சனி, 1 ஜூன், 2019

நம் மூதாதையர்களின் முகவரி தேடி - இரண்டு

நம் மூதாதையர்களின் முகவரி தேடி -2
மண்டகப்பட்டு
மண்டகப்பட்டு: விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் செஞ்சி இணைப்புச் சாலையில் அமைந்துள்ளது மண்டகப்பட்டு என்னும் இவ்வூர். இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் இக்குடைவரைக் கோயில். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் உருவாக்கப்பட்டது. தமிழ் நாட்டில் கல்லினால் அமைக்கப்பட்ட அதாவது கல்லைக் குடைந்து உருவாக்கிய முதலாவது கோயில் என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இக்குடைவரைக் கோவில் கருதப்படுகின்றது.
இக்குடைவரைக் கோவிலில் காணப்படும் மகேந்திரவர்மனின் வடமொழிக் கல்வெட்டு, "செங்கல், உலோகம், சுதை, மரம் இல்லாமல், பாறைகளால் சிவபெருமான், பிரம்மா (நான்முகன்), விஷ்ணு (திருமால்) ஆகிய மும்மூர்த்தி களுக்கும், விசித்திரசித்தன் எனும் அரசனால் எடுக்கப்பட்ட இலக்ஷிதாயனக் கோவில்" என்று இக்கோயிலைக் குறிப்பிடுகின்றது.

மண்டகப்பட்டு - வடமொழிக் கல்வெட்டு
முனைவர் நா.இளங்கோ- பேராசிரியர்கள் - ஆய்வாளர்கள்

முனைவர் நா.இளங்கோ - இரத்தின. வேங்கடேசன்

நம் மூதாதையர்களின் முகவரி தேடி 
திருநாதர் குன்று

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊரின் வடக்கே மூன்று கி.மீ. தொலைவில் திருநாதர் குன்று என்றழைக்கப்படும் சிறிய மலைக் குன்று உள்ளது. இதனைச் சிறுகடம்பூர் மலையென்றும் அழைப்பர். இக்குன்று தமிழ் மற்றும் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இம்மலையின் உச்சியில் உள்ள பெரிய கற்பாறையில் சமண சமயத்தின் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன. அவை அமர்ந்த நிலையில், இருவரிசையில் அமைக்கப்பட்டு, கழுகுமலையில் உள்ள சமணச் சிற்பங்கள் போலுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியில் முக்குடை காணப்படுகிறது. இரு சாமரங்கள் குறுக்காகப் பிணைந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.
இக்குன்றின் வட திசையில் அருகதேவரின் சிற்பமும், குன்றின் மீது செல்லும் வழியில் உடைந்த நிலையில் அருகதேவரின் அமர்ந்துள்ள சிலையும் காணப்படுகின்றன. குன்றின் உச்சியில் சமணத் துறவிகள் வசித்த பாறைக் குகை ஒன்றும் உள்ளது. சுமார் இருபது பேர் தங்கக்கூடிய வகையில் இயற்கையாக அமைந்துள்ள இக்குகையில் சமண முனிவர்கள் தங்கி உண்ணாநோன்பு இருந்து உயிர் துறந்திருக்கலாம். அதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் (கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு) அங்கேயே கிடைக்கின்றன.

முனைவர் நா.இளங்கோ - சிறப்புரை

திருநாதர் குன்று - குகை

திருநாதர் குன்று

இக்குன்றின் மேற்குப் பகுதியில் காணப்படும் நிசீதிகைக் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்களின்) கல்வெட்டுகள் தமிழ்மொழி மற்றும் சமய சமூக வரலாற்றில் மிகமிக முக்கியமானதாகும். முதிர்ந்தநிலை பிராமி மொழியிலிருந்து வட்டெழுத்தாக தமிழ் வளர்ந்த, மாறுதல் அடைகிற காலக்கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டாக இக்வெட்டுகளைக் குறிப்பிடமுடியும். சிறப்பாக, ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து திருநாதர்குன்று கல்வெட்டில்தான் முதன்முதலில் காணக் கிடைக்கின்றது.
இங்குள்ள ஒரு கல்வெட்டு, சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி ஐம்பத்தேழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டின் உண்மை வடிவத்தையும் அதில் இடம்பெற்றுள்ள தமிழ் எழுத்துக்களின் தற்போதய வரிவடிவத்தையும் இணைத்து இங்கே பதிவிட்டுள்ளேன்.
மற்றொரு கல்வெட்டு, இளைய பட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது.
திருநாதர் குன்று - கல்வெட்டு

திருநாதர் குன்று - கல்வெட்டு

முனைவர் நா.இளங்கோ : கல்வெட்டு எழுத்து விளக்கம்


கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...