Sunday, February 14, 2010

தமிழா! இதுதான் மானம் - தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் பகுதி-3

தமிழா! இதுதான் மானம் - தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் பகுதி-3

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

புறநானூற்று மன்னர்களும் மான உணர்வும்:

சேரமான் பெருஞ்சேரலாதன், சோழன் கரிகால் பெருவளத்தனோடு போரிட்டபோது கரிகால்வளவன் சேரலாதன் மார்பிலே எறிந்தவேல் அவன் உடலுக்குள் ஊடுருவி முதுகுவழியாகச் சென்றது. மார்பில் எறிந்தவேல் முதுகில் புண்ணை ஏற்படுத்தியதனால் சேரமன்னன் அதுவும் புறப்புண்ணுக்கு ஒப்பாகும் எனக்கருதி உயிர்வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர் துறந்தான். இதனை,புறப்புண் நாணி மறத்தகை மன்னன்வாள் வடக்கு இருந்தனன்

ஈங்குநாள் போற் கழியல ஞாயிற்றுப் பகலே! -புறம். 65.

என்று இத்தகு மான உணர்வுடைய வேந்தன் இல்லாமையால் ஞாயிற்றையுடைய பகல் இனி முன்போல் கழியாது என்று பாடுகிறார் கழாத்தலையார் என்ற புலவர். போரில் சேரமான் பெருஞ்சேரலாதன் தோல்வி அடைந்தாலும் புறப்புண் நாணி வடக்கிருந்ததால் வெற்றிபெற்ற கரிகால் வளவனைக் காட்டிலும் அவன் நல்லவன் என்று வெண்ணிக்குயத்தியார்,

வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே -புறம். 66

என்று சேரமான் பெருஞ்சேரலாதனைப் புகழ்ந்தரைக்கின்றார்.

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு போர்செய்து தோல்வி அடைந்து சோழனால் சிறையிலிடப் பெறுகிறான். தனக்கு ஏற்பட்ட நீர்வேட்கை மிகுதியால் சிறைக்காவலரை நீர் தருமாறு கேட்கிறான். அவர்கள் காலந்தாழ்த்தி நீர் தருகின்றார்கள். இம்மானக்கேட்டை நினைந்து நீரை அருந்தாமல் உயிர் துறக்கிறான் சேரமன்னன் இரும்பொறை.

குழவி யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆஅள்அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்;படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேள்அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகையின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே. -புறம். 74.


என்பது சேரமான் கணைக்கால் இரும்பொறையின் வாக்குமூலம் ஆகும்.அரசர்கள் தோல்வியுற்றுப் பகைவர்பால் துன்பமுற்று வாழ்வதையும் போர்க்களத்தில் புறப்புண் ஏற்படுவதையும் உண்ணுநீர் ஆயினும் பகைவரிடமிருந்து இரந்து பெறுதலையும் தம் மானத்திற்குப் பெரும் இழுக்காகக் கருதினார்கள் என்பதை மேற்கூறிய இரண்டு சான்றுகளும் புலப்படுத்துகின்றன.

தம்மக்களோடு போரிட நேர்ந்தது குறித்து நாணி வடக்கிருந்து உயிர்துறந்த சோழமன்னன் கோப்பெருஞ்சோழனும், ஆராயாது தீர்ப்புரைத்தமைக்காக வருந்தி உயிர்நீத்த சிலப்பதிகாரத்துப் பாண்டிய நெடுஞ்செழியனும் இத்தகு மானஉணர்ச்சிக்குப் பெருமை சேர்த்தவர்களே.

மேற்கூறிய மன்னர்கள் வாழ்க்கை பற்றிய செய்திகள் அனைத்திலும் அவர்கள் தம்பழிக்கு நாணியவர்கள் என்பதையும் தமது பழிக்குரிய செயலால் தம்குடிக்கு இழுக்கு நேர்ந்ததே என்று எண்ணியே தம் மானஉணர்ச்சியால் உயிர்கொடுத்துப் பழிதுடைத்தவர்களாக அவர்கள் விளங்கக் காண்கிறோம்.

இவர்கள் திருவள்ளுவர் கூறிய மருந்தோ மற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை என்பதற்கேற்பவும் உயிர் நீப்பர் மானம் வரின் என்பதற்கேற்பவும் தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருத்த அதனால் உண்டான உணர்ச்சியால் மானத்தைப் பேணியவர்கள்.

சங்ககால மக்கள் போற்றி ஒழுகிய மானம் என்பது உணவு முதலான வாழ்க்கைத் தேவைகளுக்காக அல்லாமல் உயர்ந்த கொள்கைகளைக் காப்பதற்காகத் தம் உயிரை இழக்கும் நிலை வந்தாலும் உவந்து ஏற்றுக்கொள்கிற பண்பாகும்.

தன்னலம் கருதிப் பிறர்மேல் கொள்ளும் கோபம் மானமன்று. தன்பழிக்குரிய செயலால் தம்குடிக்கு இழுக்கு நேராமல் உயிர் கொடுத்துப் பழிதுடைக்கும் ஒப்பற்ற பண்பாகும்.

இவ்வகையில் சங்ககாலப் புலவர்களின் கோப உரைகள் அவர்களின் நெஞ்சுரத்தைக் காட்டுமே அல்லாமல் அதனை அவர்தம் மான உணர்ச்சியின் வெளிப்பாடு என்பது பொருந்தாது. சங்ககால மன்னர்கள் சிலர் புறப்புண்ணுக்கு நாணியும், பகைவனிடம் நீர்வேட்கைக்காக மானம்கெட வாழ்தலை வெறுத்தும் உயிர்விட்ட செயலே மானம் என்றும் அதுவே சிறந்த பண்பு என்றும் துணிகின்றோம்.

No comments: