செவ்வாய், 21 மே, 2019

சாளுவன் குப்பம் - சங்ககால முருகன் கோவில் -06-01-2019

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

சங்ககால முருகன் ஆலயம்: 
சாளுவன் குப்பத்தைச் சேர்ந்த புலிக்குகை மற்றும் அதிரணசண்ட பல்லவேஸ்வரத்திற்கு அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் அண்மைய சுனாமியால் (2004) வெளியுலகத்திற்குத் தெரிந்த ஒரு பழைமையான ஆலயமே அந்த முருகன் கோவில்.
சாளுவன் குப்பம் என்ற "திருவிழிச்சில்" முருகன் ஆலயக் கட்டுமானம் இரண்டு விதமாக அமைந்துள்ளது, முதலாவது சங்க காலத்திய (கிமு 3 ஆம் நூற்றாண்டு) செங்கல் கட்டுமானம் இரண்டாவது இச்செங்கல் கட்டுமானத்திற்கு மேல் கட்டப்பட்ட பல்லவ காலத்திய (கிபி 8 ஆம் நூற்றாண்டு) கருங்கல் கட்டுமானம்.
இவ்வகழ்வாய்வை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் அகழ்வாராய்ச்சி யாளர்கள் தமிழ்நாட்டில் அகழ்வாய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட ஆலயங்களிலேயே மிகவும் பழமையானது இச்செங்கல் கட்டுமான ஆலயம்தான் என்று உறுதிபடத் தெரிவிக்கின்றனர். இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலய ஆகமவிதிகளின் தோற்றத்திற்கு முந்தையது இக்கோயில்.
இம்முருகன் கோவிலைச் சுற்றிப் பல கல்வெட்டுப் பாறைகள் காணப்படுகின்றன. இக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட மான்யங்களைப் பற்றிக்கூறும் மூன்று கருங்கல் தூண்களின் கண்டுபிடிப்பே கோவிலைக் கண்டுபிடிப்பதற்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. ஒரு தூண், 858 இல் கீரர்பிரியன் என்பவரால் கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட 10 பொன் கழஞ்சுகளைக் குறிப்பிடுகிறது. மற்றொரு தூண், 813 இல் கோவிலின் தீபப் பராமரிப்புச் செலவிற்காக வசந்தனார் என்ற பிராமணப் பெண்ணால் அளிக்கப்பட்ட 16 கழஞ்சுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மூன்றாவது தூண் முதலாம் ராஜராஜ சோழனால் செய்விக்கப்பட்ட கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளது.

சங்ககால முருகன் கோவில் - முனைவர் நா.இளங்கோ

சங்ககால முருகன் கோவில் - சின்ன.சேகர்

சங்ககால முருகன் கோவில்


சங்ககால முருகன் கோவில்

சங்ககால முருகன் ஆலயம்: 2

இக்கோவிலின் கருவறை 2 மீட்டர் நீளமும் 2.2 மீட்டர் அகலமும் கொண்டு 27 செங்கல் அடுக்குகளாக அமைந்துள்ளது. இக் கோவில் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப் பட்டுள்ள செங்கற்கள் புகார், உறையூர், மாங்குடி மற்றும் அரிக்கமேடு ஆகிய சங்க கால இடங்களில் பயன்படுத்தப்பட்ட செங்கற்களைப் போன்றே உள்ளன. கோவிலின் நுழைவாயிலின் முன் கல்லால் ஆன வேல் ஒன்று உள்ளது.
அகழ்வாய்வின் போது இப்பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய தொல்பொருட்கள்.
1. ஓர் பெண்ணின் தலை
2. சுடுமண் விளக்குகள்
3. பச்சைக் கல்லால் ஆன ஒரு சிவலிங்கம்
4. மட்பாண்டங்களின் சில்லுகள்
4. நந்தி சுடுமண் சிலை
தமிழகத்தில் இதுவரைக் கண்டுபிடிக்கப் பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில்களில் முதல் இடம் பிடித்திருப்பது இதுவே, (Sangam period) (3rd century BC)
அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தைச் சேர்ந்தது, இந்தச் சங்க கால கட்டிடம் ஏதோ ஒரு சுனாமியால் அழிந்ததையொட்டி,
மீண்டும் பல்லவர்கள் கிடைத்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் இவ்வாலயத்தில் திருப்பணிகள் நடந்துள்ளன. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. தற்போது தொல்லியல் துறை மறைந்த ஆலயத்தை மிகப் பாதுகாப்பாகத் தோண்டி எடுத்துப் பாதுகாத்து வருகின்றது
கலிகெழு கடவுள் கந்தம் கைவிட (புறம்: 52) புறநானூறு குறிப்பிடும் கந்தம் என்று கருதத்தக்க கல்லால் ஆன வேல் ஒன்று கிடைத்திருப்பது இவ்வகழ்வாய்வின் சிறப்புகளில் ஒன்று. முழுமையாகக் கிடைத்த இக்கல்வேலினை அண்மையில் சமூக விரோதிகள் சிலர் இரண்டாக உடைத்துவிட்டனர். (இந்த முட்டாள் தனத்தைப் பற்றி என்ன சொல்லிப் புலம்ப) தற்போது ஒட்டப்பட்ட நிலையில் இவ்வேல் காட்சியளிக்கிறது

சங்ககால முருகன் கோவில்

சங்ககால முருகன் கோவில் - முனைவர் நா.இளங்கோ


சங்ககால முருகன் கோவில்


கருத்துகள் இல்லை:

கடகம்பட்டுக் கல்மரங்கள் (27-12-2018)

முனைவர் நா.இளங்கோ தமிழ்ப் பேராசிரியர் புதுச்சேரி-8 9943646563 கடகம்பட்டுக் கல்மரங்கள் -1 (27-12-2018) தென்னார்க்காடு மாவட்டத்த...