திங்கள், 20 மே, 2019

எல்லையில்லாத் தெய்வமே! சாவாய்! சாவாய்! - ஆசிபா பாலியல் படுகொலைமலையருவி (06-05-2016)

இருட்டுக் கருவறைக்குள்
இறுகிய முகம்காட்டும்
முரட்டுக் கடவுளே!
முகமறியாச் சிறுமியின்
கதறல் கேட்கலையா?
கண்களும் குருடாச்சா?
இதுஎன்ன புதுப்படையல்
என்றே மயங்கினையோ

படையல் பார்த்திருப்பாய்
பலகாரம் பார்த்திருப்பாய்
குருதிக் கொப்பளிக்க
உயர்ப்பலிகள் பார்த்திருப்பாய்

பக்திப் பரவசத்தில்
தன்தலையைத் துண்டாடிக்
காணிக்கை வைத்த அந்த
நவகண்டம் பார்த்திருப்பாய்

நாலைந்து மதவெறியர்
நாட்கணக்கில் வைத்திருந்து..
சிறுமி ஒருத்தியின்
சீரழிக்கப் பார்த்தாயே!
உறுப்புச் சிதைந்து
உடைப்பெடுத்த செங்குருதி
உன் உதட்டில் தெறிக்கலையா?
இல்லை.. இதுஎன்ன புதுப்படையல்
என்றே மயங்கினையோ

கடவுளர் பெயராலே
காமவெறிக் களியாட்டம்
பிஞ்சுக் குழந்தையின்
கதறல் கேட்கலையா?
கண்களும் குருடாச்சா?

ஊதுவத்தி சாம்பிராணி
எல்லாமும் பிணவாடை
எடுத்த வைத்த குங்குமத்தில்
இரத்தம் கசிகிறது

குதிரை மேய்த்திருந்த
குழந்தை உடல்சிதைந்து
படையல் வைத்தவர்கள்
பாதகத்தை ஏற்பாயா?

பழியறியாச் சிறுமிஉடல்
சிதைந்து உருக்குலைய
சீறிச் சினந்தெழுந்து
சின்னவளைக் காக்காமல்

சிலையாய் அமர்ந்திருந்து
சிறுமையினை ஏற்றாயா?
கையிலுள்ள ஆயதங்கள்
முனைமழுங்கிப் போயினவா?

சூலம் கொடியெடுத்து
தேவி பக்தர்களும்
தேசத்தின் பக்தர்களும்
சாதி மதங்கடந்த
நல்லிணக்கத் தோழர்களைச்
சாய்த்திடப் பார்க்கின்றார்
சவக்குழிக்கு அனுப்புகின்றார்

எல்லாம் அறிந்தவளே!
எல்லையில்லாத் தெய்வமே
மதவெறி மாயத்து
மனிதம் காப்பாயா?

இரத்தப் படையலும்
கன்னியின் குருதியும்
காமக்களிப்புமே உன்னை!
களிப்படையச் செய்யுமென்றால்

எல்லையில்லாத் தெய்வமே!
நீ போவாய்! போவாய்!!
இருந்திடிலோ இவ்வுலகில்
சாயாய்! சாவாய்!

கருத்துகள் இல்லை:

கடகம்பட்டுக் கல்மரங்கள் (27-12-2018)

முனைவர் நா.இளங்கோ தமிழ்ப் பேராசிரியர் புதுச்சேரி-8 9943646563 கடகம்பட்டுக் கல்மரங்கள் -1 (27-12-2018) தென்னார்க்காடு மாவட்டத்த...