திங்கள், 20 மே, 2019

நாட்டுப்புற இலக்கியமும் திணைக் கோட்பாடும்

முனைவர் நா.இளங்கோ
முதல்வர்,
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி,
புதுச்சேரி- 605008

திணைக் கோட்பாடும் அகமும்

மனிதன் உள்ளிட்ட எந்தவகை உயிரினத்திற்கும் உள்ள உயிர்க்கடமை இனப்பெருக்கமே. உயிரினங்கள் உண்பதும் உயிர் வாழ்வதும் இதன் பொருட்டே. பாலின ஈர்ப்பும் இன்ப நாட்டமும் எல்லா உயிர்களுக்கும் இயல்பான உயிர் இயக்கம்.
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்   (தொல். பொருள். பொரு. 27.)
இன்பநாட்டம் எல்லா உயிரினங்களுக்கும் இயல்பூக்கமாய் அமைவது என்று இலக்கணம் வகுக்கிறார் தொல்காப்பியர். இன்ப நாட்டத்திற்கான ஒருவகை உளவியல் வெளிப்பாடே அகம். ஆணும் பெண்ணும் கூடிக்கலக்கும் பாலியல் தேவைக்கான அழகியல் வெளிப்பாட்டு வடிவமே அகப்பாடல்கள். இத்தகு அகப்பாடல்கள் இலக்கிய ஆக்கம்பெற வடிவமைத்துக் கொள்ளப் பெற்றயே அகப்பொருள் மரபுகள்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்   (தொல். பொருள். அகத். 56.)
என்ற நூற்பாவில் புலனெறி வழக்கம் என்று இத்தகு மரபுகளைக் குறிப்பிடுவார் தொல்காப்பியர். புலனெறி வழக்கின் அகக் கட்டமைப்புகளே தொல்காப்பியர் குறிப்பிடும் திணைமரபு, கைகோள் மரபு, கூற்று மரபு ஆகிய மூன்றுவகை மரபுகளும். இவற்றுள் திணைமரபு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. தமிழின் திணைமரபு இரண்டு அடுக்குகளைக் கொண்டது. முதல் அடுக்கு நிலம் சார்ந்த தமிழர் வாழ்வியலின் பதிவுகளைக் கொண்டது. இரண்டாவது அடுக்கு புனைவியல் சார்ந்த இலக்கியக் கோட்பாடு.

அகத்திணை மரபுகள்:

தமிழ் இலக்கியத்தில் நீண்ட நெடிய அகப்பாடல் மரபுத்தொடர்ச்சி உண்டு. அவற்றுள் அகப்பாடல் மரபுகளைக் கட்டமைப்பதில் சங்க அகப்பாடல்களும் தொல்காப்பியமும் சிறப்பான பங்களிப்பினை வழங்கியுள்ளன. ஆயினும் தொல்காப்பியம் வரையறுக்கும் சிலமரபுகள் சங்க இலக்கிங்களில் பொருந்தி வரவில்லை. சங்க இலக்கியங்கள் முழுமைக்குமான பொதுவான அகத்திணை மரபுகள் என்று திட்டவட்டமாக எதனையும் வரையறுக்க இயலவில்லை. சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களிலேயே பல்வேறு அகத்திணை மரபுகளும் மரபு மீறல்களும் காணப்படுகின்றன.

திணை நில வாழ்க்கை:

மனிதர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய நிலத்தின் வெளியாகிய இயற்கைச் சூழலே திணைக் கோட்பாட்டிற்கு அடிப்படைக் காரணமாகத் திகழ்கின்றது. தமிழ் இலக்கியங்கள் சுட்டும் திணைநிலக் கோட்பாடு ஒரே சமயத்தில் இலக்கிய இலக்கண ஆசிரியர்களால் உருவானதன்று. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணையாகிய நிலங்களுக்கும் தமிழர் நாகரிக வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமூக வரலாற்றிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தொடக்கத்தில் மலைகளில் தொடங்கிய ஆதித் தமிழர்களின் வாழ்க்கை வேட்டையோடும் கூடியுண்ணலோடும் தொடர்புடையதாயிருந்து, இது குறிஞ்சித் திணை வாழ்க்கை. காலப்போக்கில் பல்லாயிரம் ஆண்டுக்கால இடைவெளிகளில் மலைகளில் வாழ்ந்த கூட்டத்தின் ஒருபிரிவு இடநெருக்கடி காரணமாகவோ வேறு காரணங்களாலோ மலையிருந்து கீழிறங்கி மலைச் சாரல்களில், காடுகளில் வாழ்க்கைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தக் காடு சார்ந்த முல்லைத் திணை வாழ்க்கையில் மனிதன் விலங்குகளைப் பழக்கப்படுத்தி வளர்க்கத் தொடங்கியதன் வாயிலாக ஆநிரை வளர்ப்புச் சமூகம் உருவாகியிருக்க வேண்டும். இதே காலகட்டத்தில் அவர்கள் வன்புல விவசாயத்தைக் கற்றிருக்க வேண்டும் மீண்டும் பல்லாயிரம் ஆண்டுக்கால இடைவெளிகளில் ஒருபிரிவினர் காடுகளிலிருந்து இடம்பெயர்ந்து சமவெளி களையும் ஆற்றங்கரைகளையும் நாடி வாழத் தொடங்கியபோது மென்புல விவசாயத்தை மேற்கொண்டிருக்க வேண்டும், இதுவே மருதத் திண வாழ்க்கை. மருதத்திணை வாழ்க்கையில் மென்புல விவசாயம் தந்த உபரி உற்பத்தி, வளமான வாழ்க்கை அடுத்த தேடலுக்கு வழிவகுத்திருக்க வேண்டும் காலம் செல்லச் செல்லப் பெருங்கடல் குறித்த அச்சம் விலகி கடற்கரை வாழ்க்கையும் ஆழ்கடல் மீன்பிடிப்பும் உப்பு உற்பத்தியும் தொடங்கியிருக்கும். இந்த கடற்கரையும் வணிக நாகரிகமும் நெய்தல் திணை வாழ்க்கையாக அமைந்திருக்க வேண்டும்.
(இங்கே, பாலைத்திணை ஒரு புதிர். தமிழ்ச் சமூக வரலாற்றில் பாலைத் திணைநிலக்கான இடம் யாது என்ற ஐயத்திற்குச் சிலப்பதிகாரம் அளிக்கும் விடை,
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" 
குறிஞ்சி, முல்லைத் திணைநிலங்கள் இயற்கை மாற்றங்களால் பலகாலம் மழையின்றி வறண்டு உருமாறிச் சிதையும் காலங்களில் பாலைநிலமாக மாற்றம் பெறும். நிலம் மழையின்றி வறண்டால் வாழும் மக்களின் வாழ்க்கையும் தடம்புரளும் பாலைத்திணை வாழ்க்கையும் அவ்வாறே) 
எனவே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணை வாழ்க்கையும் தமிழ்ச் சமூகத்தின் சமூக வரலாற்றுப் பதிவுகளாக அமைந்திருப்பது சிறப்பு. சங்க அகப்புற இலக்கியங்களும் தொல்காப்பியமும் இந்தத் திணைநில வாழ்க்கையை இலக்கியத்தின் பாடுபொருளாகவும் இலக்கிய படைப்பாக்கக் கோட்பாடுகளாகவும் வரித்துக் கொண்டன.
மலை, காடு, வயல், கடல், வறண்ட பகுதி ஆகிய ஐந்து நிலப்பகுதியையும் அக வாழ்வின் புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் முதலான சூழல்களுடன் தொடர்புப்படுத்தி இலக்கியம் படைக்கும் மரபானது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் இதனை ஓர் இலக்கியப் படைப்பாக்கக் கோட்பாடாக இலக்கணம் செய்கிறது. இங்கே திணை என்ற சொல் ஒரு குறியீடாக வாழ்க்கையையும் இலக்கியப் படைப்பையும் இணைக்கின்றது. திணை என்ற சொல்லுக்குத் தொல்காப்பியர் விளக்கம் தரவில்லை. திணை என்பதற்கு ஒழுக்கம், இடம், குடி, குலம், நிலம், பொருள் ஆகிய பொருள்களை அகராதிகள் சுட்டுகின்றன. இவற்றுள் தொல்காப்பியர் சுட்டுவது ஒழுக்கம் எனும் பொருளில் என்கிறார் நச்சினார்க்கினியர். திணையைத் தொல்காப்பியர் கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை என்ற மூவகைப்பட்ட எழுதிணையாகப் பகுக்கின்றார். இத்திணையானது முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனும் முப்பொருளை உள்ளடக்கியதாக அமையும்.
அகப்பொருளின் திணைக் கோட்பாடு முதல், கரு, உரி என்ற மூன்று கூறுகளை உள்ளடக்கியது என்றாலும் திணைக் கோட்பாட்டின் உயிர்நாடி உரிப்பொருளே. முதலும் கருவும் பாட்டின் உள்ளடக்கமாகிய உரிப்பொருளைச் சிறப்பிக்கவே பாடலில் கையாளப்படுகின்றன. குறிஞ்சித் திணைக்கான உரிப்பொருள் புணர்தல் என்றால் அந்த உள்ளடக்கம் கற்போர் நெஞ்சில் மனஓவியமாக விரிவதற்கு மலை என்ற நிலமும் குளிர்காலம் என்ற பெரும் பொழுதும் நள்ளிரவு என்ற சிறுபொழுதும் முதல்பொருளாக அமைந்து துணை செய்கின்றன. அவ்வாறே விலங்கு, பறவை, மரம், செடிகொடி முதலான இயற்கையும் இன்னபிறவும் கருப்பொருட்களாக அமைந்து கவிதைதரும் மனவுணர்வினை மிகுவிக்கின்றன.
குறிஞ்சித் திணைக்கு உரிப்பொருள் புணர்தல் என்று வரையறுப்பதும் திணைக் கோட்பாடே. அகவாழ்க்கையில் தலைமக்களின் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் எல்லா நிலங்களில் நிகழும் என்றாலும் மலைநிலத்தில் அதாவது குறிஞ்சித் திணையில் புணர்தல் உரிப்பொருள் நிகழும் என வரையறுப்பது திணைக் கோட்பாடாகிய இலக்கியப் படைப்பாக்கக் கோட்பாடாகும். இவ்வாறே ஐந்திணைக் கோட்பாடுகளையும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்
திணைக் கோட்பாட்டின் அடிப்படை மக்களின் அகவாழ்க்கையை அதாவது பாலியல் மற்றும் இல்லறவியல் வாழ்க்கையை உரிப்பொருட்களாக வகைப்படுத்தி ஐந்து நிலங்களின் பின்னணியில் அந்தந்த நிலத்திற்குரிய உரிப்பொருளைப் பாடும் மரபுகளை வரையறுப்பது என்பதாகும். நிலங்களைத் திணையாக்கி உரிப்பொருளை வரையறுத்து முதல், கரு முதலான பின்னணிகளைச் சேர்ப்பதன் வழியாகத் திணைக் கோட்பாடு கட்டமைக்கப் படுகிறது.
அகப்பொருள் – அகத்திணை – திணைமரபு – கைகோள் மரபு என்றெல்லாம் எழுத்திலக்கியங்கள் போற்றி வளர்த்த இலக்கியப் படைப்பாக்கக் கோட்பாடுகளின் தொடர்ச்சியைச் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து கொஞ்சம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணமுடிகிறது என்றாலும் தொடர்ந்து தமிழிலக்கிய நெடும்பரப்பில் காண இயலவில்லை. இலக்கண நூல்கள் தொல்காப்பியத்தை ஒட்டியும் உறழ்ந்தும் அகப்பொருள் இலக்கணங்களைத் தொடர்ச்சியாகக் காப்பாற்றி வந்த நிலையிலும் இலக்கியங்கள் அகப்பொருட் பாடல்களைத் திணைமரபோடு பாடும் நிலையைக் கைவிட்டுவிட்டன. அகப்பாடல்களின் இடத்தைக் காதல் பாடல்கள் நிரப்பின. காதல்பாடல்களுக்கு திணைமரபு, கைகோள், கூற்று மரபு முதலான அகப்பொருள் மரபுகள் இல்லை. காதல் பாடல்கள் அகப்பொருள் மரபுகளைக் கைவிட்டாலும் தொல்காப்பியர் வரையறுத்த புலனெறி வழக்கினைக் கைவிடவில்லை.
ஏட்டிலக்கியங்களில் காணமுடியாத அகப்பொருள் மரபுத் தொடர்ச்சியினை நாட்டுப்புறக் காதல் பாடல்கள் கொஞ்சம் காப்பாற்றி வைத்துள்ளன.

காதலும் – அகப்பாடல்களும்

காதல் என்பது பாலுறவுத் தேவையை ஒட்டிய ஒரு செயற்கையான வெளிப்பாடே ஆகும். காதல், கற்பு, திருமணம் முதலான சிந்தனைகளுக்கு உடைமைச் சமூகத்திற்கு முந்தைய தாய்வழிச் சமூகத்தில் தேவை ஏற்படவில்லை. உடைமைச் சமுதாயம் தோன்றுகிற போதுதான் ஒருதார மணத்திற்குத் தேவை ஏற்படுகின்றது. தன்னுடைய உடைமையை நேராகத் தன்வாரிசே பெற பெண் ஒருகணவ மணத்தைக் கைக்கொள்ள வேண்டியதாகிறது. இத்தகு சூழ்நிலையில்தான் ஒருகணவ மணக் கோட்பாட்டைக் கட்டிக் காப்பதற்காகக் காதலும் கற்பும் கோட்பாடுகளாக உருவாயின. தனியுடைமை, ஆணாதிக்கம் இவற்றைக் கட்டிக் காக்க உருவாக்கப்பட்ட காதல் கோட்பாடு காலந்தோறும் இலக்கியவாதிகளாலும் ஆண்களாலும் ஆணாதிக்கத் தாக்குதலுக்கு உள்ளான பெண்களாலும் மிக உயரியதாகக் கருதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தது. சங்க அகப்பாடல்களும் திட்டமிட்ட முறையில் காதலை அகமாக்கி வளர்த்தன. ஆனால் நடைமுறையோ சமுதாயத்தில் பொருளாதார, சாதீய முரண்பாடுகளையும் மீறிய முறையில் காதல் உருவாக வாய்ப்பளித்தது. காதல் கோட்பாட்டின் நோக்கமும் நடைமுறை வாழ்க்கை நிலையும் முரண்படுகின்ற காரணத்தால்தான் மக்கள் இலக்கியக் காதலுக்குத் தரும் மதிப்பை நடைமுறைக் காதலுக்குத் தருவதில்லை.

நாட்டுப்புறக் காதல் பாடல்கள்:

பருவமடைந்த பெண்ணிற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் காதலர்களுக்கு இருக்கும் பாலினத் தடையும் சமுதாய முரண்பாடுகளுமே நாட்டுப்புறங்களில் காதல்பாடல்கள் தோன்ற வாய்ப்பளித்தன. தொழிற்களங்களில் தொழில்புரியும் ஆண் பெண்களுக்கிடையே இயல்பாக எழும் காதல் உணர்ச்சி சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவற்றால் தடைசெய்யப்படும்போது நிறைவேறாத காதலின் பக்கவாட்டுக் கால்வாயாக நாட்டுப்புறக் காதல்பாடல்கள் தோன்றுகின்றன என்பார்  நா.வானமாமலை.
காதல்பாடல்களும் அக இலக்கிய மரபுகளும்:
தனியுடைமையும் நிலவுடைமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஒட்டியே அக இலக்கியங்கள் உருவாயின. எனவேதான் அடியோரும் வினைவலரும் அன்பின் ஐந்திணைக்கு உரியர் அல்லர் என்றும் அவர்கள் அகப்புற ஒழுக்கங்களாகிய கைக்கிளை பெருந்தினைக்கே உரியர் என்றும் அகப்பொருள் வரையறுக்கின்றது, அடியோருக்கும் வினைவலருக்கும் மணஉரிமை, வாரிசுரிமை, சொத்துரிமை முதலான உரிமைகள் மறுக்கப்பட்டமைக்கான அடையாளமே இவ்வகை ஒதுக்கீடு. ஆனால் நாட்டுப்புறக் காதல்பாடல்களில் அடியோரும் வினைவலருமாகிய உழைக்கும் மக்களே (வயற்களத் தொழிலாளர்கள், வண்டியோட்டி, தோட்டத் தொழிலாளி, படகோட்டி முதலான அடித்தள மக்களே) தலைமக்களாக அமைந்தனர். அகப்பாடல்களுக்குரிய எவ்வகைக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெற்றியோ தோல்வியோ, சரியோ தவறோ, முறையோ பிசகோ எதனையும் வெளிப்படையாக வெளிப்படுத்தின நாட்டுப்புறக் காதல்பாடல்கள்.
நாட்டுப்புறக் காதல் பாடல்கள் சங்க அகஇலக்கியங்களைப் போல் அல்லாமல் காதலன் காதலி கணவன் மனைவி கூற்றாகவும் ஊரார் அலர்மொழிப் பாடல்களாகவுமே அமைந்துள்ளன. அகப் பொருளில் இன்றியமையா இடம்பெறும் தோழியை நாட்டுப்புறக் காதல்பாடல்களில் காணமுடியவில்லை.
இவ்வகைக் காதல் பாடல்கள் பொருண்மை அடிப்படையில் ஒரே வகையாக அமைந்தாலும் நிகழ்த்தலின் அடிப்படையில் மூன்று வகைப்படுகின்றன.
1. காதல் உறவுடைய ஆணும் பெண்ணும் காதல் பொருண்மையில்  பாடுவன.
2. காதலர் அல்லாதோர் தொழில் செய்யும்போதோ பொழுது போக்கிற்காகவோ பாடுவன.
3. தொழில் களத்திலோ பிற இடங்களிலோ காதல் நோக்கமின்றி ஆனால் காதல் உணர்வில் பாடுவன.
என்பன அவை.

காதல்பாடல்களின் வகைப்பாடு:

நாட்டுப்புறக் காதல் பாடல்கள் அவற்றின் பொருள் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப் பெறுகின்றன.
1. வருணனைப் பாடல்கள் (தலைவன் தலைவி வருணனை)
2. குறியிடம் கூறல், தூது பற்றிய பாடல்கள்.
3. திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தும் பாடல்கள்.
4. அலர், இற்செறிப்புப் பாடல்கள்.
5. பிரிவுத்துயர் பாடல்கள்.
6. வேசி உறவைப்பழிக்கும் பாடல்கள்.
7. கெடுத்துவிட்டு ஏமாற்றுபவனை ஏசும் பாடல்கள்.
என ஏழாக வகைப்படுத்தலாம்.
அகப்பாடல்களின் ஊற்று நாட்டுப்புறப்பாடல்களே!
நமக்குக் கிடைக்கும் மிகப்பழைய அகப்பாடல்கள் சங்க இலக்கிய அகப்பாடல்களே ஆகும். அவற்றிற்குரிய மரபுகள் தொல்காப்பியத்துள் விளக்கப் பெற்றுள்ளன. சங்கப்பாடல்கள் யாவும் கிரேக்க வீரயுகப் பாக்களைப் போல் வாய்மொழி இலக்கிமாகவே இருந்திருக்கலாம் என்று தாம் ஊகிப்பதாக ஜே. ஆ. மார் 1958-ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய ஆய்வுரையைத் தொடர்ந்து டாக்டர் க. கைலாசபதி சங்க இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்களே என ஆராய்ந்து அறுதியிட்டுக் கூறினார். ''வீரநிலைக் காலத்தில் எழுந்த இலக்கியங்கள் வாய்மொழிப் பாடல் இலக்கியங்களாகவே இருந்திருக்கின்றன” என்ற கைலாசபதியின் கூற்றால், ஒப்பியல் நோக்கில் ஆராயும்போது வீரநிலைக் காலத்தில் எழுந்த சங்க இலக்கியப் பாடல்களும் வாய்மொழி இலக்கியங்களாகவே இருந்திருக்கலாம் என்ற கருத்து வலிமை பெறுகின்றது.

காதல் பாடல்கள் அகப்பாடல்களான வரலாறு:

சங்க அகப்பாடல்களுக்கும் காதல் பாடல்களுக்கும் உள்ள உறவை நிரூபித்து நிலைநாட்டத் தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பா ஒன்றனை நாம் சான்று காட்ட வேண்டியுள்ளது. இந்நூற்பா அகப்பொருள் மரபைச் சுட்டுவதாக விளங்கிக்கொள்வதோடு வேறுஒரு சிறப்புப் பொருளும் இந்நூற்பாவில் பொதிந்துள்ளது,
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டுஎன ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர்    (தொல். பொருள். அகத். 56.)
இந்நூற்பாவிற்கு வழக்கமாக வழங்கிவரும் பொருள் புனைவியலும் உண்மையும் கலந்த நூல்நெறியாகிய அகப்பாடல்கள் கலிப்பா பரிபாடல் என்ற இருவகை யாப்பாலும் பாடப்படும் என்பதாகும்.
இந்நூற்பாவில் வரும் 'புலனெறி" என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளுமிடத்து, தொல்காப்பியர் எண்வகை வனப்பினுள் ஒன்றாகக் கூறிய 'புலன்" என்னும் வனப்பிற்குரிய விளக்கத்தைப் பொருத்திப் பார்த்து, நாடக வழக்கு-உரையாடல், உலகியல் வழக்கு- பாமர மக்கள் மொழி, பாடல் சான்ற- இசை கலந்து நிறைந்த, புலன்நெறி வழக்கு- சேரிமொழி இலக்கியம் எனப் புதுப் பொருள் கண்டு'' உரையாடலாகவும் பாமர மக்கள் மொழியும் கொண்ட இசை கலந்து நிறைந்த சேரிமொழி இலக்கியம் கலிப்பாவாலும் பரிபாட்டாலும் எழுதப்பெறும்" என இந்நூற்பாவை விளக்கலாம்
      நாட்டுப்புறக் காதல் பாடல்களுக்கும் சங்க அகஇலக்கியப் பாடல்களுக்கும் உள்ள உறவினை புலன்நெறி வழக்கு என்ற தொல்காப்பியக் கோட்பாட்டிலிருந்து விளங்கிக் கொள்வதனைப் போலவே நாட்டுப்புறக் காதல் பாடல்களின் உள்ளடக் கங்களை அகப்பாடல்களின் உரிப்பொருளோடு பொருத்திப் பார்த்தும் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
நாட்டுப்புற இலக்கியங்களும் திணைக் கோட்பாடும் என்ற இக்கட்டுரை தொல்காப்பியத் திணைக் கோட்பாட்டின் அங்கமான உரிப்பொருள் அமைப்பு நாட்டுப்புறக் காதல் பாடல்களில் எவ்வாறு ஒத்தும் உறழ்ந்தும் இடம்பெற்றுள்ளன என்பதனைக் களவியல் பாடல்களை மட்டும் களமாகக் கொண்டு ஆய்கின்றது. 

திணைக் கோட்பாடும் நாட்டுப்புறக் காதல் பாடல்களும்:

முதல் நிகழ்ச்சி தலைவன் - தலைவிக்கிடையே நிகழும் சந்திப்பு ஆகும். சந்திப்புக்குப் பிறகு பிரிந்து செல்லும் தலைவன், தலைவியின் எழில் நலத்தில் மயங்கிப் பாங்கனிடம் தன்னுடைய ஏக்கத்தைப் புலப்படுத்துகிறான். தானே அடுத்த சந்திப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு தலைவியிடம் பேச முயல்கிறான். அகக்காதல் மரபுப்படி தலைவனே தன்னுடைய காதலை வெளிப்படுத்தியாக வேண்டும். தலைமக்களின் காதல் களவில் தொடங்குகிறது. பகற்பொழுதினும், இரவுப் பொழுதினும் தலைவன் தலைவியைச் சந்தித்து, களவு மேற்கொள் கின்றான். அவை முறையே பகற்குறி, இரவுக்குறி எனப்படுகின்றன. இப்பகற்குறி, இரவுக்குறிகளுக்கு இடமும், நேரமும் அமைத்துக் கொடுப்பவள் பெரிதும் தலைவியுடைய தோழி ஆவாள்.
தலைவன் களவுக் காலத்தை நீட்டிக்க விரும்புவதையும், திருமணத்தைப் பற்றி நினைக்காததையும் உணர்ந்து, வரைவு கடாவுதலை மேற்கொள்ளத் தூண்டும் பொறுப்பு தோழிக்குரியது. களவு நீடிப்பதால் ஊரில் அலர் எழுகிறது. இதனால் களவு பெற்றோர்க்கும் தெரியவருகிறது. எனவே தலைவியின் பெற்றோர் தலைவியை இற்செறிப்புச் செய்கின்றனர். தலைவன் - தலைவி இருவரின் வதுவையில் நாட்டம் உடையவளான தோழி, உடன்போக்குக்கு ஏற்பாடு செய்கிறாள். தலைவன் தலைவியை அழைத்துச் சென்று தன்னுடைய ஊரில் திருமணம் செய்து கொள்கிறான். அதன்பிறகு கற்புக்காலம் தொடங்குகிறது.
அகப்பாடல்கள் சுட்டும் காதல் நிகழ்ச்சிக் கூறுகளில் பெரும்பாலானவை நாட்டுப்புறக் காதல் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. எத்தகைய மரபுகளைப் பின்பற்றி இக்காதல் நிகழ்ச்சிகள் சங்க அகப்பாடல்களில் பாடப்பட்டுள்ளன என்பதையும், அம்மரபுகள் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் எந்த அளவில் பயின்று வந்துள்ளன என்பதையும் காணும் போக்கில் இனிவரும் பகுதி அமைந்துள்ளது.

சந்திப்பு (இயற்கைப் புணர்ச்சி)

சங்க அகப்பாடல்களில் தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் சந்திப்பு எதிர்பாராத சந்திப்பாகும். தலைவி, தன் தோழியருடன் தினைப்புனம் காக்கச் செல்வாள். அவ்விடத்திற்கு வேட்டையாடும் பொருட்டு, வேட்டை நாய்களோடு, மலையெலாம் சுற்றித்திரிந்து, தலைவன் வந்து சேர்வான். மார்பில் செங்கழுநீரும் தலையில் வெட்சிப்பூவும் உடலில் சந்தனப்பூச்சும் கையில் வில்லும் அம்பும் கொண்டு முன்னிற்கும் தலைவனைக் காணத் தோழியர் நிற்பார். இதற்கிடையில் தலைவனும் தலைவியும் கண்ணொடு கண்ணினை நோக்கிக் காதற்குறிப்புக் கொள்வர்.
நாட்டுப்புறக் காதல் பாடல்களில் இத்தகைய சந்திப்பைக் காண முடிவதில்லை. நாட்டுப்புறக் காதலர்களாகச் சித்தரிக்கப்படுபவர்கள் பெரிதும் மணஉறவுமுறை சார்ந்தவர்களாக உள்ளனர். சிறுவயது முதலே ஒன்றாகப் பழகியவர்கள், பிறப்பு முதலே திருமண நிச்சயத்துடன் பழகி வருபவர்கள்.

இடந்தலைப்பாடு

முதல் சந்திப்பிற்குப் பிறகு காதல் வேட்கையுற்ற தலைவன், மறுநாளும் முதல்நாள் சந்தித்த இடத்திற்குச் சென்று, தலைவியைக் கண்டு பேசமுயலுவதை ‘இடந்தலைப்பாடு;’ என அகப்பாடல்கள் விளக்குகின்றன. இடந்தலைப்பாடு நிகழ்ச்சியில் தலைவனே தலைவியைப் புகழ்ந்துரைப்பான் தலைவியைப் பேசத்தூண்டுவான், தலைவி நாணம் மிக்குறுதல் காரணமாக ஏதும் பேசாது நிற்பாள்.
நாட்டுப்புறக் காதல் பாடல்களிலும் தலைவனும் தலைவியும் சந்தித்துப் பேசமுயலும் நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் இக்காதல் பாடல்களில் பல காதலியே காதலனிடம் பேச விருப்பம் கொள்வதுபோன்று அமைந்துள்ளன. காதலர் இருவரும் சிறுவயது முதல் ஒன்றாகப் பழகிவந்த உரிமைபற்றி இவ்விதப்பாடல்கள் அமைந்திருக்கலாம். மேலும் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் சுட்டப்படும் இத்தகைய பேசமுயலும் நிலை முதல் சந்திப்புக்குப் பிறகு நடப்பதாகக் காட்டப்படவில்லை. தனக்கு மிகவும் பழக்கமுள்ள மாமனிடம் காதலி பேசத்துடிப்பதாகவே பாடல்கள் அமைந்துள்ளன. தன்விருப்பத்தை ஆடவனுக்கு முன்பாகத் தெரிவிக்கும் மரபு பெண்ணுக்கில்லை என்ற தொல்காப்பிய மரபு (தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக்கு இல்லை” தொல்.களவியல் நூ. 28) நாட்டுப்புறக் காதலிக்குக் கிடையாது.

நலம்புனைந்துரைத்தல்

இடந்தலைப்பாட்டின் பின்னர், தலைவன், தலைவியின் எழில் நலத்தில் மயங்கி, காமநோய் கொண்டு, உறக்கமில்லாது தவிப்பான். அக்காலத்துத் தன் ஆருயிர்த் தோழனான பாங்கனிடம் தன்னிலை உரைப்பான். தலைவியுடைய எழில் நலங்களைக் கூறி, அவளுடன் ஒருநாள் உறவு கொண்டாலும் போதும், மேலும் வேறு வாழ்நாள் தேவையே இல்லை எனக் கூறுவான்.  தலைவனது ஆறாக்காதலை உணர்ந்த பாங்கன், தலைவன் சொன்ன இடம்சென்று, முன்னரே வந்து நிற்கும் தலைவியின் அன்பைக் கண்டு வியப்புற்றுத்  தலைவனுக்கும் தலைவிக்குமிடையே கூட்டம் நிகழக் காரணமாவான். இவை மரபை ஒட்டிச் சங்க அகப்பாடல்கள் தெரிவிக்கின்ற நிகழ்ச்சிகளாகும். ஆனாலும் தலைவி வருந்துதல், தலைவனின் எழில்நலத்தில் மயங்கி அவனை வருணித்துக் கிறங்குதல் போன்றவை சங்க அகப்பாடல்களில் இடம் பெறவில்லை.
நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காதலனுக்கு உதவிடப் பாங்கன் என்ற துணையும், காதலிக்கு உதவிடத் தோழி என்ற துணையும் கிடையாது. நாட்டுப்புறக் காதல் பாடல்களில் இடம்பெறும் காதலர்கள் தமது எண்ணங்களை ஒருவருக்கொருவர் தமக்குத் தாமே பரிமாறிக் கொள்பவர்களாக உள்ளனர். காமநோயால் காதலியின் நலங்களை எண்ணித் துயருறும் காதலனைப் போலவே, காதலனை எண்ணிக் காமவேதனையால் வருந்தும் காதலியையும் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காணமுடிகிறது.
“ஒருநாள் புணரப் பெறின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே”  என ஏங்கும் குறுந்தொகைத் தலைவனின் காதல் ஏக்கத்தைச் “செத்தாலும் செத்திடுவேன் சீமாட்டி மடிமீது” என்று ஏங்குகிற நாட்டுப்புறக் காதலனின் எண்ணத்தில் காணமுடிகிறது. நாட்டுப்புறக் காதலன், தன்னுடைய காதலியை உலகத்திலுள்ள வேறெதனையும்விடச் சிறப்பானவளாகக் கருதுகின்றான். உலகப்பொருள்கள் மட்டுமல்லாது தெய்வத்தை விடவும் தன் காதலியையே உயர்வானவளாகவும் கருதுகிறான் அவன். நாட்டுப்புறக் காதலியும் தன் காதலனின் உருவத் தோற்றத்தை நினைத்து அவனை மறக்க முடியாமல் அவதிப்படுவதை நாட்டுப்புறக் காதல் பாடல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிலை போடுவதால் சிவந்து காணப்படும் தலைவனின் வாயழகையும், மை இட்டதுபோல் கறுத்திருக்கும் கண்ணழகையும் ஆலிலைபோல் தோற்றமளிக்கக் கூடிய மேல் வகிடையும் வேப்பிலைபோல் தோன்றுகின்ற புருவ அழகையும் எண்ணிக் காதலி, காதலனை மறக்க மனம் வராமல் மயங்குவதையும், எழுத்தாணிச் சட்டம்போல வளையும் காதலனின் மேனி அழகில் காதலியின் மனம் ஒன்றியிருப்பதையும் நாட்டுப்புறக் காதல் பாடல்கள் விளக்குகின்றன.
சங்க அகப்பாடல்களில் தலைவனுக்கே உரியதாகப் போற்றப்படும் நலம் புனைந்துரைக்கும் பண்பு நாட்டுப்புறக் காதல் பாடல்களில் தலைவிக்கும் உரியதாகப் பேசப்படுகிறது.

