Thursday, February 25, 2010

மாயூரம் வேதநாயகரின் தனிச்சிறப்புகள் - வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-3

மாயூரம் வேதநாயகரின் தனிச்சிறப்புகள் - வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-3

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

மாயூரம் வேதநாயகரின் தனிச்சிறப்புகள்:

தென்னாற்காடு மாவட்டத்தில் இராமலிங்கர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், ஞானசபை, தருமச்சாலை போன்ற அமைப்புகளை ஏற்படுத்திப் பரபரப்பான முறையில் இயங்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைதியான முறையில் தமது எழுத்துக்களின் மூலம் சமூகச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்து வந்தவர் மாயூரம் வேதநாயகம். சமூகத் தொண்டோ இலக்கியப் பணியோ அவருடைய முழு நேரப்பணி அல்ல, அவராக விரும்பி ஏற்றுக்கொண்ட பணி. அதிகார பலமுள்ள அராசாங்கப் பதவியிலேயே அவர் சொகுசாக வாழ்க்கையை நடத்திச் சென்றிருக்கலாம். மாறாகத் தம் பதவி அனுபவங்களையும் அவர் தமிழ் வளர்ச்சிக்கே பயன்படுத்தினார்.

நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிட்டுச் சட்டத்தமிழின் தோற்றத்திற்குப் பாடுபட்டார்.கிருத்துவ மத போதகர்கள் தீவிரமான மதப்பிரச்சார, மதமாற்ற இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில், முழுமையான கிருத்துவ மதப்பற்றுள்ள வேதநாயகர் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் பாடியிருப்பதும் போலிச் சமயவாதிகளை அடையாளம் காட்டும் நையாண்டிப் பாடல்களைப் பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கன.

வள்ளலாரைப் போலவே சர்வ சமய சமரசம் காண வேதநாயகர் முயன்றார் என்றாலும், வள்ளலாரின் வருணாஸ்ரம எதிர்ப்பில் இவரின் கவனம் செல்லவில்லை. மாறாகப் பெண் விடுதலை, பெண்கல்வி போன்றவற்றில் அதிக நாட்டம் செலுத்தினார். இந்திய, தமிழகப் பெண்களின் பரிதாப நிலை குறித்து முதன் முதலில் பாடிய தமிழ்க் கவிஞர் வேதநாயகரே.(வேதநாயகருக்கு முன்பே புதுவைக் கவிஞர் சவரிராயலு நாயக்கர் பெண்கல்வி குறித்துப் பாடியுள்ளார் என்ற தகவலும் உண்டு, இக்கருத்து ஆய்வுக்குரியது)

மாயூரம் வேதநாயகரின் தனிப்பாடல்கள்:

வேதநாயகர் தம் வாழ்நாளின் பல்வேறு சூழல்களில் எழுதிய தனிப்பாடல்கள் அவரது மறைவுக்குப் பின்னர் தொகுக்கப்பட்டு 1908 ஆண்டு வெளிவந்ததாக அறிகிறோம். பின்னாளில் சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் பல புலவர்களின் தனிப்பாடல்களைத் திரட்டித் தனிப்பாடல் திரட்டு என்ற பெயரில் வெளிட்டபோது இரண்டாம் தொகுப்பில் மாயூரம் வேதநாயகரின் 61 தனிப்பாடல்கள் பதிப்பிக்கப் பட்டுள்ளன.( தனிப்பாடல் திரட்டு, தொகுதி-2, ப-ள் 146 - 168) அறுபத்தொரு பாடல்களும் கீழ்க்கண்ட சூழல்களில் பின்வரும் பொருளமையப் பாடப்பட்டுள்ளன.

மொத்த பாடல்கள் : 61

உத்தியோகம் குறித்தும் ஓய்வுக்காலம் குறித்தும் பாடிய பாடல்கள்: -9,
திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர் மீது பாடிய பாடல்கள்: -13, பரத்ததையர் குறித்து: -1,
ஜவுளி வியாபாரி குறித்து: -1,
துறவிகளின் நீண்ட சடையைக் கேலிசெய்து: -1,
இறைச்சியுண்ணும் அந்தணர்களைப் பழித்து: -4,
புலவர்களின் புகழ்ச்சியைக் கண்டித்து: -5,
மழை வேண்டிப் பாடிய பாடல்கள்: -7,
வெப்பமிகுதியால் சூரியனை நிந்தித்துப் பாடிய பாடல்: -2,
தனக்கோடி முதலியாருக்கு எழுதியகடிதம்: -1,
சீகாழிக் கோவையைச் சிறப்பித்துப் பாடியது: -2,
சி.வை.தாமோதிரம் பிள்ளையவர்கள் மீது பாடிய பாடல்கள்: -2,
மனைவி இறந்த போது பாடிய பாடல்கள்: -5,
வரிவாங்கும் அதிகாரிகள் குறித்து: -2,
நாவிதரைப் புகழ்ந்து பாடியது: -1,
முதலியார் வாங்கி வந்த காளை குறித்து: -1,
வேடிக்கைப் பாடல்: -4.

வேதநாயகரின் தனிப்பாடல்களில் அவரின் சோகம் கோபம், நையாண்டி, நகைச்சுவை, நன்றியுணர்வு போன்ற பல்வேறு உணர்வுகள் வெளிப்பட்டிருப்பதைக் காணமுடியும்.

வேதநாயகர் காலத்தில் தமிழகத்தில் பல அறிஞர்களும் புலவர் பெருமக்களும் வாழ்ந்து வந்தனர். அத்தகு அறிஞர்களோடும் புலவர்களோடும் வேதநாயகருக்கு நல்ல நட்பு இருந்தது. குறிப்பாக, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடனும் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகரிடமும் வேதநாயகர் நெருங்கிய நட்புகொண்டிருந்தார். இவர்கள் மட்டுமின்றி இராமலிங்க சுவாமிகள், ஆறுமுக நாவலர், கோபால கிருஷ்ண பாரதியார், சி.வை.தாமோதிரம் பிள்ளை போன்ற பலருடனும் இவர் தொடர்பு கொண்டிருந்தார். மகாவித்வான் மீனாட்சி சுந்தம் வேதநாயகர் மீது குளத்தூர் கோவை என்றவொரு கோவை நூலைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

No comments: