ஆற்றுவெள்ளத்தில் அடித்துக் கொண்டுவரப்பட்டு இங்கிருந்த நீர்நிலைகளில் (அப்பொழுது இப்பகுதி கடற்கரையாகவோ கடலாகவோ இருந்திருக்கலாம்) படிந்திருக்க வேண்டும். மரங்களின் பட்டை போன்ற அமைப்புகள், வட்ட வளையங்கள் (Annular Rings), கணுக்கள் (Nodes) போன்ற அனைத்தும் இந்தக் கல்மரங்களில் தெளிவாகக் காணப்படுகின்றன
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி (கடகம்பட்டு திருவக்கரை செம்மண் பாறைப்பகுதி) கடலால் சூழப்பட்டிருக்கலாம் என்பதற்குச் சான்றாக இப்பகுதிகளில் சிலவகை கடல்உயிரிகளின் தொல்லுயிர் எச்சங்கள் (FOSSILS) கிடைக்கின்றன. (படம் இணைக்கப்பட்டுள்ளது)
கடற்கரையை ஒட்டிய மேட்டுப் பகுதிகளில் வளர்ந்து வந்த மரங்கள் பெருவெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்பட்டுக் கரைப் பகுதிகளில் ஒதுக்கப்பட்டன. அவை நாளடைவில் மண்ணில் புதைந்து கோடிக்கணக்கான ஆண்டுகளாக மண்ணில் ஏற்படும் வேதிமாற்றச் சூழ்நிலைகளால் கல்லாக இறுகிவிட்டன. அம் மரங்களின் உயிர் அணுக்களினிடையே, மண்ணில் உள்ள சிலிகா (Silica) உட்புகுந்து கல்போல் இறுகி விடுகின்றன. பின்னர் நாளடைவில் மேலேயுள்ள மண் பகுதி கரைந்து நீங்கிப் போக. உள்ளிருந்த கல்மரங்கள் வெளித்தோன்றி விட்டன என இக்கல்மரங்களின் உருவாக்கம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். இவ்வாறு கல்லாகிய மரங்கள் ஏறக்குறைய 6 கோடி (6,00,00,000) ஆண்டுகட்குமுன் தோன்றியிருக்க வேண்டும் என்ற கருத்தும் ஆய்வாளர்களிடம் உண்டு.

கடகம்பட்டு - கடலூர் செம்மண் அடுக்கும் கல்மரமும்

திருவக்கரை - கடல்உயிரி புதைவடிவு

திருவக்கரை கல்மரப் பூங்கா

களஆய்வில் முனைவர் நா.இளங்கோ - சின்ன.சேகர்

கடகம்பட்டுக்கு மேற்கேயுள்ள செம்மண் திட்டு (தற்போதய செம்மண் குவாரி) தொடங்கித் திருவக்கரையின் கிழக்கேயுள்ள செம்மண் குன்றுவரைப் பரவியுள்ள பகுதியை (செம்மண் குவாரிக்குத் தோண்டியது போக மீதமுள்ள பகுதியை) உடனே மத்திய தொல்லியல் துறை தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்து பாதுகாப்பது முதல்கடமை.

பின்னர், நிலத்தின் மேலடுக்கில் உள்ள மென்மையான செம்மண் அடுக்கினை அகழ்ந்து நீக்கிக் கீழேயுள்ள தொன்மை வாய்ந்த "கடலூர் மணபாறை" வகை நிலத்தில் புதைந்திருக்கும் கல்மரங்களை வெளியே தெரியும் வகையில் காட்சிப்படுத்துதல் வேண்டும்.
புவியியல், புவிப்புறவியல் ஆய்வாளர்களும் வரலாற்றுத் தொல்லியல் ஆய்வாளர்களும் மாணவர்களும் பொதுமக்களும் வந்து காணும் வகையில் அப்பகுதி ஒரு தொல்லியல் பூங்காவாக அமைக்கப்படல் வேண்டும்.
இப்பொழுது கடகம்பட்டுச் செம்மண் குவாரியிலிருந்து எடுக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ள கல்மரங்களைத் திரட்டி முறையாகப் பாதுகாக்கும் பணியினையும் மத்திய மாநிலத் தொல்லியல் துறைகள் அல்லது அரசுகள் உடனடியாகச் செய்தல் வேண்டும்.
பலகோடி ஆண்டுகள் பழமையான தொல்லுயிர் எச்சங்களான கல்மரங்கள் விலை மதிப்பில்லாப் பொக்கிஷங்கள் அவற்றைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.
விழிப்புணர்வு பெறுவோம்!
விரைந்து செயலாற்றுவோம்.
-முனைவர் நா.இளங்கோ, புதுச்சேரி.







கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...