குறியிடம்

சங்க இலக்கிய அகப்பாடல் மரபுப்படி, காதல் வயப்பட்ட தலைவனும் தலைவியும் அடிக்கடி சந்தித்துக் களவு மேற்கொள்வர். தலைவனும் தலைவியும் சந்தித்துக் களவு புரிதற்குத் தோழி உதவியாக இருப்பாள். இக்களவொழுக்கம் பகற்பொழுதிலும் இரவுப்பொழுதிலும் நடைபெறும். பகற்பொழுதைய களவு பகற்குறி எனவும், இரவுப் பொழுதைய களவு இரவுக்குறி எனவும் அழைக்கப் பெறும்.

பகற்குறி

தொல்காப்பியர் பகற்குறியின் இடமாக ஊரின் புறப்பகுதியை மொழிகிறார். வீட்டைவிட்டு நெடுந்தொலைவில் பகற்குறி நடைபெறும். பெரும்பாலும் தலைவி காவல்காக்கும் தினைப்புனத்தை ஒட்டிய இடங்களில் பகற்குறி நேரலாம். ஒரு பாடலில் தோழி ஒருத்தி, தானும் தலைவியும் கூந்தலுக்கு எருமண் கொணரும் பொருட்டு, ஊருக்கு அருகேயுள்ள கான்யாற்றுக்கு வருவதாகவும், அவ்வாற்றங் கரையிலுள்ள பொழிலில் தலைவியைச் சந்திக்கத் தலைவனை வருமாறும் பகற்குறி அமைத்துக் கொடுக்கிறாள். தினைப்புனத்தில் சந்திக்க முடியாது. தினைக்கதிர்கள் முற்றி விளைந்ததனால், வேட்டுவர் கொய்துசெல்ல வருவர், ஆதலின் புனங்காவலைக் காரணமாக் கொண்டு தலைவனோடு பேசுதல் இனி முடியாத காரியம் என்று தலைவன் காதில் விழுமாறு தோழி கூறுகிறாள். இத்தகைய நிலையில் பகற்குறியில் தலைவனைச் சந்திக்க நாணமடைந் திருப்பதாகத் தோழி தலைவனிடம் உரைப்பதை, அகநானூற்றுப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. பகற்குறிக்குத் தடை ஏற்பட்;ட பிறகு, இரவுக்குறியில் தலைவியைத் சந்திக்கத் தலைவனிடம் வேண்டுவாள் தோழி.

இரவுக்குறி

இரவுக்குறி நிகழும் இடம் வீட்டிற்கு அருகில் இருக்கும். வீட்டிலுள்ளோர் பேசுவது காதலர்க்குக் கேட்கும் தூரத்தில் இரவுக்குறி நடைபெறும். இதனைத் தொல்காப்பியர்.
            இரவுக்குறியே இல்லத் துள்ளும்
            மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே
            மனையகம் புகாஅக் காலை யான
என்று வரையறுக்கிறார்.
முதலில் வீட்டினருக்குப் பயந்து வீட்டின் புறத்தே சந்தித்துப் பழகியவர்கள், நாளடைவில் பயம் தெளிந்து வீட்டினுள்ளும் சென்று பழகத் தலைப்படுவர். அகப்பாடல்களில் காணப்படும் தலைவனும் தலைவியும் வேறுவேறு ஊரினர் ஆதலால் இரவுக்குறிக்காகத் தலைவியின் ஊருக்கு வரும் தலைவனை, அவ்வூர் மக்கள் எவரும் அறிதல் இயலாது எனத் தலைவனுக்குத் துணிவு கூறுகிறாள் தோழி. ஆயினும் இரவுக்குறிச் சந்திப்பைத் துன்பங்கள் நிறைந்த சந்திப்பாக விளக்குகின்றன அகப்பாடல்கள். தலைவன் தன் ஊர்விட்டு, தலைவியின் ஊர் வரவேண்டியுள்ளது. அவ்வாறு வரும்வழியில் ஏற்படும் பல இடர்ப்பாடுகளைப் பாடல்கள் விளக்குகின்றன.

நாட்டுப்புறக் காதல் பாடல்களில் குறியிடம்

நாட்டுப்புறக் காதல் பாடல்களும் குறியிடம் பற்றிக் கூறுகின்றன. நாட்டுப்புறக் காதலர்களிடையேயும் பகற்குறியும் இரவுக்குறியும் நிகழ்கின்றன. ஆனால் இங்குக் காதலன்- காதலியைச் சேர்த்து வைக்கத் தோழி என்பவள் இல்லை. இருவரும் தங்களுக்குள் குறியிடத்தைக் குறிப்பிட்டுக் கொள்வர். பெரிதும் காதலியே காதலனுக்குக் குறியிடம் சுட்டுவாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகப்பாடல்களில் பகற்குறி, தலைவி காவல் காக்கும் தினைப்புனத்தை ஒட்டிய இடங்களில் நிகழும். நாட்டுப்புறக் காதல் பாடல்களில் பகற்குறி, காதலி உழவுத்தொழில் தொடர்பான நாற்றுநடுதல், களை பிடுங்குதல், அறுவடை போன்ற வேலைகளுக்குச் செல்லும்போது வயற்புனத்தை ஒட்டிய இடங்களில் நடைபெறும். கோயில்களுக்குள்ளும் காதலனும் காதலியும் பகலில் சந்தித்துக் கொள்வதுண்டு. ஆயின் அங்குக் களவு நிகழுமா? என்பது ஐயத்திற்குரியது. காதலி வயல்வேலைக்குச் செல்லும்போது காதலன் அவளிடம், தாங்கள் பகலில் சந்திக்க வேண்டிய இடத்தைக் கூறும்படி கோருவதுண்டு. காதலன் கோயில் குளத்தில் வந்து தன்னைச் சந்திக்கும்படி கூறிச் செல்வதும் காதலி, காதலனைச் சவுக்குத் தோப்புக்கு வரச்சொல்வதாகவும் நாட்டுப்புறக் காதல் பாடல்கள் தெரிவிக்கின்றன. பகற்குறியில் காதலனும் காதலியும் சந்தித்துக் கொள்ளும்போது, யாருக்கும் ஐயப்பாடு எழாதிருப்பதற்காக அவர்கள் ஏதேனும் காரணத்திற்காகச் செல்வது போல் பாவனை செய்வர். விறகு திரட்டுவதற்காகக் காதலியை வரச்சொல்லியும், காளை ஒன்று தப்பிச் சென்றதைத் தேடி நான் வருவதாகவும் பகற்குறிக்கான இடத்தைக் குறிப்பிடுகின்றான் காதலன். பாக்கை நாவில் இட்டு வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தேடும் பாவனையில் தன்னை வந்து சந்திக்கும்படி, காதலி காதலனிடம் கூறுகிறாள். இவ்வாறு ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டுக் குறியிடம் கூறுவதாக அமையும் நாட்டுப்புறக் காதல் பாடல்களைப் போன்று அகப்பாடல்களில் காணமுடிவதில்லை.
நாட்டுப்புறக் காதல் பாடல்களில் சுட்டப்படும் இரவுக்குறி காதலியின் வீட்டருகிலேயே நடப்பதாக உள்ளதைக் காணமுடிகிறது. வீட்டிற்குள்ளும் இரவுக்குறி நிகழ்ந்ததை நாட்டுப்புறக் காதல் பாடல் சுட்டுகிறது. களவு முடிந்து, காதலன் திரும்பும் போது ஓசைகேட்டு விழித்துக்கொண்ட காதலியின் தந்தை, மகளிடம் காரணத்தை வினவுகிறார். காதலி காரம் பசுவும் கன்றும் கதறிக்கொண்டு ஓடக்கண்டேன் என்று கூறிச் சமாளித்து விடுகிறாள்.
நாட்டுப்புறக் காதல் பாடல்களிலும், இரவுக்குறிக்காக வரும் தலைவனை இடர்ப்படுத்தும் வழியருமைகள் சொல்லப்படுகின்றன. ஆற்றிலே ஆள் இறங்காத அளவுக்கு வேகத்துடன் தண்ணீர் வர, அவற்றைப் பொருட்படு;த்தாது நீந்திக் காதலன் வருவதாக நாட்டுப்புறக் காதல் பாடல் ஒன்று சித்தரிக்கிறது. நடுயாமத்தில் கற்களை வீசிப் பயப்படுத்தும் கன்னிமார்கள் நடமாடும் வழியைக் கடந்து காதலன் வருவதாகவும் நாட்டுப்புறக் காதல் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.
நாட்டுப்புறக் காதல் பாடல்களில் பகற்குறி, இரவுக்குறிகளை அமைத்துக் கொடுக்கத் தோழி என்கிற பாத்திரம் கிடையாது. காதலன் காதலியே குறியிடங்களைச் சுட்டிக் கொள்கின்றனர். ஊரார் தங்கள் மேல் ஐயம் கொள்ளா திருப்பதற்காக ஏதேனும் காரணங்களுடன், காதலர்கள் குறியிடங்களில் சந்தித்துக் கொள்கின்றனர்.

அலர்

தலைவனுடைய ஆர்வம் களவை நீட்டிப்பதிலேயே இருக்கும். திருமணத்தைப் பற்றிப் பெரிதும் தலைவன் நாட்டம் கொள்ளவில்லை. களவு நீடிப்பதால், ஊரார் இதைப் பற்றி முணுமுணுத்துப் பேசத் தொடங்குவர். இவ்வாறு களவைப்பற்றி ஊரில் எழும் முணுமுணுப்பே ‘அலர்’ என அகப்பாடல்களில் சுட்டப்படுகிறது. இங்கு ஊரார் எனக் குறிக்கப்படுவது ஊர்ப்பெண்கள் ஆவர். “ஐந்திணை இலக்கியத்துக்கு அழகு செய்பவர் உள்ளுர்ப் பெண்டுகள். அவரின்றேல் அவ்விலக்கியம் உப்பின்றியிருக்கும்” என்று வ.சுப. மாணிக்கம் குறிப்பிடுகிறார்.
ஊரார் தூற்றும் அலரால் நன்மைகள் உண்டு. களவைத் தடைசெய்து திருமணத்திற்கு வழிகோலுகிறது அலர். அலர் எழுவதால் தலைவி இற்செறிக்கப்படுகிறாள். இதனால் ஊராரைப் பற்றித் தலைவி ஆத்திரம் கொண்டாலும் தலைவனோடு தன்னை இணைத்துப் பேசித் திருமணத்திற்கு வழிவகுத்த ஊராரை அவள் போற்றவும் செய்கிறாள் என்பதை அகப்பாடல்கள் உணர்த்துகின்றன. அலர் ஏற்பட்டுப் பரவுகின்ற போதும் அவ்வலரைப் பற்றிக் கவலை கொள்ளாது. களவின்பத்திலேயே நாட்டம் உடைய தலைவனை அகப்பாடல் உணர்த்துகிறது. இச்சமயத்தில் தலைவனைத் தோழி இடித்துரைத்துத் திருமணத்திற்கு ஏற்ப்பாடு செய்யச் சொல்கிறாள்.
அலரைப் பொருட்படுத்தாத காதலனை நாட்டுப்புறக் காதல் பாடல்களிலும் காணமுடிகிறது. ஆனால் நாட்டுப்புறக் காதலன், களவுநாட்டம் உடையவனாய் அலர் எழுகின்ற சமயங்களில் காட்டப்படவில்லை. ஆயினும் களவு நாட்டம் உடைய அவன் அலர் பரவிவருகின்ற நேரத்தில், காதலைப் பற்றிய மதிப்பு உடையவனாகக் காணப்படுகிறான். ஊரார் பேசிவரும் அலரினால் பழிவந்து சேர்ந்தாலும், கழுவில் ஏற்றினாலும் காதலியின் முகத்தைக் காணாமல் இருக்கப் போவதில்லை என்று நாட்டு;ப்புறக் காதலன் சூளுரைக்கின்றான். தன்மனமும் காதலிமனமும் ஒன்றுபட்டிருந்தால் ஊரார் தம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்று காதலிக்குத் தேறுதல் மொழி கூறும் காதலனையும் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காணமுடிகிறது.
அகத்திணைப் பாடல்களில் அலர் காரணமாகத் தலைவி துன்பமும் மகிழ்ச்சியும் அடைவதாக முன்னர்க் கூறப்பட்டது. ஆனால் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காணப்படும் காதலி அலர் காரணமாகப் பெரிதும் துன்பமே அடைவதைக் காணமுடிகிறது. தாங்கள் கூடியதில் எந்தக் குற்றமும் இல்லை என்றும், ஊரார் வீணாகப் பேசித் தன் மனத்தை நோகச் செய்கின்றனர் என்றும் காதலி வேதனையுறுகிறாள். கதையளக்கும் ஊர்ப்பெண்கள் ‘நாய்கள்’ எனச் சாடுகிறாள் காதலி. அவ்வாறு தேவையின்றிப் பேசிவரும் அவர்களைச் செருப்பால் அடிக்க வேண்டுமென்று தன் மனத்திற்குள் வைது கொள்வதையும் நாட்டுப்புறப் பாடலில் காணமுடிகிறது.
அகத்திணைப் பாடல்களில் தலைவனும் தலைவியும் களவை நீட்டிக்காது, விரைவில் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற பயன்பாட்டு எண்ணத்துடன் அலர் பேசப்படுகிறது. திருமண நோக்கம் காரணமாக இருப்பதால் அலர் எழுவதற்குத் தலைவி மகிழ்ச்சி அடைகிறாள். ஆனால் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் சுட்டப்படுகின்ற அலர் திருமண நோக்கம் கொண்டிருக்கவில்லை எனத் தெரிகிறது. காதலன் - காதலியுடைய களவொழுக்கம் தவறானதாகக் கருதப்பட்டு அவர்களை ஊரார் குறை கூறுவதாகவே காதலி நினைப்பதுடன், அலர் எழுப்புகின்ற சமுதாயத்தின் மேல் அவள் ஆத்திரம் கொள்கிறாள்.

இற்செறிப்பு

அலர் மிகுகின்ற காரணத்தால் கவலையுள்ள தலைவியின் தாய், தலைவியை வெளியில் சென்று தலைவனைச் சந்திக்க முடியாமல் வீட்டினுள்ளே இருத்தி வைப்பாள். இற்செறிப்பைப் பற்றி விளக்கக் கூடிய நேரடியான பாடல்கள் சங்க அகத்திணைப் பாடல்களில் காணப்படவில்லை. பகற்குறியிலும் இரவுக்குறியிலும் தலைவியைச் சந்திக்க வரும் தலைவனிடம் தோழி, அலர் காரணமாகத் தலைவி இற்செறிக்கப்பட்டுள்ளாள் என்று உணர்த்துவதாகப் பாடல்கள் உள்ளன. இரவுக்குறியில் தலைவியைச் சந்திக்க வந்து அவளைக் காணமுடியாமல் திரும்பிச் சென்ற காதலனிடம் அடுத்தமுறை அவனைச் சந்திக்கத் தோழி, தன் தலைக்கொண்டை சிதைய, பீலிகளும் சாய, வலையிடத்தே அகப்பட்ட மயில் வருந்துவதைப் போல் தலைவியும் இற்சிறைப்பட்டு வருந்திக் கிடக்கிறாள்’ என்று கூறுவதைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.55 குறுந்தொகைப் பாடல் மற்றொன்றில் தோழி, இற்செறிப்பின் கொடுமையைத் தலைவியிடம் கூறுவது போலத் தலைவனும் கேட்டு அறியுமாறு உரைக்கிறாள். இற்செறிப்பைக் குறித்துத் தலைவன் அடைந்த உணர்ச்சிகளைப் பற்றி விவரிக்கக் கூடிய பாடல்கள் அகத்திணை இலக்கியத்தில் இடம்பெறவில்லை.
நாட்டுப்புறக் காதல் பாடல்களில் இற்செறிப்பின் கொடுமைகளைப் பற்றிய பாடல்கள் நிறைந்திருப்பதைக் காணமுடிகிறது. அலர் காரணமாக மகள் மேல் கோபம் கொண்ட தாய், மகள் ஒப்பனை செய்து கொண்டு வெளியே கிளம்புவதைக் கண்டு திட்டுகிறாள். வீட்டை விட்டு வெளியே சென்றால் மகளை வெட்டிப்போட்டு விடுவதாக மிரட்டுவதையும் நாட்டுப்புறக் காதல் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. காதலியுடைய தந்தை மகளை அடித்துத் துன்புறுத்தியதையும் நாட்டுப்புறக் காதல் பாடல்வழித் தெரிந்து கொள்ள முடிகிறது. காதலி இற்செறிக்கப்பட்டதை அறிந்து காதலன் வாடுவதையும் நாட்டுப்புறப் பாடல்கள் சித்தரிக்கின்றன. பெற்றோரின் இற்செறிப்பினால் பல கொடுமைகளை அனுபவித்தும், எப்படியேனும் காதலனை அடைய உறுதியேற்கும் காதலியின் துணிச்சலையும் நாட்டுப்புறக் காதல் பாடல்வழி தெரிந்துகொள்ள முடிகிறது.
இற்செறிப்பைப் பற்றி விவரித்தல், அகத்திணைக் காதல் ஒழுக்கத்திற்கு இழுக்காகும் எனக்கருதி, அத்துறையைப் புலவர்கள் பாடாது விடுத்திருக்கலாம். சமுதாய நடைமுறைகளை ஒளிவுமறைவின்றிச் சித்தரிக்கின்ற காரணத்தால் நாட்டுப்புறக்காதல் பாடல்கள் இற்செறிப்பினால் காதலி படும் துன்பங்களையும் விளக்கியுள்ளன எனக் கருதமுடிகிறது.

நொதுமலர் வரைவு

தலைவியின் பெற்றோர், அவளுடைய காதல் ஒழுக்கம் அறியாது, மணப்பருவம் காரணமாக மணம் பேச முயல்வர். ஆண்வீட்டார், பெண்வீட்டாரை அணுகிப் பேசுதலை மேற்கொள்வர். இந்நிகழ்ச்சிகள் அகப்பாடல்களில் ‘நொதுமலர் வரைவு’ என்னும் துறையில் சுட்டப்படுகின்றன.
அயலார் மணம் பேசவரும் காலகட்டம் களவொழுக்கம் ஒழுகும் தலைவியைப் பொறுத்தவரையிலும், இற்செறிப்புக் காலத்தைவிடத் துன்பமான சூழ்நிலை கொண்டதாகும். தலைவி தோழியிடம் கூறித் தலைவனுக்கு நொதுமலர் வரைவைப் பற்றித் தெரிவிக்கச் சொல்லுவாள். அகத்திணைப் பாடல்களில் தோழி படைக்கப்பட்டதன் நோக்கங்களுள் இதுவும் ஒன்று. எக்காலத்தும் அவள், தலைவனிடம் திருமணத்தைப் பற்றியேதான் குறிப்பிட்டுக் கொண்டிருப்பாள். நொதுமலர் வரைவுக் காலத்தில் தலைவனிடம் தலைவி கூறவில்லையாயினும் தோழி அப்பணியை மேற்கொள்வாள். நொதுமலர் வரைவுக் காலத்தில் தோழி தலைவனிடத்தில், தலைவியின் நிலைபற்றிக் குறிப்பாக உணர்த்துவதாக ஐங்குறுநூற்றுப் பாடலொன்று சுட்டுகிறது. “கடலிற் பிடித்து வரும் வளமான மீன்களை இரையாகக் கொள்ளக் காத்திருக்கும் கிழநாரைகள் மிகுந்த தொண்டிப் பட்டினத்திற்கு ஒப்பாகத் தலைவி உள்ளாள்” என்று குறிப்புமொழியாகத் தோழி உரைக்கிறாள். எனவே கிழவனாகிய ஒருவன் தன் காதலியை மணம்பேச முனைவதை அறிந்து தலைவன் வரைவுமுடுக்கம் கொள்வான்.
அகத்திணைப் பாடல்களில் சுட்டப்படும் ‘நொதுமலர் வரைவு’ நிகழ்ச்சிகளை, நாட்டுப்புறக் காதல் பாடல்களைப் பொறுத்தவரையில், ‘பெண் கேட்டல்’ எனும் தலைப்பில் அடக்கலாம். நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காதலியே, காதலனிடம் தன்னைப் பெண் கேட்கத் தன் வீட்டிற்கு வருமாறு தூண்டுகிறாள். நாலு காசு சம்பாதித்துக் கொண்டு வந்து மாமாவைப் பெண்கேட்டு மணம் முடிக்குமாறு காதலனிடம் வேண்டுவதை ஒருபாடல் விளக்குகிறது. பணம் வைத்திருந்தாலும் கூடத் தன் தாய்- தகப்பனிடம் காதலன் எதிர்வார்த்தை பேசாமலிருந்தால் தன்னை அவனுக்கே மணம்முடித்து வைப்பார்களென்று அறிவுரை கூறுவதை ஒரு பாடல்வழி தெரிந்துகொள்ள முடிகிறது.
பெண் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியில் பெண்ணுடைய அப்பா, அண்ணன், தம்பி, ஆகிய அனைவரும் மறுத்துரைக்க, தாய்மட்டும் ஒப்புதல் தெரிவித்து வந்தவர்களை அமர வைத்ததை விளக்கும் நாட்டுப்புறப் பாடல் ஒன்றின் வழி காதல் வயப்படாத பெண்களின் திருமணம் குறித்தும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன என்பதை அறியமுடிகிறது.
‘நொதுமலர் வரைவுத்’ துறை அகத்திணைப் பாடல்களில், தலைவி காதல் வயப்பட்டதை அறியாத பெற்றோர், மகளுக்கு மணம்பேச முனைகின்றனர். தோழி தலைவனிடம் இது பற்றிக் கூறித் தலைவியை விரைவில் மணந்து கொள்ளத் தூண்டுகிறாள். நாட்டுப்புறக் காதல் பாடல்களில் பெண்கேட்டல் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. தலைவியே தலைவனிடம் தன்னை மணம் பேச வருமாறு வேண்டுகிறாள். காதல் வயப்படாத பெண்களுக்கும் திருமணம் நிச்சயிப்பதற்காகப் பெண் கேட்டல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை நாட்டுப்புறக் காதல் பாடல்கள் விளக்குகின்றன.

