திங்கள், 20 மே, 2019

அருட்கவி அதிரை தாஹாவின் இலக்கிய இணையர் காவியம் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ்த்துறைத் தலைவர்
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி
புதுச்சேரி- 605008

அருட்கவி அதிரை தாஹா
அருட்கவி அதிரை தாஹா, இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மரபுக் கவிஞர்களில் ஒருவர்; தீந்தமிழையும் தீன் தமிழையும் தம்மிரு கண்களாகப் போற்றி வருபவர்; ஆன்மீக நாவலர்களும் அருந்தமிழ்ப் பாவலர்களும் தோன்றிய புகழ்மிகு அதிராம்பட்டினத்தில் பிறந்த சிறப்பினைக் குறிக்கும் வகையில் அதிரை தாஹா என்றழைக்கப்படுகிறார் நம் அருட்கவி அல்ஹாஜ் முகம்மது தாஹா மதனீ அவர்கள். வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்று ஆசிரியப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அருட்கவி அவர்கள் பல்லாண்டுகள் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று இறைப்பணியும் இலக்கியப் பணியும் ஆற்றிவருபவர். தமது இலக்கியப் பயணத்தில் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், ஹைக்கூ முதலான பல கவிதை வடிவங்களிலும் உரைநடையிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளதோடு பல நூல்களைப் பதிப்பித்தவர் என்ற பெருமையும் அருட்கவி யாருக்கு உண்டு. பிள்ளைத் தமிழ், ஆற்றுப்படை, தூது, உலா, சதகம், மாலை, வாழ்த்து, கலம்பகம் முதலான சிற்றிலக்கியங்கள் மட்டுமல்லாது புதுக் கவிதையிலும் காப்பியங்கள் இயற்றிப் படைத்த சிறப்பு இவருக்குண்டு. மேடைத் தமிழிலும் தமிழகம் புதுச்சேரி மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர் முதலான மேல்நாடுகளிலும் வெற்றிக்கொடி நாட்டிவருபவர் தாஹா அவர்கள். ஆன்மீகப் பொழிவுகளிலும் இலக்கியப் பேருரைகளிலும் கவியரங்க மேடைகளிலும் தாஹா அவர்கள் தனிச் சிறப்பான முத்திரையைப் பதிப்பதில் வல்லவர். இசுலாமியப் பெண்களின் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்டு அதிராம் பட்டினத்தில் பல்லாண்டுகளாகத் தொடர் சொற்பொழிவு நிகழ்த்திச் சாதனை படைத்து வருகிறார் அருட்கவி.
1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் நான்காம் தேதியில் பிறந்த அதிரா தாஹா அவர்கள் எழுபத்தைந்து வயதினைக் கடந்தும் துடிப்புடன் மடைதிறந்த வெள்ளமெனக் கவிதை மழையைப் பொழிந்து வருவது இன்றைய இளந் தலைமுறை யினருக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது. இறைவன் புகழ்பாடும் நூல்கள் மட்டுமல்லாது நபிகளாரின் புகழைப் போற்றும் வகையிலும் கலீபாக்கள், இறைநேசச் செல்வர்களின் சிறப்பினை விதந்துரைக்கும் வகையிலும் தொடர்ந்து இலக்கியங்கள் படைத்துவரும் அருட்கவியாரின் புதியதோர் மரபிலக்கியப் படைப்பே இலக்கிய இணையர் காவியம் என்ற இக்காப்பியம். ஆயிரத்திற்கும் மேலான (1123 பாடல்கள்) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் ஆன இக்காப்பியம் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த பேராசிரியப் பெருமக்கள் மு.சாயபு மரைக்காயர், சா.நசீமாபானு இணையரின் சீர்மிகு வாழ்க்கையைப் பேசுகின்றது. அருட்கவி அவர்கள் இதற்கு முன்பே 2011 ஆம் ஆண்டில் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் புகழ் போற்றும் சாயபு மரைக்காயர் சதகம் என்ற நூலினைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கிய இணையரில் ஒருவரை மட்டும் பாடிய சதகத்தை வெல்லும் வகையில் இணையர் இருவரின் புகழ்பாடும் காப்பியம் படைத்துப் பேராசிரியர்களைப் பெருமைப் படுத்துகின்றார் அருட்கவி அவர்கள்.
இலக்கிய இணையர்:
இலக்கிய இணையர் என்று தமிழ்கூறு நல்லுலகத்தால் சிறப்புற அழைக்கப் படுபவர்கள் பேராசிரியர்கள் மு.சாயபுமரைக்காயர், சா.நசீமாபானு இணையரே.  இருவருமே காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இசுலாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி என்ற உயர்ந்த குறிக்கோளுடன் கடந்த நாற்பதாண்டு களுக்கும் மேலாக புதுவை, தமிழகம் மட்டுமன்றி, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் முதலான கீழ்த்திசை நாடுகளிலும் வளைகுடா நாடுகளிலும் இலக்கியப் பயணம் மேற்கொண்டு இன்தமிழுக்கும் இசுலாத்துக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர்கள்.
இலக்கிய இணையர்கள் இருவருமே நாடறிந்த நல்ல சொற்பொழி வாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த பன்னூலாசிரியர்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர்கள். ஆயிரக் கணக்கான நல்ல ஆசிரியர்களையும் பேராசிரியப் பெருமக்களையும் உருவாக்கிய பெரும் பேராசிரியர்கள். மேலும் மிகச்சிறந்த மனிதநேய மிக்க மத நல்லிணக்க மாமணிகள்; அப்பழுக்கற்ற அன்பாளர்கள்; உற்றுழி உதவும் உவப்பாளர்கள் என்று இலக்கிய இணையர்களின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.  
பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் இசுலாமியத் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கிதோடு அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பினை ஏற்று இதுவரை பதினாறு பன்னாட்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார் என்பதும் பேராசிரியர் சா.நசீமாபானு இக்கழகத்தின் மகளிர் பிரிவுத் தலைவராகப் பொறுப்பு வகித்து அம்மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார் என்பதும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டிய செய்தி.
இலக்கிய இணையரின் இசுலாம் மார்க்கப் பணி, இலக்கியப் பணி, ஆசிரியப் பணி, சமுதாயப் பணி இவற்றில் தம் நெஞ்சைப் பறிகொடுத்த அருட்கவி அதிரை தாஹா அவர்கள் இறைநேசச் செல்வர்களின் அருஞ்செயல்களைப் புகழ்ந்து பாடி இலக்கியம் படைக்கும் தம் இலக்கியப் பணியின் ஒருபகுதியாக இலக்கிய இணையரின் வாழ்க்கையை விரித்துரைக்கும் காவியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று விழைந்ததன் விளைவே இந்த இலக்கிய இணையர் காவியம்.
இசுலாமியக் காவியங்கள்:
       கவி – கவிதை – கவிஞன் - காவியம் முதலான சொற்களை வடசொற்கள் என்றும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்கள் பா – பாட்டு – பாவலன் - பாவியம் என்றும் தனித்தமிழ் அறிஞர்கள் குறிப்பிடுவர். இக்கருத்துக்கு மாற்றாக கவி – கவிதை – கவிஞன் – காப்பியம் முதலான சொற்கள் தமிழ்ச் சொற்களே என்று வாதிடுவோரும் உண்டு. தமிழில் காப்பிய மரபு வீரயுகத்திற்குப் பிறகே தோற்றம் பெறுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன தமிழின் பழைய காப்பியங்கள். காவியம், காப்பியம் என்ற இரண்டு சொற்களையும் இன்று நாம் ஒரே பொருளில் கையாண்டாலும் தொடக்கத்தில் இரண்டும் இருவேறு மரபின் இலக்கிய வகைமைகளாக இருந்திருக்க வேண்டும். காவிய மரபு வடமொழி மரபு. காப்பிய மரபு தமிழ்வழி மரபு. சிலம்பும் மேகலையும் காப்பியங்களே காவியங்களல்ல. சீவக சிந்தாமணி, பெருங்கதை, மகாபாரதம், இராமாயணம் முதலானவை காவியங்களே காப்பியங்களல்ல என்பது என் துணிபு. பின்னாளில் இரண்டு மரபுகளும் பிரித்து அடையாளம் காணமுடியாத அளவிற்குக் கலந்து விட்டன. தண்டியலங்காரம் கூறும் இலக்கணம் காவிய மரபிற்கானது.
      தமிழ்க் காவியங்களை அதன் பாட்டுடைத் தலைவர்களைக் கொண்டு சமயக் காவியங்களாக இனங்காணும் போக்கு மிகுந்துள்ளது. அந்த வகையில் சமணக் காவியங்கள், பௌத்தக் காவியங்கள், சைவ, வைணவக் காவியங்கள், இசுலாம், கிருத்துவக் காவியங்கள் எனத் தமிழில் காப்பியங்கள் என்றழைக்கப் படும் காவியங்கள் மிகுதியும் உள்ளன.
இசுலாமியக் காவியம் என்றவுடன் நம்மில் பலருக்கு உடனே நினைவுக்கு வரும் இலக்கியம் சீறாப்புராணம் மட்டுமே. உண்மையில் தமிழிலக்கிய நெடும்பரப்பில் மிகுதியான காவியங்களை இசுலாமியர்களே படைத்துள்ளனர் என்பது ஒரு வியப்பூட்டும் செய்தி. இசுலாமியக் காவியங்கள் என்பதற்கான வரையறை மிக எளிதானது, இசுலாமிய சமயப் பின்னணியில் பாடப்படுவதும் இசுலாமியப் பெரியோர்களின் வாழ்க்கையைப் பாடுவதும் இசுலாமியக் காவியங்களே. பதினேழு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலான நான்கு நூற்றாண்டுகளில் தமிழில் தோன்றிய இசுலாமியக் காவியங்களின் எண்ணிக்கை இருபத்தேழாகும். அதில் பதினெட்டு பெருங் காப்பியங்கள், ஒன்பது குறுங் காப்பியங்கள். அண்மைக் காலத்தில் அதாவது கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் வெளிவந்துள்ள காவியங்களை இந்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை. ஆக தமிழில் அதிகமான காவியங்களை படைத்தளித்த பெருமை இசுலாம் சமயத்திற்கே உரியது என்பதனை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.
அருட்கவி அதிரை தாஹா எழுதியுள்ள இலக்கிய இணையர் காவியம் என்ற இந்நூல் தமிழ் இசுலாமியக் காவியங்களின் வரிசையில் தனியிடம் பெறத்தக்கது. அருட்கவி அவர்கள் இதற்கு முன்பே இரண்டு காவியங்களையும் ஒரு குறுங் காவியத்தையும் படைத்துள்ளார் (1.நபிபுகழ் காவியம், 2.குத்புல்ஹிந்த் அஜ்மீர் நாயகக் காப்பியம், 3.மர்யம் ஈஸா குறுங்காவியம்) என்றாலும் இந்நூல் அருட்கவியாரின் முந்தைய காவியங்களை விட அளவில் பெரியது.
அருட்கவி அதிரையாரின் இலக்கிய இணையர் காவியம் ஒரு புதுமைக் காவியம். பாட்டுடைத் தலைவர்களான பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் பேராசிரியர் சா.நசீமாபானு இணையரின் வாழ்க்கை வரலாற்றை ஆற்றொழுக்காக நிரல்பட வரிசைப்படுத்தி காப்பியம் அமைக்கப்படாமல் காப்பியத் தலைமக்களின் இலக்கியப் பணி, எழுத்துப் பணி, பெற்ற விருதுகள், இலக்கியப் பயணங்கள், விருந்தோம்பல் சிறப்பு, இணையரின் இல்ல நூலகத்தின் சிறப்பு, நூல்களின் சிறப்பு இவற்றை விரித்துரைக்கும் போக்கில் இடையிடையே அவர்கள் வாழ்க்கைப் பயணத்தின் சுவையான தருணங்களை இட்டுநிரப்பியதோர் புதுமைப் படைப்பாக இக்காப்பியம் அமைக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் விதப்பு முறையும் கவிக்கூற்றுமாகக் காவியம் அமைந்துள்ளமை நூலாசிரியரின் புதுமை படைக்கும் நாட்டத்தையே காட்டுகின்றது.
காவியத்தைத் தொடங்கும்போது நூலாசிரியர் மரபினைப் போற்றும் விதத்தில் வணக்கம், வாழ்த்து, அவையடக்கம், நாட்டுப்படலம், நகரப்படலம் என்று தொடங்கி, தலைமக்கள் அறிமுகம் வரையிலும் காவிய மரபோடு பயணம் செய்தாலும் அடுத்தடுத்த இயல்களில் காவிய மரபின் இறுகிய பிடிக்குள் சிக்கிக் கொள்ளாமல் விட்டு விடுதலையாகி புதிய பாதையில் பயணிக்கின்றார்.
இலக்கிய இணையர் காவியம் என்ற இக்காவியத்தில் தனிச்சிறப்பான பகுதிகள் பல உள்ளன. குறிப்பாக இணையரின் வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்துள்ள மாமரம் தனது பெருமைகளை விவரித்துக் கவிஞரோடு உரையாடுவதாக உள்ள பகுதியும் வீட்டு நூலகத்தின் சிறப்பினை விவரிக்கும் போது தோட்டத்துத் தேன்கூட்டைச் சுட்டிக்காட்டிப் புத்தகங்களுக்கும் தேனுக்குமான சிறப்பியல்புகளைப் பொருத்தமுற அடுக்கிச் சொல்லும் பகுதியும் இக்காவியத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த பகுதிகள் என்பது வெளிப்படை.
காவியத்தின் தலைமை மாந்தர்களை அறிமுகம் செய்யும் அருட்கவியாரின் பாடல்களில் இரண்டு பாடல்களை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
முதல்பாடல் – சாயபு மரைக்காயரை அறிமுகம் செய்யும் பாடல், இரண்டாம் பாடல் நசீமாபானு இசுலாம் மார்க்கத்தைத் தழுவும் சூழலை அறிமுகம் செய்யும் பாடல்.
பாட்டுடைத் தலைவர் அறிமுகம்
திருப்பேரர் இப்பிள் ளைக்கே
தேர்ந்தனர் பாட்டன் பெயரை!
கருவிலே திருவு மானார்
சாயபு மரைக்கார் அம்மா
உருவெலாம் சிரிக்கும் பாராய்
உற்சாகம் கரையில் புரளும்
தெருவெலாம் போற்றும் பிள்ளை
தேன்பேச்சைக் கேட்டுத் தானே!
நசீமாபானு இசுலாத்தைத் தழுவுதல்
உண்மையாம் வணக்கத் திற்கோ
ஒருவனே! நபிகள் கோமான்
திண்மையாய்த் தூதர் என்றே
திட்பமாய் ஈமான் கொண்டார்!
கண்ணெனத் தொழுகை பற்றி
கடமையைச் செய்ய வந்தார்!
எண்ணியே பணத்தில் ஜக்காத்
இருப்பதில் கொடுப்பேன் என்றார்.

இத்தகு மரபான சொல்லழகும் கவியழகும் பொருந்தி நிற்கும் கவிதைகளைக் காவியம் நெடுகிலும் நாம் பார்க்க முடியும். சில பாடல்கள் யாப்பின் கட்டுக்குள் அடங்கவில்லை என்பது ஒரு சிறுகுறையே என்றாலும் சிறப்பான உவமைகள், இயற்கை வருணனை, சொல்லழகு, பொருளழகு முதலான காவிய அழகுகள் அக்குறையை நிறைவுசெய்து விடுகின்றன. கதைசொல்லும் விதப்பு முறையில் காவியத்தின் பெரும்பகுதி அமைந்திருந்தாலும் கதையை விஞ்சித் தலைமக்களின் சாதனைகளை விவரிப்பதில் கவிஞர் கூடுதல் கவனம் செலுத்துகின்றார் என்பது மேம்பட்டு நிற்கின்றது. 
அருட்கவியாரின் காவியம் தலைமக்களின் மாண்புகளை விரித்துரைப் பதோடு நூலின் போக்கில் அரிய வாழ்வியல் உண்மைகளையும் சமய, சமூக விழுமியங்களையும் கவிஞரின் அனுபவ மொழிகளின் வழியாக அழகுற எடுத்துக் காட்டுகின்றது. நூலின் பெரும்பயன் என்று இதனைச் சுட்டிக்காட்ட விரும்பு கின்றேன்.
பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் நூலகத்தின் பெருமை பேசும் பகுதிகள் இரண்டிடங்களில் வருகின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் நூற்களின் பெருமை பலபடப் பேசப்படுகின்றது. இதோ ஒரு பாடல்,
மவுனமாய் இருக்கும் போதில்
மொழிபேசும் நூலெனும் தாய்
அவுடதம் மனத்தின் பிணியை
அவித்திடும் மருத்து வர்தான்
பவம்போக்கும் படிக்கப் படிக்க
பக்குவக் கருவுண் டாகும்
கவலைகள் நீக்கும் நன்கு
கலந்துரை நண்பர் நூலே!
இந்தப் பாடல் நல்ல நூற்கள் மனிதர்களுக்குத் தாயாகவும் மருத்துவராகவும் ஆசானாகவும், நண்பராகவும் இருந்து துணைசெய்கின்றன, வழிகாட்டுகின்றன  என்றெல்லாம் அடுக்கிச் சொல்கிறது. மேலும், பாடல் நூலின் சிறப்பை மட்டும் பேசாமல் தாய்மையின் சிறப்பையும் நட்பின் சிறப்பையும் பேசுகின்றது. பாடலின் ஒவ்வொரு அடியும் மறித்து நோக்க நோக்கப் புதுப்புது உண்மைகளை நமக்கு வெளிப்படுத்துகின்றது. மவுனமாய் இருக்கும் போதில் மொழிபேசும் தாய், மனத்தின் பிணியை அவித்திடும் மருத்துவர், படிக்கப் படிக்கப் பக்குவக் கரு, கவலைகள் நீக்கும் நண்பர் கலந்துரை முதலான சொற்றொடர்கள் பல வாழ்வியல் உண்மைகளைப் பேசுகின்றன. இவை விரிப்பின் பெருகுமென விரிவஞ்சி விடுக்கிறேன் வாசிக்கும்போது நீங்கள் பாடலை ஆழ்ந்து கற்றுப் பயன் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
      அருட்கவி அதிரை தாஹா அவர்கள் ஓர் ஆசுகவி, ஆயிரக் கணக்கான தமிழ் மரபுக் கவிதைகளை அவர் படைத்துள்ளார். தமிழின் பல சிற்றிலக்கிய வடிவங்களைத் தம் படைப்பில் அவர் கையாண்டுள்ளார். இசுலாம் மார்க்கத்திற்கும் இன்தமிழுக்கும் தொடர்ச்சியாக அவர் ஆற்றிவரும் பணிகள் பாராட்டத்தக்கன.
      பேராசிரியர் மு.சாயபுமரைக்காயர், பேராசிரியர் சா.நசீமாபானு இணையரின் புகழ்போற்றும் இக்காவியம் ஒரு வழிகாட்டி இலக்கியம். வருங்கால இளந்தலை முறையினர் ஏற்றுப் போற்றிக் கொண்டாட வேண்டிய இணையரின் மேன்மை மிகுந்த வாழ்க்கையைப் பதிவுசெய்யும் ஓர் அரிய நிகழ்கால வரலாற்று ஆவணம். இந்நூலைப் படைத்தளித்தமைக்காகத் தமிழுலகம் என்றென்றும் அருட்கவி அதிரை தாஹாவைப் போற்றிப் புகழும் பாராட்டும் என்ற நம்பிக்கையுடன்.


முனைவர் நா.இளங்கோ

nagailango@gmail.com 

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...