உடன்போக்கு

ஊரில் அலர் மிகுந்து, தலைவி இற்செறிக்கப்பட்ட காரணத்தினால் தோழி தலைவனிடம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுவாள். தலைவன் உடன்போக்குச் செல்வதே ஏற்றது என்பான். தோழியின் உதவியினால், தலைவன் தலைவியைத் தன்னூர்க்கு அழைத்துச்சென்று மணம் புரிந்து கொள்வான். தலைவனுடன் தலைவி இசைந்து செல்லுதலே ‘உடன்போக்கு’ என அகத்திணைப் பாடல்கள் சுட்டுகின்றன.
“திருமணம் என்பது தலைவனுந் தலைவியுந் தமக்குள் மறைவாய்க் காதலித்து வந்தமையை நிகழ்ச்சி ஒன்றன் வழியாக எல்லார்க்குந் தெரியச் செய்தலாகும். அவ்வாறே உடன்போக்கும் இன்னானை இன்னாள் காதலித்தாள் என்பதை வெளிப்படுத்து கின்றமையினால் இஃதும் ஒருவகைத் திருமணமே யாகும்” என விளக்குகிறார் இளவழகனார். எனவே சங்ககாலத்தில் உடன்போக்கு நிகழ்ச்சி சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தது என்பதைக் கருதமுடிகிறது. தன் மகள் உடன்போக்குச் சென்றதை அறிந்த அன்னை, அவள் முன்பே தன்னுடைய காதலை அறிவித்திருந்தால் திருமணம் செய்து வைத்திருக்கலாமே என ஏங்குவதாக ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. அத்தாய், மகள் உடன்போக்குச் சென்றதைக் குறித்து இழிவடைய வில்லை. தன்னிடம் தம் காதலை வெளிப்படுத்த வில்லையே என நினைந்தே வாடுகிறாள். களவு நாடகத்தில் இறுதிக் காட்சியாக உடன்போக்கைக் குறிப்பிடுகிறார் வ.சுப.மாணிக்கம்.
அகத்திணைப் பாடல்களில் சுட்டப்படும் தலைவனும் தலைவியும் வேறுவேறு ஊரைச் சேர்ந்தவர்கள். தலைவன், தலைவியின் இருப்பிடத்திற்கு வந்து களவு நிகழ்த்துவான். அலர், இற்செறிப்புப் போன்றவை ஏற்பட்டபின் தலைவியைத் தன்னூர்க்கு அழைத்துச் சென்று மணம்முடித்துக் கொள்வான். ஆனால் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் வரும் காதலர்கள் ஒரே ஊரினர். மணஉறவு முறையினர். மணஉறவு இருந்தாலும் களவு ஒழுக்கத்தில் ஈடுபடுவதால் அலர் எழுகிறது. காதலி இற்செறிக்கப் படுகிறாள். இதனால் திருமணம் செய்து கொள்ளுதற் பொருட்டுக் காதலனும் காதலியும் வேறு (புதிய) ஊருக்குச் சென்றுவிடுகின்றனர். நாட்டுப்புறத்தில் உடன்போக்கு நிகழ்ச்சியை ‘ஓடிப்போதல்’, ‘இழுத்துக்கொண்டு போதல்’ போன்ற தொடர்களால் சுட்டுகின்றனர். சங்கப்பாடல்களில் உடன்போக்கு ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சியாகச் சுட்டப்படுகிறது. ஆனால் நாட்டுப்புறப் பாடல்களில் உடன்போக்கு இழிவானதாகக் கருதப்படுகிறது.

அறத்தொடு நிற்றல்.

‘அறத்தொடு நிற்றல்’ என்பது தலைவியின் களவொழுக்கத்தை முறையாகப் பெற்றோர்க்குத் தெரியப்படுத்தலாகும். அறத்தொடு நிற்றல் நிகழ்ந்தால் உடன்போக்கு நிகழ வாய்ப்பில்லை. அறத்தொடு நிற்பதனால் பெற்றோர் உண்மை யறிந்து காதலர்க்கு மணம் நிகழ்த்தி வைப்பர். அறத்தொடு நிற்கும் நிலை ஒருவித வரையறையுடன் நிகழும். தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தைக்கும் எனத் தலைவியின் களவொழுக்கச் செய்தி முறையே வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது இலக்கண விதி. ஆனால் இந்நிலையைத் தலைவியின் விருப்பம் இல்லாமல் தோழி தொடங்க முடியாது. நாட்டுப்புறக் காதல் பாடல்களில் அறத்தொடு நிற்றல் நிலை பற்றிய பாடல்கள் மிகுதியாகக் காணப்படவில்லை. ஒரேயொரு பாடல் தாய்க்கும் மகளுக்கும் நிகழும் உரையாடலாக, அறத்தோடு நிற்றல் நிலையைக் குறிப்பதாக அமைந்துள்ளது. மகளின் உடல்மாற்றத்தையும், முகவாட்டத்தையும் கண்டு தாய் மகளிடம் வினவும்போது, அத்தை மகன் வாடைபட்டுச் சூலானதை அன்னைக்குத் தெரிவிக்கிறாள் மகள். இவ்வாறு அமைந்த பாடலை அறத்தொடு நிற்றல் நிலைக்கு உதாரணமாகக் கொள்ளலாம். அகப்பாடல்கள் போலல்லாமல் நாட்டுப்புற அறத்தொடு நிற்றல் மரபு நேரே தாய் -மகள் இருவரிடையே நிகழ்வதாக அமைகிறது.
நாட்டுப்புறக் காதல் பாடல்களில் களவியல் என்ற கைகோளில் அமையும் பாடல்களின் திணைமரபினை அவற்றின் உள்ளடக்க உரிப்பொருள் அடிப்படையில் மேலே ஒப்பிட்டுப் பார்த்தோம். சங்க இலக்கியத் தொல்காப்பியத் திணைக் கோட்பாடுகளிலிருந்து நாட்டுப்புறக் காதல் பாடல்கள் ஒத்தும் உறழ்ந்தும் அமைந்துள்ளமை கண்கூடு.
தொல்காப்பியத் திணைக் கோட்பாடு என்பது அகப்பாடல்களுக்கான ஓர் இலக்கியக் கோட்பாடு. சங்க இலக்கியங்களிலேயே அகப் பாடல்கள் மரபுகள் கலித்தொகையிலும் பரிபாடலிலும் மீறப்பட்டுள்ளன. என்றாலும் காலந்தோறும் அகப்பாடல்கள் மரபைப் போற்றியோ மீறியோ ஒரு தொடர்ச்சியான இலக்கிய ஆக்க மரபாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சங்க இலக்கியத்தில் அதிகம் பாடப்படாத நிலமில்லாத் திணைகளான கைக்கிளை பெருந்திணை ஆகிய திணைகளில் கைக்கிளைத் திணை பக்தி இலக்கியங்களிலும் சிற்றிலக்கியங் களிலும் பாடுபொருளாயின. தற்காலத் தமிழ்க் கவிதைகளில் பெருந்திணைப் பாடல்கள் பெருவழக்காய் உள்ளன. எனவே காலத்திற்கேற்ற பாடுபொருள் மாற்றங்கள் தமிழின் திணைக் கோட்பாட்டிலும் தவிர்க்க முடியாதனவாகி விட்டன. ஆனால் நாட்டுப்புற இலக்கியங்களோ கைக்கிளைப் பெருந்திணைப் பாடல்களை ஒருபோதும் ஒதுக்கியதில்லை. அடியோரும் வினைவலரும் அங்கே பாட்டுடைத் தலைவர்களாவர். சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறுவதும் இங்கே இயல்பாகும். பாங்கன் பாங்கியர்களுக்கு இங்கே இடமில்லை. தலைமக்களே நேருக்கு நேர் உரையாடி உறவாடி மகிழ்வது இங்கே இயல்பு. அகப்பாடல்களில் அதிகம் பேசாத தலைவி இங்கே நிறையப் பேசுவாள், சண்டையிடுவாள், சாபம் விடுவாள், எதிர்க்குரல் எழுப்புவாள். நாட்டுப்புறக் காதல் பாடல்கள் கோட்பாடுகளைக் கடந்த மக்கள் இலக்கியம், இதுவே நாட்டுப்புற இலக்கியங்களின் இலக்கியக் கோட்பாடு.

nagailango@gmail.com




மகாத்மா! மன்னிப்பாயா?

-முனைவர் நா.இளங்கோ

எத்தனை பெரிய அரங்கம்
வரலாறு காணாத நிகழ்ச்சி

இன்றைய சூழலில்
தேவைப்படும் தலைவன் யார்?
காந்தியா! கோட்சேவா!

காந்தியின் மத நல்இணக்கம்
இந்து முஸ்லீம் ஒற்றுமை
அகிம்சை சகிப்புணர்வு

கோட்சேவின் தேசபக்தி
அகண்ட இந்துதேசக் கனவு
இரத்தக் களரி பலி தியாகம்

எது இன்றைய தேவை?
யார் நமது தலைவன்?
காந்தியா! கோட்சேவா!

நிரம்பி வழிந்த அரங்கில்
நூற்று இருபதைந்து கோடிக்கும் மேலாக
இருசெவி திறந்து விழிக்கும்
இந்தியக் குடிமகன்கள்

காந்தி அணியில் மூவர்
கோட்சே அணிக்கு நால்வர்
நடுவர் எங்கே?
நடுவரும் கேட்சே அணியில்!

விவாத நிறைவில்
நடுவர்
தம் இருக்கைக்கு விரைந்து
நியாயத் தீர்ப்பு வழங்குவார்

நடுவர் தீர்ப்பே இறுதியானது
தீர்ப்பை விமர்சிப்பது
தேச விரோதம்!

விவாதம் முடிந்து
வீடு திரும்புகையில்
எல்லோரும்
தேச விரோதிகளாய்
கனத்த மௌனம் சுமந்து

மகாத்மா!
மன்னிப்பாயா?

எல்லையில்லாத் தெய்வமே! சாவாய்! சாவாய்! - ஆசிபா பாலியல் படுகொலை



மலையருவி (06-05-2016)

இருட்டுக் கருவறைக்குள்
இறுகிய முகம்காட்டும்
முரட்டுக் கடவுளே!
முகமறியாச் சிறுமியின்
கதறல் கேட்கலையா?
கண்களும் குருடாச்சா?
இதுஎன்ன புதுப்படையல்
என்றே மயங்கினையோ

படையல் பார்த்திருப்பாய்
பலகாரம் பார்த்திருப்பாய்
குருதிக் கொப்பளிக்க
உயர்ப்பலிகள் பார்த்திருப்பாய்

பக்திப் பரவசத்தில்
தன்தலையைத் துண்டாடிக்
காணிக்கை வைத்த அந்த
நவகண்டம் பார்த்திருப்பாய்

நாலைந்து மதவெறியர்
நாட்கணக்கில் வைத்திருந்து..
சிறுமி ஒருத்தியின்
சீரழிக்கப் பார்த்தாயே!
உறுப்புச் சிதைந்து
உடைப்பெடுத்த செங்குருதி
உன் உதட்டில் தெறிக்கலையா?
இல்லை.. இதுஎன்ன புதுப்படையல்
என்றே மயங்கினையோ

கடவுளர் பெயராலே
காமவெறிக் களியாட்டம்
பிஞ்சுக் குழந்தையின்
கதறல் கேட்கலையா?
கண்களும் குருடாச்சா?

ஊதுவத்தி சாம்பிராணி
எல்லாமும் பிணவாடை
எடுத்த வைத்த குங்குமத்தில்
இரத்தம் கசிகிறது

குதிரை மேய்த்திருந்த
குழந்தை உடல்சிதைந்து
படையல் வைத்தவர்கள்
பாதகத்தை ஏற்பாயா?

பழியறியாச் சிறுமிஉடல்
சிதைந்து உருக்குலைய
சீறிச் சினந்தெழுந்து
சின்னவளைக் காக்காமல்

சிலையாய் அமர்ந்திருந்து
சிறுமையினை ஏற்றாயா?
கையிலுள்ள ஆயதங்கள்
முனைமழுங்கிப் போயினவா?

சூலம் கொடியெடுத்து
தேவி பக்தர்களும்
தேசத்தின் பக்தர்களும்
சாதி மதங்கடந்த
நல்லிணக்கத் தோழர்களைச்
சாய்த்திடப் பார்க்கின்றார்
சவக்குழிக்கு அனுப்புகின்றார்

எல்லாம் அறிந்தவளே!
எல்லையில்லாத் தெய்வமே
மதவெறி மாயத்து
மனிதம் காப்பாயா?

இரத்தப் படையலும்
கன்னியின் குருதியும்
காமக்களிப்புமே உன்னை!
களிப்படையச் செய்யுமென்றால்

எல்லையில்லாத் தெய்வமே!
நீ போவாய்! போவாய்!!
இருந்திடிலோ இவ்வுலகில்
சாயாய்! சாவாய்!

அருட்கவி அதிரை தாஹாவின் இலக்கிய இணையர் காவியம் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ்த்துறைத் தலைவர்
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி
புதுச்சேரி- 605008

அருட்கவி அதிரை தாஹா
அருட்கவி அதிரை தாஹா, இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மரபுக் கவிஞர்களில் ஒருவர்; தீந்தமிழையும் தீன் தமிழையும் தம்மிரு கண்களாகப் போற்றி வருபவர்; ஆன்மீக நாவலர்களும் அருந்தமிழ்ப் பாவலர்களும் தோன்றிய புகழ்மிகு அதிராம்பட்டினத்தில் பிறந்த சிறப்பினைக் குறிக்கும் வகையில் அதிரை தாஹா என்றழைக்கப்படுகிறார் நம் அருட்கவி அல்ஹாஜ் முகம்மது தாஹா மதனீ அவர்கள். வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்று ஆசிரியப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அருட்கவி அவர்கள் பல்லாண்டுகள் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று இறைப்பணியும் இலக்கியப் பணியும் ஆற்றிவருபவர். தமது இலக்கியப் பயணத்தில் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், ஹைக்கூ முதலான பல கவிதை வடிவங்களிலும் உரைநடையிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளதோடு பல நூல்களைப் பதிப்பித்தவர் என்ற பெருமையும் அருட்கவி யாருக்கு உண்டு. பிள்ளைத் தமிழ், ஆற்றுப்படை, தூது, உலா, சதகம், மாலை, வாழ்த்து, கலம்பகம் முதலான சிற்றிலக்கியங்கள் மட்டுமல்லாது புதுக் கவிதையிலும் காப்பியங்கள் இயற்றிப் படைத்த சிறப்பு இவருக்குண்டு. மேடைத் தமிழிலும் தமிழகம் புதுச்சேரி மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர் முதலான மேல்நாடுகளிலும் வெற்றிக்கொடி நாட்டிவருபவர் தாஹா அவர்கள். ஆன்மீகப் பொழிவுகளிலும் இலக்கியப் பேருரைகளிலும் கவியரங்க மேடைகளிலும் தாஹா அவர்கள் தனிச் சிறப்பான முத்திரையைப் பதிப்பதில் வல்லவர். இசுலாமியப் பெண்களின் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்டு அதிராம் பட்டினத்தில் பல்லாண்டுகளாகத் தொடர் சொற்பொழிவு நிகழ்த்திச் சாதனை படைத்து வருகிறார் அருட்கவி.
1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் நான்காம் தேதியில் பிறந்த அதிரா தாஹா அவர்கள் எழுபத்தைந்து வயதினைக் கடந்தும் துடிப்புடன் மடைதிறந்த வெள்ளமெனக் கவிதை மழையைப் பொழிந்து வருவது இன்றைய இளந் தலைமுறை யினருக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது. இறைவன் புகழ்பாடும் நூல்கள் மட்டுமல்லாது நபிகளாரின் புகழைப் போற்றும் வகையிலும் கலீபாக்கள், இறைநேசச் செல்வர்களின் சிறப்பினை விதந்துரைக்கும் வகையிலும் தொடர்ந்து இலக்கியங்கள் படைத்துவரும் அருட்கவியாரின் புதியதோர் மரபிலக்கியப் படைப்பே இலக்கிய இணையர் காவியம் என்ற இக்காப்பியம். ஆயிரத்திற்கும் மேலான (1123 பாடல்கள்) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் ஆன இக்காப்பியம் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த பேராசிரியப் பெருமக்கள் மு.சாயபு மரைக்காயர், சா.நசீமாபானு இணையரின் சீர்மிகு வாழ்க்கையைப் பேசுகின்றது. அருட்கவி அவர்கள் இதற்கு முன்பே 2011 ஆம் ஆண்டில் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் புகழ் போற்றும் சாயபு மரைக்காயர் சதகம் என்ற நூலினைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கிய இணையரில் ஒருவரை மட்டும் பாடிய சதகத்தை வெல்லும் வகையில் இணையர் இருவரின் புகழ்பாடும் காப்பியம் படைத்துப் பேராசிரியர்களைப் பெருமைப் படுத்துகின்றார் அருட்கவி அவர்கள்.
இலக்கிய இணையர்:
இலக்கிய இணையர் என்று தமிழ்கூறு நல்லுலகத்தால் சிறப்புற அழைக்கப் படுபவர்கள் பேராசிரியர்கள் மு.சாயபுமரைக்காயர், சா.நசீமாபானு இணையரே.  இருவருமே காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இசுலாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி என்ற உயர்ந்த குறிக்கோளுடன் கடந்த நாற்பதாண்டு களுக்கும் மேலாக புதுவை, தமிழகம் மட்டுமன்றி, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் முதலான கீழ்த்திசை நாடுகளிலும் வளைகுடா நாடுகளிலும் இலக்கியப் பயணம் மேற்கொண்டு இன்தமிழுக்கும் இசுலாத்துக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர்கள்.
இலக்கிய இணையர்கள் இருவருமே நாடறிந்த நல்ல சொற்பொழி வாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த பன்னூலாசிரியர்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர்கள். ஆயிரக் கணக்கான நல்ல ஆசிரியர்களையும் பேராசிரியப் பெருமக்களையும் உருவாக்கிய பெரும் பேராசிரியர்கள். மேலும் மிகச்சிறந்த மனிதநேய மிக்க மத நல்லிணக்க மாமணிகள்; அப்பழுக்கற்ற அன்பாளர்கள்; உற்றுழி உதவும் உவப்பாளர்கள் என்று இலக்கிய இணையர்களின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.  
பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் இசுலாமியத் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கிதோடு அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பினை ஏற்று இதுவரை பதினாறு பன்னாட்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார் என்பதும் பேராசிரியர் சா.நசீமாபானு இக்கழகத்தின் மகளிர் பிரிவுத் தலைவராகப் பொறுப்பு வகித்து அம்மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார் என்பதும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டிய செய்தி.
இலக்கிய இணையரின் இசுலாம் மார்க்கப் பணி, இலக்கியப் பணி, ஆசிரியப் பணி, சமுதாயப் பணி இவற்றில் தம் நெஞ்சைப் பறிகொடுத்த அருட்கவி அதிரை தாஹா அவர்கள் இறைநேசச் செல்வர்களின் அருஞ்செயல்களைப் புகழ்ந்து பாடி இலக்கியம் படைக்கும் தம் இலக்கியப் பணியின் ஒருபகுதியாக இலக்கிய இணையரின் வாழ்க்கையை விரித்துரைக்கும் காவியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று விழைந்ததன் விளைவே இந்த இலக்கிய இணையர் காவியம்.
இசுலாமியக் காவியங்கள்:
       கவி – கவிதை – கவிஞன் - காவியம் முதலான சொற்களை வடசொற்கள் என்றும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்கள் பா – பாட்டு – பாவலன் - பாவியம் என்றும் தனித்தமிழ் அறிஞர்கள் குறிப்பிடுவர். இக்கருத்துக்கு மாற்றாக கவி – கவிதை – கவிஞன் – காப்பியம் முதலான சொற்கள் தமிழ்ச் சொற்களே என்று வாதிடுவோரும் உண்டு. தமிழில் காப்பிய மரபு வீரயுகத்திற்குப் பிறகே தோற்றம் பெறுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன தமிழின் பழைய காப்பியங்கள். காவியம், காப்பியம் என்ற இரண்டு சொற்களையும் இன்று நாம் ஒரே பொருளில் கையாண்டாலும் தொடக்கத்தில் இரண்டும் இருவேறு மரபின் இலக்கிய வகைமைகளாக இருந்திருக்க வேண்டும். காவிய மரபு வடமொழி மரபு. காப்பிய மரபு தமிழ்வழி மரபு. சிலம்பும் மேகலையும் காப்பியங்களே காவியங்களல்ல. சீவக சிந்தாமணி, பெருங்கதை, மகாபாரதம், இராமாயணம் முதலானவை காவியங்களே காப்பியங்களல்ல என்பது என் துணிபு. பின்னாளில் இரண்டு மரபுகளும் பிரித்து அடையாளம் காணமுடியாத அளவிற்குக் கலந்து விட்டன. தண்டியலங்காரம் கூறும் இலக்கணம் காவிய மரபிற்கானது.
      தமிழ்க் காவியங்களை அதன் பாட்டுடைத் தலைவர்களைக் கொண்டு சமயக் காவியங்களாக இனங்காணும் போக்கு மிகுந்துள்ளது. அந்த வகையில் சமணக் காவியங்கள், பௌத்தக் காவியங்கள், சைவ, வைணவக் காவியங்கள், இசுலாம், கிருத்துவக் காவியங்கள் எனத் தமிழில் காப்பியங்கள் என்றழைக்கப் படும் காவியங்கள் மிகுதியும் உள்ளன.
இசுலாமியக் காவியம் என்றவுடன் நம்மில் பலருக்கு உடனே நினைவுக்கு வரும் இலக்கியம் சீறாப்புராணம் மட்டுமே. உண்மையில் தமிழிலக்கிய நெடும்பரப்பில் மிகுதியான காவியங்களை இசுலாமியர்களே படைத்துள்ளனர் என்பது ஒரு வியப்பூட்டும் செய்தி. இசுலாமியக் காவியங்கள் என்பதற்கான வரையறை மிக எளிதானது, இசுலாமிய சமயப் பின்னணியில் பாடப்படுவதும் இசுலாமியப் பெரியோர்களின் வாழ்க்கையைப் பாடுவதும் இசுலாமியக் காவியங்களே. பதினேழு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலான நான்கு நூற்றாண்டுகளில் தமிழில் தோன்றிய இசுலாமியக் காவியங்களின் எண்ணிக்கை இருபத்தேழாகும். அதில் பதினெட்டு பெருங் காப்பியங்கள், ஒன்பது குறுங் காப்பியங்கள். அண்மைக் காலத்தில் அதாவது கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் வெளிவந்துள்ள காவியங்களை இந்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை. ஆக தமிழில் அதிகமான காவியங்களை படைத்தளித்த பெருமை இசுலாம் சமயத்திற்கே உரியது என்பதனை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.
அருட்கவி அதிரை தாஹா எழுதியுள்ள இலக்கிய இணையர் காவியம் என்ற இந்நூல் தமிழ் இசுலாமியக் காவியங்களின் வரிசையில் தனியிடம் பெறத்தக்கது. அருட்கவி அவர்கள் இதற்கு முன்பே இரண்டு காவியங்களையும் ஒரு குறுங் காவியத்தையும் படைத்துள்ளார் (1.நபிபுகழ் காவியம், 2.குத்புல்ஹிந்த் அஜ்மீர் நாயகக் காப்பியம், 3.மர்யம் ஈஸா குறுங்காவியம்) என்றாலும் இந்நூல் அருட்கவியாரின் முந்தைய காவியங்களை விட அளவில் பெரியது.
அருட்கவி அதிரையாரின் இலக்கிய இணையர் காவியம் ஒரு புதுமைக் காவியம். பாட்டுடைத் தலைவர்களான பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் பேராசிரியர் சா.நசீமாபானு இணையரின் வாழ்க்கை வரலாற்றை ஆற்றொழுக்காக நிரல்பட வரிசைப்படுத்தி காப்பியம் அமைக்கப்படாமல் காப்பியத் தலைமக்களின் இலக்கியப் பணி, எழுத்துப் பணி, பெற்ற விருதுகள், இலக்கியப் பயணங்கள், விருந்தோம்பல் சிறப்பு, இணையரின் இல்ல நூலகத்தின் சிறப்பு, நூல்களின் சிறப்பு இவற்றை விரித்துரைக்கும் போக்கில் இடையிடையே அவர்கள் வாழ்க்கைப் பயணத்தின் சுவையான தருணங்களை இட்டுநிரப்பியதோர் புதுமைப் படைப்பாக இக்காப்பியம் அமைக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் விதப்பு முறையும் கவிக்கூற்றுமாகக் காவியம் அமைந்துள்ளமை நூலாசிரியரின் புதுமை படைக்கும் நாட்டத்தையே காட்டுகின்றது.
காவியத்தைத் தொடங்கும்போது நூலாசிரியர் மரபினைப் போற்றும் விதத்தில் வணக்கம், வாழ்த்து, அவையடக்கம், நாட்டுப்படலம், நகரப்படலம் என்று தொடங்கி, தலைமக்கள் அறிமுகம் வரையிலும் காவிய மரபோடு பயணம் செய்தாலும் அடுத்தடுத்த இயல்களில் காவிய மரபின் இறுகிய பிடிக்குள் சிக்கிக் கொள்ளாமல் விட்டு விடுதலையாகி புதிய பாதையில் பயணிக்கின்றார்.
இலக்கிய இணையர் காவியம் என்ற இக்காவியத்தில் தனிச்சிறப்பான பகுதிகள் பல உள்ளன. குறிப்பாக இணையரின் வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்துள்ள மாமரம் தனது பெருமைகளை விவரித்துக் கவிஞரோடு உரையாடுவதாக உள்ள பகுதியும் வீட்டு நூலகத்தின் சிறப்பினை விவரிக்கும் போது தோட்டத்துத் தேன்கூட்டைச் சுட்டிக்காட்டிப் புத்தகங்களுக்கும் தேனுக்குமான சிறப்பியல்புகளைப் பொருத்தமுற அடுக்கிச் சொல்லும் பகுதியும் இக்காவியத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த பகுதிகள் என்பது வெளிப்படை.
காவியத்தின் தலைமை மாந்தர்களை அறிமுகம் செய்யும் அருட்கவியாரின் பாடல்களில் இரண்டு பாடல்களை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
முதல்பாடல் – சாயபு மரைக்காயரை அறிமுகம் செய்யும் பாடல், இரண்டாம் பாடல் நசீமாபானு இசுலாம் மார்க்கத்தைத் தழுவும் சூழலை அறிமுகம் செய்யும் பாடல்.
பாட்டுடைத் தலைவர் அறிமுகம்
திருப்பேரர் இப்பிள் ளைக்கே
தேர்ந்தனர் பாட்டன் பெயரை!
கருவிலே திருவு மானார்
சாயபு மரைக்கார் அம்மா
உருவெலாம் சிரிக்கும் பாராய்
உற்சாகம் கரையில் புரளும்
தெருவெலாம் போற்றும் பிள்ளை
தேன்பேச்சைக் கேட்டுத் தானே!
நசீமாபானு இசுலாத்தைத் தழுவுதல்
உண்மையாம் வணக்கத் திற்கோ
ஒருவனே! நபிகள் கோமான்
திண்மையாய்த் தூதர் என்றே
திட்பமாய் ஈமான் கொண்டார்!
கண்ணெனத் தொழுகை பற்றி
கடமையைச் செய்ய வந்தார்!
எண்ணியே பணத்தில் ஜக்காத்
இருப்பதில் கொடுப்பேன் என்றார்.

இத்தகு மரபான சொல்லழகும் கவியழகும் பொருந்தி நிற்கும் கவிதைகளைக் காவியம் நெடுகிலும் நாம் பார்க்க முடியும். சில பாடல்கள் யாப்பின் கட்டுக்குள் அடங்கவில்லை என்பது ஒரு சிறுகுறையே என்றாலும் சிறப்பான உவமைகள், இயற்கை வருணனை, சொல்லழகு, பொருளழகு முதலான காவிய அழகுகள் அக்குறையை நிறைவுசெய்து விடுகின்றன. கதைசொல்லும் விதப்பு முறையில் காவியத்தின் பெரும்பகுதி அமைந்திருந்தாலும் கதையை விஞ்சித் தலைமக்களின் சாதனைகளை விவரிப்பதில் கவிஞர் கூடுதல் கவனம் செலுத்துகின்றார் என்பது மேம்பட்டு நிற்கின்றது. 
அருட்கவியாரின் காவியம் தலைமக்களின் மாண்புகளை விரித்துரைப் பதோடு நூலின் போக்கில் அரிய வாழ்வியல் உண்மைகளையும் சமய, சமூக விழுமியங்களையும் கவிஞரின் அனுபவ மொழிகளின் வழியாக அழகுற எடுத்துக் காட்டுகின்றது. நூலின் பெரும்பயன் என்று இதனைச் சுட்டிக்காட்ட விரும்பு கின்றேன்.
பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் நூலகத்தின் பெருமை பேசும் பகுதிகள் இரண்டிடங்களில் வருகின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் நூற்களின் பெருமை பலபடப் பேசப்படுகின்றது. இதோ ஒரு பாடல்,
மவுனமாய் இருக்கும் போதில்
மொழிபேசும் நூலெனும் தாய்
அவுடதம் மனத்தின் பிணியை
அவித்திடும் மருத்து வர்தான்
பவம்போக்கும் படிக்கப் படிக்க
பக்குவக் கருவுண் டாகும்
கவலைகள் நீக்கும் நன்கு
கலந்துரை நண்பர் நூலே!
இந்தப் பாடல் நல்ல நூற்கள் மனிதர்களுக்குத் தாயாகவும் மருத்துவராகவும் ஆசானாகவும், நண்பராகவும் இருந்து துணைசெய்கின்றன, வழிகாட்டுகின்றன  என்றெல்லாம் அடுக்கிச் சொல்கிறது. மேலும், பாடல் நூலின் சிறப்பை மட்டும் பேசாமல் தாய்மையின் சிறப்பையும் நட்பின் சிறப்பையும் பேசுகின்றது. பாடலின் ஒவ்வொரு அடியும் மறித்து நோக்க நோக்கப் புதுப்புது உண்மைகளை நமக்கு வெளிப்படுத்துகின்றது. மவுனமாய் இருக்கும் போதில் மொழிபேசும் தாய், மனத்தின் பிணியை அவித்திடும் மருத்துவர், படிக்கப் படிக்கப் பக்குவக் கரு, கவலைகள் நீக்கும் நண்பர் கலந்துரை முதலான சொற்றொடர்கள் பல வாழ்வியல் உண்மைகளைப் பேசுகின்றன. இவை விரிப்பின் பெருகுமென விரிவஞ்சி விடுக்கிறேன் வாசிக்கும்போது நீங்கள் பாடலை ஆழ்ந்து கற்றுப் பயன் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
      அருட்கவி அதிரை தாஹா அவர்கள் ஓர் ஆசுகவி, ஆயிரக் கணக்கான தமிழ் மரபுக் கவிதைகளை அவர் படைத்துள்ளார். தமிழின் பல சிற்றிலக்கிய வடிவங்களைத் தம் படைப்பில் அவர் கையாண்டுள்ளார். இசுலாம் மார்க்கத்திற்கும் இன்தமிழுக்கும் தொடர்ச்சியாக அவர் ஆற்றிவரும் பணிகள் பாராட்டத்தக்கன.
      பேராசிரியர் மு.சாயபுமரைக்காயர், பேராசிரியர் சா.நசீமாபானு இணையரின் புகழ்போற்றும் இக்காவியம் ஒரு வழிகாட்டி இலக்கியம். வருங்கால இளந்தலை முறையினர் ஏற்றுப் போற்றிக் கொண்டாட வேண்டிய இணையரின் மேன்மை மிகுந்த வாழ்க்கையைப் பதிவுசெய்யும் ஓர் அரிய நிகழ்கால வரலாற்று ஆவணம். இந்நூலைப் படைத்தளித்தமைக்காகத் தமிழுலகம் என்றென்றும் அருட்கவி அதிரை தாஹாவைப் போற்றிப் புகழும் பாராட்டும் என்ற நம்பிக்கையுடன்.


முனைவர் நா.இளங்கோ

nagailango@gmail.com 

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...